சுயநலமில்லா அன்பு
அந்த புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் CCU(crictical care unit) என்று அழைக்கப்படும் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களை வைத்து இருக்கும் அறையின் வாசலில் மூன்று இளம் பெண்கள் அந்த வாசல் வழியாக வரும் மருத்துவர் சொல்லும் செய்தியை கேட்பதற்காக அந்த வாசலை பார்த்தவாறு அமர்ந்து இருந்தனர். அந்த இடத்தை சுற்றி தங்களுக்கு வந்த சிறு சிறு பிரச்சனைகளுக்கு மருந்து வாங்க வந்த அனைவரும் அந்த மூன்று இளம் பெண்களையும் மிகவும் பாவமாக பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் இவர்களை பாவமாக பார்த்துக் கொண்டு செல்வதற்கான காரணம் என்னவென்றால் அந்த ரூமுக்கு உள்ளே இருப்பது இந்த மூன்று இளம்பெண்களின் தாய்மார்கள் அதுவும் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றனர். இந்த பெண்களைத் தவிர வேறு யாரும் அவர்களுக்கு உதவுவதற்கு இல்லை. ஆனால் தங்களை அனைவரும் பாவமாக பார்த்து செல்கின்றனர் என்பதை கூட கண்டு கொள்ளாமல் உள்ளே இருந்து வரும் மருத்துவர் ஏதாவது ஒரு நற்செய்தியை சொல்லிவிட மாட்டாரா என்று ஆவலாக வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள்.
அந்த மூன்று இளம் பெண்களும் இன்னும் கல்லூரிப் படிப்பை கூட முடிக்காதவர்கள். அவர்கள் ராகவி (எம்ஏ முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவி) அனுசியா (இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்துக்கொண்டு இருக்கும் மாணவி) நந்தனா (எம்பிஏ முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவி). இவர்களை ஏமாற்றாமல் உள்ளே இருந்து வந்த 45 வயதை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு மருத்துவர்.
அவரைப் பார்த்தவுடன் மூன்று பெண்களும் ஆவலாக அவர் முன் போய் நிற்க , மூவரையும் பாவமாக ஒரு பார்வை பார்த்த அந்த மருத்துவர் அவர்களை பார்த்து பொதுவாக ஒரு கேள்வி கேட்டார். மருத்துவர் "உங்க மூணு பேர் கூடவும் பெரியவங்க யாரும் இல்லையா யாராவது வருவாங்களா" என்று கேட்டார்.
அதற்கு மூன்று பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு இல்லை என்று தலையசைக்க முதலில் அனுசியா மற்றும் நந்தனா இருவரையும் அழைத்தவர் "உங்க ரெண்டு பேரோட அம்மா கொஞ்சம் கஷ்டமான நிலைமையில் தான் இருக்காங்க ஆனா உங்க நம்பிக்கையை கைவிட்டு விடாதீர்கள் கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க எல்லாமே நல்லதா நடந்து முடியும்" என்று கூறினார்.
அந்தப் பெண்கள் இருவரும் அமைதியாக தலை அசைத்து கொஞ்சம் நகர்ந்தனர். அதன்பிறகு ராகவியை அழைத்தவர் "உங்க அம்மா உடைய ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது.
இதே முன்னேற்றம் இருந்தால் கூடிய விரைவில் நார்மல் வார்டுக்கு மாற்றிவிடலாம்" என்று கூறினார்.
அவர் சென்றவுடன் மூன்று பெண்களும் ஒன்றாக சென்று அமர்ந்தனர். மூவரது முகத்திலும் சோகம் மற்றும் நிம்மதி தெரிந்தது அந்த சோகத்திற்கு காரணம் என்னவென்றால் இரண்டு பேரின் அம்மாவின் நிலைமை இன்னும் சரியாகவில்லை அதேபோல் அவர்கள் முகத்தில் இருந்த அந்த சிறு நிம்மதிக்கு காரணம் என்னவென்றால் ஒருத்தியின் தாயாவது சீக்கிரம் சரியாகி கொண்டு இருக்கிறார் என்பதுதான்.
அப்போது 3 தாய்மார்களுக்கும் தேவையான மருந்துகள் உணவுகள் மற்றும் இதர சில பொருள்களை உள்ளிருந்து வந்த ஒரு நர்ஸ் கொண்டு வருமாறு கூறினார். மூவரும் தங்கள் கைகளில் கொடுத்தவற்றை பார்த்தனர். பின்பு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை சிந்திவிட்டு ராகவி மொத்தமாக மூவருக்கும் மருந்துகள் வாங்க மருந்து சீட்டை எடுத்துக்கொண்டு மருந்தகம் சென்றாள்.
நந்தனா தங்களுடைய தாயார் மற்றும் தங்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் வெந்நீர் போன்றவற்றை வாங்குவதற்கு அங்குள்ள உணவகத்திற்கு சென்றாள். அனுசியா தாங்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று மூன்று தாயாருக்கும் தேவையான மாற்று உடைகள் முதல் இதர தேவையான பொருள்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.
இவர்கள் மூவரும் மருத்துவமனை வந்த புதிதில் தங்களுக்கென தனி அறை வாங்காமல் தங்கள் தாயார் இருக்கும் அறையின் வாசலிலேயே காத்துக் கிடந்தனர். அதை பார்த்து மிகவும் கலங்கிப் போன மருத்துவர் ஒருவர் அவர்களிடம் வந்து பேசினார்.
ஒரு மருத்துவர் தங்களை நோக்கி வருவதை பார்த்து மூவரும் எழுந்து நின்றனர். அதை பார்த்த அவர் "அம்மா நீங்க மூணு பேரும் பாக்குறதுக்கு என்னோட பொண்ணுங்க மாதிரி தான் இருக்கீங்க நீங்க இந்த மருத்துவமனையில் வந்து ஒரு நாள் முடிய போகுது ஆனா உங்க கூட துணைக்கு யாருமே இல்லை ஏதாவது தேவை நான் மாத்தி மாத்தி உங்களுக்கு நீயே உதவி பண்ணி கொள்கிறீர்கள். இப்படியே நீங்கள் இந்த அறை வாசலில் காத்துக் கிடந்து உங்கள் உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மூவருக்கும் தனித்தனி ரூம் வேண்டாம் ஆனால் உங்கள் மூவருக்கும் சேர்த்து ஒரு ரூமை கொடுக்க சொல்லி இருக்கிறோம் சிறிது நேரம் மாற்றி மாற்றி ஓய்வு எடுங்கள். நீங்கள் மூவரும் தெம்பாக இருந்தால்தான் உங்களுடைய தாயார் மூவரும் நலமாக வருவார்கள்" என்று கூறினார்.
அவர்களும் இதற்கு மேல் வேண்டாம் என்று கூறினால் அது அந்த மருத்துவரை அவமதித்தது போல் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு அமைதியாக தலையசைத்தனர். ஏனென்றால் காலையில் அவர்கள் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர் ஒரு சில மணி நேர இடைவெளியில் தான் மூவரும் மாற்றி மாற்றி தங்கள் தாய்மார்களை அழைத்து வந்து இருந்தனர். யாரும் இல்லாமல் மாற்றி மாற்றி திணறும் போது மற்றவர்களுக்கு அவர்களாகவே வந்து கை கொடுத்து உதவினார்கள். இதனால் அவர்கள் மூவருக்கும் ஒரு நல்ல நட்பு உருவாகி இருந்தது. அந்த காரணத்தினால் அந்த மருத்துவர் சொன்னதற்கு அமைதியாக கட்டுப்பட்டு ஒன்றாக தங்கினர்.
மூவரும் அனைத்து தேவைகளையும் வாங்கிவந்து அந்த நர்ஸிடம் கொடுத்தனர். அவரும் மூவரையும் பார்த்து "நாங்க உள்ள இருக்க உங்க அம்மாவை பார்த்துக் கொள்கிறோம் நீங்க மூணு பேரும் போய் சாப்பிட்டு வாங்க" என்று கூறினார்.
மூவரும் சாப்பிட்டு விட்டு வந்து வழக்கம்போல அந்த அறையின் வாசலில் காத்திருக்க ஆரம்பித்தனர். எப்பொழுதும் போல் தினமும் அவர்களை பார்ப்பதற்கு அனுமதிக்கும் நேரம் நெருங்கியது. யாரையும் அந்த அறைக்குள் அனுமதிக்காமல் இருந்தாலும் இந்த பெண்கள் பேசுவதைக் கேட்டால் அவர்கள் தாய்மார்கள் சரியாகி விட மாட்டார்களா என்ற ஆசையில் மருத்துவர்கள் அன்று அவர்களை உள்ளே அனுமதித்தார்.
மூவரும் தனித்தனியாக அவர்களுடைய தாயாரிடம் செல்வார்கள் என்று அங்கே இருந்த அனைவரும் நினைத்தனர். ஆனால் அந்த நினைப்பை பொய்யாக்கி மூவரும் ஒன்றாக முதலில் ராகவியின் தாயின் அருகே சென்றனர். அவர் கண்விழித்து படுத்து இருந்தார் தன் முன்னே வந்து நிற்கும் மூன்று பெண்களைப் பார்த்த உடனேயே தன் அருகில் படுத்து இருப்பவர்களின் பெண்கள் தான் என்பதை உணர்ந்து கொண்டவர். தன்னால் முடிந்த வரையில் அவர்களை பார்த்து புன்னகைக்க முயன்றார்.
மூன்று பெண்களும் அவரை பார்த்து சிரித்து விட்டு அவருடைய கையை பிடித்தபடி நின்றனர். ராகவி மெதுவாக "அம்மா நீ கொஞ்சம் கொஞ்சமா சரியாகி கொண்டு வருகிறாய் அப்படின்னு டாக்டர் இன்னைக்கு காலைல சொன்னாங்க எங்க மூணு பேருக்கும் கொஞ்சம் நிம்மதி வந்து இருக்கு இதே மாதிரி மத்த ரெண்டு பேரும் எழும்பி வந்துட்டா நாங்க ரொம்ப நிம்மதியா இருப்போம். இப்போ எங்க மூணு பேரோட நிம்மதியும் உங்க மூணு பேரு கையிலதான் இருக்கு இப்ப எதுக்கு ஆக நான் இந்த விஷயத்தை உன் கிட்ட சொல்றேன் அப்படின்னா முன்னேற்றம் அடைந்து வந்து கொண்டு இருக்கிற நீ எந்த ஒரு காரணத்திற்காகவும் மறுபடியும் பழைய நிலைமைக்கு போகக்கூடாது. இதுவரைக்கும் உனக்கு நான் மட்டும்தான் பொண்ணு ஆனா இப்போ இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க எங்க மூணு பேரையுமே நீ பார்த்துக்கணும் அதனால சீக்கிரம் எழும்பி வா" என்று கூறி தன் தாயின் நெற்றியில் முத்தம் வைத்தாள்.
அனுசியா மற்றும் நந்தனா இருவரும் அதே போல் அவர் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு "ரொம்ப நாள் எங்களை காக்க வைக்காமல் சீக்கிரம் எழும்பி வந்துருங்க உங்களுக்காக வாசலையே நாங்க காத்து இருப்போம்" என்று கூறினார்கள்.
ராகவியின் தாயார் கண்களில் கண்ணீரோடு சம்மதமாக தலையசைத்தார். அவருக்குள் தான் சரியாக வேண்டும் என்று ஒரு உத்வேகம் வர ஆரம்பித்தது "யார் என்று தெரியாத இந்த குழந்தைகளுக்கும் தான் வேண்டும் அதனால் எவ்வளவு விரைவாக தன்னைத்தானே மன தைரியம் அடைய வைத்து சீக்கிரம் குணமாகி வெளியே செல்லவேண்டும். அப்பொழுதுதான் தன்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியும்" என்று எண்ணிக்கொண்டார். அது அவருடைய முகத்தில் பிரதிபலித்தது அதைப் பார்த்த மூன்று பெண்களும் ஒரு நிம்மதி பெருமூச்சை அவர் அறியாமல் விட்டுவிட்டு அடுத்து இருந்த அனுசுயாவின் தாயார் அருகில் சென்றனர்.
அனுசியா மற்றும் நந்தனா தாயார் இருவரும் கண் விழிக்கவில்லை அதை பார்த்த மூவருக்கும் கண்கள் கலங்கியது இருந்தாலும் தங்களை சமாளித்துக் கொண்டு அனுசியா தாயின் அருகில் சென்றனர்.
தன் தாயின் அருகில் சென்ற அனுசியா தனக்கு வந்த கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு தன் தாயின் கைகளைப் பிடித்தவள் "அம்மா உனக்கு நான் ஏதாவது கஷ்டம் கொடுத்து இருந்தா என்ன மன்னிச்சிடு ஆனால் தயவு செஞ்சு என்னை நீ விட்டுட்டு போய் விடாதே ஏன்னா நீ என்னை விட்டுட்டு போயிட்டா கிட்டத்தட்ட நான் ஒரு அனாதை மாதிரி தான். இங்க இருக்கிற யாரு எது சொன்னாலும் நான் நம்புவதற்கு தயாராக இல்லை நீ எனக்காக வரவேண்டும் என்று நினைத்தால் மட்டுமே போதும் நீ கண்டிப்பாக சரியாகி விடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுநாள் வரை என்னை மட்டுமே நீ பார்க்க வேண்டி இருந்தது இப்போது என்னை போல இன்னும் இருவர் உனக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் மூவரையும் ஏமாற்றாமல் நீ வருவாய் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது அதனால் விரைவாக வந்துவிடு" என்று கூறி தன் தாயின் நெற்றியில் முத்தம் வைத்தாள் அதில் இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவரின் கண்களில் விழுந்தது.
ஏற்கனவே அவரை பார்த்தது முதல் கண்ணீரில் நின்று கொண்டு இருந்த நந்தனா மற்றும் ராகவி இருவரும் அதே கண்ணீரோடு அனுசியா தாயின் நெற்றியில் முத்தம் வைத்து "ஒரு பிள்ளையை அனாதையாக விட்டு சென்றாலே அவர்கள் தனியாக இந்த சமூகத்தில் பிழைப்பது கஷ்டம் நீங்கள் எங்கள் மூவரையும் அனாதையாக விட்டுவிட்டு சென்று விடாதீர்கள். இன்னும் எவ்வளவு விஷயம் நீங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. நாங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உங்களுடைய மனதில் பதிய வையுங்கள்" என்று கூறிவிட்டு அடுத்து படுத்து இருந்த நந்தனாவின் தாயின் அருகில் சென்றனர்.
தன் தாயின் அருகில் சென்ற நந்தனா எதுவும் கூறாமல் அவருடைய நெற்றி மற்றும் கன்னங்களில் அழுத்தமாக முத்தம் வைத்து "அம்மா உனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தால் நீ போய் வா. ஆனால் அதற்கு முன் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள் உன்னை நிம்மதியாக அனுப்பி வைத்துவிட்டு நான் இங்கு நிம்மதியில்லாமல் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திற்கும் உன்னை நான் தேடுவேன் அப்போதெல்லாம் என்னையறியாமல் நான் கதறி அழுவேன். அப்போது எனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள் இதுநாள் வரை என்னை கஷ்டப்பட விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்த நீ என்னை முழுவதுமாக அழுக வைப்பாய் அதுமட்டுமில்லாமல் நிம்மதியில்லாமல் சின்ன சின்ன விஷயத்துக்கும் ஏங்கும் அளவிற்கு என்னை விட்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால் நீ சென்று வா நீ திரும்பி வருவாய் என்று உனக்காக எனக்கு கிடைத்த இரண்டு உறவுகள் காத்துக்கொண்டு இருக்கிறது. உன்னால் முடிந்தால் கண் திறந்து அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு செல்" என்று கூறி விட்டு ஒதுங்கி நின்று விட்டாள்.
அனுசியா மற்றும் ராகவி இருவரும் நந்தனாவின் தாயின் அருகில் சென்று இரண்டு கைகளையும் பிடித்து அதில் முத்தம் வைத்துவிட்டு அவருடைய நெற்றியில் முத்தம் வைத்தனர். ஏனென்றால் மிகவும் மோசமாக இருந்தது நந்தனாவின் தாயார் தான். பின்பு மெதுவாக அவருடைய காதுகளின் அருகில் சென்றவர்கள் "உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்னதான் நாங்கள் தைரியமாக அனைத்தையும் செய்து கொண்டு இருந்தாலும் நீங்கள் இல்லையென்றால் நாங்கள் கோழைகளாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உங்களுடைய பிள்ளைகளை கோழைகளாக பார்க்க விரும்பினால் நீங்கள் நிம்மதியாக சென்று வாருங்கள். உங்களுடைய மகளே உங்களுக்கு அனுமதி அளித்து விட்டாள் ஆனால் நீங்கள் நிம்மதியாக தூங்க கூட முடியாது. ஏனென்றால் உங்கள் மகள் நிம்மதி இல்லாமல் தவிப்பாள் அனைத்தையும் யோசித்து முடிவெடுங்கள்" என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டனர்.
மூன்று பெண்களும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் சுயநலமும் இல்லாமல் மூன்று தாய்மார் இடமும் பேசியதை பார்த்து கொண்டு இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் கண் கலங்கி நின்றனர்.
அந்த மருத்துவர் மற்றும் செவிலியர் மனதிலிருந்து இவர்கள் மூவரும் பிழைக்க வேண்டும் என்ற வேண்டுதல் இருந்தது. உள்ளே இருந்து வெளியே வந்த மூவரும் தங்களுடைய அறைக்கு சென்று தங்களால் முடிந்த வரையில் அழுகையில் கரைந்த பின்னர் ஒரு வழியாக தங்களை சமாதானப் படுத்திக் கொண்டு தங்கள் தாயாருக்கு தேவையானவற்றை வாங்கிக்கொண்டு அந்த அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலுக்கு சென்றனர்.
அந்த மூன்று பெண்களின் பாசம் மற்றும் அவர்களுடைய வார்த்தைகள் மற்றும் அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவது போல் அடுத்து வந்த இரண்டு நாட்களில் நந்தனா மற்றும் அனுஷியா இருவரின் பெற்றோரின் உடல் நிலையில் முன்னேற்றம் வர ஆரம்பித்தது.
அதை மிகவும் மகிழ்ச்சியாக வெளியே வந்து மருத்துவர் மூவரிடமும் கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு ஒரு வாரத்தில் ராகவியின் தாயார் நார்மலாக மாறிய காரணத்தினால் அவரை தனி அறைக்கு மாற்றி இருந்தனர். அவர் இந்த மூன்று பெண்களின் பாசப்பிணைப்பை பார்த்து மிகவும் மகிழ்ந்து போனார்.
அதன் பிறகு 10 நாளில் அனுசியா மற்றும் நந்தனார் இருவரின் பெற்றோர் சரியாகி தனியறைக்கு அனுப்பப்பட்டனர். அந்த நேரம் ராகவியின் தாயார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் நேரம் வந்தது. அதைப் பார்த்த நந்தனா மற்றும் அனுசியா இருவரும் மகிழ்ந்து போனார்கள். ஆனால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ராகவி மற்றும் அவருடைய தாயார் இருவரும் வீட்டிற்கு செல்லாமல் இவர்கள் நான்கு பேருக்கும் துணையாக அங்கேயே இருந்து விட்டனர்.
தனியறைக்கு மாற்றப்பட்ட பிறகே நந்தனா மற்றும் அனுஷ்யா இருவரின் தாயாரும் அனைத்தையும் நன்றாக கவனிக்க ஆரம்பித்தனர். மூன்று பெண்களின் பாசம் மற்றும் தன்னலம் இல்லாமல் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவி எந்தவித சுயநலமும் வெறுப்போ பொறாமையோ இல்லாமல் அனைத்து தாய்களையும் ஒரே போல் மதித்து செயல்படுவது என்று மூன்று பெண்களுமே தங்கள் பெண்கள் என்று எண்ணும் நிலைமைக்கு அந்த மூன்று தாய்களும் வந்து இருந்தனர்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அந்த மருத்துவமனை வாசத்தை முடித்து விட்டு மூன்று குடும்பமும் அங்கிருந்து கிளம்பியது. மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர் அனைவரும் அந்த மூன்று பெண்களையும் ஆசிர்வதித்து "வாழ்க்கையில் இனி உங்களுக்கு மகிழ்ச்சி மட்டுமே நினைக்க வேண்டும்" என்று கூறி அனுப்பி வைத்தனர்.
மூன்று தோழிகளும் ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுத்து தங்களுடைய இல்லம் வந்து சேர்ந்தனர். தோழிகள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோரும் அப்படியே விடை பெற்று சென்றனர். அதன்பிறகு வந்த நாட்களில் சின்ன சின்ன விஷயங்கள் கூட மாற்றி மாற்றி ஆலோசனை கேட்டு செய்யும் நிலைமைக்கு அந்த குடும்பங்களின் உறவு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
தங்கள் மகள்கள் தனியாக கஷ்டப்படும் நேரங்களில் உதவியாக இல்லாத உறவினர்கள் அனைவரையும் பெயருக்கு உறவினர்கள் என்று வைத்துவிட்டு எந்த ஒரு உறவும் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்த இந்த பெண்களின் குடும்பம் ஒரே குடும்பமாக மாறியது.
சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட ஒன்றாக சேர்ந்து அனைத்தையும் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
கடவுளின் ஆசீர்வாதத்தால் மூன்று பெண்களுக்கும் ஒரே ஊரில் திருமணம் செய்வதற்கு வாய்ப்பு அமைய அந்த மூன்று பெண்களுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பற்றி விசாரித்த வரையில் அவர்கள் மிகவும் நல்லவர்கள் என்று தெரிந்த காரணத்தினால் ஒரே ஊரில் மூவரையும் திருமணம் முடித்துக் கொடுத்தனர் அவர்களின் தாய்மார்கள்.
இந்தப் பெண்களின் நட்பு மற்றும் மருத்துவமனை விவரங்கள் அனைத்தும் தெரிந்த மாப்பிள்ளை வீட்டினர் மறுக்காமல் தனியாக இருந்த அவர்களின் தாயாரையும் உடன் அழைத்து சென்றுவிட்டனர். அதன் பிறகு சொல்லவா வேண்டும் அவர்களின் மகிழ்ச்சிக்கு.
உண்மையான நட்பு அன்பான கணவன் பாசமான மாமனார் மாமியார் தன்னைப் பெற்ற தாய் தன்னுடைய தோழி என்று மிகவும் அழகாக நிறைவாக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் அந்த மூன்று பெண்களும்.
ஒருவர் மேல் ஒருவருக்கு ஏற்படும் அன்பு எந்த ஒரு காரணத்திற்காகவும் இருக்காது அது தான் சுயநலமில்லாத அன்பு தன் தாய் தன் குழந்தை மேல் வைத்திருக்கும் அன்பைப் போல உண்மையான நட்பு கிடைத்தால் ஏழையாக இருப்பவன் கூட கோடீஸ்வரன் தான் எவ்வளவு உறவினர்கள் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் அனைவரும் நம்மை கைவிட்டு விடுவார்கள். ஆனால் யாரென்று தெரியாதவர்கள் கூட நம்முடன் நமக்காக நம்முடைய கட்டங்களில் இருப்பார்கள் அவர்கள் வைத்து இருப்பதை சுயநலமில்லாத அன்பு அதற்கு இன்னொரு பெயர் நட்பு என்று கூட கூறலாம்.
இது என்னுடைய முதல் சிறுகதை இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள் இல்லை நான் தவறாக ஏதேனும் கூறியிருந்தாலும் தயங்காமல் கூறுங்கள். ஏனென்றால் நீங்கள் கூறும் கருத்துக்களை வைத்து தான் நான் என்னுடைய எழுத்துக்களில் முன்னேற்றமடைய முடியும்.
***
நன்றி