• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

20. உறவாக வருவாயா?

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
"எல்லாம் சரி தான். ஆனா இவ்ளோ நடந்திட்டிருக்கிறப்போ உன் அப்பா எங்க போனாரு?"


"அதுக்கு அவரு என்ககூட இருக்கணுமே!" என்றாள்.


"ஏன் அவரும் அம்மா போல......"


"சேச்சே..... அப்பிடில்லாம் ஒன்னுமில்ல... அப்பிடி இருந்தா எப்பிடி மாதாமாதம் பணம் ட்ராண்ஸ்பர் ஆகும்.? நான் அவர பாத்தது இல்லை, அவ்ளோ தான்" என்றாள்.


"என்ன சொல்லுற புரியல"


"எனக்கே அது புரியல சார்! இவரு தான் அப்பான்னு ஒரு போட்டோவ காட்டினாங்களே தவிர, ஏன் எங்களை விட்டிட்டு போனாரு.. இப்போ அவருக்கு என்னாச்சு? எங்க இருக்காருன்னு ஒரு வார்த்தை சொல்லல.. நானும் நிறைய வாட்டி கேட்டேன்.. பதில் தான் கிடைக்கல. அம்மா இருக்கிற வரைக்கும் அவரு இல்லாதது தெரியல, ஆனா இப்போ......." என நிறுத்தி கண்களை துடைத்துக்கொண்டவள்,


"அவரு தான் சார் என்னோட அப்பா, நான் பிறக்குறதுக்கு முன்னாடி எடுத்த படமாம்... பாக்க ரொம்ப அழகா இருக்காருல்ல. இந்த படம் ஒன்னே ஒன்னு தான் சார் இருக்கு.. அதனால தான் இதையே பிறேம் பண்ணி போட்டுட்டேன்" என சிரித்த முகமாய் பேச்சை மாற்றினாள்.


தானும் புன்னகைத்தவாறு திரும்பியவன் அந்த புகைப்படத்தினை கண்டு உறைந்தே போனான்.


ஆம் அந்த புகைப்படத்தில் இருந்தவர் வேறு யாருமல்ல. அவனுடைய அன்புத்தந்தை குமாரசாமியே!


'ஆனால் தந்தை இப்படி செய்ய சாத்தியமே இல்லை. அன்னைமேல் உயிரை வந்திருப்பர், இன்னொரு பெண்ணை மனதால் கூட நினைத்திருக்க மாட்டார். அப்படி இருக்கையில் எப்படி இவள் கூறுவதை நம்பமுடியும்? இல்லை இருக்கவே இருக்காது.
இல்லாத அன்னையுடன் பேசுவதைப்போல் இதுவும் இவளது கற்பனையாகத்தான் இருக்கவேண்டும்.


ஆனால் இந்தப்படம் எப்படி?' என
புகைப்படத்திலிருந்து விழிகளை அகற்றி அவள்புறம் திரும்பியவன்,


"இவர் தான் அப்பா என்கிறதுக்கு உன்கிட்ட வேற ஏதாவது ஆதாரம் இருக்கா மலர்?
அதாவது இந்த போட்டோ தவிர வேற ஏதாவது" என அவசரமாய் கேட்டவன் கேள்வியின் அர்த்தம் புரியவில்லை அவளுக்கு,


"ஆதாரம்....... இல்ல சார், வீடு பூரா தேடிட்டேன்.. அப்பாவும் அம்மாவும் சேர்ந்து நின்ன போட்டோ எதுவுமே கிடைக்கல" என கவலையாக சொன்னவள்,


"ஆனா என் பர்த்சர்டிபிகேட் இருக்கு, இருங்க எடுத்திட்டு வரேன்" என எடுத்து வந்து காட்டினாள்.


சந்தேகமே இல்லாது தந்தை பெயரில் குமாரசாமி என்றே இருந்தது.
அப்போதும் அவன் மனம் இதை ஒப்ப மறுத்தது, அது வேறு குமாரசாமியாக இருக்க வேண்டும். தந்தையாக இருக்க வாய்ப்பே இல்லை. என உறுதியாக நம்பினான்.


"ஏன் மலர்.. நீ இவ்வளவு வருஷமா அப்பாவ தேடல? அம்மா இறந்ததுக்கப்புறமாவது அவரை தேடியிருக்கலாமே! இப்பிடி யாருமில்லாம தனிய வாழணும்ன்னு என்ன அவசியம்?
தனியா இருக்கிற பொண்ணு தானே, ஏதாவது செய்திட்டு போவோம்ன்னு யாராவது வம்புக்கு வந்திட்டா...


வந்தாங்க சார்... இப்பவும் வருவாங்க.
அம்மா இறந்த சமயத்தில நான் காலேஜ் போயிட்டிருந்தேன்.
அம்மா இல்லைன்னதும் ஹாஸ்டல்ல தங்கிபடிச்சேன்.
அங்கேயே மூணு வருசம் ஓடினதனால எதுவுமே தெரியல. காலேஜ் முடிச்சு வந்த மறுநாளே கதவை தட்ட ஆரம்பிச்சிட்டாங்க.


லைட் எல்லாத்தையும் ஆஃப் பண்ணிட்டு.. கதவை இறுகப்பூட்டிட்டு உள்ள இருந்திடுறதனால, நான் இல்லன்னு நினைச்சு போயிடுவாங்க" என உள்ளே இருக்கும் வலியினை மறைத்து சிரித்தமேனிக்கு கூறியவளை பார்க்கும்போது பாவமாகிப்போனது.


"அப்போ உனக்கென்ன தலைவிதியா? அப்பாகிட்ட போகவேண்டியது தானே!"


"ஏன் போகணும்? இத்தனை வருஷம் பொண்டாட்டி பிள்ளைய பாக்கணும்ன்னு ஆசையில்லாதவர்கிட்ட நான் போகணுமா?


அம்மா எப்பவுமே அவரை கடவுளோட அவதாரம், இப்பிடியானவங்க இருக்கப்போய் தான் மழை பெய்யிது. சாமியா நினைன்னு சொல்லுவாங்க. நானும் அம்மாவுக்காக அவருமேல நல்ல அபிப்ராயம் இருக்கிற மாதிரி நடிச்சேனே தவிர, அவர்மேல எனக்கு வெறுப்பு மட்டும் தான் இருக்கு.


ஆம்பளயோட பெருமை ஒரு பொண்ணுக்கு புள்ளை குடுக்கிறதா? அவளையும், அவ குழந்தையையும் உலகம் போற்றுறது போல வளர்க்கிறது தானே!


ஆனா இந்த மனுஷனுக்கு புள்ளை குடுத்து மாதமாதாம் காசு அனுப்புறதோட கடமை முடிஞ்சு போச்சு. அம்மா இறந்த தகவல்கூட தெரியாது. அவ்வளவு ஏன் அவருக்கொரு பொண்ணு இருக்கிறது கூட தெரியுமோ என்னவோ!


நிஜத்தை சொல்லணும்ன்னா.. இந்த மனுஷன் எங்க அம்மா மாதிரி இன்னொரு பொண்ண ஏமாத்தியிருப்பாருன்னு நினைக்கிறேன். அதனால தான் எங்களை தேடல,
அவருக்கு நாங்க வேணாம் என்கிறப்போ நான் ஏன் தேடணும்?" என்றாள் கோபமாக.


"அப்பிடியில்ல மலர்... உன்னோட ஆதங்கங்களை நேர்ல போய் கேட்டிருந்தா, இந்த கோபம் குறைஞ்சிருக்கும்ல்ல"


"இவனை நல்லவன்னு நம்பி வாழ்ந்திட்டிருக்கிற எங்க அம்மா மாதிரி, ஒரு அப்பாவி ஜீவன் நொந்திடக்கூடாது சார்.
அதோட அவனை கேள்வி கேக்கிறதனால என்னோட கோபமும் குறைஞ்சிடாது.


அப்பிடி இருக்கிறப்போ.. ஏன் ஒரு குடும்பத்தை கெடுத்தேன் என்கிற பெயர்?
அதான் விட்டுட்டேன்"


"அப்போ உனக்கு அவரு இருக்கிற இடம் தெரியுமா?"


"அது கண்டுபிடிக்கிறது அவ்ளோ கஷ்டமா? மாதமாதம் ஒரு அக்கவுண்ட்ல இருந்து எங்க அக்கவுண்ட்க்கு பணம் ட்ராண்ஸ்பர் ஆகிற நம்பர வைச்சு கண்டு பிடிச்சிடலாம்... விருப்பமல்லாததனால விட்டுட்டேன்" என்றவளிடம்.


"மலர் நீ தப்பா நினைக்கலன்னா.. அந்த நம்பர நான் பாக்கலாமா?"


"ம்ம் தாராளமா?" என்றவள் பேங்க் புக்கினை எடுத்துவந்து காட்டினாள்.


அதில் இருந்தது தந்தையின் அக்கவுண்ட் நம்பரே தான். அதை பார்த்த கேஷிக்கு நம்பமுடியவில்லை என்றாலும், இதைவிட பெரிய ஆதாரம் ஒன்று தேவைப்படவில்லை. கண்கள் கலங்க நிமிர்ந்து மலரை பார்த்தான்.


அவளுக்கு அவனது கலக்கம் புரியவில்லை.
"சார் என்னாச்சு? எதுக்கு நீங்க......." என்றவள், காரணம் தெரியாமல் ஆறுதல் சொல்லமுடியாது தவிக்க,


தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்த பர்ஷினை எடுத்து நீட்டியவன் "இதை திறந்து பார்" என்றான்.


ஏன் என்று கேளாமல் திறந்து பார்த்தவளும், தந்தையோடு இன்னொரு பெண்மணி மிக நெருங்கமாக நின்றிருக்க, அவர்கள் இருவரது கழுத்தை கட்டிக்கொண்டு நின்றனர் கேஷவனும், அவன் தங்கையும்,
விழிகள் விரிந்து அவனை கேள்வியாய் நோக்கினாள்.


ம்..... என்பதாக தலையசைத்தவன், "என்னோட அப்பா தான் உனக்கும் அப்பா என்கிறத என்னால நம்பவே முடியல மலர்.


அம்மாகூட அவ்வளவு அன்பா நடந்துப்பாரு.. ஒரு முடிவு எடுக்கணும் என்றால் கூட, அம்மா சம்மதம் சொன்னாத்தான் அது நடைமுறைக்கே வரும். அவங்க ரெண்டுபேரையும் பாக்கிறப்போ எனக்கே தோணும், எனக்கும் அம்மா மாதிரி ஒரு ஒய்ஃப் கிடைக்கணும்ன்னு.


ஆனால்........" என்று நமட்டு சிரிப்பொன்றை சிந்தியவன்,
"இப்பிடி ஒரு அன்பான, அக்கறையான பொண்டாட்டி கிடைச்சும் எப்பிடி இன்னொரு பொண்ணை தேடி........!


ச்சை.....! அம்மா எவ்வளவுக்கு ஏமாளியா இருந்திருக்காங்கன்னு இப்போ தான் புரியுது.
அம்மாவ மட்டுமில்ல, மொத்தக் குடும்பத்தையும் எப்பிடி நம்பவச்சு ஏமாத்தியிருக்காரு,
இப்பகூட அப்பா போட்டோவ காமிச்சு இவருதான் உன் அப்பா என்கிறப்போ, நீ தான் பினாத்திட்டிருக்கே நினைச்சேன். ஆனா இந்த பேங்க் நம்பர பாக்கிறப்போ தான் உறுதியாச்சு.


சம்மந்தமே இல்லாத ஒருத்தருக்கு எதுக்கு திருட்டுத்தனமா பணம் தரணும். அதுவும் எத்தனையோ மயில் கடந்து இருக்கிற உங்களுக்கு தரணும்ன்னா காரணம் இல்லாம இருக்காது" என்றவன் மனமோ இந்த தகவல் அன்னை அறிந்தால் எப்படி தாங்கிக்கொள்வாள்,


கணவன் ஏமாற்றி விட்டான் என்று தெரிந்த மறுநொடி நிச்சயம் இறந்துவிடுவாள். அன்னை உயிரோடு இருக்க வேண்டுமென்றால் இதை தந்தையைப்போல் மறைத்தாகவேண்டும்.


ஆனால் தந்தையின் சுயரூபம் தெரிந்தும், உண்மையை மறைப்பது குற்றத்திற்கு துணைபோவது போல் ஆகாதா? அதுவுமல்லாமல் குமாரசாமியை எதிரில் காணும்போது அவரின் நடிப்பிற்கு இணையாக அவனாலும் நடிக்கமுடிமா?


அவரை விலக்கிவைத்து நடந்தாலும், ஏதோ ஓர் சூழ்நிலையில் உண்மையை உடைத்துவிட்டால்
அதன்பின் தாயின் உயிருக்கு ஆபத்தாகிவிடும். என எங்கு சுற்றியும் வந்துநின்ற இடம் அன்னையின் உயிருக்கு ஆபத்து என்றுதான்.


இதை தவிர்க்க என்ன வழியென யோசித்துக்கொண்டிருந்தவன் முன் யாருமற்று தவித்து நின்றவளை காணும் போது, தந்தை செய்த பாவத்திற்கு தான் ஏன் பிராசித்தம் தேடக்கூடாது என்றே தோன்றியது.




உண்மை தானே அவளது இந்த நிலைக்கு காரணமானவன் சந்தோஷமாக நடமாடும் போது.. தவறே செய்யாதவள் ஏன் தனிமையில் வாழவேண்டும்.?


பெண் பிள்ளைகளுக்கு பெற்றவர்களுடனான பந்தம் கிடைப்பதே குறுகிய காலப்பொழுதில் தான்.
அதுகூட அவளுக்கு கிடைக்கவில்லையே!


வளரும் வயதில் தந்தையில்லை.. வாழும் வயதில் தாயில்லை. இந்த பொல்லாத உலகத்தில் எத்தனை கஷ்டங்களை தான் தாங்கிக்கொண்டு வாழ்வாள்.


முடிவு செய்துவிட்டான்.
தவறு செய்தவரை கண்டுகொள்ளாது வாழ்வதை விட, அவர் கண்ணில் படாமல் இருப்பது தான் தன்னை சார்ந்தவர்களுக்கு நல்லது என்பதுடன், உறவில் ஒருவர் இல்லையென்றால் எப்படி வலிக்கும் என்பதை தந்தைக்கு உணர்த்தவேண்டும். என நினைத்தவன்,


"மலர் என்னை நீ நம்புறியா?" என்றான்.


அவளுக்கு சட்டென என்ன சொல்வதென்று புரியவில்லை. இருந்தும் ம்.... என தலையசைத்தாள்.


"எனக்கு நீ வேற, இலக்கியா வேற இல்லை.. அவ எப்பிடி என் தங்கையோ, நீயும் எனக்கு தங்கை தான்.
அவர் உனக்கு செய்த தூரோகத்துக்கு அந்த பாவத்த நான் சுமக்க போறேன்.


அதனால இனிமே அந்த வீட்டுக்கு நான் போகாம, உன்கூடவே இருந்து உனக்கொரு வாழ்க்கையை அமைச்சு தரது தான் என் வாழ்க்கையோட லட்சியமே!" என்றவன்,


"இன்னைக்கொரு நாள் இங்கயே ரெண்டுபேரும் தங்கிப்போம்.. நாளைக்கு என் நண்பனோட ஊருக்கு போய், ஒரு வேலை தேடிப்போம்.
நீ உன் முக்கியமான திங்க்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணிக்கோ! நான் இதப்பத்தி அவன்கூட பேசிட்டு வந்திடுறேன்" என எழுந்துகொள்ள.


"இல்ல வேண்டாம் சார். நான் எங்கேயும் வரல" என்ற மலரிடம்.


"ஏன் மலர்? நானும் அப்பாவ மாதிரி ஏமாத்தி திக்குத்தெரியாத காட்டில விட்டிடுவேன்னு நினைக்கிறியா?" என விரக்தியாக சிரித்தவன்,


"ஏமாந்தது நீ மட்டும் இல்ல மலர். என்னோட மொத்த குடும்பமும் தான்.
அவரை பார்க்க மாட்டேன்னு உனக்கிருக்கிற திமிர் எனக்கு இருக்காதா?


பாட்டின்னா எனக்கு உயிர் மலர். அவங்கமேல சத்தியமா சொல்லுறேன்.. நீ நல்லா வாழ்றத பார்த்து உங்க அம்மா ஆத்மா சந்தோஷபடணும். அதுக்காக தான் சொல்லுறேன்.


இங்கயே உன்னை நல்லா வாழவைக்க முடியும்.. ஆனா இங்க இருக்கிறவங்களுக்கு உன்னை நல்லா தெரியும். புதுசா அண்ணான்னு சொல்லிட்டு ஒருதன் வந்தா, அதை அவங்க நம்பமாட்டாங்க..
அதோட நாங்க போகப்போற ஊர்ல என் நண்பனோட ஆஃபீஸ்ல ஈஸியா வேலை எடுத்திட்டா, அப்பா அனுப்புற பணம் உனக்கு தேவை வராது. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்" என்றான்.


அதற்குமேல் அவன் பேச்சை அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை. சரியென சம்மதித்தவளை மறு நாளே அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.




போனிலேயே நண்பனிடம் பேசியதால் தன் தந்தை மூலம் அவன் தங்குவதற்கு வீட்டினை ஏற்பாடு செய்து கொடுத்த ராதாகிருஷ்ணன், தன் கம்பெனியிலேயே வேலையும் போட்டுத்தந்தார்.


வேலை என்றால் சாதாரண வேலை கிடையாது.
வெளிநாட்டில் பிரத்தியோகமாக பில்டிங்க் கன்ஸ்டிரக்ஷன் படிப்பினை முடித்தவனுக்கு, அவரே முன்வந்து மேனேஜர் பதவியினை தந்ததுடன், சிறுது காலத்திற்கு ஊர்விட்டு ஊர் செல்லவேண்டிய கட்டாயம் இருப்பதனால் கம்பெனியின் முழுப்பொறுப்பினையும் கவனித்துக்கொள்ளுமாறு அவனிடமே ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்.


கிட்டத்தட்ட ஒருவருடங்களாக தனக்களித்த பொறுப்பினை மிக சிறப்பாக செய்தவனுக்கு ஓய்வென்பதே இருந்ததில்லை.
ஞாயிறிலும் அலுவலகம் கிளம்பிவிடுவான்.


இதற்கிடையில் கேஷவனை காணவில்லை என்று அவன் நம்பருக்கு தொடர்வு கொண்டவர்கள் அத்தனை பேரையும் தவிர்க்கும் விதமாய் போன் இலக்கத்தை மாற்றிவிட்டான். ஆனால் தன்மேல் அன்பாய் இருந்த வீட்டினரை அவனால் மறக்கமுடியவில்லை.


மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை எரித்த கதையாய் மாறாப்போனது அவனது நாட்கள்.


தனக்கு கிடைத்த சிறிய இடைவெளியில், மலரோடு மனம் விட்டு பேசுபவன், அவளுடைய தேவைகள் என்னவென கேட்டு அதை நிறைவேற்றுவான். அவளும் உடன்பிறவா தமையனின் கவனிப்பில் மெய் சிலிர்த்து தான் போனாள்.


அன்று இரவு பத்து மணியினை கடந்திருக்க.♦ கேஷியோடு பேசவேண்டுமென காத்திருந்தாள் மலர்.
வேலையின் அதிகப்பழுவால் சோர்ந்து போய் வந்தவன் சோபாவில் விழ,


"அண்ணா சூடா காஃபி போடவா?" என கேட்டாள்.


"இல்லம்மா! ரொம்ப டயர்டா இருக்கு. குளிச்சிட்டு தூங்கப்போறேன். ஆமா நீ ஏன் இன்னும் தூங்கல"


அவன் கேட்டதும் பதில் சொல்லத்தான் ஆசை. ஆனால் ஏதோ ஓர் தயக்கம்.. அதோடு தமையன் சோர்வையும் கண்டவளுக்கு அவனுக்கு இப்போது ஓய்வு தேவை. காலையில் சாவகமாக பேசிக்கொள்ளலாம் என நினைத்தவள்,


"ஒன்னுமில்லண்ணா.. நீ போய் தூங்கு" என்க, தன் சோர்வில் அவளை கவனிக்க தவறிவிட்டான்.



மறுநாள் காலை வேளையோடு எழுந்து அண்ணனுக்காக பார்த்து பார்த்து சமையல் செய்து, அவன் ரெடியாகி வரும் நேரம் காஃபியோடு தமையன் எதிரில் வந்தவள் தான்.. கண்கள் கரித்துக்கொண்டு வர, அப்படியே தரையில் சரிந்துவிட்டாள்.


மெல்லிய அசைவோடு கண்விழித்தவள் இருக்குமிடம் வைத்திய சாலை என்று புரிந்ததும், எழுந்து அமர்ந்தவளையே பார்த்திருந்த கேஷியிடம்,


"மயக்கத்துக்குமா அண்ணா ஹாஸ்பிடல் அழைச்சிட்டு வருவ? இன்னைக்கு சீக்கிரமா எழுந்துட்டேனா... அதனால வந்த மயக்கமா இருக்கும்" என தடுமாறியவாறு சமாளித்தவள் கன்னத்தில் பளீர்...." என ஒரு அறைவிட்டான்.


"இதுக்குத்தான் இவ்ளோ கஷ்டப்பட்டேனா? யாரவன்..? யாரை நம்பி ஏமாந்து இப்பிடி வாயும் வயிருமா நிக்கிற?" என்றான் கோபமாக.


"அண்ணா......!"


"வாய மூடு! எவன்கிட்ட நீயும் அம்மா போல ஏமாந்த?" என உறும.


"இல்லை அண்ணா... அவரு ரொம்ப நல்லவரு"


"அப்பிடியா? எங்க காமி அவனோட நல்லவன் என்கிற சர்டிபிக்கட்ட, நல்லவன் தான் கல்யாணத்துக்கு முன்னாடி கற்பமாக்குவானா? அவன் தான் அப்பிடின்னா... உனக்கு என்க போச்சு அறிவு?" ஹாஸ்பிடல் என்று பாராது கத்தினான்.


"எங்களுக்கு கல்யாணம் ஆச்சுண்ணா" என வெளியே வராத குரலில் சொன்னவள் பதிலில் கேஷி அதிர்ந்தே போனான்.


"என்னை மன்னிச்சிடுண்ணா.... உனக்கு சொல்லணும்ன்னு ஒருவாரமா ட்ரை பண்ணிட்டிருக்கேன். ஆனா நீ ரொம்ப பிஸியா இருந்தே. நேற்று நைட் கூட இதுக்காகத்தான் வெயிட் பண்ணேன்.... ஆனா முடியல"


"என்ன சொல்லுற மலர்? கல்யாணமாச்சா? எப்போ....? யாரவன்? எனக்கு தெரியாம உனக்கு என்ன அவசரம்?" என்றான் தொடர்கேள்வியாய்.


"மார்கெட்ல பழக்கடை வைச்சிருக்காருண்ணா... ரொம்பவே நல்லவரு.. போன வெள்ளிக்கிழமை தான் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்" என்றாள்.


"ஆனா மலர் உனக்கு தான் நான் இருக்கனே! அப்புறம் எனக்கே தெரியாம ஏன்? நீ ஆசைப்பட்டவனை கட்டிவைக்க மாட்டேன்னு நினைச்சியா?"


"இல்லண்ணா எனக்காக நீ எதுவும் செய்வேன்னு தெரியும், ஆனா அதுக்குள்ள நாங்க அவசர பட்டுட்டோமே" என தலை கவிழ்ந்தாள்.


"சரி விடு! அதுதான் கல்யாணமாகிடிச்சே! மாப்பிள்ளை யாருன்னு சொல்லு. நானே போய் கூட்டிட்டு வரேன்" என்றான்.


அவன் பெயரோடு அட்றஸினையும் கூற, "சரி நீ ஒய்வெடு.. நான் அழைச்சிட்டு வரேன்" என அவனை தேடிச்சென்றான்.


அங்கே போனால் "யாரை யாரு அழைச்சிட்டு போறது? அனாதை பசங்களா..., முடிஞ்சா எங்களை தாண்டி எங்க புள்ளைய அழைச்சிட்டு போடா" என சண்டியர் போல் வரிச்சுக் கட்டிக்கொண்டு கேஷியோடு சண்டைக்கு வந்தவர்களை அடித்து தள்ளியவன்,


தங்கையின் கணவனை அழைத்துச்சென்றான். போகும்போது "உனக்கு மலரோடு வாழ இஷ்டம் தானே!" கேட்டான்.


"அவளுக்காக உயிரையும் விடுவேன் சார்" என்றவன் அறியவில்லை. இன்னும் சிறிது காலத்தில் உயிரை விடப்போகுறான் என்று.


கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் மலரின் வாழ்க்கையில் சொல்லமுடியாத இன்பம்.. இதுவரை யாரிடமும் கண்டிராத, அன்பையும் அக்கறையையும் அவள் காதல் கணவன் அள்ளிக் கொடுத்திருந்தான்.


ஏழு மாத வயிற்றோடு இருந்தவளை எந்த வேலையும் செய்யவிடாதவன், வீட்டில் ஒரு சில பொருட்கள் இல்லை என கடைவீதிக்கு சென்ற பொழுது தான் அந்த துயரசம்பவம் நடந்தேறியது.


ஆம்... மலரை காண்பதற்கு முன்னர் ஒரு பெண்ணுடன் அவனுக்கு நிச்சயம் முடித்திருந்தனர்.
மலரை கண்டதும் அவன் மனம் மாறியது.
மலருடனான திருமணத்தின் பின்னர் ஊரார் பழிச்சொல்லுக்கு பயந்து, வீட்டிலேயே அடைந்துகிடந்த அந்த பெண்ணிற்கு ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் போக தற்கொலை செய்துகொண்டாள்.


அதன்காரணமாக இவன் மேல் வன்மம் வளர்த்தனர் அவளது குடும்பத்தினர்.


அன்று அவனை வீதியில் கண்டதும் ஒன்று திரண்டவர்கள் கலைந்து போகும்போது ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தான் மலரின் கணவன்.



இந்த செய்தி அறிந்தமலர் கத்தி ஆரவாரிக்க... அவளை சமாதானம் செய்வதில் கேஷிக்கு போதும் என்றாகியது.


அதன்பின் அவனது இழப்பினால், தன்னை சரியாக கவனியாதவள் கொஞ்சம் கொஞ்சமாக உடல் தளரத்தொடங்கினாள்.


"எனக்கு இங்க இருக்க பிடிக்கலண்ணா... என்னை அம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க. அங்க போனாத்தான் உயிரோட இருப்பேன்" என பினாத்தியவள் மன நிறைவுக்காகவே பிறந்தகம் அழைத்துச்சென்றான்.


அங்கு சென்றும் அவளிடம் மாற்றமில்லை. ஆனால் கேஷவனுக்கு தான் அலுவலகம் செல்ல ஊர்விட்டு ஊர் சென்று வருவது கஷ்டமாகிப்பேனது.


இருந்தும் மலருக்காக தூக்கத்தை தொலைத்து பயணம் செய்தான்.
நாளாக நாளாக அவள் நிலை மோசமாகியதோடு அவளது பிரசவ நாளும் நெருங்கியது.


அவளது உடலினது மோசமான நிலையினால் சாதாரண பிரசவத்துக்கு வாய்ப்பில்லாது போக, அறுவை சிரிக்சை மூலமே குழந்தையை வெளியே எடுப்பதென தீர்மானித்தனர்.


குழந்தை பிறந்தும் அவளது நாடித்துடிப்பின் விகிதம் குறையத்தொடங்க, இரண்டு நாட்கள் ஐசியூவில் இருந்தவளை மருத்துவராலும் காப்பாற்ற முடியவில்லை என்றானது.


கடைசியில் குழந்தை கேஷவன் பொறுப்பில் வர, பெரிதும் சிரமத்துக்கு உள்ளானான் அவன்.


நல்லவேளை அந்த சமயம் ராதாகிருஷ்ணனின் அலுவலகத்தை அவரது மகனும், கேஷியினது நண்பனுமான முரளி எடுத்து நடத்த ஆரம்பித்ததால்.. நண்பனது தயவில் அடிக்கடி விடுமுறையோடு, குழந்தையுடன் செலவழிக்க நேரமும் கிடைத்தது.


தன் அரவணைப்பில் வளர்ந்த குழந்தைக்கு "ஸ்ரீநிஷா" என பெயர் சூட்டுவதிலிருந்து... ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் அன்னையிடத்தில் இருந்து பார்த்து வந்தவனுக்கு மெய்சிலிர்த்து போக, அவனது உலகமே அவளானாள்.


தன்னை அப்பா என ஸ்ரீக்கு அடையாளமிட்டே வளர்த்தவன், தன் பர்சிலிருந்த ஒரு புகைப்படத்தை காண்பித்து..
"அம்மா சொல்லு." என அன்னையாய் அவளை அடையாளமிட்டான்.


கடந்தகாலத்து கதைகள் எல்லாவற்றையும் சொல்லிமுடிக்கும் வரை கைகட்டி கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு அவன் நிலை புரியாமல் இல்லை.


அவன் கடந்துவந்த பாதை கரடுமுரடானது தான்.. தந்தையின் ஏமாற்று வேலையினால், தாயை காப்பாற்றிக்கொள்ள ஆயிரம் வலிகளை தாங்கியும் இருக்கலாம். அது பெற்றவளுக்கு அவன் செய்யும் கடமையும் கூட,


ஆனால் இவற்றை கூறுவதால் அவளுக்கு ஒரு இலாபமும் இல்லையே!


"சரி....! நீங்க சொல்லுறது போல மாமா என்னை எதாவது கேட்டுட்டா... அவரை திரும்பி கேட்டு அவர் வாயை அடைச்சதாவே வைச்சுப்போம், அவ்வளவு ஏன் என்மேல தப்பில்லன்னு நிரூபிச்சிட்டிங்கன்னே வைச்சுப்போமே!



நான் இங்கேயே தங்கிட முடியாதுல்ல... எனக்கும் ஒரு வாழ்க்கை வேணும்ல... அதை நான் பார்க்க வேண்டாம்?" என்றாள் இந்த வீட்டை விட்டு போகவென எடுத்த முடிவில் மாற்றம் அற்றவளாய்,


"ஏன் நீ போகணும் மது? ஓபனா சொல்லிடுறேன் மது. எனக்கு நீ வேணும்.. எனக்கு பொண்டாட்டியா.. என்குழந்தைக்கு அம்மாவா வேணும்.


உன்மனசில நீ என்னை நினைச்சிட்டிருக்கியோ தெரியாது.
சாமி சாட்சியா, பெரியவங்க ஆசீர்வாதத்ததோட, உன் கழுத்தில கட்டின தாலிய உண்மை கல்யாணமா தான் பார்க்குறேன்.


அதனால என் பொண்டாட்டிய யாருக்காகவும், எந்த சர்ந்தர்ப்பத்தினாலயும் என்னை விட்டு தூரப்போறத நான் அனுமதிக்க மாட்டேன். அப்பிடி இந்த வீட்டை விட்டு நீ போயே ஆகணும்னா சொல்லு, உன் கூடவே நாங்களும் வந்துடுறோம்" என்றான்.


"அப்புறம்......?" என நக்கலாக நகைத்தவள்,


"எப்பிடி கேஷி..! சட்டைய மாத்துறது போல மனச மாத்திட்டே இருக்கீங்க?


இப்போ கொஞ்ச முன்னாடி யாரோ ஒரு பொண்ண விரும்பி.. அவளை தேடி வெளியூர்வரை போனாத சொன்னீங்க, இப்போ என்னை பொண்டாட்டி என்குறீங்க.


அப்போ சின்ன வயசில இருந்து நீங்க தான் கணவனா வரணும்ன்னு கனவு கண்டுட்டிருக்கிற லாவண்யாவுக்கு பதில்?


என்னை பொறுத்தவரைக்கும் என்மேலான அவளோட பிரதிபலிப்பு பழியோ... வக்கிரமோ இல்ல.. உங்க மேல உள்ள அளவுகடந்த காதல்.
என்னோட இடத்தில எந்த பொண்ணா இருந்தாலும் இந்த மாதிரித்தான் நடந்துப்பா,


உங்களை கடந்து அவளை நான் பார்த்தவரை.. அவ நல்ல பொண்ணு, நீங்க அவளுக்கு கிடைச்சிட்டா, எல்லாத்தையும் சரி பண்ணிப்பா,
அதோட உங்களுக்கும் அவளுக்கும் தான் நல்ல பொருத்தம்.
இந்த நாடோடி உங்களுக்கு செட்டாக மாட்டேன்.


அதனால நம்ம ட்ராமாவை இத்தோட நிறுத்திட்டு என்னை போகவிடுங்க.. இதை விட்டா நல்ல சந்தர்ப்பம் அமையாது" என்றாள் அவனுக்கு புரிய வைக்கும் விதமாக.


அதுவரை அவளை பேசவிட்டு அமைதியாக இருந்தவன் முகம் மீண்டும் அனல் தெரிக்க ஆரம்பித்தது.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️மலர் வாழ்க்கை ஆரம்பித்த உடனே முடிஞ்சுருச்சே 😔😔😔😔😔😔😔
தாய்க்கு சமம் தாய்மாமன் ன்னு கேசவ் ஸ்ரீ ய வளர்த்து நிரூபிச்சுட்டான்.
ஆனா மது ரெம்ப முரண்டு பிடிக்குறாளே, கேசவ் வேற கோவமா இருக்கான் ஏதோ ஏடாகூடம் ஆகப்போகுது 😳😳😳😳😳😳
 

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
கேஷவ் குழந்தைக்கு காட்டி அம்மானு சொன்னது மது போட்டோவா.இல்ல மயூரியும் மதுவை போல இருப்பாளா🙄🤔🤔
 
Top