• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Nilaa - 06

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,393
433
113
Tirupur
நிலவு _ 6

காதுக்குள் அலறிய செல்போன் குழந்தையின் சிரிப்பில் லேசாய் விழிப்பு வர கண்ணை மூடியபடியே கைகளால் துழாவி போனை எடுத்து காதினுள் வைத்தாள் சேரநிலா.

“ நிலாம்மா “

மறுமுனையில் கேட்ட தாயின் குரலில் தூக்கம் முற்றாக பறந்தோடி விட முந்தைய தினத்தின் தாமதமான தூக்கத்தால் எரிந்த கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு விழிகளை முற்றாக திறந்து “ அம்மா “ என்றாள் நிலா தழுதழுத்த குரலில்.

முந்தைய இரவு எண்ணத்தில் ஓடிய பழைய நினைவுகளின் தாக்கத்தால் ஏற்கனவே பலவீனப்பட்டிருந்த அவளது மனது எப்போதாவது அரிதாக கேட்கும் தாயின் நிலாம்மா என்ற இந்த பாசமான அழைப்பில் மேலும் நெகிழ “அம்மா” என அவள் அழைக்கும் போதே அவள் குரல் உடைந்தது.

பெண்ணின் தழுதழுத்த குரலில் சகுந்தலாவின் தாய் மனம் கலங்க ஏய் நிலாம்மா என்னடா ஆச்சு??? என்றார் தவிப்புடன்.
சற்று நேரம் எதுவும் பேசாமல் உதட்டைக் கடித்தபடி மௌனம் காத்தவள் சற்று பொறுத்து குரலை இயல்பாக்கியபடி இப்படியெல்லாம் பாசமா பேசாதீங்கம்மா ரொம்ப கஷ்டமா இருக்கு.உடனே உங்களைப் பார்க்கணும் போல இருக்கு.என்றாள் ஏக்கமான குரலில்.

பெண்ணின் குரலே அவள் மனநிலையை எடுத்துச் சொல்ல சகுந்தலாவிற்கு நிஜமாகவே கோபம் வந்தது.

உன்னை யாருடி இப்படி தனியே போய் இருந்து வாடச் சொன்னா?? ஏன் இங்கே சென்னையில் உனக்கு வேலையே கிடைக்காதா?? இங்கே நம் வீட்டில் இளவரசி போல் இருப்பதை விட்டுவிட்டு என் இலட்சியம் இது தான்.எனக்கான ஓர் அனுபவம் தேவை.என் தேவைகளை தனியே நானே சமாளித்து என் காலில் நின்று பழக வேண்டும். அது இது என்று என்னென்னவோ காரணம் சொல்லி இப்படி தனியே கிடந்து வாடுவது யார் நீதானே? இதில் உன் அண்ணன் வேறு உனக்கு சப்போர்ட். என்று ஆதங்கம் கலந்த கோபத்துடன் முடித்தார்.

அதுவரை அமைதியாக தாயின் பேச்சைக் கேட்டபடியிருந்தவளின் இதழ்களில் இருந்த விரக்திப் புன்னகை அவரின் பேச்சின் முடிவில் அலட்சியப் புன்னகையாக மாறியிருந்தது. அதுவரை இருந்த நெகிழ்ச்சி கரைந்தது.அவளின் இந்த முடிவுக்கு காரணமே அவன் தானே!! அப்புறம் சப்போர்ட் பண்ணாமல் என்ன பண்ணுவான் ஹ!! அவளின் எண்ணப் போக்கில் தாயின் குரல் குறுக்கிட்டது

ஹ்ம்ம் இதுவரைக்கும் நீ உன் காலில் நின்றதும் போதும் உன் இலட்சியத்தை நிறைவேற்றியதும் போதும்.சீக்கிரம் இந்த வேலையை ரிசைன் பண்ணிவிட்டு கிளம்பி வா. இனியும் உன் திருமணத்தை தள்ளிப் போட முடியாது. இப்போதே எத்தனையோ வரன்களை தட்டிக் கழித்தாகிவிட்டது. உன் அண்ணன் வேறு ..............

அம்மா என்ற நிலாவின் அதட்டலில் சகுந்தலாவின் பேச்சு தடைப்பட நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன் தயவுசெய்து இந்த திருமணம் என்ற பேச்சை என்னிடம் எடுக்காதீர்கள் என்று.என்றாள் கடுமையான குரலில்.

அவள் அன்னையோ அவளுக்குச் சற்றும் குறையாத கோபத்துடன்
ஏய் நானும் உன்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன் இப்படி முட்டாள்த் தனமாய் உளறாதே என்று.திருமணம் என்ற பேச்சை எடுக்காமல் என்ன பண்ணுவது?? நீ என்ன திருமணமே பண்ணிக்கொள்ளாமல் இருக்க போகிறாயா?? அல்லது யாரையாவது காதலிக்கிறாயா?? அப்படி ஏதாவது என்றால் கூட சொல்லு நான் உன் அண்ணனிடம் பேசுகிறேன்.என்றார் சகுந்தலா வேண்டுமென்றே அவளை சீண்டும் குரலில்.

ஹ்ம்ம் அப்படியான முட்டாள்த்தனத்தை நான் என் வாழ்நாளில் செய்யவே மாட்டேன்.நீங்கள் வீணாக மண்கோட்டை எதையும் கட்டாதீர்கள்.என்று அலட்சியமாக பதில் கொடுத்தாள் அவரின் மகள்.

ஹ்ம்ம் அதுதானே உன் புத்தி எங்கே அப்படியான நல்ல வழியில் போக போகிறது.தொண்டு , சேவை , மது ஒழிப்புக்கான பிரச்சாரம் ரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் என்று இப்படி உருப்படாத வழியில் தானே போகும்.

அம்மா கொஞ்சமாவது ஒரு கல்லூரி lecture போல பேசுங்கள். ஹ்ம்ம் இதெல்லாம் உருப்படாத வழிகள்.காதலிப்பது ஒன்று தான் உலகத்தை உய்ய வைக்கும் உருப்படியான செயலா?? உலகத்திலேயே தன் பெண் காதலிக்கவில்லை என்று கவலைப்படும் ஒரே அம்மா நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்றாள் சேரநிலா கேலியும் கோபமும் கலந்த குரலில்.

நான் முதலில் என் பெண்ணுக்கு அம்மாடி.அதன் பிறகு தான் மற்றது எல்லாம்.எந்த ஒரு அம்மாவும் தன் பெண் ஒரு துறவியைப் போல வாழ்வதை விரும்பமாட்டாள். நீ செய்வது எல்லாமே நல்ல விடயங்கள் தான்.நான் இல்லை என்று கூறவில்லை.ஆனால் நீ ஒரு திருமணத்தை பண்ணி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இதை எல்லாம் செய்தாயானால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அதை விட்டு வாழ வேண்டிய வயதில் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் எதிர்பார்ப்புகள், கனவுகள் என்று எதுவுமில்லாமல் ஏதோ முற்றும் துறந்த துறவியைப் போல நீ இப்படி இருப்பதைப் பார்க்க என் மனம் எவ்வளவு வேதனைப்படுகிறது தெரியுமா நிலாம்மா ??

எப்போதும் கம்பீரமாக ஒரு தெளிவுடன் பேசும் தாயின் குரலில் தெரிந்த வேதனையின் சாரல் சேராவின் இதயத்தையும் நனைத்தது. ஆனால்??????

ம்மா….. என் மனநிலையைப் பற்றி தெரிந்தும் ஏன்மா நீங்கள் இப்படி அதையே பேசுகிறீர்கள்??? என்றாள் இயலாத குரலில்

என்னடி பெரிய மனநிலை உன் தோழியுடைய கணவன் அவளைக் காதலித்து மணந்து இரண்டு குழந்தைகளுடன் அவளுக்கு துரோகம் செய்தான் அது தானே??? ஏன் உலகத்து ஆண்களுக்கெல்லாம் அவன் தான் முன்னோடியா?? யாரோ ஒரு பொறுக்கியை உதாரணமாக எடுத்துக்கொண்டு எந்த ஆணையுமே நம்ப மாட்டேன் என்கிறாயே.இது எந்த விதத்தில் நியாயம் நிலா??

ஏன் உன் அண்ணனை உன் கண்ணுக்கு தெரியவில்லையா?? உன் பிடிவாதத்தில் தன் வாழ்க்கையையும் பணயம் வைத்துவிட்டு உனக்கு திருமணம் முடியாமல் தானும் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்று இருக்கிறானே.அவன் இது வரை எந்த பெண்ணையாவது தலை நிமிர்ந்து பார்த்து நீ பார்த்திருக்கிறாயா?? அவனிடம் ஏதாவது ஒரு குறையை உன்னால் கூற இயலுமா?? அப்படி ஒரு கூடப்பிறந்தவனை பார்த்தும் இப்படி ஆண்களையே நம்ப முடியாது என்று வீம்பு பிடிக்கிறாயே !!!!! உன்னை என்னதான் செய்வது நிலா.

தாயின் பேச்சைக் கேட்டு நெஞ்சில் அனல் பரவ ஆத்திரத்தில் விழி சிவக்க கோபத்துடன் ஏதோ சொல்ல வந்தவள் நிமிடத்தில் சுதாரித்து உதட்டைக் கடித்து முயன்று சிரமப்பட்டு தன்னை அடக்கினாள்.

அவளிடம் இருந்து பதில் இல்லாமல் போகவே என்னடி சத்தத்தையே காணோம்?? பதிலுக்கு என்ன பேசுவதென்று சிந்திக்கிறாயா??? என்னை எதிர்த்து வாயாடுவதில் காட்டும் ஆர்வத்தைக் கொஞ்சம் உன் வாழ்விலும் காட்டினால் பரவாயில்லை என்றார் சகுந்தலா ஆதங்கத்துடன்.
அதற்கு மேலும் பேச்சை வளரவிட்டால் தன்னை மீறி கோபத்தில் எதையாவது சொல்லிவிடுவோம் என்று உணர்ந்த நிலா

ஏன்மா எனக்கு அழைத்தாலே இறுதியில் சண்டையுடன் தான் பேச்சை முடிக்க வேண்டும் என்று ஏதாவது கோவிலுக்கு நேர்ந்து வைத்திருக்கிறீர்களா??? என்றாள் சலிப்புடன்.

ஆமாம்மா நீ இதுவும் கேட்பாய் இன்னமும் கேட்பாய்.என் மனம் படும்பாடு உனக்கெங்கே தெரியப்போகிறது. உனக்கு மட்டும் ஏண்டி இந்த ராங்கியும் பிடிவாதமும்.உலகத்தில் ஒருவன் கெட்டவன் என்றால் ஒட்டு மொத்தப் பேருமே கெட்டவர்களாய்த்தான் இருக்க வேண்டுமா??? தாய் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கவும்

“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” மா கேள்விப்பட்டதில்லை.என்று அழுத்தமாக கூறியவள் சரி எனக்கு நேரமாகிறது வைக்கிறேன் என்று தாயின் பதிலைக் கூட எதிர்பாராமல் அலைபேசியை அணைத்தாள்.எங்கே மீண்டும் எதையாவது ஆரம்பித்துவிடுவாரோ என்ற பயத்துடன்.

அலைபேசியை அணைத்து தூக்கி அருகிலிருந்த மேசையில் போட்டவள் மனதில் அவள் தோழி ஜானுவின் கபடற்ற பூமுகம் வந்து போனது.அவளின் அந்த பூமுகத்தை பார்த்தபடி எப்படி அந்த கயவனால் அவளுக்கு அப்படி ஒரு துரோகத்தை செய்ய முடிந்தது. உண்மை தெரிந்த அன்று அவள் கதறித் துடித்த துடிப்பு.தோழியின் துன்பத்தைக் கண்டு மனசு கலங்க வழக்கம் போல தன் சோகத்தை அண்ணனின் தோளில் இறக்கி வைக்க எண்ணி அவள் அண்ணனை தேடிச் சென்ற போது அவள் அண்ணன் மூலம் அவளுக்கு கிடைத்த அடுத்த அடி மிகப் பெரிய அடி. அடுத்து அடுத்து அவளுக்கு கிடைத்த அடிகள்....... அவள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிய நாள் அல்லவா அது!!!!!!!!!!!!!!!

பட்டாம்பூச்சியாய் பறந்த அவளை மீண்டும் கூட்டுப்புழுவாய் சுருங்க வைத்த நாள்.அவள் இதயம் அன்றைய தினத்தின் நினைவில் வலியால் வதங்கிச் சுருண்டது.

கசப்பான அந்த நாளின் நினைவுகளையும் வலிகளையும் துரத்துபவள் போல விழிகளை இறுக மூடி முகம் இறுக சற்று நேரம் அமர்ந்திருந்தாள் நிலா. பின் ஓர் ஆழ்ந்த பெருமூச்சுடன் எழுந்து குளியலறை நோக்கி சென்றாள்.

வழக்கம் போல மனதை சமன்படுத்தி அன்றைய நாளுக்காக ஆயத்தமாகி தன்னுடைய அறைக்கதவை திறக்கும் போதுதான் நேற்றைய வந்தனாவின் கோபம் நினைவு வர பேசுவாளா மாட்டாளா என்ற தவிப்புடன் கதவைத் திறந்தால் எதிரே புன்னகையுடன் இனிய காலை வணக்கம் சேரா இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்று வாழ்த்தியபடியே முகம் முழுதும் சிரிப்புடன் அவள் முன்னே நின்றிருந்தாள் வந்தனா.

இது தான் இவள். அவளையும் மீறி சேராவின் இதழ்களில் வாஞ்சையுடன் கூடிய ஓர் முறுவல் மலர்ந்தது.
அதன் பின் இருவரும் வழக்கம் போல ஒன்றாக காலை உணவினை முடித்துவிட்டு கிளம்பினார்கள்.

அடுத்து வந்த ஒரு வாரமும் இதே போலவே கழிந்தது. அன்றைய விழா நாளிற்கு பின் சேராவிற்கு இல்லத்திற்கு செல்ல நேரம் கிடைக்கவில்லை.விழாவிற்காக சற்று அதிகநேரத்தை அங்கேயே செலவழிக்க வேண்டி இருந்ததால் அவள் எடுக்கும் தனிப்பட்ட வகுப்புக்களை சற்று நிறுத்தி இருந்தாள்.இப்போது அதற்கும் சேர்த்து இரண்டு மடங்காய் உழைக்க வேண்டி இருந்தது.

சேரா ஒரு போதும் சோம்பி இருப்பதில்லை.அப்படி சோம்பி இருந்தால் தானே சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களமாய் மாறி வேண்டாததை சிந்திக்கும்.எனவே அதை தவிர்ப்பதற்காகவே பாடசாலையில் கற்பிக்கும் நேரம் போக கிடைக்கும் நேரத்தில் தனிப்பட வெளியே சில மாணவர்களுக்கு வீட்டுக்கே சென்று பாடம் சொல்லி கொடுத்தாள்.இப்படி வரும் பணத்தை முழுவதுமே அன்னை இல்லத்து பிள்ளைகளுக்காக செலவு செய்தாள்.தனது சம்பளத்திலும் தன்னுடைய தேவைகளையும் சுருக்கி கொண்டு பணத்தை மிச்சம் பிடித்து அதை இல்லத்துக்காகவே வழங்கினாள்.அதில் அவள் வறண்டு போன மனதுக்கு ஏதோ ஒரு இதம் கிடைப்பதாய்ப்பட்டது.

இப்படி அந்த வாரம் முழுவதுமே விடுதி , பாடசாலை ,தனிப்பட்ட வகுப்புக்கள் என்று ஓடிவிட அந்த வார இறுதியில் வந்தனாவுடன் வெளியே சென்ற போது மீண்டும் இனியனை சந்திக்க நேர்ந்தது.