• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

19. பிரியபாரதீ - இணைவதே காதல்

பிரியபாரதீ

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 28, 2022
Messages
23
நிஜங்கள் நிர்வானமாய் நின்றது அவள் முன்.
நித்திரைக் கூட அவளை வெறுக்கத் தொடங்கியது. அவள் தேடிய உண்மை அவள் தேடல்களுக்குள்ளேயே சிக்கிக்கொண்டது. அணையாது இவள் தூக்கத்திற்காய் காத்துக்கொண்டிருந்த மின்குமிழ் பொழுதுபோக்கிற்காய் ஈசல்களை தன்பால் ஈர்த்துக்கொண்டது போல. இவளின் அழுகையின் ஆரம்பம் கூட பொழுதுபோக்கின் ஈர்ப்புதானே. ஈசல்களும் மின்குமிழின் மாய சிரிப்பிற்குள் நெருங்கிக்கொண்டன.

அவைகளின் ஒரு நாள் கூத்து ஒரு வாழ்க்கை. மனம் எனும் கருவி பொருத்தப்பட்ட மனிதர்களின் பலநாள் கூத்து ஒரு வாழ்க்கை.

தூக்கம் அவளை போர்த்திக்கொள்ளாததால்
கடந்துபோன சில நினைவுகள் அவளை நெருங்கிக்கொண்டிருந்தன.

"' ' என்ன பிரச்சினை வந்தாலும் கைவிடமாட்டேன் , வயதாகி வாழ்க்கையின் கடைசி கட்டத்தில என் உயிர் உன் மடியில் தான் போகனும் ' என்றெல்லாம் சொன்னவன் வந்த முதல் பிரச்சினையிலேயே விட்டுச்சென்றுவிட்டானே...."

"நான் அம்மா சொல்லும் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறனு" சொல்லிட்டு போய்டானே. உண்மையிலேயே வேற பொண்ண பேசியிருப்பாங்களா....?"


மனதுள் சென்ற நினைவுகள் ஆத்மபொருளை கசக்கி பிழிந்து சாற்றை கண்களின் வழி வெளியேற்றின. சிலமணி நேரங்கள் கண்ணிரோடு விம்மியும் தீர்ந்துப்போகாத எண்ண அலைகளோடான போராட்டத்தின் இறுதியில் , அழுகையின் களைப்பினால் தானாக கண்கள் அயர்ந்துக்கொண்டன.

மின்குமிழ் ஒளி அணைய சிறிது நேரத்தில் ஈசல்கள் அவைகளின் ஒரு நாள் பூரணத்திற்கு வேறு இடம் மாறிச்சென்றன. இரவு இருளாகவே கழிந்தது.


வஞ்சனை இல்லாத சூரியன் இருள் போர்வையை இழுத்து தன் மனைவிக்கு முத்தமிட்டான். பல்லாயிரம் உயிர்களைக் பெற்றெடுக்கும் பூமி மங்கை நாணத்தில் மெது மெதுவாய் அழகாய் சிரிக்கத் தொடங்கினாள்.

ஜன்னல்களை திறந்து விட,
ஜன்னல் வழியே வந்த காற்று அகலிகாவின் சருமத்தை தடவி நலம் விசாரித்தது. அவளும் அதனோடு பேச தலையை ஜன்னல் பக்கமாய் திருப்பினாள். ஒரு மரத்தின் இரு கிளைகள் காற்றில் அசைய சூரிய ஒளி ஊடுருவலோடு அதன் நிழல் ஒன்றையொன்று உரசிக்கொள்வது போல தரையில் விழுந்தது.

இக் காட்சியை நகலெடுத்த அகலிகாவின்
மூளை அவளும் அவனுமாக இருந்த நினைவுகளின் விம்பங்களை அவள் உள்ளத்தில் நிழலாடவிட்டது . சிறிது நேரத்தில் அவள் கண்களில் கண்ணீர் நிறைய தொடங்கியது......


மீண்டும் தலையணையில் தலை சாய்த்தாள். அப்போது அந்த தலையணை மட்டும் தான் அவளை அணைக்கும் உறவாக இருந்தது. இறுக அணைத்து கொண்டாள். தலையணைக்குள் முகத்தை புதைத்துக்கொண்டாள். அழுதாள். விம்மினாள். அந்த அழுகையில் கோவம், ஏக்கம்,பாசம், ஏதோ ஒன்றை இழந்து விட்ட சோகம் எல்லாம் கலந்திருந்தது.

அழுகையும் அவளை வெறுத்தபின் அதிலிருந்து தன்னை விடுவித்துகொள்ள முயன்றவள், முதல் செயலாக படுக்கையைவிட்டு எழ நினைத்தாள். கண்களை துடைத்தாள். ஆனால் மூட மூட வந்து வந்து மண்ணை நனைக்கும் ஊற்று நீர் போல துடைக்க துடைக்க அவள் கன்னங்களை கண்ணீர் நனைத்துகொண்டே இருந்தது. ஒருவாராக பெருகும் கண்ணீருக்கு கையால் அணைக்கட்ட முடியாது. இறுக்கமான மனதால் தான் அணைக்கட்ட முடியும் என்பதை புரிந்துகொண்டாள். மனதை இறுக்கபடுத்தினாள்.

அவளின் எதிரே இருந்த கண்ணாடியில் அவள் தெரிந்தால். அழுது தீர்த்த முகம் அவளுக்கு வித்தியாசமாக தெரிந்தது.

"நானா அழுதேன், என்னால அழ கூட முடியுமா? நா போய் இப்படி அழலாமா? சின்னபுள்ள தனமால இருக்கு. நா அழுதா என் முகம் நல்லாவே இல்ல... இந்த அகலிகா முகம் எப்பவும் அழகாதான் இருக்கணும்...."

அவளுக்குள் இருந்த குழந்தைத்தனம் அவளை வேறு கோணத்தில் திசைதிருப்ப முயல்கையில் கண்களோடு இணைந்து செயற்பட்ட அவள் உதடுகளில், உண்மைக்கு எதிரான ஒரு விதமான சிரிப்பு அவசரத்திற்கு தஞ்சமடைந்தது.

அந்த குழந்தை தனமான மனதோடு அந்த கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த சிறிய அளவிளான வட்டவடிலான கறுப்புநிற பொட்டுகளைப் பார்த்தாள்.

அந்த பொட்டுகள் வரிசையாக ஒட்டப்பட்டிருந்தன.

இரு புறுவங்களின் காவலோடு பச்சைக் குழந்தையின் கண்களைப் போன்ற இரு வெள்ளை கண்களை சிரிக்கச் செய்துகொண்டு மூக்கு நுனியின் நேர்கோட்டில் அந்த சிறிய நெற்றியை ஆளும் கறுப்பு வீரனாக ஒட்டியிருந்த பொட்டுகள்தான் அவை.

அவை அந்த நாட்களை திரும்பவும் நினைவுபடுத்தியது. அவள் உள்ளம் நேசித்த மகௌரனை நேரில் பார்க்கச் சென்ற நாட்களில் அவள் நெற்றியில் வைத்த பொட்டுகளே அவை.


என்னதான் அணைக்கட்டினாலும் அவனது பிரிவு மனதை அழுத்தி அழுத்தி ஏக்கத்தை வெளியேற்றிக்கொண்டேதான் இருந்தது.


இந்த அழுகைக்கான சரியான அணை அவனது குரலொலியாக மட்டுமேதான் இருக்கமுடியும். தொலைபேசியை எடுத்தாள்.

அவன் அழகாய் கள்ள சிரிப்போடு நின்றுக்கொண்டிருந்தான். அந்த ஒளிப்படம் அகலிகாவை அவன் நிதானமாய் இரசித்துக்கொண்டிருந்தப்போது அவள் தோழி அவர்களுக்குத் தெரியாமல் அவள் தொலைபேசியில் எடுத்தது.

"எப்படி உன் முகத்தை வெறுப்பேன்...? " கண்கள் ஈரமானது. அந்த தொலைபேசியில் பதிவு செய்திருந்த அவனின் குரலொலிகளைக் கேட்டாள்.

அறைக்கதவை திறந்து உள்ளே வந்த தாய் நீர் நிறைந்திருந்த தன் மகளின் கண்களைக் கண்டுவிட்டு என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் அவளை தனிமையிலேயே விட்டுச் சென்றாள்.


நடப்பதையெல்லாம் அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த தந்தையால் பேசாமல் இருக்க முடியாதுபோக, மகளிடம் பேச்சுகொடுத்தார்.

" அகலிகா.... எத்தன நாளைக்கு தான் அழுதுகொண்டே இருக்கபோற? ஒன்னும் யோசிக்காமல் இரு. எல்லாம் நல்லாபடியா நடக்கும்.

"முடியாதுப்பா, நா உங்களுக்கெல்லாம் பாரமா இருக்கென். நா அழுதழுதே செத்துபோய்ட்றன். என்ன தனியா விட்டுடுங்க... தயவு செய்து என்ன தனியா விடுங்க." குரல் அழுகையோடு சற்று ஆவேசமாகவே வந்ததுதித்தது.


மகள் ஏதும் தவறான முடிவு எடுத்துவிடுவாளோ என்றஞ்சிய தந்தை,
" இப்ப என்னால ஒன்னுமே செய்யமுடியாதுமா. ஆனால் ஒன்னு எந்த பிரச்சினையும் பேசி தீர்க்க முடியும். இத மட்டும் மனசுல வச்சுக்க அகலிகா" என தலையை தடவிவிட்டு வெளியே சென்றவர் அடுத்த அறையில் வானத்தையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த அகலிகாவின் அக்கா ஆதிரா, தந்தையின் அரவம் கேட்டு திரும்பி பார்த்த பார்வையில் ஓராயிரம் கேள்விகளை புதைத்திருந்தாள். ஒன்றும் பேசாது மௌனமாய் திரும்பிச்சென்றார் தந்தை.

அப்போது அகலிகாவின் கண்களில் பதிவு செய்து வைத்தவை நாடகமாக ஒளிபரப்பானது. எல்லாம் மறுபுறம் புரண்ட அந்த வாரம். அந்த வாரம் என்னென்னலாமோ நடந்துவிட்டதே. தவறு எங்கு நடந்தது? இதை எப்படி சரி செய்வது? சரி செய்ய முடியுமா?

அகலிகாவின் அக்கா ஆதிரா. அவளுக்காக வீட்டில் பார்த்த மாப்பிள்ளைதான் ராகவன்.

ராகவனின் குடும்பத்தார் வந்து ஆதிராவை பெண் பார்த்து சென்றப்பின் ராகவனும் சம்மதம் தெரிவிக்க, பின்பு இரு வீட்டாரும் அவர்களது கல்யாண பேச்சை ஆரம்பித்தார்கள்.

அவர்கள் இருவரும் பேசி புரிந்துக்கொள்வதற்காக காலம் கொடுக்க வேண்டும். ஒரு வருடகாலம் கடந்து கல்யாண வைபவத்தை செய்யலாம் என சின்னஞ்சிறுசுகளின் மனநிலையிலிருந்து யோசித்த பெரியோர்கள் முடிவெடுத்தார்கள்.

பாதி தொலைபேசியிலும் மீதி ஆதிராவின் இல்லத்தில் நேரடி தரிசனத்திலும் அவர்கள் புரிதல் தொடர்ந்தது. ஆதிராவின் மனதில் ராகவன் சிம்மாசனம் போட்டே அமர்ந்துக்கொண்டான். அதுபோல ராகவனின் மனக்கோவிலிலும் ஆதிரா அழகு தேவதையாக, வரம் தரும் கடவுளாக இருக்கிறாள் என நினைத்தாள். அப்படித்தான் இரு குடும்பத்தாரும் நினைத்தார்கள்.

இந்த உறவு பாலத்தில் சந்தித்துக் கொண்ட கண்கள்தான் அகலிகா கௌசிகன்.

கௌசிகன் தூரத்துச்சொந்தமோ பக்கத்துவீட்டுக்காரனோ அல்ல. ராகவனின் ஒரே தம்பி.


ஒரு வருடம் கழிந்தது. ராகவன் ஆதிரா கல்யாணத்திற்கு திகதி குறிக்கப்பட்டது.



அகலிகாவின் அப்பா , அம்மா, அண்ணா ஊரே மெச்சுமளவிற்கு கல்யாண ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். கௌசிகனும் அகலிகாவும் நண்பர்களாக ஒற்றுமையாய் இருந்து இரு குடும்பதிற்கிடையிலான கருத்துவேறுபாடுகளையெல்லாம் சமாளித்துக்கொண்டு எல்லா சடங்குகளையும் நேர்த்தியாக செய்து முடித்தார்கள். கல்யாணமும் சிறப்பாக நடந்தேமுடிந்தது.


அந்த சிறப்பாக நடந்து முடிந்த கல்யாணத்தின் பின் சாதாரணமாக பழகிக்கொண்டிருந்த கௌசிகன் அகலிகா நட்புவட்டத்தையும் கடந்து ஒரு ஈர்ப்புக்குள் சிக்கிக் கொண்டார்கள். இது நாளடைவில் காதலாக மாறிப்போனது. அவர்கள் அறியாமலேயே ஊடுருவிய காதல் தினம் தினம் இருவரையும் பாடாய்படுத்தியது. அகலிகா தலைவார கண்ணாடி முன் நின்றாலும் அவளுள் ஊடுருவியிருந்த கௌசிகனே அந்தக் கண்ணாடியில் வந்து தெரிந்தான். கௌசிகனும் சாலையை கண்காணிக்க திருப்பிய பைக் கண்டியில் அகலிகாவின் முகத்தையே கண்டான். இருவரும் காதலை சொல்லிக்கொள்ளாமலேயே பேசி பழகினார்கள். அகலிகாவின் வீட்டினருக்கு பொறிதட்டினாலும் கண்டுகொள்ளவில்லை. அக்கா வாழும் வீட்டிற்கே தங்கையும் சென்றால் சந்தோஷம்தானே. இருவீட்டினருமே அண்ணன் தம்பி ஒற்றுமையும் அக்கா தங்கையின் பாசமும் நிலைத்திருக்குமே என்றெண்ணி உள்ளம் மகிழ்ந்தார்கள்.

ஆதிரா ராகவனின் வீட்டில் மாமா, மாமி, நாத்தனாரோடு சந்தோஷமாகத்தான் வாழ்ந்தாள். ஆனால் அந்த சந்தோஷம் ஒரு வருடத்திற்குள்ளேயே தொலைந்து தொலைதூரமானது.

தாய் வீட்டு சீர் வர மிக சந்தோசமாக புகுந்தவீட்டில் தல பொங்கல் கொண்டாடினாள் ஆதிரா. கொழும்பில் தொழில் செய்யும் ராகவன் வசதி கருதி அதே வருடம் கொழும்பிற்கு குடும்பமாக இடம்பெயர்ந்தான்.


ஆடி பதினெட்டு தாளி மாற்றி போடுவதற்காக கொழும்பிலிருந்து தாய் வீட்டிற்கு அழைத்து வந்த ஆதிராவை
பல நாட்களாகி கிழமைகளாகி மாதங்களாகியும் அழைத்துச்செல்ல ராகவன் வரவேயில்லை.

அப்போதுதான் தன் மகளின் கல்யாண வாழ்க்கை சந்தோசமாக இல்லை என்பதை யூகித்துக்கொண்ட பெற்றோர்கள் ஆதிராவிடம் அவள் வாழ்க்கை பற்றி நாசுக்காக கேட்கதொடங்கியப்போதுதான் இராகவனின் தொலைபேசியில் இராகனும் இன்னொரு பெண்ணும் இருந்து எடுத்த படங்களை கண்டிருப்பதாக கூறினாள். 'இரவு வேலை ' என கூறிவிட்டு வீட்டிற்கு வராத இராத்திரிகள் பற்றியும் கூறி அழுதாள். துடித்துப்போன பெற்றோரும் அண்ணனும் விசாரிக்கத் தொடங்கினார்கள். இராகவன் கொழும்பில் இன்னொரு பெண்ணுடன் குடும்பமாகவே வாழ்கிறான் என்பது தெரியவந்தது.


நின்று நிதானமாய் யோசிக்கமுடியாது கதிகலங்கிய நிலையில் ஆதங்க குடுவையாக இருந்த அகலிகாவின் தாய், தந்தை அண்ணா ஒருவாராக ராகவனைத் தேடி பிடித்து பொலிஸ்க்கு வரவழைத்து ,

"ஏன்டா இப்படி செய்த? எங்க பொண்ண பிடிக்கல்லனால் சொல்லிருக்கலாமே. நாங்க இந்த கல்யாணத்தையே செய்துருக்கமாட்டோமே...."

என அகலிகாவின் தாய் கேபோது ,

"நானும் அந்த பொண்ணும் சின்னவயதிலிருந்தே பழகுறம். எங்க அம்மா வற்புறுத்தி சொன்னதாலதான் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லவேண்டிய கட்டாயநிலையில இருந்தன். என்ன மண்ணிச்சிருங்க. "

இதுதான் அந்த பொலிஸ்நிலையத்தில் வைத்து ராகவன் சொன்ன பதில்.
அந்த பதிலோடு அவன் கன்னத்தில் வந்து விழுந்தது ஆதிராவின் அம்மாவின் கையின் பலம் சொல்லியபடியே செருப்பரை.


"கல்யாணத்துக்கு முன் ஒரு வருஷ காலம் கொடுத்தமே. அப்பசரி சொல்லியிருக்கலாமே. போன்லலாம் நல்லாதானே பேசிகிடிங்க. வீட்டுக்கும் வந்து பேசினிங்களே இரண்டு பேரும். ஆதிராகிட்டசரி சொல்லியிருக்கலாமே. இந்த கல்யாணத்த பேச்சோடயே நிறுத்தியிருப்பமே. இப்படி செய்ய எப்படிடா மனசு வந்தது"

என கண்கலங்கி நின்ற தந்தை மறுபுறம் கேட்க,


",என்ன மன்னிச்சிடுங்க, நா செய்தது தப்புதான். இந்த கல்யாணத்த நா கெடுத்தால் "செத்துருவனு " சொல்லி எங்க அம்மா அழுதாங்க. எதுவுமே செய்யமுடியாத மனநிலையில நா இருந்தென். என் நிலைமைய சொல்லத்தான் ஆதிரா வீட்டுக்கு வந்தென். ஆனால் சொல்ல முடியல.... என்னால சின்ன வயசுலருந்து என்னையே நம்பியிருக்க அந்த பொண்ண கைவிட முடியவுமில்ல. அவ பாவம். என்ன செய்றதுனே தெரியாமல்தான் நா.......மன்னிச்சிடுங்க" கையெடுத்து கும்பிட்டு கதறினான்.

*********

இந்த சம்பவத்தோடு அறுந்தவிட்டதாக நினைத்த அந்த உறவுமாலை இன்னமும் ஒரு நூலணுவில் தொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது என்பது ஒன்பது வருடங்களின் பின்னே அகலிகா குடும்பத்திற்கு தெரியவந்தது.

அன்று சாலையில் அகலிகாவையும் ராகவனின் தம்பி கௌசிகனையும் கண்ட அகலிகாவின் அண்ணாவின் இரத்தம் கொதித்து அணலானது.

" துரோகி, இங்க உன் அக்கா வாழ்க்கைய சீரழிச்ச அந்த குடும்பத்துல போய் வாழ ஆசபட்றியே...புத்திகெட்ட சுயநலகாரி...ச்சி... நா உயிரோட இருக்கும்வரை நீ நினைக்கிறது ஒருகாலமும் நடக்காது" வீட்டில் ஒலித்த அண்ணன் குரலில் அடங்கி கிடந்தது மொத்த குடும்பமும்.

தனக்கு துரோகம் செய்த குடும்பத்திடம் உறவு கொண்டாடுகிறாளே தங்கை. எனக்கொரு வலி என்றால் அது அவள் வலி என நினைப்பாள் என்றே நினைத்திருந்த ஆதிராவிற்கு இது பேரதிர்ச்சிதான்.

அவள் வாழ்க்கையை கெடுத்தார்கள் என்பதற்காக தங்கை காதலை எதிர்ப்பதா? ஒன்பது வருடமாக யாருக்கும் தெரியாது வளர்ந்த காதலை விடசொல்வதில் நியாயம்தான் இருக்கிறதா? தராசை சமன் செய்யமுடியாத ஆதிரா நடப்பது விதி என மௌனமானாள்.


"அக்காவை ஒழுங்காக வாழ வைக்காதவர்களா உன்னை வாழ வைக்கபோகிறார்கள்? " தன்மையாகவும் சில நேரம் ஆதங்கமாகவும் கூறி அகலிகாவின் மனதை திசைதிருப்ப முயன்றார்கள் தாயும் தந்தையும்.

"நான் கல்யாணம்னு ஒன்னு கட்டினால் கௌசிகனைத்தான் கட்டுவேன்." அடம் பிடித்தாள் அகலிகா.

கோபத்தில் துள்ளினான் அண்ணன். ஆத்திரத்தில் கைநீட்டி தாறுமாறாக அடித்தும்விட்டான். அகலிகா விம்மி விம்மியே சோர்ந்தாள். கிட்டத்தட்ட ஒரு வாரம் வீடே வாய்வாதமும், சண்டையுமாகவே இருந்தது.

யுத்த கலவரம் வெடித்துக் கொண்டிருந்த நேரம், "பேசி சரிசெய்யலாம்" என வீட்டிற்கு வந்த கௌசிகனிடம் வார்த்தைகளால் நசுக்கி வீரத்தை அவன் மீது திணித்து "வெளியே போ" என்றே விரட்டிவிட்டான் அண்ணன்.

அவமானத்தை சகித்துக்கொண்ட போதும் தன்மானத்தை காத்துக்கொள்ள விரும்பிய கௌசிகன்,

" நாம பிரிஞ்சிடுவம். இது சரிவராது. இந்த நிலையில் நாம கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழவே முடியாது. என்ன மறந்துட்டு வீட்ல பாக்குற ஒருத்தன கட்டிக்க. நான் என் அம்மா சொல்லும் பொண்ணதான் கல்யாணம் செய்வன் " முடிவாய் சொல்லிச் சென்றான் கௌசிகன்.


அன்றிலிருந்து மூன்று மாதங்களாகியும் கௌசிகன் அகலிகாவிடம் பேசவே இல்லை. முற்றாகவே மறந்துதொலைந்துவிட்டான். ஆனால் அகலிகா அவனை மறக்க முடியாது தவித்துக் கொண்டிருந்தாள்.


பெரியவளையும் சிறியவளையும் இரு கண்களில் வைத்து பார்த்த தந்தை என்ன செய்வது? எப்படி முடிவெடுப்பது?

"சிறியவள் மனதை புரித்துக்கொண்டு அவளை அவள் காதலனோடு சேர்த்து வைத்து அந்த குடுபத்தோடு மறுபடியும் உறவேற்படுத்தினால் நாங்களே பெரியவளை மறுபடியும் சங்கட நிலைக்குத் தள்ளி அவளை காயபடுத்துவதாக இருக்கும். சிறியவளோ அவள் காதலை விட்டுவிட முடியாது தவிக்கிறாள். "


ராகவனின் சிறுவயது காதல் ஆழமானது என்றால் இடையில் ஒரு பெண்ணை இழுத்துவிட்டது ஏன்? இது ராகவனின் இயலா நிலையில் நடந்ததா? அல்லது வில்லத்தனத்தில் நடந்ததா? அல்லது அவனது தாயின் வீண் பிடிவாதத்தால் நடந்ததா? சதி செய்தது விதியா? இராகவனா? அவன் தாயா? பல நாட்களாக யோசித்தார் தந்தை.

இறுதியில் விதியென முடிவெடுத்துவிட்ட அவர் "அண்ணன் இரு மனநிலையில் தள்ளாடினான் என்பதற்காக தப்பியும் அப்படி செய்வான் என்று நினைத்துவிடகூடாது. ராகவனும் அவன் விரும்பிய பெண்ணோடு சேராவிடாமல் அவனின் தாய் செய்த சூட்சுமத்திற்கு பலியானானே தவிர அவனும் வேண்டுமென பிழை செய்யவில்லையே. தைரியம் இல்லாது போனால் இப்படித்தான் வாழ்க்கை இடியப்ப சிக்கலாகும் ....." இப்படி தங்கள் பக்கமிருந்தே யோசித்தவர் நெஞ்சில் கௌசிகன் வந்து ஓட்டிக்கொண்டான்.

"இப்போது கௌசிகன் என்ன முடிவில் இருக்கிறானோ? அகலிகாவை வேண்டாம் என்று சென்றவன் மீண்டும் மனம் மாறுவானா? அவன் மனநிலை தெரியாது என்னவென்று முடிவெடுப்பது? " என பல கோணங்களில் சிந்தித்துக்கொண்டே எவ்வளவு தூரம் கடந்தோம் என்ற கணக்கில்லாமலே எங்கோ வந்து நின்றவர் கண்ணின் முன் கௌசிகனே நின்றான்.


அந்த சாலையில் அவன் அகலிகாவின் தந்தைக்காகவேதான் காத்திருந்தவன் போல மாமனாரைக் கண்டதும்...

"மாமா கொஞ்சம் பேசணும்"

"......" வார்த்தைகள் இல்லாத நிலையில் காதுகளை மட்டும் அவன் வசம் திருப்பி நின்றார்.

" மாமா, நீங்க என்னைய எப்படி நினைக்கிறிங்களோ தெரியல்ல, நா உங்கள என் மாமாவாகத்தான் நினைக்கிறன். ஏதோ கோவத்துல அகலிகாவ வேணாம் சொல்லிட்டு வந்துட்டேன். ஆனால் என்னால அவள மறக்க முடியல. அவள நா நல்லா பாத்துக்குவன். நீங்கள் எல்லோரும் கோவப்பட்றதுக்கான காரணம் புரியுது. அதுநாலதான் மச்சான் கைய உயர்த்தினப்பகூட பேசாமல் இருந்துட்டன். நீங்க பயபட்றமாதிரிலாம் ஒன்னும் நடக்காது. நா அவள நல்லா பாத்துக்குவேன். தயவுசெய்து நம்புங்க" அழாத குறைக்கு குரல் தளர்ந்தது.

"சரி, ஆனால் எங்களால் திரும்பவும் அந்த வீட்டுக்கு வந்து சம்மந்தம் பேசி உறவு கொண்டாட முடியாது. பெரிய பொண்ணு ஆதிரா மனச திரும்பவும் காயப்படுத்தவும் நா தயாரில்ல. அகலிகா சந்தோசமா வாழ்ந்தாள் போதும்" என்று சொல்லிவிட்டு வேறு பதில் எதிர்பார்க்காது நடந்தார் பெரியவர்.

அவர் என்ன சொன்னார் என்பதை புரிந்துக்கொள்ளவே ஒரு வாரம் ஆனது கௌசிகனுக்கு.


ப்லொக் லிஸ்டிலிருந்து அகலிகாவின் தொலைபேசி இலக்கத்தை நீக்கிவிட்டு அவ் எண்ணை டயல் செய்தான்.

"அகலிகா...."

".........." ஆழுகையே பதிலாக வந்தது.

"ஆழுகாதடி.... நா இருக்கேன் உனக்கு எப்பவும்.

வற்றிகிடந்த குளத்தில் பீறி கொண்டு நீர் வந்து விழுந்து அந்த குளத்தை குளிரூட்டியது போல அவன் வார்த்தைளும் மொழிகளும் குரலொலிகளும் அவள் உள்ளத்தை குளிரச்செய்தது.

"நா ஒன்னு சொன்னால் நீ செய்வியா?"

"செத்துபோக சொன்னாலும் செத்துருவன்"

"அடிவாங்க போற ....நா உன்ன பார்க்கனும். நாம வழமையா சந்திக்கிற இடத்துல சந்திப்போமா?"

"பட்டாம்பூச்சியாய் பறந்தாள்.....அழுது வடிந்து கிடந்த முகத்தை கழுவி கண்ணாடியில் பார்த்தாள். முகம் சகிக்கவில்லை. குளித்து புத்துணர்ச்சியை பெற்று மகௌரன் வாங்கிக்கொடுத்த சுடிதாரை அணிந்துக்கொண்டு அழகாய் பறந்தாள்.

ஆதிராவும் தாயும் தந்தையும் வாசல் வந்து நின்றார்கள். முற்றத்திலிருந்து திரும்பி பார்த்தவள் தடை என்றே முகம் சுறுங்கி தயங்கி அப்படியே நின்று விட்டாள்.

ஆனால் அவர்கள் பார்வையில் கனிவு இருந்து. அந்த கனிவு சம்மதம் என்று சொல்வதுபோலவே இருக்க.... மீண்டும் வந்து தாய் தந்தையரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு ஆதிராவை கட்டி அணைத்து "மன்னிச்சிடு அக்கா" என்று கூறிவிட்டு திரும்பி திரும்பி பார்த்கொண்டே நடந்து மறைந்தாள் அகலிகா.

ஒரு துளி கண்ணிரோடு ஒரு விதமான திருப்தி உணர்வோடும் ச்செல்லமாய் "அண்ணா அண்ணா" என கொஞ்சி திரிந்த அகலிகாவின் முகம் பார்க்க கூட விரும்பாத அகலிகாவின் அண்ணாவை நினைத்து சிறு பயத்தோடும் உள்ளேச் சென்றது குடும்பம்.

அறையில் அமர்ந்து விம்மிக்கொண்டிருக்க, உள்ளே சென்ற தந்தை ஆதிராவின் தோள் தொட்டபோது அவர் கையை இறுக பற்றிபிடித்தாள் ஆதிரா.

"ஆதிரா..... இப்போ உன் மனசு என்னபாடு படும்னு எங்களுக்கு தெரியும். மன்னிச்சிருடாமா. உன் மனசுக்கு நீ நல்லாருப்படா சாமி " ஆதிராவின் தந்தை தன் மடியில் முகம் புதைத்த மகளின் தலை வருடியபடியே அன்று நடந்த சம்பவத்தை நினைத்துப்பார்த்தார்.

வாழ்க்கையில் தோல்வியுற்ற ஆதிரா இரு காதல்கள் சேர காரணமாக இருந்திருக்கிறாள்.

இவள் நினைத்திருந்தாள் ராகவனை அவன் காதலியோடு வாழவிடாமல் செய்து உத்தியோகபூர்வமாய் சம்பிரதாயபூர்வமாய் முடிவான அவளது வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் கோபத்தையும் ஆழுகையையும் அவள் வசப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை விட்டு நின்றாள். ராகவனை நேசித்த அந்த பெண்ணின் நிலையையும் அவள் நிலையிலிருந்து யோசித்தாள். ராகவன் அவள் மீதும் அவள் ராகவன் மீதும் கொண்ட காதலை புரிந்துக்கொண்டாள். விலகியும் நின்றாள்.

எனது தங்கை என் வாழ்க்கையை கெடுத்தவன் தம்பியை நேசிக்கிறாள். இது ஆதிராவுக்கு எவ்வளவு பெரிய வலி. எவ்வளவு பெரிய அவமானம். ஆனால் அவள்....,


அன்று கௌசிகனை சந்தித்துவிட்டு வந்து சோர்வாக அமர்ந்த தந்தை கௌசிகன் பேசியவற்றை ஆதிராவோடு பகிர்ந்துகொண்டு கலங்கினார். அப்போது ஆதிரா ,

" அப்பா...., காதல் இல்லாமல் கல்யாணம் பண்ணினதாலதான் என் வாழ்க்க தோல்வியில முடிந்தது. காதல்ல வாழ நினைக்கிறவங்கள பிரிக்ககூடாது. இப்போ தங்கச்சிட நிலையிலதானே அன்னைக்கு அந்த பொண்ணும் இருந்திருப்பா. ராகவன் அந்த பொண்ண கைவிட முடியாத நிலையில இருந்தென்னு சொன்னத இப்போ புரிஞ்சிக்க முடியுதுதானேப்பா. என் வாழ்க்க வீணாபோன கோவத்துல நா அவங்க வாழ்க்கைய கெடுக்க விரும்பல. "

"இப்படி பேசுற நீ இராகவன் விட்டு போனபிறகு எவ்ளோ கஷ்டபட்ட? நாங்க பாத்துகிட்டு தானே இருந்தம்."

" இப்பவும் நா அழதான் செய்வென். கோபபடத்தான் செய்வென். ஆனால் காதலிச்சி சேர்ந்து வாழனும்னு நினைக்கிற காதலை கெடுக்கும் தைரியம் எனக்கு இல்லங்க அப்பா..."

"என்னதான்மா சொல்ல வார?"

"அகலிகாவ கௌசிகனோட வாழ விடுங்கப்பா. அவள் பாவம்..."

"சரி... ஆனால் உன் அண்ணன்...?"

"அண்ணாவ நா சமாளிச்சிகிறன். அவன் கொஞ்சநாள்ள சரியாகிடுவான்"

மூத்த மகளின் மனதை புரிந்துகொண்டார் தந்தை.

விம்மலை நிறுத்திவிட்டு மடியிலிருந்து எழுந்து..." மதியம் என்ன சமைக்கட்டும்?" என சமையலறை நோக்கிச் சென்றாள். சாதாரண பெண்ணாக.



*******

மகௌரன் நின்றுக்கொண்டிருந்தான். ஓடி அணைத்துக்கொண்டாள் அகலிகா.

அவனிலிருந்து அவளை விலக்கிவிட்டு,


"அகலிமா....., நீ .... நீ..... நா கூப்பிடால் என்னோட வந்துருவியா?"


"......" அவளில் அமைதி தொற்றியது.


"நாம சந்தோசமா வாழ்வம். கொஞ்சநாள்ள எல்லாம் சரியாகிடும். என்ன நம்பு அகலிமா. எனக்கு தெரிஞ்சி இப்ப இருக்க ஒரே வழி இதுதான்...."

சிந்தித்தாள்.....

"ம்...." என்றாள் மறுபடியும் அணைத்தபடியே .


"அம்மா பாக்குற பொண்ண கட்டிக்கிறனு சொன்னிங்களே....." காதோடு சிணுங்கியபடி கேட்டாள்.

"அதுவா....அது.... நீ விரும்பினால் அடுத்து கட்டிக்கலாம்...." சொல்லிக்கொண்டே அணைப்பை இறுக்கபடுத்தினான்.

"டேய்..... இனி உங்கள யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டன். சட்டென வந்து விழுந்தன இரு கன்னங்களில் இரு முத்தங்கள்.

.....முற்றும்....
 
Last edited:

Thani

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 2, 2023
Messages
59
ஆதிரா தான் ஹிரோயின் செம👏
ராகவன் தனது தாயிடம் போராடி இருக்கணும் ...ஆதிரா வாழ்க்கையை இப்படி பண்ணி இருக்கு கூடாது ..😡😡
அம்மாக்களின் ஆயுதம் கண்ணீர் ,செத்துவிடுவேன் என்கிற ராமா .....இங்கு பிள்ளைகளை புரிந்து கொள்ளாத தாய் இவங்களின் பிடிவாதத்துக்கு பலி ஆதிரா...😥
சூப்பர் ❤️
வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
 

பிரியபாரதீ

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 28, 2022
Messages
23
ஆதிரா தான் ஹிரோயின் செம👏
ராகவன் தனது தாயிடம் போராடி இருக்கணும் ...ஆதிரா வாழ்க்கையை இப்படி பண்ணி இருக்கு கூடாது ..😡😡
அம்மாக்களின் ஆயுதம் கண்ணீர் ,செத்துவிடுவேன் என்கிற ராமா .....இங்கு பிள்ளைகளை புரிந்து கொள்ளாத தாய் இவங்களின் பிடிவாதத்துக்கு பலி ஆதிரா...😥
சூப்பர் ❤️
வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
நன்றி சகோ
 

வித்யா வெங்கடேஷ்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 8, 2022
Messages
239
வித்தியாசமான கதை தோழி! ஆதிரா ரியலி கிரேட்...பெண்களை பெற்ற தந்தையும் செம்ம குணம்.💕💕💕💕💕💕

வாசகியின் அன்பான வேண்டுகோள்...முடிந்தால் இக்கதையை குறுநாவலாக எழுதுங்கள்... குறைந்தபட்சம் ஆதிராவிற்கு ஒரு happy ending short story ஆவது எழுதுங்கள் 🙏🙏🙏🙏🙏
 

பிரியபாரதீ

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 28, 2022
Messages
23
வித்தியாசமான கதை தோழி! ஆதிரா ரியலி கிரேட்...பெண்களை பெற்ற தந்தையும் செம்ம குணம்.💕💕💕💕💕💕

வாசகியின் அன்பான வேண்டுகோள்...முடிந்தால் இக்கதையை குறுநாவலாக எழுதுங்கள்... குறைந்தபட்சம் ஆதிராவிற்கு ஒரு happy ending short story ஆவது எழுதுங்கள் 🙏🙏🙏🙏🙏நன
வித்தியாசமான கதை தோழி! ஆதிரா ரியலி கிரேட்...பெண்களை பெற்ற தந்தையும் செம்ம குணம்.💕💕💕💕💕💕

வாசகியின் அன்பான வேண்டுகோள்...முடிந்தால் இக்கதையை குறுநாவலாக எழுதுங்கள்... குறைந்தபட்சம் ஆதிராவிற்கு ஒரு happy ending short story ஆவது எழுதுங்கள் 🙏🙏🙏🙏🙏

வித்தியாசமான கதை தோழி! ஆதிரா ரியலி கிரேட்...பெண்களை பெற்ற தந்தையும் செம்ம குணம்.💕💕💕💕💕💕

வாசகியின் அன்பான வேண்டுகோள்...முடிந்தால் இக்கதையை குறுநாவலாக எழுதுங்கள்... குறைந்தபட்சம் ஆதிராவிற்கு ஒரு happy ending short story ஆவது எழுதுங்கள் 🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி..... மிக்க மகிழ்ச்சி தோழியே.... அட நீங்க உண்மையாகவா சொல்றிங்க? குறுநாவலாக எழுதலாம்தான். ஆனால் இதுவரை எழுதியதில்லையே.... இந்த மாதம் ஒரு பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. முடிய அடுத்த மாதத்திலிருந்து எழுத முயல்கிறேன் தோழி... ரொம்ப சந்தோஷம் கதை வாசித்து...அது பற்றி பேசியதால்...ஃ❤️💓💞😊
 
Top