• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

26. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
தாயும் மகனும் கிளம்ப முயன்ற போது,சாரு தானும் உடன் வருவதாக தெரிவிக்க,"நீ வர வேண்டாம் சாரு,நாங்க மட்டும் போய் வர்றோம்!" என்று ஆனந்தன் சொல்ல,

எப்போதும் மருமகளை, ஜாடையாய் இடித்துரைக்கும் விசாலாட்சியும்,மகனின் பேச்சை ஆதரித்து பேசினார்!"ஆமா, அவன் சொல்றாப்ல செய், அங்கே வந்து நீ ஒன்னும் பண்ணப் போறதில்லை! ரிஷியை அங்கே சமாளிக்கிறது கஷ்டம், நாங்க போய் வர்றோம்!" என்று கிளம்பி விட்டனர்!

சாருபாலாவும் குழந்தையை அங்கே கொண்டு சென்றால் சிரமம் என்று அவர்கள், சொன்னதை உண்மை என்று நினைத்துக் கொண்டாள்!

இரண்டு நாட்கள் அவள் விடுமுறையில் இருந்ததால் மகனுடன் நேரத்தை கழித்தாள்! ஆனால் அவளுக்கு அந்தம்மாள் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை ஆனந்தன் சொல்லவில்லை! அங்கே சென்றதும், குறுஞ்செய்தியை அனுப்பியதோடு சரி! அப்புறம் அவன் அழைக்கவில்லை! அவள் கேட்டதற்கு, வீட்டில் வந்து விபரம் சொல்வதாக முடித்துவிட்டான்!

மூன்று நாட்கள் கழித்து, ஆனந்தனும், விசாலமும் வீடு திரும்பிய போது, அவர்களுடன் அனிதாவும் வந்தாள்!

சாரு ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றாள்!

🩷🩵🩷

அன்று கணவனும் மாமியாரும் அனிதாவை உடன் அழைத்து வந்ததைப் பார்த்த சாரு துணுக்குற்றாள்! அங்கே மனைவியை பறிகொடுத்துவிட்டு
வருத்தத்தில் இருக்கும் தந்தையை விட்டுவிட்டு இந்தப் பெண் இவர்களுடன் வந்திருக்கிறாளே? என்ன மாதிரியான பெண் இவள்? என்று உள்ளூர நினைத்தாள்!

பயணம் செய்து வந்தவர்களுக்கு சமைத்து போட்டுவிட்டு, ஓய்வெடுக்க அனுப்பினாள்! அன்று இரவு பணிக்கு செல்ல வேண்டிய நாள், மருத்துவமனையில் இரண்டு மணி நேரம், கழித்து தாமதமாக வருவதற்கு,அவகாசம் கேட்டுவிட்டு,மாலையில் அவர்கள் விழிப்பதற்கு காத்திருந்தாள் சாருபாலா!

முதலில் எழுந்து வந்தவன் கணவன் தான்!
மனைவியை அவன் எதிர்பார்க்கவில்லை!

"என்ன சாரு நீ, டூட்டிக்கு போகலையா? அல்லது லீவு போட்டிருக்கியா? என்றான்!

"போகணும் ஆனந்த், அனிதா அம்மா ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்தாங்கனு நீங்க சொல்லவே இல்லையே! அதான் விவரம் தெரிஞ்சுக்கிட்டு அப்புறமாக ஆஸ்பிடல் போகலாம்னு நினைச்சேன்! என்றவள்," சொல்லுங்க, ஆனந்த், என்னால அந்த செய்தியை ஜீரணிக்கவே முடியலை!
இப்ப என்னடான்னா அனிதாவையும் கூட்டிட்டு வந்திருக்கீங்க? என்ன விஷயம் ஆனந்த்? "

அப்போது அங்கே வந்து அமர்ந்த லிசாலம், "இப்ப என்ன? அங்கே என்ன நடந்துச்சுனு உனக்குத் தெரியணும் அவ்வளவு தானே? சொல்றேன் கேட்டுக்கோ,"அனிதா, இப்ப கர்ப்பமா இருக்கிறாள்! அந்த விஷயம் தெரிஞ்சதும்,வத்சலா தூக்கு மாட்டிக்கிட்டாள்! பெண்டாட்டி செத்துப்போனதை தாங்க முடியாத தனுஷ்கோடியும் நாங்க போறதுக்கு கொஞ்சம் முன்னாடி,
மாரடைப்புல செத்துப் போயிட்டான்! இவளை அங்கே தனியா எப்படி விட்டு வர முடியும்? அதான் கையோட கூட்டிட்டு வந்துட்டோம்!" என்றார்! ஏதோ மார்க்கெட்டிற்கு போனோம், காய்கறி வாங்கினோம் என்ற ரேஞ்சில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் சொன்னார்!

இடையே குறுக்கிட முயன்று தோற்றுப் போனவனாக அமர்ந்திருந்தான் ஆனந்தன்!

சாருபாலா விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள்!
அவளால் வத்சலாவின் மரணத்தையே ஜீரணிக்க முடியவில்லை, மனைவியை தொடர்ந்து, தனுஷ்கோடியின் மரணமும், அதற்கு காரணமான அனிதாவின் கர்ப்பமும் திகைப்பூண்டை மித்தாற்போல் அவளை சிலை ஆக்கிவிட்டது!

"அது தான் விபரம் தெரிஞ்சிடுச்சுல்ல? நீ போய் உன் வேலையை பாரு!" என்றார் விசாலம் நக்கலாக!

அவரது குரலில்,நிகழ்வுக்கு திரும்பிய சாரு, "அனிதாவோட இந்த நிலைமைக்கு யார் காரணம் அத்தை?" என்று தயங்கியபடி கேட்டாள்!

"ஏன் தெரிஞ்சா, அவனுக்கே கட்டி வச்சிடுவியா? " என்றார் ஏளனமாக

" உ... உங்களுக்கு அது யாருன்னு தெரியுமா ? தெரிஞ்ச ஆள் என்றால் பேசி அனிதாவை சேர்த்து வைக்கிறதுல தப்பில்லையே?"

" ஆள் யாருன்னு தெரிஞ்ச அப்புறமா நீ பின் வாங்க மாட்டியே?"என்று அந்தம்மாள் அவளை ஆழம் பார்ப்பது தெரியாமல்,

"அனிதா என் தங்கை மாதிரி அத்தை, அவளோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நானும் நினைக்கிறேன் அத்தை! அதனால நான் இதில இருந்து பின் வாங்க மாட்டேன்! யாருன்னு சொல்லுங்க,
அவளோட விஷயம் வெளியே தெரியறதுக்குள்ளே கல்யாணத்தை முடிச்சு வச்சிடலாம்!"

" அப்படின்னா சரி,அவளைப்
பெத்தவங்களோட, காரியம் முடிஞ்சதும்,அது யாருன்னு நான் சொல்றேன்! அதுவரைக்கும் இது விஷயமா,எங்க யார்க்கிட்டேயும் பேசக் கூடாது! இப்ப நீ கிளம்பு! "

மாமியாரின் பேச்சிற்கு கட்டுப்பட்டு சாரு அன்று வேலைக்கு கிளம்பிச் சென்றுவிட்டாள்!

அவள் சென்றதும்,"அம்மா, ஏன் இப்படி செஞ்சீங்க?
நான் அவகிட்டே பேசுறேன்னு சொன்னேன்ல?" என்றான் ஆனந்தன்!

"மகனே, நீ குழந்தை பிறக்கிற வரைக்கும் இதைத்தான் சொல்லுவே! அவள் எங்கே கத்தி ஆர்ப்பாட்டம் செஞ்சு,கோர்ட் கேஸ்னு இழுப்பாளோன்னு உனக்கு பயம்டா! இப்பக்கூட பாரு, அவளாக கேட்டுத்தான் நான் சொன்னேன்! நானாக சொல்லவில்லை! அந்த ஆள் யாருன்னு அவதானே கேட்டாள்? நான் இன்னும் மூனு மாசம் அவகாசம் கேட்டிருப்பேன்! ஆனால் அதற்குள் அனிதாவோட கர்ப்பம் வெளியே தெரிய ஆரம்பிச்சுடும்! அதுதான் காரியம் வரைக்கும் அவகாசம் கேட்டிருக்கிறேன்!
அனிதாவோட பெத்தவங்க காரியம் முடிஞ்சப்புறம்தான் ஏதும் மங்கலமான விசயத்தை செய்ய முடியும்! அன்னிக்கு நான் சொல்லத்தான் போறேன்!

"அம்மா!"

"நீ எதுக்குடா பதறுறே?விஷயத்தை கேட்டுட்டு உன் மனைவி பேசாமல் இருந்துட்டா, அநேகமாக அப்படி இருக்க சாத்தியமில்லை! ஒருவேளை சரின்னா இருந்துட்டு போகட்டும், அப்படி இல்லாமல் கிளம்பிட்டா,போயிட்டு போகிறாள்!

"நான் சுமூகமாக..."

"நீ எதையும் கிழிக்கப் போறதில்லைடா! அதனால தான், தானா வந்த சந்தர்ப்பத்தை நான் சாதகமாக்கிட்டேன், உன் பெண்டாட்டி இது எதுக்குமே ஒத்து வரலைன்னா, விவாகரத்து கேட்பேன் என்று சொல்லு! அவள் வேலைக்கு போறது உனக்கு பிடிக்கலை! அதனால உனக்கு இவள் வேண்டாம்னு, நீ காரணம் சொல்லு, அது மட்டுமில்லை உன் பிள்ளையை அவனோட தாய் கவனிக்காமல் தாதியிடம் விட்டுப்போறதும் உனக்கு சம்மதமில்லை!
இதே காரணத்திற்காக, விவாகரத்துக்கு அப்புறமும் என் பிள்ளையை அவகிட்டே தரமுடியாது! அப்படின்னு சேர்த்து சொல்லு! நிச்சயமாக நாம தான் ஜெயிப்போம்! "

"ஒரு வேளை வேலையை விட்டுட்டு வீட்டோட இருக்க சம்மதிக்கிறதா சாரு சொல்லிட்டா, அப்ப என்ன செய்வீங்க?"

"ஒருக்காலும் அவள் அதை மட்டும் செய்யவே மாட்டா ஆனந்தா! அவளோட லட்சியமே சேவை செய்யறதுதான்! இல்லைன்னா,மூன்று மாதப் பச்சைப் பிள்ளையை, விட்டுட்டு வேலைக்கு போவாளா? எல்லாம் யோசிச்சுதான் நான் சொல்றேன்! நீ நடுவுல புகுந்து குட்டையை குழப்பி விடாதே!" என்ற எழுந்து தோட்டத்திற்கு சென்றுவிட..

ஆணியடித்தது போல சமைந்து போனவனாக அமர்ந்திருந்தான் ஆனந்தன்! அவனுக்கு உள்ளூர சற்று வியப்பு தான், படிக்காத பெண்ணான அவனது தாய், விவரமாக பேசுகிறாரே என்று! அதே சமயம், தாயிடம் இருந்து பிள்ளையை பிரிப்பது அவனுக்கு கொஞ்சமும் உவப்பாக இல்லை! சாருவுக்கு உண்மை தெரிந்து போனால் அவனை நிச்சயமாக மன்னிக்க மாட்டாள் என்பது உறுதி, முன்பிருந்த சாரு என்றால்,பிரிந்து போவதை பெரிதாக நினைக்காமல், தூசி தட்டுவது போல கிளம்பிவிடுவாள்! ஆனால் இப்போது அவள் அவனை நேசிக்கிறவள்! ஆகவே பிரிவு அவளுக்கு துயரமான விஷயம் தான்!

ஆனந்தனுக்கு அந்த நிமிடம், தன் மீதே வெறுப்பு உண்டாயிற்று! அவனது தாயார் அனிதா கர்ப்பம் என்று சொன்னபோதும், அந்த ஆள் தெரிந்தவன் என்று சொன்ன போதும், சாரு அவனை சந்தேகமாக ஒரு பார்வை பார்க்கவில்லை! அதை நினைக்கையில் அவனுக்கு தன்னை நினைத்து அருவருப்பாக உணர்ந்தான்!

காதல் என்று விரட்டி விரட்டி ஒருத்தியை கல்யாணம் செய்து, குழந்தையும் பெற்ற பின் அவனது புத்தி புல் மேயப்போனதை என்னவென்று சொல்ல? அதற்கு தூபம் போட்ட அவனது தாயை என்ன சொல்ல? உண்மையில் அவனது காதல் ஜெயித்து விட்டது! ஆனால் அதை அனுபவிக்கவோ கொண்டாடவோ அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை!

ஒருவரின் நம்பிக்கையை சம்பாதிப்பது ரொம்ப கஷ்டம், அதை இல்லாமல் ஆக்குவது ரொம்ப சுலபம்!

 

Attachments

  • Picsart_24-05-04_15-06-20-975.jpg
    Picsart_24-05-04_15-06-20-975.jpg
    69.1 KB · Views: 10