அத்தியாயம் 6
தலை ஒருபக்கம் கால்கள் இருபக்கம் என்று அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் யாதவி. எந்தளவிற்கு சோர்வு என்றால், தன்னையே ஒருவன் பத்து நிமிடங்களுக்கும் மேலாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாத அளவிற்கு உறக்கம் அவளை இறுக்க தழுவியிருந்தது என்று தான் கூற வேண்டும்.
பத்து நிமிடங்கள் பொறுமையாக இருந்ததே அதிகம் என்று எண்ணியதோ அந்த உருவம் மெல்ல அவளருகே வந்து, அவள் படுத்திருந்த கட்டிலை தட்டியது.
ஹுஹும், அவள் அசைய கூட இல்லை!
அடுத்து அருகிலிருந்த மேஜை, அதன் மேலிருந்த கடிகாரம் என்று அவனின் முயற்சிகள் அனைத்தும் எருமை மாட்டின் மேல் விழுந்த மழை துளி போல வீணாக, அவனுக்கு இருந்த கொஞ்ச பொறுமையும் காற்றில் பறந்தது.
வேறு வழியில்லாததால், அவளை பிடித்து உலுக்க, “ப்ச்…” என்று ஒற்றை சத்தம் மட்டுமே அவளிடம்.
அதற்கு, “உஃப்…” என்ற பெருமூச்சு அவனிடம் எழ, என்ன நினைத்தானோ பட்டென்று அவளை கையில் ஏந்திக் கொண்டு நடக்க ஆரம்பிக்க, இப்போது மங்கையிடம் சிறு அசைவு தெரிந்தது.
மெல்ல விழிகளை அவள் திறக்கவும், கையில் தூக்கியவளை அவன் திரும்பி பார்க்கவும் சரியாக இருக்க, “அதே கண்ணு…” என்று உளறியவள், மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.
சில நொடிகளில், குளிர்ந்த நீர் அவள் மீது பட, “ஹையோ, மழைல நனையுறேன். இதனால காய்ச்சல் வந்தா, அப்பா கிட்ட திட்டு வாங்கணுமே.” என்று திடுக்கிட்டு விழித்தாள் யாதவி.
அப்போது தான் அவள் குளியலறையில் இருப்பது தெரிய வந்தது.
“ப்ச், எந்த முட்டாள் இந்த நேரத்துல தண்ணியை தெளிச்சது?” என்று அவளின் வாய் முணுமுணுக்க, கண்களோ சம்பந்தப்பட்ட ஆளை நோக்கி திரும்பியது.
அவள் பார்த்தது முகமூடிக்குள் மறைந்திருந்த காண்டீபனின் முகத்தை தான். முதலில் கண்களை சந்தித்தாள் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.
அவன் தலையிலிருந்து கீழே வந்த அவளின் பார்வை, தான் அவன் மீது தான் சாய்ந்திருப்பதை கவனித்து, வேகமாக விலகினாள்.
அதில் ஒரு கிண்டல் சிரிப்பு அவனிடம். முகமூடி மறைத்ததால் யாதவி அதை பார்க்கவில்லை.
தனக்குள் தோன்றிய சிறு பதற்றத்தை சமன்படுத்திக் கொண்டு மீண்டும் அவனை நோக்கி திரும்பியவள், “மிஸ்டர். காண்டு, இப்படி தான் மிட்நைட்ல வந்து பயமுறுத்துவீங்களா?” என்று வினவ, அவனோ அவளின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாமல், “டூ மினிட்ஸ் தான் உனக்கு டைம். சீக்கிரம் கிளம்பு.” என்று குளியலறையை விட்டு வெளியே வந்தான்.
“எதே! இந்த நேரத்துல எங்க போகனும்?” என்று அவள் கேட்க, “நீ தான உன்னை டிரெயின் பண்ண கேட்ட.” என்று அவளைப் பார்க்காமல் அவன் கூறினான்.
“அதுக்கு? யோவ் காண்டு, நல்லா தூங்கிட்டு இருக்க பொண்ணை எழுப்பி, டிரெயினிங் வா சொல்…” என்று கையை நீட்டி பேசிக் கொண்டிருந்தவளை முடிக்க விடாமல், நீட்டிய அவள் கையை பிடித்து இழுத்து பின்பக்கமாக மடக்கியவன், “மரியாதைன்னா என்னன்னு உனக்கு யாரும் சொல்லிக் குடுக்கலையா?” என்று வினவினான்.
“ஆ…ஆவ்… அச்சோ வலிக்குது. கையை விடு…” என்று ஆரம்பித்தவள், அவன் இன்னும் கையை முறுக்க, “கையை விடுங்க.” என்று உடனே மாற்றிக் கூறினாள்.
அப்படியும் சில நொடிகளுக்கு பின்னரே விட்டவன், “டூ மினிட்ஸ்.” என்று அழுத்திக் கூறிவிட்டு வெளியே சென்றான்.
சிவந்து போன கையை தடவியபடியே, “ச்சு ஒரு காட்டுமிராண்டி கிட்ட சிக்கிட்டேனே கடவுளே. இந்த டிரெயினிங் வேண்டாம்னு சொல்லிடுவோமா?” என்று வாய்விட்டே கூறியவள், பின் தன் தங்கப் பதக்கம் கனவு நினைவுக்கு வர, “நோ நோ யாதும்மா, எப்படியாவது ஆர்ச்சரில எக்ஸ்பெர்ட்டாகி மெடல் ஜெய்க்குறோம். அப்பறம் இவங்க எல்லாரையும் வச்சு செய்யுறோம்!” என்று சொல்லிக் கொண்டாள்.
அதற்குள் அவன் கொடுத்த இரண்டு நிமிட கெடு முடிய, கதவை பலமாக தட்ட ஆரம்பித்தான்.
“அட அவசரத்துக்கு பொறந்தவனே!” என்று அவள் மெல்லிய குரலில் முனக, “எனக்கு கேட்டுடுச்சு.” என்றான் அவன்.
“மிஸ்டர். காண்டு, முதல் நாள் எக்ஸ்க்யூஸ் குடுங்களேன். இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல வரேன்.” என்றவள், மேலும் ஐந்து நிமிடங்களுக்கு பின்பே வெளியே வந்தாள்.
அவளைக் கண்டவன், “இன்னைக்கு மட்டும் தான் இந்த எக்ஸ்க்யூஸ். நாளைக்கு சொன்ன டைமுக்கு வரலைன்னா இந்த டீல் எல்லாம் மறந்துட வேண்டியது தான்.” என்று கறாராக கூறியவன், அங்கிருக்கும் ஜன்னலருகே சென்றான்.
அவனை மனதிற்குள் திட்டியபடியே அவனைப் பின்தொடர, அவன் ஜன்னலில் கட்டியிருக்கும் கயிற்றின் வலிமையை பரிசோதிப்பதை பார்த்து, “மிஸ்டர். காண்டு…” என்று அழைக்க, அவனோ அவளை திரும்பி முறைத்தான்.
“அதான் மிஸ்டர்னு மரியாதையா தான கூப்பிடுறேன். ப்ச், இதை விடுங்க. ஆமா, உங்களுக்கு வாசல் வழியா வர பழக்கம் இல்லையா?” என்றாள் கேலியாக.
“நீதான் ஜன்னல் வழியா கீழ குதிக்கிறதுல எக்ஸ்பெர்ட் ஆச்சே. அதான், உன்னை உன் வழியில கூட்டிட்டு போறேன்.” என்று நக்கலாக கூறியவன், “ஓவரா பேசுன, கயிறு இல்லாம குதின்னு சொல்லிடுவேன்.” என்றும் கூற, அதற்கு பின் வாயை திறப்பாளா என்ன?
“ஃபர்ஸ்ட் நான் போறேன். நான் சொல்றப்போ இறங்க ஆரம்பி.” என்று கூறியபடி அவன் இறங்க முற்பட, அவன் தோளில் சுரண்டியவளோ, “மிஸ்டர். காண்டு, எனக்கு பயமா இருக்கு.” என்று மெல்லிய குரலில் கண்களை சுருக்கி கூறினாள்.
அவளின் கெஞ்சல் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தாலும், “அப்போ நேத்து எப்படி இறங்குன?” என்று சிரிப்பை மறைத்துக் கொண்டு வினவ, “ஏதோ ஒரு வேகத்துல நேத்து இறங்கிட்டேன். அதுக்கு தான் கால்ல அடியும் வாங்கிட்டேன். இன்னொரு முறை, அந்த விஷப்பயிற்சில இறங்க விரும்பல. பிளீஸ் அண்டர்ஸ்டெண்ட்.” என்றாள் அவள்.
“அப்போ என்னதான் செய்றதாம்?” என்று அவன் வினவ, “ஹான், நான் உங்க முதுகுல ஏறிக்கிறேன். நீங்க கயிறை பிடிச்சு கீழ இறங்கிடுங்க, சிம்பிள்.” என்று தோளை குலுக்கியபடி கூறினாள்.
“அடிங், என்னை என்ன உன்னை தூக்குற கேரி பேக்னு நினைச்சியா?” என்று அவன் வினவ, “இவ்ளோ பெருசா உடம்பை வளர்ந்து வச்சுருக்கீங்கள, ஃபிஃப்டி கேஜி என்னை தூக்க முடியாதா?” என்று அவளும் சரிக்கு சரி நின்றாள்.
இறுதியில், அவன் தான் அவளை முதுகில் சுமந்து கொண்டு கீழே செல்ல வேண்டியதாகிற்று.
“உன் கொரங்கு சேட்டை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு அமைதியா இருக்கணும். இல்ல, உன்னோட சேர்ந்து நானும் கீழ தான் விழனும்.” என்று மிரட்டிவிட்டே இறங்க ஆரம்பித்தான் அவன்.
‘ம்ச், இப்போ இந்த கயிறு பயணம் எல்லாம் அவசியமா? எப்போ பார்த்தாலும் என்னை திட்டிட்டே இருக்க. ஒருநாள் இல்ல ஒருநாள், உன்னை கீழ தள்ளி விடுறேன் காண்டு.’ என்று கறுவிக் கொண்டவள், எதேச்சையாக அவனைப் பார்க்க, அந்த கயிற்றை பற்றிக் கொண்டு மெதுவாக, அதே சமயம் லாவகமாக இறங்கிக் கொண்டிருந்தான் அவன்.
‘ஹ்ம்ம், என்னதான் சிடுமூஞ்சியா இருந்தாலும், பேசாம இருக்குறப்போ, கண்ணுக்கு குளிர்ச்சியா தான் இருக்கான்.’ என்று மனதோடு பேசிக் கொண்டவள், அவனை அவனுக்கு தெரியாமல் ரசிக்க ஆரம்பித்தாள்.
அவளின் ரசனை கீழே வந்ததற்கு பின்னரும் தொடர, அவன் முதுகிலிருந்து இறங்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் தொங்கிக் கொண்டே இருந்தாள்.
சில நொடிகள் அவளாக இறங்குவாள் என்று பொறுத்து பார்த்தவன், அதற்கு மேல் தாமதிக்காமல், தன் கழுத்தை சுற்றியிருந்த அவள் கரத்தை பட்டென்று விலக்க, சமநிலை தவறி அவள் கீழே விழுந்தாள்.
விழுந்ததும் தான் சுயத்திற்கு வந்தவள், “ஹையோ… ஹலோ, எதையும் வாயை திறந்து சொல்ல மாட்டீங்களா?” என்று வலியில் கத்தினாள்.
அவனோ அவள் கத்துவதை எல்லாம் கண்டு கொள்ளாமல், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை நோக்கி நடந்தான்.
“கேள்வி கேட்டா பதில் சொல்லாம போறீங்க. இதை தான் உங்களுக்கு சொல்லிக் குடுத்தாங்களா?” என்று அவனைப் போலவே கேட்டுக் கொண்டே வலிக்கும் இடையை தடவியபடி பின்னே வந்தவள், அவன் ஏறி அமர்ந்து வாகனத்தை பார்த்து கண்களை விரித்து, “அட சூப்பரா இருக்கே.” என்று அதை தடவினாள்.
தடவிய கையை வெடுக்கென்று பிடித்தவன், “எந்த கேள்விக்கு பதில் சொல்லணும்னு தெரிஞ்சு தான் சொல்லணும்னு சொல்லிக் குடுத்துருக்காங்க.” என்று அவளின் கேள்விக்கு பதிலளித்தவன், “சீக்கிரம் உட்காரலைன்னா, விட்டுட்டு கிளம்பிடுவேன்.” என்றான்.
‘ப்ச், என்னமோ அவன் பொண்டாட்டியை தொட்ட மாதிரி தான் ஓவரா சிலிர்த்துக்குறான்.’ என்று மனதிற்குள் திட்டியபடியே, அவன் பின்னே அமர்ந்தாள் அவள்.
இருவரையும் சுமந்து கொண்டு அந்த இருசக்கர வாகனம் பறக்க, இங்கு காவல் நிலையத்தில் சிசிடிவி காணொளியில் அதே போன்ற ஒரு இருசக்கர வாகனத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான் தர்மராஜ்.
*****
சில மணி நேரங்களுக்கு முன்பு…
“கோபி, இன்வெஸ்டிகேஷன்ல என்ன ப்ரோக்ரஸ்?” என்று தர்மராஜ் வினவ, “சார், நீங்க சொன்ன மாதிரி அந்த கார் லிஸ்ட்டை கிராஸ் செக் பண்ணி விசாரிச்சுட்டு இருக்கோம். இதுவரை, எந்த க்ளூவும் கிடைக்கல சார்.” என்றான் கோபி.
“ஓஹ், இன்னும் எத்தனை பேரை விசாரிக்கணும்?” என்று யோசனையுடன் தர்மராஜ் வினவ, “அஞ்சு பேரை விசாரிக்கணும் சார்.” என்றான் கோபி.
தர்மராஜுக்கோ, தவறான பாதையில் செல்வது போல உள்ளுணர்வு கூற, “அந்த சிசிடிவி ஃபூட்டேஜை யாரு அனலைஸ் பண்ணது?” என்று கேட்டு தெரிந்து கொண்டவன், தானும் அதை பார்ப்பதாக கூறி கோபியின் வயிற்றில் புளியை கரைத்தான்.
ஏனெனில், அதை சோதித்தவன் கோபியே தான்.
முதலில் ஒருமுறை அவர்கள் சந்தேகிகிக்கும் நேரத்திற்கான பதிவை முழுதாக ஓட விட்டவன், பின்பு மெதுவாக ஓடவிட்டு, ஒவ்வொன்றையும் கழுகுப்பார்வை கொண்டு பார்க்க ஆரம்பித்தான்.
அப்போது சிக்கியது தான் அந்த இருசக்கர வாகனம்.
“கோபி, யாரோட பைக் இது?” என்று வினவ, பதிலே இல்லை கோபியிடம்.
தெரிந்தால் தானே அவன் கூறுவான்.
தன் கேள்விக்கு பதிலில்லாமல் போனதால், அத்தனை நேரம் திரையை வெறித்துக் கொண்டிருந்த தர்மராஜ் திரும்பி கோபியை பார்க்க, அவனோ தயங்கிக் கொண்டே, “தெரியல சார்.” என்றான்.
“வாட்? தெரியலையா? இதை தெரிஞ்சுக்காம என்னத்த ***** இருந்த?” என்று தர்மராஜ் திட்ட ஆரம்பிக்க, “சார், அது கார்ல கான்சென்ட்ரேட் பண்ணதால…” என்று இழுத்தான் கோபி.
“இடியட், இப்படி தான் சிசிடிவி ஃபூட்டேஜை அனலைஸ் பண்ணியிருக்கியா? உன்னை எல்லாம்…” என்று ஏதோ திட்ட வந்தவன், தன்னை அடக்கிக் கொண்டு, “எப்படி நீ இந்த பைக்கை கவனிக்காம விட்ட?” என்று முதலிலிருந்து கேள்வி கேட்க, ‘ஹையோ, இவன் இதை விட மாட்டான் போலயே!’ என்று மனதிற்குள் புலம்பியவாறே பதில் கூற ஆரம்பித்தான் கோபி.
“சார், அது ஏதோ லவர்ஸ் போற மாதிரி இருந்துச்சு… அதான்.” என்று கூறியவனுக்கும் தெரியும், இதெல்லாம் ஒரு காரணம் என்று அவன் ஒப்புக்கொள்ள மாட்டான் என்று.
“வாட் தி ஹெல்? அவன் ஹூட் போட்டுக்கிட்டு, முகத்தை முக்கால்வாசி கவர் பண்ணிட்டு போறான். அந்த பொண்ணோட முகமும் கவர் பண்ணியிருக்கு. அது போக, அந்த பொண்ணு அவன் மேல சாஞ்சு இருக்கு. இதை பார்த்தா, உனக்கு லவர்ஸ் பைக்ல டூயட்டுக்கு போற மாதிரி இருக்கோ?” என்று தர்மராஜ் நக்கலாக வினவினான்.
‘இப்போலாம் அப்படி தான் போறாங்க?’ என்று நினைத்தாலும் வெளியே சொல்லவில்லை கோபி.
“இடியட்ஸ், மொத்தமா ஒருநாளை வேஸ்ட் பண்ணியயிருக்கீங்க.” என்று தர்மராஜ் திட்ட, “சார், இந்த பைக் நம்பர் வச்சு இப்போவே டிராக் பண்ணிடுறோம்.” என்று கோபி வேகமாக கூறினான்.
“கிழிச்ச! நீ டிராக் பண்ற வரை, அவன் நம்பரை மாத்தாம இருப்பானா? இது கூட ஃபேக் நம்பரா தான் இருக்கும்.” என்றான் தர்மராஜ்.
இதற்கு என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க, தர்மராஜே, “இந்த வகை பைக் நியூ மாடல்னு நினைக்குறேன். இந்த பைக்கை யாரெல்லாம் வாங்கியிருக்காங்கன்னு விசாரிங்க.” என்று கூறியவன், “லிஸ்ட்டை அனலைஸ் பண்றதுக்கு முன்னாடி, என் டேபிளுக்கு வந்தாகணும்.” என்று குட்டிவிட்டே அங்கிருந்து கிளம்பினான்.
வாகனத்தில் தன் வீட்டிற்கு செல்லும்போது, “டேய் காண்டீபா, ரொம்ப தான் ஆட்டம் காட்டிட்டு இருக்க! என் கையில சிக்கும்போது வச்சுக்குறேன்.” என்று பல்லைக் கடித்தான் தர்மராஜ்.
*****
அதே சமயம், குளிரில் பற்களெல்லாம் நடுங்கின யாதவிக்கு.
“மிஸ்டர். காண்டு…” என்று அவள் அழைத்ததும், காற்றின் வேகத்தில் அவனுக்கு கேட்க கூட இல்லை.
அவளோ வேறு வழியில்லாமல், அவனை இறுக்க கட்டிக்கொண்டு, முகத்தை அவன் போட்டிருந்த கனமான ஜெர்கினுள் புதைக்க முயன்றபடி இருந்தாள்.
அவளின் இந்த செய்கை நொடிப்பொழுதில் அவனை சமநிலை இழக்கச் செய்ய, வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, அவளை நோக்கி கோபமாக திரும்பினான்.
வாகனம் நின்றது கூட தெரியாமல், இன்னும் தன் குளிரை போக்க அவனுள் புதைந்தபடி இருந்தவளை பட்டென்று விலக்கியவன், “இடியட், என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கோபமாக கேட்டான்.
“ஓஹ், வண்டி நின்னுடுச்சா?” என்று சாவகாசமாக கேட்டவள், “மிஸ்டர். காண்டு, நீங்க மட்டும் குளிருக்கு இதமா ஜெர்கின் போட்டுட்டு சுத்துறீங்க. என் நிலைமையை யோசிச்சு பார்த்தீங்களா?” என்றாள் யாதவி.
அப்போது தான் அவள் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை கவனித்தான் அவன்.
‘ப்ச், இதை எப்படி மறந்தேன்?’ என்று இரு விரல்களை நெற்றியில் வைத்து தேய்க்க, ஏனோ அந்த செய்கை யாதவிக்கு பிடித்து போனது.
ஒருநொடி தான் அவன் யோசித்தது. மறுநொடியே, தன் ஜெர்கினை கழட்டியவன், அவளிடம் கொடுக்க, “அப்போ உங்களுக்கு?” என்றாள் யாதவி.
“அது எதுக்கு உனக்கு?” என்றவன், வேறெதுவும் கூறாமல் திரும்பிக் கொள்ள, “க்கும், காண்டுக்கு இரும்பு உடம்பு போல.” என்று கூறிக் கொண்டு அவன் கொடுத்த ஜெர்கினை போட்டுக் கொண்டாள் யாதவி.
அந்த இருசக்கர வாகனம் நேரே சென்ற இடம், பொட்டல் காடு போல தான் இருந்தது. சுற்றி ஆங்காங்கே சில மரங்கள், அவையும் அந்த இரவு நேரத்தில் அமானுஷ்யமாக தோன்றின.
இரவின் இருளுக்கே பயப்படும் யாதவிக்கு காற்றில் மரங்கள் அசைந்து உண்டாகும் வினோதமான ஒலி மேலும் பயத்தை அதிகரித்தது என்று தான் கூற வேண்டும்.
பயத்தில் காண்டீபனின் கரத்தை பிடிக்க, அவனோ வெடுக்கென்று அவளின் கைகளை தட்டி விட்டான்.
அவன் மனமோ பல கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருந்தது. காரணம், யாதவியின் மீது உண்டான சிறு சலனம் என்றும் கூறலாம்.
‘என்ன பண்ணிட்டு இருக்க நீ? அவ யாரு, எதுக்கு கடத்திட்டு வந்துருக்கன்னு எல்லாம் தெரிஞ்சும் தான் இப்படி பண்ணிட்டு இருக்கியா? இப்போ இந்த பயிற்சி எல்லாம் அவசியமா? அவ தான் கேட்டான்னா, நீ எதுக்கு சம்மதிக்கிற? இப்படி தான் மத்தவங்களையும் டிரீட் பண்ணியா? அப்படி என்ன இவ மட்டும் உனக்கு ஸ்பெஷல்?’ என்று அவன் மனமே அவனை கேள்வி கேட்டு குடைந்தெடுத்து விட்டது அந்த பயணத்தின் போது.
அதன் விளைவே, இந்த ஒதுக்கம்.
ஆனால், அதற்கெல்லாம் அசருபவளா யாதவி?
“ஹலோ, ரொம்ப பண்ணாதீங்க மிஸ்டர். காண்டு. ஏதோ பயத்துல கையை பிடிச்சுட்டேன். அதுக்காக உங்களுக்கு அவ்ளோ சீன் எல்லாம் இல்ல.” என்று உதட்டை சுளித்தபடி அவள் கூற, அவனோ தன் மனநிலையை நொந்தபடி, “உள்ள போலாம்.” என்று முன்னே நடந்தான்.
அப்போதும் அவளிடம் மன்னிப்பு கேட்கும் பாவனை சிறிதும் இல்லை.
அவன் முன்னே நடக்க, அவனைப் பின்தொடர்ந்து அவளும் சென்றாள்.
‘இந்த பொட்டல் காட்டுல, இருட்டிக் கிடக்குற நேரத்துல என்ன வில்வித்தை சொல்லிக் குடுக்க போறானாம்? இதைக் கேட்டா வள்ளுன்னு விழுவான்.’ என்று மனதிற்குள் கூறிக் கொள்ள, அவளின் மனமொழி அறிந்ததை போல அவளை திரும்பி பார்த்தவன், அவளை பார்த்துக் கொண்டே, கீழே இருந்த சிறிய கதவு போன்ற ஒன்றை மேல் நோக்கி திறக்க, கீழிறங்கி பல படிகள் சென்றன.
“அண்டர்க்ரௌண்டா?” என்று வாயை பிளந்து பார்த்தவள், அவன் சொல்லுக்கிணங்கி மெல்ல மெல்ல அந்த படிகளில் இறங்க, சுற்றும் முற்றும் யாரும் இல்லை என்பதை உன்னிப்பாக பார்த்து அறிந்து கொண்ட காண்டீபனும் அவளைப் பின்தொடர்ந்தான்.
அந்த குறுகிய பாதையின் இருமங்கிலும் போதிய இடைவெளியில் மின்விளக்குகள் பொறுத்தப்பட்டிருப்பதை எல்லாம் திகைப்பாக பார்த்தபடியே இறங்கினாள் யாதவி.
சில நொடிகளில் கீழிருந்து ஏதேதோ சத்தம் கேட்க, “அச்சோ, உள்ள யாரோ இருக்காங்க.” என்று காண்டீபனிடம் திரும்பி சொல்ல, அவனோ சிறு தோள் குலுக்கலுடன், அவளை முந்திக் கொண்டு கீழே இறங்க, “ஷப்பா, இவனை வச்சுக்கிட்டு!” என்று மெல்லிய குரலில் புலம்பியபடியே பயத்துடன் சென்றாள் அவள்.
இதோ சத்தம் வந்த இடத்தை நெருங்கி விட்டனர். கீழே சென்றதும், தங்களை தாக்க தான் போகின்றனர் என்று பயத்துடன் யாதவி செல்ல, அவள் நினைத்ததற்கு ஏதுவாக அவர்களை நோக்கி அம்புகள் வேகமாக வர, “அச்சோ அட்டாக் பண்றாங்க. காப்பாத்துங்க காப்பாத்துங்க!” என்று கண்களை மூடிக்கொண்டு கதறினாள் அவள்.
ஆனால், அவளின் பயத்திற்கு மாறாக, அவளுக்கு இருபுறமும் உரசியபடி சீறிச் சென்றன அந்த அம்புகள்.
சில நொடிகள் கழித்து தான், தனக்கு ஆபத்து இல்லை என்பதை புரிந்து கொண்டவள் மெல்ல கண்களை திறக்க, அங்கு அவளை சுற்றியபடி, காண்டீபன் அணிந்திருந்த அதே முகமூடிகளுடன் பல முகங்கள் தெரிந்தன.
அப்போது தான் அவர்கள் அனைவரும் காண்டீபனின் ஆட்கள் என்பது அவளுக்கு புரிந்தது.
அதற்குள் ஒருவன், “சீஃப், யாரு இது?” என்று வினவ, “புது டிரெயினி.” என்று கூறினான் காண்டீபன்.
அவன் குரலில் என்ன இருந்தது என்று யாதவிக்கு புரியவில்லை என்றாலும், மற்றவர்களுக்கு புரிந்து தான் இருந்தது போலும். அவளை மேலிருந்து கீழ்வரை அளவிட்ட படியே அங்கிருந்து நகர, ஒருவன் மட்டும் காண்டீபனை சற்று நேரம் பார்த்து விட்டே அகன்றான்.
“ஓஹ், இதையே பிஸினசா பண்றீங்களா?” என்று யாதவி நக்கலாக கேட்க, “என்ன?” என்று சீறினான் காண்டீபன்.
“இல்ல இல்ல, இவங்க எல்லாரும் உங்க ஆளுங்களான்னு கேட்டேன்.” என்று சமாளித்து விட்டு உள்ளே பார்த்தாள்.
வில்வித்தைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், பயிற்சி செய்யும் இடங்கள் என்று பிரம்மாண்டமாக இருந்தது அந்த பயிற்சி கூடம்!
ஆளுக்கேற்றார் போல பல எடைகளில், பல அளவுகளிலான விற்களையும், அம்புகளை கொண்ட அம்பறாத்தூணிகளையும் பார்த்ததும் உற்சாகமாகி விட்டாள் யாதவி.
அதனுடன், எப்போதும் வில்லும் அம்புகளும் உரசும் சத்தமும், ஏவப்பட்ட அம்பு இலக்கை துளைக்கும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்க, அங்கு பயிற்சி செய்பவர்களை எல்லாம் பிரமிப்புடனே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதற்கடுத்து வந்த இடம், சில தடுப்புகளை கொண்ட பல அறைகளாக மாற்றப்பட்டிருக்க, ஆர்வத்துடன் ஒரு அறைக்குள் சென்று பார்த்தாள்.
உள்ளே, அச்சு அசல் காட்டை போல இருந்ததை பார்த்து திகைத்தவள், பின்னே நின்ற காண்டீபனிடம், “இது என்ன இடம்?” என்று வினவ, “ஃபாரெஸ்ட் சிமுலேஷன். காடு போல ப்ரோஜெக்டர் வழியா செட்டப் பண்ணிருக்கோம். இங்க எப்படி அவங்க வில்வித்தையை யூஸ் பண்ணி, இந்த ஆபத்தான காட்டை கடக்குறாங்கன்னு செக் பண்றதுக்காக.” என்றான் அவன்.
“அட! அப்போ மத்த ரூம்ல இருக்குறது எல்லாம்?” என்று அவள் வினவ, “டெசர்ட், மவுன்டெயின்னு பல ஜியாகிரஃபிக்கல் ஏரியாஸோட சிமுலேஷன் இருக்கு.” என்றான் அவன்.
“வாவ், எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சுருக்கு.” என்று அவள் ஆசையாக கூற, “இதெல்லாம் எங்க ஆளுங்களுக்கு உண்டான டிரெயினிங். அதாவது, அட்டாக் அண்ட் செல்ஃப் டிஃபென்ஸுக்காக. உனக்கு இது சரியான இடம் இல்ல. வா, வேற இடத்துக்கு போலாம்.” என்றான் அவன்.
“க்கும், பண்றது இல்லீகல் ஆக்டிவிட்டீஸ். இதுல, அட்டாக் அண்ட் செல்ஃப் டிஃபென்ஸாமே.” என்று அவன் கூறியதில் வெகுண்டு அவள் கூறிவிட, அவளை நெருங்கி கோபத்துடன் பார்த்தவன், “ஜஸ்ட் ஷட் அப் அண்ட் ஃபாலோ மீ.” என்று வார்த்தைகளை கடித்து துப்பி விட்டு முன்னே நடந்தான்.
‘ச்சு, யாது உனக்கு வாயில தான் சனி!’ என்று நொந்து கொண்டே அவனைப் பின்தொடர்ந்தாள் அவள்.
மீண்டும் வெளியே வந்தவர்கள், அவளுக்கான இடத்தையும் இலக்கையும் தேர்ந்தெடுத்தனர்.
“அங்கிருக்க வில் அம்புகள்ல, உனக்கு தேவையானதை எடுத்துட்டு வா.” என்றவன், அவள் செய்கைகளை கவனிக்க ஆரம்பித்தான்.
ஆனால், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத யாதவியோ, உற்சாகத்துடன் சென்று தனக்கு பிடித்த ஆலிவ் பச்சை நிறத்திலிருந்த உயரமான வில்லையும், சில அம்புகளுடன் கூடிய அம்பறாத்தூணியையும் எடுத்து வந்தவள், “ரெடி சீஃப்.” என்றாள்.
இங்கு நடப்பனவற்றில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே மற்றவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
ஒரு பெருமூச்சுடன், “டேக் பொசிஷன்.” என்று காண்டீபன் கூற, அவளும் வில்லின் மத்தியில் அம்பை வைத்து, அம்பின் முனையை தன் தோள்பட்டை வரை இழுத்து அவன் உத்தரவுக்காக காத்திருந்தாள்.
அடுத்து, “எய்ம்.” என்ற கட்டளை வர, ‘புல்ஸ் ஐ’ எனப்படும் இலக்கின் மத்திய புள்ளியில் பார்வையை பதித்தாள்.
அதுவரை, என்னவோ சரியாக தான் சென்றது. எப்போது அந்த மையப்புள்ளியை பார்த்தாளோ, அப்போதே மனதில் ஒருவித பதற்றம் உண்டாக, அது அவளின் கைகளிலும் நடுக்கமாக வெளிப்பட்டது.
அதையும் காண்டீபன் கவனிக்க தான் செய்தான். அதற்காகவே, இரு நிமிடங்கள் பொறுத்தான். ஆனால், நடுக்கம் நின்ற பாடில்லை.
அதற்கு மேல் காத்திருக்காமல், “ரிலீஸ்.” என்று கூற, யாதவியும் பரபரப்பில் இலக்கை சரியாக பார்க்காமல், குறி வைக்காமல், அம்பை விட, அது இலக்கின் அருகே கூட செல்லவில்லை.
அனைவரின் முன்பும் அவமானமாக போய்விட, தலை குனிந்து நின்றாள் யாதவி.
காண்டீபனோ மனதின் கேள்விகளிலிருந்து தப்பிக்க இந்த சந்தர்பத்தை உபயோகித்து கொண்டான்.
“இது தான் இவ்ளோ நாளா நீ கத்துகிட்ட லட்சணமா? வில்வித்தை கத்துக்க எல்லாம் நீ எதுக்கு ஆசைப்படனும்? அதான் உன் அப்பா, நீ என்ன கேட்டாலும் வாங்கி குடுத்துடுவாராமே. ஒரு கோல்ட் மெடல் வாங்கி குடுக்க மாட்டாரா?” என்று கேவலமாக பேசிவிட, எப்போதும் அவன் திட்டுகளை எல்லாம் தூசி போல கடந்து விடுபவளுக்கு இந்த குற்றச்சாட்டு முனுக்கென்று குத்தியது.
கண்களில் கண்ணீர் கரை தொட்டு வடிய காத்திருக்க, எதுவும் பேசாமல், அவனை ஏறிட்டு பார்த்தவள், அங்கிருந்து ஓடி விட்டாள்.
அந்த சமயம் அனைவருமே தங்களின் பயிற்சியை நிறுத்தி விட்டு அங்கு தான் கவனத்தை வைத்திருந்ததால், அந்த நொடி அமானுஷ்ய மௌனத்தில் திளைத்திருந்தது அந்த இடம்.
“இங்க என்ன கண்காட்சியா நடக்குது? எல்லாரும் பயிற்சியை தொடருங்க.” என்று கத்திய காண்டீபனும் விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேற, இருவரையும் பொருள் விளங்கா பார்வையுடன் பார்த்திருந்தான் ஒருவன்.
தொடரும்...