• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

7. காண்டீப(னின்) காதலி

kkp4

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 25, 2023
Messages
27
eiIB90263196.jpg




அத்தியாயம் 7



அங்கிருந்தவர்களின் கண்களில் படாதவாறு, சற்று தள்ளி, தன் முன்னிருந்த வில்லையும் அம்புகளையும் கண் சிமிட்டாமல் நோக்கிக் கொண்டிருந்தாள் யாதவி.



கண்ணீர் பார்வையை மறைத்தபோதும், கண்களை சிமிட்டவில்லை அவள். அத்தனை அழுத்தம்!



எல்லாம், வெளிப்பார்வைக்கு மட்டும் தான். உள்ளம் ரணத்தில் கிடந்து தவித்து தான் கொண்டிருந்தது.



ஆனால், அத்தனை களேபரத்திலும் அவனின் வருகையை பார்வையால் நோக்காமலேயே கண்டு கொண்டாள் அவள்.



“உங்ககிட்ட ஆர்ச்சரி சொல்லி தர கேட்டது என் தப்பு தான். ஹ்ம்ம், நான் யாரு? ஒரு மினிஸ்டர் பொண்ணு! நானெல்லாம் ஆர்ச்சரி கத்துக்கலாமா? அதுவும் உங்ககிட்ட?” என்று கூறியவளின் குரலில் சற்றும் திமிர் இல்லை.



ஏனோ, அவளின் வார்த்தைகள் முள்ளாய் உள்ளே குத்துவது போலிருந்தது காண்டீபனுக்கு. தவறு செய்துவிட்ட குற்றவுணர்வு மனதை கனமாக்கினாலும், வாய் திறக்கவில்லை அவன். திறந்தால், அவன் காண்டீபன் இல்லையே!



“ஆசைப்படுறது அவ்ளோ தப்பா? ஹ்ம்ம், வில்வித்தை கத்துக்கணுங்கிற என் ஆசை தான் தப்பு போல. அது சரி, இது தான் பேராசை ஆச்சே! மினிஸ்டரோட பொண்ணு விதவிதமான நகை, டிரெஸ், கை நிறைய பணம்னு ஆசைப்படலாம். அதை தாண்டி, வில்வித்தைக்கெல்லாம் ஆசைப்படலாமா?” என்று யாதவி பேச பேச காண்டீபனுக்கு மனது பிசைந்தது.



தான் கேள்விப்பட்டது ஒன்றாக இருக்க, இப்போது அவள் கூறுவது வேறாக இருந்தது. சரியாக விசாரிக்காமல் தவறு செய்து விட்டோமோ என்று அவன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது.



காண்டீபன் தனக்குள் மூழ்கியிருக்க, யாதவியும் தன் வில்வித்தை ஆசை தோன்றிய காலத்துக்கு பயணப்பட ஆரம்பித்தாள்.



*****



யாதவியின் ஆறு வயதில் நிகழ்ந்த நிகழ்வு…



அம்மா இல்லாத பிள்ளை என்பதால், அவளுக்கு உணவு ஊட்டியதிலிருந்து மற்ற பணிவிடைகள் செய்தது எல்லாம் காமாட்சி என்ற வயது முதிர்ந்த பெண்மணி தான்.



அதுவும் யாதவிக்கு உணவு ஊட்டுவதென்றால் அத்தனை எளிதா? அவளை அடக்கும் வழி தெரியாமல், கதை சொல்லியபடியே உணவு ஊட்ட ஆரம்பித்தார் காமாட்சி.



அதுவும் ஒன்றும் சாதாரண காரியம் அன்று!



ஒவ்வொரு வரிக்கும் நாலைந்து கேள்விகளை கேட்கும் அறிவாளி தான் யாதவி. என்னதான் காமாட்சி அவளுக்கு பொறுமையாக பதில் சொல்ல நினைத்தாலும், அவருக்கே தெரியாதை கேட்டால், அவரும் என்ன செய்வார்?



இப்படியே சென்று கொண்டிருந்த வேளையில் தான், யாதவிக்கு அர்ஜுனனும் கர்ணனும் அறிமுகமாகினர்.



செவிவழியாக கேட்ட மகாபாரதத்தை சிறு சிறு கதைகளாக காமாட்சி கூற, அவற்றை உன்னிப்பாக கேட்ட யாதவிக்கு வில்வித்தையும், குலம் காரணமாக அது கர்ணனுக்கு மறுக்கப்பட்டதும் மனதிற்குள் பதிந்து போனது.



கிட்டத்தட்ட ஒரு வாரமானது காமாட்சி அவருக்கு தெரிந்த அர்ஜுனன் மற்றும் கர்ணன் கதையை யாதவிக்கு சொல்லி முடிக்க.



அதுவரை எவ்வித கேள்விகளும் கேட்காத யாதவியோ, “கர்ணனுக்கு மட்டும் எப்படி வில்வித்தை சொல்லி தராம இருக்கலாம்? அது தப்பு தான காமு?” என்று வினவினாள்.



“அது… கர்ணன் தேரோட்டியோட மகன் தான பாப்பா? தேரோட்டியோட மகனுக்கு எப்படி அஸ்திரத்தை பத்தி சொல்லிக் குடுப்பாங்க?” என்று தனக்கு தெரிந்ததை காமாட்சி கூற, “அப்போ தேரோட்டியோட மகன்னா வில்வித்தை கத்துக்க கூடாதா? இது தப்பு தான?” என்று யாதவி வினவ, அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை காமாட்சிக்கு.



அப்போதைக்கு ஏதோ சமாளித்தவரால், அவளின் தொடர் நச்சரிப்பை தாங்க முடியவில்லை. அப்போது தான் அதை கூறினார் காமாட்சி. அவர் கூறியதையே தன் வாழ்க்கை லட்சியமாக எடுத்துக் கொள்வாள் என்று அவர் நினைக்க கூட இல்லை.



“ஆமா பாப்பா, என்ன பண்ண கர்ணனுக்கு செஞ்சது தப்பு தான். ஆனா, அதை சொல்ல யாரும் இல்லையே. இப்போ கூட தான், சில பசங்களால அவங்க விரும்பின படிப்பை படிக்க முடியுறதில்லை. ஹ்ம்ம், நம்மளால என்ன பண்ண முடியும்? புலம்ப தான் முடியும்! நம்ம சொல்றதெல்லாம் இந்த உலகம் கேட்குமா? சொல்றவங்க ஒன்னு செல்வாக்கானவங்களா இருக்கணும். இல்ல, அதிகாரம் இருக்கவங்களா இருக்கணும்.” என்று காமாட்சி புலம்ப, “ஏன் காமு, வேற யாராலையும் எதுவும் செய்ய முடியாதா?” என்று ஆறு வயது யாதவி யோசனையுடன் வினவினாள்.



“ஹ்ம்ம், ஜெய்ச்சவங்களால வேணும்னா ஏதாவது செய்ய முடியும் பாப்பா..” என்று கடைசி கவளம் உணவை யாதவிக்கு ஊட்டியவர் சென்று விட, யாதவியோ தீவிர யோசனைக்கு சென்று விட்டாள்.



‘அப்போ நான் ஜெய்ச்சுட்டு செஞ்சு காட்டுறேன்!’ என்று அன்று மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டது இப்போதும் அவளுக்கு பசுமரத்தாணியாக நினைவில் நின்றது.



ஆம், ஆறு வயதிலிருந்தே யாதவி வில்வித்தையை தன் கனவாக்கி கொண்டாள். கனவில் வந்த விஜயனையும் இராதேயனையும் காட்டிலும் அவர்களின் கரங்களில் இருந்த காண்டீபமும் விஜய வில்லும் அவளை கவர்ந்தது என்று கூறினால் அது மிகையாகாது.



அன்றிலிருந்து இதற்காக பல கிறுக்குத்தனங்களை செய்ய ஆரம்பித்தாள். அதில் ஒன்று தான், பச்சைக்குத்திக் கொண்டது.



அவள் வளர வளர, அவளின் மனதும் வில்வித்தையை நோக்கி ஈர்க்கப்பட்டுக் கொண்டே தான் இருந்தது. ஆனால், அதை முறைப்படி கற்றுக்கொள்ள தான் நாள் வரவில்லை போலும்.



இவள் அதற்கு முயற்சிக்கவில்லை என்று கூற வேண்டுமோ?



அவளின் தந்தை அரசியலில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எதிர்க்கட்சி என்னும் பெயரை மட்டும் தக்க வைத்துக் கொண்ட கட்சி, அந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க கடுமையாக போராடிய காலம் அது. அவளின் தந்தையை நேரில் காண்பதே அரிதாக இருக்க, இதில் எங்கிருந்து அவளின் ஆசையை சொல்ல?



தான் பார்க்கும் வகை வகையான வில்லையும் அம்புகளையும் வாங்கி வைத்து மகிழ்வாள். அப்போதைக்கு அது மட்டுமே முடிந்தது அவளால்.



அவளின் பதினைந்து வயதில், இணையத்தின் ஆதிக்கம் அவளையும் விட்டு வைக்காத நேரத்தில், அதிலிருந்த சில காணொளிகள் மூலம் தானாகவே வில் பயிற்சியில் ஈடுபட, அம்புகள் ஒவ்வொன்றும் திசைக்கு ஒன்றாக பறந்தன. அவளின் அந்த விபரீத பயிற்சியில், அவள் வீட்டில் பணிபுரிபவர்கள் தான் பாவமாகிப் போயினர்.



இப்படியே நாட்கள் கழிய, அவளின் பதினெட்டாவது பிறந்தநாளின் போது தான், அவளுக்கு தன் விருப்பத்தை தந்தையிடம் சொல்ல நேரம் வாய்த்தது.



அவளின் அந்த பிறந்தநாளுக்கு அதிசயமாக அவளின் தந்தை அவளுடன் வீட்டில் இருக்க, அவளின் பிறந்தநாள் பரிசாக, அவளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற கோரினாள் யாதவி.



“பாப்பா, இந்த பேர்த்டேக்கு உன்கூட அப்பா இருக்கேன். உனக்கு என்ன கிஃப்ட் வேணும்னு சொல்லு. நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போய் வாங்கிட்டு வருவோம்.” என்று வாசுதேவன் பாசமாக மகளின் தலையை கோதினார்.



அதில் மகிழ்ந்த யாதவியோ, “ப்பா, நான் கேட்குற கிஃப்டை நீங்க கண்டிப்பா தரணும்.” என்று அவள் பீடிகை போட, “அட என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு. அப்படி என்ன வானத்துல இருக்க நட்சத்திரத்தையா கேட்கப் போற?” என்று சிரித்தார் வாசுதேவன்.



அதை கண்டு கொள்ளாத யாதவியோ, “ப்பா, எனக்கு ஆர்ச்சரி கத்துக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. முறையா பயிற்சி செஞ்சு, இந்தியாக்காக கோல்ட் மெடல் வாங்கணும் ப்பா. அது தான் என்னோட எய்ம்.” என்று கண்களில் கனவு மின்ன யாதவி கூற, வாசுதேவனோ தன் சிரிப்பை ஒருகணம் நிறுத்தி, பின்பு மீண்டும் சத்தமாக சிரித்தார்.



“அட பாப்பா, நீ ஏதோ தங்கத்துலேயே உன்னை அலங்கரிக்க சொல்லுவன்னு பார்த்தா, ஏதோ தங்க மெடல் பத்தி பேசுற.” என்று அலட்சியமாக வாசுதேவன் பேச, “ப்பா, என்ன சாதாரணமா சொல்றீங்க. ஒலிம்பிக்ல கோல்ட் மெடல் வாங்கணும் ப்பா. அதுக்கு எவ்ளோ ஸ்டெப்ஸ் இருக்கு தெரியுமா. ஸ்டேட் லெவல், நேஷனல் லெவல்னு ஒலிம்பிக்ல செலக்ட் ஆகுறதுக்கே அத்தனை லெவலை கடக்கணும். நீங்க என்னடான்னா அசால்ட்டா சொல்றீங்க.” என்று சிணுங்கினாள் மகள்.



அதற்கும் பெரிதாக சிரித்தவர், “இப்போ என்ன பாப்பா, நீ ஜெய்க்கணும் அவ்ளோ தான? இதுக்கு எதுக்கு நீ இவ்ளோ கஷ்டப்படனும். நீ மினிஸ்டர் பொண்ணு மா.” என்றவர், அவரின் உதவியாளரை அழைத்து, “ஸ்டேட் லெவலுக்கு நம்ம காசி கிட்ட சொன்னா போதும், அவன் பார்த்துப்பான்.” என்று பேசிக் கொண்டிருக்க, யாதவிக்கு அவர் செய்யப் போவது புரிந்தது.



புரியாததற்கு அவள் என்ன குழந்தையா? பண்டைய காலத்தில் ஜாதியினால் வாய்ப்பு மறுக்கப்பட்டது, இப்போது அதிகாரத்தினால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம்!



‘தான் உடைக்க எண்ணிய ஒன்றை வைத்தே, வெற்றியை பெறுவதா?’ என்று யோசித்தவள், முதல் முறையாக தந்தையின் முடிவுக்கு எதிராக இருந்தாள்.



இன்னும் உதவியாளரிடம் பேசிக் கொண்டிருந்த வாசுதேவனை இடைவெட்டியவள், “ப்பா, நான் உங்க இன்ஃப்ளுயன்ஸ் இல்லாம ஜெய்க்கணும்.” என்று திட்டவட்டமாக கூறிவிட, தந்தைக்கோ மகளின் தீர்மானம் சற்று அதிருப்தியை தான் அளித்தது.



ஆனால், அவள் முடிவில் சற்றும் மாறுதல் இல்லாமல் உறுதியாக, அடமாக இருக்க, “க்கும், சொன்னா கேட்க மாட்டிங்குற!” என்று சலித்தவாறே அவளுக்கான பயிற்சியாளரை ஏற்பாடு செய்ய சொன்னார்.



அதுவே, அவளின் வெற்றிக்கான முதல் படியாக அவள் எண்ணியிருக்க, அப்படியில்லை என்பதை உணர்த்துவது போலிருந்தது அவளை பயிற்றுவிக்க வந்த பயிற்சியாளர்களின் போக்கு.



ஆம், பயிற்சியாளர்களே!



யாதவிக்கு வில்வித்தை பயிற்சி ஆரம்பித்து இரண்டு மாதங்களிலேயே நான்கு பயிற்சியாளர்கள் மாறியிருந்தனர். முதலில், இதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.



அந்த இரண்டு மாதங்களில், அவள் வில்லிலிருந்து வெளிவந்த அம்பு, இலக்கின் நுனியை உரசிக் கொண்டு சென்றது தான் முன்னேற்றமாக இருந்தது.



‘ஏன் இப்படி?’ என்று யோசிக்கும்போது தான், யாரும் அவளின் தவறை இதுவரை சுட்டிக்காட்டவில்லை என்பதே புரிந்தது யாதவிக்கு.



அதே சமயம், வாசுதேவன் அவளின் பாதுகாப்புக்காக நியமித்த பாதுகாவலர்கள், அவளின் இப்போதைய பயிற்சியாளரை மிரட்டுவது தெரிந்தது.



“மேடம் மினிஸ்டர் பொண்ணுங்கிறதை ஞாபகம் வச்சுட்டு டிரெயினிங் குடு. அவங்களை ஏதாவது சொன்னன்னு தெரிஞ்சுது, இனிமே நீ டிரெயினிங்கே குடுக்க முடியாது, பார்த்துக்கோ!” என்று அவர்கள் மிரட்ட, அந்த பயிற்சியாளரோ பயத்துடன் அங்கிருந்து சென்றார்.



யாதவிக்கு ‘ச்சே’ என்றானது. இப்படி மிரட்டினால், எப்படி அவர்கள் அவளின் தவறை சுட்டிக்காட்ட முடியும்? எப்படி அவள் வில்வித்தையில் சிறக்க முடியும்?



இந்த பெயரளவு பயிற்சி நடப்பதற்கு நடக்காமலேயே இருக்கலாம் என்று விரக்தியாக எண்ணியவள், பயிற்சியை நிறுத்தி விட்டாள்.



அப்போதும் மகளின் மனம் புரியாத தந்தை, “இதுக்கு தான் பாப்பா, முதல்லயே நான் வேண்டாம்னு சொன்னேன். பொண்ணுங்களுக்கு இதெல்லாம் செட் ஆகுமா? நீ.வேணும்னா டான்ஸ் கத்துக்கோ.” என்றவர், மகளின் எண்ணம் புரியாமல் உதவியாளரிடம், “நம்ம வீட்டுக்கே வந்து சொல்லிக் குடுக்கற மாதிரி ஆளா பாரு..” என்று சொல்லிவிட்டு தன் பணி முடிந்தது போல சென்று விட்டார்.



அதன்பிறகு வந்த நடன ஆசிரியர்களை எல்லாம், யாதவி தலையால் தண்ணீர் குடிக்க வைத்து ஓட விட்டது வேறு கதை!



இதுவும் வாசுதேவனுக்கு தெரிய வர, “என்ன பாப்பா உன் பிரச்சனை? டான்ஸ் வேண்டாமா? பாட்டு கத்துக்குறியா?” என்று அவர் வினவ, அவரை ஒரு பார்வை பார்த்தவள், “கத்துகிட்டா வில்வித்தை மட்டும் தான் கத்துப்பேன்.” என்று மீண்டும் அடம்பிடிக்க ஆரம்பித்தாள்.



“உஃப், அதுக்கு தான் டிரெயினர்ஸ் வந்தாங்களே! நீதான வேண்டாம்னு சொல்லிட்ட.” என்று வாசுதேவன் கூற, அவரை ஒரு மாதிரி பார்த்தவள், “அவங்க உண்மையாவே என்னை டிரெயின் பண்ண வந்துருந்தா, இந்நேரம் நான் ஆர்ச்சரில எக்ஸ்பெர்ட் ஆகியிருக்கணும் ப்பா. அவங்களை எப்படி தப்பு சொல்ல? நீங்களும் உங்க ஆளுங்களும் தான் அதுக்கான ஸ்பேஸே அவங்களுக்கு குடுக்கலையே.” என்றவள் மேலும், “ப்பா, நீங்க எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? இதுவரைக்கும் வந்த டிரெயினர்ஸ் எல்லாம் அங்கீகாரம் இல்லாதவங்க. ஸ்டேட் லெவல், நேஷனல் லெவல் போட்டில கலந்துக்கணும்னா, ‘தி ஆர்ச்சரி அசோஷியேஷன் ஆஃப் தமிழ்நாடு’ல தான் கத்துக்கணும்னு கூட எனக்கு தெரியாதான்னு நினைச்சுட்டீங்களா?” என்றாள்.



“என்னம்மா நீ? என் ஒரே பொண்ணு, உன்னை யாராவது திட்டுனா, எனக்கு எப்படி இருக்கும்? அதுக்காக சொன்னது தான். அப்பறம் நீ ஏதோ சும்மா பொழுதுபோக்குக்காக கத்துக்கப் போறன்னு நினைச்சேன். இதுல இவ்ளோ உறுதியா இருப்பன்னு தெரியல.” என்று வாசுதேவன் அவரின் தவறை உணர்ந்தது போல மெல்லிய குரலில் கூற, அப்படி ஒரு ஆவேசம் எழுந்தது யாதவிக்கு.



அவரை தன்னறைக்கு இழுத்து வந்தவள், “சுத்தி பாருங்க ப்பா.” என்று அங்கிருந்த ஒவ்வொரு பொருட்களையும் காட்டினாள். அவை அனைத்திலும் வில்லம்பிற்கான குறியீடுகளே அதிகம் காணப்பட்டன.



மேலும், அவள் இதுவரை வாங்கி அடுக்கியிருந்த விற்களை காட்ட, மகளுக்கு இதில் எத்தனை ஆர்வம் என்று அப்போது தான் புரிந்தது தந்தைக்கு.



மகளை சரியாக கவனிக்கவில்லையே என்ற குற்றவுணர்வில் வாசுதேவன் அமைதியாக சென்று விட, இனிமேல் தந்தையை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வந்தவளாக, அவளாக தனக்குரிய பயிற்சியாளரை தேடும் முயற்சியில் ஈடுபட்டாள்.



ஆம், முதலில் ஓரளவு வில்வித்தையை கற்ற பிறகு, அதன் நுணுக்கங்களை அறிந்து கொள்ள ‘தி ஆர்ச்சரி அசோஷியேஷன் ஆஃப் தமிழ்நாடு’ சங்கத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தாள் யாதவி.



இந்த தேடுதல் பயணத்தில் அவளுக்கு அறிமுகமானவன் தான் காண்டீபன்!



அவனின் வில்லாற்றலை செய்தியிலும், இணையத்திலும் கேள்விப்படும் போதெல்லாம், ‘ப்ச், நீ ஏன் நல்லவனா இல்லாம போயிட்ட? அப்படி மட்டும் இருந்திருந்தா, இந்நேரம் உன்கிட்டயே கத்துகிட்டிருந்துருப்பேன்ல.’ என்று அவள் யோசித்ததுண்டு.



இதில், வாசுதேவன் யாதவிக்காக ‘தி ஆர்ச்சரி அசோஷியேஷன் ஆஃப் தமிழ்நாடு’ சங்கத்தின் உரிமையாளரிடம் பேசியிருக்கிறார் என்ற தகவல் அவளுக்கு தெரியாமலேயே போய்விட்டது.



அது தெரிய வரும் நேரம் தான் காண்டீபன் அவளை கடத்தி விட்டானே.



ஆம், வாசுதேவன் தானே நேரில் வந்து மகளிடம் அந்த நல்ல செய்தியை சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்க, அது முடியாமலேயே போய்விட்டது.



இதோ, இப்போது கூட அவளுக்கு அவ்விஷயம் தெரியவில்லை. ஆனால், காண்டீபனுக்கு தெரிந்திருந்தது.



அது தெரிந்ததனாலேயே இந்த கடத்தலோ!



*****



இத்தனை நேரமாக அவளுக்கே தெரியாமல் அவளின் கடந்த காலத்தை யாதவி கூற, அந்த கடத்தலை சொல்லும்போது நிகழ்வுக்கு வந்தவள், “ப்ச், இப்போ எதுக்கு இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன்? வீட்டுக்கு போலாமா?” என்று எரிச்சலாக கேட்டாள் யாதவி.



அதில் தன் சிந்தனையிலிருந்து வெளிவந்த காண்டீபனோ, அவளை தீவிரமாக பார்த்துவிட்டு, “லட்சியத்தை ஃபிக்ஸ் பண்ணா மட்டும் பத்தாது. போய் பிராக்டிஸ் பண்ணு. அடுத்து ஒன் ஹவர்ல திரும்ப பார்ப்பேன். உன் குறி மிஸ் ஆகக்கூடாது.” என்றான்.



அதில் அவள் ஆச்சரியமாக அவன் முகம் பார்க்க, அதுவோ எப்போதும் போல இருந்தது. இதில் முகமூடி வேறு!



தொடரும்...



ஹாய் மக்களே.

மீண்டும் தாமதத்திற்கு மன்னிக்கவும். தொடர்ந்து கதை எழுத முடியாத சூழலில் சிக்கியிருந்தேன். இனிமேல், இப்படி மன்னிப்பு கோராமல், தொடர்ந்து எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன் அடுத்த யூடி பதிந்து விட்டேன். கதைக்கான உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

புதிதாக சிலர் கதை படித்து உங்கள் கருத்துக்களை பதிந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. விரைவில் உங்கள் கருத்துக்களுக்கும் பின்னூட்டம் இடுகிறேன்.😊
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
விறைப்பாக நிற்கும் வில்வித்தை வீரன்
விரும்பிய வில்வித்தை
வீம்பாக கத்துக்க நினைக்கும்
விவேக பெண்.....
காண்டீபன் 💕 யாதவி
வில்லாக வளைந்து கொடுப்பானா
வீர் கொண்டு செல்லும் அம்பாக விட்டுச்
செல்வானோ.....

வாழ்த்துக்கள் மா 💐💐💐👍🏻
அருமையாக இருக்கு🤩💕👍🏻👏
 

k. ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 16, 2023
Messages
35
வெகு நாட்கள் ஆகி விட்டன. உங்களது அத்தியாயம் பதிவிட்டு. கதையை முடித்து விட்டு வேறு வேலையை பார்க்கலாமே...
 
Top