அகானா – 73
ஒரு வழியாக மஞ்சரிக்கு சர்ஜரி ஆரம்பிக்கப்பட்டது. சர்ஜரிக்கு முன் ரவி மஞ்சரியைப் பார்க்க செல்லவில்லை. எங்கே தான் பார்க்க சென்று, இந்த சர்ஜரியே வேண்டாமென்று விடுவாரோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.
அந்த ஆபரேஷன் தியேட்டருக்கு முன் அனைவரும் பதட்டமாக நின்றிருக்க, அகானா மட்டும் ஆகனின் அறையில் இருந்தாள்.
அவளுக்கு இப்போது ஆகனின் அனைப்பும், ஆறுதலும் அத்தனை தேவையாக இருந்தது. அதனால் அவனின் கையைப் பிடித்தபடி அவன் தலையோடு தன் தலையை ஒட்ட வைத்தபடி படுத்திருந்தாள்.
இதயம் அதிவேகமாக துடிப்பது அவளுக்கே கேட்டது. அந்த பயத்தை மறைக்க மேலும் அவனோடு ஒன்றினாள்.
எத்தனையோ இழப்புகள், அவமானங்கள், வேதனைகள், வலிகள் என கடந்து வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் அது ஒரு பொருட்டாகவே அவள் நினைத்ததில்லை. நினைக்க விட்டதில்லை மஞ்சரி.
அவளின் அனைத்து பலமாக இருந்தவர் மஞ்சரி. இன்று அவரும் படுக்கையில் இருக்க, மிக மிக தனிமையாகவும், பலவீனமாகவும் உணர்ந்தாள் அகானா.
வாழ்க்கை மீதிருந்த நம்பிக்கையே இப்போது குறைந்து போயிருந்தது.
தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் நினைக்க நினைக்க, அடக்கவே முடியாமல் அழுகை பீறிட்டு வந்தது.
என்ன முயன்றும் அவளால் அந்த அழுகையை அடக்கவே முடியவில்லை.
இப்போது அவள் சாய ஒரு தோள் வேண்டும். அதை கொடுக்க வேண்டியவனோ ஆழ் மயக்கத்தில் இருக்கிறான். எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்ற கேள்வி எப்போதும் அவளுக்கு தோன்றியதில்லை. ஆனால் இப்போது அது பூதாகரமாக தோன்றியது.
‘நான் பிறக்கவில்லையென்றால்?’ என்ற கேள்வியும், அதற்கு கிடைத்த பதிலும் அவளை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தது.
அவள் பிறக்கவில்லையென்றால் ரவீந்திரனின் துரோகத்திற்குப் பிறகு, நிச்சயம் தன் அம்மாவின் சொந்தங்கள் அவரை அப்படியே விட்டிருக்கமாட்டார்கள்.
ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்திருப்பார்கள். அவரும் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்.
நான் இருந்ததால் தான் எங்கும் செல்லாமல் என்னோடு, என்னை வளர்க்க, என ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். இனியாவது அவரை நிம்மதியாக, சந்தோசமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தேனே, இப்படி ஆகிவிட்டதே’ என கதறியழுதாள்.
பெண்ணவளின் உணர்வா? அல்லது அவளின் தொடுகையா? அல்லது அவளின் அழுகையா? ஏதோ ஒன்று ஆகனின் உணர்வுச் சுரப்பிகளைத் தொட்டிருக்க வேண்டும்.
அதுவரை ஜடம்போல கிடந்தவன், மெல்ல விழி மலர்த்தி தன்னவளின் அழுகையை இயலாமையோடும் பயத்தோடும் பார்த்தான்.
‘ஏன்? ஏன் அழுகிறாள்? யாருக்கு என்ன?’ என்ற எண்ணம் வரவுமே, அன்றைய ஆக்சிடென்ட் நியாபகத்திற்கு வர, தன்னைப் பிடித்திருந்த அவள் கையை அவன் இறுக்கமாகப் பிடித்து அழுத்த, அதை உணர்ந்தவள் சட்டென அவனைத் திரும்பி பார்க்க, ஏக்கமும் பரிதவிப்பும், பயமுமாக அவனின் விழிகள் உணர்வுகளைக் கொட்ட, “மாமா” என அவன் மீதே விழுந்து கதறி தீர்த்தாள் அகானா.
“அம்மு.. அம்மு என்னாச்சு? ஏன் இப்படி அழற..?” என மிகவும் திணறலாகவே கேட்க,
“ஹ்ம்ம் ஹ்ம்ம்..” என்றாளே தவிர்த்து ஒன்றும் சொல்லவில்லை.
அதிலேயே அவனின் பயம் சற்று குறைய, பெண்ணவளின் தலையை வருடியபடியே விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தவனின் விழிகளும் நீரைக் கொட்டத்தான் செய்தது.
சில நிமிடங்களுக்குப் பிறகுதான், அவன் சுயநினைவிற்கு வந்துவிட்டான் என்பதே பெண்னவளுக்கு புரிந்தது.
அவனிடமிருந்து வேகமாக விலகி, “இப்போ எப்படி இருக்கு? பெயின் எங்கெல்லாம் இருக்கு?” என அவனின் உடலை மேலிருந்து கீழ்வரை பார்வையால் அளந்தபடி கேட்க,
“சிவியர் பெயின் இல்ல. தாங்கிக்கிற அளவுக்கு தான் பெயின் இருக்கு. அத்தை எப்படி இருக்காங்க? மகி எப்படி இருக்கா?” என்றான் உடனே.
“நீ ஓக்கே தான. எங்கிட்ட மறைக்கலதானே.. நிஜமாவே பெயின் இல்லைதானே..” என அவள், அவன் பேச்சுக்கு பதில் சொல்லாமல், மீண்டும் கேள்வியாய் கேட்க,
“ம்ச் அம்மு எனக்கு நிஜமாவே ஒன்னும் இல்லடி.. முதல்ல அத்தையும் மகியும் எப்படி இருக்காங்கன்னு சொல்லு?” என அதட்டலாக கேட்க,
“ஹான்..” என்றவள் இருவர் பற்றியும் கூற, “நீ நல்லா இருந்திருந்தா, என் அம்மாவுக்கு அவர் சர்ஜரி பண்ற மாதிரி இருந்திருக்காது..” என்றாள் கோபமாக.
“அவரை நீ உன்னோட சொந்தமா ஏன் பார்க்குற, ஜஸ்ட் ஒரு டாக்டரா மட்டும் மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணு போதும்..” என்றவன், “மகியோட ரிபோர்ட்ஸ் பார்த்தியா..?” என்றான்.
“இல்ல.. ஆரி கொஞ்சம் டைம் ஆகும்னு சொன்னான். நான் போய் நீ முழிச்சிட்டன்னு சொல்லிட்டு வரேன்..” என நகர,
“ஹ்ம்ம்.. ஆமா டாக்டர்ஸ் யாரும் ஃப்ரீயா இருந்தா கூப்பிட்டு வா.. கம்ப்ளீட் செக்கப் மட்டும் செஞ்சிக்கலாம். இப்போ இந்த ஐவி லைனை மட்டும் கழட்டி விடு..” என்றதும், அகானாவும் அதை செய்ய..
“என்னால எழுந்துக்க முடியும்னு தான் நினைக்கிறேம். ஆனாலும் ரிஸ்க் எடுக்க பயமா இருக்கு. கொஞ்சம் ஹெல்ப் பண்ணு, நான் சாஞ்சி உட்காரனும்..” என்றவனைப் பார்த்து முறைத்தாள்.
“இல்ல.. இல்ல இப்போ வேண்டாம். செக்கப் எல்லாம் முடியட்டும், பார்த்துக்கலாம். ஒரு ஹாஃப் அவர் தான், கம்ளீட்டா எல்லாம் முடிஞ்சிடும். அப்புறம் நீ சாஞ்சிக்கோ..” என்றவளிடம், பதில் சொல்லாமல் எழ முயற்சிக்க,
“எப்போதான் நான் சொல்றதை கேட்க போற..?” என கண்டிப்புடன் கூறி, அவன் காயத்தை தொடாமல் மெதுவாக எழுப்பி அமர வைத்தாள்.
“ஹ்ம்ம்.. இப்போதான் கொஞ்சம் பெட்டரா இருக்கு அம்மு.. ரொம்ப பயந்துட்டியா?” என தன் கரத்தை அவள் முன் நீட்ட,
வேகமாக வந்து அதைப் பிடித்துக் கொண்டவள் “ரொம்ப ரொம்ப..” என கலங்கிய குரலில் கூற, இப்போது மொத்தமாக இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான் ஆகன்.
“ஹேய் என்ன? என்ன பண்ற?” என அவனிடமிருந்து திமிறியபடியே, பதட்டமாக கேட்க,
“என்ன? இப்போ என்ன? எனக்கு உன்னோட ஹக் வேணும்..” என பதிலளித்தபடியே அவனின் அனைப்பை இறுக்கினான்.
அந்த வார்த்தைகளில் தன் திமிறலை அடக்கி, தானும் அவன் அனைப்பில் அடங்கியவள் “எனக்கும் தான்..” என மெல்ல முணுமுணுத்தாள்.
“ஹ்ம்ம்..” என்றதோடு தன் பேச்சை நிறுத்தி, அவளை வாகாக அனைத்துக் கொண்டான், அவளின் ஏக்கமும், தவிப்பும் அறிந்தவானாக.
*****
இங்கு மயக்க மருந்தின் வீரியத்தில், மயக்கத்தில் விழிகள் மூடிய நிலையில் படுத்திருந்த மஞ்சரியை பார்த்து, ரவியின் கைகள் நடுங்குவதை, ஆரியனால் நன்கு உணர முடிந்தது.
வேகமாக நிமிர்ந்து அவரின் முகம் பார்க்க, அவருக்கு கண்கள் கலங்கிப் போயிருந்தது.
ரவியின் உணர்வுகள் அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனால் காலம் கடந்துவிட்டது என்று அவருக்கு ஏன் புரியவில்லை, என்ற கோபம் தான் அதிகமாக இருந்தது.
இனி எக்காரணம் கொண்டும் மஞ்சரியின் வாழ்க்கையில் ரவிக்கு இடமில்லை, என்று மூன்றாவது மனிதனான அவனுக்கே புரியும்போது, அவருக்கு ஏன் புரியவில்லை என்ற எரிச்சல் வேறு வந்தது.
இதுவரை அவர்கள் பட்ட கஷ்டத்தை கூட இருந்து பார்த்தவன் என்ற முறையில், எந்த வகையிலும் ரவியை மன்னிக்க தயாராக இல்லை ஆரியன்.
அதனால் “சார்..” என்று சற்று அழுத்தமாக, அதே நேரம் சத்தமாக அழைக்க, அதில் உணர்வு பெற்றவர் விழி மூடி அந்த ‘தன் உணர்வுகளை’ கட்டுப்படுத்தி பெருமூச்சு விட்டார்.
பின் எதையும் யோசிக்காமல் சிகிச்சையை ஆரம்பித்தார்.
அவரின் வேலைத் திறமையை கேள்விப்பட்டிருக்கிறான் தான். ஆனால் முதல்முறையாக இப்போதுதான் அவருடன் இருந்து பார்க்கிறான்.
நிச்சயம் பெருமை கொள்ளும் அளவிற்கான வேலைக்காரர் தான். இல்லையென்றால் இத்தனை பேரும் புகழும் கிடைத்திருக்க வாய்ப்பில்லையே. இவை இருந்து என்ன பயன் வாழ்க்கையில் தோற்றுவிட்டாரே.
நீண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, வெற்றிகரமாக அந்த அறுவை சிகிச்சை முடிய, வழக்கம் போல அனைவரும் பாராட்ட, அவருக்கு அதெல்லாம் தெரியவில்லை.
இந்த நொடி மகளைப் பார்க்க வேண்டும் போல் தோன்ற, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூட அங்கிருப்பவர்களுக்கு சொல்லாமல் வெளியே வர, இவருக்காக காத்திருந்தார் காவல் அதிகாரி.
அவரைப் பார்த்ததுமே ரவியின் முகம் அதிர்ச்சியைக் காட்ட, “உங்களுக்கு கொடுத்த டைம் முடிஞ்சது சார், உங்களை அழைச்சிட்டு போகத்தான் வந்திருக்கோம்..” என்றதும்,
“ப்ளீஸ் சார்.. ஒரு அரை மணி நேரம் மட்டும் டைம் எக்ஸ்டன் பண்ணுங்க. ஒரு எமர்ஜென்சி கேஸ் முடிச்சிட்டு வந்துடுறேன்..” என மிகவும் வருந்தி கேட்க, அந்த அதிகாரியாலும் மீற முடியவியல்லை.
“ஓக்கே டாக்டர். தர்டி மினிட்ஸ் தான். அதுக்குள்ள வந்துடுங்க..” என இருக்கையில் அமர, அங்கு வெளியில் நின்றவர்களை பார்வையால் அலசியபடியே ரவி நடக்க, “கண்ணாவோட ரூம்லதான் அம்மு இருக்கா..” என வினோத் கூற,
“ம்ம்” என தலையாட்டியபடியே அந்த அறையை நோக்கி வேகமாக நடந்தார்.
சர்ஜரி முடிந்ததுமே முதலில் ஒரு காபி குடிப்பார் ரவி. இப்போது அந்த காபியோடு உதவியாளர் வர, “அம்முவுக்கும் சேர்த்து எடுத்துட்டு போங்க..” என்றார் வினோத்.
ஆகன் விழித்தது யாருக்கும் தெரியாது என்பதால், அவன் மயக்கத்தில் தான் இருக்கிறான், அகானா அங்கு தனியாக வேதனையில் தவித்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்தபடியே கதவைத் திறந்தவருக்கு இருவரின் நிலையைப் பார்த்து ஒரு மாதிரியாகிவிட்டது.
“சாரி..” என்றபடியே வெளியேற பார்க்க, “வாங்க மாமா” என்றான் ஆகன்.
“ஹ்ம்ம்ம்” என்றவரின் பார்வை மகளை மட்டுமே வட்டமடித்தது.
“சர்ஜரி முடிஞ்சதா மாமா?” என ஆகன் கேட்க, அதன்பிறகே மகளின் மேலிருந்த பார்வையை விளக்கி மருமகனைப் பார்த்து பதில் சொன்னார்.
“எல்லாம் ஓக்கே தான். பட் டூ மன்த்ஸ் கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும்..” என்றவர் “உனக்கு எப்படி இருக்கு.? உனக்கு எப்போ மயக்கம் தெளிஞ்சது?” என்றார் கேள்வியாக.
“இப்போதான் மாமா.. ஜஸ்ட் டென் மினிட்ஸ் கூட ஆகாது..” என்றபடியே அகானாவைப் பார்க்க, அதுவரை அமைதியாக இருந்த அகானா “நான் போய் டாக்டர்ஸ கூட்டிட்டு வரேன்..” என வெளியேறிவிட்டாள்.
“என்ன மாமா?” என தன் மனைவி வெளியேறும் வரைப் பார்த்திருந்து கேட்ட ஆகனிடம், “நத்திங்க் கண்ணா.. வெளிய போலிஸ் வெயிட் பண்ணுது. உன்னை பார்த்துட்டு போகத்தான் வந்தேன்..” என்றவர், “அம்மு அம்முவை நல்லா பார்த்துக்கோ கண்ணா.. அவ மனசுல இருக்கிற காயம்..” என முடிக்கும் முன்னே, “இந்த பேச்சே வேண்டாம் மாமா. அம்முவை இனி நான் பார்த்துக்கிறேன். நீங்க எந்த டென்சனும் இல்லாம போயிட்டு வாங்க. சீக்கிரம் உங்க பொண்ணெ உங்களை ஜாமின் எடுத்து கூப்பிட்டு வருவா..” என புன்னகைக்க, ரவிக்கும் விழிகள் கலங்கி போனது.
1 comment
நல்லா வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையை தன்னோட பேரதசைத்தனத்தால தானே கெடுத்துக்கிட்டாரு இந்த ரவீந்திரன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797