• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

26. பூமாலையே எந்தன் தோள் சேர வாராயோ!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
வெள்ளிக்கிழமை. ....
அதிகாலையில்...

அழைப்பு மணி ஓசையில் சத்யபாரதி ஒருகணம் கனகவல்லி தான் அவளை இழுத்துப் போக வந்து விட்டாளோ என்று விதிர்விதிர்த்து போனாள்.
ரூபா குளியலறையில் இருந்தாள். அதனால் வேறு வழியின்றி பதறிய மனதை கட்டுப்படுத்த முயன்றவாறு வாசலுக்கு சென்று கதவின் மாயக்கண்ணாடி வழியே பார்த்தவளுக்கு, மூச்சு சீராக.. ஆசுவாசாமாகி அவசரமாக கதவை திறந்தாள்.

"வாங்க அண்ணா, வாங்க அண்ணி, என்ன அண்ணா திடீர்னு? ஒரு போன்கூட பண்ணலை." என்று அண்ணன் குடும்பத்தை வரவேற்றாள்.

"வசந்தியோட மாமாவை பார்க்க வந்தோம்மா அப்படியே உனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு தான்." என்றவன் தூக்கத்தில் இருந்த மகனை அறைக்குள் கட்டிலில் படுக்கவைக்க சென்றான் சித்தார்த்.

"ஓ! ஆமா ரொம்ப முடியாமல் போய்விட்டதாக சொன்னா... என்று சத்யபாரதி சொல்லும்போதே ரூபா வந்து அவர்களை வரவேற்றாள்.

வசந்தி நாத்தனாரை கூர்ந்து கவனித்தபடி," உனக்கு யார் சொன்னாங்க சத்யா? என்று வினவ, சத்யபாரதி சுதாரித்து , "அது அது அனிஷாவை அன்றைக்கு வழியில் பார்த்தப்போ சொன்னாள் அண்ணி"

அப்போதும் சந்தேகம் நீங்காமல் மேலே ஏதோ கேட்க வந்த வசந்தியிடம், "என்ன வசு, வந்ததும் வராததுமா குறுக்கு விசாரணை மாதிரி கேள்வி கேட்டுட்டு, ஒரே ஊரில் இருக்கிறவங்க சந்திக்கிறது என்ன பெரிய விஷயமா? அதை விடு, முதலில் என்னோட பேஸ்ட் பிரஷ் எடுத்து கொடு" என்று சித்தார்த் கேட்கவும் எழுந்து போனாள்.

இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சமையலறையில் தஞ்சமானார்கள்.

மருத்துவமனையில். ..
காலை 11 மணியளவில் தர்மலிங்கத்தை அன்றைக்கு டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என்று மருத்துவர் பரிந்துரைத்ததால் கிருஷ்ணா கட்டண பணத்தை கட்டிவிட்டு தர்மலிங்கத்தை அவனது வீட்டிற்கு அழைத்து வந்தான்.

"கண்ணா, ஏனப்பா இங்கே அழைத்து வந்திருக்கிறாய் "என்றார்.

"சொல்கிறேன் மாமா, நீங்க முதலில் உள்ளே வாருங்கள்" என்று விருந்தினர் அறையில் கட்டிலில் அவரை அமர வைத்தான். அப்போது அவரது கண்ணில் நீர் துளிர்த்திருப்பதை கண்டு பதற்றத்துடன், "என்னாச்சு மாமா, என்ன செய்யுது? டாக்டரை கூப்பிடட்டுமா? என்று வினவ,

அவனது கையை பற்றி, "அதெல்லாம் வேண்டாம் கண்ணா. எனக்கு ஒன்னுமில்லை. நன்றாக இருக்கிறேன். உன் அத்தையை நினைச்சேன். அவள் அனியை உனக்கு கட்டி வைக்கனும்னு ஒத்தை காலில் நிற்கிறாள். தினம் தினம் அவள் இதைத்தான் பேசுறா. நேற்றுகூட வசந்தி இன்னிக்கு வருகிறாள், அப்போ ஊருக்கு தெரியறாப்ல ஒரு நிச்சயதார்த்தம் பண்ணிடனும்னு சொல்லிக்கொண்டு இருந்தாள். இப்ப வசந்தி வீட்டிற்கு என்னை பார்க்க வந்தால் நான் என்னவென்று பேசுறது கண்ணா? எனக்கு அதுதான் கவலையாக இருக்கிறது." கண்ணனுக்கு அவர் சொல்லாமல் விட்டதும் புரிந்தது. அவரது சகோதரி இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது, அப்படியே இருந்தாலும் அக்கா அதை நல்ல விதமாக சமாளித்தும் இருப்பாள் என்று எண்ணி கண்கள் பனித்திருக்கிறது.

"என்ன மாமா இது? நான் உங்கள் மகன் தானே? அனிஷா என் பொறுப்பு என்று அன்றே சொன்னேனே. என்மேல் நம்பிக்கை இல்லையா? அவள் என் தங்கை. முதலில் அவள் படிப்பை முடிக்கட்டும். அவளுக்கு ஒரு அண்ணனாக என்னவெல்லாம் செய்யனுமோ அத்தனையும் நான் செய்வேன். நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்".

"உன் மேல் நம்பிக்கை இருக்கிறது கண்ணா. உன் அத்தை. .."

"மாமா அத்தையிடம் அக்கா பேசுவாள். சொத்தை நான்கு பாகமாக பிரித்து அனிஷாவுக்கு ஒரு பங்கும் உங்கள் இருவருக்கும் ஒரு பங்கும் கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டால் பிரச்சனை தீர்ந்தது. நான் இப்போது தனியாக தொழில் செய்கிறேன். நல்லபடியாக நடக்கிறது. பெங்களூரில் இருக்கும் தொழில்களை நீங்கள் சும்மா மேற்பார்வை பாருங்கள். நம்பகமான ஆட்களை வைத்து கொள்ளுங்கள். நீங்கள் எங்களுக்கு வேண்டும் மாமா. அதனால் இனிமேல் இப்படி உங்கள் உடல் நலத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். நானும் அப்பப்போ வந்து கவனிச்சுக்கிறேன். சரிதானா மாமா??

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை கண்ணா. நீ வயசுல சின்னவனாக இருந்தாலும் மனசால பெரிய மனுஷன் ஆகிட்டேப்பா" என்று குரல் தழுதழுக்க சொல்லவும்,

"பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீர்கள் மாமா. எங்களை உங்கள் பிள்ளைகளாக நீங்களும் அத்தையும் வளர்த்ததற்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை. சரி அந்த பேச்சை விடுங்கள். இப்போது நான் உங்களை அழைத்து வந்த காரணத்தை சொல்கிறேன், என்றவன், எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும் மாமா".

"சொல்லுப்பா உனக்கு செய்யாமலா?"

"அக்காக்கிட்டே என்னோட கல்யாண விஷயத்தை நீங்கள் தான் பேச வேண்டும். அவள் உங்க வார்த்தையை மீற மாட்டாள். "

தர்மலிங்கம் சட்டென்று சிரித்து, அவனது காதை பற்றி,"படவா பயலே கடைசியில் என் தலையிலேயே கை வைக்கிறியே? " என்றார் சிரிப்பினூடே..

"அத்தைக்கு முன்பாக நாம் முந்திக் கொள்வது நல்லது இல்லையா மாமா? அதனால் அத்தான்கிட்ட சொல்லி இங்கே வரச் சொல்லி இருக்கிறேன்".

"ம்ம்... நீ பலே ஆள்தானப்பா. அதெல்லாம் சரிதான் அவங்க ஊருல இருந்து வந்துட்டாங்களா ??"

"வந்தாச்சாம், சாப்பிட்டு இங்க வர்றதுக்காக கிளம்பிட்டாங்கனு பாரதி சொன்னாள் மாமா" என்றான் லேசாக முகம் சிவக்க ,

"ம்ம்...முறைப்படி பார்த்தால் அவளும் எனக்கு மகள் தான். பாவம் அந்த பொண்ணு, தேவைப்படுற நேரத்தில் பெத்தவங்களை பறி கொடுத்துட்டாள். அவளை நீ சந்தோஷமா வச்சுக்கனும் கண்ணா". என்றபோது அழைப்பு மணி ஒலிக்க, கிருஷ்ணா சென்று அக்கா, அத்தான் இருவரையும் அழைத்து வந்தான்.

"பரஸ்பர நலன் விசாரிப்பு முடித்தபின், மாமா பேச்சை ஆரம்பித்தார். "வசந்தி எப்போமா கண்ணனுக்கு கல்யாணம் பண்ணுறதா நினைப்பு? "

"நானா வேண்டாம்னு சொல்கிறேன் மாமா?
அவன்தான் பிடி கொடுக்காமல் நழுவுறான். எத்தனை அழகான பெரிய இடத்து சம்பந்தமெல்லாம் வருது தெரியுமா மாமா?"

"ஓ! உன் தம்பிக்கு பெரிய இடத்தில் தான் சம்பந்தம் பேசணும்னு நினைக்கிறியாம்மா? இந்த ஏழை மாமா பெண்ணை ஏத்துக்க மாட்டியா??"
சித்தார்த் திகைப்புடன் கிருஷ்ணாவைப் பார்க்க, பொறுமை காக்கும்படி சைகை செய்தான் சின்னவன்.

வசந்தி முகம் மலர"எ..என்ன மாமா சொல்றீங்க? நிஜமாவா? எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது தெரியுமா, உற்சாகமாய் சொன்னவள், சட்டென முகம் வாட,"ஆனா நாம முடிவு பண்ணி என்ன செய்ய மாமா? ?உங்க மருமகன் கட்டிக்க மாட்டேன்னு சொன்னானே? அவனை ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளுங்கள் மாமா. அவனுக்கு சம்மதம் என்றால் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை "

"அவனைக் கேட்டுக்கிட்டு தான் உன்கிட்ட பேசுகிறேன் வசந்தி. என்னோட மூத்த மகள் சத்யபாரதியை அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவளுக்கும் தான். பொதுவா கல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுனு சொல்வாங்க இவங்க கல்யாணம் இங்க நிச்சயிக்கப்படனும்னு இருக்கு."

"மாமா, நீ...நீங்க என்ன சொல்றீங்க " அதிர்ச்சியுடன் வசந்தி எழுந்து விட்டாள்.

"ஏனம்மா, புரியறமாதிரி தமிழில் தானே சொன்னேன்? சத்யபாரதியும் எனக்கு மகள் தானே? நான் என்ன தப்பா சொல்லிவிட்டேன்? எதுக்கு இவ்வளவு அதிர்ச்சியாகுறே?"

"மன்னிச்சிருங்க மாமா. இந்த கல்யாணம் நடக்காது. நடக்க கூடாது…’’என்றாள், வசந்தி பதற்றத்துடன்.

"ஏன் வசு? என் தங்கைக்கு என்ன குறை? அவளுக்கு அழகு ,படிப்பு என்ன இல்லை ??" சித்தார்த் அழுத்தமான குரலில் கேட்க,

"அது. . அது அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு அத்தான்? இந்த கல்யாணம் நடக்கிறது ரெண்டு பேருக்குமே நல்லது இல்லை. இதுக்கு மேலே என்னை ஒன்னும் கேட்காதீங்க" கரகரத்த குரலில் வசந்தி சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாய் வெளியேற மூன்று ஆண்களும் திகைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
 

Attachments

  • Picsart_24-09-10_13-12-43-973.jpg
    Picsart_24-09-10_13-12-43-973.jpg
    406.7 KB · Views: 15