• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

35. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு !

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
தென்காசி

தமிழரசன் - செண்பகம் தம்பதியரின் புதல்வன் ப்ரியரஞ்சனுக்கு பெண் பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது!

"மகனே உனக்கு பிடித்த பெண்ணை காட்டு, திருமணத்தை முடித்துவி டலாம்" என்று தமிழரசன் சொல்லியிருந்தார்!

" அதற்கு எல்லாம் எனக்கு நேரம் இல்லை அப்பா! நீங்களும் அம்மாவும் யாரை கைக்காட்டுகிறீர்களோ அவள் தான் என் மனைவி! நீங்களே நல்ல பெண்ணை பாருங்கள்" என்று முடித்து விட்டான்!

ஒரே மகன்,அவனுக்கு வாய்ப்பவள் நல்லவளாக மட்டும் இருந்தால் பத்தாது, கணவனுக்கு தோள் தருபவளாகவும் இருக்க வேண்டும்! இப்போது அவர்களுக்கு உள்ளூர பதற்றம்! தங்கள் தேர்வு தவறாகிவிடக் கூடாதே என்று! சுரேந்திரனிடமும் அவர் இது விஷயமாக கலந்து பேசியிருந்தார்!

இரண்டு பெற்றோர்களும பெண் தேடுவதில் தீவிரமாக இறங்கியிருந்தனர்!

இறுதியில், ஒரு பெண் கிடைத்துவிட்டாள்..! அவள்?

🩷🩵🩷

கோவை!

அந்தி சாயும் நேரத்தில் இன்பசுரபி,மாணவிகளுடன் தன் விடுதிக்கு திரும்பினாள் ! அவளையும் அறைக்கு செல்லவிடாமல் அமர்த்திக் கொண்டு அவரவர் வாங்கியதை கடைப்பரப்பிக் கொண்டிருந்தனர்! அபிப்பிராயம் சொல்லக் கேட்டனர்! மனதை முயன்று அவர்களின் பக்கம் கவனத்தை செலுத்தி, தன் கருத்தை சொன்னாள்! கூடவே, விலை தான் எல்லாமும் அதிகம் என்றாள்!

"ஆமாம், மாலில் போட்டிருக்கிற ஏசிக்கும், விளக்குகளுக்கும் கரண்ட் பில் கட்டணுமே! அதைத்தான் இப்படி வசுலிக்கிறானுங்க போல!" என்றாள் ஒருத்தி!

"தெரியுதில்லையா? அப்புறமும் ஏன் அங்கே போய் இதை வாங்கணும்? வெளிக்கடையில் இது பாதி விலைதான் தெரியுமா?"

"தெரியாமல் என்னடி? வெயிலில் அலைஞ்சு தான் அந்த கடைக்கு போகணும்! அதுவும் நடந்து வேற போகணும்! போனாலும் கடையில் ஒரே வெக்கையாக இருக்கும்! நின்று தேர்வு செய்வதற்குள் அந்த சின்ன கடையில் கசகசன்னு ஆகிடும்! அதிலும் ஒரே கூட்டம் வேற! இங்கே அப்படி இல்லை பார்! என்றாள் இன்னொருத்தி!

" உங்கப்பா என்ன நோய் அடிக்கிற மெஷினா வச்சிருக்கார்? கஷ்டப்பட்டு தானே சம்பாதிக்கிறார்! நம்மளைப் போல மிடில்கிளாஸ் குடும்பத்திற்கு பிறந்தால், கொஞ்சம் கட்டுதிட்டா இருக்கணும் என்று எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க! நமக்கு மால் எல்லாம் வெறும் பொருட்காட்சி போலத்தான்! இங்கே பொருட்களை பார்த்து வைத்து வெளியே வாங்கிக் கொள்ளலாம்! அதுதான் நல்லது!" இன்ப சொல்ல, சிலர் ஆமோதித்தனர்!,"இன்பா, நீ ஏன் மிடிகிளாஸ்னு உன்னை சொல்லிக்கிறே? பங்களா, கார், ஃபாரினில் இருக்கும் அத்தை என்று நீ பணக்காரி தானே?"என்றாள் செல்வந்தரின் மகளான ஒருத்தி!

"அதெல்லாம், என் அத்தையோடது தான்! என் வங்கி கணக்கில் நிறைய பணமும் அத்தை அப்பா இரண்டு பேரும் போட்டு வைத்திருக்காங்க! ஆனால் நான் அதை தேவைக்கு மேல செலவு செய்ய மாட்டேன்! உங்க எல்லாருக்கும், என் அப்பா ஒரு பேராசிரியர் என்று தெரியும் தானே? அதில் வரும் வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் நடக்குது! நாம எங்கே இருந்தாலும் நம்ம தகுதியை எப்பவும் மறக்கக்கூடாதுன்னு அப்பா சொல்வார்! அதைத்தான் நான் உங்களுக்கு சொன்னேன்!"

சற்று நேரம் அங்கே, ஆரோக்கியமான அவரவர் கருத்துப் பரிமாற்றம் நடந்தது! அதன் பின் மாலுக்கு வெறும் வேடிக்கை பார்க்கச் சென்றால் போதும் என்று முடிவுக்கு வந்து கலைந்து போனார்கள்!

இன்பாவும் அறைக்கு வந்து, உடை மாற்றிக் கொண்டு, உடல் அசதியை போக்க கட்டிலில் படுத்தவள் கண்களை தூக்கம் மெல்ல தழுவியது! சில கணங்கள் கடந்ததும், மூடிய விழிகளுக்குள் "என் பெயர்! ரிஷிகேசவன்!" என்று அழகாக சிரித்தபடி தோன்றினான் அவன்! திடுக்கிட்டுப் போய் எழுந்து அமர்ந்தாள்! ஏன் இப்படி ஒரு காட்சி? அவனது குரலும், அருகாமையும் இப்போது நினைத்தாலும் மேனியில் ஓர் சிலிப்பு ஓடியது! என்ன உணர்வு இது? எதேச்சையாக நிகழ்ந்த ஒரு சம்பவம் அதற்கு நான் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறேன்? ஆண்களிடம் அதிகம் பழகியிராததால் என்று சொல்ல முடியாது!

ப்ரியா ரஞ்சன் அண்ணாவுடன் பேசிப் பழகியிருக்கிறேன்! விடுமுறையில், குடும்பத்துடன் அங்கே போவது வழக்கமாகிவிட்ட ஒன்று! அவர் அருகில் நின்று பேசும்போது அரட்டை அடிக்கும் போதும் தோன்றாத உணர்வு, இந்த அந்நியனின் அருகாமையில் ஏன் தோன்றுகிறது??

"எஸ்.. எஸ்... அவர் அண்ணன் என்ற உறவு முறையோடு பழகுகிறவர்! இவன் அந்நியன் ! அதுதான் அந்த வித்தியாசம்!

தன் குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைத்துவிட்டதாக சமாதானம் அடைந்தாள் அந்த சின்னப் பெண்!

நேசம் பற்றிக்கொள்ள.. பார்வை ஒன்றே போதும் என்பதை கம்பர் .. அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் என்று அழகாக சொல்லியிருக்கிறாரே!

இவர்களுக்கு அது எப்போது புரியும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

🩵🩷🩵

கோவை

இரவு நேரம்!

கட்டிலில் படுத்திருந்தான்! ஊரெல்லாம் சுற்றிவிட்டு வந்து படுத்தவுடன் தூங்கிப்போகிறவன், அன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்! காலையில் நடந்த நிகழ்வை என்ன முயன்றும் அவனால் அதில் இருந்து மீள முடியவில்லை!

ரிஷிக்கும் முதல் முறையாக ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த தருணம் அதுதான்! காதல் இல்லை என்ற நினைப்பில் இருந்தவனுக்குள், அந்தக் கணத்தில் ஏற்பட்ட உணர்வை என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை! காலம் முழுவதும் அவளை தன்னுடனே வைத்துக்கொள்ளும் பேராவல் உண்டான போது திகைத்துப் போனான்! சட்டென்று அவன் எழுந்து அமரவும் வசந்தனின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது

ஆருயிர் நண்பனான வசந்தனும், அவனும், எப்போதும் தங்கள் மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வது வழக்கமான விஷயம்! இன்பாவை முதல் முறையாக பார்த்ததும், அதன் பிறகான நிகழ்வுகளையும் பகிர்ந்து வந்திருந்தான்!

அப்போதே,"என்னடா மச்சான்? புதுப்பழக்கம்? பொண்ணுங்களை சைட் அடிக்கிறே? வெளிநாட்டில் நீ இதை விட அழகான பெண்களை பார்த்திருப்பாய்! அப்போ எல்லாம் நீ இப்படி சொல்லவில்லையேடா? "

"நிறைய பெண்கள் என்கூட வேலை செய்றாங்க, அவங்களும் அழகுதான்! ஆனால் இந்தப் பொண்ணுக்கிட்டே ஏதோ ஒன்று தனியாக தெரிகிறாள்!"

"அதெல்லாம் சரிடா, ஆனால் அந்த ஒரு பெண்ணைப் பற்றியே நீ சொல்றே ! மாலுக்கு போனால் அங்கே வந்தாள்னு சொல்றே! ரத்ததானம் கொடுக்கப் போன ஹாஸ்பிட்டலில் அவள் டாக்டராக இருக்கிறாள் என்று சொல்றே! எனக்கு என்னவோ, நீ அந்தப் பெண்ணை காதலிக்கிறேன்னு தோனுது மச்சான்!"

"ப்ச், அப்படி இருந்தால் உன்கிட்ட சொல்லாமல் மறைப்பேனாடா? எனக்கு அவளை பார்க்க பிடிச்சிருக்கு அவ்வளவு தான்! ஒரு பூவை பார்க்கிறோம் பிடிச்சிருந்தால் ரசிப்பது இல்லையா? அதே பூவை எங்கே பார்த்தாலும் ரசிப்போம் தானே? இதுவும் அப்படித்தான்!" என்று முடித்துவிட்டிருந்தான்!

இன்றைய நிகழ்வை அவன் நண்பனிடம் சொல்லும்போதே குரல் மென்மையாக ஒலித்தது! ஏதோ கண்முன்னே காணும் காட்சியை விளக்குகிறவனைப் போல அவன் சொன்னான்!

வசந்தன் சிலகணங்கள் மௌனமாக இருந்தான்!

"டேய் என்னடா பதிலையே காணோம்? நான் சொன்னதை நீ நம்பலாமா?"

"நம்புகிறேன் ரிஷி! ஆனால் இது வெறும் ஈர்ப்பு இல்லை மச்சான்! காதல் தான்! எனக்கு நிச்சயமாக தெரியுது! ஆனால் நீ ஒத்துக்க மாட்டே!"

"ப்ச், இன்னைக்கு நடந்ததை வச்சு என்னால ஒரு முடிவுக்கு வர முடியலை! எனக்கும் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதுடா!"

"சரி சரி குழப்பிக்காதே! ஊர்ல அம்மா, அப்பா தம்பி எல்லாம் எப்படி இருக்காங்க?"

"ஆல் ஃபைன்டா! மேல்படிப்புக்கு ஃபாரின் போகச் சொன்னா, ரகு மாட்டேங்கிறான் ! நல்ல மார்க்ஸ் எடுத்திருக்கான்! Scholarship கிடைக்கும் ! நீ எதுக்கும் ஒரு தடவை அவன்கிட்டே பேசுடா!"

"அவன் ஏதும் பிளான் வச்சிருப்பான்டா! அதுபத்தி உன்கிட்ட சொன்னானா?"

"ஹா ஹா... குட் ஜோக்! பிளானா? அவனாடா? அவன் எதையும் சீரியஸாக எடுத்து நீ பார்த்திருக்கிறாயாடா?"

"அவன் கொஞ்சம் ஜாலியான பையன் தான்டா! ஆனால் அவனுக்குன்னு எதிர்காலத் திட்டம் வச்சிருப்பான்ல! சரி, நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்!" என்று வசந்தன் பேச்சை முடித்துக் கொண்டான்!

ரகுவாசன் கல்லூரி படிப்பை முடித்திருந்தான்! அவன் கொஞ்சம் விளையாட்டு பிள்ளை! அம்மாவிற்கு செல்ல பிள்ளை! அண்ணனுக்கும் பாசமான தம்பி! தந்தை எப்போதும் அவனை கண்டிப்பதே வேலையாக வைத்திருந்தார்!

ரிஷியைப் போல அவனுக்கு படிப்பில் அத்தனை ஆர்வம் கிடையாது ! ஆனால் அவன் முயன்றால் முடிக்காமல் விடமாட்டான்! அதில் இரு மகன்களும் தந்தை வழிதான்!

தம்பியின் நினைவில் அவனுக்கு இன்பாவின் நினைவு பின்னுக்கு சென்று விட்டது!

வசந்தனின் நோக்கமும் அதுவாகத் தான் இருந்தது! நண்பனை அவன் நன்கு அறிந்து வைத்திருந்தான்! இன்பாவைப் பற்றி மேலும் பேசினால் அவன் அதிலேயே தீவிரமாக மனதை அலட்டிக் கொள்வான் என்று தெரியும்! காதல் என்று அவனாக எப்போது உணர்கிறானோ அப்போது உணரட்டும்! அது மட்டுமின்றி, அந்தப் பெண்ணும் அதே அலைவரிசையில் இருந்தால் சரி! அப்படி இல்லாத விதத்தில் இதை ஊக்கப்படுத்துதல் சரியில்லை என்று தான் அவன் ரகுவின் பேச்சை எடுத்தது!

"மச்சான், நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கிறேன் பார்! என் தங்கை வித்யா படிப்பை முடிச்சிட்டாள்! மேலே படிக்கணும் சொல்கிறாள்! ஆனால் அப்பா, கல்யாணத்தை பண்ணி வைச்சிட்டா ஒரு கடமை முடியும்னு சொல்றார்! அம்மாவும் அதைத்தான் சொல்றாங்க! மேல படிக்க வைக்கிறதுல கஷ்டம் ஏதும் இல்லை! ஆனால், அதுக்கு ஏற்ற மாப்பிள்ளையாக தேடணும், விஷயம் அதோட முடியுமா,சீர்வரிசை, ரொக்கம், நகைன்னு நிறைய கேட்பாங்களே என்பது தான் அவங்க கவலை! எனக்கு யார் பக்கம் பேசுவதென்றே தெரியவில்லைடா!

"இரண்டுமே நியாயமாகத்தான் இருக்கிறதுடா! இதுக்கு ஒரே ஒரு தீர்வு தான் இருக்கு!" என்றான் ரிஷி!

அது என்ன தீர்வு?

 

Attachments

  • Picsart_24-05-04_15-06-13-739.jpg
    Picsart_24-05-04_15-06-13-739.jpg
    69.1 KB · Views: 11