• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

20. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
அன்று ஒரு நாள் நள்ளிரவில் அவள் துணையின்றி சென்றதை மாமியார் ,எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்தார்! அதை கணவனும்கூட ஒரு வகையில் ஆமோதித்தான்! ஆகவே இப்போது அவள் என்ன செய்வது என்று சிலகணங்கள் தடுமாற்றத்துடன் நின்றாள்! அப்படி நிற்கும் நேரம் அதுவல்ல என்ற உந்துதலுடன் முதல் காரியமாக வேலைக்கு வர முடியாது என்று காரணத்தை தெரிவித்து இரண்டு நாட்கள் விடுப்பு சொன்னாள்!

அதன்பிறகு சாந்தி அனுப்பிய கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரத்தை கேட்டுக் கொண்டவள், மருத்துவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, சுரேந்திரனின் சிகிச்சையை தாமதிக்காமல் தொடங்கச் சொன்னாள்! அப்படியே அந்த மருத்துவமனைக்கு முன் பணத்தையும் அனுப்பி வைத்தாள்!

அடுத்து, கணவனை தொடர்பு கொண்டாள், இரண்டு முறை அழைத்த பிறகு தான் அவன் ஏற்றான்! ஆனந்தனிடம் விபரம் சொல்லி, அவள் கிளம்பப்போவதை தெரிவித்தாள்!

சிலகணங்கள் ஆனந்தன் ஏதும் பதில் சொல்லவில்லை!

"ஆனந்த்! என்னாச்சு? ஏன் ஒன்றும் சொல்ல மாட்டேங்கிறீங்க? "

"எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை சாரு! அம்மா சம்மதிப்பாங்களானு தெரியலை!
என்கிட்ட சொன்ன மாதிரி சொல்லாதே! நீங்க அனுமதி கொடுத்தால் நான் போய் வர்றேன் என்று சொல்லு! அம்மா சரின்னு சொன்னால்... என்றதும் தொடர்பை துண்டித்துவிட்டாள் சாரு!

முன்பாக இருந்தால் சாரு, அப்படியே செய்கிறேன் ஆனந்த் என்று ஒப்புக் கொண்டிருப்பாள்! இப்போது கணவனிடம் தோன்றியிருக்கும் உரிமை, வேறு மாதிரியாக நினைக்க வைத்தது! மனைவியை அனுப்ப அவனது தாயின் அனுமதியை பெற வேண்டும் என்றது அவளை பாதித்தது! அவள் ஒன்றும் உல்லாசப் பிரயாணம் செல்வதாக சொல்லவில்லையே! அங்கே ஒருத்தன் விபத்தில் அடிபட்டு கிடக்கிறான், அவனுக்கு உதவத்தானே அவள் கேட்கிறாள்! மனதோடு கேட்டுக் கொண்டாளே தவிர, வாய்விட்டு அவள் கேட்கவில்லை! பிரயோசனமில்லை என்று தெரிந்தபின் கேட்பது புத்திசாலித்தனம் கிடையாது!

இப்படித்தான் அன்று பிரியாணியை வாங்கிக் கொண்டு சென்றவன்,அதைப்பற்றி அவள் கேட்கும்வரை எதுவும் சொல்லவில்லை! அவள் கேட்டபின், நைஸ் என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டான்! அவனைச் சொல்லியும் குற்றமில்லை! அவளால் தான் அவன் இப்படி பட்டும் படாமலும் நடந்து கொள்கிறான்! இனி கணவனிடம், தன் அன்பை வெளிப்படுத்தி, மற்ற தம்பதிகளை போல இணக்கமாக புதியவர் வாழ்கை வாழ வேண்டும்! என்று தனக்குள் முடிவு செய்து கொண்டவள், நடப்பிற்கு மனதை செலுத்தினாள்!

சாருவுக்கு இப்போது கணவனிடம் உரிமைச் சண்டை போடவோ, விவாதம் செய்யவோ நேரம் இல்லை, ஆகவே,நேராக மாமியாரிடம் சென்றாள்! கணவன் சொல்லித் தந்தது போல, கேட்டாள்!

"அடப் பாவமே! ரோட்டை பார்த்து கிராஸ் பண்ணக்கூடாதா? என்றவர், "அவன் உன்கூடப் பிறந்தவன் இல்லையாமே? நீ என்னவோ கூடப் பிறந்தவனைப் போல துடிக்கிறே?"

அப்போது அனிதாவும் அங்கே தான் ரிஷியுடன் விளையாடியபடி அமர்ந்திருந்தாள்!

"அத்தை! என்ன பேச்சு இது? அவங்க ஊருக்கு போகணும்னு கேட்டா, பேசாமல் அனுப்பி வைப்பீங்களா அதை விட்டுட்டு எதுக்கு வேண்டாத பேச்சு" அனிதா கடிந்து கொண்டாள்!

"நான் என்ன இல்லாததையா கேட்டுடேடேன்? என்று இறங்கிய குரலில் சொன்னவாறு விசாலம் அடங்கிவிட்டார் !

சாரு, ஆச்சர்யமாக அவளை நோக்கினாள்! கூடவே அந்த வேறுபாடு அவளுக்கு உரைத்தது! ஒன்றுவிட்ட தம்பியின் மகளிடம் பரிவு காட்டுவதும்,பெற்ற மகனின் மனைவியிடம் கடுமை காட்டுவதும், ஏன் இந்த பாரபட்சம்? அப்படி அவள் என்ன தவறு செய்து விட்டாள்? அழகு, படிப்பு, என்று எதில் தான் குறை? மனதோடு கேட்டுக்கொண்டு மாமியாரின் பதிலுக்காக காத்திருந்தாள்!

"சரி, சரி நீ போய் வா! நம்ம காரில் கிளம்பிப் போயிட்டு வா!, காரை நீ ஓட்டிட்டு கிளம்பிடாதே, அப்புறம் கேட்கிறவங்களுக்கு பதில் சொல்லி மாளாது! நீ டிரைவர் சோமுவை அழைச்சிட்டுப் போ" என்றார்!

"சரிங்க அத்தை, நான் ரிஷியையும் கூட்டிட்டு போறேன்!"ஏன்னா நான் திரும்பி வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம் ! அதுவரை அவனைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது! " அவள் முடிக்குமுன்பாக..

"ஏய்.. உன்னை போகச் சொன்னதே தம்பின்னு உருகுகிறாய்னு தான்! அங்கே சின்னப் புள்ளையை தூக்கிட்டு போகணும்னு சொல்றியே? நீ டாக்டருக்கு படிச்சவள் தானே? அந்த மாதிரி இடத்துக்கு பிள்ளையை கூட்டிப் போகக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா? இங்கே நீ நாள் முழுக்க கூடவேயா இருக்கிறே? இல்லை தானே? பகல், இரவு என்று நீ வேலைக்கு போயிடுறே! அப்ப அனிதா தான் நாள் பூராவும் அவனை பார்த்துக்கிறாள்! அவள் அவனை சமாளிச்சுக்குவா! நீ போய் ஊருக்கு கிளம்பற வேலையைப் பாரு!" என்றார் விசாலம்!

"வேண்டும் என்றால் அனிதாவும் என் கூட வரட்டும் அத்தை! எனக்கும் துணையாக இருக்குமே!" என்று சொன்னாள் சாரு!

"அது சரி! அவள் தான் எனக்கு பேச்சு துணைக்கு இருக்கிறவள்!வேளா வேளைக்கு எனக்க சோறு போடுறதும் அவள்தான்! அவளையும் நீ கூட்டிட்டு போயிட்டா, நான் இங்கே தனியாக மோட்டு வளையத்தை பார்த்துட்டு அனாதை மாதிரி கிடக்கணுமா?" என்றதும் வாயடைத்துப் போனாள் சாரு!

சாரு வாழ்க்கையில் முதல் முறையாக மனதில் அடி வாங்கிய தருணம் அதுதான்! அதற்கு மேலாக வாதாடினால் அவளை போக வேண்டாம் என்று தடுத்துவிடும் அபாயம் இருப்பதை புரிந்து கொண்டவள், மகனை அணைத்து முத்தமிட்டு விட்டு, அங்கிருந்து அகன்றாள்!

விசாலத்தின் பார்வையில் வெற்றிக்களிப்பு தோன்றியது! ஆனால் ஒன்றை அந்த இரு பெண்களும் மறந்து போனார்கள்! முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும் என்பதை!

🩵🩷🩵

பயணம் முழுவதும் சாரு, தொண்டையில் அடக்கப்பட்ட, துக்கத்துடன் தான் அமர்ந்திருந்தாள்! விசாலம் இரண்டு நாட்கள் தனியாக கழிக்க முடியாது என்றது சாருவுக்கு கொஞ்சம் ஆதங்கம் தான்!

அனிதாவிடம் ரிஷி ஒன்றிவிட்டதால் தன்னை அதிகமாக தேட மாட்டான் என்பது தான்கொஞ்சம் ஆறுதலாக இருந்தது!

சமீப காலமாக அவளுக்கு மகன்தான் மிகுந்த ஆறுதலாக இருக்கிறான்! மாமியார் சொன்னது போல குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூடாது தான்! ஆனால் அங்கே சாந்தி, ரிஷியை உயிராக பார்த்துக் கொள்வாள்! அதைச் சொன்னாலும் விசாலம்
விடமாட்டார் என்று தான் அனிதாவை அழைத்துப் போவதாக சொன்னாள்!

விசாலாட்சி ஒன்றும் படுக்கையில் நோயாளியாக கிடக்கவில்லை! நல்ல திடகாத்திரமாக உடம்பில் எந்த குறையும் இல்லாமல் தான் இருக்கிறார்! இத்தனைக்கு அவருக்கு மெலிந்த தேகம் தான் !
அந்த இரட்டை படுக்கை அறை வீட்டில் இருந்தவரை விசாலாட்சி தான் சமைப்பது முதல் வீட்டில் அத்தனை வேலையும் செய்து கொண்டிருந்தார்! பங்களாவுக்கு குடி வந்த பிறகு தான், சமையலுக்கு, மேல் வேலைக்கு, தோட்டத்திற்கு என்று ஆட்களை ஆனந்தன் நியமித்தான்! அது அன்னைக்காக மட்டுமல்ல, சாரு மனைவியாக வரும்போது அவளை ராணியாக வாழ வைக்க வேண்டும் என்று நினைத்து செய்தது தான்! சாரு வேலைக்கு செல்பவள் என்பதால் அவனது அன்னை அதை வைத்து அவள் வீட்டில் எதையும் செய்யவில்லை என்று பேசுவதற்கு இடம் தரக்கூடாது என்ற எண்ணமும் தான்! ஆனால் சாரு திருமணமாகி வந்த பின், அவள் கிளம்பும் முன்பாக காலையோ, மாலையோ சமையல் செய்து விட்டு தான் வேலைக்கு சென்றாள்! மற்ற நேரத்திற்கு பணியாள் செய்வார்!

அவள் பிள்ளை உண்டான பிறகு அவளை சமையலறைப் பக்கம் போகக்கூடாது என்றுவிட்டான் ஆனந்தன்! அவனது அன்பை அப்போது அவள் புரிந்து கொள்ளவில்லை! இப்போது நினைத்து உருகிப் போனாள்! அப்போதும் விசாலம் தன் கையால் சமைத்து அவளை சாப்பிட வைத்தார் தான்! அது அவரது பேர்க்குழந்தைக்காக என்று பின்னர் விளக்கமும் கொடுத்தார்!

விசாலாட்சி தான் வீட்டில் வேலையாட்களை விரட்டி வேலை வாங்குவது! மகன் கட்டிய அந்த பங்களாவை முழுமையாக தினமும் ஒருமுறை சுற்றிவிட்டு வந்துவிடுவார்! தோட்டத்திலும் அப்படித்தான்! புதிதாக செடி வைப்பதோ, மரக்கன்று நடுவதோ எல்லாம் அவர்தான் தோட்டக்காரனை வைத்து செய்வார்!

விசாலாட்சியின் காலில் நூல் அளவு தான் விரிசல்! அதுவும் ஒரு மாதத்தில் சரியும் ஆகிவிட்டது! நல்ல நிலையில் இருந்தும் அவர் வேண்டும் என்று தான் அனிதாவை துணைக்கு அழைத்தாரோ என்று இப்போது லேசாக சந்தேகம் வந்தது! அவள் வந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகிவிட்டது! அவளது பெற்றோர் ஏன் இங்கே அவளை விட்டு வைத்திருக்கிறார்கள்? ஏதோ திக்கற்றவள் போல அவள் தொடர்ந்து இங்கேயே ஏன் தங்கியிருக்கிறாள்?

அனிதா,வந்த புதிதில் சமையலுக்கு உதவியாக இருக்கத் தொடங்கினாள்! ஆனால் இப்போது அவள் தான் சமையல் மெனுவை தயார் செய்கிறாள்! எனலாம்! தங்குதடை இல்லாமல் வீடு இயங்கிக் கொண்டிருக்கிறது!
ஆகவே சாரு வேலை வேலை என்று வீட்டில் நடப்பதை ஊன்றி கவனிக்காமல் விட்டுவிட்டாள்! இனி ஊர் திரும்பியதும் முதல் வேலையாக அனிதாவை பேக் பண்ணுவது தான்! என்று தீர்மானம் செய்துகொண்டாள்!

காரோட்டி, மதுரையை அடைந்து விட்டதாக தெரிவிக்கவும் சாரு நிகழ்வுக்கு திரும்பினாள்! சாந்தியை தொடர்பு கொண்டு பேசினாள்! அவள் தெரிவித்த விபரத்தின்படி பெரிய மருத்துவமனை நோக்கி விரைந்தது கார்!

சாருவின் எண்ணங்கள் நிறைவேறுமா?

 

Attachments

  • Picsart_24-05-04_15-06-20-975.jpg
    Picsart_24-05-04_15-06-20-975.jpg
    69.1 KB · Views: 9