• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

16. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை…!



பானுரதி துரைராஜசிங்கம்



அத்தியாயம் 17



ஐப்பசி மாதத்து மழை நாளில், மழை நீர் ஸ்பரிசித்த தரையின் ஈரத்தை உலர்த்திக் கொடுக்கச் சூரியன் முயன்று கொண்டிருந்தான்.



மழைக் காற்று வேகமாக வந்து கண்ணில் பட்ட மரஞ்செடி கொடிகளில் மோதி அப்பால் வேகமாகச் செல்ல, அந்தக் காற்றினால், வரிசையாக நின்றிருந்த கொன்றல் மரங்களின் மஞ்சள் நிறத்து மலர்கள் சரஞ் சரமாகக் காற்றுக்குத் தோதாக அசைந்தாடிக் கொண்டிருந்தன.



அந் நேரத்தில் கொன்றலின் மஞ்சள் மலர்களில் வீற்றிருந்த மழைத்துளிகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் அமுதயாழினி.



அவளது விழிகள் சூரிய ஒளி பட்டு மினுமினுத்து வர்ண ஜாலங்களைத் தோற்றுவித்த, மலர்கள் மீதிருந்த மழைத்துளிகளை ஊடுருவிக் கொண்டிருந்தாலும் மனது வேறெதையோ அசை போட்டுக் கொண்டிருந்தது.



அவளது எண்ணவோட்டத்தைப் பிரதிபலிப்பது போல

"மழையின் துளியை ஒளி துளைத்தால்... வானவில் வண்ணம் எழுவதுண்டு... மனதை மனதை விழி துளைத்தால்... காதலின் வண்ணம் விளைவதுண்டு..."

என்ற வரிகளை காற்றோடு கலக்க விட்டபடி ஒரு வாகனம் வேகமாக விரைந்து சென்றது.



பாடலின் வரிகளை உள் வாங்கியபடி வேகமாகத் திரும்பியவளது பார்வையில் தொலைவில் யாருடனோ பேசியபடி நின்றிருந்த மதுவர்ஷன் விழுந்தான்.



அவளால் பார்வையை அவனை விட்டு விலக்கவே முடியவில்லை. அன்று கோவிலில் அவன் கட்டிய தாலியைக் கழற்றிக் கோவில் உண்டியலில் போட்டு விட்டு, ஒரு மாதத்திற்குள் உங்கள் குடும்பத்தின் சம்மதத்தோடு அவர்கள் முன்னிலையில் என் கழுத்தில் தாலி கட்டுங்கள் என்று உறுதியாகச் சொல்லி விட்டு வந்தவள் இதோ இப்போது தான் அவனைப் பார்க்கிறாள்.



நடுவில் கிட்டத்தட்ட இருபது நாட்கள் கடந்து விட்டது. தெனாவெட்டாக அவனிடம் பேசி விட்டு வந்தாலும், அவன் என்னிடம் பேச முயற்சி செய்ய மாட்டானோ, எங்கே நான் செய்த செயலில் என்னை ஒட்டு மொத்தமாக வெறுத்து ஒதுக்கி விட்டானோ என்றெல்லாம் குழம்பித் தவித்து விட்டாள்.



எல்லாவற்றையும் விட, அவனை ஒரு தடவையேனும் பார்த்து விட மாட்டோமா என்ற ஏக்கமே இந்த இருபது நாட்களும் அவளுக்கு அதிகமாக இருந்தது.



நடன வகுப்பிலும் வீட்டிலுமாக இருந்தவளை மதுவர்ஷனின் நினைவு அதிகம் தாக்கவே, அதில் இருந்து மீள வேண்டும் என்றே இன்று சற்றே தூரத்தில் இருந்த பூங்காவுக்கு அமுதா வந்திருந்தாள்.



வந்த இடத்தில் பார்க்க நினைத்தவனையும் பார்த்து விட்டாள். என்னவொன்று அமுதா தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை மதுவர்ஷன் அறியவில்லை.



சில நிமிடங்கள் தன்னவனைப் பார்வையால் கைது செய்து கொண்டிருந்தவள், அவன் எதேச்சையாக இந்தப் பக்கம் திரும்பவும் சட்டென ஒரு பெரிய மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.



எங்கே அவன் தன்னைப் பார்த்து விட்டானோ என்ற பதற்றமும், ஒரு தடவை பார்த்தால் தான் என்ன என்கின்ற பதட்டமும் அவளைத் தாக்கின.



சில நொடிகள் அப்படியே மரத்தோடு மரமாக நின்றவள் தன்னை மீட்டுக் கொண்டு அந்தப் பூங்காவை விட்டு வேகமாக வெளியேறினாள்.

பூங்காவில் இருந்து வேகமாக வெளியேறி வலப்புறமாகச் சாலையைக் கடந்தவளது எண்ணவோட்டம் மதுவர்ஷனைச் சுற்றி நின்றதால், எதிரே வந்த பாரவூர்தியை அவள் கவனிக்கவில்லை.



வேகமாக வந்த பாரவூர்தி ஓட்டுனரும் எதிர்த் திசையில் இருந்து திடீரென வந்தவளைக் கவனிக்கவில்லை. இன்னும் ஒரு அடி அமுதா முன்னே வைத்திருந்தாலும் அங்கே ஒரு பெரிய விபத்து நேர்ந்திருக்கும் ஆனால் அவள் செய்த புண்ணியமோ அல்லது மதுவர்ஷனது காதலுக்கு ஆயுள் கெட்டியோ தெரியவில்லை. அமுதா மயிரிழையில் உயிர் தப்பினாள்.



அமுதயாழினி தப்பினாள் என்பதை விட தப்புவிக்கப் பட்டாள் என்பதே உண்மை.



தன்னுடைய பள்ளி நண்பர்கள் சிலரை எதேச்சையாகப் பார்த்ததும் அவர்களுடன் நீண்ட நேரமாகக் கதையளந்து கொண்டிருந்த மதுவர்ஷனுக்கு சில நிமிடங்களில் தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போல இருக்கவே சுற்று முற்றும் தனக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா எனப் பார்த்தான்.



ஆனால் அப்படி யாரையுமே அங்கே காணவில்லை. அதனால் தன் தலையில் லேசாகத் தட்டிக் கொண்டு நண்பர்கள் பேச்சில் கவனத்தைப் பதித்தான் மதுவர்ஷன்.



அப்படியே பேசிக் கொண்டிருந்து விட்டு, சற்றுத் தொலைவில் நின்றிருந்த தன் வாகனம் நோக்கி நடந்தவனுக்கு சாலையில் வந்த பாரவூர்தியும் எதிர்த்திசையில் அதை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஒரு பெண்ணுமே கண்ணில் பட்டனர்.



பாரவூர்தி வரும் வேகத்துக்கு அந்தப் பெண்ணை மோதினால், அவள் சம்பல் தான் என்பதை நொடியில் புரிந்து கொண்ட மதுவர்ஷன் வேகமாக முன்னேறி எதிரே போய்க் கொண்டிருந்தவளைத் தள்ளிய படி தானும் அவளோடு எதிர்த் திசையில் இருந்த பள்ளத்துக்குள் விழுந்தான்.



அப்படி விழுந்தவனால் உடனடியாக எழுந்து கொள்ள முடியவில்லை. விழுந்த வேகத்திற்குச் சாலையோரம் நின்றிருந்த ஏதோ ஒரு பெயர் தெரியாத பூங்கொடி இருவரயும் இறுக்கமாகச் சுற்றி இருந்தது.



வெகு பிரயத்தனப் பட்டு எழுந்தவன் அப்போது தான் கொடியில் தன்னோடு பின்னியிருந்த கொடியிடையாளைப் பார்த்தான்.

பார்த்தவனுக்கு ஒரு நொடி என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அப்படியே திகைத்துப் போனான். அவனோடு சேர்ந்து பள்ளத்துள் விழுந்தது அவனின் அமுதா அல்லவா அவளைப் பார்த்து நாளானதால் திகைப்பு இல்லாமல் இருக்குமா...



அவனது திகைப்பு சில நொடிகளே நீடித்தது. உடனே தன் முகத்தை உணர்ச்சி துடைத்த முகமாக மாற்றிக் கொண்டு, அவளுக்கு எங்கேனும் அடி பட்டு விட்டதா என வேகமாக ஆராய்ந்து அப்படி அடியேதும் படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டதும் சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான்.



வேகமாக இழுபட்டு ஒரு ஆணுடன் பள்ளத்தில் விழுகிறேன் என்பதை அறிந்த நொடியே இறுகிப் போயிருந்த அமுதா... அந்த ஆண் யாரென்பதைப் பார்த்ததும் சட்டென்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டுத் தன் இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டாள்.



ஆனாலும் முதலில் தன்னைப் பார்த்ததும் பிரகாசம் அடைந்த அவனது முகம் சட்டென இறுகியதும், அவளது முகமும் வாடிப் போனது.



அமுதாவின் முகம் பாராமல் இறுகியிருந்த கொடியை அவளுக்கு நோகாமல் அறுத்து எடுத்து விட்டவனோ அதன் பின் அவளது முகத்தைப் பாராமலே தன் வாகனம் நோக்கிப் போய் விட்டான்.



மதுவர்ஷன் போவதையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள் அமுதயாழினி. அவன் தூரம் போகப் போகத் தன்னை விட்டு அவன் தூரமாகிப் போவதைப் போல உணர்ந்தவளால் அழுகையை அடக்குவது கஷ்டமாக இருந்தது.



தன் வாகனத்தின் அருகே வந்த வர்ஷனுக்கும் அப்படியே போய் விட மனது இடங் கொடுக்கவில்லை. என்ன இருந்தாலும் அவன் உயிரினும் மேலாய் நேசிக்கும் உயிர்க் காதலி அல்லவா அவள்... அது மட்டுமல்லாமல் என்ன தான் கட்டிய தாலியைக் கழற்றிப் போட்டாலும் அவனைப் பொறுத்தவரை அவனது மனைவியும் அல்லவோ அதனால் அப்படியே நின்று வாகனத்தின் கண்ணாடியில் அவள் என்ன செய்கிறாள் எனப் பார்த்தான்.



அசையாமல் அவனையே பார்த்த வண்ணம் இருந்தவளது இரு விழிப் பார்வையில் அவனுள் ஏதோ உடைவது போல் இருக்கவே, அகரனுக்கு அதி விரைவாக அழைப்பொன்றை எடுத்தான்.



எதிர் முனையில் அகரன் வாயைக் கூடத் திறக்கவில்லை அதற்குள்

"அடேய் எடுபட்டவனே... அப்படி அங்கினை என்னத்தைத் தான் வெட்டி முறிக்கிறியோ தெரியேல்லை... இங்கினை உன்ரை அம்மு சோம்பு எங்கினையோ பராக்குப் பாத்துக் கொண்டு போய் இந்தா வாகனத்தோட மோதுறன் இல்லாட்டிக்கு பள்ளத்துக்க குப்புறக் கிடக்கிறன் எண்டு கிடக்குது... இது தான் நீ அவளைப் பாத்துக்கிற லட்சணமா..."

எனப் பொரிந்து தள்ள அங்கே அகரனுக்கோ தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.



"என்னாச்சு இவருக்கு... யாரு அந்த சோம்பு..."

எனத் தலையைச் சொறிந்த அகரனது மரமண்டைக்கு அப்போது தான் அமுதாவின் நினைவு வந்து தொலைத்தது.



அதற்குள் மறுமுனையில் நின்றவனோ

"இப்போ நீ இங்க வாரியோ இல்லையோ..."

என்று பொறுமை இழந்து கத்த,

"அடேய்... நான் இப்போ எங்கே தாண்டா வர்ரது..."

என மண்டையைப் பிய்த்தான் அகரன்.



மதுவர்ஷன் அதற்குள் தன் அலைபேசியைத் துண்டித்து விட்டு, மீண்டும் தன்னவளை நோட்டம் விட அவனது பார்வை வட்டத்துக்குள் அவன் தந்தையும், அந்த மாயாவும் அவள் தந்தையும் விழுந்து தொலைத்தனர்.



அமுதாவைப் பார்த்த அமுதமான நாள் அதற்குள் நீலம் பூத்து விஷமாக மாறியது போலானது அவனுக்கு.

அதிலும் தந்தையின் முகத்தில் இருந்த சிரிப்பு அவனை உசுப்பேற்றுவது போல இருக்கவே, அவன் சட்டெனத் திரும்பி அமுதாவை நோக்கி நடந்தான்.



அவர்கள் தன்னை நோக்கித் தான் வருகிறார்கள் என அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது.



"நான் அத்தனை தூரம் அந்த மாயாவை எனக்குப் பிடிக்கேல்லை எண்டு சொல்லியும் கூட அவளை அழைச்சுக் கொண்டு என்னிடம் வர்ரீங்களா? வாங்க வாங்க... நான் யாருன்னு இப்போ காட்டுறன்..."

எனத் தனக்குள் எண்ணிக் கொண்டு அமுதாவின் முன்னால் போய் நின்றான்.



தன்னிடம் இருந்து விலகிப் போனவன் திடீரெனத் தன் முன்னால் வந்து நிற்கவும் உண்மையில் அமுதா திகைத்துத் தான் போனாள்.



அவனோ கைகளைக் கட்டிக் கொண்டு அவளையே ஆழ்ந்து பார்த்தான்.

அந்தப் பார்வை அவளை என்னவோ செய்வது போல இருக்கவே அலை பாய்ந்த விழிகளைத் தலை தாழ்த்தி மறைத்தபடி

"என்ன... ஏன் அப்பிடிப் பாக்கிறீங்க..."

எனக் கேட்க, அவனோ அப்போதும் பார்வையை மட்டுமே பதிலாக்கினான்.



அவனிடம் இருந்து பதிலேதும் வராமல் போகவே நிமிர்ந்து பார்த்தவளுக்கு, அவனது பார்வையின் வீச்சு நாணப் பூச்சுப் பூசுவதாக இருக்க, என்ன செய்வது என்பது போல கைகளைப் பிசைந்தாள்.



சில நொடிகள் அவளையும் அவளது தவிப்பையும் இரசித்தவன் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல்

"உன்னோட மனசுல நான் இப்போவும் இருக்கேனா அமுதயாழினி..."

என அழுத்தமாகக் கேட்டான்.



அவன் தனது பெயரை நீட்டி முழக்கிப் பேசியதில் கடுப்பானவளுக்கு, அவன் தன்னுடன் பேசி விட்டானே என்ற விஷயம் ஆறுதல் கொடுத்து ஆசுவாசப் படுத்தியது.



அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறந்து அவனையே பார்த்திருந்தவளது முகத்தின் முன்னால் சொடக்கிட்டு

"உன்னிடம் தான் கேட்கிறேன்... ஒரு வேளை நீ பதில் சொல்வதற்கு கூடத் தகுதியில்லாதவன் ஆகி விட்டேனா நான்..."

என உள்ளடங்கிய குரலில் கேட்டவனது கேள்வியில் பதறிப் போய் அவனது கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள் அமுதா.



கலங்கியிருந்த அவளது விழிகளையும், அவளது கைகளது நடுக்கத்தையும் உணர்ந்தவனுக்கும் மனது லேசாக வலித்தாலும் கூட இளகாமல் எந்த எதிர்வினையும் காட்டாமல் இறுக்கமாகவே நின்றிருந்தான்.



அவனது இறுகிய முகம் மேலும் அச்சமூட்டுவதைப் போல இருக்கவே, சட்டென அவனை இறுக அணைத்துக் கொண்டாள் அமுதயாழினி.



இந்தத் திடீர் செயலை மதுவர்ஷன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவன் தன் காதலுக்காகப் போராடத் தயாராகத் தான் இருக்கிறான். ஆனாலும் உள்ளூர

"அவளுக்கு என்னை உண்மையில் பிடிக்கலையோ... அது தான் கட்டிய தாலியை அத்தனை ஈசியாக அவளால் கழட்டிப் போட முடிந்திருக்கிறது... அவளைப் பார்க்காமல் எனக்குத் தான் நித்திரையே வர மாட்டேன் என்கிறது..."

என்று இத்தனை நாளாக எண்ணித் தவித்திருந்தான்.



ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லை உன்னைப் போலவே எனக்கும் உன்னைப் பார்க்காமல் பேசாமல் இருக்க முடியவில்லை என்கிற அவளது விழிக் கலக்கமும் இந்த இறுகிய அணைப்புமே அவளது காதலையும் நேசத்தையும் அவனுக்குச் சொல்லாமல் சொல்லியது.



அவள் அணைத்த வேகத்தில் உடல் சிலிர்த்து கை முஷ்டி இறுக நின்றிருந்தவனது பார்வை தன் தந்தையும், மாயாவும், அவளது தந்தையும் நின்ற இடத்தைப் பார்த்தது.



ஏதோ இஞ்சி தின்ற குரங்கு என்பார்களே அது போல இருந்தது அவர்கள் இந்த ஜோடியைப் பார்த்த பார்வை.

அதுவே அவனுக்குப் போதுமானதாக இருக்க, தன்னை அணைத்தபடி நின்றவளது காதோரமாக

"என்னடி பொண்டாட்டி... பொது இடம்னு கூடப் பாராமல் இப்புடிக் கட்டித் தொங்கிட்டு நிற்கிறாய்... எனக்கு தான் கூச்சமாக இருக்கிறது..."

என்று குறும்பாகச் சொல்லிக் கொண்டு அவளது உச்சந் தலையில் நாடி பதித்து அவளைத் தானும் இறுக அணைத்துக் கொண்டான்.



அவனது பொண்டாட்டி என்ற அழைப்பிலும் அன்பான அணைப்பிலும் தன்னைத் தொலைத்தவள் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரால் அவனது சட்டையைக் குளிப்பாட்டினாள்.



அவள் அழுகிறாள் என்பதில் பதறியவன் அவள் முகத்தை நிமிர்த்த முயன்று தோற்றவனாய்

"ஏய் லூசு... எதுக்குடி இப்போ அழுறாய்... நீ என்ன செய்தாலும் எனக்கு உன்னை வெறுக்கவே முடியாதுடி என் மண்டு..."

என்று சொல்ல, அழுகையோடு சிரித்தபடி தன் முகத்தை அவன் நெஞ்சில் வைத்துத் தேய்த்தாள் வர்ஷனின் யாழினி.



அந்த ஜோடிகளுக்கு வாழ்த்து சொல்வது போல மழையும் லேசாகத் தூறல் போடத் தொடங்கியது.



தன் நெஞ்சோடு சாய்ந்தவளுக்காய் அவனுள்ளே ஒரு கவியும் நொடியில் உதயமாகியது.



"என் விழிகளில் வீழ்ந்து நொடியில் மனதில் புகுந்தாய் தன்னால்...



நேசம் வந்து நெஞ்சில் ஒட்டிக் கொண்டதால் உன்னை வெளியேற்ற முடியவில்லையடி என்னால்...



நித்தமும் என் மனச்சாட்சியே என்னைக் கேள்வி கேட்கிறதடி பெண்ணே! உன்னால்...



நான் கூட இப்போதெல்லாம் அதிகம் பேசுகிறேனடி பெண்ணே! உன்னால்...



வானமெங்கும் வானவில் தோற்றங்கள் காண்கிறேனடி பெண்ணே! உன்னால்...



தோற்கவே பிடிக்காத எனக்கும் இப்போது தோற்கப் பிடிக்கிறதடி பெண்ணே! உன் முன்னால்...



உனக்காகவும் உன் கனவுக்காகவும் முன் நிற்பேனடி பெண்ணே! முடியும்வரை என்னால்...



இவையெல்லாம் எப்போது புரியுமடி பெண்ணே! தெரிந்து கொள்வேன் நீ சொன்னால்...



உன்னை நான் பார்த்ததும் உன் குணம் புரிந்ததும் எனக்கும் காதல் வைரஸ் தொற்றியதடி தன்னால்...



இனி என்ன வாழ்நாள் முழுதும் நானே தொடர்வேனடி நிழலாய் உன் பின்னால்..."



தொடரும்..
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
ஹாய் தர்ஷா சிஸ்
உங்க ஹெல்த் இப்ப எப்படி இருக்கு, முடிஞ்சா வீக்லி ரெண்டு எபியாச்சும் கொடுங்க...
ஸ்டோரி மறந்து போயிடும் போல