அத்தியாயம் 4
தர்மராஜின் வீடு…
சரியாக சொல்ல வேண்டும் என்றால், அவனது புகுந்த வீட்டில் அவனுக்கென்று இருக்கும் தனி அறை. இருட்டை விலக்கி சிகப்பு நிற வெளிச்சத்தை பாய்ச்சிக் கொண்டிருந்தன அந்த அறையில் இருந்த சிகப்பு நிற விளக்குகள்.
அந்த வெளிச்சமே பயங்கரமாக இருக்க, கரத்தில் இருக்கும் முகமூடியை ரௌத்திரம் மிகுந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் முகமோ அதை விட பயங்கரமாக காட்சியளித்தது.
“எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே அடிச்சுருப்ப? அதுவும், வெளிய சொல்ல முடியாத இடத்துல எல்லாம் அடிச்சு போட்டு, படுக்க வச்சல! உன்னை சும்மா விடுவேன்னு நினைச்சியா? உனக்காகவே இந்த கேஸை கேட்டு வாங்கியிருக்கேன். அந்த மினிஸ்டர் பொண்ணை காப்பாத்துறதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான். முதல்ல, உன்னை சாவடிக்கணும். என்னை எப்படி துடிக்க துடிக்க அடிச்சியோ, அதே மாதிரி துடிக்க துடிக்க அடிச்சே உன்னை சாவடிப்பேன் டா *****. நீ எவ்ளோ பெரிய வில்லாளியா வேணா இருக்கலாம். ஆனா, சாகாத அமரன் இல்லையே நீ! கொல்லுவேன், என் கையால உன்னை கொல்லுவேன். அதுக்காக என்ன நடந்தாலும் தாங்கிப்பேன்.” என்று அடிக்குரலில் கர்ஜித்தான் தர்மராஜ்.
அப்போது அந்த அறையின் கதவு தட்டப்பட, கோபத்துடன் வெளியே சென்று பார்த்தான் தர்மராஜ்.
அங்கு அவன் மனைவி கயல்விழி கையில் குளம்பி கோப்பையுடனும், கண்களில் பயத்துடனும் நின்றிருக்க, “ப்ச், என்ன வேணும்?” என்று எரிந்து விழுந்தான் தர்மராஜ்.
“கா…ஃப்…பி…” என்று தந்தியடித்தது கயல்விழியின் உதடுகள் மட்டுமல்ல விழிகளும் கூட.
“ஊரே பார்த்து பயப்படுற எனக்கு இப்படி ஒரு பொண்டாட்டி! ச்சைக், எல்லாம் என் நேரம், விட்டு விலகவும் முடியல, ஒட்டி உறவாடவும் முடியல.” என்று முணுமுணுத்துக் கொண்டே கோப்பையை அவளிடமிருந்து பிடுங்கியவன், அவள் முகத்தில் அறைவது போல கதவை சாற்றினான்.
கயல்விழியின் கண்களை கண்ணீர் நிறைத்திருக்க, அது வெளியே தெரியாதவாறு மறைத்துக் கொண்டு கீழே இறங்கிச் சென்றாள்.
கயல்விழி, தர்மராஜுக்கு தூரத்து முறை சொந்தம் தான்!
அவன் கூறிய ‘விட்டு விலக முடியாத’தற்கு காரணம் கூட கயல்விழியின் தந்தை ஆளுங்கட்சி எம்.எல்.ஏவாக இருப்பது தான். அதனால் தானே, அவனுக்கு எதிராக சாட்சியுடன் கூடிய பல வழக்குகள் இருந்தாலும், காக்கி உடையில் கம்பீரமாக வலம் வருகின்றான்.
கயல்விழியின் தந்தை வாஞ்சிநாதன் மருமகனின் தவறுகளை மறைப்பதற்கான காரணம் அவர் மகளின் சந்தோஷம் மட்டுமே! பாவம், அவருக்கு எங்கே தெரியப் போகிறது மகள் மருமகனுடன் சந்தோஷமாக வாழவில்லை என்பது?
தெரிய வந்தால்?
*****
தன் வாழ்க்கையை எண்ணி ஒரு பெருமூச்சுடன் கீழே இறங்கி வந்த கயல்விழியை பார்த்த அவளின் தந்தை வாஞ்சிநாதன், “கயலு, என்னம்மா?” என்று வினவ, தந்தையை மறந்த தன் மடத்தனத்தை எண்ணி மானசீகமாக தன்னைத்தானே திட்டிக் கொண்டவள், “ஒன்னுமில்ல ப்பா, கொஞ்சம் வேலை அதிகம் அதான்…” என்று சமாளிக்க முயன்றாள்.
ஆனால், வாஞ்சிநாதனிடம் அவளின் சமாளிப்பு செல்லுபடியாகுமா?
மகளின் முகம் கொண்டே எதையோ அறிந்து கொண்டவராக, “தர்மா..” என்று பெருங்குரலில் அழைத்தார் அவரின் மருமகனை.
அந்த அழைப்பு தர்மராஜை எரிச்சலடைய செய்தாலும், அதிகாரம் பொருந்திய மாமனாரின் குரலாகிற்றே!
அந்த எண்ணமே அவனை கீழே வரச்செய்ததோடு அல்லாமல், யாருக்கும் காட்டாத பணிவை வாஞ்சிநாதனுக்கு காட்ட வைத்தது.
“சொல்லுங்க மாமா.” என்று தர்மராஜ் கூற, “என் ‘மருமகன்’ கேட்டதுனால தான், இந்த கேஸ் இப்போ உன் கைல இருக்கு. புரியும்னு நினைக்கிறேன்.” என்று மருமகனை அழுத்தி வாஞ்சிநாதன் கூற, அது அவரின் மகளின் நல்வாழ்வை பற்றிய மிரட்டலே ஆகும் என்று புரியாதவனா தர்மராஜ்.
“நல்லா புரியுது மாமா. கண்டிப்பா இந்த கேஸை முடிச்சு, அந்த காண்டீபனை அரஸ்ட் பண்ணுவேன்.” என்றவனின் குரலிலிருந்த பழியுணர்வை கண்ட வாஞ்சிநாதனோ, “அரஸ்ட் பண்றது முக்கியமில்ல. குற்றவாளியை சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தண்டனை வாங்கி தரணும். அதை விட்டுட்டு நீயே சட்டத்தை கையில எடுக்கக் கூடாது.” என்றார்.
பின்னர் ஒரு பெருமூச்சுடன், “ஏற்கனவே, உன்மேல நிறைய கம்ப்லைண்ட்ஸ் வந்துட்டே இருக்கு. சும்மா சும்மா, என் பதவியை யூஸ் பண்ணி உன்னை காப்பாத்திட்டே இருக்க முடியாது.” என்றவர், அவன் கண்களை பார்த்து, “இதுவரை காப்பாத்துனது கூட, என் மருமகங்கிறதால மட்டும் தான்.” என்று அழுத்தமாக கூற, அவ்வார்த்தைகள் அவனை உசுப்பி விட்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “இனிமே கவனமா இருக்கேன் மாமா.” என்று மட்டும் கூறினான்.
அவனுக்கு தலையசைப்பை பதிலாக கொடுத்தவர், “மா கயலு, இன்னைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தனஞ்ஜெயனை லஞ்சுக்கு கூப்பிட்டுருக்கேன். உனக்கு ஒன்னும் கஷ்டமில்லையே?” என்று கேட்டார்.
“இதுல என்னப்பா கஷ்டம்? சமைக்குறதுக்கு ஆளுங்க இருக்காங்க. நான் மேற்பார்வை மட்டும் தான பார்க்கப் போறேன்.” என்று கூறியவளையே இன்னதென்று விளக்க முடியாத பார்வையுடன் பார்த்தார் வாஞ்சிநாதன்.
இங்கு தர்மராஜுக்கு தான் வயிறு எரிந்தது.
‘அப்பனும் மகளும் கொஞ்சுறதை பார்க்க தான் என்னை இங்க வர சொன்னாரா? இதுல, அந்த தனஞ்செயனை லஞ்சுக்கு வர சொல்லியிருக்காராம். அதுவும் என்னை வச்சுக்கிட்டே அவகிட்ட சொல்றாரு. என்ன திண்ணக்கம் இருக்கணும் இந்த சொட்டைக்கு! எல்லாம் அதிகாரம் குடுத்த பவர்ல தான ஆடுறீங்க? பார்க்குறேன் இது எத்தனை நாளைக்குன்னு!’ என்று உள்ளுக்குள் கறுவினான் தர்மராஜ்.
அவனின் மனக்குரல் கேட்டதாலோ என்னவோ, “தர்மா, உனக்கு வேலை இருக்கும்ல. நீ அதை பாரு. இங்க இருக்கணும்னு அவசியம் இல்ல. நான் மினிஸ்டர் கிட்ட சொல்லிக்கிறேன்.” என்று வேண்டுமென்றே கூறினார் வாஞ்சிநாதன்.
இதில் சங்கடமான சூழ்நிலை, இருவரிடையே சிக்கிக் கொண்ட கயல்விழிக்கு தான்!
*****
யாதவி கடத்தப்பட்டு ஒருநாள் வெற்றிகரமாக கடந்திருந்தது. அந்த நாளின் காலையில் தான் அவள் ஆண்களை கண்டது. அதன்பிறகு தான், அடிபட்டு கட்டிலிலேயே சோர்வாக கிடந்தாள் அல்லவா.
மதியம், இரவு உணவு கூட ரெங்கநாயகி அறைக்கே வந்து கொடுக்க, அசதியால் எதுவும் சொல்லாமல் உண்டாள் யாதவி.
இரவு உணவு வேளையின் போது, தயாளன் கூட, “என்னடா இது? புலி எதுக்கு பதுங்குதோ?” என்று கேலி செய்ய, தீபன் அவளை ஒரு பொருட்டாக கூட எண்ணவில்லை என்பது தான் உண்மை.
இதோ, இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக தீபனை தான் தேடினாள் யாதவி.
கீழே கூடத்திற்கும் வாசலுக்கும் நடந்தவளை வித்தியாசமாக பார்த்த ரெங்கநாயகி, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவராக, “என்னம்மா பண்ணிட்டு இருக்க?” என்று வினவினார்.
“ரெங்கு, எங்க நம்ம பாடி பில்டர்ஸை காணோம்?” என்று யாதவி வினவ, “பாடி பில்டரா? யாரை சொல்றீங்க?” என்று புரியாமல் கேட்டார் ரெங்கநாயகி.
“ம்ச், அதான் உங்க தம்பியும் அவரு நட்பும் தான்! யோசிச்சு சொல்ல சொன்னா, யோசிக்கிறதுலயே நேரத்தை போக்கிடுவாங்க போல! கொஞ்சம் கூட டெடிகேஷனே இல்ல. இவங்களை நம்பி எல்லாம் எப்படி தான் பெரிய பொறுப்பை குடுக்குறாங்களோ?” என்று வாசலை பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தாள் யாதவி.
அப்போது தான் அவள் முதுகை ஏதோ துளைப்பது போல உணர்ந்து திரும்பி பார்க்க, அங்கு வெகு அருகில் தெரிந்தன அந்த விழிகள்!
ஒருநொடி அவற்றில் கட்டுண்டு அவள் உறைநிலைக்கு பயணிக்க, பனிக்கட்டியை உருக்கும் கனல் மூச்சுடன், “அந்த கவலை எல்லாம் எங்களுக்கு வேலை குடுத்தவங்க படட்டும். நீ பட தேவையில்ல. இப்போ வழியை விடுறியா?” என்று சீறினான் தீபன்.
உறைநிலைக்கும் உருகுநிலைக்கும் இடையே தள்ளாடியவளுக்கு அவன் என்ன சொல்கிறான் என்று புரிவதற்கே சற்று நேரம் எடுத்தது.
அதற்குள் அவன், “வழியை விடு.” என்று அவளை இடித்து விட்டு முன்னே சென்றான்.
அதில் நிகழ்வுக்கு வந்தவள், ‘ச்சே, அவனைப் போய் இப்படி பார்த்துட்டு இருக்கேன். என்ன நினைச்சுருப்பான்? ஹ்ம்ம், ஆனாலும், அவனோட கண்ணு… ப்பா, என்னமோ இருக்கு அதுக்குள்ள? அவன் கண்ணை எங்கேயோ பார்த்துருக்கேனே!’ என்று தனக்குள் பேசிக் கொண்டே அவனைப் பார்க்க, அவனோ அவளை சிறிதும் கண்டு கொள்ளவில்லை.
அங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்த தயாளனோ, “க்கும், சும்மா சும்மா பார்த்து கண்ணு வைக்காத மா. எனக்கு இருக்குறது ஒரே ஃபிரெண்டு!” என்றான்.
‘ப்ச், பார்த்துட்டான்!’ என்று மனதிற்குள் பதறினாலும், வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், “ஆமா, இவரு பனிக்கட்டி. நான் பார்த்ததும் உருகிடுவாரு. நல்லா பாறாங்கல்லு மாதிரி இருந்துட்டு…” என்று இறுதி வரியை மட்டும் முணுமுணுத்தாள்.
பின், தான் பேச வந்தது நினைவுக்கு வர, “க்கும்…”என்று செருமினாள்.
அவன் மதித்தால் தானே!
‘டேய், நான் மினிஸ்டர் பொண்ணு டா. முதல்ல, அந்த முகமூடிக்காரன் கிட்ட வில்வித்தை கத்துக்குறேன். இன்டர்நேஷனல் லெவல்ல கோல்ட் மெடல் வாங்குறேன். அப்பறம் என்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்க பின்னாடி வரத்தானே வேணும்.’ என்று மனதிற்குள் கறுவினாள் யாதவி.
“போதும் திட்டுனது. என்னன்னு சீக்கிரம் சொல்லு. நீ சொல்றவரை உன் வாயை பார்த்துட்டு இருக்க முடியாது. எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு.” என்றான் தீபன்.
அப்போதும் அவளை பார்க்கவில்லை அவன்.
‘நீ எப்போ என்னை பார்த்த?’ என்று அவள் நினைத்து முடிக்கவில்லை, அதற்குள் அவன் பார்வை அவள் மீது படிந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், அவளின் இதழ் மீது!
ஒருநொடி திகைத்தவள், ஒரு பெருமூச்சுடன் தன்னை சமன்படுத்திக் கொண்டு, அவன் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள். தப்பித்தவறி கூட அவனை பார்க்கவில்லை.
“அதான்… நேத்து சொன்னேன்ல… அந்த டீல்…” என்று தயங்கி தயங்கி கேட்க, தயாளனும் ரெங்கநாயகியும் அவளை தான் ஆச்சரியமாக பார்த்தனர்.
வந்ததிலிருந்து அதிகாரம் செய்து கொண்டே இருந்தவள், இப்போது தயங்கினால் ஆச்சரியம் ஏற்படத்தானே செய்யும்!
அவர்கள் மேலும் அதிரும் விதமாக அடுத்தடுத்த சம்பவங்கள் நிறைவேறின!
“ம்ம்ம், அந்த ஆர்ச்சரி ட்ரெயினிங் தான? காண்டீபன் கிட்ட பேசிட்டேன். அவனுக்கு ஓகேவா இருக்க நேரத்துல ஒருமணி நேரம் உன் கூட ஸ்பெண்ட் பண்ணுவான். அதுக்கு பதிலா, இந்த மிஷன் முடிஞ்சதும், நீ எங்களை காட்டிக் குடுக்க கூடாது. ஓகேவா?” என்று தீபன் வினவ, ‘என்ன இவ்ளோ சீக்கிரம் ஒத்துக்கிட்டான்?’ என்று தான் எண்ண தோன்றியது யாதவிக்கு.
பின்னே, முன்தினம் மாட்டேன் என்று விறைப்பாக சுற்றி விட்டு, இப்போது சரியென்று கூறினாள் சந்தேகம் ஏற்படத்தானே செய்யும். அதை அவனிடமே கேட்கவும் செய்தாள்.
“எப்படி திடீர்னு?” என்று யாதவி வினவ, அங்கிருந்த மற்ற இருவருக்கும் அதே சந்தேகம் தான்.
தீபனோ சாப்பிட்டு முடித்து, சாவகாசமாக கையை கழுவி வந்தவன், “உன்னை எங்களால சமாளிக்க முடியல. அதான், ஒருமணி நேரம் அவன் கிட்ட தள்ளி விடுறோம்.” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான் தீபன்.
பாதி சாப்பாட்டில் எழுந்த தயாளனும் தீபனின் பின்னே சென்றான். செல்லும்போது யாதவியை ஓரக்கண்ணில் பார்த்தபடி தான் சென்றான்.
“தீபா, உண்மையாவா?” என்று வேகமாக வந்தபடியே தயாளன் கேட்க, அங்கு வாகனத்தில் ஏறிய தீபனோ, “என்ன உண்மையாவா? எதை கேட்குறன்னு தெளிவா கேளு.” என்றான் தீபன்.
வாகனத்தில் ஏறி அமர்ந்த தயாளனோ, “நீ அவளுக்கு சொல்லி தர போறியா? இதுக்கா அவளை கடத்துன?” என்றான்.
ஒரு சிறு சிரிப்புடன், “அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன்னு தான் சொன்னேன். சொல்லி தருவேன்னு சொல்லவே இல்லையே.” என்று வாகனத்தை கிளப்பினான் தீபன்.
அவன் சிரிப்பு சாதாரணமாக தெரிந்தாலும், அதனுள் வன்மம் ஒளிந்திருந்ததை தயாளன் நன்கறிவான்.
“தீபா, எனக்கென்னவோ அந்த பொண்ணை பார்த்தா பாவமா தெரியுது. நீ ஒரு பக்கமாவே பார்க்குற மாதிரி இருக்கு.” என்று தயாளன் தயங்கியபடி கூற, “இது பெர்சனல் தயா.” என்று ஒற்றை வரியில் நண்பனை அடக்கினான் தீபன்.
தயாளனோ ஒரு பெருமூச்சுடன், “அப்போ ப்ரொஃபெஷன் பத்தி பேசுவோமா?” என்று பேச்சை மாற்றினான்.
தொடரும்...
வணக்கம் மக்களே. நான்காவது அத்தியாயத்திற்கான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.