ரிஷிக்கு பரமனின் பதில் குழப்பத்தை உண்டு பண்ணியது!
"வசந்த், அப்போ அன்றைக்கு விபத்து நடந்த போது நீ என்கூட வரவில்லையா? பிறகு எப்படி நீ அன்றைக்கு சரியான நேரத்தில் அங்கே வந்தாய்?"என்றான்!
"சொல்லத்தானே கூட்டிட்டு வந்திருக்கிறேன்!"என்று நண்பனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னவன், " நான் நல்லா இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கிறீங்க? நான் படிப்பு முடிஞ்சதும் வெளிநாட்டுல வேலை கிடைச்சு போய்விட்டேன்!"
"ஓ! அப்படிங்களா தம்பி? நான் நல்லா இருக்கிறேன்! எங்க சின்னய்யா தான் கல்யாண சாப்பாடு போட மாட்டேங்கிறார்! நீங்க எப்படி?" என்று பரமன் தண்ணீரை கொணர்ந்து கொடுத்தபடி கேட்டான்!
"எனக்கு அவசரமாக கல்யாணம் முடிவு செய்து நடந்துடுச்சு, யாரையும் கூப்பிட முடியலை! அப்போ இவனே ஊரில் இல்லையே! ஒரு மகள் இருக்கிறாள்!"
"ரொம்ப சந்தோசம் தம்பி, நல்லபடியாக இருந்தால் போதும் ! சரி நீங்க பேசிட்டு இருங்க, நான் போய் சமையலுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கிட்டு வர்றேன்!" என்று கிளம்பியவனை நிறுத்தி,
"அதெல்லாம் வேண்டாம், சாப்பாடு வெளியே ஆர்டர் போட்டுக்கலாம்! உனக்கும் வயசாகுதா இல்லையா? இப்போ குடிக்க பழச்சாறு மட்டும் கொண்டு வா போதும்!" என்று அனுப்பி விட்டான் வசந்தன்!
"என்ன மாப்பிள்ளை, பீடிகை எல்லாம் பலமாக இருக்கு! அந்த விபத்து நடத்தப்ப நீயும் கூடவே இருந்தேன்னு சொன்னதா ஞாபகம்! ஆனால் பரமன் வேற சொல்றான்!"
"உண்மை தான் ரிஷி. அன்று நீ அந்தப் பெண்ணுடன் தான் இங்கே வந்திருந்தாய்!"
"என்னது?? டேய்.. என்ன சொல்றே? நானா? அதுவும் ஒரு பெண்ணோடு?" அதிர்ச்சியுடன் கேட்டான் ரிஷி!
"ஆமாடா, அந்தப் பெண்ணும் சென்னை தான்! நீங்கள் இருவரும் காதலித்தீர்கள்! "என்று தொடங்கி, விபத்து வரை சுருக்கமாக தெரிவித்தான்!
"டேய், நீ ஏன் அன்றைக்கே இதைச் சொல்லவில்லை?" வசந்தனின் சட்டையை கொத்தாகப்பிடித்துக் கொண்டு உணர்ச்சிவசப்பட்டவனாக கேட்டான்!
"அப்போது தான், நீ எல்லாம் மறந்து விட்டிருந்தாயே! நான் இந்த விஷயத்தை சொன்னால், நம்புவாயோ என்று எனக்கு சந்தேகம்! அது மட்டுமில்லை, ஒருவேளை அவள் உன் பணத்துக்காக வந்தவள் என்று நீ வழக்கம்போல ஏளனமாக சொல்லிவிட்டால் என்ன செய்வது? இடைப்பட்ட காலத்தில் நீ மாறியிருந்தாய்! விபத்திற்கு பிறகு பழைய ரிஷியாக நீ இருந்தாய்! ஒரு சதவீதம் உனக்கு நினைவு இருந்திருந்தால் கூட நான் சொல்லியிருப்பேன்!"
"எனக்கு தான் ஞாபகம் இல்லை! அவளுக்கு இருந்ததுதானே? அவள் வந்து ஏன் என்னிடம் பேசி நினைவு படுத்த முயற்சிக்கவில்லை? உண்மையாக என்னை நேசித்திருந்தால் அதைதானே செய்திருக்கணும்?"
"அவள் காதலை நீ ஒரு சதவீதம்கூட சந்தேகப்பட்டுவிடாதே ரிஷி! டாக்டர் சொல்லிவிட்டார், நினைவு படுத்த முயற்சி செய்தால், உனக்கு ஆபத்தாகிடும்னு ! தானாக வந்தால் வரட்டும், அப்படி இல்லை என்றாலும் பெரிதாக பிரச்சினை இல்லைனு சொன்னார்! அவளும் ஒரு டாக்டர், விஷயம் தெரிந்த பிறகு எப்படி உன் முன்பு வந்து நிற்பாள்? அப்படியும் கடைசியாக விபத்து நடந்த அன்றைக்கு அவள் உன்னை பார்க்க வந்தாள், நீ அந்நியமாக பார்த்த பார்வையை அவளால் தாங்கிக்க முடியவில்லை! அழுதழுது அவள் ஜுரத்தில் விழுந்து, கண்விழிக்காமல் கிடந்தாள்! நான்கைந்து நாட்களாயிற்று அவள், தேறி எழுவதற்கு!
"எப்போது வந்தாள் வசந்த்?" என்றான் பரபரப்பாக
"விபத்து அன்று, இரண்டு பெண்கள் வந்தார்களே! நினைவு இருக்கிறதா?"
"வந்தது ஞாபகம் இருக்கிறதுடா, ஆனால் நிழலாகத்தான் இருக்கிறது! அப்போது தானே மயக்கத்தில் இருந்து எழுந்தேன்! சற்று தூரமாக வேறு நின்றதால் கவனமாக பார்க்காமல் விட்டுவிட்டேன்! சரி, எல்லாம் போகட்டும், முதலில் அவள் பெயர் சொல்லு!
"இன்பசுரபி! அவள் பெயர் இதுதான்!
"இன்பசுரபி, அழகான பெயர் ! சுரபி, என்று சொல்லிப் பார்த்துக் கொண்டான்!
"சரிடா, நான் அவளை பார்க்க வேண்டும் வசந்த்! அவள்.. எங்கே இருக்கிறாள்? அவளுக்கு.. ரிஷிக்கு மேற்கொண்டு கேட்க வார்த்தை வரவில்லை!
"நீ என்ன கேட்க வர்றேனு புரியுது ! ஆனால் அவள் இப்போது எங்கே இருக்கிறாள் என்று எனக்கு தெரியாது, சொல்லப்போனால் அவள் இருக்கிறாளா?
"என்னடா சொல்றே? சுரபி.. சுரபி இருக்கிறாளா என்று சொன்னால் என்னடா அர்த்தம்? ரிஷி அதிர்ச்சியுடன் கேட்டான்!
"உண்மை ரிஷி , என் கல்யாணத்தில் தான் நான் அவளை கடைசியா பார்த்தது! அப்புறமாக நான் அவளை பார்க்கவில்லை! நான் வெளிநாடு போன கொஞ்சம் நாளில், தோழிகளுடன் சுற்றுலாவிற்கு போயிருந்தப்போ, அவள் காணாமல் போய்விட்டாதாக எங்க அம்மா சொன்னாங்க! அன்று அம்மாவும் அப்பாவும் இந்த தகவல் வரும் போது அங்கே தான் இருந்திருக்காங்க! அம்மா அவங்க மூன்று பெரும் வேதனைப்பட்டதை பார்க்க முடியவில்லை என்று அழுதுட்டாங்க! அம்மா எப்பவும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிறவங்க! அவங்களே கலங்கிட்டாங்கனா பார்த்துக்கோ!
"என்னடா சொல்றே,அப்படினா சுரபி இப்ப உயிரோடு இல்லைனு சொல்றியா ?" ரிஷியின் குரல் ஏனோ நடுங்கியது!
"அவள் உயிரோடு இருந்தால், வீட்டிற்கு திரும்பி வந்திருக்கணும் இல்லையா? அவள் ஆற்று தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும், ஆட்களை விட்டு தேடியும் அவளைப்பற்றி ஏதும் தெரியவில்லை! உடம்பும் கிடைக்கவில்லை! எனக்கு தெரிஞ்சு போலீஸும் கேஸ் கிளோஸ் பண்ணியிருப்பாங்க!
ரிஷியால் ஏனோ நண்பனின் கூற்றை ஏற்க முடியவில்லை! மனம் கலங்க, சிலகணங்கள் கண்களை மூடியவாறு அசைவற்று அப்படியே அமர்ந்திருந்தான்! அப்போது இன்பாவின் சிரித்த முகம் கண்ணுக்குள் வந்துபோனது! அது ஒரு கணம் தான் என்றாலும் அவனது உடல் சிலிர்த்தது!
"வசந்த், அவள் உயிருடன் தான் எங்கோ இருக்கிறாள்! என்னால் அவள் உயிரோடு இல்லை என்பதை நம்பமுடியவில்லை! இப்போ கூட அவள் முகம் எனக்குள் வந்து போயிற்று! இன்று இது மூன்றாவது முறை! அவள் இருக்கிறாள் ! என்னை நினைக்கிறாள் என்று தோன்றுகிறது! "ரிஷி ஒருவித பரபரப்புடன் சொன்னான்!
வசந்திற்கு நண்பனின் நம்பிக்கை நிஜமாக வேண்டும் என்று மனதில் பிரார்த்தனை எழுந்தது!
உன் நம்பிக்கை பலிக்கட்டும் ரிஷி, எனக்கும் அதே ஆசை தான்! இன்பா எனக்கு உடன் பிறவாத தங்கை! அவளைப் பற்றி என்னிடம் தான் எல்லாமும் பகிர்ந்து கொள்வாள்! உன்னைப் பற்றி அவள் யாரிடமும் தெரிவிக்க வில்லை. கூடவே இருந்த நிகிலாவுக்கு அதுதான் என் மனைவிக்கு கூட சொல்லவில்லை! அத்தனை நம்பினாள்! அதனாலேயே எனக்கு அவள் மீது தனிப் பாசம்!" என்ற வசந்தன் ஏதோ நினைவு வந்தவனாக, தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பரிசு பெட்டியை எடுத்து ரிஷியிடம் கொடுத்தான்!
"எனக்காடா? எதுக்கு ? இன்னிக்கு என் பிறந்தநாள் கூட இல்லையே?" வியப்புடன் கையில் வாங்கினான்!
"இது உனக்கு இன்பா வாங்கினது! பிரிச்சுப் பார்! அந்த விபத்து அன்று ஆர்டர் கொடுத்திருக்கிறாள்! என் வீட்டு முகவரிக்கு வந்தது! சமயம் வரும்போது உன்கிட்ட கொடுக்கணும்னு நான் இத்தனை நாளும் பத்திரமாக வைத்திருந்தேன்! இப்போது உன்னை பார்க்க வரும்போது கையோடு எடுத்து வந்தேன்! இன்றைக்கு, இன்பா பத்தி உனக்கு தெரிஞ்சுடுச்சு! அதனால் கொடுத்துட்டேன்!"
ரிஷி ஆவலாக பிரித்துப் பார்த்தான்."இது என்னடா kesav?" என்று கேட்டவன், "அவளுக்கு நான் கேசவ் போல! என்று முகம் மலர்ந்தான்! உடனடியாக தன் கழுத்தில் இருந்த மெல்லிய சங்கிலியை கழற்றி அந்த பென்டென்ட்டை பொருத்தி, அணிந்து கொண்டான்!
வசந்தனுக்கு நண்பன் இன்பாவை ஏற்றுக் கொண்டதில் மனதிற்கு நிறைவாக இருந்தது! ஆனால் அப்போதே முயன்று இருந்தால் இவர்கள் பிரியாமல் இருந்தாருப்பார்களோ? என்ற எண்ணம் எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை!
"வசந்த், நான் இன்பாவை தேடப் போகிறேன்டா! அதுக்கு முதலில் நான் அவங்க வீட்டினரை சந்திக்கணும்! அதுக்கு நீதான் ஏற்பாடு செய்யணும்! சுரபி நிச்சயமாக என்னை எனக்காகவே விரும்பியிருக்கிறாள் என்று தோன்றுகிறது! எனக்கு பழைய நினைவு வந்தாலும் வராவிட்டாலும் என் சுரபியை நான் கைப்பிடித்தே தீருவேன்!"
ரிஷி சொல்லவும் வசந்தன் யோசனையில் ஆழ்ந்தான்!
82. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!
இன்பாவின் குடும்பத்தினர் ஓரளவுக்கு இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர்! ஆனாலும் உள்ளூர எழுந்த வேதனையை அவரவர் அடுத்தவருக்கு தெரியாமல் தங்கள் வேதனையை மறைத்துக் கொண்டு வளைய வந்தனர்!
இன்பா காணாமல் போய், ஓராண்டு கடந்து மேலும் இரண்டு மாதங்கள் சென்ற நிலையில், சாருபாலா, பெங்களுரில் ஒரு மருத்துவ கருத்தரங்கிற்கு செல்ல நேர்ந்தது!
சென்ற இடத்தில், கருத்தரங்கு மதியத்துடன் முடிந்துவிட, சாருபாலா தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சென்று, சாப்பிட்டுவிட்டு ஊருக்கு திரும்ப நினைத்தார்!
சாருபாலா கருத்தரங்கம் நடந்த கூடத்தை விட்டு வெளியே வந்த போது அவரது காருக்கு சென்ற போது அதன் அருகே உயரமும் கம்பீரமுமாக, நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் நின்றிருந்தார்! ஆனால் அவரது வயது ஐம்பத்து நாலு என்று பின்னாளில் சாரு அறிந்து கொண்டது! அவரை கருத்தரங்கில் பார்த்திருந்தார் சாருபாலா!
"ஹலோ! மிஸ் சாருபாலா! ஐம், டாக்டர். நிவன் ஆதித்யா, திருநெல்வேலி பக்கத்தில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வருகிறேன்! இந்த கருத்தரங்கிற்கு, நான் முக்கியமாக உங்களை சந்திக்கத்தான் வந்திருக்கிறேன்!" என்றதும்
சாருபாலா துணுக்குற்றார்!
"உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் வாருங்களேன் , லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்! எனக்கு உங்களிடம் மிக முக்கியமான விஷயம் ஒன்றைப் பேச வேண்டும்!" என்றவரின் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் சந்திக்காமல் நகரமாட்டேன் என்கிற செய்தியை உணர்த்தியது!
"சரி, என்ன விஷயம் என்று சொல்லுங்க!"
"இப்படி எல்லாருக்கும் காட்சிப் பொருளாக நின்று பேச வேண்டாமே! ப்ளீஸ் !" என்றதும் சாருபாலா தனது காரில் ஏறிக்கொள்ள, நிவனும் முன் இருக்கையில் ஏறிக் கொண்டு, தனது காரோட்டியிடம், பின் தொடரும்படி சொன்னார்!
சாருபாலாவுக்கு அவரது இந்த செயல் சின்னப்பிள்ளைத்தனமாக இருந்தது! அவர் எங்கே தன்னை ஏமாற்றிவிட்டுப் போய்விடப் போவது போல உடன் பயணிக்க கிளம்பிவிட்டாரே என்று!
சாருபாலாவுக்கு அப்படி ஒரு எண்ணம் உள்ளூர இருந்ததும் உண்மைதான்! அதை கண்டறிந்து செயல்பட்ட விதத்தை மெச்சிக் கொண்டார்! மனதுக்குள் தான்!
கார் ஒரு உயர்தர உணவகத்தில் நுழைந்தது! அதுவரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை!
ஓரமாக ஒரு மேசையை தேர்வு செய்து ,அமர்ந்து , தேவையானதை ஆர்டர் தந்த பிறகே சாருவை பேசவிட்டார் நிவன்!
"சரி, இப்ப சொல்லுங்க! என்னை ஏன் சந்திக்க நினைச்சீங்க? என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?" அதற்கு முன்னால் என்னைப் பற்றி எப்படி அறிந்தீர்கள் என்று சொல்லுங்கள்?"
"உங்கள் முகநூல் பக்கத்தில் உங்களது கருத்துக்களை பார்த்திருக்கிறேன்! உங்களது கட்டுரைகளை படித்திருக்கிறேன்! உங்களுக்கும், என்னைப் போலவே மக்களுக்கு சேவை செய்வது தான் நோக்கம் என்பதை அறிந்தேன்! நீங்கள் இங்கே வருவதாக உங்கள் முகநூல் பக்கம் மூலமாக அறிந்து கொண்டேன்! உங்களிடம் ஒரு உதவியை கேட்க துணிந்து வந்திருக்கிறேன்!
"நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்று நினைக்கிறீர்கள்?"
"கணவர் குழந்தை என்று பந்தங்கள் இல்லாமல் வாழ்கிறவர்களுக்குத் தான், ஒரு உறவின் அருமை , முக்கியமாக ஒரு குழந்தையின் அருமை தெரியும் என்பது என் கருத்து!"
"என் வாழ்வில் ஏனோ எந்தக் குழந்தையும் என்னோடு இருக்கும் கொடுப்பினையே இல்லாமல் போய்விட்டது! " சாருபாலா சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு, குரல் தழுதழுக்க சொல்லிவிட்டார்!
பொதுவாக அவர் இத்தனை வருடங்களின் அனுபவத்தில் தன்னைப் பற்றி யாரிடமும் பேசியதில்லை! இன்று ஏனோ அந்த மனிதர் முன்பு தன்னிச்சையாக வந்துவிட்டது!
ஆர்டர் செய்த உணவுகள் வரவும், சாப்பிட்டபடியே பேச்சு தொடர்ந்தது!
"ஐம் சாரி! என்று தன்னை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டு, " என்ன உதவி என்று இன்னும் சொல்லவில்லையே?"
"சொல்லத்தான் வந்திருக்கிறேன், மிஸ். பாலா! சுமார் ஒரு வருடம் முன்பு என்னிடம் ஒரு பெண்ணை மயக்க நிலையில் கொணர்ந்து சேர்த்தார்கள்! பரிசோதித்துப் பார்த்ததில் அந்தப் பெண் கருவுற்று இருப்பது தெரிய வந்தது! அவளுக்கு மயக்கம் தெளியவே இல்லை! கோமா நிலைக்கு சென்றிருந்தாள்! அவளுக்கு பணிவிடை செய்வதற்கு என்று ஒரு நடுத்தர வயது பெண்மணியை அமர்த்தினேன்!
"தொடர்ந்து அவளுக்கு சிகிச்சை அளித்து வந்தேன்! அதன் பலனாக,"ஆறு மாதங்களுக்கு பிறகு அவளுக்கு நினைவு திரும்பியது! ஆனால் அவளுக்கு பழைய நினைவு சுத்தமாக இல்லை! அவள் எப்படி அங்கே வந்தாள் என்பது உட்பட, எப்போதும் ஏதோ சிந்தனையில் தான் இருப்பாள்! அவளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது! பிரசவத்திற்கு பிறகு அவளுக்கு முழுதாக நினைவு திரும்பிவிட்டது என்றாள்! ஆனால் எனக்கு என்னவோ அவளுக்கு பழைய நினைவு மறந்து விட்டதாக சொன்னது பொய் என்று தோன்றியது! நீங்களும் ஒரு மருத்துவர், நான் சொல்வது உங்களுக்கு புரிகிறது இல்லையா? "
" புரிகிறது! அப்புறமாக தன்னை பற்றி சொன்னாளா?"
"அவளைப் பற்றி எதையும் சொல்ல மறுத்தாள்! பச்சை உடம்பு என்று நானும் அழுத்தி கேட்காமல் விட்டுவிட்டேன்! மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள், அவள் என்னிடம் வந்தாள்!"இந்த குழந்தையை நான் சொல்கிறவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்", என்றாள்!
"என்னது? என்ன சொல்றீங்க டாக்டர்? பச்சைக் குழந்தை, பால்குடி மறக்காத சிசுவையா கொடுக்கச் சொன்னாள்?" சாருபாலாவுக்கு மிகுந்த அதிர்ச்சி!
"நானும் இப்படித்தான் அதிர்ந்து போனேன் பாலா! ஏன் ஒப்படைக்க வேண்டும், என்ன காரணம் ?" என்று கேட்டேன்!"
"என் அபிமான மருத்துவர் அவர்! நானும் மருத்துவம் படித்த பெண்தான்! அவரை முகநூலில் பின்பற்றி வந்தேன்! பெண்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம்! ஆகவே இந்தக் குழந்தையை அவரிடம் தான் ஒப்படைக்க வேண்டும்! நான் அவருக்கு ஒரு கடிதமும் தருகிறேன்! அதைக் கொடுத்தால் இந்தக் குழந்தையை அவர் மறுக்காமல் வாங்கிக் கொள்வார்!"என்று சொன்னாள்!
சாருபாலாவுக்கு உள்ளுர ஒருவித பரபரப்பு உண்டாயிற்று! ஆனாலும் காட்டிக்கொள்ளாது, "நிஜமாகவே அவள் குழந்தையை கொடுத்து விட்டாளா டாக்டர்? பெற்ற தாய் குழந்தையை பிரிவது எத்தனை பெரிய வேதனை என்பதை அனுபவித்து அறிந்தவள் நான்! என் நிலைமை வேறு! ஆனால் இது .. இது இதைச் செய்ய மிகுந்த திடம் வேண்டும்!" மீண்டுமாக அவர் தன்னைப் பற்றி சொல்லிவிட்டார்!
அதை உணர்ந்தாலும், கொட்டிவிட்ட வார்த்தைகளை என்ன செய்வது? ஏன் நான் இப்படி, இந்த மனிதர் முன் உளறிக் கொட்டுகிறேன்? என்று தன்னையே கடிந்து கொண்டார்!
இதற்குள் இருவரும் சாப்பிட்டு முடித்திருக்க, பில்லை,நிவன் கொடுத்தார்! சாருபாலாவுக்கு அந்த நேரத்தில் வாக்குவாதம் செய்ய மனமில்லை! அவரது மனம் முழுவதும் குழந்தையும் அந்த பெண்ணும்தான் வியாபித்து இருந்தது! நிவன் பேச ஆரம்பிக்கவும் அதில் கவனம் செலுத்தினார்!
"மிஸ். பாலா! நீங்க சொன்னது போல மிகுந்த மனோதிடம் தேவை! அது அவளுக்கு அதிகமாக இருக்கிறது! குழந்தையை பிரிந்து உன்னால் இருக்க முடியுமா என்று நான் கேட்டேன்! பேசாமல் நீயே அவங்ககிட்ட இந்த குழந்தையை கொண்டு போய் கொடுத்து நீயும் கூடவே இருந்து பார்த்துக் கொள்ளலாமே? என்று கேட்டேன்!
"குழந்தையைப் பிரிந்து இருப்பது கஷ்டம் தான், ஆனால் நான் இதைச் செய்துதான் ஆக வேண்டும்! இது எனக்கான தண்டனை இது! அத்தோடு திருமணம் ஆகாமல் பெற்ற குழந்தை இது! அதற்காக அது தகப்பன் பெயர் தெரியாத குழந்தை இல்லை! ஆனால்,இந்த நிலையில் நான் அவங்களை சந்திக்க தயாராக இல்லை! அதற்கான நேரம் வரும்போது நானே போவேன்! " என்றுவிட்டாள்! ஆகவே தான், என்று நிறுத்திய நிவன், "சரி, வாருங்கள் காருக்கு போகலாம்! " என்று எழுந்து கொண்டார்!
அங்கே அவரது காரில் இருந்து ஒரு நடுத்தர வயது பெண் கைக்குழந்தையுடன் இறங்கினார்!
நிவன் சைகை செய்ய, அந்த குழந்தையை சாருபாலாவிடம் தந்தார்!
பூக்குவியலாக, ஆறு மாதங்கள் நிரம்பிய, அழகான குழந்தை! துறுதுறுவென கை கால்களை ஆட்டியபடி இருந்தது! சாருபாலாவுக்கு இன்பாவை கையில் வாங்கிய தருணம் நினைவுக்கு வந்தது! கண்களில் நீர் பெருக, குழந்தையை ஆசையாக அணைத்து முத்தமிட்டார்!
"இது, குழந்தை பிறந்தது முதல் உள்ள தகவல்கள் அடங்கிய கோப்பு! அதில், தான் அவள் தந்த கடிதமும் இருக்கிறது! படித்துப் பாருங்க!"
சாருபாலா, அதை அவசரமாக பிரித்து வாசித்தார்! வாசிக்க வாசிக்க அவரது கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது!