• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

24. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
ரிஷிகேசவன், மற்ற குழந்தைகள் போல, தாய் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தை இல்லை! காரணம் அவன் பிறந்த பின், மீண்டும் சாருபாலா வேலைக்கு செல்லுமுன், பிள்ளையை பார்த்துக்கொள்ள என்று ஒரு தாதியை வேலைக்கு அமர்த்திக் கொண்டாள்! அவள் இல்லாத சமயத்தில் அந்த தாதியிடம் இருக்க பழகிவிட்டான்! அவனுக்கு பசிக்கும் போது உணவு கொடுக்க வேண்டும், அவ்வளவுதான் அதை இன்னார்தான் கொடுக்கணும் என்று அடம் பிடிக்காத பிள்ளை! அதனால் தான், வேலைக்கு இருந்த தாதியை நிறுத்திவிட்டு,குழந்தையை அனிதாவிடம் கொடுத்த போது அவளிடம் சமத்தாக இருந்து கொண்டான்!

தனுஷ்கோடி மகளை அழைத்துப் போக வந்திருப்பதை அறிந்த விசாலத்திற்கு,"இந்த மனுஷன் இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு வந்திருக்கக்கூடாதா?" என்று உள்ளூர சுறுசுறுவென கடுப்பேறியது! அனிதாவை அனுப்பாமல் இருக்க ரிஷியை காரணம் காட்டினார் விசாலாட்சி!

தனுஷ்கோடிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை! ஆனால் மகளை அடுத்தவர் வீட்டில் இத்தனை காலம் இருக்க விட்டதே தவறு என்று அவரது மனைவி சொல்லிக் கொண்டே இருந்தார்!
கிராமத்தில் வளர்ந்த அவருக்கும்கூட இந்த விஷயம் ஊருக்குள் பரவினால் என்னாகும் என்று அவரும் அறிந்து தான் இருந்தார்! ஆகவே அவரும் போன் பேசும் போதெல்லாம் மகளை ஊருக்கு கிளம்பி வரும்படி சொல்லத்தான் செய்தார்! அப்போது எல்லாம் அனிதா, ஏதேனும் காரணம் சொல்லி தட்டிக் கழித்தாள்! சில நேரங்களில் கண்ணீருடன், "நான் இங்கே நிம்மதியாக இருக்கிறது உங்களுக்கு பிடிக்கவில்லையா? நான் இங்கேயே நிரந்தரமாக தங்கப் போகிறேனா என்ன? வந்து மூனு மாசம் ஆகிட்டு, இன்னும் ஒரு மூனு மாதங்கள் இருந்துட்டு வந்துடுறேன் அப்பா!அம்மாக்கிட்டே சொன்னால் கேட்கமாட்டாங்க! நான் சொன்ன காலம் முடியவும் நீங்க கூப்பிடாமலே கிளம்பி வந்துவிடுகிறேன்!" என்ற பிறகு அவரும் விட்டுவிட்டார்!

எந்த தாயும் தன் பெண்ணை இப்படி விட்டு வைக்க மாட்டாள்! வத்சலாவும் அந்த ரகம்தான்,"இந்த ஊருக்குள் விசயம் தெரிஞ்சா, வாய்கூசாமல் இட்டுக்கட்டிப் பேசுவாகளே! இந்த புள்ளைக்கு அது புரிய மாட்டேங்குது! "என்று எப்போதும் போல புலம்பிக் கொண்டே இருந்தார்!

சரியாக மகள் சொன்ன காலக்கெடு முடியவும் கணவரை அனுப்பி வைத்துவிட்டார்! அது மட்டும் காரணம் இல்லை, முன்தினம் தான் சாருபாலா அவரை தொடர்பு கொண்டு, "ஏன் அம்மா,உங்க பெண்ணுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கும் எண்ணம் இல்லையா? அவள் இங்கே வந்த பிறகு நன்றாக தேறியிருக்கிறாள்! இங்கே எல்லாம் இழுத்து போட்டு அவள் தான் செய்கிறாள்! அவளுக்கும் கணவன், குழந்தை என்று வாழ ஆசை இருக்கத்தானே செய்யும் ? அவளே அதை வாய்விட்டு சொல்வாளா என்ன?"என்று கேட்டு விட்டாள்!

சாருவின் பேச்சில் எந்த நையாண்டியோ குத்தலோ இருக்கவில்லை! மாறாக அனிதாவின் மீதான உண்மையான அக்கறை தான் தெரிந்தது! அத்தோடு வத்சலாவுக்கு இன்னொரு சிறு சந்தேகமும் எழுந்தது! இத்தனை நாட்கள் இல்லாமல்,திடீரென ஏன் சாரு அவரை தொடர்பு கொண்டாள்? என்பதுதான் அது! அப்படி என்றால் அவரது பெண்ணால் தன் வாழ்வு பாதிக்கப்பட்டுவிடும் என்று நினைத்து, சூசகமாக சொல்லியிருக்கிறாள்! சாருவின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், அவரது மகளை கேவலமாக திட்டியிருப்பார்கள்!இவளோ அவள் நன்றாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அல்வா சொல்லியிருக்கிறாள்! இனியும் தாமதிக்கிறது சரியில்லை! அதன் விளைவு தான் தனுஷ்கோடி வந்து நிற்கிறார்! ஆனால் அவரிடம் சாரு பேசியதை வத்சலா,தெரிவிக்க
வில்லை!

"அக்கா, அனிதாவை நான் கூட்டிட்டு போகலைன்னா, என்னை வீட்டுல சேர்க்க மாட்டாள்! பத்து நாட்கள் அவள் வந்து எங்கூட இருக்கட்டும் அக்கா!" என்று தனுஷ்கோடி விண்ணப்பம் வைக்கவும்! விசாலாட்சிக்கு வேறு மார்க்கம் இல்லாமல் போயிற்று!

அனிதா அங்கே சென்று, திரும்பி வரும்போது, நிரந்தரமாக இங்கே தங்கி விடுவாள் என்று அப்போது சாருபாலாவும் சரி, அவளைப் பெற்றவர்களும் அறியவில்லை!

🩷🩵🩷

அனிதா கிளம்பி சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது! இந்த ஒரு மாதத்தில் ஆனந்தன் அவ்வப்போது வந்து போனான்! இரண்டு நாட்கள் கூட முழுதாக தங்குவது கிடையாது! தாடியும் மீசையுமாக, சற்று இளைத்தும் போயிருந்தான்! வேலை வேலை என்று சக்கரம் கட்டிக் கொண்டு பறந்தான்!

சாருபாலா கூட,"சரியா சாப்பிடாமல், தூங்காமல் இப்படி உழைத்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்! ஒரு நாலு நாள் வீட்டில் தங்கியிருந்து ஓய்வு எடுத்துவிட்டு அப்புறமாக வேலையை பாருங்களேன்!" என்று எவ்வளவு சொல்லியும் அவன் கேட்பதாக காணோம்!

"இந்த வேகத்துல வேலை செய்தும் கூட,ப்ராஜக்ட்டை சொன்ன நேரத்தில முடிக்க முடியுமானு தெரியலை! அங்கேயே தங்கியிருந்து வேலை பார்க்கலாம்னு நினைக்கிறேன்! ஆனால் என்னை பார்க்கணும்னு நீயும் அம்மாவும் சொல்றதால் தான் இப்படி ஓடி வந்து பார்த்துட்டு போறேன்! நீயே சொல்லு நான் என்ன செய்யட்டும்??"

சாரு யோசித்தாள்,"ஆனந்த், எனக்கு உங்க ஹெல்த் தான் இப்ப ரொம்ப முக்கியம் அதனால,நீங்க அங்கேயே தங்கியிருந்து வேலையை முடிச்சுட்டு வாங்க,உங்களை பாரக்கணும்னா வீடியோ காலில் பார்த்துக்கிறேன்! " என்று முடித்துவிட்டாள்!

ஆனந்தன் சென்றும் பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது! தினமும் தவறாமல் வீடியோ காலில் பேசினான்! இப்போது முக சவரம் செய்து, ஓரளவுக்கு முன்பு போல மாறியிருந்தான்! அதிலேயே சாரு சற்று நிம்மதியடைந்து விட்டாள்!

வாழ்க்கை ஒன்றும் சந்தோஷமாக போகவில்லை, ஒரு எந்திர கதியில் தான் போயிக் கொண்டிருந்தது! கணவனின் அருகாமைக்கு மனம் மிகவும் ஏங்கித் தவித்தது! அதை வாய்விட்டு சொல்ல முடியாமல், அவனது வேலை தடுத்தது!

இந்நிலையில், வட நாட்டில் அந்த ரயில் விபத்து ஏற்பட்டது!

அந்த கோர விபத்தில் அதிகமான, பெட்டிகள் தடம் புரண்டதால் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்! உயிர் சேதமும் இருந்தது! அவர்களை மீட்டெடுக்கும் பணியை மத்திய அரசும் அந்த மாநில அரசும் தொடங்கிவிட்ட நிலையில், மருத்துவம் செய்வதற்கான மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் இருந்து, திறமையான ஒரு மருத்துவர்கள் குழுவை அனுப்ப மாநில அரசு முடிவு செய்தது! அந்தக் குழுவில் சாருபாலாவையும் சேர்த்திருந்தனர்!

பழைய சாருபாலாவாக இருந்திருந்தால் கணவனிடம் தகவலை சொல்லிவிட்டு, தயங்காமல் கிளம்பியிருப்பாள்! ஆனால், இப்போது அவளுக்கு கணவன் மீது உண்டாகியிருக்கும் காதலும்,குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் புரிந்து இருக்கிறது! ஆகவே ரொம்பவே யோசித்தாள் !

மருத்துவர்கள் கிளம்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது! ஆனால் தனக்கு அவகாசம் வேண்டும் என்று டீனிடம் சாருபாலா கேட்டிருந்தாள்! எவ்வளவு சீக்கிரமாக சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்லிவிட்டால், நல்லது ! அல்லது வேறு ஒரு மருத்துவரை அழைத்து போக ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும், என்றிருந்தார்!

வழக்கமாக ஆனந்தன் தான் வீடியோ கால் செய்வான்! அன்று, சாரு முந்திக் கொண்டு அவனை அழைத்தாள், உடனே அழைப்பை ஏற்றவன், "என்ன விஷயம் சாரு? என்று அவன் வேறு ஏதும் பேசாமல் நேராக விஷயத்திற்கு வந்தான்!

சாரு விஷயத்தை சொல்ல," இதுல யோசிக்க என்ன இருக்கு சாரு? நீ ஒரு மருத்துவர், சேவை செய்யவே இதை படித்திருக்கிறவள்! இப்போது அதற்கான வாய்ப்பு உன்னை தேடி வந்திருக்கிறது! நான் நாளை அங்கே வருவதாக பிளான்! ரிஷியை இரண்டு நாள் தங்கியிருந்து நான் பார்த்துக்கிறேன்! நீ எதையும் யோசிக்காமல் கிளம்பு!" என்றான்!

ஆனந்தன் அப்படி சொன்ன பிறகு அவள் சரி என்று ஒப்புதலை அளித்தாள்! மகனை பார்த்துக் கொள்ள, கணவன் வருவதாக சொன்னது கூடுதல் தெம்பாக இருந்தது! அத்தோடு அனிதா கிளம்பியதும் தாதியையும் ஏற்பாடு செய்திருந்ததால், அவள் நிம்மதியாக கிளம்ப ஆயத்தமானாள்!

🩷🩵🩷

அனிதா ஊருக்கு வந்தது முதல்,உற்சாகமின்றி வளைய வந்தாள்! எதையோ பறிகொடுத்தவள் போல காணப்பட்டாள்! அவ்வப்போது மாடிக்கு சென்று மணிக்கணக்காக போனில் பேசிக் கொண்டிருக்கிறாள்! யாரிடம் பேசுகிறாள் என்றால் அவளுடன் படித்த தோழியிடம் என்றாள்! தாய் அறியாத சூலா?

வத்சலாவிற்கு, மகள் யாரிடமும் ஏமாந்து நின்றுவிடக்கூடாதே என்று மனது அடித்துக் கொண்டது! ஒரு வயதுக்கு மேலே பிள்ளைகளிடம் அழுத்திப் பேச முடிவதில்லை! எதை கேட்டாலும், சந்தேகப்படுகிறாயா என்று சண்டைக்கு வருவார்கள்! அதற்கு பயந்து பெரும்பாலான பெற்றோர் வாயை மூடிக் கொள்கிறார்கள்!

மகளின் போக்கைப் பற்றி கணவரிடம் தெரிவித்து சீக்கிரமாக அவளுக்கு ஏற்ற நல்ல வரனைப் பார்க்கும்படி உந்தினார் வத்சலா!

அவரது முயற்சி கைகூடுமா?

 

Attachments

  • Picsart_24-05-04_15-06-13-739.jpg
    Picsart_24-05-04_15-06-13-739.jpg
    69.1 KB · Views: 13