• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

91. சொந்தமடி நானுக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in

அன்று இரவு தாயுடன் தங்கிக் கொள்வதாக ரிஷி தெரிவிக்கவும், வசந்தன் தன் காரை அங்கேயே விட்டுவிட்டு, நிவனுடைய வாகனத்தில் கிளம்பிச் சென்றுவிட்டான்! அவரும் அதே ஹோட்டலில் ரூம் போட்டிருந்தது கூடுதல் வசதியாகிப் போயிற்று!

ஹோட்டல் செல்லும் வழியில் நிவன் தீவிரமான யோசனையில் இருந்தார். வசந்தனும் நடந்து போன விஷயங்களை அசைபோட்டுக் கொண்டிருந்தான்! ரிஷி மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பான் என்று அவனுக்கு ஒரு அனுமானம் இருந்தது! ஆனால் ஆனந்தன் அதற்கு ஒத்துவருவாரா என்று தெரியவில்லை! முதலில் இன்பாவை கண்டுபிடித்தாக வேண்டும்! அதன்பிறகு தான் மற்றது எல்லாம்!

ஹோட்டல் வந்ததும், "வசந்த் காலையில் கிளம்புவதற்கு முன்பாக என்னை வந்து மீட் பண்ணுங்க! ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்" என்றார் நிவன் ஆதித்யா!

"ஷ்யூர் டாக்டர்! நான் போய் ரிஷியை அழைத்துக் கொண்டு வந்த பிறகு தான் கிளம்புவேன்! உங்களுக்கு ஒன்றும் அவசரமில்லையே?"

"ஒரு அவசரமும் இல்லை! உங்களை சந்தித்த பிறகு தான் கிளம்புவேன்! காலையில் சந்திப்போம், குட் நைட்" என்று விடைபெற்றுக் கொண்டார்!

வசந்தனுக்கு அவர் பேச நினைக்கும் விஷயம் என்னவாக இருக்கும் என்று நினைக்கையிலேயே மனம் பரபரத்தது! ஆனால் அதை அங்கேயே அல்லவா சொல்லியிருப்பார்? சரி பார்க்கலாம்" என்று அறையை நோக்கி சென்றான்!

கொட்டிவாக்கம்

ரிஷியின் மடியில் தலை வைத்து படுத்திருந்தார் சாருபாலா! அவரது மனதும் உடலும் வெகு காலத்திற்கு பிறகு இலகுவாக இருந்தது! ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் வழிந்தது!

"ஷ்.. ஷ் ... அம்மா, என்ன இது இப்ப எதுக்கு அழுகை?" என்று மெல்ல கடிந்து கொண்டான் ரிஷி!

"அழுகை இல்லை ராஜா! ஆனந்தக்கண்ணீர்! நான் கனவில் கூட இப்படி ஒரு நாள் வரும்னு நினைக்கவில்லை! பொதுவாக தாயின் மடிதான் சொர்க்கம் என்பார்கள்! ஆனால் இந்த தாய்க்கு இந்த பிள்ளை மடிதான் சொர்க்கமாக இருக்கிறது! இந்த நிமிடம் இப்படியே என் ஆவி பிரிந்து விட்டால் கூட நான் நிம்மதியாக சாவேன்" உணர்ச்சிவசப்பட்டவராக சாருபாலா சொல்ல..

"ஏன் அம்மா கண்ணிழந்தான் பெற்று இழந்தான் என்பதைப் போல என் நிலைமை ஆகணுமா?"

"என்ன சொல்றே கண்ணா?"

"இத்தனை நாட்களாக உங்களை பிரிந்து இருந்துவிட்டேன்! இப்போதுதான் எனக்கு நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள்! திரும்பவும் விட்டுப் போவதைப் பற்றி பேசலாமா?"

"தப்புத்தான், கேசவ்! என் மனசு அவ்வளவு சந்தோஷமா இருக்கு! உன்னை விட்டு நான் இனி ஒரு போதும் இருக்க மாட்டேன் கண்ணா! அதனால நான் ஒரு முடிவு பண்ணியிருக்கிறேன்! நீ மறுக்க கூடாது சரியா?" சின்ன பிள்ளை போல அவர் பேசுவதை கேட்க ரிஷிக்கு வேடிக்கையாக இருந்தது! கம்பீரமான டாக்டர் இப்படி குழந்தையாக மாறிவிட்டாரே!

"என்ன முடிவு என்று சொல்லுங்க அம்மா"

"நாளைக்கு நானும் உன்கூட வர்றேன் கண்ணா! எனக்கும் என் கண்ணம்மாவைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது"

"உங்களுக்கு வீண அலைச்சல் எதற்கம்மா? மாமாவும் அத்தையும் எப்படி இருப்பாங்க? குட்டிப் பையனை பிரிஞ்சு இருப்பீங்களா?"

"அவங்க இருந்துப்பாங்க தான்! நீ சொன்னது போல வர்ஷனை விட்டு இருக்க எங்க மூனு பேருக்குமே முடியாது , அவனுக்கும் அப்படித்தான்"

"அப்புறம் என்ன செய்வது அம்மா?

"இன்பா போனபிறகு நாங்கள் எங்கேயும் வெளியூர்களுக்கு போகவில்லை! அம்மாவை மட்டும் மாதம் ஒரு முறை நாங்க எல்லாருமாக போய் பார்த்துட்டு உடனடியாக திரும்பிவிடுவோம், அதனால எல்லாருமாக கிளம்பலாம் ராஜா"

"சரி அம்மா! எல்லாருமாக கிளம்பலாம், நேரத்தோடு தூங்கினால்தானே காலையில் சீக்கிரமாக எழுந்து கிளம்ப முடியும்? வாங்க போய் தூங்கலாம்! என்று அன்னையை எழுப்பி அவரது கட்டிலில் படுக்கச் செய்து விட்டு அடுத்து இருந்த இன்னொரு கட்டிலில் ரிஷி படுத்துக் கொண்டான்!

சாருபாலாவுக்கு, முன்பு அவர் கடைசியாக வெளிநாடு கிளம்புவதற்கு முன்பு இன்பா, யாரையோ ஒருதலையாக விரும்புவதாக சொன்னது நினைவுக்கு வந்தது! அப்படி என்றால், அவரது மனது எல்லாவற்றையும் முடிச்சிட்டுப் பார்க்கத் தொடங்கியது! ஆக, அவளுக்கு வந்த காய்ச்சல், பேய்ப்படம் பார்த்ததால் வரவில்லை! தன்னவனுக்கு தன்னை நினைவில்லை என்ற விஷயம் தான், அவளை அப்படி புரட்டிப் போட்டிருக்கிறது! அதனால் அவள் அப்படி திரித்து சொல்லியிருக்கிறாள், என்று இப்போது நினைத்துப் பார்க்கும் போது புரிந்தது! மகன் கிடைத்துவிட்டான், மருமகளும் கிடைத்துவிட்டால் விமர்சையாக திருமணத்தை நடத்த வேண்டும்! ஊருக்கு எல்லாம் என் பிள்ளையை காட்ட வேண்டும்.. ஏதேதோ இன்பக் கற்பனைகளோடு சீக்கிரமே கண்ணயர்ந்துவிட்டார்! சொல்லப் போனால் வெகு காலத்திற்கு பிறகு வருத்தம் சஞ்சலம் ஏதுவும் இல்லாமல் நிர்சிந்தையாக உறங்கினார் எனலாம்!

ஆனால் ரிஷிக்கு தூக்கம் வரவில்லை! அவனது நினைப்பெல்லாம் அனிதா மற்றும் ஆனந்தன் செய்த துரோகத்தில் தான் வந்து நின்றது! அவனால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை! அனிதாவால் உண்மை சொல்ல முடியாது சரிதான்! ஆனால் பெற்ற தந்தை அவனிடம் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் தானே? ஒரு வேளை அவர் சொல்லியிருந்தால், ஒரே ஒரு சதவீதம் அவரை மன்னிக்க நினைத்திருப்பான்! அவர்தான் கோழை ஆயிற்றே! எப்படி சொல்லுவார்?

"போதும் அவர்கள் சங்காத்தமே இனி வேண்டாம் ! அவர்களது முகத்தில் விழிப்பது பாவம்! அதே சமயம் தீர்மானமாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தான்! இத்தனை ஆண்டுகளாக தெரியாமல் அவன் அந்த வீட்டில்.வாழ நேர்ந்து விட்டது! இனி தெரிந்தே அவன் பாவம் செய்ய மாட்டான்! இனி அவனுக்கு அம்மா மட்டும் போதும்! நீண்ட நேரம் உழன்று கொண்டிருந்தவன் ஒரு முடிவிற்கு வந்த பிறகே தூங்கினான்!

❤️❤️❤️

காலையில் எழுந்து தயாராகி அறையை காலி செய்துவிட்டு வரவேற்பில் காத்திருந்தான் வசந்தன்! அப்போது ரிஷி கைப்பேசி அழைப்பு வந்தது!

"ரிஷி என்ன விஷயம்டா? அதான் நானே வந்து பிக்கப் பண்ணிக்கினேனு சொன்னேன்ல?"

"இல்லைடா, நீ அங்கேயே இரு, நாங்க வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறோம்", என்றவன் விஷயத்தை சொல்லவும்

"ஓ சூப்பர்டா! ஆனால் என் கார் அங்கே இருக்கிறதே? உன்னோட காரும் இங்கே இருக்கிறதே ? அதை என்ன செய்ய?"

"நீ ரகுவுக்கு போன் செய்து, நான் வந்த காரை எடுத்துட்டுப் போகச் சொல்லிவிடு வசந்த்! அவன் கேள்வி கேட்க இடம் தராதே! அத்தொடு வேறு எதுவும் சொல்ல வேண்டாம்! எப்போது சொல்லணுமோ நான் அப்போது சொல்லிக் கொள்கிறேன்!" என்றவனின் குரல் உணர்ச்சிகளின்றி ஒலித்தது!

"சரிடா நான் பார்த்துக்கிறேன்! அப்புறம் என்னோட கார்? ஊரில் தேவைப்படும்டா!"

"இங்கே காரை ஓட்ட டிரைவர் ஏற்பாடு பண்ணியிருக்கார் மாமா!
அவரை விட்டு உன் காரை எடுத்து வர சொல்லிடலாம்டா! நாம இரண்டு பேரும், மாத்தி மாத்தி டிரைவ் பண்ணிக்கலாம் சரிதானா?"

"நல்ல யோசனைடா" என்றபோதே நிவன் அங்கே தன் பெட்டியோடு வந்து சேர்ந்தார்!

"என்ன யங் மேன்? என்ன நல்ல யோசனை? என்றார் அவனருகில் அமர்ந்தவாறு!

"ரிஷி, கிளம்பியதும் எனக்கு கால் பண்ணுடா" என்று பேச்சை முடித்து புன்னகைத்த வசந்தன், அவரிடம் விஷயத்தை சொல்ல, சிலகணங்கள் மௌனமானார்!

"என்னாச்சு டாக்டர்? ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்களே? என்னனு சொல்லுங்க"

"மிஸ்டர் வசந்த்..

"டாக்டர், நான் சின்ன பையன் தான், சும்மா வா போ என்றே அழைக்கலாம்"

"தட்ஸ் ஃபைன்! உன்னை இங்கே சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை! முக்கியமாக நான் உன்கிட்டே தான் பேசணும்னு நினைச்சுட்டு இருந்தேன்"

"என்ன சொல்றீங்க டாக்டர் ? என்னை உங்களுக்கு எப்படி தெரியும்?"

"அது உனக்கு பிறகு சொல்கிறேன்! முதலில் நீ இதை சொல்லு, நீங்க இரண்டு பேரும் இன்பாவை எப்படி கண்டுபிடிக்கப் போறீங்க? ஏதேனும் துப்பு கிடைத்திருக்கிறதா?"

"இல்லையே டாக்டர், சொல்லப்போனால் எனக்கு இன்பா காணாமல் போன விஷயம் என் வீட்டில் சொல்லித்தான் தெரியும்! அதுவும் விவரமாக எதுவும் தெரியாது! நான் ரிஷியிடம் அதைத்தான் சொன்னேன்! உடனே அவன் தன்னோட கனவில் வரும் பெண்ணைப் பற்றி சொன்னான்! என் உள் மனசுல அவள் எங்கேயோ உயிரோடு தான் இருக்கிறாள், அவளை நான் தேடி கண்டுபிடித்தாக வேண்டும்" என்று சொன்னான்.

"ஒரு விபரமும் தெரியாமல் எப்படி அவளை கண்டுபிடிப்பீர்கள்?"

"கஷ்டம் தான் டாக்டர், எனக்கும் ரொம்ப யோசனையாக இருந்தது! அதனால நேற்று சுரேந்திரன் அங்கிளிடம் பேச்சுவாக்கில் இன்பா காணாமல் போனது பற்றி கேட்டேன்! அவர் சில விஷயங்கள் சொன்னார்! அதை வைத்துக் கொண்டு தான் தொடங்க வேண்டும்! அத்தோடு, எனக்கு தொழிலையும் பார்த்தாக வேண்டும்! அதனால் ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் மட்டும்தான் நான் அவன்கூட போக முடியும்! அதற்கு பிறகு வேற யாரையாவது தான் துணைக்கு வைத்துக் கொண்டு அவனாக பார்த்துக் கொள்வதாக சொன்னான்"

"நாலு வருடங்களுக்கு முன்னாடி காணாமல் போன ஒருத்தரை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமா வசந்த்?"

"முன்பு எப்படியோ டாக்டர், ஆனால் இப்போது, இணையதளம் மூலம் கண்டுபிடிப்பது எளிதுதானே?"

"எளிது தான் வசந்த் ! ஆனால் அது ஆபத்தும் கூட"

வசந்தன் லேசாக தலையில் தட்டிக் கொண்டான்! "ஆமா, டாக்டர்! என்ன செய்யலாம் என்று நீங்கள் ஏதாவது யோசனை சொல்லுங்கள்,

நிவன் ஆதித்யா, தீவிரமான முகபாவத்துடன், அவனை நேராக பார்த்தார்!

வசந்தன் புரியாமல் விழித்தான்!