மதுரையில் இருந்து சாரு திரும்பி வந்த அன்று, அவன் அனிதாவின் அறையில் இருந்து வெளி வந்ததைப் பார்த்து சாரு அவனிடம் கேள்வி கேட்பாள்,அதை பெரிதாக்கி,விஷயத்தை எளிதாக முடித்து விடலாம் என்று நினைத்தான்! ஆனால் அவள் அதுபற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை! அதுவே அவனை மிகவும் குன்ற வைத்தது எனலாம்!
ஆனந்தனின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு ஒரு காரணம் இருந்தது! அது அவன் செய்துவிட்ட காரியத்தால் உண்டான குற்றவுணர்வு அவனுள் நெருஞ்சி முள்ளாய் உறுத்தியது! அதன் விளைவாக அவனால் மனைவியை நேருக்கு நேர் பார்த்து பழக முடியவில்லை!
எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவன்,இப்போது குடிக்க ஆரம்பித்திருந்தான்! அதன் துணை இல்லாவிட்டால் இரவில் தன்னை மறந்து உறங்க முடிவதில்லை! அவனால் அந்த பொல்லாத நாளை மறக்க முடியாததும் ஒரு காரணம்!
அன்று....
சாரு மதுரை கிளம்பிய மறுநாள் காலையில், அனிதா அழைத்ததால் ஆனந்தன் வீட்டிற்கு வந்திருந்தான்! அன்றைய மாலை
ரிஷியையும் அழைத்துக் கொண்டு
இருவருமாக,வெளியே சென்றனர்!
படத்திற்கு சென்றுவிட்டு, வெளியே வந்தபோதே குழந்தை தூங்கிவிட்டான்!
உணவகத்தில் உணவை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்தவர்கள், பிள்ளையை விசாலத்திடம் ஒப்படைத்த கையோடு அவர்கள் வீட்டின் பின்னால் சற்று தூரத்தில் இருந்த கடற்கரைக்கு சென்றார்கள்!
யாருமற்ற தனிமை, குளிர்காற்று என்று தங்களை மறந்த நிலையில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்திருந்தனர்!
அப்போதுதான் அனிதா,"அத்தான் இன்னும் எத்தனை நாட்கள் இப்படி ஏங்கிக்கொண்டே வாழ்வது? அக்கா வந்ததும் நீங்கள் நம் விஷயத்தை சொல்லிவிடுங்கள்! சீக்கிரமாக ஒரு முடிவை எடுங்கள்! இப்படி திருட்டுத்தனமாக நாம் பார்த்துக் கொள்வதும், உரசிக்கொள்வதும் எனக்கு சகிக்க முடியவில்லை! உரிமைக்காரியாக அந்த வீட்டில் நான் வலம் வர வேண்டும்! நீங்க அந்த உரிமையை எப்போது எனக்கு வழங்குவீங்கனு நான் ஏங்காத நாளே இல்லை! நானும், நீங்களும் டீன் ஏஜ் பசங்க இல்லை! எல்லாமும் தெரிந்தவர்கள் தான்! அக்கா படித்தவர்கள், நீங்க சொன்னா புரிஞ்சுக்குவாங்க!"
"இதெல்லாம் எளிதான விஷயம் இல்லை என்று யார் இவளுக்கு சொல்வது! சாரு தப்பான பொண்ணா இருந்தா, இவள் சொல்வது போல செய்யலாம்! ஆனால் அவளிடம் எந்த தவறும் இல்லை! இந்த விஷயம் தெரிஞ்சா அவள் தற்கொலை செய்துப்பாளோ என்று எனக்கு கவலையா இருக்கு! காலம் கடந்த பிறகு தான் எந்த விஷயமும் புரியுது! ஆனால் அதனால யாருக்கும் லாபம் இல்லை" மனதுக்குள் பேசிக் கொண்டிருந்த ஆனந்தன், ஒரு பெருமூச்சுடன், தூரத்து தெரிந்த விளக்கை வெறித்தபடி அமர்ந்திருந்தான்!
"என்ன அத்தான்? பதில் சொல்லாமல் இருக்கீங்க?" என்று அனிதா சொல்லும் போதே சிறு தூறலாக பொழிய தொடங்கியது! பதறிப் போய் இருவரும் எழுந்து நின்றனர்!
"அடடா, குடையை எடுக்காமல் வந்துட்டொமே? இப்ப ஒதுங்க கூட இடம் இல்லை அனு? வீடு போய் சேர்வதற்குள் முழுதாக நனைந்து விடுவோம்!"என்ற ஆனந்தன் அவசர எட்டுக்கள் வைத்து வீடு நோக்கி நடக்க தொடங்கினான்! அவனுடன் நடந்தவாறே..
"அத்தான்! என்ன அவசரம்? ஈரச் சேலை வேறு தடுக்கிறது,என்னால் வேகமாக நடக்கவும் முடியவில்லை!
என்று சிணுங்கினாள்!
"அனிதா, அதுக்காக இங்கேயே நிற்க சொல்கிறாயா? அங்கே பாரு கரண்ட் வேற போயிடுச்சு, அங்கங்கே இருந்த வெளிச்சமும் போயிடுச்சு, இந்த மாதிரி இருட்டு பாதுகாப்பு இல்லை, அதனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு,
என் கையைப் பிடிச்சிட்டு நடந்து வா! " என்றதும், அவள் அதற்கு மேல் பேசவில்லை,
அவரவர் அறைக்கு சென்று உடையை மாற்றிவிட்டு, படுத்துவிட்ட பின்னர், கைப்பேசியில் ஆனந்தனை அழைத்தாள் அனிதா!
"என்ன அனிதா! தூக்கம் வரலையா?"
"நான் சொன்னதுக்கு நீங்க பதிலே சொல்லவில்லையே அத்தான்?
"நீ சொல்றது அவ்வளவு சுலபமான விஷயமில்லை அனிதா! புரிஞ்சுக்கோ! உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா? இன்னிக்கு கூட உனக்காகத் தானே வேலையை போட்டுவிட்டு ஓடி வந்திருக்கிறேன்!"
"நம்பிக்கை இருக்கு தான் அத்தான்! ஆனால் என் வீட்டுல என்னை ஊருக்கு வரச் சொல்லிட்டே இருக்காங்க! அப்பா எப்போ வந்து நிற்பாரோ என்று எனக்கு கவலையா இருக்கு! ஒருவேளை அவர் வந்து என்னை கூட்டிட்டுப் போயிட்டார்னா, என்ன செய்வது அத்தான்? என் அம்மா ஒருநாளும், சாரு அக்கா இருக்கையில் என்னை உங்களுக்கு கட்டித்தர சம்மதிக்க மாட்டாங்க! " என்றவள் உடைந்து அழ ஆரம்பித்தாள்!
ஆனந்தனுக்கு அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை! அவள் அழுவதையும் தாங்க முடியவில்லை, அதனால் அவளது அறைக்கு விரைந்தான்!
தானியங்கி கதவு சாத்திக்கொள்ள,
அவனைக் கண்டதும்,தாவி அணைத்துக்கொண்டு, மேலும் அழைகையில் கரைந்தாள்! ஆறுதலாக தழுவிய கைகள் மெதுவாக அத்துமீற, அழுகையும் மெல்ல விசும்பலாக மாற... அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை!
மறுநாள் காலையில் வந்து நின்ற மனைவியை கண்டவனுக்கு மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சி!
அன்று தொடங்கியது ஆனந்தனின் கண்ணாமூச்சி ஆட்டம்! ஒரு புறம் மனைவிக்கு செய்துவிட்ட துரோகம் அவனை விரட்டியது! அந்த சமயத்தில் அன்பாக நெருங்கி வர முயன்றாள் காதல் மணம் புரிந்த மனைவி, மறுபுறம்!"
சாருபாலா அவன் குடிப்பதை
அறிந்துவிடக்கூடாது என்ற பயத்தில் தான், அவன் பெங்களூர் போவதாக சொல்லிவிட்டு, வீட்டிற்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கிக் கொள்கிறான்! இடையில் அவசியம் ஏற்படும் போது பெங்களூருக்கும் போய் வருகிறான்!
🩵🩷🩵
அனிதா பயந்தது போலவே தனுஷ்கோடி வந்து அழைத்துப் போய்விட்டார்! பத்து நாட்களில் திரும்ப அனுப்புவதாக சொன்னவர்,
அவளை அனுப்பவில்லை! ஊருக்கு சென்ற அனிதாவும் திரும்ப கிளம்பிவிடுவோம் என்ற நினைவில் தான் வளைய வந்து கொண்டிருந்தாள்!
ஒருவாரம் கடந்தது, இரண்டு வாரங்கள் கடந்தது! அனிதா பொறுக்க மாட்டாமல், " அம்மா, எப்ப நான் சென்னைக்கு கிளம்பறது? பத்து நாளில் திரும்ப கொண்டு போய் விடுறதா அப்பா சொன்னாரே? என்றதும் வத்சலா மகளை கோபமாக முறைத்தார்!
"எ.. என்னம்மா, ஏன் அப்படி பார்க்கிறே?"
" உனக்கு அறிவு இருக்கா இல்லையா? ஏதோ கொஞ்ச நாளைக்கு அங்கே இருக்கட்டும்னு கூப்பிட்டாக, அதான் உன் மனசு தேறட்டும்னு நினைச்சு, உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டுத்தான் உன்னை அங்கே விட்டு வச்சேன்! விசாலம்மாவிற்கு உன்னை அனுப்பவே மனசு இல்லைன்னு அப்பா சொன்னாரு! அதான் இப்படி சொல்லி கூட்டிவரச் சொன்னேன்! நீ இங்கே வந்துட்டா, அந்தம்மாவா உன்னை கூப்பிட்டா நான் விடமாட்டேன் என்று அவுகளுக்கு தெரியும்! உன்னை ஒரு நல்லவிதமாக ஒரு இடத்திலே கட்டி வைக்கணும்னு முடிவு பண்ணியிருக்கோம்! நாங்க சொல்றவனுக்கு கழுத்தை நீட்டுற வழியைப் பாரு ! அம்புட்டுதான்!" என்று ஆணித்தரமாக உரைத்துவிட்டு, தன் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்! அனிதா அப்படியே விக்கித்துப் போய் அமர்ந்துவிட்டாள்!
அன்று முதல் ஆனந்தனிடம்,
அவளை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறத்தி அழுகையில் கரைந்தாள்! சாருவிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் கேட்கச் சொன்னாள்!
சீக்கிரமாக வந்து அவளை மீட்டுக் கொள்ள சொன்னாள்! ஆனந்தனும் எப்படி இந்த சிக்கலை தீர்ப்பது என்று தெரியாமல் இருதலைக் கொள்ளி எரும்பானான்!
🩷🩵🩷
மருத்துவர்கள் குழுவுடன் சென்ற சாருவுக்கு நிற்க நேரமின்றி, ஓயாத வேலை! அப்படியும், கிடைக்கும் தருணத்தில் கணவனிடம் பேசினாள்! குழந்தையை வீடியோ காலில் அழைத்து பார்த்தாள்! ஐந்தாம் நாள் அவர்கள் குழு ஊர் திரும்ப ஆயத்தமாயிற்று!
சாருபாலா அன்று காலையில் தான் வீடு வந்து சேர்ந்திருந்தாள்! அவள் இரண்டு நாட்கள் ஓய்வு கேட்டிருந்தாள்! காலை உணவை சாப்பிட்ட பிறகு , மகனை அருகில் கிடத்திக் கொண்டு ,மெல்ல கண்ணயர்ந்தாள்!
அரைமணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டாள்! விசாலாட்சியின், அழுகுரல் ஓங்கி ஒலிக்க திடுக்கிட்டு, விழித்தாள்!
குழந்தை அயர்ந்து உறங்குவதை பார்த்தவள், தாதியை அழைத்து பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு மாமியாரிடம் விரைந்தாள்!
அங்கே அவளது கணவனும் கன்றிய முகத்துடன் நின்றிருந்தான்!
"நீங்க எப்ப வந்தீங்க ஆனந்த்? அத்தை ஏன் அழறாங்க? என்றாள்!
"அனிதாவோட அம்மா இறந்துட்டாங்க!"
"ஐயோ! என்ன சொல்றீங்க?"
"ஆமா, மகராசி தூக்குல தொங்கிட்டாளாம்! அப்படி என்ன அவசரமோ ? என்று புலம்பியபடி, கிளம்பும் ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தார் விசாலாட்சி!
சாரு அதிர்ந்து போய் நின்றாள்!