கிருஷ்ணாவின் மனம் அறிந்த சத்யபாரதிக்கு அதை எளிதில் நம்ப முடியவில்லை. அவளே கண்ணால் பார்த்த சான்றுகள் இருக்கிறது. அதெல்லாமும் அவளாக எண்ணிக்கொண்டது தானோ? இல்லையே கனகவல்லி சொன்னதை ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக கேட்டிருக்கிறாளே?? ஆனால் இந்த அணைப்பும், ‘’ரதிம்மா’’ என்ற அழைப்பும் சற்று முன் அவனது ஆத்திரம் எல்லாமும் பறைசாற்றுவது அவனுடைய அன்பைத்தானே?? என்று நினைக்கையில் இன்னும் அவனது அணைப்பில் இருப்பது புரிய மெல்ல விலக முயன்றாள். அவனும் தடுக்கவில்லை.
அவளது கரம் பற்றி அருகில் அமரவைத்து, "ரதி, என் மீது உனக்கு அன்பு இருக்கிறது. அதே சமயம் என்னிடமிருந்து விலகவும் நினைக்கிறாய். அது ஏன்? அக்கா ஏதும் சொன்னாளா?
"அண்ணி ஒன்றும் சொல்லவில்லை"
"வேறு யார் என்ன சொன்னார்கள்? அதுவும் ஊரை விட்டு கிளம்பும் அளவிற்கு? " அவனது குரலில் லேசாக கடுமை தெரிய, சத்யபாரதி தயங்கினாள்.
" நீ சொல்லாவிட்டால் என்னால் கண்டுபிடிக்க முடியாது என்றா நினைக்கிறாய்?".
"அப்படி இல்லை" என்றவள் ஒருவாறு தன்னை திடப்படுத்திக் கொண்டு "உங்கள் அத்தை "
"ஓ, என்றவன் ஏதோ யோசித்துவிட்டு, "எனக்கு ஒரு சின்ன சந்தேகம், நீ அக்காவை விட்டு விலகி வந்ததுக்கும் அத்தை தான் காரணமா?
" ஆமா. .. என்று சட்டென்று பேச்சை நிறுத்தினாள். இவன் எப்படித்தான் அவள் மனதில் இருப்பதை யூகிக்கிறானோ?? என்று எண்ணிக் கொண்டவளுக்கு அன்றைக்கும்கூட அவள் ஒட்டுதான் கேட்டாள். ஆனால் அதுவும் அவள் வேண்டும் என்று கேட்கவில்லை. அவளது அண்ணியின் பெயர் அவர்கள் பேச்சில் வந்ததால் தான் நின்று கேட்கும்படி ஆகிவிட்டது. இப்போது அதை சொன்னால் இவன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்று தயக்கம் தோன்றியது.
"இதோ பார் ரதிம்மா, எதுவென்றாலும் என்னிடம் சொல்லலாம், இன்னும் என்னடா என்னிடம் தயக்கம்" என்று கனிவாக கேட்கவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தர்மலிங்கமும் கனகவல்லியும் பேசிக் கொண்டதை தான் கேட்க நேர்ந்ததை சொன்னாள் சத்யபாரதி.
"ம்ம்.. அவர்கள் பேசியதற்காக அக்காவை விட்டு நீ விலக நினைத்தாயா ரதி? அவர்கள் பேச்சிற்கு அக்கா எந்த வகையில் பொறுப்பாவாள் ? உன்னை அவள் தன் சொந்த சகோதரி போல சொல்லப் போனால் மகள் போல பாசத்துடன் தானே நடத்தினாள்?" உன்னை அவள் ஒருநாளும் பாரமாக எண்ணவே மாட்டாள் என்று உனக்கும் தெரியும்தானே? எனறவன், தொடர்ந்து ‘’ஆனால் ஒரு வகையில் நீ அப்படி விலகி வந்ததும் நல்லதாயிற்று, என்று முறுவலித்தான்.
குழப்பத்துடன் என்ன என்பதாய் அவனை ஏறிட்டாள் சத்யபாரதி. "ம்ம். அதை பிறகு சொல்கிறேன், என்றவன் நீ சொல்லு அத்தை இப்ப என்ன சொன்னாங்க? "
கனகவல்லி வந்து பேசியதையும் அதன் பிறகு தான் முடிவு செய்ததையும் சொன்னாள்.
"அவங்க சொன்னால் அப்படியே நம்பி விடுவாயாக்கும்? உடனே அம்மணி தியாகம் செய்யறதா நினைச்சு ஊரை விட்டு கிளம்பிவிட்டாயா? என்கிட்ட விவரம் கேட்க கூட தோனலையா? நான் கண்ணன் என்றபிறகும் உனக்கு என்ன தயக்கம்? நான் விளக்கம் தர காத்திருக்கிறேன் என்ற பின்னும் நீ ஏன் வரவில்லை ரதி?
"அதுவும் தான் எப்படி கேட்பது? நீங்களே தான் என்கிட்ட சொன்னீங்களே வருங்கால மனைவியை தேர்வு செய்து விட்டேன் என்று. முக்கியமா நீங்கள் கண்ணன் என்று தெரிஞ்சதால் தான் நான் அந்த முடிவு எடுத்ததே" என்றாள்
"ஆமாம். ஆனால் அது என் மாமா மகள் என்று சொன்னேனா? அவ்வளவு கோபமா என் மேல்?
"சொல்லவிலை தான். ஆனால் அன்றைக்கு நம் நிறுவனத்திற்கு உங்க மாமா வந்து போனார். அது எனக்கு தெரியாமல் இருக்க தொழிற்சாலைக்கு அனுப்பிட்டிங்க. அப்புறமா திடீரென்று என்னை வேற வேலை பார்த்துக்க சொல்லிட்டீங்க, "இதை என்னான்னு எடுத்துக்கிறது? அந்த நினைவில் கண்கள் கலங்கிற்று.
"நீ இவ்வளவு அதி புத்திசாலின்னு எனக்கு தெரியாமல் போயிடுச்சே??" என்றவன் எல்லாவற்றிற்கும் வேறு காரணம் இருக்கிறது ரதிம்மா"
"ம்ம்.. என்ன காரணமோ கஷ்டப்பட்டது நான்தானே? அதெல்லாம் விட நீங்க மகாபலிபுரத்தில் உங்க அத்தை பொண்ணுகூட உருக்கமா பேசிட்டு இருந்தீங்களே, அதென்னவோ சொன்னீங்களே,"ஆங்... ஞாபகம் வந்துடுச்சு,
"தட்ஸ் குட் மை கேர்ள். நீ படிப்பை முடிப்பதில் கவனம் செலுத்து. அதற்குள் நானும் அக்காவிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்கி, கல்யாணத்தை நடத்திவிட்டால் நம் பிரச்சனையும் தீர்ந்துவிடும் அத்தை வாயையும் அடைத்துவிடலாம்னு சொன்னதுக்கு என்ன காரணம் சொல்வீங்க?" என்று படபடத்தவளின் உதட்டில் ஒற்றை விரல் வைத்து அவளது பேச்சை நிறுத்தி,
"போதும் போதும்... அப்பா எவ்வளவு கோவம்... ஆனால் ஒட்டுக்கேட்பவர்கள் நல்லதை கேட்கமாட்டார்கள் என்பது இந்த விஷயத்தில் ரொம்ப சரி. அனிஷா ஒரு பையனை நம்பி ஏமாந்துவிட்டாள். அது அபார்ஷன் வரை போய்விட்டது. அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள மகாபலிபுரம் வந்திருக்கிறாள். அதற்கு முன்னால் எனக்கே ஒரு சந்தேகம் வந்து ரவியை அவள் பின்னால் அனுப்பியிருந்தேன்.
காப்பாற்றி அவளுக்கு புத்தி சொன்னேன். இப்போது அவளுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் படிப்பில் கவனம் செலுத்துவதாகச் சொன்னாள். அதே சமயம் அத்தையோட கல்யாண பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் வேண்டும். அதற்கு நானும் வசந்தி அக்காவிடம் சம்மதம் வாங்கி நம் கல்யாணத்தை, அதாவது உனக்கும் எனக்கும் நடத்திவிட்டால் மேற்கொண்டு அத்தையால் ஒன்றும் செய்ய முடியாது, அப்படியே அத்தை அவளுக்கு கல்யாணம் செய்ய நினைத்தால் ரவியை கட்டி வைத்திடலாம் என்று உள்ளூர ஓர் எண்ணம்." என்றுவிட்டு, தொடர்ந்து ஆணும் பெண்ணும் பேசினால் காதலர்கள் என்று தான் நினைக்கனுமா அண்ணன் தங்கை என்று கூட இருக்கலாம் "என்று அவள் சந்தேகித்ததற்கு ஒர் குட்டு.
சத்யபாரதிக்கு கண்ணன் தன் அன்பை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்ல நினைத்தது ஏன் என்ற குறுகுறுப்பு. அதை வாய்விட்டு கேட்க முடியாமல் நாணம் தடுத்தது. மனம் சிணுங்கியது. வழக்கம் போல கிருஷ்ணா அவள் கேளாத கேள்விக்கு பதில் சொன்னான்." பிறகு சொல்கிறேன் என்றேனே, "உனக்கு ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன் கேள். உன்னை நான் முதல் முறை பார்த்தபோதே உன்னிடம் எனக்கு ஒரு ஈர்ப்பு தான். ஆனால் அப்போது அது இன்னதென்று தெரியவில்லை. அத்தோடு அப்போது நீயும் சிறு பெண். அதன் பிறகு உன்னை காண வரமுடியாமல் அக்கா ஏதோ காரணம் சொல்லி தடுத்துவிட்டாள். நானும் அதை ஏற்று படிப்பு அதன் பின் வேலை என்று வெளிநாட்டில் இருந்து விட்டேன். உன் பெற்றோர் மறைந்த செய்தி கேட்டதும் உனக்கு ஆறுதல் சொல்ல உடனே இந்தியா வரமுடியாத சூழல். அதனால் போனில் உன்னிடம் பேசலாம் என்று அக்காவிடம் கேட்டால் நீ யாரிடமும் பேசுவதாக இல்லை என்றுவிட்டாள். அதன் பிறகு நான் அங்கே பிஸியாகிவிட்டேன். இரண்டு வருஷம் கழித்து அக்கா வீட்டிற்கு வந்தேன். அப்போது தற்செயலாக அருணவ் பிறந்தநாள் சிடியில் உன்னை பார்த்தேன். அந்த கணத்தில் நீ தான் என் துணை என்று முடிவு செய்தேன். உடனே உன்னை காண வந்தேன். ஆனால் நீ படிக்கும் மாணவி. உன்னை சலனப்படுத்த கூடாது என்று விலகி நின்று பார்த்துவிட்டு போய்விடுவேன். அங்கே தொழிலும் இருந்தது. அப்போது ராதாவின் தந்தை அறிமுகம் ஆனார். அதன் பிறகு நடந்தது உனக்கே தெரியும். நீ அக்காவை விட்டு விலகி வர நினைத்தது நல்லதாயிற்று என்றேனே அது இதுதான் உனக்கு வேலை கொடுக்க முடிந்தது. உன்னிடம் பேசி பழகும் வாய்ப்பும் கிடைத்தது. இல்லாவிட்டால் உன்னை இழந்து விட்டிருப்பேனே? நீ வேலைக்காக வந்தாய், படித்திருந்தபோதும் உனக்கு வெளி உலகம் தெரியவில்லை. கிளிப்பிள்ளையாக இருந்தாய். என் அன்பை நீ புரிந்து கொள்வதாக காணோம். என் மேல் உனக்கு பிரியம் என்று புரிந்தாலும் கண்ணன் என்று அறிந்தால் என்னை நீ ஏற்பாயோ மாட்டாயோ என்று சின்ன சஞ்சலம். அதை தெளிவுபடுத்திக்க நினைச்சுத்தான் பரிசு பொருள் அனுப்பினேன். ஆனால் உன்னிடமிருந்து பதில் வராமல் போகவும் தவிச்சுட்டேன். அப்புறம் ரவியை உன்னிடம் அனுப்பினேன். அதுவும் தோல்வி தான். சரி இதற்குமேல் தள்ளிப்போடக்கூடாதுன்னு நினைச்சேன். இடையில் அனிஷா விஷயம் வந்தது. அடுத்து மாமாவுக்கு திடீரென்று உடம்பு முடியாமல் போய்... அப்பப்பா இந்த ரெண்டு வாரமும் நான் பட்ட அவஸ்தை போதும்டா சாமி" என்று ஒரு நிம்மதி பெருமூச்சுடன் சத்யபாரதியை தோளோடு அரவணைத்துக் கொள்ள,
ஆக, அவள் யூகம் சரிதான். ரொம்பத்தான் மெனக்ககெட்டிருக்கிறான் என்று எண்ணியவளுக்கு, கண்ணன் அவளை என்றுமே மறக்கவில்லை என்பதில் மனது குளிர்ந்தது. அன்று வரை அவன் அவளை ஒதுக்கிவிட்டான் என்று உள்ளூர இருந்த வேதனை எல்லாம் அந்த கணத்தில் மாயமாகிப்போனது. எல்லாவற்றிற்கும் மேலாக ரதிம்மா என்ற அழைப்பில் அவனது அன்பின் தன்மையை உணர்ந்து அவனது தோளில் உரிமையோடு சாய்ந்து கொண்டாள் சத்யபாரதி.
அமைதியாக கழிந்த சிலகணங்களுக்கு பின், " இன்னமும், உனக்கு வேறு எதுவும் குழப்பமிருக்கிறாதா ரதி?என்று அவளது கூந்தலை வருடியபடி கேட்க,
"ம்ஹூம், ஸாரி. நான் உங்கள் அன்பை புரிஞ்சுக்காமல் ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் கண்ணன்" என்றாள் வருத்தத்துடன்.
"என்னைவிட உன்னையே நீ வருத்திக் கொண்டாயே ரதிம்மா" என்று வருந்தியவன், இனிமேல் நீ எதுவென்றாலும் மனதுக்குள் வைத்து கஷ்டபட மாட்டேன் என்று எனக்கு வாக்குறுதி கொடு ரதி" என்றான்.
"நிச்சயமாக மாட்டேன் கண்ணன். என்றதும்
"சரி சரி வா, ரூபா நமக்காக சாப்பிடாமல் காத்திருப்பாள்" என்று எழவும் அதுவரை ரூபாவை மறந்து போனாளே, இப்போது அவளிடம் என்னவென்று சொல்வது என்று எண்ணிய சத்யபாரதியின் முகம் சட்டென சிவந்தது. அதைப் பார்த்த கிருஷ்ணாவிற்கு சிரிப்பு வந்தபோதும் அவளது தயக்கத்தை போக்க "அவள் ஏற்கெனவே யூகித்து விட்டாள் என்று தான் தோன்றுகிறது. மற்றபடி நேற்று அவள் என்னை அழைத்திருக்கமாட்டாள் என்று அவளை வீட்டிற்குள் அழைத்து போனான்.
☆☆☆
மதிய உணவை முடித்துக் கொண்டு இரு பெண்களும் ஓய்வெடுக்க சென்றபிறகு கிருஷ்ணா அலுவலகம் கிளம்பி சென்றான். ஆனால் அவனுக்கு அங்கே வேலையே ஓடவில்லை. கனகவல்லி பற்றி அறிந்த பிறகு சத்யபாரதியை அவள் தனித்து சந்திக்க விட்டு விடக்கூடாது என்று தோன்றியது. என்னதான் அவள் வருங்கால மனைவியாகப் போகிறவள், ரூபா சகோதரியாகி விட்டவள் என்றபோதும் இரண்டு இளம் பெண்களை தொடர்ந்து தன் வீட்டில் தங்க வைத்து இருப்பது உசிதமாகப்படவில்லை.
சத்யபாரதிக்கு பாதுகாப்பான இடம் அது பெங்களூர் தான். அதனால் அங்கே அனுப்பிவிடலாம். ரூபாவுக்கும்கூட அத்தானிடமே ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்ய சொல்லிவிடலாம் என்று மளமளவென்று முடிவெடுத்த கிருஷ்ணா சித்தார்த்தை தொடர்பு கொண்டான்.
"ஹலோ அத்தான் எப்படி இருக்கீங்க?"
"நான் நல்லா இருக்கேன் மாப்பிள்ளை. என்ன அதிசயமா போன் பண்ணியிருக்கிறே? குரலில் ஒரே குதூகலம் தெறிக்குதே?" சித்தார்த் கேட்க
"அட நான் ரெண்டு வார்த்தை தானே கேட்டேன் அத்தான் அதுக்குள்ள எப்படி கண்டுபிடிச்சீங்க?"
"உன்னை எத்தனை வருஷமா பார்த்துட்டு வர்றேன் மாப்பிள்ளை? உன் குரல்தான் காட்டி கொடுத்திருச்சு. சரி நீ எதுக்கு இப்ப போன் பண்ணினே அதை சொல்லு."
"எல்லாம் நல்ல விஷயம் தான் அத்தான்" என்று விவரம் சொல்லிவிட்டு, "அத்தான், நான் உங்களைத் தான் நம்பியிருக்கிறேன். அவர்கள் இருவரையும் பெங்களூர் அனுப்பி வைக்கலாம் என்று எண்ணுகிறேன் என்ன சொல்றீங்க?
"சூப்பர் மாப்பிள்ளை வாழ்த்துகள். உன் ஆசை மட்டுமில்லை என்னோட ஆசையும் நீங்க இரண்டு பேரும் ஒன்னு சேரனும்கிறது தானே. நீ இதுக்கெல்லாம் என்கிட்ட பர்மிஷன் கேட்டுக்கனுமா என்ன? அவள் என்னோட தங்கை. என் வீட்டிற்கு வருகிறாள் என்றால் எனக்குதானே ரொம்ப சந்தோசம். ரெண்டு பேரையும் அனுப்பி வை. நான் பார்துக்கிறேன் மாப்பிள்ளை."
"நான் அதுக்காக சொல்லவில்லை அத்தான். அக்காகிட்ட எங்க விஷயத்தை இப்போதைக்கு சொல்ல வேண்டாம். நான் இங்கே எல்லாம் சுமூகமா முடிச்சுட்டு வந்து பேசுகிறேன்."
"ஓகே ஓகே மாப்பிள்ளை. ஒன்னும் சொல்லமாட்டேன். நான் இப்ப வேலை விஷயமாக கோவைக்கு வந்திருக்கிறேன். ராத்திரி ரயிலில் கிளம்பிடுவேன். எப்ப கிளம்பறாங்கனு தகவல் சொல்லு, நான் போய் பிக்கப் பண்ணிக்கிறேன்".
"சரி, அத்தான், என்றவன் சொல்ல மறந்துவிட்டேனே. மாமாவுக்கு மறுபடியும் உடம்பு சரியில்லாமல் போய் அட்மிட் பண்ணினோம். இப்ப அவர் நல்லா இருக்கார். இரண்டு நாள் அப்ஸர்வேஷன்ல இருக்கனும்னு டாக்டர் சொல்லியிருக்கிறார். உடனே சொல்லி உங்களை கலவரப்படுத்த வேண்டாம்னு தான் நான் சொல்லவில்லை அத்தான். தப்பா நினைச்சுக்காதீங்க"
"ஓ ! அப்படின்னா நாங்க மாமாவை வந்து பார்த்துவிட்டு அப்படியே சத்யாவையும் ரூபாவையும் அழைச்சுட்டு வந்து விடுகிறோம் மாப்பிள்ளை. ஓகே தானே?"
கிருஷ்ணாவிற்கு அது சரியாக தோன்ற, "சரி அத்தான் நல்ல யோசனை. அப்படியே செய்யுங்கள் " என்றவன் மருமகன் அருணவ்வை பற்றி விசாரித்துவிட்டு பேச்சை முடித்தபின் அலுவல் வேலையில் கவனம் செலுத்தினான்.
பெங்களூர்....
வசந்திக்கு தம்பி கோபமாக கிளம்பி சென்றதில் இருந்து அவனுடன் பேச தைரியமில்லை. அவள் அழைத்தாலும் அவன் பேசுவான் என்று சொல்வதற்கில்லை. அன்றைக்கு அவள் வரையில் தம்பியின் நலன் கருதி செய்தது சரி என்றுதான் எண்ணினாள். அவன் விருப்பபடி சத்யபாரதியை திருமணம் செய்து வைக்க அவள் கொஞ்சமும் தயாராக இல்லை.
வசந்தி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாள். நாத்தனாரும் தம்பியும் அவளது இரண்டு கண்கள் போல. அவர்கள் மேல் அவளுக்கு அதிக பாசம். இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது அவளது ஆவல். தம்பியோ அவளை எதிரியாக பார்க்கிறான். நாத்தனாருக்கு என்ன ஆயிற்று என்றே புரியவில்லை. சென்னை சென்ற ஆரம்பத்தில் நல்லவிதமாக தான் பேசிக்கொண்டு இருந்தாள். திடீரென என்ன ஆயிற்றோ பட்டும் படாமலும் பேசுகிறாள். கணவனோ அவன் தங்கை விரும்பியபடி வேலைக்கு போகட்டும் என்று அனுப்பியதோடு சரி. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமும் இருப்பதாக காணோம். அங்கே போய் அவளை பார்த்து வரக்கூட முயற்சி செய்யவில்லை. கேட்டால், அவளுக்கு ஒரு குறையும் இல்லை. நல்லாதான் இருப்பாள், நீ வீணாக மனதை வருத்திக்காதே என்று அவளுக்கு அறிவுரை சொல்கிறான். தினம் தினம் அவளுக்கு இருவரையும் நினைத்து கவலை கூடிக்கொண்டே போகிறதே தவிர குறைவாக தெரியவில்லை. இப்போது அங்கே மாமாவுக்கு வேறு திரும்பவும் உடல்நிலை சரியில்லை என்று அத்தை சொன்னது முதல் மனதே சரியில்லை. கூடவே கனகவல்லி திடீரென்று ஏன் சத்யவிற்கு வரன் பார்ப்பது பற்றி கேட்டாள் என்ற உறுத்தலும் சேர்ந்து கொள்ள உடனே போவதென்றால் மகனுக்கு இன்னும் ஒரு பரிட்சை இருக்கிறது. கணவன் நாளை காலையில் தான் வருவான். மகனை அவனிடம் ஒப்படைத்துவிட்டு அவள் மட்டுமாக முதலில் கிளம்ப முடிவு செய்து துணிமணிகளை எடுத்து வைக்கலானாள்.
***
சென்னை
கிருஷ்ணாவின் மனம் அறிந்த பின் சத்ய பாரதிக்குள் விவரிக்க இயலாத ஒருவித பரவசம். நான்கு ஆண்டுகளாக தன்னை அடக்கி விலங்கிட்டு வைத்தவளுக்கு அவை யாவும் அகன்றுவிட மிதப்பது போன்ற ஒரு புத்துணர்வு உண்டாயிற்று. ஆனால் கிருஷ்ணா மாலையில் இரு பெண்களையும் வீட்டிற்கு கிளம்பும்படி சொல்லவும் மனதில் அச்சம் உண்டாயிற்று. மறுபடியும் கனகவல்லி வந்து அவளை ஏதேனும் சொல்லி திருமணம் செய்து வைக்க முயன்றால் அவளால் என்ன சொல்லி மறுக்க இயலும்? உள்ளபடியே அதை எல்லாம் வயதில் பெரியவளிடம் என்னவென்று விளக்கமுடியும்? அப்படி சொன்னாலும்தான் அவள் ஏற்றுக் கொள்வாளா என்ன? வேறு ஏதும் தகாத வார்த்தைகளை பேசிவிட்டால் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது.
ஆகவே, "நான் அங்கே போகமாட்டேன் கிருஷ்ணா " என்றாள் சத்யபாரதி
வியப்புடன் நோக்கி "என்னாச்சு பாரதி?? உன்னை வீட்டிற்கு தானே போகச் சொல்றேன். ஏதோ பாழும் கிணற்றில் குதிக்க சொன்ன மாதிரி பயப்படுறியே??" சொல்லிவிட்டு நகைக்கவும் செய்தான்.
சத்யபாரதி முகம் வாடி நின்றாள்