கிருஷ்ணாவின் அலுவலகத்தில் அன்று கடைசி நாள் என்பதையே சத்தியபாரதியால் ஜீரணிக்க முடியவில்லை. மனம் கனக்க, வீடு வந்தவளுக்கு எதையோ இழந்து விட்டது போன்ற தவிப்பு. இனி கிருஷ்ணாவை பார்க்கவோ அவன் குரலை கேட்கவோ முடியாது என்ற நினைப்பே அவளுக்கு வேதனையாக இருந்தது. இயந்திரகதியில் உடையை மாற்றிவிட்டு கைப்பையில் இருந்த கைப்பேசியை எடுத்தபோது, கிருஷ்ணா கொடுத்த பரிசுப் பொருளடங்கிய பெட்டி கையில் தட்டுப்பட எடுத்தாள்.
ஆனால் அப்போதே பிரித்தோமில்லையே என்று பின்னொரு நாள் வருந்தப்போவதை அறியாமல்,அப்போது இருந்த மனநிலையில் அதை பிரிக்காமல் அவளது பீரோவில் பத்திரப்படுத்தி வைத்தாள்.
முகம் அலம்பிவிட்டு ரூபாவின் வற்புறுத்தலுக்காக பெயருக்கு சாப்பிட்டவள், வழக்கம்போல் இயல்பாக பேசமுடியாததால் சென்று படுத்துவிட்டாள்.
கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்தது. விசும்பல் அடுத்த அறையில் டிவி பார்க்கும் ரூபாவின் காதில் விழ,செய்வதறியாமல் திகைத்தாள் அவள். சிலகணங்கள் கழிய அழுகை நின்று சத்யபாரதி தூங்கிப் போயிருந்தாள்.
ரூபாவிற்கு காரணம் புரியாதபோதும் அவளை எப்படி சமாளிப்பது என்று யோசனை செய்தாள்.
மாலையில் சோர்வுடன் எழுந்தவளுக்கு பலகாரம் காபி கொடுத்து, கூடவே அமர்ந்து டிவியில் பார்த்த நகைச்சுவையை அபிநயத்தோடு சொல்லி அவளை சிரிக்க வைக்க முயன்று தோற்ற ரூபா, கடற்கரை வரை சென்று வரலாம் என்றாள்.
சத்யாவுக்கும் வீட்டிற்குள் மூச்சு முட்டுவது போலிருந்ததால் மறுக்காமல் உடன் சென்றாள்.
கடல் காற்று முகத்தில் மோத புத்துணர்வு பெற்றது போல உணர்தாள் சத்யபாரதி. தவிப்பு சற்றே அடங்க சுற்றுப்புறம் கருத்தை கவர்ந்தது. ஆங்காங்கே குழந்தைகள் விளையாடுவதை பார்த்தவாறு நேரம் செல்வதே தெரியாமல் பொழுது போயிற்று. இருள் சூழ ஆரம்பிக்கையில் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். மனம் லேசாகியிருந்தது. இரவு உணவு முடிந்தகையோடு வெளியே சென்று வந்த களைப்பில் சத்யபாரதி சீக்கிரமே தூங்கச் சென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டாள் ரூபா.
அதே நேரத்தில் அங்கே...
கிருஷ்ணா தூக்கம் வராமல் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான்... சத்யபாரதிக்கு கொடுத்த பரிசுப் பொருளுக்கு இந்த கணம் வரை அவளிடம் இருந்து எந்த பதிலும் வரக்காணோம். இந்த பிரிவு அவன் மேல் அவள் கொண்டிருக்கும் அன்பை உணர்த்தும் என்ற நம்பிக்கையோடு அவளை அனுப்பிவிட்டவனுக்கு, இப்போது தவறு செய்துவிட்டோமோ என்று கவலை உண்டாயிற்று.
அவள் மனநிலையை அறிவதற்காக அவன் செய்திருக்கும் இந்த ஏற்பாடு அவளை இன்னும் தூர விரட்டப்போவதை அவன் அறியவில்லை.
மறுநாள்...
சத்யபாரதி புதிய நிறுவனத்தின் பணிக்காக சென்றாள்.
அந்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் அவளுக்கு பொறுப்பான மேற்பார்வையாளர் வேலை. ஆனால் மனதை வேலையில் ஈடுபடுத்த சிரமப் பட்டாள். இரண்டு நாட்கள் நகர்வதற்குள் உடலும் மனமும் சோர்ந்துவிட்டது.
கிருஷ்ணாவைப் பாராமல் பேசாமல் இருப்பது இத்தனை கஷ்டமாக இருக்கும் என்று அவள் எண்ணவில்லை.
கிருஷ்ணாவை அவள் எந்த அளவிற்கு விரும்புகிறாள் என்று சத்யபாரதிக்கு தெளிவாக புரிந்துவிட்டது. அவனோடு இருந்தால் அவளது மனதை மறைப்பது சிரமம் என்று எண்ணினாளே. இப்போது அவனைப் பார்த்துக்கொண்டேனும் இருந்தோமில்லையே என்று ஆசை கொண்ட மனது அடித்துக் கொண்டது. அவன் சொன்னான் என்று வேறு வேலை தேடியிருக்கக்கூடாது. அவனிடமும் தொழிற்சாலை இருக்கத்தானே செய்கிறது. அங்கேயே ஏதேனும் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யச்சொல்லி இருக்கவேண்டும் என்று எண்ணியவளுக்கு அவன் வேலையை விட்டு போகச் சொன்ன காரணம் நினைவிற்கு வர மனம் சோர்ந்தது. அங்கே பெண்களுக்கு இடமில்லை.
மனதை திடப்படுத்திக் கொண்டு முனைந்து மற்றதை நினைக்க முடியாத அளவிற்கு வேலை நேரத்தில் முழு கவனத்தையும் செலுத்தி அதில் வெற்றியும் கண்டாள்.
ஆனால் இரவின் தனிமையில் வந்த நினைவுகளை என்ன முயன்றும் விலக்க முடியாமல் தவித்தாள். நேசம் என்று இருவரும் பேசிக் கழிக்கவில்லை தான். அவன் மீது வைத்து விட்ட நேசம் அறிந்தபின் அவனோடு பேசி சிரித்த ஒவ்வொரு நிகழ்வையும எண்ணி மகிழ்வதும் இப்போது அவை இல்லாமல் போனதை எண்ணி கண்ணீர் விடுவதும் வழக்கமாயிற்று. அதே சமயம் அவன் வேறு ஒருத்தியை விரும்புகிறான் என்று அறிந்தும் அவனையே நினைக்கிறதே வெட்கம் கெட்ட மனது என்று அவ்வப்போது தன் மீதே கோபமும் உண்டாயிற்று.
மொத்தத்தில் சத்யபாரதியின் மனம் ஒரு நிலையில் இல்லை. இடையில் வந்த ஞாயிறன்று, ரூபா அவளை தான் வளர்ந்த ஆசிரமத்திற்கு அழைத்து சென்றதால் அவளது மனதிற்கு சற்று மாற்றாக இருந்தது.
சத்யபாரதி பணியில் சேர்ந்து பத்து நாட்கள் கழி்ந்திருந்தது.
அன்று மாலையில்..
சத்யபாரதி, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு திருப்பத்தில் எதிரே வந்த வாகனத்தை கடைசி வினாடியில் பார்த்து சுதாரித்து பிரேக் பிடித்து நிறுத்தினாள். எதிரில் வந்த வாலிபன் சில அடிகள் கடந்து சென்று தன் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, அவளிடம் ஓடி வந்து,"மிஸ் சத்யபாரதி உங்களுக்கு அடி ஒன்றும் படவில்லையே" என்று பதற்றத்துடன் வினவ, திகைத்து நிமிர்ந்தாள்.
"எனக்கு அடி ஒன்றுமில்லை” என்றவள், கேள்வியாய் நோக்கி "நீங்கள்? மன்னிக்கவும் எனக்கு உங்களை நினைவில்லையே??" என்றாள்.
"என்னை அதற்குள்ளாக மறந்து விட்டீர்களா சத்யபாரதி? குருவை மறக்கலாமா என்று ஆச்சர்யமாய் புன்னகைத்தவன்,தொடர்ந்து " நான் மிஸ்டர் கிருஷ்ணசந்திரனுடைய பெர்சனல் செக்ரட்டரி ரவி." என்றான்.
" ஓ! ஆமாம். இப்போது நினைவு வருகிறது. முன்னாள் பி.ஏ. மிஸ்டர் ரவி.. சில மணி நேரங்கள் தானே அதனால் முகம் சரியாக நினைவில் இல்லை. மன்னிக்கவும்".
"அது ..ஆமா .ம்ம் ..அடடா, என்ன என்னிடம் போய் மன்னிப்பெல்லாம் கேட்டுக் கொண்டு, நீங்கள் சொல்வதும் சரிதான். அன்றைக்கு நீங்க சற்று பதற்றமாக இருந்ததால் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் என்னால் உங்களை மறக்கவே முடியாது மிஸ் சத்யபாரதி.
"மறக்க முடியாத அளவுக்கு நான் அப்படி என்ன செய்து விட்டேன் மிஸ்டர் ரவி? "
"அது... என்றவன்" சற்று தயங்கிவிட்டு,"அதை விடுங்கள்,நான் சொன்னால் அது உங்களுக்கு பெரிய விஷயமாக தெரியப் போவதில்லை மிஸ். சத்யபாரதி. அங்கே பெண்களே யாரும் கிடையாதல்லவா? நீங்கள் அதிசயமாக வேலைக்கு வந்தது, உங்களுக்கு நான் வேலை சொல்லி கொடுத்தேன் என்பதால் என்னால் எளிதில் மறக்க முடியவில்லை" என்றான்.
அவன் சொல்ல வந்தது வேறு விஷயம். ஆனால் அதை மறைக்க, ஏதேதோ சொல்லி சமாளிக்கிறான் என்று சத்யபாரதிக்கு தோன்றியது. அப்படி மறைக்கவேண்டிய ரகசியம் என்ன இருக்கிறது? என்று எண்ணியவள் "என்னை நினைவு வைத்திருப்பதற்கு நன்றி, மிஸ்டர் ரவி. நீங்கள் எங்கோ அவசரமாக போய்க்கொண்டிருந்தீர்கள் போல" என்று விசாரித்தாள்.
"நான் உங்களை பார்த்து பேசத்தான் வந்துட்டு இருந்தேன் மிஸ் சத்யபாரதி. நீங்க வீட்டுக்கு கிளம்பறதுக்குள்ள வரணும்னுதான் அவசரமாக வந்தேன். அதனால் தான் கவனம் சிதறிப்போயிற்று, நல்ல வேளையாக உங்களை பார்த்துவிட்டேன்" என்றதும்,
"என்னைப் பார்க்கவா? என்று ஆச்சர்யமாய் வினவினாள்.
"ஆமா, நீங்கள் இப்போது வேறு வேலைக்கு செல்வதாக கேள்விப்பட்டேன். அது பெரிய நிறுவனம். அங்கே எனக்கு தெரிந்த பெண்ணிற்கு தொழிற்சாலையில் வேலை ஏதும் காலி இருந்தால் கேட்கலாம் என்றுதான்"
"ஓ! நான் வேலைக்கு சேர்ந்து பத்து நாட்கள் தானே ஆகிறது? அதனால் வேலை விஷயம் எதுவும் சரியாக தெரியவில்லை. நான் விசாரித்து பார்க்கிறேன். அப்படி எதுவும் இருந்தால் கண்டிப்பாக சொல்கிறேன் மிஸ்டர் ரவி."
"ரொம்ப நன்றி மேம் என்றவன் சற்று தயங்கியவாறு,”வந்து நான் ஒரு விஷயம் கேட்டால் தப்பாக நினைக்கமாட்டீங்களே மேம்? என்றான்.
"என்ன கேளுங்கள்".
"அது வந்து கிருஷ்ணா சார் மேல் உங்களுக்கு ஏதும் கோபம் இல்லையே மேம் ?"
"அவர் மேல் எனக்கு என்ன கோபம்? அவரிடம் தொடர்ந்து வேலை பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு முதலாளியிடம் வேலை பார்ப்பதை விட்டுவிட்டு உங்களால் எப்படி வேறு வேலைக்கு போகமுடிந்தது?"
"இல்லையே, மேம்" என்றவன் சட்டென்று நிறுத்தி, "என் சூழ்நிலை அப்படி மேம்" என்றவாறு கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு, "எனக்கு நேரமாகிவிட்டது, உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோசம் மேம், ஸீ யூ. டேக் கேர் " என்று அவசரமாக விடைபெற்று தன் வாகனம் நோக்கி செல்ல..
தன் வாகனத்தை கிளப்பியவளுக்கு, ஒரு விஷயம் உறுத்தியது. அவள் வேலை செய்யும் நிறுவனம்பற்றி அறிந்தவன் கிருஷ்ணா மட்டுமே. அது எப்படி ரவிக்கு தெரியும் ?? என்று யோசிக்கையில் அவனது பேச்சில் தடுமாற்றமும் ஏதோ ஒரு முரண்பாடும் இருப்பது போல தோன்றியது. ஆனால் அது என்னவென்று எவ்வளவோ யோசித்தும் புரியவில்லை.
அந்த வாரம் ஞாயிறு....
சத்யபாரதி இன்னும் இயல்பாக இல்லை என்று தோன்றியதால் அன்றும் வீட்டில் இருக்க வேண்டாம் என்று எண்ணிய ரூபா, எங்காவது வெளியே சென்று வரலாம் என்று யோசனை சொன்னாள்.
சத்யபாரதிக்கு முந்தைய வாரம் ஆசிரமத்திற்கு சென்றது ஞாபகம் வந்தது. ஆனால் ரூபா வீட்டிலும் வேலை செய்துவிட்டு அங்கேயும் வேலை செய்வதில் அவளுக்கு உடன்பாடு இல்லை. அதே சமயம் அவள் வீட்டோடு அடைந்து கிடப்பவள், அவளுக்கு ஒரு மாற்றம் தேவைப்படும்போது அதை மறுப்பது தவறு என்று சரி என்றாள். எங்கே செல்வது என்று இருவருமாக ஆலோசித்து கடைசியில் சத்யபாரதி இன்னும் மகாபலிபுரம் பார்த்ததில்லை என்பதால் அங்கு செல்ல முடிவு செய்தனர்.
மகாபலிபுரத்தில்..
ஞாயிறு என்பதால் நல்ல கூட்டம். சத்யபாரதிக்கு முதலில் கொஞ்சமும் உற்சாகம் உண்டாகவில்லை என்றாலும் ஒருவாறு முயன்று ஈடுபாட்டுடன் சிற்பங்களை கவனித்தவாறு வந்தாள். மதிய உணவு வேளை வந்துவிட்டிருந்தது. ரூபா தண்ணீர் பாட்டில் வாங்கி வர கடைக்கு செல்ல, வெண்ணை உருண்டை என்றழைக்கப்பட்ட அந்த பெரிய பாறையை சத்யபாரதி வியப்புடன் பார்த்தபடி நடந்து நிழல் தேடி ஒரு மரத்தின் அடியில் சென்று சற்று சாய்ந்து நின்று தன் கைப்பேசியில் அந்த பாறையை படம்பிடிக்க கோணம் பார்க்கையில் திடுமென ஒரு ஆணின் அழுத்தமான குரல் கேட்டு திடுக்கிட்டாள்.
சந்தேகமின்றி அது கிருஷ்ணாவின் குரல்தான். லேசாக எட்டிப்பார்க்க அங்கே மரத்தின் மறுபுறம் கிருஷ்ணா ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள். அந்தப் பெண் முதுகு காட்டி இருந்ததால் அவளைப் பார்க்க இயலவில்லை.
கிருஷ்ணாவின் முகம் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமாக காணப்பட்டது. அவள்தான் அவன் விரும்பும் பெண்ணாக இருக்கும் என்று நினைக்கும்போதே மனதுக்குள் பிசைந்தது. வேறோடினாற்போல கால்கள் நகர மறுத்தது.
தொடர்ந்த கிருஷ்ணாவின் பேச்சை கவனித்தவளுக்கு அங்கிருந்து உடனடியாக சென்றுவிட வேண்டும் என்று உத்வேகம் பிறந்தது.
(ஒட்டு கேட்பவர்கள் நல்லதை கேட்பது இல்லை என்பது பழமொழி) தவறானதும் கூடத்தான்.