சென்னை
பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவில்!
சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது, சென்னையிலுள்ள அஷ்டலட்சுமி கோவில்! பக்தர்களின் வரவால் நாளடைவில் சென்னையின் புகழ் பெற்ற கோவிலாக மாறியது! பெசன்ட் நகர் பீச் பிரசித்திப் பெற்றது! இந்த கோவில் அங்கே அமைந்துள்ளதால் பக்தர்கள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளும் வருவதால் எப்போதும் அங்கே மக்கள் வருகை தந்தவண்ணம் இருப்பார்கள்!
கோபுரத்தின் ஓம்கார வடிவத்தின் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோவில் அமைந்துள்ளது! (ஓம்கார சேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது! தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது!
கோவிலுக்குள், இரு குடும்பங்களும் சென்ற பின், பரஸ்பரம் அறிமுகங்கள் முடித்ததும், "இன்னிக்கு வெள்ளிக்கிழமை! இன்னும் கொஞ்சம் நேரத்தில் கூட்டம் அதிகமாகிடும்! அதனால, முதலில் எல்லாரும் கடவுளை வணங்கிட்டு வந்திடுவோம்! பிறகு சாவகாசமாக பேசிக்கலாம்!" என்றார் திலகம்!
அவரது கூற்று சரி என்பதால் அனைவரும் சென்று வணங்கிவிட்டு வந்து வருகிறவர்களுக்கு இடையூறாக இல்லாமல் ஒரு பக்கமாக அமர்ந்து கொண்டனர்!
பிரியரஞ்சனுக்கு வித்யாவை பார்த்ததும்
பிடித்துவிட்டது பெரியவர்கள் கேட்டால் சம்மதம் சொல்லிவிட காத்திருந்தான்!
வித்யா தாயை தனியே அழைத்து, (கிட்டத்தட்ட இழுத்துப்போனாள் எனலாம்)"என்ன பண்றே வித்யா? இப்படி தனியா வந்து பேசினா, அவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா?" என்று கடிந்து கொண்டார்!
"அம்மா ப்ளீஸ் எனக்கு மாப்பிள்ளை கூட தனியா பேசணும்! அதுக்கு மட்டும் ஓகே சொல்லுங்க மா!"
மகளை கூர்ந்து பார்த்தவர், "எதுக்கு வித்யா?" என்றார் கடினமான குரலில்
" என்னைப் பத்தி அவர்கிட்டே சொல்லத்தான் மா! அப்பத்தானே புரிஞ்சுக்க முடியும்?"
"அதெல்லாம், ஒன்றும் வேண்டாம் வித்யா! அவங்க என்னவோ ஏதோன்னு நினைக்கப் போறாங்க! மாப்பிள்ளையும் ஏதும் நினைச்சுக்க வாய்ப்பு இருக்கு! பேசாமல் வந்து உட்கார்! முகத்தை சிரிச்சாப்ல வச்சுக்கோ! உன்னோட கிறுக்குத்தனத்தால் இந்த சம்பந்தம் கைவிட்டுப் போனால், படிக்க வைக்கிறதைப் பத்தி நான் யோசிக்க வேண்டியிருக்கும்!" என்றவர் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு பெண்ணின் கையைப் பற்றி அழைத்து வந்தார்!
வித்யா என்ன முயன்றும் அவள் முகத்தில் பொலிவில்லை! பிரியனுக்கு ஏன் என்ற கேள்வி உண்டானது! அதை தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்று ஆவலும் பிறந்தது!
"வித்யா இப்படி வந்து என் பக்கத்தில் உட்காரம்மா! என்று திலகம் அவளை அருகில் அமர்த்திக் கொண்டார்!
"என்னப்பா பிரியன், உனக்கு என் பேத்தி வித்யாவை பிடிச்சிருக்கா?" என்று அவரே பேச்சையும் துவங்கினார்!
"ரொம்ப பிடிச்சிருக்கு பாட்டி! ஆனால் அவங்களுக்கு என்கிட்டே ஏதும் கேட்கணும்னா கேட்கலாம்!" என்று தனியாக பேசும் வாய்ப்பை உருவாக்கினான் பிரியரஞ்சன்!
"அதெல்லாம் ஒன்றும் இல்லை தம்பி "என்று அவசரமாக பவானி மறுத்திருந்தார்! ஆனால்..
வித்யாவின் முகம் பிரகாசமாக மாறியது! நிமிர்ந்து அப்போதுதான் அவள் மாப்பிள்ளையின் முகத்தை பார்த்தாள்! அடர்ந்த மீசை வைத்த திருத்தமான முகம்! நெற்றியில் விபூதி குங்குமம்! நல்ல நிறமாக தெரிந்தான்!
பிரியனும் அவளைத் தான் பார்த்திருந்தான்! அவளது பார்வையை சந்திக்கவும், புருவம் உயர்த்தி, எப்படி? என்பதாக சைகை செய்தான், வித்யாவிற்கு லஜ்ஜையாகிவிட, முகம் சிவக்க சட்டென திலகத்தின் தோள்புறம் முகத்தை நகர்த்திக் கொண்டவளின் மனது இனம் புரியாத உணர்வில் படபடத்தது!
திலகத்தின் வலதுபுறம் சாந்தி அமர்ந்திருந்தார், இருவருக்கும் இடையில், பாதி தெரிந்தும் தெரியாமலுமாக தான் வித்யா அமர்ந்திருந்தாள்! ஆகவே அவளால் முகத்தை மறைத்துக் கொள்ள முடிந்தது! இருவரின் பார்வை பரிமாற்றத்தை கவனித்திருந்த சாந்தி புன்னகையுடன், அவளது தலையை பரிவாக, வருடி கொடுத்தார்!
"எங்க பையனுக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் பெண்ணை பிடிச்சிருக்கு! எங்க பையனை பிடிச்சிருக்கானு உங்க பெண்ணுக்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுச் சொல்லுங்க அம்மா" என்றார் தமிழரசன்!
"கேட்கிறாங்களே சொல்லுமா வித்யா?" என்றார் திலகம்!
"இருங்க, இருங்க, அவங்களுக்கு என்கிட்டே ஏதோ கேட்கணும்னு தோனுது! அது என்னவென்று முதலில் சொல்லட்டும்! அப்புறமாக அவங்க பதில் சொல்லட்டும்! " என்று மீண்டும் பிரியன் சொல்ல,
"அதை நான் சொல்கிறேன் பேரா! அவளுக்கு மேலே படிக்கணுமாம்! கல்யாணத்துக்கு பிறகு படிக்கலாமா? இதுதான் அவள் கேட்க நினைச்சது!"
"அட, இதுதானா விஷயம்? தாராளமாக படிக்கட்டும்! எங்க மருமகள் படிக்கிறது எங்களுக்கு பெருமை தானே?" என்றார் செண்பகம்!
"கல்யாணத்துக்கு அப்புறமாக அவள் இங்கேயும் மாப்பிள்ளை அங்கேயுமாக எப்படிங்க சாத்தியம்? என்றார் பவானி கலக்கத்துடன்!
"அவள் எங்க வீட்டுல இருந்தே படிக்கட்டும்! எங்க பொண்ணை படிக்க வைக்க மாட்டோமா? என்றார் தமிழரசன்!
வரதனுக்கு வார்த்தையே வரவில்லை! இந்த காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று ஆச்சர்யம் கொண்டார்!
"கல்யாணம் என்றால் பொறுப்புகளும் இருக்கும் தானே? வீட்டுக்கு வந்த மருமகள் படிக்க போனா பார்க்கிறவங்க என்ன சொல்வாங்க? " என்றார் பவானி தயக்கமாக!
" மத்தவங்க ஆயிரம் சொல்லத்தான் செய்வாங்க! ஆனால் இங்கே பொண்ணு இன்னும் பதிலே சொல்லக் காணோமே?" என்றான் பிரியன்!
"என்னம்மா மருமகளே, அப்படி கூப்பிடலாம் தானே? என்றார் செண்பகம் சிரிப்புடன்!
"கூப்பிடலாம் அத்தை!" என்று தன் சம்மதத்தை தெரிவித்தாள் வித்யா!
"எங்க பொண்ணு எப்புடி? என்றார் திலகம்
"எங்க வீட்டு மருமகளாச்சே! அப்போ புத்திசாலியாகத்தானே இருப்பாள்? என்றார் அதுவரை மௌனமாக இருந்த சுரேந்திரன்!
அங்கே சின்னதாக சிரிப்பலை எழுந்தது!
பிரியன் சட்டென்று எழுந்து நின்றான்! எல்லோரும் அவனை கேள்வியாக நோக்கினர்!
அப்போதுதான் பிரியன் தன் அண்ணனைப் போல நல்ல உயரம் என்று தெரிந்து கொண்டாள் வித்யா!
"அம்மா, அப்பா, இது கோவில், வந்த வேலை நல்லபடியாக முடிஞ்சது அதனால, நாம் இப்ப வெளியே போய் இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடலாம்!" என்றான்!
"வந்த வேலை இன்னும் முடியவில்லை மகனே! ஒரு பத்து நிமிஷம் உட்காரு! சம்பிரதாயப்படி, வித்யாவை நம்ம மருமகளாக ஏற்றுக்கொண்ட பிறகு, நீ எங்கே சொல்றியோ போகலாம்" என்றார் தமிழரசன்!
அசடு வழிய பிரியன் அமர்ந்து கொண்டதும், மீண்டும் சின்னதாக சிரிப்பலை எழுந்து அடங்க,
காரில் வைத்து இருந்த தட்டுகளை எடுத்துவர பெண்ணை பெற்ற தாயும், பிள்ளையைப் பெற்ற தாயும் சென்றனர் கூடவே சாந்தியும் சென்றார்!
சிறிது நேரத்தில், தட்டுகளை ஓட்டுநர்கள் கொணர்ந்து வைத்துவிட்டு செல்ல, அதைத் தொடர்ந்து, பெண்கள் வந்து அமர்ந்தனர்!
"இது ஒரு சம்பிரதாயத்திற்கு தான்! நிச்சயதார்த்தம் இன்னொரு நாள் நெருங்கின உறவுகளை அழைச்சு செய்துக்கலாம்!" என்று தமிழரசன் சொன்னார்!
"சம்மந்தி, என் பையன் வசந்தன், வெளிநாட்டில் இருக்கிறான்! அவன் வருவதற்கு இன்னும் மூன்று மாசம் ஆகும்! கல்யாணத்தை அப்போதே வைத்துக் கொள்ளலாம் தானே? அல்லது முன்னதாக வைக்க விரும்புகிறீர்களா?" என்று வரதன் தயக்கமாக கேட்டார்!
"மூன்று மாசம் கழிச்சே வச்சுக்கலாம் சம்மந்தி! வீட்டுப் பிள்ளை இல்லாமல் எப்படி கல்யாணத்தை நடத்துறது? நிச்சயமும் கல்யாணத்துக்கு முதல் நாள் வச்சுக்கிட்டா போச்சு!" ஆனால் எங்களை பொறுத்தவரை இப்பவே அது நடந்த மாதிரிதான்! என்ற தமிழரசன் மனைவியிடம் சைகை செய்ய, அவர் பூவை எடுத்து வந்து, வித்யாவின் தலையில் அழகாக சூடிவிட்டார்! நகை பெட்டியில் இருந்து,ஒரு தங்க சங்கிலியை எடுத்து பெண்ணின் கழுத்தில் அணிவித்தார்!
பவானியின் கண்கள் ஆனந்தத்தில் பனித்தது! நாசூக்காக துடைத்துக் கொண்டார்!
"அப்ப மத்த விஷயம் எல்லாம் பேசிடலாமா? என்றார் வரதன்!
"இதுக்கு மேலே பேச ஏதும் இல்லை சம்பந்தி! உங்க பொண்ணுக்கு என்ன செய்யணுமோ அது உங்க விருப்பம்! எங்க வீட்டுல கடவுள் அருளால் எல்லாம் இருக்கிறது! மருமகளை மட்டும் நீங்க அனுப்பி வைத்தால் போதும்! கல்யாணம் இரண்டு குடும்பங்கள் இணையற விழா! முக்கியமாக இப்ப பேச வேண்டியது, கல்யாணத்தை எங்கே வைக்கலாம்னு முடிவு பண்ணறதுதான் ! தேதியை, நாங்க ஊருக்கு போய் எங்க குருசாமிகிட்டே கேட்டு உங்களுக்கு சொல்றோம்!" என்று தமிழரசன் முடித்துவிட,
எல்லோருமாக கோவில் முழுவதுமாக சுற்றிவிட்டு, மனநிறைவுடன் கோவிலில் இருந்து கிளம்பி, உயர்தர உணவகத்திற்கு சென்றனர்!
அப்போது வசந்தனின் காணொளி அழைப்பு வந்தது! அதில் ரிஷியும் கான்காலில் இணைந்திருந்தான்!
அவனைப் பார்த்த சுரேந்திரனின் புருவங்கள் சுருங்கியது!