• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

32. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
ஓட்டுனர் காரை ஓட்டிக் கொண்டிருக்க, சுரேந்திரனும், சாந்தியும் இன்பாவைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்!

"இன்பாவைப் பிரிஞ்சு இந்த நாலு நாட்கள் இருந்ததே சிரமமாக இருக்கு எனக்கு! அதனால சென்னையில் அவளுக்கு சீட் கிடைக்கணும்னு நான் இங்கே வந்த அன்னைக்கே கோவிலில் வேண்டிக்கிட்டேன் அத்தான்!" என்றார் சாந்தி!

"அதெல்லாம் நம்ம கையிலேயா இருக்கு சாந்தி?? நீ ஆசைப்பட்ட மாதிரி இன்பாவுக்கும் ஏதாவது ஆசை இருக்குமல்லவா? அப்படி அவள் சென்னை விட்டு வேற எங்கும் படிக்க போகணும்னு ஆசைப்பட்டா என்ன செய்வாய்?"

"இன்பா ஆசைக்கு தான் முதலிடம்! அவள் ஆசைப்பட்ட படிப்பை, படிக்க வைக்கிற நாம, அதுக்கும் தான் சம்மதிப்போம்! நான் சொன்னது என்னோட விருப்பம் தான்!"

"பெண்ணாக பிறந்துட்டா ஒரு நாள் கல்யாணமாகி அடுத்த வீட்டுக்கு போகத்தானே வேண்டும் சாந்தி? அப்போது பிரியத்தானே வேண்டும்? ஒரு வேளை இன்பா, வெளியூர் சென்று படிக்க விரும்பினால், அதற்கான முன்னோட்டம் இது என்று நினைச்சுக்க வேண்டியது தான்!" சுரேந்திரன் சொல்ல..

"என்ன அத்தான் நீங்க, பிரியறதைப் பத்தியே பேசிட்டு இருக்கீங்க? அந்தப் பேச்சை விடுங்க! நான் என் பொண்ணுக்கு வீட்டோட மாப்பிள்ளையை தான் பார்ப்பேன்! ஆமா சொல்லிட்டேன்!" என்றார் சாந்தி

சுரேந்திரன் சரணடைவது போல கைகளை தூக்கவும்," ப்ச், அத்தான், சும்மா இருங்க"என்றார் கணவனுக்கு மட்டும் கேட்கும்படி!

சுரேந்திரன் பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டார்!இல்லாவிட்டால்,அதற்கும் மனைவி சிணுங்குவாள் என்று அவர் அறிவார்!

அவர் பார்வையை வெளியே திருப்பிய அந்த கணத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது, எதிரே,சற்று தூரத்தில் அந்த உயர்ரக கார், மோதுவது போல் தன் கட்டுப்பாட்டை இழந்து வந்த கொண்டிருந்தது! கணவனைத் தொடர்ந்து பார்வையை திருப்பிய சாந்தி பயத்தில் அலறிவிட, அவரை சட்டென்று தன் கையணைப்புக்குள் கொணர்ந்த சுரேந்திரன், அந்த வாகனத்தையே அச்சத்துடன் பார்த்திருந்தவர், பக்கவாட்டில் கதவை திறந்து இறங்கும் முடிவுக்கு வந்திருந்தார்! நல்ல வேளையாக ஓட்டுநர் சமயோசிதமாக செயல்பட்டு அவர்களது வண்டியில் சிறு உரசல்கூட நிகழாமல், திருப்பிவிட்டார்! திரும்பிப் பார்த்த சுரேந்திரன் நிம்மதி பெருமூச்சுடன், " ஒன்றுமில்லைமா, பயப்படாதே" என்றவர் மனைவியை ஒரு முறை இறுக அணைத்து விடுவித்தார்! ஆனால் அவர்களது காரை கடந்து சென்ற அந்த கார், சாலையோரம் நின்றிருந்த பெரிய மரத்தின் மீது மோதியதில் கார் கதவு திறந்து, அதிலிருந்த நபர் வெளியே சரிந்தார்!

சுரேந்திரன் ஓட்டுநரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு, மனைவியை உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு, டிரைவரை அழைத்துக் கொண்டு, விபத்து நேர்ந்த அந்த காருக்கு விரைந்தார்!

அது தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிக போக்குவரத்து இல்லை! அந்த வழியாக சென்ற ஓரிரண்டு கார்களும், சிலகணங்கள் தயங்கி பின் வேகமெடுத்தது!

"சார், கோர்ட் கேஸுன்னு அலையணும்! இதெல்லாம் தேவை இல்லாத வேலை என்று ஓட்டுநர் புலம்பினான்!

"எல்லாரும் இப்படி நினைச்சா, நமக்கு ஒருநாள் இப்படி ஆகிறப்போ யாரும் உதவ வரமாட்டாங்க மருது, ஒரு உயிரோட மதிப்பு யாருக்கும் தெரிவதே இல்லை!"என்றவர், எதுவானாலும் நான் பார்த்துக்கிறேன்! நீ இப்ப உதவி மட்டும் செய் போதும்!" என்று அந்த காரில் இருந்தவர் சுவாசத்தை பரிதோதித்தார்! நல்ல வேளையாக உயிர் இருக்கிறது! "தூக்கு, நம்ம காருக்கு கொண்டு போயிடலாம்! பக்கத்துல ஹாஸ்பிட்டலில் சேர்த்துவிட்டால் போதும்! "
என்று அந்த நடுத்தர வயது மனிதரை தங்கள் காருக்கு கொண்டு சென்றனர்! சாந்தி இறங்கி கதவை திறந்து வைத்திருந்தார்! அந்த மனிதரை பின் இருக்கையில் படுக்க வைத்துவிட்டு டிரைவரை பின்னால் அந்த மனிதனுடன் அமரச் சொன்னவர், விபத்து நடந்த காருக்கு சென்று, அங்கிருந்த செல்போன், கைப்பெட்டி, எல்லாம் சேகரித்துவிட்டு காரை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வந்து, ஓட்டுனர் இருக்கையில் ஏறி வண்டியை கிளப்பினார்!

சில நிமிடங்களில் அந்த தனியார் மருத்துவமனை, வந்துவிட,ஏற்கனவே அவர் கூகுளில் அதை தேடி பிடித்து, கைப்பேசியில் தொடர்பு கொண்டு, விஷயத்தை தெரிவித்திருந்தார்! ஆகவே தயாராக இருந்தனர் ஊழியர்கள்!

மருத்துவமனையில் அந்த மனிதரை அனுமதித்து விட்டு, விதிமுறைகளையும் முடித்துவிட்டு, காத்திருந்தனர், அரை மணி நேரத்திற்கு பிறகு சிகிச்சை முடிந்து வெளி வந்தார் மருத்துவர்!

"அவருக்கு அதிர்ச்சியில் தான் மயக்கம் ஏற்பட்டிருக்கிறது! உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை! நல்ல விஷயமாக, அவருக்கு எந்த நோயும் இல்லை! ஆரோக்கியமான மனிதர்! ஆகவே பயப்படும்படியாக ஏதும் இல்லை! கையில் அடிபட்டதுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறோம்! உடல்வலிக்காக ஊசி போட்டிருக்கிறோம்! அதனால் அவர் தூங்குகிறார்! இன்று ஒரு நாள் நன்றாக ஓய்வெடுத்த பின் டிஸ்சார்ஜ் செய்துவிடலாம்!" என்றார்!

சுரேந்திரனும், சாந்தியும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்! வீடு வந்து சேரும் போது சாந்திக்கு நடந்து போன விபத்தின் விளைவாக குளிர் ஜுரம் வந்துவிட்டது!

திலகத்திற்கு அந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், மிகுந்த அதிர்ச்சி உண்டாயிற்று! கூடவே யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதே பெரும் ஆறுதலாக இருந்தது!

இரண்டு தினங்கள் கழித்து, அந்த விபத்துக்குள்ளான மனிதர், தமிழரசன் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு உதவி செய்ததற்கு நன்றியை தெரிவித்தார்! அப்படியே தன்னைப் பற்றிய மற்றும்,தன் குடும்பத்தை பற்றிய விவரங்களையும் தெரிவித்தார்!

தமிழரசன் தென்காசி பக்கம் பெரிய தொழிலதிபர்! அவருக்கு செண்பகம் என்ற மனைவி, ஒரே மகன் பிரியரஞ்சன்! அவனும் படிப்பை முடித்துவிட்டு, ஐந்து மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளை நடத்திக் கொண்டிருக்கிறான்!அவர்களுக்கு பூக்கள், பழங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தொழில்தான் பிரதானமானது! விடுமுறையில் அவசியம் அவரது பண்ணைக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்! அதே போல சென்னை வந்தால் அவசியம் சந்திப்பதாக சொன்னார்!

சுரேந்திரன் பொதுவாக யாரிடமும் சட்டென்று நெருங்கிப் பழகமாட்டார்! ஆனால் தமிழரசன் பேசிய விதத்தில் அவரை ரொம்பவே பிடித்துப் போயிற்று!

இன்பசுரபி, பிளஸ்டூ பொதுத்தேர்வை சிறப்பாக எழுதி முடித்தாள்!

தமிழரசன் குடும்பத்தோடு அவர்கள் வீட்டிற்கு வந்து முறையாக தன் நன்றியை மீண்டும் ஒரு முறை தெரிவித்தார்! இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டுப் போனார்கள்!

அந்த வருட விடுமுறைக்கு வழக்கம் போல சாருபாலாவும் வந்து விட்டாள்! என்னதான் அவர்கள் குடும்பத்துடன் பல இடங்களுக்கு சுற்றிப் பார்க்க சென்றிருந்தாலும், தென்தமிழகம் பக்கம் சென்றது இல்லை!

தமக்கையும் வந்திருப்பதால் சுரேந்திரன்,குடும்பத்துடன் தென்காசிக்கு செல்ல திட்டமிட்டார்! அதற்கு இன்னொரு முக்கிய காரணம் அடுத்த ஆண்டு முதல் இன்பா கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து விடுவாள்! இப்படி தந்தைக்கும் மகளுக்கும் சேர்ந்தார் போல விடுமுறை கிடைக்காது! சாருபாலாவும் எப்போது வருவாள் என்று சொல்ல முடியாது!

ஆகையால் குடும்பத்துடன் கிளம்பினர்! எல்லோரையும் ஆசையாக வரவேற்று உபசரித்தனர் தமிழரசன் குடும்பத்தினர்! அவர்களின் மகன் பிரியனை அண்ணா என்று உறவு கொண்டாடினாள் இன்பசுரபி! அவனுக்கும் தங்கை என்று யாருமில்லாததால் தங்கையாகவே பாவித்து, ஊர் சுற்றிக் காட்டினான்! திலகத்தையும் அன்போடு கவனித்துக் கொண்டார் செண்பகம்! அங்கே நான்கு நாட்கள் திகட்ட திகட்ட குற்றாலத்திலும், பாபநாசத்திலும் இடையே அகத்தியர் அருவியிலும் குளித்து மகிழ்ந்து, தமிழரசன் வீட்டின் விருந்தோம்பலையும் ஏற்றுக் கொண்டு மனநிறைவோடு ஊர் திரும்பினர்!

🩷🩵🩷

அந்த ஆண்டு ரிஷிகேசவனும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பிற்காக, வெளிநாடு கிளம்பிச் சென்றான்!

ஆனந்தனின் தொழில் சாம்ராஜ்யத்தின் இளவரசனாக அவன் திரும்பி வருவான் என்று நினைத்திருந்தார்!

நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே..!

 

Attachments

  • Picsart_24-05-04_15-06-13-739.jpg
    Picsart_24-05-04_15-06-13-739.jpg
    69.1 KB · Views: 13