• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

38. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
கோவை

அன்றைக்கு மருத்துவப் பயிற்சி பெறும் மாணாக்கர்களில் ஒவ்வொரு குழுவினருக்கும் வேலை நேரங்களை பிரித்து கொடுப்பது வழக்கம்! அப்படித்தான் இன்பா இருந்த குழுவிற்கு அன்றைய தினம்
இரவு பணி கொடுத்திருந்தனர்!

மருத்துவமனை வளாகத்தில் நாலு வருடங்கள் தங்கியிருக்க விடுதி தந்திருந்தனர்! கடைசி வருடம் அவர்கள் பயிற்சியாளர்கள் என்பதால் வளாகத்திற்குள் வேறு ஒரு இடம் ஒதுக்கி தந்திருந்தனர்! ஆனால் அது இன்பாவின் குழுவில் உள்ள மாணவிகளுக்கு பிடிக்காததால், மருத்துவமனையில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் வேலை செய்யும் பெண்களுக்காக நடத்தப்பட்ட மகளிர் விடுதியில் தங்கிக் கொண்டனர்!

இன்பா விடுதியில் இருந்து கிளம்பியதே சற்று தாமதமாகத்தான்! அவளது குழுவினர், முன்னதாக சென்று விட்டிருந்தனர்! அவள் வெளியில் வந்த போது லேசாக தூறல் போட்டுக் கொண்டிருந்தது வானம்! பக்கத்தில் தானே, சீக்கிரமாக போய் விடலாம் என்று குடையை பிடித்துக் கொண்டு சற்று வேகமாக நடக்கத் தொடங்கினாள்!

இன்பாவின் விடுதி ஊருக்கு வெளியே புறநகர் பகுதியை தாண்டியிருந்தது! அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டப்பட்டும், கட்டப்படாமலும் வீடுகள் காணப்பட்டது! இது தவிர படிப்பதற்கு மட்டுமின்றி வேலைக்கு செல்லும் இளைஞர்கள்,யுவதிகள் என்று வந்து தங்கிக்கொள்ள தனியாக அறைகளையும் அங்கிருந்த குடியிருப்பினர் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர்!

விடுதியில் இருந்து தொடங்கும் சாலை மருத்துவமனை வளாகத்தில் சென்றடையும்! அதனை கடந்தால் வேறு வகை கல்லூரி வளாகமும் இருக்கிறது! வழியில் பேருந்து நிறுத்தம் உண்டு, சாலையின் இருபுறமும் வரிசையாக மரங்கள் உண்டு! இன்னும் கொஞ்சம் தூரம் போனால் மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் ஒரு சின்ன பெட்டிக்கடையும், டீக்கடையும், இருக்கும் இரவு ஏழு மணிக்கு அதையும் மூடிவிடுவார்கள்! மக்கள் நடமாட்டம் அறவே இருக்காது! ஒரே ஆறுதலாக
சாலையோரம் இருக்கும் மின் விளக்கு கம்பங்கள்!

காற்றின் வேகத்தில் இன்பாவுக்கு, நடக்க சற்று சிரமமாக இருந்தது! கையில் குடை, கைப்பை, இதில் பின் செய்யப்பட்ட துப்பட்டா வேறு பறந்தது! இரு முனைகளையும் சேர்த்து முடிச்சிட்டு கட்டுப்படுத்தினாள்! அவள் சிரமத்துடன், நடந்து கொண்டிருந்த வேளையில் பெரிய பெரிய மழைத்துளி சற்று மிதமான வேகத்தில் விழ ஆரம்பித்தது. அக்கம்பக்கம் ஒதுங்க கூட இடம் கிடையாது! மரத்தடியில் போய் நிற்பதும் பாதுகாப்பு இல்லை என்று அவள் குடையை பிடித்தவாறு செய்வதறியாமல் நின்றுவிட்டாள்!

அப்போது தான் அந்த காரின், ஹார்ன் ஒலி கேட்டது, வண்டியின் வெளிச்சம் தூரத்தில் தெரிந்தது! யாரோ நோயாளியை அழைத்து வருகிறார்கள் போலிருக்கிறது என்று எண்ணி இன்பா சற்று ஒதுங்கி நிற்க, கார் வேகம் குறைந்து, அவளருகே வந்து நின்றது! முன் பக்கம் ஓட்டுனர் இருக்கையின் அருகில் இருந்த கதவு திறந்து கொள்ள,"காரில் பேஷன்ட் இருக்கார்மா ! உங்களையும் ஏற்றிக் கொள்ள அவர்தான் சொன்னார்! சீக்கிரமாக ஏறுங்கம்மா!" என்றதும் இன்பா பயந்து பின் வாங்கினாள், அதற்குள் பின் பக்கத்து கதவின் கண்ணாடி இறங்க,"ஓ! இன்பா, நீங்கதானா? சீக்கிரமாக ஏறுங்க, நான் ரிஷிகேசவன்" என்று சொன்னான்! அதன் பின் இன்பா தாமதிக்காமல் ஏறிக்கொண்டாள்!

மருத்துவமனைக்குள் சென்றதும், இன்பா இறங்கி,பின் கதவை திறந்தாள்! ரிஷிக்கு வலது காலில் அடிபட்டிருந்தது! இன்பா ஒரு மருத்துவராக, அவன் இறங்குவதற்கு கைகொடுத்து உதவினாள்! அவனால் சரியாக நிற்க முடியவில்லை! பற்றுதலுக்கு காரின் கதவை பிடித்துக் கொண்டான்! அதற்குள்ளாக, ஓட்டுநர் ஓடிச்சென்று வீல் சேரை கொண்டு வரச் செய்திருந்தார்!

ரிஷி அதில் அமருவதற்கு உதவி செய்தாள் இன்பா! அட்டென்டர், வீல் சேரை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல, "அவருக்கு எப்படி அடிபட்டது? "என்று ஓட்டுநரிடம் வினவினாள்!

"மெயின் ரோடில் இருந்து, உள்ளே வர்ற வழியில், தார் சாலை இருக்குதேமா, அங்கே தான்,இவர் பைக்கில் வந்துட்டு இருந்தார், நான் அந்தப் பக்கமாக சவாரி முடிச்சுட்டு திரும்பி மெயின் ரோட்டுக்கு போயிட்டு இருந்தேன்மா, அப்ப அங்கே "மங்களம்" என்று ஒரு பெரிய காலனி இருக்குதே, அதுக்குள்ளே இருந்து வந்த ஆட்டோக்காரன், அவர் மேலே இடிச்சுட்டு நிற்காமல் போய்விட்டான்மா, அங்கே வேற ஆள் நடமாட்டமே இல்லை! நல்ல வேளை நான் பார்த்தேன்! வண்டியை பூட்டி ஓரமா நிறுத்திட்டு கூட்டிட்டு வந்தேன்!"

"உங்களைப் போல நல்லவங்க இருக்கப் போய் தான், நாட்டுல கொஞ்சமாவது மனிதாபிமானம் பிழைச்சிருக்கு ஐயா!எனக்கு டூட்டிக்கு லேட்டாகுது, நான் வர்றேன்" என்று இன்பா உள்ளே விரைந்து, ரேகை பதிவில் பதிவிட்டுவிட்டு, மருத்துவர்களின் ஓய்வறைக்கு விரைந்தாள்!

ரிஷிக்கு முழங்காலில் சற்று பெரிய காயம் தான்! மருத்துவர் பரிசோதித்து
விட்டு, ஊசி மருந்து எழுதிக் கொடுத்து, காயத்திற்கு கட்டுப் போடச் சொல்லி செவிலிப்பெண்ணிடம் பணித்தார்! வீல் சேரில் அவனை ட்ரெஸ்ஸிங் அறைக்கு அழைத்துப் போனாள் அவள்!

மருத்தவர் கோட் அணிந்து உடையை திருத்திக் கொண்டவள், வேகமாக வரவேற்பிற்கு வந்தாள் இன்பா! ரிஷி அங்கே இருக்கும் அறிகுறியே தெரியவில்லை! ஒரு வேளை மருத்துவரிடம் போயிருப்பானோ? என்று எண்ணினாள்!

கூடவே அன்று அவள் ஏற்கனவே கொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறாள்! இதில், டீன் அவளை அங்கே பார்த்தால் அவ்வளவுதான்! பயிற்சி காலம் என்பதால், எல்லாரிடமும் பணிந்து போக வேண்டிய கட்டாயம்! ஆகவே, அவளது தினப்படி வேலை காரணமாக தொடர்ந்து அங்கே நிற்க இயலாது உள்ளே சென்றாள்!

ஆனால், சற்று நேரத்திற்கு பின் தான், ரிஷிக்கு காலில் கட்டுப் போட்டு முடித்து, வரவேற்பறைக்கு வீல் சேரில் அழைத்து வந்தான் அட்டென்டர்! வெளியே மழை இன்னும் பெய்து கொண்டிருந்ததால், அங்கே மருத்துவரை பார்க்க காத்திருந்த நோயாளி ஒருவரிடம் குடையை இரவல் வாங்கி,அவனை கொண்டு போய் காரில் ஏற்றிவிட்டான் !

காரில் ஏறிய ரிஷிக்கு இன்பாவை இன்னொரு முறை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று சின்னதாக ஒரு ஆதங்கம்! கூடவே இங்கே தான் அவள் பணி புரிகிறாள் என்று முன்னொரு தரம் அவன் வந்து சென்ற ஞாபகம் வந்தது! அப்போது தான் அவள் மருத்துவராக பணிபுரிவதை அறிந்து கொண்டதே! இனி எப்போது நினைத்தாலும் பார்க்க முடியும் என்ற எண்ணமே அவனுக்குள் கால் வலியை தாண்டி உற்சாகத்தை கொடுத்தது!

உள்ளே பணியில் ஈடுபட்டுடிருந்த இன்பாவுக்கும் கூட அதே ஆதங்கம் தான்! உதவி செய்தவனுக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் வந்து விட்டோமே, அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வான்? என்று சின்னதாக ஒரு கவலை உண்டாயிற்று! கூடவே அவன் ஏன் இந்த நேரத்தில் இந்தப் பக்கமாக வந்தான் என்ற யோசனையும் தோன்றியது!

💜🩷🩵

ரிஷியும் அதே புறநகர் பகுதி தொடங்கும் இடத்தில் தான் அறை எடுத்து தங்கியிருந்தான்! காரணம் அவனது நிறுவனம் அந்த பிரதான சாலையில் தான், பைக்கில் சென்றால் பத்து நிமிடத்தில் சென்று விடும் தூரத்தில் இருந்தது!

வாடகை கார் ஓட்டுநர், அவனை அறைக்குள் கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றார்! இரவு உணவும் வாங்கி வருவதாக அவர் சொன்னபோது, ரிஷி அதை மறுத்து விட்டான்! அவர் சென்றதும்,போனில் உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு கட்டிலில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டான்!

மூடிய விழிகளுக்குள் இன்பா வந்து போனாள்! மருத்துவமனை வந்ததும் ஒரு நன்றியுடன் அவள் போயிருக்கலாம்! அதை தவறு என்றும் கருத முடியாது! ஆனால் காரில் இருந்து அவன் இறங்குவதற்கு இயல்பாக உதவி செய்தது நினைவுக்கு வந்தது! அது அவளது பணி நிமித்தமாக இருக்கலாம்!

அவன் காரில் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த போது, வலியில் கண்களை மூடி சாய்ந்திருந்தான்! அப்போதுதான் வழியில் யாரோ ஒரு பெண் நிற்கிறாள் என்று ஓட்டுநர், தெரிவிக்கவும், அவன் கண்களை திறந்து பார்த்தான்,அங்கே
நின்றது இன்பா என்று அவனுக்கு மழையின் சாரலின் விளைவாக தெரியவில்லை! யாரோ ஒரு பெண், அவளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சரி என்றிருந்தான்!

ஓட்டுநர் அழைத்தும்,அந்தப் பெண் தயக்கம் காட்டவும் சற்று எரிச்சல் தான் உண்டாயிற்று! முயன்று கண்ணாடியை இறக்கி அவளை திட்டத்தான் நினைத்தான்! ஆனால் அவள் இன்பா என்றதும் அவனது மனம் இருந்த வலியை மறந்து ஆனந்தமானது நிஜம்! தெரிந்த பெண்ணை பார்த்தால் உண்டாகும் மகிழ்ச்சியா ? அல்லது அதற்கு வேறு அர்த்தம் இருக்கிறதா? தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த போது அழைப்பு மணி ஒலிக்க, நிகழ்வுக்கு திரும்பினான்! அவனுக்கு காலை எடுத்து வைத்து நடக்க முடியும் போல தோன்றவில்லை! ஆகவே,"உள்ளே வாங்க, கதவு திறந்து தான் இருக்கு "என்று குரல் கொடுத்தான்!

"உணவு கொண்டு வந்திருந்த பையன், உள்ளே நுழைந்தான்! அவனது நிலையைக் கண்டு, அங்கிருந்த டீபாயை எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு, " வேற ஏதும் வேணுமா சார்?" என்றான் அக்கறையாக!

"வாட்டர் பாட்டில் எடுத்து கொடுப்பா,வேற ஏதும் வேண்டாம்! போகும் போது கொஞ்சம் இழுத்து கதவை மூடிவிட்டுப் போயிடு! ரொம்ப ரொம்ப நன்றி தம்பி!"

சொன்னது போல செய்துவிட்டு வந்தவன் சென்றுவிட, ரிஷிக்கு இந்த காலத்திலும் மக்களிடம் மனிதாபிமானம் இன்னும் மிச்சம் இருக்கிறது, இல்லாவிட்டால், யாரையும் தெரியாத இந்த ஊரில், அவன் இந்நேரம் ரோட்டில் தான் கிடந்திருப்பான்! கடவுளுக்கு நன்றி! என்று மனதார சொன்னான்!

ரிஷி கோவில் குளம் என்று போகிறவன் இல்லை! ஆனால் அவனது அன்னைக்கு அதில் அதிக நம்பிக்கை உண்டு! வீட்டு நினைவு வந்தது! இதை சொன்னால் பதறிக்கொண்டு வந்து நிற்பார்கள்! அகவே அவன் சொல்லாமல் விட்டு விட்டான்!

ரிஷி உணவை முடித்து விட்டு, மருந்துகளையும் எடுத்துவிட்டு, படுக்கை அருகே இருந்த, விளக்கின் ஸ்விட்ச்சை அணைக்க, கைகளை கொண்டு சென்ற போது வசந்தனின் வீடியோ அழைப்பு வந்தது! இருவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதால் தினமும் இல்லாவிட்டாலும், வாரத்தில் நாலு நாட்களாவது தொடர்பு கொண்டு பேசிக் கொள்வார்கள்! இன்று அவனுக்கு சொல்ல விசயம் இருந்தது!

"டேய் மச்சான் என்ன பண்றே?"என்றான் வசந்தன் உற்சாகமாக!

"புதையல் எடுத்துட்டு வந்து படுத்துக் கிடக்கிறேன்டா!" என்றவன்,நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்!

"ஏன்டா, உனக்கு எத்தனை தடவை சொல்றது, நிதானமாக வண்டியை ஓட்டு என்று! ஏதோ இத்தோடு போச்சு! உனக்கு ஏதும் என்றால் என்னால் நிச்சயமாக தாங்கிக்க முடியாது ரிஷி! "என்றபோது அவன் கண்கள் கலங்கி, குரல் தளுதளுத்தது!

வசந்தன் கொஞ்சம் திடமானவன் தான்! ரிஷிக்கு ஒன்று என்றால் அவன் இப்படித்தான் எப்பவும் உணர்ச்சிவசப்பட்டு விடுவான்! அவ்வளவு பாசம்! ரிஷிக்கும் அப்படித்தான்!

"ப்ச், மாப்பிள்ளை, அதுதான் ஒன்றும் ஆகவில்லையே! ஆமா, என்னடா இன்னிக்கு திடீர்னு, வீடியோ கால் பண்ணியிருக்கிறே?என்று அவனது கவனத்தை திசை திருப்ப முயன்றான்!

வசந்துக்கும் அது புரிய, "உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு அதான்டா! ஆனால் இப்ப நீ ரொம்ப களைச்சு தெரியறே! அதனால் தூங்கி ரெஸ்ட் எடுடா! நான் நாளைக்கு கால் பண்றேன்! குட் நைட்! " வசந்தன் சொல்லும் போதே ரிஷிக்கு தூக்கம் கண்களை சுழற்றியது...!

உண்மையில் வசந்தன் சொல்ல வந்த விஷயம் வேறு..!
 

Attachments

  • Picsart_24-05-04_15-06-20-975.jpg
    Picsart_24-05-04_15-06-20-975.jpg
    69.1 KB · Views: 9