• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

22. பூமாலையே எந்தன் தோள் சேர வாராயோ

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
கனகவல்லி திருமணம் செய்து கொள்ள சொன்னதை நேரடியாக மறுத்து பேச முடியாததால், அதை வேறு விதமாக புரிய வைக்க முயன்றவளாய் சத்யபாரதி, அண்ணி வசந்தியிடம் பேசி அனிஷாவின் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்வதாக சொல்ல, வீட்டிற்கு மூத்தவளான நான் சொல்லியே கேட்காத வசந்தி, நீ சின்னபெண் உன் பேச்சே நிச்சயம் ஏற்கமாட்டாள்" ,என்று கனகவல்லி அழுத்தமாக கூற செய்வதறியாது கலங்கி நின்றாள் சத்யபாரதி.

அவளது முகத்தை கவனித்திருந்த கனகவல்லி, கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பவளாய் தொடர்ந்து ,"உன்னோட கல்யாணம் நடந்தால் மட்டும் தான் என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகும். என் கணவர் உயிருக்கு கெடு கொடுத்து இருக்கிறார் டாக்டர். அதனால்தான் நானே உன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்தேன். அவருக்கு ஏதும் ஆகிவிட்டால் அவரோட கடைசி ஆசை நிறைவேற்ற முடியாத பாவியா நான் ஆயிடுவேன். அப்புறம் நான் வாழ்ந்து என்ன பிரயோசனம் ?? கண்களில் கண்ணீரை வரவழைத்து கனகவல்லி பேச.. சத்யபாரதி வேரோடிப் போனவளாய் சிலகணங்கள் நின்றுவிட்டு, ஒருவாறு நிகழ்வுக்கு திரும்பி,

" உடனே திருமணம் என்றால் எப்படி முடியும் ஆன்ட்டி?" என்று தன் சம்மதத்தை சொல்லாமல் சொல்ல. .(மாப்பிள்ளைக்கு எங்கே போவது என்பதைக்கூட அவளால் வாய்விட்டு கேட்க முடியவில்லை)"அந்த கவலை எல்லாம் உனக்கு வேணாம் கண்ணு, மாப்பிள்ளை கைவசம் இருக்கிறான். நல்ல பையன். நீ சரின்னு சொல்லிட்டா அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை நடத்திரலாம். கல்யாணத்துக்கு தேவையானது எல்லாம் வாங்க வேண்டியது என் பொறுப்பு" என்று மடமடவென்று கனகவல்லி சொல்ல மனதில் ஒருவித கலக்கமும் பயமுமாய் தலையசைத்தாள் சத்யபாரதி.

பளிச்சென்று முகம் மலர," என் கண்ணு, என்று அவள் கன்னத்தை தொட்டு முத்தமிட்டவள், "இந்த விசயத்தை நீ யார்கிட்டேயும் சொல்லிக்க வேணாம் சத்யா. அது என்ன இருந்தாலும் நீ கல்யாணப் பொண்ணு இல்லையா? நீயே சொல்றது அவ்வளவு சரியா இருக்காது.. எல்லாருக்கும் நானே சொல்லிக்கிறேன்… ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமே… நான் வீட்டுக்கு போய்விட்டு உனக்கு போன் பண்ணுறேன். மாப்பிள்ளை போட்டோவும் அனுப்பி வைக்கிறேன். நீ யார்கிட்டேயும் மூச்சு விடாதே". என்றவள், சட்டென்று யாருக்கோ போன் செய்து பேசினாள்.

கொலைக்களத்திற்கு செல்லும் கைதியின் நிலையில், இருந்த சத்யபாரதி, அவளது பேச்சு எதையும் கவனிக்கவில்லை. மனதில் பாரம் இருக்கும்போது அக்கம் பக்கம் கருத்தில் படுமா என்ன?.

இரண்டு முறை உரக்க அழைத்தபிறகே நிகழ்வுக்கு திரும்பிய சத்யபாரதியிடம், அத்தனை பற்களையும் காட்டி, "என்ன அதுக்குள்ள கனவா? என்று கேலியாக இளித்துவிட்டு, "சரி சரி நான் போனதுக்கு அப்புறமா காணு. இப்ப நான் சொல்றதை கவனமாக கேட்டுக்கோ. வர்ற வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்த நாளாம். அன்னிக்கே கல்யாணத்தை வடபழனி கோயில்ல வச்சுக்கலாம்னு ஐயர் சொல்லிட்டாரு. உனக்கும் மாப்பிள்ளைக்கும் தேவையானது எல்லாம் நாளைக்கே நான் வாங்கிடுறேன். நீ வெள்ளிக்கிழமை கார்த்தால சரியா 7மணிக்கு வந்துரு. எல்லாரையும் அங்கேயே வரச் சொல்லிடுறேன். வியாழக்கிழமை அதென்ன பூட்டி பாரம்ல அங்கபோய் முகத்தை எல்லாம் அலங்காரம் பண்ணிக்கோ. சரி நான் கிளம்பறேன். நாளைக்கு போன் பண்ணிட்டு வர்றேன். சரி சரி நான் வந்து ரொம்ப நேரமாயிடுச்சு ....அங்கே அவருக்கு எப்படி இருக்கோ என்னவோ?? என்றபடி கிளம்பிச் சென்றாள் கனகவல்லி.

புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. சத்யபாரதி கால்கள் தள்ளாட ஒரு சோபாவில் சரிந்து விழுந்தாள். கல்யாணம் என்பது இத்தனை எளிது என்றால் எல்லாரும் ஏன் அவதிப்படுகிறார்கள்? இன்னும் நாலே நாளில் அவளுக்கு திருமணம். நினைக்கும்போதே உடல் அதிர்ந்தது. கண்ணீர் வழிய அப்படியே எவ்வளவு நேரம் கிடந்தாளோ... கதவைத் திறந்து கொண்டு ரூபா உள்ளே வரும் அரவம் கேட்டு அவசரமாக கண்களை துடைத்தபடி முகம் கழுவச் சென்றாள்.

வாங்கி வந்த சமான் பளுவை கொணர்ந்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தபோது பழரசம் அருந்திய டம்ளரை கவனித்தாள் ரூபா. யாரேனும் வந்திருக்ககூடுமோ? சத்யா உணவுக்கு பிறகு இடையில் இப்படி குடிப்பதில்லை. அப்படியே குடித்தாலும் இப்படி விட்டுப்போகமாட்டாள் யோசித்தவாறே முகம் கைகால் கழுவிக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தாள். சில கணங்களில் சத்யபாரதி வந்தபோது அவள் முகத்தில் ஒன்றையும் கண்டுகொள்ள இயலாத போதும் கண்களில் லேசாக சிவப்பு அவள் அழுதிருப்பதை உணர்த்தியது.

"உங்களுக்கு பிடிக்குமேன்னு வெங்காய பக்கோடா வாங்கி வந்தேன். ஒரு பத்து நிமிஷம் இருங்க கொஞ்சம் கேசரி பண்ணி எடுத்து வர்றேன். மதியம்கூட சரியாக சாப்பிடவில்லையே? என்றபடி எழுந்து சமையலறைக்கு சென்றாள் ரூபா.

பதிலேதும் சொல்லாமல் பால்கனிக்கு சென்று அவளது நாற்காலியில் சாய்ந்து கொண்ட சத்யபாரதியின் மனது உலைக்களமாக கொதித்தது. நாலு நாளில் அவளுக்கு திருமணம் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. ஒருவனை நினைத்துவிட்ட பிறகு மற்றவனோடு எப்படி வாழமுடியும்? கனகவல்லி சொன்னாள் என்று அவளும்தான் எப்படி ஒப்புக்கொண்டாள்? இல்லை அது அவளால் ஒருக்காலும் முடியாது.

ஆனால் கனகவல்லி நாளை துணிமணிகளை வாங்கிக்கொண்டு வந்து நின்றுவிட்டால்?? கூடவே எல்லாருக்கும் தகவல் சொல்லி விட்டால் அதை மீறமுடியாது. அப்புறம் திருமணம் உறுதியாகி விடக்கூடும். சத்யபாரதி தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் கிருஷ்ணாவின் அழைப்பு வர ஒருகணம் திடுக்கிட்டு போனாள். அப்போது இருந்த மனநிலையில் அவனோடு இயல்பாக பேச முடியும் என்று தோனறவில்லை. அதனால் ரூபாவை அழைத்து பேசச் சொன்னாள்.

"ஹலோ கிருஷ்ணா சார் நான் ரூபா பேசுகிறேன். சத்யா தூங்குறா"

"இப்பவா? மணி 5ஆகிடுச்சே?"

"ஆமா சார் லேட்டாதான் படுத்தாள் . எழுப்பவா?"

"வேண்டாம் வேண்டாம் நல்லா இருக்ல்ல? விசாரிக்கத்தான் போன் பண்ணினேன். இங்கே ஒரே டென்ஷன். "

"அட ஆமாம் சார். நேற்று கேட்காமல் விட்டுவிட்டேன். மாமாவுக்கு இப்ப எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொன்னாங்க??"

"கொஞ்சம் கிரிட்டிக்கல் தான் ரூபா. இன்னும் டாக்டர் கொடுத்த கெடு முடியலை. இப்ப வரைக்கும் முன்னேற்றமாக எதுவும் சொல்லவில்லை. அதனால் தான் பாரதியை பார்க்ககூட வரமுடியலை. கவனிச்சுக்கோ ரூபா. நாளைக்கு எப்படியும் வந்து பார்க்கிறேன்னு சொல்லு."

"நீங்க சொல்லனுமா சார்?? நான் பார்த்துக்கிறேன். நிச்சயம் சொல்றேன் சார்." என்று பேச்சை முடித்து போனை சத்யபாரதியிடம் கொடுத்து விபரம் சொல்லிவிட்டு ரூபா சென்றுவிட, கலங்கிய விழிகளை அவசரமாக துடைத்துக் கொண்டவளின் முகத்தில் ஒருவித உறுதி தோன்றியது.

சிற்றுண்டி கொணர்ந்த ரூபாவிடம் அவள் முடிவை தெரிவித்து யோசனையும் கேட்கவும் அவள் ஒருகணம் பேச்சற்று போனாள்.

சத்யபாரதியின் முடிவு இதுதான்." நான் ஊரைவிட்டு போக வேண்டும். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் உதவ முடியுமா? அப்படி போவதற்கு பாதுகாப்பான இடமிருந்தால் சொல்" என்றதும் ரூபா அதிர்ந்து போனாலும் உடனேயே சுதாரித்துக்கொண்டு அவளோடு தானும் வருவதாக தெரிவித்து அதற்கு சம்மதித்தால் உதவுவதாக நிபந்தனை விதித்தபோது சத்யபாரதிக்கு அழுகைதான் வந்தது. சில மாதங்களுக்கு முன் யாரென்று தெரியாத ஒருத்தி அவள் மீதுவைத்த பாசத்தை எண்ணி நெகிழ்ந்தவள், சிலகணங்கள் யோசித்துவிட்டு சரி என்று சம்மதம் தெரிவித்தாள்.

உடனடியாக டில்லியில் இருந்த அவள் தோழியை கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினாள் ரூபா. அவர்கள் தங்குவதற்கும் வேலைக்கும் ஏற்பாடு செய்வதாக அந்த தோழி உறுதி கொடுக்கவும் மளமளவென இரண்டு பெண்களும் அன்று இரவே இருவருக்கும் தேவையானவற்றை எல்லாம் சேகரித்து வைத்துக் கொண்டனர்.

மறுநாள் அதிகாலையில் இருவருமாக கிளம்பி ரூபா வளர்ந்த அன்பு இல்லத்திற்கு சென்றனர். இரவு செல்லும் ரயிலில் தான் பயணச்சீட்டு கிடைத்திருந்தது என்றாலும் கிருஷ்ணா வருமுன்பாக கிளம்பி விடவேண்டும் என்று காரணம் காட்டி ரூபாவை கிளப்பிக் கொண்டு வந்துவிட்டாள். கூடவே தன் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாள். உண்மையில் அந்த வீட்டில் இருக்க சத்யபாரதிக்கு சற்று அச்சமாக இருந்தது. எந்த நேரத்திலும் கனகவல்லி அங்கே வந்து நிற்கலாம். உள்ளூர சற்று அசுசூசையாகத்தான் இருந்தது. வாய் இருக்கிறது தானே உறுதியாக பேசி அனுப்புவதை விட்டுவிட்டு இப்படி கோழையாய் ஓடுகிறோமே என்று. ஆனால் கனகவல்லி போன்றவர்கள் எப்போது எப்படி பேசுவது என்ற வரைமுறை இல்லாதவர்கள். அவர்களிடம் பேசி ஜெயிக்க இயலாது. அது மட்டுமின்றி அந்த யாரோ ஒருவனை அவளால் திருமணம் செய்து கொள்வது என்பது அறவே முடியாத ஒன்று. ஆகவே இந்த முடிவுதான் சரி தனக்குள்ளாக வாதிட்டு சமாதானம் செய்து கொண்டாள் சத்யபாரதி.

சத்யபாரதி கேட்டுக் கொண்டதால், உதவ முன் வந்திருந்த போதிலும் இரவெல்லாம் வெகுவாக யோசித்தாள் ரூபா. இந்த பயணம் சத்யாவிற்கு நல்லதா கெடுதலா என்ற குழப்பம் ஒரு புறமும் தன்னை பணிக்கு அமர்த்திய வசந்தியிடம் சொல்லாமல் கிளம்பும் உறுத்தல் ஒருபுறமும் மனதுக்குள் அலைக்கழித்து. கூடவே சத்யபாரதியின் இந்த முடிவு எதனால் என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு போகும் அளவிற்கு அப்படி என்ன நேர்ந்திருக்கும்?? ஒருவேளை இது அவசரத்தில் எடுத்த முடிவாக இருந்து பின்னாளில் வருந்தும்படி ஆகிவிடக்கூடாது. இரண்டு இளம் பெண்கள் இப்படி திடுமென காணாமல் போனால் என்னவென்று சொல்லி தேடுவார்கள்? அவளை யாரும் தேடப்போவதில்லை. அந்த கொடுப்பினை அவளுக்கு இல்லை. ஆனால் சத்யபாரதி அப்படி இல்லை. பெற்றோர்கள் இல்லாதபோதும் அன்பாக அரவணைக்க உறவுகள் இருக்கிறார்கள். அவளை போலவே இன்னொரு பெண்ணும் அனாதை ஆவதற்கு அவளே உடந்தையாவதா? என்ற சஞ்சலம் நேரத்துக்கு நேரம் அதிகரித்தது.

உறவினர்களிடம் இந்த விஷயத்தை என்னவென்று விளக்கி சொல்லி வரவழைப்பது? சத்யபாரதியிடம் அக்கறை கொண்டவன் கிருஷ்ணா தான். அவனிடம் தான் சத்யபாரதிக்கு ஏதோ மனத்தாங்கல் உண்டாகியிருக்க வேண்டும். அவனிடம் பேசுவதை தவிர்ப்பதும், அவன் வருமுன் வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என்றதும் அதனால்தானோ? ரூபா தனக்குள் ஓடிய சிந்தனை எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தாள். அதன்படி, இரவு உணவை முடித்ததும், சத்யபாரதியை அழைத்துக்கொண்டு வாடகை காரில் ரயில் நிலையத்திற்கு பயணமானாள்.

சென்ட்ரல் ரயில் நிலையம்...

அந்த இரவு நேரத்திலும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இருவரும் வெயிட்டிங் ரூமிற்கு சென்றனர். ரூபா அவளை அங்கே அமர வைத்துவிட்டு ஏதாவது நொறுக்கு தீணி,தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாகச் சொல்லி சென்றாள். ரயில் வர இன்னும் ஒருமணி நேரம் இருந்தது. ஆசுவாசமாக சாய்ந்து அமர்ந்த சத்யபாரதிக்கு, கிருஷ்ணாவை இனி பார்க்கமுடியாது என்பதை எண்ணும்போதே மனதில் வலிக்கத்தான் செய்தது. ஆனால் அடுத்தவளை நினைப்பவனை பார்ப்பதும் நினைப்பதும் தவறு என்று உருப்போட்டு மனதை அடக்க முயன்றாள். இடமாற்றம் எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என்று அவள் மனதை சமாதானம் செய்தபடி இருக்க,வெயிட்டிங் ரூம் வாசலில் அரவம் கேட்டு திரும்பியவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது. அங்கே இறுகிய முகத்துடன் கிருஷ்ணா நின்றிருந்தான்.

"இவன் எப்படி இங்கே வந்தான் என்று அதிர்ச்சியாய் இருக்கிறதா? என்றதும் திகைத்து நிமிர்ந்தாள். அதைத்தான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

"அ.. அது நீங்க வந்து.. என்று சத்யபாரதி தடுமாற, "அதுதான் வந்துவிட்டேனே. சரி வா போகலாம்" என்றவன் யாருக்கோ சைகை காட்ட கூலித்தொழிலாளி ஒருவன் வேகமாய் வந்து அவளது உடமைகளை எடுத்துச் செல்லவதை கண்டு பதற்றத்துடன்,”ஐயோ என்ன இது கண்ணன்?? இன்னும் கொஞ்சம் நேரத்தில் ரயில் வந்துவிடும். நான். ..’’என்று அவள் மேலே பேசுமுன், கிருஷ்ணா குறுக்கிட்டு

"என்னோடு வா பாரதி. நான் உன்னுடன் பேசவேண்டும். அதன் பிறகு நீ விரும்பினால் நானே உன்னை அனுப்பிவைக்கிறேன்" என்று அழுத்தமான குரலில் உரைக்க..,மறுக்க முடியாமல் அவனோடு சத்யபாரதி நடக்க, ரூபாவும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

காரின் முன்பக்கம் அவளை ஏறச்சொல்லி, ஓட்டுனர் இருக்கையில் கிருஷ்ணா அமர, பின்புறம் ரூபா ஏறிக்கொள்ள கார் கிளம்பியது. சற்று தூரம் செல்லும் வரை காரில் அமைதி நிலவிற்று, திடுமென நினைவு வந்தாற்போல, "இப்போது நாம் எங்கே போகிறோம் கண்ணன்? என்றவளின் குரலில் பதற்றம் தெரிய," உன் வீட்டிற்கு தான் பாரதி ஏன்? "என்றதும் "ஐயோ அங்கே வே.. வேண்டாம் வேண்டாம் கண்ணன்" என்று ஜீரம் வந்தவள் போல மிரளவும் அவள் தோளில் மெல்ல தட்டி, "ரிலாக்ஸ் பாரதி, சரி அங்கே போகவில்லை என் வீட்டிற்கு போகலாமல்லவா??" என்றவனின் குரலில் கேலி இருந்தது புரிந்தது.

"அது...அங்கே உங்கள் அ.. அத்தை இருப்பார்களே?"என்று தடுமாறினாள்.

"என் வீடு என்றேனே பாரதி. மாமா வேறு வீட்டில் இருக்கிறார். ஓகே? எனக்கும் யார் இடையூறும் இல்லாமல் தான் உன்னிடம் பேச வேண்டும்." என்றதும்

"அப்போ என்னை இங்கே எங்காவது இறக்கிவிடுங்கள் அண்ணா" என்றாள் ரூபா.

‘’சத்யாவுடன் இருந்து நீயும் மக்காகிவிட்டாயா ரூபா? என்று கடிந்துவிட்டு, பேச வேண்டும் என்றால் இப்போதே பேசப்போவதாக அர்த்தமா என்ன?? தங்கை என்று வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை ரூபா.. உளமாற ஏற்று சொன்னதுதான்.. அப்படியிருக்க, இந்த நேரத்தில் உன்னை தனியே போக விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா?? என்றான்.

‘’ஐயோ, ஸாரி அண்ணா, நான் சும்மா விளையாட்டாதான் சொன்னேன்.. என்றபிறகு காரில்.. மேற்கொண்டு பேச்சு எழவில்லை..

சத்யபாரதிக்கு,அவன் தன்னை மக்கு என்றது சற்று மனத்தாங்கல் உண்டானபோதும், கோபம் வரவில்லை. அவன் அவள் ஊரை விட்டு போக முடிவு செய்ததைத்தான் குறிப்பிடுகிறான் என்று புரிந்தது. ஆனால் ரூபா அவனை அண்ணா என்று அழைத்துப் பேசியது கருத்தில் பட, இது என்ன புது கதை என்று எண்ணினாலும் அவர்கள் இருவரும் இலகுவாக பேசிக் கொள்வதை கண்டு உள்ளூர மகிழ்ச்சி உண்டாயிற்று. கிருஷ்ணா அவளிடம் என்ன பேசப்போகிறான் என்ற எதிர்பார்ப்பில் மனம் லேசாக படபடக்க வெளியே வேடிக்கை பார்த்தவாறு இருந்தாள் சத்யபாரதி.
 

Attachments

  • WhatsApp Image 2024-09-09 at 10.31.41 PM.jpeg
    WhatsApp Image 2024-09-09 at 10.31.41 PM.jpeg
    49 KB · Views: 17