• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Nilaa - 02

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,393
433
113
Tirupur
நிலவு _ 2



வந்தனா

ம்ம் சொல்லு சேரா??

இன்று மாலை இல்லத்துக்கு போகிறேன்.வருகிறாயா??

கண்டிப்பாய் சேரா.உன்னளவுக்கு என்னால் சேவை செய்ய முடியாவிட்டாலும் ஏதோ என்னால் முடிந்தது அந்த சிறுவர்களுக்கு இலவசமாக சிலமணி நேரம் பாடம் சொல்லிகொடுக்கிறேனே.



ப்ச்..சேவை அது இதென்று சொல்லுமளவிற்கு நான் எதுவுமே செய்யவில்லை வந்தனா.சொல்லப்போனால் இதில் என் சுயநலம் தான் உள்ளது.அந்த பிஞ்சு முகங்களில் தோன்றும் ஆர்வமும் புன்னகையும் தான் இன்னும் என்னை சற்றாவது உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள உதவுவது. முக்கால்வாசி அந்த ஒரு காரணத்திற்காகவே நான் அங்கு போவது.



ஆனால்..சேரா



“ப்ச்” என்ற சலிப்புடன் சரி அப்புறம் பார்க்கலாம்.என்றபடி அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தாள் சேரநிலா.



இது தான் இவள்.எப்போதாவது ஒருசமயம் அவளை மீறி வார்த்தைகளை சிதறுவாள்.ஆனால் அது குறித்து ஏதாவது கேட்க முனைந்தால் அடுத்த கணமே தன் கூட்டிற்குள் பூட்டிக்கொள்வாள். சற்று கோபமாக தோளைக் குலுக்கியபடி மீண்டும் கையிலிருந்த புத்தகத்தினுள் முகத்தை புதைத்துக்கொண்டாள் வந்தனா.





“அன்னை இல்லம்”



எப்போதும் போல் அமைதியும் தூய்மையுமாக காட்சியளித்தது.அதன் உள்ளே காலடி எடுத்து வைக்கும் போதே மனதினுள்ளே ஓர் வித அமைதி குடியேறுவதை உணர்ந்தாள் சேரநிலா.அவள் இதழ்களில் அவளையுமறியாமல் சிறு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.அந்த புன்னகை அவளை நோக்கி அக்காவென்று ஓடி வந்த கடவுளின் குழந்தைகளைக் காணவும் முறுவலாகவே மலர்ந்தது.



ஹே குட்டீஸ் எப்படி இருக்கீங்க எல்லோரும்?? நன்றாக படிக்கிறீர்களா??

ம்ம் படிக்கிறோம் கா.

அக்கா போன வாரம் எழுதிய பரீட்சையில் என் வகுப்பிலேயே நான் தான் முதல் மார்க் கா.

ஹே...நிஜமாவா??? ரொம்ப சந்தோசம் டா குட்டி.உனக்கு அடுத்த தடவை வரும் போது ஒரு பரிசு வாங்கிகொண்டு வருகிறேன் சரியா?? இதே போல தொடர்ந்து படித்து நீ பெரியாளாய் வரணும்.என்ன புரியுதா???

ம்ம் சரிக்கா.

சமத்து.

ஏய் மீனுக்குட்டி நீ ஏன் சோகமா இருக்கடா??

அக்கா எனக்கு கணித பாடம் மட்டும் வரவே மாட்டேங்குதுக்கா.என் வகுப்பிலேயே நான் தான் கணக்கில் மக்காக இருக்கிறேன்.

ஒ அது தான் உன் கவலையா செல்லம்??? நீ ஒரு பாடம் சரியாக செய்யாததால் மட்டுமே மக்காகி விட மாட்டாய் குட்டி.இப்போ என்ன கணித பாடத்தில் நீ நன்றாக வர வேண்டும் அவ்வளவு தானே?? அது ரொம்ப சுலபம் டா.அக்கா உனக்கு இனி தினமும் ஒரு மணிநேரம் கணக்கு போட சொல்லிக் கொடுக்கிறேன்.அப்புறம் நீ தான் உங்கள் வகுப்பில் முதல் மாணவியாய் வருவாய் சரி தானா???

முகம் மலர்ந்து தலையாட்டிய அந்த சிறு மலரை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் சேரநிலா.



அவளின் பேச்சு செயற்பாடு என ஒவ்வொன்றையும் எப்போதும் போலவே அப்போதும் வியப்புடன் நோக்கியவாறு இருந்தாள் வந்தனா.



தன் மாணவர்களிடமும் இந்த சிறுவர்களிடமும் இவள் காட்டும் முகம் என்ன.வெளியே இவள் காட்டும் முகம் என்ன?? இதில் எது தான் உண்மையிலேயே இவள் சொந்த முகம்?? இங்கு சிறுவர்களிடம் கலகலத்துப் பேசி கனிவு காட்டும் இவள் நிஜமா?? இல்லை யாரையும் தன்னருகில் நெருங்க விடாமல் தன்னுடைய சுடுவார்த்தைகளாலும் இறுகிய முகத்தாலும் விலக்கி வைத்து தன கூட்டுக்குள்ளேயே முடங்கிக் கொள்ளும் கோபக்கார சிடுமூஞ்சி சேரா நிஜமா??



எப்போதும் போல அவள் காட்டும் இரு வேறு முகங்களில் குழம்பி அவளையே பார்த்தபடி நின்றிருந்தாள் வந்தனா.



ஏய் வந்தனா இப்படி என் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கவா இங்கே வந்தாய்?? இவர்களுக்கு வகுப்பெடுக்கும் உத்தேசம் இல்லையா?? என்றாள் சேரா அத்தி பூத்தாற் போன்ற புன்னகையுடன்.



அதை வியப்புடன் ரசித்தவள் நீ இப்படி சிரித்து இயல்பாக பேசும் போது மிகவும் அழகாய் இருக்கிறாய் சேரா.இப்படியே எப்போதும் இருப்பதற்கென்ன???? தன்னை மீறி வந்தனா கேட்டுவிட ஒரு கணம் சேராவின் முகத்தில் ஆழ்ந்த வலியின் சாயல் தோன்றி மறைந்தது.



விழிகளை இறுக மூடித்திறந்தவள் மீண்டும் இமைகளை திறக்கும் போது அவள் முகம் இறுகியிருந்தது. உணர்வு தொலைத்த குரலில் நீ இவர்களைப் பார்த்துக்கொள் நான் துர்க்காம்மாவை பார்த்துவிட்டு வருகிறேன் என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள் சேரநிலா.



அந்த அன்னை இல்லத்தின் நிர்வாகியான துர்க்காவின் அறைக்கதவு அவர் மனதைப் போலவே விசாலமாக திறந்தே கிடந்தது.கதவு திறந்திருந்தாலும் மரியாதை நிமித்தம் ஒற்றை விரலால் கதவைத் தட்டி வரலாமாம்மா??? என்று வினவினாள் சேரநிலா.



ஏதோ எழுதிக்கொண்டிருந்தவர் புன்னகையுடன் நிமிர்ந்து

வாம்மா என்று அன்புடன் வரவேற்றார்.

“ஸ்ரீ துர்க்கா “

அவர் பெயரைப்போலவே அவரும் மிகுந்த கம்பீரத்துடன் இருந்தார்.அவர் முகத்தில் அன்பும் கருணையும் தவழ்ந்தது.அவர் முகத்தில் வழிந்த கருணை அவரின் கம்பீரத்தை சற்றும் குறைக்காது இன்னும் அதை அதிகப்படுத்தியே காட்டியது.அவர் விழிகளில் ஒரு தீட்சண்யம்.எப்போதும் போல அப்போதும் அவரை மனதினுள் ரசித்தாள் சேரநிலா.



என்னம்மா ஏதோ புதிதாகப் பார்ப்பதைப் போல் பார்க்கிறாய்??



உங்களை எத்தனை முறை பார்த்தாலும் உங்கள் மேல் உள்ள மதிப்பும் பிரமிப்பும் கூடிக்கொண்டே தான் செல்கிறதும்மா.

நீ பிரமித்து என்னைப் பார்க்கும் அளவிற்கு நான் பெரிதாய் எதையும் சாதித்துவிடவில்லை மா.



இப்படிக் கூறிய ஸ்ரீ துர்க்கா தான் அந்த அன்னை இல்லத்தின் நிறுவுனர்.இன்று அவர் தயவில் இருநூறு குழந்தைகளுக்கும் மேல் இருக்கிறார்கள். ஐம்பது ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்.தன்னுடைய சொத்துக்களை விற்று முற்று முழுதான சேவை மனப்பான்மையில் மட்டுமே அவர் ஆரம்பித்த இந்த அன்னை இல்லம் இன்று சில பல நல்ல உள்ளங்களின் ஆதரவால் சிறப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது.



இன்று இத்தனை குழந்தைகளுக்கு அன்னையாக விளங்கும் துர்க்கா ஒரு காலத்தில் குழந்தை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக கணவனால் சற்றும் மனிதாபிமானமோ ஈவு இரக்கமோ இன்றி தூக்கி எறியப்பட்டவர்.அந்த வேதனையில் முடங்கிப் போகாமல் அந்த கசப்பில் இருந்து வெளியேறி இதோ இன்று நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அன்னையாக மாறி தன்னுடைய வாழ்வினைப் பூரணப்படுத்திக்கொண்டிருக்கிறார்.



எப்படிம்மா இருக்கிறீர்கள்??



எப்பவும் போல என்னுடைய குழந்தைகளோடு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ம்ம் அப்புறம் உன்னைத் தான் தேடிட்டு இருந்தேன் மா.



ஒ.... ஏதாவது முக்கியமான விடயமா அம்மா??



ம்ம் ஆமாம்.நம் இல்லத்தின் ஆண்டுவிழா வருகிறதில்லையா? அதன் ஏற்பாடுகள் குறித்து உன்னுடன் பேச வேண்டும் என்று நினைத்தேன். வழக்கம் போல முடிந்தவரை விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்.நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்களை நீயே பார்த்துக்கொள்வாயில்லையா??



கண்டிப்பாய் மா.ஆனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது.அதை உங்களிடம் கேட்கலாமா??



அவளை சிறு புன்னகையுடன் நோக்கியவர்.மனதில் பட்டதை என்னிடம் கேட்பதற்கு என்னம்மா தயக்கம்??? கேள் என்றார்.



அது ஒன்றும் இல்லைமா.இந்த இல்லம் ஓரளவிற்கு நல்ல நிலையிலேயே இயங்கிக் கொண்டு இருந்தாலும் இன்னும் தேவைகளும் இல்லாமல் இல்லையே?? அப்படி இருக்கும் போது எதற்குமா இந்த விழா எல்லாம்?? அதற்கு பயன்படுத்தும் பணத்தை நம் குழந்தைகளின் நியாயமான தேவைகளை தீர்க்க பயன்படுத்தலாமே.இந்த விழா எல்லாம் அவசியமா?



அவள் பேச்சைக் கேட்டு நன்றாக முறுவலித்தவர் அதாவது இந்த விழா அனாவசிய ஆடம்பரம் என்று நினைக்கிறாய் சரிதானே?? என்று கேட்டார் அவள் எதுவும் கூறாமல் அமைதி காக்கவும் தானே தொடர்ந்து.



ம்ம் மேலோட்டமாக பார்க்கும் போது இது அனாவசியமான ஒன்றாகத்தான் தோன்றும். ஆனால் இதில் அவசியமான நிறைய விடயங்கள் அடங்கி இருக்கிறது.அதில் முதலாவது



சமூகத்தில் உள்ள பெரியமனிதர்கள் பலர் கருணை உள்ளத்தோடு நமக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்கின்றனர்.அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டாமா?? இப்படி ஒரு விழாவை ஏற்பாடு செய்து அவர்களையும் அதற்கு அழைத்து கௌரவிக்கும் போது அவர்களுக்கு ஒரு நிறைவு கிடைக்குமே.அத்தோடு இங்கு வந்து நம் இல்லத்தினையும் இங்குள்ள குழந்தைகளின் முகத்தையும் பார்க்கும் போதே அவர்கள் மனம் மேலும் கசிந்துவிடாதா?? இன்னும் இந்த குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் அவர்களுக்கு பிறக்குமே.



அத்தோடு எங்கள் குழந்தைகளின் திறமைகளையும் நாம் வெளி உலகுக்கு அறியச் செய்யலாம்.இப்படி ஒரு ஏற்பாடு இல்லாவிடில் அவர்கள் திறமைகள் இந்த இல்லத்துக்குள்ளேயே முடங்கி விடாதா??



இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பாவம்மா இந்த குழந்தைகள்.இவர்கள் வாழ்வில் விழாக்கள் அதற்குரிய மகிழ்ச்சிகள் என்று அனைத்துமே மறுக்கப்பட்டவர்கள்.அவர்களுக்கு நாம் இந்த ஒருநாள் மகிழ்ச்சியையாவது கொடுக்கலாமே?? இதற்காகத் தான் இந்த ஏற்பாடே.இது அனாவசியம் இல்லம்மா அவசியமானது தான். என்று புன்னகையுடனேயே முடித்தார்.



சேராவிற்கும் அவர் பேச்சில் உள்ள நியாயம் புரிந்தது.சிறு புன்னகையுடன் இப்போது புரிகிறதும்மா. என்றவள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை நான் பார்த்துக்கொள்கிறேன். இங்குள்ளவர்கள் எனக்கு உதவி செய்வார்கள் இல்லையா?? என்றாள்.



கண்டிப்பாய்.நான் சாந்தியிடமும் பிற ஊழியர்களிடமும் சொல்லி வைக்கிறேன்.இந்த மாத இறுதியில் விழா. அவகாசம் போதும் இல்லையா???



ம்ம் போதும்மா.இனி தினம் பாடசாலையில் இருந்து வந்தவுடனேயே நானும் வந்தனாவும் இங்கே வந்துவிடுகிறோம்.



நல்லதும்மா.இனி தான் அழைப்பிதழ் அச்சடிக்க வேண்டும்.யார் யாரை அழைப்பது என்று குறிப்பெடுக்க வேண்டும்.தலைக்கு மேல் வேலை உண்டு. இப்போதே வேலைகளை ஆரம்பித்தால் தான் முடிக்க முடியும்.



சரிம்மா. நான் குழந்தைகளுடன் சற்று நேரம் இருந்துவிட்டு கிளம்புகிறேன்.நாளை சீக்கிரம் வருகிறேன்.என்றபடி எழுந்து சென்றவளை கனிவுடன் பார்த்திருந்தார் துர்க்காம்மா.



மிகவும் நல்ல பெண். இவளுக்கு அப்படி வாழ்வில் என்ன துன்பம் இருக்க முடியும்?? தன்னிடமும் இங்குள்ள குழந்தைகளிடமும் மட்டும் தான் அவள் இப்படி இயல்பாக பேசி பார்த்திருக்கிறார்.மற்ற யாராயிருந்தாலும் அளந்து தான் அவள் வாயில் இருந்து பேச்சு வரும்.அதுவும் பெண்களிடம் மட்டும் தான்.அதுவே ஆண்களாய் இருந்தால் சுத்தம்.அவர்களை ஒரு மனித ஜென்மமாகவே மதிக்க மாட்டாள். ஆண்கள் யாரும் அவள் எதிரில் வந்தாலே அவள் முகம் இறுகி விடும்.அதைப் பார்த்தே யாரும் அவளிடம் பேச முனைய மாட்டார்கள்.அதையும் மீறி அவளிடம் பேச முயன்றால் அவளின் அலட்சியம் தான் பதிலாக கிடைக்கும்.அப்படி அவளிடம் மூக்குடைபட்டவர்கள் ஏராளம்.



அப்படி அவளுக்கு ஆண்கள் மேல் என்ன தான் வெறுப்பு??