- Joined
- Apr 8, 2022
- Messages
- 244
மறுகும் நீ! உருகும் நான்!
-வித்யா வெங்கடேஷ்
-வித்யா வெங்கடேஷ்
ஊடலும் காதலும் நிரம்பிய தங்களுடைய ஐம்பது வருட இல்லற பயணத்தின் பொன்விழா நன்னாளை கோலாகலமாகக் கொண்டாட திட்டமிட்டிருந்த மூர்த்தியின் பொறுமையைச் சோதித்தாள் அவருடைய அன்பிற்கினிய மனையாள் திருமதி.சுதா மூர்த்தி.
பிரபல சர்வதேச நிறுவனத்தின் தலைமை அதிகாரியான அவரும், திருமண ஆலோசகரான அவளும், தங்கள் அன்றாட பணிகளைப் புறம்தள்ளி வைத்து, அன்றைய தினம் முழுவதும் தங்களுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
காலை ஏழு மணியளவில் புது மாப்பிள்ளை கணக்காக முகத்தில் பூரிப்பும், மனத்தில் காதலும் வழிய பட்டு வேட்டி சட்டையில் புறப்பட்டவரை அவர் சரிபாதி அழைத்து சென்ற இடமோ தன் அலுவலகத்திற்கு.
பெருமாள் கோயிலுக்குப் போகும் வழியில், அலுவலகத்தில் அரை மணி நேரமே வேலை என்றவள் அவரைக் கணக்கே இல்லாமல் காக்கவைத்தாள்.
விவாகரத்து செய்ய விரும்பும் தம்பதிகள் நீதிமன்றத்தின் படிக்கட்டுகள் ஏறும் முன் கவுன்சிலிங் என்ற பெயரில் ஆலோசனைகள் அளித்து அவர்களை நல்வழியில் நடத்தும் உன்னதமான சேவை செய்து வந்த தன் மனையாளின் பணியில் அவருக்கு அத்தனை பெருமிதம். எதற்கு எப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நன்கு உணர்ந்து செயல்படும் மனைவியின் குணம் அறிந்தவர் அவள் பேச்சுக்கு மறுபேச்சே சொன்னதில்லை.
அன்றும் அப்படித்தான்.
இருபதின் பிற்பாதியில் பயணித்த தம்தியரை அவள் சந்திக்க வேண்டியிருந்தது. தன் விசாலமான அலுவலக அறையின் பின்புறத்தில் மறைவாக இருந்த சிறிய அறையில் கணவரைக் காத்திருக்கச் சொல்லி, அவள் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
ஐந்து ஆண்டு தாம்பத்தியத்தில் வராத புரிதல் இனியா வரப்போகிறது என்று சலித்துக்கொண்ட இருவரும் அவள் ஆலோசனைகள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
“வரவு செலவுகளை இழுத்துப் பிடிக்கும் நடுத்தர வர்க்கம்னு தெரிஞ்சுதானே என்னைக் கல்யாணம் செய்துகிட்ட! என்னம்மோ நான் உன்னை ஏமாத்திட்டா மாதிரி கண்ணீர் வடிக்கற!” சரவணன் ஏச,
“உங்க பணச்சுமை குறைக்கத்தானே நானும் வேலைக்குப் போகுறேன்னு சொல்றேன்! வீட்ட பார்த்துக்கோ, அம்மா அப்பாவுக்குத் துணையா இருன்னு என்னை முடக்கி வெச்சிருகீங்க! தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்று என்ன பிரயோஜனம்!” இடித்துக்காட்டினாள் மேகலா.
“நான் என்னமோ உன்னை அடிமையா நடத்துற மாதிரி பேசுற!” என்றவன், சுதா பக்கம் திரும்பி,
“வீண் மனவுளைச்சல் எதுக்குன்னு தான் அம்மா அவளை வேலைக்குப் போகவேண்டாம்னு சொல்றாங்க. எனக்கும் அதுதான் சரின்னு பட்டுது. அதுமட்டுமில்ல! என் ஒருத்தன் சம்பாத்தியத்தில் எங்களால நிறைவான வாழ்க்கை வாழமுடியுது. ஆனால் இவளுக்குப் பகட்டு வாழ்க்கை மேல ஆசை இருந்தால் நான் என்ன செய்யமுடியும்?” என்றவன் மனைவியைப் பார்வையால் சுட்டெரித்தான்.
“அத்தியாவசிய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகிட்டு வாழ்ந்தால் போதும்னு சொல்ற இவருக்கு, வாரத்துக்கு ஒரு நாள் வெளியே போயிட்டு வரணும், நாலு கதை புத்தகங்கள் வாங்கி படிக்கணும், நடுகூடத்தில் பெருசா ஒரு டி.வி மாட்டணும்னு கேட்கும் என்னுடைய சின்ன சின்ன ஆசைகள் எல்லாம் பகட்டுத்தனமா தான் தோணும்!” கொந்தளித்தவள்,
“சமையல் அறையிலேயே என் காலத்தை ஓட்டணும்னு தலைவிதி இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்!” சலித்துக்கொண்டாள்.
“பார்த்தீங்களா பார்த்தீங்களா மேடம்! சமையல் செய்யும் அடிப்படையான விஷயத்தையே குறையா சொல்றா!” துள்ளினான் சரவணன்.
“கணவன், குழந்தைகள், மாமியார் மாமனாருக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடுறதுல எனக்கொரு கஷ்டமும் இல்ல மேடம். ஆனால் இவங்க வீட்டுல அடுப்பை அணைக்கவே முடியாது. பொழுதுக்கும் விருந்தாளிகள் வந்து போயிட்டே இருப்பாங்க.” என்று கழுத்தை நொடித்தாள்.
“என் அக்காவும் தங்கையும் உனக்கு விருந்தாளிகளா டி!” பொங்கியவன்,
“எனக்கு இருக்கும் எல்லா உரிமையும் அவங்களுக்கும் நம்ம வீட்டில் இருக்கு!” அழுத்திக்கூறினான்.
“அது சரி! கல்யாணமான பெண்கள் நாள் கிழமையில் பிறந்த வீட்டுக்கு வந்தால் அவர்களைச் சீராட்டிப் பாராட்டலாம்! விடிஞ்சதும் விடியாததுமா வந்து இதைச் செய் அதைச் செய்ன்னு அதிகாரம் செய்யவேண்டியது. போதாக்குறைக்கு அவங்க பிள்ளைகளை என் தலையில் கட்டிட்டு ஊர் சுற்றவேண்டியது!” புகார் வாசித்தாள் மேகலா.
“ஊர் சுத்தறாங்களா! அவங்க அலுவலகத்தில் வேலை செய்யறது போதாதுன்னு நம்ம வீட்டுக்குத் தேவையான வெளி வேலைகளையும் சேர்த்தில்ல செய்யறாங்க!” எகிறினான் அவன்.
“யார் செய்யச் சொன்னா! என் வீட்டு வேலையை நான் பார்த்துக்கறேன்; அவங்க வீட்டு வேலையை அவங்க பார்த்துக்கட்டும்னு தானே சொல்றேன்!” மேகலாவும் சளைக்காமல் எகிறினாள்.
“மேடம்! எங்களுக்குக் கல்யாணமாகி அஞ்சு வருஷமாகியும் குழந்தை இல்லை. கடவுள் புண்ணியத்தில் ரெண்டு பேருக்கும் உடல்ரீதியாகவும் எந்தப் பிரச்சனையும் இல்ல; மனச லேசா வெச்சுக்கிட்டாலே எல்லாம் நல்லபடியா நடக்கும்னு டாக்டர் சொல்லிருக்காங்க! அதனால்தான் அவளை வெளிவேலைகளைச் செய்யாதேன்னு அக்கா சொன்னாங்க. அவங்க குழந்தைகளை விட்டுட்டுப் போறது கூட மேகலாவுக்கு ஒரு மாறுதலா இருக்குமேன்னு தான்!” சரவணன் தன்மையாகப் பேச,
“போதுமே உங்க சகோதரிகளின் அக்கறை.” என்று உதட்டைச் சுழித்தவள்,
“அவங்களால தான் எனக்கு மனவுளைச்சலே மேடம்! அக்கறைன்ற பேருல அவங்க எங்க அந்தரங்கத்தில் தலையிடுறது எனக்குச் சுத்தமா பிடிக்கல. ஓவுலேஷன் நாள் சரியா கணக்கிட்டையா! இந்த டாக்டர்கிட்ட போக சொன்னேனே...இந்தச் சிகிச்சை எடுத்துட்டியா; நாள் தள்ளி போச்சான்னு பொழுதுக்கும் எங்க தனிப்பட்ட விஷயங்களைக் குடையுறதே அவங்க வேலை!” மூக்கை உறிஞ்சியவள்,
“அவங்க பேச்சும் பார்வையும் எப்படி இருக்கும் தெரியுமா! கேமரா வெச்சு எங்க படுக்கை அறையை சதாசர்வகாலமும் கண்காணிக்குறா மாதிரியே இருக்கும்!” என்று கண்கலங்கி போனாள்.
“திஸ் இஸ் தி லிமிட்! எல்லாத்தையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் உன்னைத் திருத்தவே முடியாது. வெளியே போய் பாரு. இந்த மாதிரி அன்பும் அக்கறையும் காட்டும் புகுந்த வீட்டு சொந்தங்கள் இல்லாத பெண்களின் அவலநிலை அப்போதான் புரிஞ்சுப்ப!” என்று ஆக்ரோஷமாக உறுமியவன்,
“விவாகரத்து படிவங்களை எனக்கு அனுப்புங்க. கையெழுத்து போட்டு தரேன்!” தீர்க்கமாகக் கூறி வெளியேறினான்.
“என் உணர்வுகளைப் புரிஞ்சுக்க முடியாத ஒருத்தரோட வாழுறதுல எந்தப் பயனுமில்லை மேடம். மேற்கொண்டு என்ன செய்யணும்னு சொல்லுங்க!” கம்மிய குரலில் உரைத்தாள் மேகலா.
தலைகுனிந்து கண்ணீர் சிந்தும் பதுமையின் தலையில் ஆதுரமாய் வருடிய சுதா,
”என்னால உன் உணர்வுகளைப் புரிஞ்சுக்க முடியுது மா. உன் எதிர்பார்ப்புகள் ரொம்ப நியாயமானது. சரவணனும் உன் பக்கத்து நியாயத்தை ஒருநாள் கட்டாயம் புரிஞ்சுப்பார்.” என்றவள்,
படிவங்களைத் தயார் செய்துவிட்டு அழைப்பதாகக் கூறி வழியனுப்பி வைத்தாள்.
வெளியே வந்த மூர்த்தியிடம் நேரமானதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, கோவிலுக்குப் புறப்படலாம் என்று மலர்ந்த முகத்துடன் வண்டிச்சாவியை நீட்டினாள் சுதா.
அதை வாங்கும் சாக்கில், மனையாளின் விரல்களை ஒன்றுசேர குவித்தவர்,
“விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யறேன்னு பொய் சொல்லிட்டு அவங்கள சேர்த்துவைக்க போகுற! அப்படித்தானே!” குறும்பாகக் கண்சிமிட்டினார்.
“கண்டுபிடிச்சுட்டீங்களா!” உதடு பிரியாத புன்னகையுடன் அவள் வினவ,
“இந்தப் பெண்ணோட ஐம்பது வருடங்கள் குடும்ப நடத்திருக்கேன் மா!” மனைவியின் தோளினை சுற்றி அணைத்தவரின் முகத்தில் பெருமிதம் மின்னியது.
“அவங்கள சேர்த்து வைக்கணும்னா எனக்கு உங்க உதவி ரொம்ப முக்கியமுங்க! அதுக்காகத் தான் உங்களையும் இன்னைக்கு அழைச்சிட்டு வந்தேன்!” அவள் குழைய,
ஆச்சரியமும் ஆர்வமும் தலைக்கேறியவராய் மனையாளை ஏறிட்டார்.
மதிய உணவிற்குப் பின் மடித்த வெற்றிலை பாக்குடன் கோப்புகளையும் சேர்த்து நீட்டினாள் சுதா.
புளியோதரை, சக்கரை பொங்கல், நெய் முறுக்கு எனக் கோவில் மடப்பள்ளியில் இருந்து வாங்கிவந்த பிரசாதங்களை வயிறார புசித்தவரோ,
“உண்ட மயக்கம் கண்ணைக் கட்டுது! குழந்தைக்குக் கதை சொல்ற மாதிரி நீயே எல்லாத்தையும் சொல்லிடுமா!” எனக் கண்கள் சுருக்கி செல்லம் கொஞ்சி, தன்னருகில் அமரும்படி அவள் கரம் பிடித்து இழுத்தார்.
நாணமும் மிதப்பும் நிறைந்தவளாக அவர் அருகில் அமர்ந்தவள்,
“சரவணன் நம்ம அடையார் கிளையில் தான் மேற்பார்வை அதிகாரியாக வேலை செய்யறார்!” அவள் தொடங்கியது தான் தாமதம்.
“அப்படியா!” வாய்பிளந்தார் மூர்த்தி.
“ம்ம்!” என்று மென்மையாகத் தலையசைத்தவள், இரண்டு நாட்களில் நடக்கவிருக்கும் செயல்திறன் மதிப்பிடுதலில்(Performance Appraisal) அவன் விவாகரத்தை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி அவன் பணி உயர்வையும் வெளிநாட்டு பயணத்தையும் ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்தாள்.
“அது எப்படி மா ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து திறமைகளுக்கு முட்டுக்கட்டை போடுறது!” அது தொழில் தர்மம் இல்லை என்று மறுத்தார்.
“தெரியும் பா! அவருடைய பிழைகளைச் சுட்டிக்காட்ட இதைவிட வேற சிறந்த வழியில்லை.” என்றவள்,
தன்னுடைய குடும்ப வாழ்க்கையையே சமாளிக்க முடியாத ஒருவனால், பணிச்சுமைகளையும் அதிலுள்ள நெருக்கடிகளையும் கூடத் தன்னம்பிக்கையுடன் சமாளிக்க முடியாது என்று காரணம் சொல்லி அவன் தன்மானத்தையும் அடிமனத்தில் மறைந்திருக்கும் பிரியத்தையும் தூண்டிவிடுமாறு உரைத்தாள்.
“அது சரி! அப்போ தவறு எல்லாம் அவன் மேல மட்டும்தான்னு சொல்றியா!” மனைவி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வினவினார்.
“அவகிட்டயும் தப்பு இருக்கு! ஒண்ணொண்ணா சரி செய்யலாம்!”
“அப்போ உன் சிகிச்சையை அந்தப் பொண்ணு கிட்டேந்து ஆரம்பிக்க வேண்டியது தானே!” மடக்கினார் மூர்த்தி.
“லேடீஸ் ஃபர்ஸ்ட் எல்லாம் காதலில் தான்! ஊடலில் ஆண்கள் தான் முதலில் இறங்கி வரணும்!” என்று அவள் குழையவும்,
தங்கள் இல்வாழ்க்கையின் சுவாரசியமான சண்டைகளையும் சமாதானங்களையும் நினைவுகூர்ந்தவர் அசடுவழிந்து மனையாளின் கள்ளாட்டத்திற்குச் சம்மதித்தார்.
அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியே தன்னை நேரில் சந்திக்கப் போவதை அறிந்த சரவணனுக்குக் கரைகாணா இன்பம். தன் உழைப்புக்குத் தக்க அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையுடன் காத்திருந்தான்.
பல கனவுகளோடு மூர்த்தியைச் சந்திக்க வந்தவன், அவர் அடுக்கிய புகார்கள் கேட்டு கோபாக்கினியாக மாறினான். சுதா கணித்த மாதிரியே தன் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட அவருக்கு உரிமை இல்லையென்று தகராறும் செய்தான்.
“வீட்டுப் பிரச்சனையையே தீர்க்க முடியாத உங்களை நம்பி இத்தனை பெரிய பொறுப்பை எப்படிக் கொடுக்கமுடியும்னு நீங்களே சொல்லுங்க சரவணன்!” விளக்கம் கேட்டார் மூர்த்தி.
மனம்விட்டு பேச வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவன்,
“என் மனைவியை விவாகரத்துச் செய்துடக்கூடாதுன்னு தான் சார் இந்த வெளிநாட்டு வாய்ப்பு தரும்படி கெஞ்சி கேக்குறேன்!” மனமுருகி உரைத்தான்.
சுதா சொன்னதைப் போலவே தேக்கிவைத்த காதல் எட்டிப்பார்ப்பதைக் கண்டுகொண்டவர்,
“இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?” புருவம் வளைத்தார்.
“சம்பந்தம் இருக்கு சார்!” என் மனைவியின் எதிர்பார்ப்புகளை குறை சொல்லவே முடியாது. என் பெற்றோரின் விருப்பங்களை மீறி நடந்துக்க முடியாத என் சூழ்நிலை புரிஞ்சுக்கிட்டு அவங்க காலம் வரைக்கும் அனுசரிச்சு போன்னு தான் சொன்னேன் சார்!” என்று விரக்தியில் இடவலமாகத் தலையசைத்தவன்,
“ஆனால் இருபக்கமும் அடிவாங்கும் மத்தளம் மாதிரி சிக்கித் தவிக்கிறேன். தனிக்குடித்தனம் போகும் அளவுக்கு மனசுல தைரியமில்ல; அதனால தான் இப்படியொரு வழியில் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுபிடிக்க நெனச்சேன்.” நொந்து பேசினான்.
சுதா சொன்னது எவ்வளவு உண்மை என்று அசைப்போட்டவர், அவன் கோரிக்கையை மறுபரிசீலனை செய்துவிட்டு தொடர்புகொள்வதாகக் கூறினார்.
அன்று மாலை வீடு திரும்பியர், சரவணனின் தர்மசங்கடமான நிலையை எடுத்துரைத்து, அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சிந்திக்கும் அவன் பக்குவத்தை மெச்சி வெளிநாட்டு வாய்ப்பை அவனுக்குத் தரப்போவதாகக் கூறினார்.
அவர் வியக்கும் வகையில், மனையாள் தீர்க்கமாக மறுத்துப் பேசினாள்.
“இப்பவும் அவன் பிரச்சனையின் பிடியிலிருந்து ஓட நினைக்கிறானே தவிர, அதை எப்படிச் சரி செய்யலாம்னு யோசிக்க மாட்டேன்றான்!” என்றாள்.
“வேற என்னம்மா செய்யணும்னு எதிர்பாக்குற!” முகம் சுருக்கினார் மூர்த்தி.
“எனக்கும் அத்தைக்கும் இல்லை எனக்கும் உங்க அருமை தங்கைக்கும் இடையில் மனஸ்தாபம் வந்தால் என்ன செய்வீங்க?” மார்பின் குறுக்கே இருகைகளையும் கட்டிக்கொண்டு அதிகாரமாய் கேட்டாள்.
“நியாயம் யார் பக்கம் இருக்கோ அவங்களுக்கு ஆதரவா பேசுவேன்!”
கணவரின் பதிலில் நெகிழ்ந்தவள், “அதே தான் நானும் சொல்றேன்! சரவணனும் வழவழ கொழகொழன்னு மேகலாவை எல்லாத்துக்கும் அனுசரிச்சு போன்னு சொல்றதுக்குப் பதிலா, அவளுக்காகப் பேச வேண்டிய இடத்துல வெளிப்படையா தலைநிமிர்ந்து பேசணும். அவன் அப்படிச் செய்யும்போது அவளும் அனுசரித்துப் போகவேண்டிய இடத்துல அனுசரிச்சுப் போவா!” விரிசல் எதனால் ஏற்படுகிறது என்று விளக்கினாள்.
“சொல்வது சுலபம் சுதா. ஒவ்வொருத்தர் வாழ்க்கை முறையும் வேற. நம்ம வீட்டுல எல்லாரும் நட்பின் வழியில் பழகினதால, சண்டை சச்சரவுகள் கையாள்வதில் சிரமம் இருந்தது இல்லை. ஆனால் சரவணன் வளர்ந்த சூழ்நிலை வேற!” ஒப்பிட்டவர், சரவணன் சொல்வது போல அப்பெண் அவர்கள் காலம்வரை அனுசரித்துப் போவதுதான் சரி என்றார்.
“என்னுடைய பெற்றோர் மறைவுக்கு அப்புறம் உன்னை உள்ளங்கையில் வெச்சு தாங்குறேன்னு அவன் சொன்னா, அப்போ அந்தப் பெண்ணுக்கு ‘என் மாமியார்’, ‘என் மாமனார்னு’ புகுந்த வீட்டுச் சொந்தங்களோட ஆசையா ஒட்டி உறவாட தோணுமா; இல்லை எப்போடா இவங்க மண்டைய போடுவாங்க, நமக்கு விடிவுகாலம் பிறக்கும்னு வெறுப்பு வளருமா?” சிந்திக்கச் சொன்னாள்.
அவரிடம் அதற்குப் பதிலேதும் இல்லை.
ஆழ்ந்த சிந்தனையில் சஞ்சரித்து இருந்தவரின் கைகோர்த்து, “புரிஞ்சுக்கோங்க பா! காலம் யாருக்கும் காத்திருக்கிறது இல்ல. அந்தந்த நேரத்தில் வரும் சந்தோஷம், சோகம், பாசம், கோபம் எல்லாம் மகிழ்ந்து அனுபவிக்கறதும் கடந்து போகுறதும் தான் வாழ்க்கை.
ஆசை யாருக்குத்தான் இல்லன்னு சொல்லுங்க. ஒருத்தரோட ஆசை நியாயமானதாக இருந்தால் அதை நிறைவேற்றி வைக்க குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் தங்கள் கோட்பாடுகளைத் தளர்த்திக்கணும்.” மென்மையாக எடுத்துரைத்தாள்.
“என் மனைவியின் ஆசை நிறைவேற்ற இந்தக் காதல் பித்தன், சரவணன் கிட்ட என்ன சொல்லணும்!” என்று வாஞ்சையாகக் கேட்டு கண்சிமிட்டினார் மூர்த்தி.
“எல்லார்கிட்டயும் உண்மையா இருக்கச் சொல்லுங்க!” மென்னகையுடன் உரைத்தாள்.
அவள் உள்நோக்கம் உணர்ந்த மூர்த்தி சம்மதம் என்று தலையசைத்தார்.
மறுநாள் காலை பெரும் நம்பிக்கையுடன் தன்னைச் சந்திக்க வந்த சரவணனிடம் பல நிபந்தனைகள் இட்டு அவன் பொறுமையைச் சோதித்தார் மூர்த்தி.
“ஐயோ சார்! நீங்க வெளிநாட்டு வாய்ப்பு உறுதி செய்துகொடுங்க. அடுத்த நிமிஷம் அவளே விவாகரத்தை ரத்து செய்துடுவா!” அவன் புலம்ப,
“அப்போ காசு பணம், பதவி அந்தஸ்து வைத்துதான் உன் அன்பை அவள் எடை போடுறான்னு சொல்றீயா!” எரிச்சல் கொண்டார் மூர்த்தி.
“அப்படியில்ல சார்! அவள் எதிர்பார்க்கும் சுதந்திர வாழ்க்கை கிடைக்கப் போகுதுன்னு தெரிஞ்சா சந்தோஷப்படுவான்னு சொல்றேன்!” என்றான்.
“தனிக்குடித்தனம் போகுறதுக்கும் தள்ளி நின்று உறவாடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு சரவணன். உங்க மனைவியின் எதிர்பார்ப்புகளை நீங்க சரியா புரிஞ்சு வெச்சிருக்கீங்களான்னு சிந்திச்சு பாருங்க!” அழுத்திக் கூறினார் மூர்த்தி.
பணி நிமித்தமாகப் பேசாமல் தன் தனிப்பட்ட விஷயங்களில் வரம்பு மீறி மூக்கை நுழைக்கிறாரே என்று தோன்றியது அவனுக்கு. அவன் உடல் மொழியிலேயே அதை உணர்ந்தார் மூர்த்தி.
“பிரச்சனையைக் கண்டு பயந்து ஓடாமல் நிமிர்ந்து எதிர்க்கணும்னு சொல்றேன். குடும்பத்தினரிடம் நேர்மை கடைப்பிடித்தால் தானே பணியிலும் அதைக் கடைப்பிடிப்பீங்க!” நயமாகக் கேட்டார்.
சிந்தனையில் சஞ்சரித்தவனாக அவன் வெளியேற,
“சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம், சரவணன்!” உரக்கக் கூறி நிதர்சனத்தை வலியுறுத்தினார்.