• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

17. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சனிக்கிழமை காலையிலிருந்து கிருஷ்ணாவின் மனதில் தவிப்பு. சத்யபாரதி தன்னை விரும்புகிறாளா இல்லையா என்பதை அறிந்து கொள்ள அவன் தேர்வு செய்திருக்கும் வழி சரிதானா என்று ஒருபுறம் கலக்கம். மாற்று வழியும் அவனுக்கு தோன்றவில்லை. கூடவே அவன் யார் என்று தெரிந்தால் சத்யபாரதியின் மனநிலை எப்படி மாறும் என்றும் அவனால் கணிக்க முடியாத நிலையில் இது ஒன்றுதான் சரியாகப்பட்டது.

ஒருவாறு தன்னை திடப்படுத்திக் கொண்டு, மாலையில் வீட்டிற்கு கிளம்பத் தயாரான சத்யபாரதியிடம்,"சற்று உட்கார், உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் பாரதி" என்றான் கிருஷ்ணா.

"என்ன விஷயம் சொல்லுங்க சார்" என்று அமர்ந்தவாறு இயல்பாக கேட்டாள்.

"நீ உடனே வேற வேலை தேடிக் கொள் பாரதி. உனக்கு ஒரு மாதம் அவகாசம் தருகிறேன்" அதற்குள் நிறுவனத்தில் நேரம் கிடைக்கிறப்போ நம் தொழிற்சாலைக்கு சென்று மேற்பார்வை பார்த்துக் கொள். தெரியாததை கற்றுக் கொள். உனக்கு உபயோகமாக இருக்கும்"
அவன் சொல்லச் சொல்ல..

சத்யபாரதி அதிர்ச்சியுடன் சட்டென்று எழுந்து,”சார், என்ன சொல்றீங்க? "

"எதுக்கு இவ்வளவு ஷாக் பாரதி? நான் முதலிலேயே சொல்லத்தான் நினைத்தேன். ஆனால் அப்போது தான் வேலையில் நீ சேருகிறாய். அந்த நேரத்தில் இதை சொல்லி உன்னை கலவரப்படுத்த வேண்டாம் என்று தோன்றியது. கூடவே உனக்கு சென்னை புதிது. அதனால் நீ இங்கே கொஞ்சம் பழகட்டும் என்றிருந்தேன். அதான் இப்போது சொல்கிறேன்"

" ஏன் சார்? இப்போது நான் எதற்காக வேறு வேலை தேடவேண்டும்? என் வேலையில் ஏதும் குறை என்றால் சொல்லுங்க சார். நான் திருத்திக் கொள்கிறேன்" அழாத குறையாக சத்யபாரதி கேட்டபோது கிருஷ்ணாவிற்கு மனம் தாங்கவில்லை தான்.

ஆனால் இப்போது இளகினால் அவனது எண்ணம் நிறைவேறாது.
"அதெல்லாம் ஒரு குறையும் இல்லை பாரதி. சொல்லப் போனால் உனக்கு தெரியாத துறை இது. அதில் நீ திறமையாகவே செயல்படுகிறாய். அதனால் அது பிரச்சனை இல்லை. இந்த அலுவலகத்தில் உன்னை தவிர வேறு பெண்கள் இல்லை என்பது உனக்கே தெரியும். அன்றைக்கு உனக்கு உதவ எண்ணி இந்த வேலையை உனக்கு கொடுத்தேன். நீ உறவினர் வீட்டுப் பெண், நீ சில மாதங்கள் பயிற்சிக்காக இங்கே வேலைக்கு வந்திருப்பதாக தெரிவித்து இருந்தேன். அதற்கு மாறாக தொடர்ந்து நீ இங்கே வேலை பார்த்தால் அது தவறான ஊகங்களுக்கு இடமாகிவிடும் அல்லவா பாரதி? "

திடுமென உண்டான இந்த அதிர்ச்சியை அவளால் தாங்க முடியாத போதும் அவன் சொல்வதை ஜீரணிக்க முயன்றவாறு, "எப்படி சார் திடீரென்று வேறு வேலை கிடைக்கும்? அதுவும் ஒரே மாதத்தில்? சென்னையில் ஒரு வேலை அத்தனை எளிதாக கிடைத்துவிடுமா என்ன? இந்த வேலையை விட்டால் நான் திரும்ப பெங்களூருக்கு தான் போயாகணும். ஆனால் நான் இனி ஒருபோதும் அங்கே செல்வதாக இல்லை" மனதில் உள்ளது அவளை அறியாமல் வாயில் வந்தபின் தான் உளறிவிட்டோம் என்று உணர்ந்து உதட்டை கடித்து சட்டென்று பேச்சை நிறுத்தினாள் சத்யபாரதி.

கிருஷ்ணாவிற்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருங்கே உண்டாயிற்று. அக்காவிடம் பைத்தியமாக இருந்த பாரதியை அவனே கண்கூடாக பார்த்திருக்கிறான். ஆனால் இன்றைக்கு அதே பாரதி அக்கா வீட்டிற்கு போவதாகவே இல்லை என்கிறாள். அப்படி என்ன நேர்ந்தது? அக்காவும் பாரதி பேச்சை எடுக்காதே என்கிறாள். இரண்டுக்கு சம்பந்தமுள்ளதா? அல்லது வேறு வேறு காரணமா? மனதுக்குள் எண்ணங்கள் ஓடியபோதும் அவளிடம் அதைப்பற்றி கேட்காமல், "கூல் கூல் பாரதி, முயன்றால் கிடைக்கும் பாரதி. உனக்கு அவகாசமும் தருகிறேனே? எனக்கு தெரிந்த நிறுவனங்கள் இருக்கிறது. அவற்றில் நேர்காணல் நடைபெற்றால் எனக்கு தெரிவிக்க சொல்லியிருக்கிறேன். நீ கலந்து கொள். நிச்சயம் வேலை கிடைக்கும்" என்றான்.

ஒருவேளை கிடைக்கலாம், ஆனால் இந்த அளவு பாதுகாப்பு? ஏற்கெனவே அவள் இந்த வேலையை விடுவது பற்றி யோசிக்கையில் இந்த காரணத்திற்காகத்தான் அவள் தயங்கினாள். இப்போது அதை அவனிடம் எப்படி சொல்வது? அவ்வளவு பயம் என்றால் வேலைக்கு வராமல் வீட்டோடு இருக்க வேண்டியதுதானே என்று கேட்டால் அவளிடம் பதில் இல்லை.

"என்ன பாரதி பதிலையே காணும்? ம்ம்.. போகிற இடத்தில் ஆட்கள் எப்படி இருப்பார்களோ என்று எண்ணுகிறாயா? அதுவும் சரிதான். ஆனால் அப்படிப்பட்ட இடம் என்றால் நானே உன்னை போகச் சொல்ல மாட்டேன். அதனால் நீ அந்த கவலையை விட்டுவிடு"

சத்யபாரதிக்கு அவன் அப்படி சொன்னதும் அதுவரை இருந்த கலக்கம் நீங்கிவிட, "சரி சார். நான் வேறு வேலை தேடுகிறேன். நீங்களும் கொஞ்சம் உதவி செய்யுங்கள். இதை நான் முதலாளியான உங்ககிட்ட கேட்கவில்லை. என்னோட நல்ல நண்பர் என்கிற முறையில் கேட்கிறேனாக்கும் "என்று லேசாக புன்னகைக்க...

கிருஷ்ணா வாய்விட்டுச் சிரித்து, "நீ ரொம்ப தேறிட்டே பாரதி. இப்ப நான் கட்டாயம் உதவி பண்ணியே ஆகவேண்டும் இல்லாவிட்டால் நண்பன் இல்லை என்றுவிடுவாய் போலிருக்கிறதே" என்று பயந்தவனாய் சொல்ல,

"ம்ம்... அந்த பயம் இருக்கட்டும்" என்றவளுக்கு அதற்கு மேல் சிரிப்பை அடக்கமுடியவில்லை. கலகலவென்று சிரித்தாள் சத்யபாரதி. அவள் அப்படி சிரிப்பது அதுதான் கடைசி
என்பதை அறியாமல்.

சத்யபாரதி அன்றுவரை அப்படி சிரித்து கிருஷ்ணா பார்த்ததில்லை. அழகான சிரிப்பு பூமலர்ந்தாற் போலிருந்தது. இமைக்காமல் பார்த்தவனுக்கு அதை என்றும் வாடாமல் காக்கவேண்டும் என்று எண்ணம் எழுந்தது. அவனைப் பிரிவது பற்றி அவள் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றபோதும். அவனை நல்ல நண்பனாக அவள் ஏற்றுக் கொண்டதில் அப்போதைக்கு திருப்தியடைய வேண்டியதாயிற்று.
☆☆☆
மறுநாள் ஞாயிறு...
கிருஷ்ணா வாக்கு கொடுத்தபடி மாமன் வீட்டிற்கு விருந்துக்கு சென்றான். கனகவல்லிக்கு ஒரே சந்தோசம். மாமா எப்போதும் போல இயல்பாக நடந்து கொண்டார். அனிஷா வழக்கத்திற்கு மாறாக மௌனமாக தெரிந்தாள்.
"அடடா என்ன அனி? இப்போது தானே புயல் எல்லாம் வந்து ஓய்ந்திருக்கிறது. நீ இப்படி மௌனச் சாமியாகி விட்டால் மறுபடி ஒரு வெள்ளம் புயலை இந்த சென்னை தாங்காது தாயே" என்று வழக்கம் போல வம்பிழுக்க முயன்றான், அவளோ அவன் பேச்சு காதில் விழாதது போல் ஏதோ சிந்தனை வயப்பட்டவளாய் சாப்பாட்டை வெறித்தபடி இருந்தாள்.

கிருஷ்ணாவிற்கு இது புதிது. வழக்கமாக அனிஷா, அவன் சும்மா இருந்தாலும் அத்தை மகனே அத்தானே என்று ராகமாய் பாடி வம்பிழுப்பாள். உறவு முறைதான் அப்படியே தவிர மனதளவில் இருவருக்கும் சகோதர பாசம்தான். அவன் யோசனையாய் பார்க்கும்போதே கனகவல்லி முந்திக்கொண்டு,"மருமகனே அவள் என்ன இன்னும் சின்ன பிள்ளையா? என் பொண்ணு இப்ப அடக்க ஒடுக்கமா மாறிட்டா."என்று சொல்ல, முகம் வெளுக்க சட்டென எழுந்து உள்ளே ஓடிவிட்டாள் அனிஷா.

கிருஷ்ணாவிற்கு கனகவல்லியின் பேச்சில் உடன்பாடு இல்லை. அனிஷாவிற்கு ஏதோ பிரச்சினை என்று தோன்றியது. விருந்தை சுவைத்து உண்ணும் மனநிலை கெட்டுவிட, பெயருக்கு உண்டு விடை பெறும்வரை அவள் வெளியே வரவில்லை. அவளிடம் தனியாகப் பேசவேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான்.
🧡❤️🧡
கிருஷ்ணாவைப் பிரிவது மனதுக்கு வருத்தமாக இருந்தபோதும் சத்யபாரதி தீவிரமாக வேறு வேலை தேடத் தொடங்கினாள். ஆனால் எங்கேயும் வேலை கிடைத்தபாடில்லை. கிருஷ்ணா கொடுத்த ஒரு மாத அவகாசத்தில் 20 நாட்கள் கடந்த நிலையில்..
அன்று... கிருஷ்ணா கொடுத்திருந்த ஒரு பெரிய ஆடை ஏற்றுமதி நிறுவனத்திற்கு சென்று நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு கையில் இனிப்புடன் திரும்பி வந்தவளை கேள்வியாய் நோக்கினான் கிருஷ்ணா.
"ஸ்வீட் எடுத்துக்கோங்க சார். எனக்கு வேலை கிடைச்சிடுச்சு” என்றவளின் குரலில் குதூகலம் இல்லை.

" வாழ்த்துகள் பாரதி, என்றவன், "ஆனால் வேலை கிடைத்த சந்தோஷம் முகத்தில் காணோமே பாரதி? ஏன் ?அந்த வேலை உனக்கு பிடிக்கவில்லையா? அல்லது சம்பளம் இங்கேவிட குறைவா?"

"அதெல்லாம் ஒரு குறையும் இல்லை சார். சொல்லப்போனால் சம்பளமும் கூடுதல் தான். அங்கே தொழிற்சாலையில் தான் வேலை. ஆனால் பாதுகாப்பு பற்றித்தான் எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது சார்".

"ஓ! இவ்வளவு தானா? மிஸ்டர் பாலசேகர் நல்ல மனிதர் பாரதி. அதனால் தான் தைரியமாக உன்னை அங்கே போகச்சொன்னேன். உனக்கு அங்கே எந்தவித பிரச்சனையும் நேராது. அப்படியே உனக்கு ஏதும் பிரச்சனை என்றால் என்னுடைய எண் உன்னிடம் இருக்கிறது. எந்த நேரத்திலும் என்னை நீ அழைக்கலாம். அதை மட்டும் நீ எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள், என்றவன் "என்றைக்கு வேலையில் சேரவேண்டும் பாரதி "என்று வினவினான்.

அவன் சொன்னது திடத்தை அளித்தபோதும் உள்ளூர ஒரு அச்சம் இருக்கத்தான் செய்தது. அதை காட்டிக்கொள்ளாமல், மறுநாளே வேலையில் சேர சொன்னதாக தெரிவித்தாள் சத்யபாரதி.
"ம்ம்.. குட் பாரதி. ஆல் த பெஸ்ட்" என்றவன் எழுந்து அவளுக்கு கைகொடுக்க சத்யபாரதிக்கு சட்டென்று அவனை சந்தித்த முதல் நாள் நிகழ்வுகள் நினைவுக்கு வந்து அன்று போலவே தொண்டை அடைத்தது. அவனது மேசைமீது இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்துவிட்டு ."சாரி சார். வெயிலில் வந்தது ரொம்ப தாகமாக இருந்தது என்று படபடத்தவளை கையமர்த்தினான்.

"ரிலாக்ஸ், ரிலாக்ஸ் பாரதி. இட்ஸ் ஓகே. ரொம்ப டயர்டா தெரியறே. ஸோ நீ வேண்டுமானால் வீட்டுக்கு கிளம்பு. நான் இங்கே பார்த்துக்கிறேன்" என்றான் கிருஷ்ணா.

"பரவாயில்லை சார், இன்று மட்டும்தானே இந்த வேலை. எப்படியும் இந்த இடத்திற்கு வருபவருக்காக நான் எல்லாம் சரியாக வைத்தாக வேண்டும் அல்லவா. அதை செய்துவிட்டு போகிறேன்". என்று அமர்ந்து பணிகளை கவனித்தாள் சத்யபாரதி.

மாலையில் அவள் கிளம்பும் போது அழகாக பேக் செய்யப்பட்ட பரிசுப் பொருள் ஒன்றை கொடுத்த கிருஷ்ணா, "இதை வீட்டில் போய் பிரிக்க வேண்டும் பாரதி "என்றான்.

"நன்றி சார்" என்றவளின் குரல் லேசாக கரகரத்தது.
அந்த குரல் கிருஷ்ணாவை என்னவோ செய்ய, அவளை இழுத்து அணைத்துக் கொள்ளும் ஆவல் பேரலையாய் எழ மிகுந்த சிரமத்துடன் அடக்கிக் கொண்டு விடை கொடுத்து அனுப்பியவன், அவசரமாக சிசிடிவி திரையில் சென்று கவனித்தான்.

சத்யபாரதி வழக்கத்திற்கு மாறாக தளர்ந்த நடையுடன் லிப்டிற்கு அருகே சென்றுவிட்டு திரும்பி அவனது அறையை ஏக்கத்துடன் நோக்கியவள் விழிகள் கலங்க சட்டென்று அதை தட்டிவிட்டு வந்து நின்ற லிப்டிற்குள் நுழைந்துகொள்ள, அந்த முகம் அவனது மனதை மிகவும் பாதித்தது. ஆனால் அந்த வேதனை இத்தனை நாள் அவனோடு பழகிவிட்டு பிரிய நேர்ந்ததற்காக கூட இருக்கலாம். கூடவே இந்தப் பிரிவு அவளுக்கு அவனது அன்பை உணர்த்திவிடும் என்று நம்பினான்.
ஆனால்....

 

Attachments

  • images (10).jpeg
    images (10).jpeg
    31.5 KB · Views: 10