அத்தியாயம் 3
யாதவி அவளின் நிபந்தனையை கூற, அங்கிருந்த மூவருக்கும் முதலில் ஏற்பட்ட உணர்வு திகைப்பு தான். அதிலிருந்து முதலில் மீண்ட தீபனோ, “எக்ஸ்யூஸ் மீ மேடம், நீங்க ஒன்னும் இங்க பிக்னிக் வரல. நாங்களும் உன்னோட செர்வன்ட்ஸ் இல்ல. ஒழுங்கா, ரூமுக்குள்ள இருக்குறதுன்னா இரு. இல்ல, கையை காலை கட்டி ரூமுக்குள்ள போட்டுடுவேன். அப்பறம் சாப்பிட சாப்பாடும் கிடைக்காது.” என்றான் கோபமாக.
அவன் கோபத்தில் யாதவி கொஞ்சம் அடங்கினாலும், “நான் என்ன சாப்பாட்டுக்கா அலையுறேன்.” என்று இறுதியில் அவன் கூறிய வாக்கியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு முனகினாள்.
அது தீபனுக்கு கேட்டாலும், கண்டு கொள்ளாமல், “அக்கா, அவளுக்கு சாப்பாடு ரூமுக்கே கொண்டு போய் குடுங்க. இனி, அவ அந்த ரூமை விட்டு வெளிய வரக்கூடாது.” என்று ரெங்கநாயகியை பார்த்து கூறியவன், “மீறி வந்தா, கைகட்டு, கால் கட்டு தான்!” என்று அவளைப் பார்த்துக் கொண்டே கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்.
ரெங்கநாயகியும் தயாளனும் அவளையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க, இம்முறை யாதவி ஏதோ முணுமுணுத்தபடி தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு சென்று டம்மென்று கதவை மூடினாள்.
“எம்மாடி, இது என்ன இந்த பொண்ணு இப்படி கதவை சாத்துது!” என்று ரெங்கநாயகி கூற, “இனி, இப்படி அடிக்கடி நடக்கும் நாயகிக்கா. எதுக்கும் நம்ம ரெண்டு பேரும் காதுல ஏதாவது மாட்டிக்கிறது நல்லது.” என்றவாறே தயாளன் வெளியே தீபனை பார்க்கச் சென்றான்.
*****
ஆணையர் அலுவலகம்…
அந்த அறையில் மதுசூதனன் உட்பட சில காவல்துறை அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அது யாதவியின் கடத்தல் தொடர்பான கலந்துரையாடல் தான்.
இத்தனை முக்கியமான அதிகாரிகள் கூடியிருப்பதற்கு காரணம், அமைச்சரின் மகளை கடத்தியதால் மட்டுமல்ல, இந்த வழக்கில் காண்டீபனுக்கு சம்பந்தம் இருப்பதாலும் தான்.
பல நாட்களாக, காவல்துறையினரை கதிகலங்க விடுபவனாகிற்றே!
“கோகுல், மினிஸ்டர் பொண்ணு கடத்தல் கேஸ்ல ஏதாவது லீட்ஸ் இருக்கா?” என்று மதுசூதனன் கேட்க, “சார், மினிஸ்டர் வீடிருக்க ஏரியால இருந்து ஒரு கிலோமீட்டர் வரை இருக்க சிசிடிவில காண்டீபனோட கார் பதிவாகி இருக்கு சார். ஆனா, அதுக்கு அப்பறம் எந்த சிசிடிவிலேயும் அவனோட கார் ரெக்கார்ட் ஆகலை. சோ, கடைசியா கிடைச்ச இடத்தை சுத்தி நம்ம ஆட்களை விட்டு விசாரிக்க சொல்லிருக்கோம். அந்த காரோட நம்பர் பிளேட் எக்ஸ்பெக்ட் பண்ண மாதிரியே ஃபேக் தான். மினிஸ்டர் வீட்டுல இருந்த செக்யூரிட்டீஸ், பாடி கார்ட்ஸ், ஹெல்பர்ஸ் எல்லாரையும் விசாரிச்சுட்டு இருக்கோம் சார்.” என்று விசாரணையை பற்றி கூறினான் கோகுல்.
“ஓகே, விசாரணையை வேகப்படுத்துங்க. வீ நீட் டூ கேட்ச் ஹிம், பீஃபோர் அனதர் க்ரைம்.” என்று மதுசூதனன் கூறிக் கொண்டிருக்கும்போதே, உள்துறை செயலாளரிடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பு ஏற்கப்பட்டதும் மறுமுனையிலிருந்து, “மதுசூதனன், அந்த மினிஸ்டர் பொண்ணு கேஸை யாரு ஹேண்டில் பண்றா?” என்ற கேள்வி வர, நடக்கப் போவதை யூகித்தபடியே, “ஏசிபி கோகுல்ராஜ் தான் ஹேண்டில் பண்றாரு சார்.” என்றார் மதுசூதனன்.
“ஓஹ், அப்படியா? ஹ்ம்ம், கேஸ்ல ஏதாச்சும் ப்ரோக்ரஸ் இருக்கா?” என்று அவர் வினவ, மதுசூதனனும் தன்னிடம் கோகுல் கூறியதை அவருக்கு பகிர்ந்தார்.
“ம்ம்ம், இவ்ளோ ஸ்லோவா இருக்கே! நீங்க ஒன்னு பண்ணுங்க, ஏசிபி தர்மராஜ் கிட்ட இந்த கேஸை குடுங்க. ஐ திங்க், ஹீ வில் ஷோ குட் ப்ரோக்ரஸ்.” என்று உள்துறை செயலாளர் கூற, ‘இதை முன்னாடியே சொல்லி தொலைய வேண்டியது தான!’ என்று மனதிற்குள் திட்டியபடியே, “ஓகே சார்.” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார் மதுசூதனன்.
அங்கு கூடியிருந்த அனைவரிடமும், “ஹோம் செக்ரெட்டரி இந்த கேஸை தர்மராஜ் ஹேண்டில் பண்ணா நல்லா இருக்கும்னு நினைக்குறாரு.” என்று நேரடியாக விஷயத்தை போட்டு உடைக்க, அங்கு பலரும் பல விதமாக அவர்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.
“அவனா?! சரியான அடாவடியாச்சே. கைக்கு கிடைக்கிறவனை அடிச்சு கொடுமை படுத்தி, குற்றத்தை ஒத்துக்குற வரை விட மாட்டானே!”
“அட, அவன் மேல பல லாக்கப் டெத் கேஸ் இருக்குயா. சிலபல மினிஸ்டர்களை கைக்குள்ள போட்டுக்கிட்டு இன்னும் போலீஸ் டிரெஸ்ல சுத்திட்டு இருக்கான்!”
“விடுங்கப்பா, எப்படியோ இந்த காண்டீபனை அவன் கண்டுபிடிச்சுட்டா பரவால்ல. இத்தனை மாசமா நமக்கு தண்ணி காட்டிட்டு இருக்கானே!”
“க்கும், அவனை பிடிச்சா சரி. இவன் தான் கோக்குமாக்கான ஆளாச்சே. தன் சுயலாபத்துக்காக, வேற ஏதாவது அப்பாவியை பிடிச்சுட்டு வந்து, அவன் தான் காண்டீபன்னு சொல்லி தண்டனை வாங்கி தந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. பேர்ல மட்டும் தான் தர்மம் இருக்கு!”
இப்படி பலரும் பேச, “ஓகே, மீட்டிங் முடிஞ்சுது. கேஸ்ல ஏதாவது தெரிஞ்சா, திரும்ப இன்னொரு மீட்டிங் வச்சுப்போம்.” என்று மற்றவர்களை கிளம்பச் சொன்ன மதுசூதனன், கோகுலை மட்டும் இருக்குமாறு கூறினார்.
அனைவரும் சென்றதும், தொங்கிப் போன முகத்துடன் காணப்பட்ட கோகுலை பார்த்த மதுசூதனன், “டோன்ட் டேக் இட் டூ யுவர் மைண்ட் மேன். இதுக்குள்ள நிறைய பாலிட்டிக்ஸ் இருக்குன்னு நான் சொல்லி தான் உனக்கு தெரியணும்னு இல்ல.” என்று அவனை சமாதானப் படுத்தினார்.
“புரியுது சார்.” என்ற கோகுலும் அவருக்கு சல்யூட் வைத்து கிளம்ப முற்பட, அப்போது அறைக்கதவை சம்பிரதாயத்திற்கு தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் தர்மராஜ்.
மேலதிகாரியை பார்க்க வரும் தோரணை நிச்சயமாக அவனிடம் இல்லை. சட்டையின் மேலிரண்டு பொத்தான்கள் திறந்திருக்க, தலையில் இருக்க வேண்டிய தொப்பி, இடையில் சொருக்கப்பட்டிருக்க, கருப்பு நிற குளிர்க்கண்ணாடியுடனும், திமிரான உடல்மொழியுடனும் வந்தான் அவன்.
‘இவனெல்லாம் ஒரு போலீஸ்!’ என்று நினைக்க மட்டுமே முடிந்தது மதுசூதனனால்.
அவரும் என்ன செய்வார்?
ஏகப்பட்ட மெமோக்கள், இடைநீக்கங்கள் என்று கொடுத்து பார்த்தாகிற்று. அவன் செய்வது தவறு என்று உணர்ந்தால் தானே திருந்தவது சாத்தியம்!
ஒரு பெருமூச்சுடன் வந்தவனை கவனித்தார் மதுசூதனன்.
அவனோ கோகுலை கேலியாக பார்த்தவன், “அதான் முடியலையே. அப்பறம் என்ன இங்க வேலை? கிளம்பி போக வேண்டியது தான?” என்று கூற, அதில் பல்லைக் கடித்தவாறு, “ஐ வில் டேக் லீவ் சார்.” என்று மதுசூதனனிடம் கூறிவிட்டு வெளியேறி விட்டான் கோகுல்.
அதை ஒரு கோணல் சிரிப்புடன் பார்த்த தர்மராஜோ இப்போது மதுசூதனன் புறம் திரும்பி, “இதுவரைக்கும் யாரும் கண்டே பிடிக்க முடியாத கிரிமினலை நான் கண்டு பிடிக்கணுமாமே. சரி சரி, நான் முறைப்படி சார்ஜ் எடுத்து, இன்னும் ரெண்டே வாரத்துல அவனை கண்டுபிடிச்சு உங்க முன்னாடி நிறுத்துறேன் சார்.” என்று பவ்யமாக இருப்பது போல நடிக்க, அவனைப் பற்றி தெரிந்தவராக, வழக்கு விபரங்களை அவனிடம் கொடுத்து, “பெஸ்ட் ஆஃப் லக்.” என்றார் மதுசூதனன்.
*****
வீட்டை சுற்றியிருந்த சிறு தோட்டத்தில், கோபத்தை தணிக்க நடைபயின்று கொண்டிருந்தான் தீபன்.
“தீபா, இங்க என்ன தான் நடக்குது? நீ என்னன்னா கடத்திட்டு வந்தவளை நம்ம இடத்துக்கு கூட்டிட்டு போகாம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்க. அவ என்னன்னா, கடத்தப்பட்டுருக்குறதையே மறந்துட்டு ஆர்டர் போட்டுட்டு இருக்கா. என்னதான் டா நடக்குது இங்க?” என்றான் தயாளன்.
மறுமொழி ஒன்றும் தராமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்த தீபனை அலைபேசி ஒலி கலைத்தது.
அதில் தெரிந்த பெயரை தயாளனிடம் காட்டிவிட்டு, இதழோரப் புன்னகையுடன் அழைப்பை உயிர்ப்பித்து ஸ்பீக்கரில் போட்டான் தீபன்.
“கேஸ் இப்போ ஏசிபி தர்மராஜ் கையில.” என்ற ஒற்றை வாக்கியத்துடன் அந்த அழைப்பு முடிந்திருக்க, தீபனின் புன்னகை இப்போது வன்மத்துடன் விரிந்தது.
“தீபா, அந்த ஆளா? ரொம்ப டேஞ்சரஸ் ஆச்சே!” என்று தயாளன் கூற, “பலமான எதிரி இல்லன்னா, சில நேரங்கள்ல நம்ம வெற்றி நமக்கு தலைகணத்தை தந்துடும் தயா. அப்பப்போ தலையை தட்டி உட்கார வைக்க இந்த மாதிரியான எதிரிகள் அவசியம்.” என்று தத்துவம் பேசினான் தீபன்.
“ஹ்ம்ம், என்னமோ சொல்ற.” என்று தயாளன் கூறிக் கொண்டிருக்கும்போதே, ‘டர்’ரென்று ஏதோ கிழியும் சத்தமும் அதை தொடர்ந்து, “அம்மா…” என்ற அலறல் சத்தமும் வெகு அருகில் கேட்டது.
அதில், நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே, சத்தம் வந்த திசையை நோக்கி சென்றனர்.
அங்கு புல் தரையில் விழுந்து எழ முடியாமல் புரண்டபடி இருந்தது யாதவியே தான்!
அவள் அறையிலிருந்த ஜன்னலின் ஒருபக்கம் கம்பிகள் மொத்தமாக கழட்டப்பட்டிருக்க, அதிலிருந்து ஒரு துணி பாதியாக கிழிந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது.
அந்த ‘டர்’ சத்தம் இதன் விளைவால் தான் போலும்.
கையில் பாதி கிழிந்த துணியுடன் இருந்தவளை பார்த்ததும், “என்னமா மல்லாக்க படுத்து எதை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க?” என்று தயாளன் சிரிப்புடன் வினவ, “ஹான், பறக்கும் தட்டு எப்படி ஆன்டி-கிராவிட்டில பறக்குதுன்னு, நானும் பறந்து பார்த்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.” என்று கடுப்புடன் கூறினாள் யாதவி.
அவளின் பேச்சு தீபனுக்கே லேசாக சிரிப்பை வரவழைத்தது என்று தான் கூற வேண்டும்.
“யூ-ட்யூப்ல பார்த்துட்டு வந்து நம்மகிட்ட பீலா விட்டுட்டு இருக்கா பார்த்தியா?” என்று தயாளன் தீபனிடம் கூற, “இப்போ அது ரொம்ப முக்கியம்! யாராச்சும் என்னை தூக்கி விடுங்க.” என்று வலியுடன் கூறினாள் யாதவி.
அவள் அருகே தூக்குவது போல குனிந்த தீபனோ, “நீயே தான விழுந்த, நீயே எழுந்து வா.” என்று தயாளனுடன் உள்ளே சென்று விட, “பாவி பாவி, ஒரு பொண்ணு வலியில துடிச்சுட்டு இருக்கேன். ஹெல்ப் பண்ணாம போறான்! ஹா… அம்மா…” என்று கத்தியபடியே மெல்ல எழுந்தாள் அவள்.
“மச்சான், பாவம் டா அந்த பொண்ணு.” என்று தன்னை இழுத்துக் கொண்டு சென்றவனை பார்த்து தயாளன் கூற, “யாரு அவளா? கொரங்கு மாதிரி மேல இருந்து கீழ குதிச்சுருக்கா. அவளா பாவம்?” என்றபடி தயாளனை உள்ளே அழைத்துச் சென்றான் தீபன்.
இடுப்பில் ஒரு கை, காலில் ஒரு கை என்று தாங்கி தாங்கி அவள் நடந்து வர, சமையலறையிலிருந்து வெளியே வந்த ரெங்கநாயகியோ அதிர்ந்து அவளை தாங்கி பிடித்தவர், “என்னாச்சு மா?” என்றார்.
“கேள்வியெல்லாம் அப்பறம் கேட்கலாம் ரெங்கு. முதல்ல என்னை அப்படியே கைத்தாங்கலா ரூமுக்கு கூட்டிட்டு போங்க.” என்றாள் யாதவி.
அவற்றை எல்லாம் நீள்சாய்விருக்கையில் அமர்ந்தவாறே பார்த்துக் கொண்டிருந்த தீபனோ, சொடக்கிட்டு அவளை அழைத்தவன், “எங்க போற?” என்று வினவினான்.
தனக்கு உதவாமல் சென்ற கோபத்துடன், கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இப்படி சொடக்கிட்டு அழைத்த கடுப்பும் சேர்ந்து கொள்ள, “இந்த காலை வச்சுட்டு பிரேக் டான்ஸா ஆடப் போவாங்க? ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்க தான் போறேன்.” என்றாள் எரிச்சலுடன்
“ரெஸ்ட்டா? அதெல்லாம் சொல்பேச்சு கேட்குறவங்களுக்கு. இப்படி ஜாக்கி ஜானுக்கு பொண்ணு மாதிரி, மேல இருந்து கீழ குதிக்கிற அதிகப்பிரசங்கிக்கு எல்லாம் இல்ல. தயா, அந்த கயிறை எடுத்துட்டு வா. கட்டி போடலாம்.” என்று தீபன் கூற, “ஹலோ மிஸ்டர், என்ன இதெல்லாம்? கடத்திட்டு வந்தா கட்டி போட்டு கொடுமை படுத்துவீங்களா? இதெல்லாம் சரியே இல்ல, சொல்லிட்டேன். ஒரு பொண்ணு, அதுவும் என்னை மாதிரி ஒரு பொண்ணு, எவ்ளோ நேரம் தான் நாலு சுவத்தை வெறிச்சுட்டு இருக்குறது? இதுல அந்த ரூம்ல பால்கனி கூட இல்ல. கடலலை சத்தம் கேட்குதே, ஒரு எட்டு வெளிய போய் பார்த்துட்டு வரலாம்னு நினைச்சேன். இதுல என்ன தப்பு இருக்கு?” என்றாள் யாதவி.
“ஏய் இந்தாம்மா, யாரும்மா நீ? முன்ன பின்ன கடத்தல்னா என்னன்னு கேள்விப்பட்டிருக்கியா நீ? இப்படியே பேசிட்டு இருந்தா, கடத்தலுக்கு உண்டான மரியாதையே போயிடும்.” என்று சலித்துக் கொண்டான் தயாளன்.
“ப்ச், நீங்க சும்மா இருங்க.” என்று தயாளனிடம் கூறியவள், தீபன் புறம் திரும்பி “இங்க பாருங்க ஒரு ஜென்டில்மேன் – ஜென்டில்வுமன் அக்ரீமெண்ட் போட்டுப்போம். அந்த காண்டீபன் எனக்கு ஆர்ச்சரி ட்ரெயினிங் பண்ணா, நான் இந்த இடத்தை விட்டு தப்பிக்கவோ, ஒன்ஸ் நீங்க என்னை ரிலீஸ் பண்ணதுக்கு அப்பறம் உங்களை போட்டுக் குடுக்கவோ மாட்டேன். யோசிச்சு சொல்லுங்க.” என்றவள், “நீங்க வாங்க ரெங்கு நம்ம ரூமுக்கு போவோம்.” என்று ரெங்கநாயகியின் உதவியுடன் மேலே தன்னறைக்கு சென்றாள்.
அவள் நகரும்போதே, “உன்னை ரிலீஸ் பண்ணுவோம்னு யாரு சொன்னா?” என்ற தீபனின் கேள்விக்கு, “சந்தோஷம் இங்கேயே இருக்கேன். ஆனா, அந்த ஆர்ச்சரி ட்ரெயினிங்கை மறந்துடாதீங்க.” என்றபடி உள்ளே சென்று விட்டாள் அவள்.
இந்த உரையாடலை ‘பே’வென்று திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தது என்னவோ தயாளன் தான்.
அவனின் எதிர்வினை தீபனுக்கு சிரிப்பை வரவழைத்திருக்க, “எதுக்கு டா இப்படி பார்க்குற?” என்று வினவினான்.
“தீபா, உண்மையை சொல்லு. இந்த அரைலூசை பத்தி முன்னாடியே தெரிஞ்சதால தான், டைட் செக்யூரிட்டி இருக்க நம்ம இடத்துக்கு கூட்டிட்டு போகாம, இங்க கூட்டிட்டு வந்து, காவலுக்கு கூட ஆள் வச்சுக்காம, ஃப்ரீயா சுத்த விட்டு இருக்கியா?” என்றான் தயாளன்.
அதற்கு பதில் கூறாமல் ஒரு புன்னகையுடன் கடந்து சென்றான் தீபன்.
“நீ பதில் சொல்லுவன்னு நினைக்குறது என் தப்பு தான்.” என்றபடி அவனைப் பின்தொடர்ந்தான் தயாளன்.
தொடரும்...
வணக்கம் மக்களே. மூன்றாவது அத்தியாயத்திற்கான உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.