Home Anti Heroineஅகானா – 68

அகானா – 68

by Vathani S

அகானா – 68

உணர்வுகளற்று மயக்கத்தில் கிடந்தவனின் கையை எடுத்து தன் மார்போடு அனைத்து அவனையே வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அகானா.

அவளது இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டதோ என்று கூட பயமாக இருந்தது.

அவளின் அந்த இதயம் சுக்குநூறாக நொறுங்கி போயிருந்தது.

பிடித்திருந்த அவன் கரத்தோடு தன் கரத்தை சேர்த்து தன் இதயத்தை அழுத்தி, அழுத்தி தடவிக் கொண்டாள்.

அவனுக்கும் அவள் நிலை புரிய வேண்டும் என்று செய்தாளா?

மனம் வலிகளால் நிறைந்து கிடந்தது. இந்த வேதனையை யாரிடமாவது கொட்டி விட்டால் கொஞ்சம் பரவாயில்லாமலாவது இருக்கும்.

ஆனால் அதை அவள் யாரிடம் கொட்ட முடியும்.?

அவளுக்கு வேண்டிய இருவருமே சுயநினைவின்றி கிடக்கும் போது, அவள் வேதனையை யாரிடம் கொட்ட முடியும்.?

மனம் விஜியை மிகவும் தேடியது.

‘விஜி ம்மா வந்தா நல்லாருக்கும்.. அவங்களுக்கு தெரியுமா? ஆரி சொல்லிருப்பானா? விஜிமா என்ன நினைப்பாங்க? ஆரி வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துட்டேன்னு நினைப்பாங்களோ? அவங்களுக்கு மகி பேமிலிய சுத்தமா பிடிக்காது.. இப்போ இதெல்லாம் தெரிஞ்சா? நினைக்கவே பயமாக இருந்தது அகானாவிற்கு. மீண்டும் ஒரு பயம் அவள் மனதை சூழ்ந்தது.

அடுத்து என்ன என்று கூட யோசிக்க முடியாத நிலையில் கண்கள் கலங்க அமர்ந்திருந்தாள்.

“அம்மு..” என்றபடி அந்த அறைக்குள் வந்தார் வினோத். அவரைப் பார்த்ததும் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே எழுந்து நிற்க,

“மாப்பிள்ளை உன்னை கூப்பிடுறார். அண்ணியோட ஜிவல்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்கார்..” என்றார் கலங்கிப் போய்.

“ஹ்ம்ம்.. மகி எப்படி இருக்கா? எம்ஆர்ஐ ரிபோர்ட்ஸ் வந்துடுச்சா.? ஆகன் அம்மா சொன்னது சரிதான். நான் இங்க வராம, உங்க யாரையும் பார்க்காமலே இருந்திருக்கலாம். பழி வாங்குறேன்னு கிளம்பி, இப்போ மகி வாழ்க்கையையும் சேர்த்து பாழாக்கிட்டேன்..” என்றவள் குரலும் கலங்கிப் போயிருந்தது.

“அம்மு அதை பத்தி நான் பேச வரல… நீ பேசுறது மாப்பிள்ளைக்கு தெரிஞ்சா ரொம்பவே வருத்தப்படுவார். முதல்ல நீ இப்படி யோசிக்கிறதை விடு..” என்றார் கண்டனமாக..

உண்மைதான் அவள் இப்படி யோசித்தாள் என்று தெரிந்தாலே ஆரியன் மிகவும் உடைந்து போவான். மேலும் தன்னிடம் பேசாமல் கோபத்தையும் காட்டுவான். அந்த அக்கறையும் பாசமுமே அவளை மேலும் மேலும் கலங்க வைத்தது.

அது வினோத்திற்கும் புரிந்திருக்க வேண்டும். அதனால் “நான் பேச வந்தது..” என இழுத்து அகானாவின் முகம் பார்க்க, அகானாவும் நிமிர்ந்து அவரை பார்த்தாள்.

“அது.. அது அம்மு.. அண்ணாவுக்கு சொல்லனும், அவருக்கு ஜாமின் எடுக்கனும்..” என்றவர், “அவர் வந்தாதான் அண்ணிக்கு சர்ஜரி பண்ண முடியும்.” என்று மெல்ல கூற,

சட்டென தன் பார்வையை கட்டிலில் கிடந்த ஆகனிடம் மாற்றிக் கொண்டாள்.

தங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததற்கு அவர் மட்டும் தானே காரணம். 

உள்ளுக்குள் கோபமும், ஆத்திரமும் பெருகி, அந்த இடத்தையே அடித்து நொறுக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது பெண்ணுக்குள்.

அதையெல்லாம் நொடியில் தன் முகத்தில் காட்டாமல், “ஆனால் ஏன்..? வேற டாக்டர் அரேஞ்ச் பண்றேணு ஆரி சொன்னானே..?” என்றாள் பெண்ணும்.

“இல்ல.. இப்போ யாரும் அவைலபிளா இல்ல.. நாளைக்கு வரை வெய்ட் பண்ணலாம். பட் ரொம்ப நாள் தள்ளி போட முடியாது, அதனால அண்ணாவையே பண்ண சொல்லலாம்னு மாப்பிள்ளை சொல்றார்..” என வினோத் கூற,

“சீனியர்… ம்ச்” என்றவள் “ஆகனோட ஃப்ரண்ட் விமல்கிட்ட கேட்டுட்டு பண்ணுங்க. நானும் கண்ணன் அங்கிள்கிட்ட பேசிடுறேன்..” என்றாள் மரத்த குரலில்.

“அம்மு..” என்றார் வினோத் கலக்கமாக. அவருக்கு அகானாவின் மனப் போராட்டத்தை பார்க்க சகிக்கவில்லை.

அன்று அவர்களுக்கு சரியெனப்பட்டது.. ம்ச் இல்லை.. இல்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்வது சரி என்ற எந்த எல்லைக்குள்ளும் வராது.

யார் என்ன சொல்லியிருந்தாலும், அவர் அதை தடுத்திருக்க வேண்டும். நித்யாவிடம் முதலிலேயே பேசியிருக்க இந்த பிரச்சினை சரியாகியிருக்குமோ? என்று தவித்து தான் போனார்.

ஆனால் அன்று நித்யாவோ, வினோத்தோ யார் என்ன பேசியிருந்தாலும், ரவியின் மனம் மாறாமல் எதுவும் மாறியிருக்காது.

அவரே அந்த வாழ்க்கை வேண்டாம் என்று வந்தவர், அவர் சரியாக இருந்திருக்க, இன்று அகானாவிற்கு இந்த வேதனை வந்தே இருக்காதே.

இன்னும் அவர் அங்கேயே நிற்பதைப் பார்த்து ‘என்ன?’ என்பது போல் பார்க்க,

“அது.. அது அம்மு..” என இழுத்தவர் சற்றும் யோசிக்காமல் அவள் கையைப் பிடித்து தன் முகத்தோடு புதைத்துக் கொண்டார்.

“தப்பு செய்யும் போது அதோட வீரியம் தெரியாதுனு சொல்வாங்க. உண்மையும் அதுதான். அன்னைக்கு நான் செஞ்ச தப்போட வீரியம் எனக்கு தெரியல. அதனாலத்தான் ரொம்ப சாதாரணமா செஞ்சிட்டு போயிட்டேன். இப்போ.. இப்போ என்னால அந்த தப்பை நினைச்சு நிம்மதியா இருக்க முடியல. என்னை மன்னிச்சிடு அம்மு.. நான் எவ்வளவோ உங்கிட்ட மன்னிப்பு கேட்டாலும், நீயும் அண்ணியும் பட்ட கஷ்டம் இல்லைன்னு ஆகிடாது. உங்களை இந்தளவுக்கு கஷ்டப்பட விட்ட என்னை மன்னிச்சிடு அம்மு. ப்ளீஸ்..  இப்படி உன்னையே நீ வருத்திக்காத.. இன்னும் எங்களை பழிவாங்கனுமோ வாங்கு. அதுக்கு உனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு. ஆனா நீ இவ்ளோ வேதனைப்படாத அம்மு..” என்றவரின் குரல் உடைந்திருந்தது.

அகானாவின் விழிகளில் நிற்காமல் நீர் வழிந்துகொண்டே இருந்தது. அவளின் உள்ளக் கதறல்கள் எதுவும் வெளியில் கேட்கவில்லை. ஆனால் அதன் வெளிப்பாடாக சூடான கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. வெறித்த பார்வையோடு நின்றிருந்தவள் அவரிடமிருந்து தன் கையை உருவிக் கொள்ளவும் இல்லை.

சில நொடிகளுக்குப் பிறகு நிதானத்திற்கு வந்தவர், அவளை ஏக்கமாக பார்த்துவிட்டு, தன் முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தார்.

அப்போது கண்ணனிடமிருந்து அகானாவிற்கு அழைப்பு வர, யோசித்தபடியே எடுத்து காதுக்கு கொடுத்தாள்.

“பாப்பா.. விமல் சார் வந்துருக்கார். உடனே உங்களை பார்க்கனும் சொல்றார்..” என்றார் மெல்லிய குரலில்.

“ஹ்ம்ம் ஓக்கே அங்கிள்.. ஆகனோட கேபின்ல வெய்ட் பண்ண சொல்லுங்க. நான் இப்போ வந்துடுறேன்..” என்றவள், பின் “டாக்டர் ரவியை ஜாமின் எடுக்க வேண்டி வரலாம். ப்ராசஸ் ஸ்டார்ட் பண்ணுங்க. நான் விமல்கிட்ட பேசிட்டு கன்ஃபார்ம் பண்றேன்..” என்றதும்,

“சரி பாப்பா.. சரி பாப்பா..” என்றவர் விமலிடம் அகானா கூறியதை கூறிவிட்டு, தனக்கான வேலையை தொடர்ந்தார்.

இங்கு குமரன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்தார் துரைப்பாண்டி.. 

‘என் இடத்துல எனக்கு தெரியாம யார் செய்தது?’ என்ற கோபமும் ஆத்திரமும் அவர் பார்வையிலேயே தெரிந்தது.

“அது அம்முவுக்கு வச்ச டார்கெட் போல தெரியல அய்யா.. சித்திக்கோ, இல்ல ஆகனுக்கோ வச்ச மாதிரிதான் எனக்குத் தெரியுது..” என்றான் நவீனும்.

“டாக்டர் தம்பிக்குனா கண்டிப்பா தொழில் எதிரியா இருக்க வாய்ப்பிருக்கு. ஆனா இந்த தொழில்ல எப்படி போட்டி வரும், அதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மிதான். உங்க சித்திக்கும் டாக்டருக்கும் பொதுவான ஆளு கலெக்டர் பாப்பாதான். அவங்க எதிரியா இருக்கவும் நிறைய வாய்ப்பிருக்குல்ல..” என்றார் துரைப்பாண்டி..

அப்படியும் இருக்கலாம்தான். ஆனால் யார்? ஏன்? என்பதுதான் கேள்வியே..

“ஏன் ப்பா.. அந்த பொம்பள மைதிலி எங்க இருக்கு?” என்றார் யோசனையாக.

“அவங்களும் ஆஸ்பிடல்லதான் இருக்காங்க..” என்றான் குமரன் வெறுப்பாக.

“ஹ்ம்ம்..” என்று அவர் கண்களை மூடி யோசித்து, “சரி இனி நான் பார்த்துக்குறேன். நீங்களும் கவனமா இருங்க..” என்றவர் பின் என்ன நினைத்தாரோ “நீங்க ஒரு ஆள் அந்த பொம்பளைய கொஞ்சம் வாட்ச் பண்ணுங்க. எனக்கு என்னமோ அது மேலத்தான் டவுட்டா இருக்கு..” என்றார் எதையோ நினைத்து.

அவர்களுக்கும் மைதிலியின் மேல்தான் சந்தேகமே. ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டுமே. துரைப்பாண்டிக்கு சரி என்றுவிட்டு இருவரும் கிளம்பிவிட, துரைப்பாண்டியோ தனக்கு பின்னே நின்றிருந்தவனிடம் “அந்த லாரி ஓனர் யாருன்னு பார்த்து வரச்சொல்லு..” என்றார். 

இங்கு விமல், அகானா, கண்ணன், சங்கர் என நால்வரும் ஆகனின் கேபினில் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, வெளியில் நித்யாவின் போன் அலறியது.

போனை எடுத்து அதில் கேட்ட செய்தியில் “ம்மா என்ன சொல்ற.?” என அதிர்ந்தே போய்விட்டார் நித்யா.. அருகில் இருந்த வினோத், அந்த போனை வேகமாக வாங்கி “என்ன அத்த.?” என்றார் பதட்டமாக.

“தம்பி….. பசங்க ரெண்டு பேருமே ஸ்கூல் பஸ்ல வரல, அந்த ட்ரைவர்கிட்ட கேட்டா, ஹரிஷ் மட்டும்தான் வேன் பக்கத்துல நின்னானாம். பாப்பாவை காணோமாம். எங்கன்னு தெரில, நான் தேடிட்டு மிஸ்கிட்ட சொல்லி, எங்க அப்பாவுக்கு கால் பண்ண சொல்றேன்னு தம்பி சொன்னானாம். அதனால விட்டுட்டு வந்துட்டோம்னு அந்த டிரைவர் சொல்றாங்க. கொஞ்சம் ஸ்கூல் வரைக்கும் போய் என்னனு பாருங்க தம்பி, எனக்கு ரொம்ப பயமா இருக்கு..” என நித்யாவின் அம்மா பதட்டமாக பேச,

“பதட்டபடாதீங்க த்த.. நான் உடனே போய் பார்க்குறேன்..” என்றவன், அழுது கொண்டிருந்த நித்யாவிடம் “நித்தி.. நீ பயப்படுற அளவுக்கு ஒன்னும் இருக்காது. பாப்பா ரெஸ்ட் ரூம் போயிருப்பா, அதை தம்பி கவனிச்சிருக்க மாட்டான். நான் உடனே போய் பார்க்குறேன். நீ இங்க தைரியமா இரு..” என மனைவியிடம் சொல்லிவிட்டாலும், வினோத்திற்கும் உள்ளமெங்கும் ஒரு பயம் நொடியில் படர்ந்து விரிந்திருந்தது.

மனைவியை கவிதாவின்(மஞ்சரியின் அக்கா) பிடியில் விட்டு “கொஞ்சம் பார்த்துக்கோங்க அண்ணி.. நான் ஸ்கூல் வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்..” என கிளம்ப

இவர்களின் பதட்டத்தைக் கவனித்த காயத்ரியின் கணவன் என்னவென்று விசாரித்து அவனும் உடன் கிளம்பிவிட்டான்.

நித்யாவிற்கு நெஞ்சமெல்லாம் நடுக்கமெடுக்க ஆரம்பித்தது.

அடுத்தடுத்து தங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை நினைத்தாலே இதெல்லாம் தானாக நடப்பது போல் தெரியவில்லையே..

யாரோ திட்டமிட்டு.. என்ற யோசனை வந்ததுமே கவிதாவிடமிருந்து பிரிந்து வேகமாக ஆகனின் கேபினுக்குள் நுழைந்தார் நித்யா.

பரிதவிப்போடு உள்ளே வந்தவரை பார்த்த சங்கர், யாருக்கும் எதுவுமோ  என பயந்து “என்ன நித்திமா?” என்றார் பதட்டமாக.

அவர் கேட்டதைக் காதில் வாங்கியததை போலவே தெரியவில்லை நித்யா.

நேராக அகானாவிடம் சென்று “அம்மு… ஸ்கூலுக்கு போன பாப்பாவை காணோமாம், தம்பி மட்டும் ஸ்கூல்ல இருக்கானாம். இப்போ அவனும் அங்க இருக்கானா தெரியல. எனக்கு.. எனக்கு  ரொம்ப பயமா இருக்கு அம்மு..” என்று கதறவே ஆரம்பித்துவிட்டார்.

“என்ன சொல்ற நித்தி?” என சங்கரன் கேட்கும் போதுதான், நித்யா அகானாவின் முகத்தையே பார்த்தார்.

அவள் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது.

“என்ன அம்மு..?” என்றார் பயந்து போய், கேள்வி அவளிடமிருந்தாலும் பார்வை அங்கிருந்த அத்தனை பேரையும் தீண்டி வந்தது. 

“என்னாச்சு.. என்ன ண்ணா?” என இப்போது சங்கரிடம் தன் பார்வையைத் திருப்ப

“இது வேற நித்யா.. நாங்க பார்த்துக்கிறோம். வினோத் எங்க?” என்றார் பதட்டத்தை வெளியில் காட்டாத குரலில்.

“அவர்.. அவர் தான் ஸ்கூலுக்கு போயிருக்கார்..” என குழப்பமாகவே கூறி முடிக்கும் முன்னே “என்ன? எப்போ? ஏன் எங்கிட்ட சொல்லிட்டு போகல.?” என அகானா கோபமாக கேட்டுக் கொண்டே தன் போனில் இருந்து வினோத்திற்கு அழைக்க ஆரம்பித்திருந்தாள்.

You may also like

1 comment

mriomrio28399 February 2, 2026 - 8:38 am

இவ்வளவு செய்யுற மைதிதிலியை அகானா சும்மா விடுவான்னு நினைக்கறிங்க ?
ம்ஹூம்… நோ நெவர்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to mriomrio28399 Cancel Reply

About Me

Featured