• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

28. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
அனிதா, கைம்பெண் இளம்பெண்ணும் கூட, வாழ வேண்டிய வயதில், துணையை இழந்து நிற்பது கொடுமை என்பதை, ஆனந்தனை விட்டு விலகியிருந்த கடந்த சில மாதங்களில் அவள் புரிந்து கொண்டிருந்தாள்! அவளோ மொத்தமாக பறிகொடுத்து விட்டு நிற்பவள்! அந்த நிலையில்,அன்பாக, அக்கறையாக நடந்து கொள்ளும் ஆணிடம் மனம் தடுமாறுவது இயல்பு!

ஆனால் வீட்டில் மனைவி, குழந்தையை வைத்துக்கொண்டு, ஆனந்தன் தடம் மாறியதைத்தான் அவளால் ஜீரணிக்க முடியவில்லை! ஒருவேளை அவளே நெருங்கி வந்திருந்தாலும், புத்திமதி சொல்லி, உடனடியாக ஊருக்கு அனுப்பியிருக்க வேண்டாமா? சந்தர்ப்பம் கிடைத்தது என்று தவறாக நடந்து கொள்வது தான் ஆண்களின் குணம் போலும்! இவனால் தானே இரண்டு உயிர்கள் அநியாயமாக போய்விட்டது? அவர்களுக்காக அவளது கண்களில் நீர் வழிந்தது!
கண்ணீரை புறங்கையால் துடைத்துவிட்டு, பாதையில் கவனம் செலுத்த முயன்றபோது தான் அவளுக்கு ஒரு விஷயம் உரைத்தது!

சாருவுக்கு புகுந்த வீடு இல்லாது போய்விட்டது! ஆனால் அதற்கு முன்பாகவே பிறந்த வீடும் இல்லாது போயிருந்தது!

காசிக்கு போன தந்தை , கடைசி காலத்தை அங்கேயே கழிப்பதாக சொல்லி தங்கிவிட்டார்! அதுவும் ஒருவகையில் நல்லதற்கு தான்! மகளின் வாழ்க்கை பறிபோன அவலத்தை பார்த்து வேதனை படாமல் தப்பினார் என்ற சிறு ஆறுதல் உண்டாயிற்று!

வீட்டில் இருந்து ஒரு வேகத்தில் கிளம்பிவிட்ட சாருவுக்கு, இனி எங்கே போவது என்று தெரியவில்லை! காரை ஓட்டிக் கொண்டு சென்றாலும், இப்போது யாரிடம் போய் தஞ்சமடைவது? என்ற கேள்வி ஒருபுறம் பூதாகரமாக அவளை தாக்கியது!

சுரேந்திரன் அவளது நினைவுக்கு வந்தான்! ஆனால் அவனோ
கையில் அடிபட்டு கிடக்கிறான்! இதை சொன்னால் அவன் கிளம்பி வந்து நியாயம் கேட்கிறேன் என்று சொல்வான்! ஆனால் நியாயமற்று நடந்து கொண்டவர்களிடம் போய் எந்த நியாயத்தை கேட்க முடியும்! அவனாவது அக்கா நலமாக இருப்பதாக எண்ணி,நிம்மதியாக இருக்கட்டும்! அவனுக்கு விஷயம் உடனடியாக தெரிய வாய்ப்பு இல்லை! ஆரம்பத்தில் இருந்தே சுரேந்திரனிடம் ஆனந்தன் ஒட்டிப் பழகவில்லை! அவனும் யாரிடமும் சட்டென்று கலந்து பேச மாட்டான்! ஆனால் பழகிவிட்டால், பிரியமாக இருப்பான்! ஆகவே அவன் ஆனந்தனை தொடர்பு கொள்ள வாய்ப்பு இல்லை!

இப்போது உடனடியாக தங்குவதற்கு ஒரு இடம் அவளுக்கு வேண்டும், இன்னும் சற்று நேரத்தில் இருள் சூழ ஆரம்பித்து விடும்! அதன் பிறகு தனியே பயணிப்பது,ஆபத்தாக முடியும்! தீவிரமாக யோசித்தவளுக்கு, வாசனின் வக்கீல் ஞாபகத்திற்கு வந்தார்! கைப்பையை தூளாவி, அவரது முகவரி அட்டையை எடுத்தாள்! ஊரப்பாக்கத்தில் அவரது அலுவலகம் இருப்பதாக அதில் போட்டிருந்தது!

வக்கீல் கருணாகரனை அழைத்து, உடனடியாக சந்திக்க வேண்டும் என்று கேட்டாள்! அவரும் நேராக அலுவலகத்திற்கு வரச் சொன்னார் அந்த வக்கீல் கருணாகரன்!

🩷💙🩷

வக்கீல் கருணாகரனின் அலுவலகத்திற்கு சென்ற சாரு சில கணங்கள் தயங்கியபடி அமர்ந்து இருந்தாள்!

கருணாகரனுக்கு, கிட்டத்தட்ட அவளது தந்தையின் வயதுதான் இருக்கும்!

அவளை பார்த்தே ஏதோ பெரிய, சங்கடத்தில் இருப்பது போல தோன்றியது! ஆகவே, ஒன்றும் பேசாமல் ஊழியரை அழைத்து, இரண்டு காபி கொண்டு வரச் சொன்னார்!

காபியை கொணர்ந்து வைத்துவிட்டு ஊழியர் சென்றுவிட்டார்!

"முதலில் காபியை குடிம்மா! எதுவானாலும் அப்புறமாக சொல்!"என்று தனது காபியை பருக ஆரம்பித்தார்!

சாருவுக்கும் அந்த காபி தேவைப்பட்டது! சூடு, சுவை எதையும் கவனிக்காமல் எடுத்து பருகிவிட்டு,"நன்றி, சார்!"என்றாள்

"இருக்கட்டும்மா, என்ன விஷயமாக என்னை பார்க்க வந்திருக்கிறேமா? ஐயாவோட சொத்து பத்தி ஏதும் தெரிஞ்சுக்கணுமா?"

"ஐயோ, அதெல்லாம் இல்லை சார்! எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும் சார்!"

"வாசன் ஐயா, உனக்கு எப்ப எந்த உதவி என்றாலும் செய்து கொடுக்க சொல்லியிருக்கிறார் மா ! சொல்லுமா, என்ன உதவி வேணும்? என்கிட்டே நீ தயங்கவே வேண்டாம்! என் மகள் மாதிரி நீ!"

வாசனின் பெயர் கேட்டதும் அவளது கண்கள் லேசாக கலங்கியது! அவள் மீது எத்தனை பாசம்? அவர் யாரோ எவரோ? அவளுக்காக ஒருவரிடம் உதவி செய்யச் சொல்லிப் போயிருக்கிறார் என்றால் அதை நிறைவேற்ற காத்திருக்கும் இந்த மனிதரும் தான் எப்பேர்ப்பட்ட நல்லவர்!

"எனக்கு உடனடியாக தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும்! ஏதாவது ஒரு மகளிர் விடுதியில் இடம் வாங்கிக் கொடுக்க முடியுமா சார்?"

"வாசன் ஐயாவோட வீடு ஒன்று கொட்டிவாக்கத்தில் இருக்கையில் நீ ஏனம்மா வெளியே தங்க வேண்டும்?" என்றார் வக்கீல்

"அங்கே, எல்லாம் இப்போது தனியாக போய் தங்க முடியாது சார்!"என்றவளின் குரல் கரகரத்தது!

"சரிம்மா, உன் இஷ்டம்! ஆனால் உடனே ஹாஸ்டலில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை! இப்ப என் உதவியாளர்கிட்டே, நீ வேலை செய்கிற ஆஸ்பிடல் பக்கம்,ஏதாவது ஹாஸ்டலில் அறை இருக்கிறதா என்று விசாரிச்சு வைக்க சொல்றேன்!"

அவர் சொல்வது சரிதான், நாளைக் காலை வரை அவள் எங்கே தங்குவாள்! காரில் தங்கியிருக்க முடியாதே? மருத்துவமனைக்கு சென்றால் கேள்வி கேட்பார்கள், பொய் சொல்ல நேரிடும்! தன் நிலையை எண்ணி, சாருவின் கண்கள் கலங்கியது!

கருணாகரனுக்கு அவளது கலக்கம் புரிந்தது!

"சாரு, ஏனம்மா கலங்குகிறாய்? இன்று இரவு என் வீட்டில் வந்து தங்கிக்கொள்ளம்மா! என் மனைவி இருக்கிறாள்! உன்னை மகள் போல பார்த்துக் கொள்வாள்!" என்றவர், கைப்பேசியை எடுத்து,டையல் செய்தார்! தொடர்பு கிடைத்ததும்,

"திலகா, நான் சொன்னேனே டாக்டர் சாருபாலா என்று! அவள் இன்று ராத்திரி நம்ம வீட்டுக்கு கெஸ்ட்டாக வர்றா! நீயே அவகிட்டே பேசு" என்று சாருவிடம் கொடுத்தார்!

சாரு, தயங்கியபடி கைப்பேசியை வாங்கினாள்!

"ஹ..ஹலோ வணக்கம்மா"

"வணக்கம், மா! நல்லா இருக்கிறாயா? உன்னைப் பற்றி நிறைய சொல்லியிருக்கார் வாசன் ஐயா! நீ எங்க வீட்டுக்கு வர்றதுல எனக்கு ரொம்ப சந்தோசம்மா! உனக்கு சாப்பாட்டுல என்ன பிடிக்கும்னு சொல்லு, செய்து வைக்கிறேன்!" என்றார் திலகம், ஏதோ வெகுகாலம் பழகியவர் போல..

அதுவே சாருபாலாவை இறுக்கம் தளரவைத்தது எனலாம்!" இதுதான் என்று எதுவும் பிரத்தியேகமா இல்லை அம்மா! எனக்காக நீங்க சிரமப்படாதீங்க, உங்களுக்கு என்ன செய்வீங்களோ அதையே நானும் சாப்பிட்டுக்கிறேன்!" என்றாள் இலகுவாக!

வக்கீலின் முகம் கனிந்தது! திருமணமான பெண், குழந்தையை கணவனை பிரிந்து வந்திருக்கிறாள் என்றால், பிரச்சினை பெரிது தான்!" என்று நினைத்துக் கொண்டார்!

"வேற ஏதும் உதவி வேண்டுமா மா?என்றார்!

தலையை கவிழ்ந்து, சில கணங்கள் அமர்ந்திருந்தவள்,"இன்னும் ஒரு உதவி வேண்டும் சார்! மிஸ்டர் ஆனந்தனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்" என்றாள் இறுகிய குரலில்!

"விவாகரத்து வேண்டும் என்று நீ சொன்னதால் கேட்கிறேன்மா! உங்களுக்குள் என்ன பிரச்சினை? "

சாருபாலா சுருக்கமாக சொன்னாள்! கூடவே ரிஷியை விட்டுக் கொடுப்பதற்கான காரணத்தையும் சொன்னாள்!

கருணாகரன் கவனமாக கேட்டுக் கொண்டார்!

"அப்போ உன் குழந்தை உனக்கு வேண்டாமா மா?

"எனக்கு என் மகன் வேண்டும் தான்! ஆனால், அவன் இவ்வளவு காலமாக, பெரிய வீட்டில், பாட்டி, தந்தை அவனை கவனிக்க என்று வேலையாட்கள் என்று வாழ்ந்தது போல இனியும் வாழணும்! நான் அவனை என்னோடு வைத்துக் கொண்டால், அந்த மாதியான வாழ்க்கையை என்னால் கொடுக்க முடியாது! அவன் தனிமையில் ஏங்கிடுவான்! அவனோட சந்தோஷத்துக்காகத்தான், நான் விட்டுக் கொடுக்கிறேன்! எனக்கு வேற வழி தெரியலை!"

"சரிம்மா, அப்போ ஜீவனாம்சமாக உனக்கு எதுவும் வேண்டாமா?

"எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம் சார்! கடவுள் அருளால் நான் சம்பாதிக்கிறேன்! திருமணத்திற்கு பிறகு என் சம்பாத்தியம் முழுவதும் எடுப்படாமல் சேமிப்பில் தான் இருக்கிறது!" விவாகரத்து மட்டும் கிடைத்தால் போதும்!

"சரிம்மா, நாளைக்கே நோட்டீஸ் அனுப்புவதற்கான வேலை செய்துவிடலாம்!" என்றவர் எழுந்து கொள்ள, சாருவும் எழுந்து கொண்டாள்!

சாரு அவளது காரில் பின் தொடர, கருணாகரன் வீடு நோக்கி பயணித்தார்!

வக்கீலுக்கு சாருவின் கதையை கேட்டதில் மிகவும் வருத்தமாக இருந்தது! எல்லாம் இருந்தும் இப்படி ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம்!

வீடு வந்ததும், இரு பெண்களையும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தார்! சாருவுக்கு முதல் பார்வையில் திலகத்தை பிடித்துப் போயிற்று!
அந்தம்மாளுக்கும் அப்படித்தான்!

கருணாகரன் - திலகம் தம்பதிக்கு பிள்ளைகள் இல்லை! அதற்காக அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கவில்லை! திலகம் சமூக சேவை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்! ஆதரவற்றவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்து கொடுப்பார்! கைவினைப் பொருட்களை செய்வது அவரது பொழுது போக்கு! " இவை எல்லாம் பின்னாளில் சாருபாலா தெரிந்து கொண்டவை!

அன்று இரவு திலகம் தன்னுடனே சாருவை படுக்க வைத்துக் கொண்டார்! அப்போது அவர் ஒரு ஆலோசனை சொன்னார்! சாருவுக்கு அதை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது!

மறுநாள் காலையில்..

"சாரு இன்னைக்கு முழுநாள் இருக்கு! நீ யோசிச்சு உன் முடிவை சொல்லுமா! அப்படி உனக்கு என் யோசனை பிடிக்கலைன்னா, தயங்காமல் சொல்லு! நான் தப்பா நினைப்பேனோனு நீ சங்கடப்படாதே! நீ மதியம் சாப்பிட வந்துடுமா! கேண்டீன்ல சாப்பிட்டு வைக்காதே சரியா?"என்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் திலகம்!

திலகம் அப்படி என்ன ஆலோசனை சொல்லியிருப்பார்? சாரு என்ன முடிவு செய்வாள்?
 

Attachments

  • Picsart_24-07-11_20-30-06-906.jpg
    Picsart_24-07-11_20-30-06-906.jpg
    201.9 KB · Views: 13