• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode _01

Alamu Giri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 15, 2024
21
26
13
Chennai
என் துணைக்கு நீதான் 💞

அத்தியாயம் -1


சூரியனின் பொற்கரங்கள் பூமியை தொடும் முன்பே எழுந்து, அந்த கதிரவனின் தரிசனத்திற்காக கையில் தேநீர் குவளையுடன் அந்த அடுக்கு மாடியின் மூன்றாம் தளத்தின் பால்கனியில் நின்று மிடறு மிடறாக தேநீரை சுவைத்துக் கொண்டு இருந்தாள் அற்புதா.

இந்த நேரம் அவளுக்கே அவளுக்கானது. அவளை அந்த நாளின் வேகத்திற்கு ஏற்ப ஓட வைக்க இந்த இதமான காலை விடியல் அவளுக்கு உத்வேகமாக இருக்கும்.


இன்னும் சற்று நேரத்தில் வழக்கமான அதிகார குரல் ஒலிக்கும். வேறு யாருமில்லை அற்புதாவின் மாமியார். அவரைப் பார்க்கும் முன்பு அற்புதாவின் ரிஷிமூலம் ஆதி மூலத்தை அவளோடு சேர்ந்து பார்த்துவிட்டு வருவோம்.


அற்புதா மதுரையில் சிவசங்கரன் பார்வதியின் மூத்த மகள் அவளுக்கு பிறகு ரிஷி 14, பரத் 10 என்று இரு பிள்ளைகள்.

அற்புதாவின் 16 ஆவது வயதில் ஏதோ ஒரு துரதிஷ்ட ஞாயிற்றுக் கிழமையில் பார்வதிக்கு நெஞ்சில் ஏற்பட்ட சிறிய வலி சிறிது நேரம் செல்ல செல்ல பெரு வலியாக எடுக்க,

மருத்துவரான சிவ சங்கரனின் மடியிலே மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார் பார்வதி .


குடும்பமே ஸ்தம்பித்து நின்ற நிலை. குழந்தைகள் மூவரும் தனித் தீவில் விடப்பட்டது போல நின்றனர் .


அதிலும் அற்புதா சுத்தமாக யாருமற்று விலகி நின்றாள். ரிஷிக்கும் பரத்திற்கும் புரிந்தும் புரியாத நிலை. ஆனால் அற்புதாவிற்கு அனைத்திற்கும் தாய் தேவைப்பட்டாள் .

பார்வதி இறந்த அடுத்த ஆறாம் மாத தொடக்கத்தில் சிவசங்கரன் தாய் ஆண்டாளின் வற்புறுத்தலின் பேரில் புது மாப்பிள்ளை அவதாரம் எடுத்தார்.


தாயின் பிரிவில் வாடியவள் அப்பத்தாவின் அன்பிற்கு ஏங்கி தவிக்க, ஆண்டாளுக்கு மருமகள் பார்வதி இருக்கும் வரை அவருடன் ஒட்டு புள்ளாக சுற்றிய அற்புதாவை அரவணைக்க தோன்றவில்லை.


மாறாக தன் தம்பியின் மகளை அதுவும் பின் நாற்பதுகளில் இருந்த தன் மகனை 32 வயதான தாமரை மணந்து கொண்டதால் அவரின் அன்பு பாசம் எல்லாம் தாமரையிடமே சென்றது.

அன்பு என்று சொல்வதை விட தன் பிள்ளையின் வாழ்க்கையை காப்பாற்ற வந்த தெய்வம் என்று எண்ணி அந்த தெய்வத்திற்கு ஒப்பாகத்தான் அவர் தாமரையை நடத்துவார்.


அற்புதாவை உதாசீனப்படுத்துவதில் தாமரை தன் மாமியாரிலும் ஒரு படி மேலே போய்விடுவாள்.

ஏனோ வளர்ந்து நிற்கும் அவளை பார்க்கும்போது மட்டும் இத்தனை பெரிய பிள்ளையின் தகப்பனை தான் மணந்து கொண்டிருக்கிறோமே என்ற எண்ணம் வந்துவிடும் தாமரைக்கு .


தாமரையும் ஆண்டாலும் ஆண் பிள்ளை இருவரையும் விட்டுவிடவில்லை. ஆண்டாளுக்கு ஆண் பிள்ளைகளின் மீது உள்ள பாசமும் , ரிஷி மற்றும் பரத்தின் துறு துறுப்பும் தாமரையைக் கவர மாமியார் மருமகள் இருவரும் ஆண் பிள்ளைகள் இருவரையும் அரவணைத்துக் கொண்டனர்.


தனித்து நின்ற அற்புதாவிற்கு எதிலும் ஈடுபாடு இல்லாமல் போயிற்று .

நல்ல வேலையாக அவளுக்கு எந்த குறையும் இல்லை. முக்கியமாக சித்தி கொடுமை இல்லை என்பதை தன் சொந்தங்களுக்குத் தெரிவிக்கும் முனைப்பில் இருந்த ஆண்டாளுக்கு தெரியவில்லை,

அன்பிற்கு ஏங்கித் தவிப்பது வாழும்போதே நரகத்தில் இருப்பதற்கு சமம் என்று.

தாமரையின் மனோபாவம் இருக்கிறாயா இரு, போகிறாயா

உன் இருப்பும் இல்லாமையும் எனக்கு எந்த விதத்திலும் சலனத்தை ஏற்படுத்தவில்லை என்று இருந்தது.


அடுத்த ஆறு மாதத்தில் தம்பிகளும் அக்காவிடம் இருந்து முழுமைக்கும் விலகி விட்டார்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு ரிஷி மட்டும் அவளுடன் இணக்கமாக இருந்து அன்பாக நடந்தான்.

அவனுக்கு அடிக்கடி கருப்பு வெள்ளை படமாக அக்கா அம்மாவுடன் உரையாடிய நினைவுகள் வரும் ஏனெனில் மூவரும் அவ்வளவு இணக்கமாக இருப்பார்கள்.


அக்காவின் செல்ல கொஞ்சல்கள் என் லட்டு குட்டி என்ற அவளின் செல்லமான அழைப்பு .

சமயங்களில் அற்புதா மடியில் தலை வைத்து அம்மாவின் மடியில் கால் வைத்து பரத்தை அழவிடும் சில நினைவுகள் என்று அடிக்கடி நினைவு வரும்..

ஆனால் பரத்திற்கு அதுவும் இல்லை எப்போதும் பாட்டியின் பிடியில் இருந்தவனுக்கு எந்த நினைவுகளும் இல்லை. பரத் அன்னையை அதிகம் தேடாதவன்.


அதிலும் பரத்தின் பிறப்பிற்கு பிறகு நலிவடைய தொடங்கிய பார்வதிக்கு பரத்திடம் ஈடு கொடுக்க முடியாமல் மாமியாரிடம் முழுமையாக பரத்தை ஒப்படைத்து விட்டாள் பார்வதி.

ரிஷி மட்டும் அக்காவை தனித்து இருக்க விடமாட்டான். ஏனோ அவனுக்கு அம்மாவின் அடுத்த பிம்பமாக தோன்றினாள் அற்புதா.


ஆனால் இளையவர்கள் என்ன செய்தாலும் அவர்கள் இருவருக்கும் அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.

தனித்து விடப்பட்ட அற்புதாவிற்கு எதிலும் ஈடுபாடு இல்லாமல் போயிற்று . 12ஆம் வகுப்பில் மிக மிக மோசமான மதிப்பெண்களுடன் ஏதோ தேர்ச்சி பெற்றாள் .

அவளை ஏன் இவ்வளவு குறைந்த மதிப்பெண் எடுத்தாய் என்று அவள் மீது கோபப்பட கூட அந்த வீட்டில் யாரும் இல்லை ரிஷியை தவிர்த்து.


அவன் பத்தாம் வகுப்பில் இருந்ததால் அவனாலும் சரியாக நேரம் செலவிட முடியவில்லை அக்காவுடன்.

சிவசங்கரன் கடமையாக கூட ஏன் இந்த அளவு மோசமான மதிப்பெண் பெற்றாய் என்று கேட்கவில்லை. சிறந்த மருத்துவராக இருந்தவர் நல்ல அப்பாவாக இருக்க தவறிவிட்டார் அற்புதாவின் விஷயத்தில்.


ஆண்டாளுக்கு ஆகப்பெரும் கவலையாக இருந்தது தன் தம்பி மகள் கருத்தரிக்காமல் இருப்பது.

அந்த கவலை அவரை அறிக்க அற்புதாவை கரித்துக் கொட்ட ஆரம்பித்தார். இந்த கலைகளில் அவளை கல்லூரியில் சேர்க்கவும் யாரும் இன்றி போனார்.


கடைசியில் கல்யாண சந்தையில் அற்புதாவை அறிமுகப்படுத்த ஒரு டிகிரி தேவை என்பதால் தாமரையின் மூலமாக அவளுக்கு கல்லூரி படிப்பு ஆரம்பமானது.

எது யாரால் கிடைக்கிறதோ அதற்கு ஏற்ப தானே அதற்கான பிரதிபலிப்பு இருக்கும்

அன்பே இல்லாத இவர்களிடம் இருந்து கிடைக்கும் கல்வி கூட வேண்டாம் என்று எண்ணியவள் கடமையாக கூட படிக்க முயற்சிக்கவில்லை.

அந்த வீட்டில் இருப்பது மூச்சு முட்டுவது போல் இருக்க அதற்கு பதிலாய் தன் வயது ஒத்த பிள்ளைகளை காண மட்டுமே கல்லூரி செல்வாள்.

ஆனால் கல்லூரியிலும் யாருடனும் நெருங்கி பழகாமல் ஒரு வேடிக்கையுடன் கடந்து போவாள்.

சிவசங்கரனுக்கும் தாமரைக்கும் திருமணமான மூன்றரை ஆண்டுகள் கழித்து ஆண்டாளின் இரண்டாம் இன்னிங்ஸ் பேரப்பிள்ளைகள் ஆசிய நிறைவேறியது.

வீட்டில் இருக்கவே மூச்சு முட்டி போகும் அற்புதவிற்கு வீடு என்றால் இன்பமாக மாறிய காலமும் வந்தது.


தாமரையின் கருத்தரிப்பு காரணம் கொண்டு ஆண் பிள்ளைகள் இருவரும் போர்டிங் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.


ஏதோ ஒரு அரசு பள்ளி கேம்பிற்கு சென்ற சிவசங்கரனுக்கு அங்கு அறிமுகமாகியவன் கமலக்கண்ணன்.

சென்னையைச் சேர்ந்த கமலக்கண்ணன் வாடகைக்கு வீடு தேடுவது தெரிந்து சிவசங்கரன் அவரின் வீட்டோடு இருக்கும் அவுட் ஹவுஸுக்கு அவனை அழைத்து வந்து குடி வைத்தார்.

வாடகைக்கு வீடு அமைந்ததோடு அல்லாமல் வாழ்வு முழுவதும் அற்புதாவின் மன வீட்டில் அமர்ந்து விட்டான் கமல்.

20 தொட 6 மாதங்கள் இருக்கும் ரெட்டான் கெட்ட நிலையில் இருக்கும் பெண்ணிற்கு கமலகண்ணனை பார்த்ததும் பிடித்து போனது.

அவளுக்கே அவளுக்கானவனாய் அவனை வரித்துக் கொண்டாள் பெண். அவளின் அலைபாயும் கண்களில் பாஷையை புது வீட்டிற்கு சென்ற ஒரே மாதத்தில் அடையாளம் கண்டு கொண்டான் கமலக்கண்ணன்.


அவளின் தனிமையை போக்க வந்த தேவ தூதன் போல அவனோடு வாழ்க்கையை கற்பனைகளிலேயே வாழ்ந்து களித்தாள் பெண்.

திருமணம் தொடங்கி பிள்ளைகள் முதல் பேரப்பிள்ளைகள் வரை கற்பனையில் வாழ்ந்தவளுக்கு தெரியாது வாணலிற்கு பயந்து அடுப்பில் விழ போவது.

அவளின் ஒரு மாத காதல் பார்வைக்கு அடுத்த மாதத்தில் பதில் பார்வை பார்க்கத் தொடங்கியிருந்தான் கமல்.

பிறகென்ன மானே தேனே என்று மதுரையின் சந்து பொந்து கடைகள் மால் தியேட்டர் என இருவரும் தங்கள் காதல் பயிரை வளர்த்து வைக்க,

ஒரு நாள் தாமரையின் மாதாந்திர பரிசோதனைக்கு மருத்துவமனை சென்று வந்த தாமரை மற்றும் ஆண்டாளின் கண்களில் இருவரும் விழுந்தனர்.

பெரிதாக எதிர்ப்பு என்று எதுவுமில்லை .கமலின் அன்னை மற்றும் அண்ணன் குடும்பத்தையும் வரவழைத்து அற்புதா கமலின் திருமண பேச்சை ஆரம்பித்து வைத்தது சாட்சாத் தாமரை தான்.


ஏனோ அவளுக்கு அற்புதாவின் இருப்பு எப்போதும் இனித்தது இல்லை.

கமலின் தாயார் லலிதா அவர் மூத்த மகன் பரஞ்சோதியின் வீட்டிலேயே இருக்க விருப்பம் உடையவர். கணவர் தலைமை ஆசிரியராக இருந்தவர்.

பணத்திற்கு எந்த குறையும் இல்லை மாதமானால் லலிதாவின் வங்கி கணக்கிற்கு கணிசமான பென்ஷன் தொகை வருவதால் அவர் யாரையும் நம்பியிருக்க வில்லை.


ஆனால் அவர் இருக்கும் இடத்தில் அவர் குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்கும். அப்படி குணம் கொண்டவர்.

அற்புதாவை பார்த்ததும் அவருக்கு பிடித்தம் தான். ஏனென்றால் அவர் அதட்டி உருட்டி மிரட்ட இவள் ஒரு பொம்மை போல அவர் கண்ணுக்கு தெரிந்தாள்.

சொந்த வீட்டிலேயே ஒடுங்கி ஒதுங்கி கண்ணில் மிரச்சியுடன் நின்றவளை பார்த்து லலிதாவுக்கு குதூகலம் என்றால்,.

பரஞ்சோதியின் மனைவிக்கு பாவமாக இருந்தது. ஏனென்றால் மாமியாரின் குணம் அவளுக்கு அத்துப்படி.

ஒரு டம்ளர் தண்ணீருக்கு கூட எழாதவர் லல்லி. இருந்த இடத்திலிருந்து அத்தனை வேலைகளையும் சொல்லுவார். எப்போதும் அவர் பேச்சில் மற்றவர்களை அதிகாரம் செய்யும் தோரணை மட்டும் தான் இருக்கும்.


கடந்த ஆறு மாதங்களில் பரஞ்சோதியின் மனைவி மாலதி லலிதாவை நுணுக்கமாக கணித்து வைத்திருந்தாள்.

அவர் தான் அப்படி என்றால் பிள்ளைகளான பரஞ்சோதியும் கமலக்கண்ணனும் தாய் என்று வந்துவிட்டால் உயிரையும் கொடுப்பார்கள்.

அதிலும் சற்று உடல் ஒட்டி மூட்டு வலியுடன் இருக்கும் லலிதாவை பிள்ளைகள் இருவரும் அத்தனையாய் தாங்குவார்கள்.


தாமரையின் விருப்பப்படி தான் திருமணம். ஆனால் திருமணம் என்று ஆரவாரமே இல்லாமல் மிகவும் எளிமையாக,

எப்படிப்பட்ட எளிமை என்றால் அற்புதாவின் இரண்டு உடன் பிறந்தவர்கள் இருந்தும் இல்லாமல் ஏதோ வேண்டா வெறுப்பாக கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.

ஏனென்றால் சிவசங்கரனுக்கும் சிறிது சங்கடமாக இருந்தது. மூத்த மகள் திருமணத்தில் இரண்டாம் மனைவி கருத்தரித்து நிற்பது அவருக்கு சற்று வெட்கமாக கூட இருந்தது.

இது ஏனோ லலிதாவிற்கு ஒரு வாய்ப்பாகத்தான் இருந்தது காலம் முழுவதும் இதை சொல்லியே அற்புதாவை ஒடுக்கி அவரின் கீழ் வைத்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்தது அவருக்கு.

கழுத்தில் தாலி ஏறிய கணத்தில் அற்புதா அழுத அழுகை அங்கிருந்து அனைவரையும் ஒரு நொடி அசைத்துப் பார்த்தது உண்மைதான்.

பெண்ணவளின் ஆன்மா முழுவதும் அம்மா அம்மா என்றே கதறியது. எத்தனை பேர் இருந்தும் அவளின் உணர்வுகளை உணரவில்லையே.


அவள் அம்மா, அம்மா என்று அழுத அழுகையை பார்த்து கமல் அன்று அவள் கையினை இருக்க பிடித்தவன் தான் இன்னும் விடவில்லை.

என்ன சமயத்தில் மனைவியின் கையை தன் தாய் லலிதாவிடம் கொடுத்து விடுவான். லலிதாவும் தன்னிடம் கிடைத்த பொம்மையை வைத்து அவர் இஷ்டத்திற்கு விளையாடுவார்.


திருமணம் முடிந்த கையோடு மதுரைக்கு பாய் கூறிவிட்டு சென்னைக்கு ஹாய் சொன்னவர்கள் தான் அற்புதா கமலக்கண்ணன்.

இன்னும் ஒரு முறை கூட மதுரை மண்ணை அவர்கள் மிதிக்கவில்லை.

அவளை அங்கு வாவென்று அழைக்கவும் யாரும் இன்றி போனார்கள் ரிஷி மட்டும் அவளுடன் தொலைபேசியில் தொடர்பில் இருப்பான்.

அவனுக்கும் அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை. ஏனென்றால் அவன் வயதும் அதற்கு ஏற்புடையதல்ல. அதோடு அவன் படிப்பு என்று படிப்பில் அவனது கவனம் திசை மாறியது .


திருமணத்திற்கு மும்முரம் காட்டிய தாமரையோ ஆண்டாளோ அவளின் அடுத்தடுத்த எந்த சுப நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை....