• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

19. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
மதுரை

மாலையில் பள்ளியில் இருந்து திரும்பி வந்த சுரேந்திரன் இரவு உணவுக்கு பிறகு, விருதுநகருக்கு
கிளம்பிச் சென்றான்! செல்லுமுன்பாக ஆயிரம் ஜாக்கிரதைகளை மனைவிக்கு சொல்லிவிட்டு சென்றான்!

சாந்தி மறுநாளில் இருந்து பகல் பொழுதில் காலையில் சமைத்து வைத்ததை கொண்டு உண்டு விட்டு, வீட்டு வேலைகளை முடித்து விட்டு மாலையில் அவர்கள் தெருவிலுள்ள கோவிலுக்கு சென்று மனமுருக வேண்டுதல் வைத்தபடி அமர்ந்திருப்பாள்!

சுரேந்திரன் சென்று ஓரு வாரம் கழிந்திருந்தது! தினமும் பேசினான்! அன்றைக்கு அவனது அழைப்புக்காக காத்திருந்தாள்!

அன்றும் சாந்தி தன் வழக்கம் போல கோவிலில் மனதில், பிராத்தனை செய்தபடி, அவ்வப்போது கைப்பேசியை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்!

சாந்திக்கு தன் மடியில் ஒரு குழந்தை தவழாதா என்ற ஏக்கம்தான் அன்றும்! கண்ணீர் வழிய பிரார்த்தனை செய்தபடி இருந்தபோது, யாரோ சாரு! இருடி ஓடாதே ! என்ற குரல் கேட்டு கலைந்தாள்! நாத்தனாரின் நினைவு வந்தது! அவர்களுக்குள் எப்போதும் இணக்கம் தான்! பிணக்கு வந்ததே இல்லை!

சாருவுக்கு,சுரேந்திரன் மீது அதிக பாசம்! மாற்றாந்தாய் மக்களாக அவர்கள் ஒருபோதும் நடந்து கொண்டது இல்லை! உடன் பிறந்தவர்கள் போன்ற பிரியம்தான்! பிரியா சாருவிடம் ஒட்டவில்லையே தவிர,அவர்கள் இருவரின் பழக்கத்தை தடை செய்தது இல்லை! அதைப் பற்றி சாந்தியிடம் சொல்லியிருக்கிறாள் சாரு!

சாந்திக்கு நாத்தனார் மீது மிகுந்த பாசம் உண்டு, பெரிய வீட்டில் வாழும் மருமகள் என்ற கர்வம் சிறிதும் கிடையாது! மருத்துவர்களுக்கு இயல்பாக இருக்கும் கனிவும், அக்கறையும் அவளிடம் கூடுதலாகவே இருக்கும்!
சாருபாலாவும், சாந்தியும் நல்ல சகோதரிகள் போலப் பேசிக் கொள்வார்கள்! பெரும்பாலும் சாந்தி தான் அவளை அழைத்து பேசுவாள்!

சில மாதங்களுக்கு முன்பு, மதுரையில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் சாந்திக்கும் சுரேந்திரனுக்கும் பரிசோதனைகள் செய்து பார்த்தபோது எந்த குறையும் இல்லை! நம்பிக்கையோடு இருங்கள் நிச்சயமாக உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் நம்பிக்கையாக சொன்னார்கள்! அதை சாருவிடம் சொன்ன போதும், அவளுக்கு திருப்தி இல்லை! ஆகவே அவ்வப்போது பேசும் போதெல்லாம்,எதற்கும் தனக்கு தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று ஒரு பரிசோதனை செய்து ஆலோசனை கேட்டு வரலாம் என்று சாந்தியை சென்னைக்கு கிளம்பி வரச் சொல்லிக் கொண்டிருந்தாள்! ஆனால் சுரேந்திரனுக்கு சேர்ந்தார் போல லீவு போட முடியாத சூழ்நிலை! சாந்தி தனியாக எங்கும் சென்று பழக்கமில்லாதவள்! இதனால் அவளது பயணம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது! சாந்திக்கும் ஒரு வேளை நாத்தனார் சொல்லும் மருத்துவரிடம் சென்றால் சீக்கிரமாக குழந்தைப் பேறு கிட்டுமோ என்று உள்ளூர ஒரு ஆவல் ஓடிக் கொண்டிருந்தது!

அவளது எண்ணத்தை தடை செய்யும்படி கைப்பேசி ஒலித்தது! ஏதோ தெரியாத எண்கள், எடுப்பதா வேண்டாமா என்று யோசிக்கும்போதே கட்டாகிவிட்டது! மீண்டும் அதே எண்களில் இருந்து அழைப்பு வர, வேகமாக எடுத்து பேசினாள்!

"ஹலோ! யாருங்க வேணும்?"

"நீங்கதானே, சுரேந்திரன் சார் மனைவி?"

"நீங்க யார்னு முதல்ல சொல்லுங்க!"

"மேடம்,நான் சொல்லப் போற விஷயத்தை கேட்டு நீங்க பதற்றமடையாதீங்க! அவருக்கு, விபத்தாகி, இங்கே மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்! நீங்க உடனே கிளம்பி வர முடியுமா? "

கணவனுக்கு விபத்து என்றதுமே சாந்திக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வர, அப்படியே மயங்கி சரிந்தாள்! அங்கிருந்த பெண்கள் கூடிவிட்டனர்! ஒரு பெண் அவளை தன் மடியில் போட்டு கன்னத்தை தட்டி அவளுக்கு சுயநினைவை வரவழைக்க முயன்றாள்! அதற்குள்ளாக இன்னொரு பெண் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்!
முகத்தில் தண்ணீரை தெளிக்க, மெல்ல கண் திறந்த போது, அவளது கைப்பேசி மீண்டுமாக ஒலிக்க, அந்தப் பெண்ணே எடுத்துப் பேசினார்!

"சார், அவங்க மயக்கமாகிட்டாங்க! என்ன விஷயம் சார்! ஓ! அடடா! அவருக்கு உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே? நல்லது சார்! கடவுள் புண்ணியம் தான்! நான் சொல்றேன் சார்! வச்சிடுறேன்! என்று கைப்பேசியை சாந்தியிடம் கொடுத்தவள், " நீ பயப்படும்படியாக, உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லைம்மா! கையில தான் பலமான அடியாம்! அறுவை சிகிச்சை செய்யணும்னு டாக்டர் சொல்றாராம்! அத்தோட அவரோட உறவுக்காரங்கள் வரணும்னு அழுத்தமாக சொல்றாங்க! நீ போய் வீட்டுல பெரியவங்க யாருன்னா இருந்தா கூட்டிட்டு கிளம்புமா! " என்றார்

சாந்திக்கு ஒன்றுமே ஓடவில்லை! அங்கிருந்து வேகமாக வீட்டை அடைந்தாள்! சட்டென்று நாத்தனாரின் நினைவுதான் வந்தது!

🩷🩵🩷

ஆனந்தன் சொன்னது போல அவன் அதிகமாக வீட்டில் தங்கவில்லை! சொல்லப் போனால் அவனை கண்ணால் காண்பதே அரிதாகிக் கொண்டிருந்தது!

சாருவின் காதல் கொண்ட மனது ரொம்பவே தவித்தது! அதை யாரிடமும் பகிர முடியாத கொடுமை ஒருபுறம்! கணவனிடம் எதையும் மனம் விட்டு பேசிப் பழக்கமில்லாததால் தன் உணர்வுகளை அவனிடம் நேரடியாக வெளிப்படுத்த முடியாத அவலம் ஒருபுறம்!

அன்று ஞாயிற்றுக்கிழமை!

ஏழு மணி வரை தூங்கி எழுந்த ஆனந்தன்,காலையில்
எழுந்து,குளித்துவிட்டு,சாரு பரிமாற பலகாரம் சாப்பிட்டான்! அதன் பிறகு லேப்டாப் சகிதமாக வேலை என்று அவனது அலுவலக அறைக்குள் தஞ்சமாகிவிட்டான் !

மறுநாள் திங்கட்கிழமை அன்று அவளுக்கு இரவு பணி தொடக்கம்!
அதனால் அன்று மதியம் சாருபாலா தானே சமைப்பதாக சொல்லி, நாட்டுக்கோழிபிரியாணி, மட்டன் கிரேவி, முட்டை மசாலா, வஞ்சிர மீன் ஃபிரை, புதினா சட்னி, வெள்ளரிக்காய் ரைத்தா, என்று பார்த்து பார்த்து சமைத்தாள்! எல்லாம் எடுத்து மேசை மீது வைத்துவிட்டு, வியர்வை கசகசப்பு நீங்க குளிக்கச் சென்றாள்!

உடை மாற்றிவிட்டு, கணவனை அழைக்க அவனது அலுவல் அறைக்கு சென்றால், அங்கே அவன் லேப்டாப் பையுடன் கிளம்பிக் கொண்டிருந்தான்!

"ஆனந்த்,மணி ஒன்னாகப் போகுது ! வந்து சாப்பிடுங்க! அப்புறமாக கிளம்புங்க! என்றாள்

"சாரு, நான் அவசரமாக பெங்களூர் போயாகணும் ! ஆஃபீஸ் போய் பேக் எடுத்துட்டு கிளம்பவே டைம் சரியாக இருக்கும்! வேணும்னா சாப்பாட்டை கட்டிக் கொடுத்துடு
நான் போற வழியில் சாப்பிட்டுக்கிறேன்! "என்றதும் வேறு வழியின்றி, சாருவும் ஹாட் கேரியரில் சாப்பாட்டை பேக் செய்து அவனிடம் தந்தாள்!

ஆனந்தன் கிளம்பிச் சென்றபின், அதுவரை இருந்த அவளது மொத்த உற்சாகமும் வடிந்துவிட்டது! கணவன் சென்றது உண்மையில் சாருவுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது!

அவள் கையால் பரிமாறி அவன் சாப்பிடும் அழகை காணவும், சாப்பாட்டை பற்றி அவனது பாராட்டை கேட்கவும் ஆசையாக காத்திருந்தாள்! அதற்காக
அவ்வளவு நேரம் உழைத்தது எல்லாமும் வீணாகிப் போனதே என்று வருந்தினாள்!

அவளுக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை! கண்கள் தன்னிச்சையாக கலங்கியது! அழுவதால் யாருக்கு என்ன பயன் என்று அடக்கிக் கொண்டு பெயருக்கு உண்டுவிட்டு, அனிதாவின் மடியில் உறங்கிக் கொண்டிருந்த மகனை தூக்கிக் கொண்டு அறைக்கு சென்று படுத்துவிட்டாள்! ஏனோ குழந்தை அருகில் இருப்பது பெரும் ஆறுதலாக இருந்தது!

கணவன் ஊரில் இல்லாதது அவளை வாட்டியது! இனி இப்படித்தான் என்று அவன் ஏற்கனவே சொல்லிவிட்டதால், அந்த நிலையை ஏற்கத்தான் வேண்டும் என்று புத்தி உரைத்தாலும் மனம் அடம்பிடிக்கும் குழந்தையாய் கணவனின் அன்புக்கும் அருகாமைக்கும் ஏங்கியது!

மறுநாள் ...

அவள் பணிக்கு கிளம்பிக் கொண்டிருந்த போது சாந்தியிடம் இருந்து அழைப்பு வரவும் இதழில் சிறு புன்னகை மலர, எடுத்து பேசியவள் முகம் சட்டென்று பதற்றமாக மாறியது!

"சாந்தி, என்னாச்சுமா ஏன் அழறே? அழாமல் விஷயத்தை சொல்லுமா!" என்றாள் சாரு தன் பதற்றத்தை மறைத்தபடி கேட்டாள்!

சாந்தி சொன்னதை கேட்ட சாருபாலாவுக்கு சற்று நேரம் என்ன செய்வது என்றே தெரியவில்லை! எதிர்முனையில்..

"அண்ணி, அண்ணி " என்ற அழைப்பில் சுதாரித்தாள்! சாந்தி பயப்படாதேம்மா! உனக்கு வந்த நம்பரை எனக்கு அனுப்பு நான் பேசிக்கிறேன்! நீ தைரியமாக இரு! நான் முடிஞ்சளவு சீக்கிரமாக அங்கே வர்றேன்! " என்று கைப்பேசியை துண்டித்தாள்!

சாரு மாமியாரிடம் விரைந்தாள்!

விசாலம் சாருவை ஊருக்கு செல்ல அனுமதிப்பாரா? அனுமதிக்காவிட்டால் சாரு என்ன முடிவு எடுப்பாள்??