கொட்டிவாக்கம்
திங்கள் அன்று, தமிழரசன் சொன்னது போலவே திலகத்தை மருத்துவமனைக்கு பிடிவாதமாக அழைத்துப் போய் விட்டார்! அவரை பரிசோதித்த மருத்துவர், ஆம்மாள் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் ரத்த அழுத்தம் குறைவால் தான் மயக்கம் வந்திருக்கிறது என்று தெரிவித்து, அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றினார்! மேலும், ஆலோசனை வழங்கி சில மருந்துகளையும் எழுதி கொடுத்து அனுப்பி வைத்தார்!
தமிழரசன் வீட்டில் கொணர்ந்து திலகத்தை விட்டுவிட்டு மதிய உணவுக்குப் பிறகு கிளம்பிச் சென்றார்!
சும்மாவே சாந்தி திலகத்தை அப்படி கவனித்துக் கொள்வார் இப்போது கேட்கவா வேண்டும்?
"நான் என்ன சின்ன குழந்தையா? இதை சாப்பிடு அதை குடின்னு இப்படி பாடா படுத்துறியேடி!"என்று செல்லமாக அலுத்துக் கொண்டார் திலகம்!
திலகத்திற்கு உள்ளூர சாருபாலாவின் வாழ்க்கை இப்படி ஆனதில் மிகுந்த வருத்தம் உண்டு! மறு கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி எல்லாருமே வலியுறுத்திப் பார்த்து தோற்றுப் போனார்கள்!
"அந்த ஆளு செய்த தப்பை நானும் செய்ய மாட்டேன்! அது மட்டும் இல்லாமல் என் லட்சியமே மக்களுக்கு சேவை செய்வது தான்! அதனால் நான் இப்ப நிம்மதியாக இருக்கிறேன்! இப்படியே இருந்துட்டுப் போறேன்! விட்டுடுங்க!" என்றிருந்தார்!
ஆனால் திலகத்திற்கு, முதல் முறையாக தனக்கு அம்மா என்ற ஸ்தானத்தை கொடுத்தவள் என்று அவள் மீது மிகுந்த பிரியம்! பெற்ற மகளைப் போலவே பாவித்து வருகிறார்! அதனால் அவள் ஒரு துறவு வாழ்வு வாழ்வதை அவரால் தாங்க முடியவில்லை! அவருக்கு பிள்ளை செல்வம் இல்லை என்பது வித்த விதி! ஆனால் பெற்றும் சாரு அந்தப் பிள்ளையை காணவோ, உறவாடவோ கொடுப்பினை இல்லாமல் வாழ்வதை பார்த்து, ரொம்பவும் வருத்தம்! அவளது பிற்காலமாவது அந்தப் பிள்ளையுடன் அவள் வாழ்ந்தால், அதுவே அவரது ஆத்மாவிற்கு பெரும் நிம்மதியை தரும்! அதற்காக அவர் ஒரு முயற்சி செய்ய நினைத்திருக்கிறார்! ஆனால் அதற்கு நம்பிக்கையான ஆள் வேண்டும்! அவரைப் பொறுத்தவரை அவரை சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே நம்பிக்கையானவர்களே! ஆனால் அவரது முயற்சியை ஆதரிப்பார்களா என்ற சிறு ஐயம் அவருக்கு இருக்கிறது! சாருவை நினைத்துதான் அனுதினமும் அவருக்கு கவலை! அதனால தான் தன்னை பேணுவதில் அக்கறையற்றுப் போனார்! வெகுநேரம் யோசனையில் இருந்தவர், இனி அப்படி இருக்க கூடாது! என்ற முடிவிற்கு வந்தார்!
🩷🩵
கோவை
வியாழக்கிழமை
இரண்டு தினங்களுக்கு முன்பு , ரிஷிக்கு காலில் அடிபட்டு மருத்துவமனை சென்று காயத்தில் தையல் போட்டு வந்தது! இன்றைக்கு மீண்டும் மருத்துவர் தையலை பிரிக்க வரச் சொல்லியிருந்தார்! அவர் தந்த மருந்துகளும் முடிந்து விட்டிருந்தது! காலில் வலி குறைந்து இருந்தது! இரண்டு நாட்களும் வீட்டில் இருந்தபடியே தன் அலுவல் பணிகளை செய்து கொண்டான்!
வசந்தன் சொன்னது போல, மறுநாள் அழைக்க முடியவில்லை! அவனுக்கு வேலைப் பளு! வெறும் நல விசாரிப்பு மட்டும் குறுந்தகவல் மூலமாக நடந்தது!
மருத்துவமனைக்கு செல்வது என்றால்,ஆட்டோ பிடிக்க வேண்டும், பைக்கை அவனால் ஓட்ட முடியும் போல தோன்றவில்லை! ஆகவே வீட்டு ஓனரிடம் சொல்லி, ஆட்டோவை வரவழைத்தான்!
மாலை ஆறு மணிக்கு கிளம்பினான்! போகும் வழியில் அவன் இன்பாவை, அவளது சக மாணவிகளுடன் பார்த்தான்! அவள் அவனை கவனிக்கவில்லை!
மருத்துவமனையில் சென்று, ஆட்டோவை வெயிட்டிங்கில் போட்டுவிட்டு, நோயாளிகள் அமரும் இருக்கை ஒன்றில் அமர்ந்து, இன்பாவுக்காக காத்திருந்தான் ரிஷி! அவனுக்கே ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று தோன்றத்தான் செய்தது! ஆயினும் அவனுக்கு இது ஏதோ ஒருவித குதூகலத்தை உண்டுபண்ணுவதை உணர்ந்தான்!
சற்று நேரத்தில் இன்பா வந்து சேர்ந்தாள்! அவனைப் பார்த்துவிட்டாள்! ரேகைப்பதிவில் பதிவு செய்துவிட்டு, தனது கைப்பையை சக மாணவியிடம் கொடுத்து அனுப்பியவள், அவனிடம் வந்தாள்!
"இப்ப கால் வலி எப்படி இருக்கு? கட்டுப்பிரிக்க வந்தீங்களா?" என்று இயல்பாக கேட்டாள்!
இன்பா அருகில் வரவும் ரிஷிதான், கொஞ்சம் வெலவெலத்துப் போனான்! அவள் அப்படி வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை! சும்மா அவளை பார்த்துவிட்டு, பிறகு தையலைப்பிரித்து விட்டு கிளம்பிவிடலாம் என்று நினைத்திருந்தான்!
"என்னாச்சு மிஸ்டர் ரிஷிகேசவன்? இன்னும் வலி இருக்கிறதா?" என்றாள் லேசான கவலையுடன்!
"ஆமா, இன்னும் லேசாக வலி இருக்கிறது தான், அதனால் தான் பைக் கூட ஓட்ட முடியலை" என்று சம்பந்தமின்றி! அவனாக ஏதோ பேசி வைத்தான்!
"பைக் ஓட்ட அவசரம் என்ன? வலி கொஞ்ச நாளைக்கு இருக்கும் தான்! டாக்டர் சொல்றதை ஃபாலோ பண்ணுங்க சரியாகிடும் " என்றவள் நினைவு வந்தார்போல,"அன்னிக்கு லிப்ட் கொடுத்ததுக்கு தாங்க்ஸ்!" அன்னிக்கே சொல்றதுக்காக நான் வந்து பார்த்தேன், நீங்க இல்லை! அதான் இன்னிக்கு சொல்லிட்டேன்!" என்றாள்
"இதெல்லாம், பெரிய உதவியாங்க, மனுசங்களுக்கு மனுசங்க கஷ்டம்னா செய்யறது தான்!"என்றான்
"அது சரிதான் ! நீங்க, தன்னடக்கமா சொல்றீங்க, மிஸ்டர் ரிஷி!" காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" என்று வள்ளுவரே சொல்லியிருக்காரே! அந்த மாதிரியான உதவிதான் நீங்க எனக்கு செய்தது!"
ரிஷிக்கு, வியப்பாக இருந்தது! இந்த காலத்தில், கல்லூரி மாணவிகளும் சரி, வேலைக்கு செல்லும் யுவதிகளும் சரி,நாகரீகம் என்ற பெயரில் ஆங்கிலத்தில் உரையாடுவதைப் பார்த்தே பழக்கப்பட்டிருந்தவனுக்கு, இன்பாவின் இந்த குறள் விளக்கம் அவளை வித்தியாசமான பெண்ணாக காட்டியது!
ஆகவே,"வாவ்..குறளில் இருந்து உதாரணம் எல்லாம் சொல்றீங்களே? சூப்பருங்க நீங்க!" என்று மனதார சிலாகித்து சொன்னான்!
இன்பாவிற்கு சற்று கூச்சமாகிவிட்டது, சட்டென்று வேறு பேச நினைத்தவள், ஏற்கனவே நினைத்ததை கேட்டு வைத்தாள்,"அட இது ஒன்னும் புது விஷயம் இல்லை! மிஸ்டர் ரிஷி, அன்றைக்கு,அந்தப் பக்கம் வந்ததால உங்களுக்கு அடிபட்டது என்று, இங்கே வந்தீங்க சரி,தையல் பிரிக்க என்றால், சிட்டியில் நிறைய ஹாஸ்பிடல் இருக்குதே, அங்கே போகாமல் எதுக்கு இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கீங்க?" என்றாள்!
ரிஷியின் கண்களில் மின்னல் வந்து போயிற்று! "நான் ஏங்க சிட்டிக்கு போகணும்? நான் இங்கே தான் பக்கத்துல தானே தங்கியிருக்கேன்!
அன்னைக்கும் நான் வேலை முடிஞ்சு வந்துட்டு இருந்தப்ப தான் அந்த ஆட்டோக்காரன் என்னை இடிச்சுட்டுப் போயிட்டான்! இரண்டு நாளா வீட்டுக்குள்ளே இருந்து ஆபீஸ் வேலையை பார்த்தேன் தெரியுமா?" ரிஷி அவளுக்கு பதில் சொல்வது போல மறைமுகமாக நான் அருகில் தான் இருக்கிறேன் என்ற செய்தியை தெரிவித்தான்!
அவன் சொன்ன செய்தியில், ஒருகணம் திகைத்த, இன்பாவின் முகத்தில் அசடு வழிய,நுனி நாக்கை கடித்து நெற்றியில் உள்ளங்கையால் லேசாக தட்டிக் கொண்டு, "ஓ! ஓகே ஓகே, ஐ'ம் சாரி, மிஸ்டர் ரிஷி" என்றவள், யாரோ அழைப்பது போன்ற பாவனையில் "இதோ வர்றேன்"என்று உள்ளே விரைந்தாள்!
இன்பாவின் அந்த தோற்றம் ரிஷியின் மனதை கொள்ளை கொண்டுவிட்டது! மனதுக்குள் Spb & Spb சரணும் ஹம்மிங்குடன் பாடினார்கள்!
"அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னை பார்த்த அந்த நிமிஷம்
ஒறஞ்சி போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
புலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே....
அதற்குள் செவிலிப் பெண் வந்து அழைக்க, புன்னகை மாறாமல்,எழுந்து சென்றான்!
அன்றிரவு வசந்தன் காணொளியில் அழைத்தான்!
ரிஷியின் முகமும் கண்களும் பிரகாசமாக தோன்றியது! "டேய் மச்சான் என்னாச்சு முகமே பல்பு போட்ட மாதிரி வெளிச்சமா தெரியறே? என்னடா விசேஷம்?"
"ஒன்னுமில்லை, ஒன்னுமே இல்லையேடா! ஆமா, அன்னிக்கு போட்டோ அனுப்பினியே முழுவிவரம் சொல்லவே இல்லை?"
பையன் எதுக்கு பம்முறான்? எப்படியும் நம்மக்கிட்டே தான் வந்தாகணும்! விட்டுப் பிடிப்போம் ! இப்ப சொல்ல வந்த விஷயத்தை முதலில் சொல்வோம் என்று எண்ணியவன்,"நாளைக்கு வித்யாவை பொண்ணு பார்க்க அந்த பையன் வீட்டில் இருந்து வர்றாங்களாம் ரிஷி! உன்னை போக சொல்ல நினைச்சேன்! நீ காலில் அடிபட்டு உட்காரந்திருந்தே! அதான் சொல்லாமல் விட்டுட்டேன்! இப்ப உன்கூட கால் காயம் பரவாயில்லையாடா?"
"ரொம்ப சாரிடா, என்றவன், தையல் பிரிச்சாச்சுடா, வலி லைட்டா இருக்கு! அதை விடு, நான்தான் அன்னிக்கு வித்யாவை மேல படிக்க வைக்க சொன்னேன்ல வசந்த்!"என்றான் சீரியஸான குரலில்
"ஆமாடா , நான் அதை சொன்னப்போ தான், இந்த வரன் வந்திருக்குனு சொன்னாங்க, என்று அவன் மேற்கொண்டு சொன்னதையும் சொன்னான்!
"வெரிகுட் டா, நான் நாளைக்கு ரகுவை அனுப்பி ஏதும் உதவி தேவைப்பட்டால் இந்த செய்யச் சொல்றேன்டா! மாப்பிள்ளை பையன் சூப்பரா இருக்கான்டா! வித்யாவுக்கு பொருத்தமானவனாக இருப்பான்! அந்த கண்டிஷனுக்கும் ஒத்துக்கிட்டா வித்யா சந்தோஷமாக வாழ்வாள்!" என்று ஒரு அண்ணனாக உணர்ந்து பேசினான் ரிஷி! இருவருக்குள் இருக்கும் பாசப்பிணைப்பு அப்படிப்பட்டது!
"ஓகே டா, இப்ப சொல்லு இன்பாவை இன்னிக்கு பார்த்தே தானே?" என்று வசந்தன் முந்தைய பேச்சுக்கு தாவினான்!
ரிஷியின் முகம் ஒருகணம் பிரகாசமாகி, பின் இயல்புக்கு திரும்பியது, "நான் போனப்போ, வேற டாக்டர் இருந்தாங்க, நான் கிளம்பும்போது தான் அவள் உள்ளே வந்துட்டு இருந்தப்போ அவள் வந்துட்டு இருந்தாள்!"
"நீ போய் பேசலையாடா? "
"நானா போய் எப்படிடா பேசுறது?"
"ஏன், வாயாலாதான்! நீ பேசாமல் அவளா எப்படிடா பேசுவா?" என்று வசந்த் கடுப்பானான்!
ஆகவே, அதற்கு மேல், நடந்தவற்றை மறைக்காமல் சொன்னான்!
"அப்ப நிச்சயம் தானேடா?" என்றான் வசந்த் உற்சாகமாக
"எனக்கு இன்பாவை ரொம்ப பிடிச்சிருக்கு! ரொம்ப கேஷுவலாக வந்து பேசினாடா! சில பொண்ணுங்க,பசங்க பார்க்கணும்கிறதுக்காக பந்தா பண்ணுவாங்க தெரியுமில்லையா! அப்படி ஏதும் இல்லைடா! அந்த குணம் எனக்கு பிடிச்சிக்கு! She is different ! ஆனாலும் இது அது தானா என்பதை இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியலை! அவளுக்கு அந்த மாதிரி ஏதும் இல்லை அது எனக்கு தெளிவா தெரியும்! என்றவன்,"டேய்.. இந்த விஷயம் யார்கிட்டேயும் நீ சொல்லக்கூடாது! எதுவா இருந்தாலும் உறுதியாகப் பிறகு நானே தான் வீட்டிலும், நம்ம மத்த பிரண்ட்ஸ்க்கும் சொல்வேன்! அதுவரைக்கும் மூச் விடக்கூடாது! "
"ஷ்யூர்டா, என்னைத் தாண்டி யார்க்கிட்டேயும் போகாதுடா! ரிலாக்ஸாக இரு!"
"ஓகே டா குட்,நைட்"
"உனக்கும் குட் நைட் ,ஸ்வீட் ட்ரீம்ஸ்!
இன்பாவின் மனதில் ரிஷியின் மீது காதல் மலருமா?