Home Anti Heroineஅகானா – 82

அகானா – 82

by Vathani S

அகானா – 82

ஆரியனோடு உள்ளே வந்த சுபாஷைப் பார்த்ததும், மஞ்சரிக்குள் பெரும் அதிர்வலைகள் உண்டானது.

நொடியில் மகளது திட்டம் புரிந்து போனது அந்த அன்னைக்கு. புரிந்த போது கோபமும், இயலாமையும், அழுகையும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது அவருக்கு.

மஞ்சரியை பார்த்தபடியே உள்ளே வந்த சுபாஷிற்கும், அவரின் மனநிலை புரிந்து தான் இருந்தது. அவருக்குமே இப்போது மஞ்சரிக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று புரியவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே, சுபாஷிற்கு மஞ்சரியின் மேல் அத்தனை பிடித்தம். அந்த பிடித்தம்தான் மஞ்சரியின் மனது தெரிந்த பிறகு ஒதுங்கிப் போக வைத்தது.

ஆனால் இப்போது நடந்திருக்கும் பிரச்சனைகள், மஞ்சரிக்கும், அகானாவிற்கும் ஏற்பட்ட மன உளைச்சல்கள், அதனால் ஆரியனுக்கும், ஆகனுக்கும் உண்டான அழுத்தங்கள் என எல்லாவற்றையும் யோசிக்கும் போது, அன்றே சற்று பிடிவாதம் பிடித்து, மஞ்சரியை மணந்திருக்கலாமோ என்றும் யோசிக்க வைத்தது.

மஞ்சரியின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து ஒதுங்கியதால் தான், இத்தனை பிரச்சனையோ என்றும் யோசித்தார்.

“மஞ்சு ம்மா” என ஆரியன் மஞ்சரியின் கையை ஆறுதலாகப் பிடிக்க,

“ஆரி நீ கொஞ்சம் வெளிய இரு.. நான் மஞ்சரிகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..” என்றார் சுபாஷ் அழுத்தமாக.

சுபாஷின் பேச்சில் இருவருமே அதிர்ந்து அவரைப் பார்க்க,

“நீ போ நான் பேசிட்டு கூப்பிடுறேன்..” என்றார் தன் பேச்சில் மேலும் அழுத்தத்தை கூட்டி. அதில் ஆரியன்  அமைதியாக வெளியேறி இருந்தான்.

இப்போது சுபாஷ், மஞ்சரியை நேராக பார்த்து “உங்க பிரச்சனையை மறைக்காம, தெளிவா என்கிட்ட சொல்லுங்க மஞ்சரி.. அப்போதான் என்னால் உங்களுக்கு உதவ முடியும். உங்க பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்..” என்றார் அதே அழுத்தத்துடன்.

மஞ்சரிக்கு சுபாஷிடம் பேச தயக்கம் தான். ஆனால் இப்போது பேச வேண்டிய கட்டாயம் வந்திருந்தது. நாற்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்த வாழ்க்கையை,  நொடியில் மகள் மாற்ற வேண்டும் என்று நினைத்தால், அவரால் எப்படி அதை ஏற்றுக் கொள்ள முடியும்.

தன்னைச் சுற்றி இருக்கும் யாரிடமும் இதைப் பற்றி பேசினால், யாரும் அவருக்கு சப்போர்ட் செய்ய மாட்டார்கள் என்று புரிந்து போயிருந்தது. அதனால் சுபாஷிடமே பேசலாம் என முடிவெடுத்திருந்தார்.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று உணர்ந்துவிட்டார்.

அதனால் “அம்மு உங்ககிட்ட என்ன சொல்லி வர வச்சு இருக்கான்னு எனக்கு தெரியல.. ஆனா அவ என்ன சொல்லிருந்தாலும், அதுல எனக்கு உடன்பாடு இல்லை..” என அதுவரை இருந்த அலைப்புறுதலை விட்டுவிட்டு மிகவும் தீர்க்கமாக கூறினார் மஞ்சரி.

சுபாஷ் இதை ஏற்கனவே எதிர்பார்த்து இருந்திருப்பார் போல, “ஓ..’ என்று தன் பேச்சை நிறுத்தியவர் “எனக்கு ரெண்டு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க மஞ்சரி. அந்த பதில் ஏத்துக்க கூடியதா இருந்தால், நானே வீட்டில் எல்லார்கிட்டயும் பேசி இந்த பிரச்சனையை முடிச்சி வச்சிடுறேன்..” என்றார் நேர் பார்வையாக.

மஞ்சரியின் முகம் கலக்கத்திற்கு சென்றது. அதை கண்ட சுபாஷ்  “உங்களுக்கு என்னைப்பத்தி தெரியும்..” என்றார் ஒரு பெருமூச்சைவிட்டு.

‘ஆம்’ என்பது போல் தலையசைத்த மஞ்சரி “அதனாலதான் பயமா இருக்கு… உங்ககிட்ட நான் அதிகமா பேசினதில்ல, பழகினதில்ல. எல்லாம் விஜிக்கா சொல்லித்தான் தெரியும். உங்களுக்கும் எங்களை அவங்க மூலமாதான் தெரியும். எங்க வாழ்க்கைல நடந்ததையும் சேர்த்து தான் சொல்றேன். அப்போ நீங்க என்கிட்ட கேட்டது பரிதாபப்பட்டு, எனக்கு வாழ்க்கை கொடுக்கப்போறதா தான் தோனுச்சு. உங்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அதை என்னால அழிச்சிக்கக்கூடாதுனு நினைச்சேன். அதனாலதான் முடிவா வேண்டாம்னு சொன்னேன். ஆனா இத்தனை வருசம், நீங்க இப்படியே இருந்தது தான்.. என்னால.. என்னால.. நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரியுதா..?” என்றார் மஞ்சரி தவிப்பாக.

சுபாஷிற்கு மஞ்சரியின் இந்த வேதனையும், தவிப்பும் மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது. ஆனால் இப்போது அவரை பேசவிட்டால் தான், அவர் மனதில் என்ன இருக்கென்று தெரிந்து கொள்ள முடியும்..’ என நினைத்து, மஞ்சரிக்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்.

“என்னோட வயசு நாற்பத்தி மூனு… பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இப்போ என்னைச் சுத்தி என் குடும்பம் இருக்கு. இவங்களை எல்லாம் மீறி என்னால எதையும் யோசிக்க முடியாது. எனக்கு இதெல்லாம் வேண்டாம் சுபாஷ்.. ப்ளீஸ் நீங்களாவது என்னை புரிஞ்சிக்கோங்க..” என்றார் அழுகையோடு.

அப்போதும் சுபாஷிடம் அமைதியே.. 

“அவளுக்காக நான் தியாகம் பண்ணேன், அவளுக்காக நான் கஷ்டப்பட்டேன், அவளுக்காக நான் என்னோட ஆசைகளையும், வாழ்க்கையையும் இழந்துட்டேன்னு’ அம்முவுக்கு ரொம்ப குற்றவுணர்ச்சி, அதனாலத்தான் இப்படியெல்லாம் முட்டாள்தனமா யோசிக்கிறா… அது அப்படியில்ல. நான் நம்பின ஒருவர் எனக்கு கொடுத்த பரிசு, என் உண்மையான காதலுக்கு கிடைச்ச வரம் என் பொண்ணு. அவளை நான் என்னைக்குமே சுமையா நினைச்சது இல்ல. இப்போ அவளோட நிம்மதியும் சந்தோசமும் தான் எனக்கு முக்கியம். அதுக்கு என்ன செய்யலாம்னு மட்டும் யோசிப்போமே. இப்போ போய் ஏன் இந்த வேண்டாத யோசனைகள் எல்லாம். ப்ளீஸ் சுபாஷ் நீங்க அம்முக்கிட்ட பேசுங்க..” என்றார் தவிப்பாக.

“நான் செஞ்சேன்.. எனக்கு பதிலுக்கு செய்றேன்னு கிளம்பறது எந்த வகையில சரி. எந்த ஒரு அம்மாவும், தன் குழந்தைகள்கிட்ட எதிர்பார்ப்பு வச்சிக்கமாதான் செய்வாங்க. அதை புரிஞ்சிக்காம..” என்றார் மஞ்சரி வேதனையாக.

“நான் உங்ககிட்ட ரெண்டு கேள்வி கேட்கனும்னு சொன்னேன் மஞ்சரி. அதுல ஒரு கேள்விக்கு பதில் தெரிஞ்சிடுச்சு. இன்னும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” என்றார் சுபாஷ் நிதானமாக.

இவ்வளவு எடுத்து சொல்லியும் புரிந்து கொள்ளாமல் இன்னு என்ன என கேள்வியும் அதிர்வுமாக அவரைப் பார்க்க..

“இன்னும் நீங்க அந்த டாக்டரை விரும்புறீங்களா?” என்றார் அதே நிதானமாக. ஆனால் அந்த குரலில் வலி மிகுந்து இருந்ததை மஞ்சரியால் உணர முடிந்தது.

சுபாஷின் அந்த கேள்விக்கு மஞ்சரியால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை.

அவரால் எப்போதும் அந்த காதலை மறக்கவோ, வெறுக்கவோ முடியாதே.!

ரவியின் காதல் பொய்யாகிப் போயிருந்தாலும், ஆரம்பத்தில் அவர் காட்டிய அன்பும், நேசமும் பொய்யில்லையே.. அவரோடு வாழ்ந்த பத்தாண்டுகளில் கடைசி மூன்றாண்டுகளைத் தவிர மற்ற நாட்கள், தன்னையும் குழந்தையையும் உயிராகத்தானே நேசித்தார்.

தன்னுடைய காதல் எங்கும் பொய்யில்லையே..!

காலத்திற்கேற்ப அன்பையும், காதலையும் அவரால் வேண்டுமென்றால் மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் மஞ்சரியால் முடியாதே.

ஒரே நேசம்! ஒரே காதல்! ஒரே வாழ்க்கை! என்று தானே இத்தனை நாளும் வாழ்ந்தார். மற்றவர்கள் முன்னும் வாழ்ந்து காட்டியிருந்தார்.

எத்தனை எத்தனை விமர்சனங்கள், வலிகள், வேதனைகள், அவமானங்கள் அனைத்தையும் கடந்து வந்தது ‘தன்னை ஒருவர் தவறாக பேசிவிடக்கூடாது, தன்னால் தன் மகளின் வாழ்க்கையில் ஒரு சிறு குழப்பம் கூட வந்துவிடக்கூடாது’ என்பதால் தானே.

அவரால் எப்போதுமே அந்த முதல் காதலை மறந்துவிட முடியாதுதான். ஆனால் அதற்காக அவரை மன்னித்து, ஏற்றுக்கொண்டு ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்றெல்லாம் கனவில் கூட யோசித்தது இல்லை.

அவரிடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க மனம் இன்னுமே ஒப்பவில்லை.

நினைக்கும் போதே உடலெல்லாம் அருவெறுத்துதான் போனது மஞ்சரிக்கு.

மஞ்சரியின் முகத்தில் வந்து போன உணர்வுகளும், கடைசியில் அவரின் உடல் சிலிர்த்து அடங்கியதையும் கண்ட சுபாஷிற்கு, மனம் அனலில் இட்ட எரும்பைப் போல் துடிதுடித்துப் போனது.

எல்லாம் சில நொடிகள் தான். சட்டென தன் மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். 

இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் அவருக்குத் தெரியுமே. அதனால் துவண்டு போகாமல் “சரி இனி நம்மளைப்பத்தி பேச வேண்டாம். அகியைப் பத்தியும், அவளோட வாழ்க்கையைப் பத்தியும் மட்டும் பேசுவோமா?” என்றார் பொறுமையாக.

‘அம்முவோட வாழ்க்கையைப்பத்தி பேச என்ன இருக்கு?’ என்ற கேள்வியோடு பார்வையை கொடுக்க,

“நீங்க இப்படியே இருந்தாலோ? இல்ல இங்கையே இருந்தாலோ அவளால அந்த குடும்பத்துல, ஆகனோட நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்னு நினைக்கிறீங்களா? இதெல்லாம் யோசிச்சுதானே ஆகன் வேண்டாம்னு அவ ஒதுங்கி இருந்தா.. நீங்க ஏன் அவளை இந்த சிக்கலுக்குள்ள இழுத்து விட்டீங்க. அகானா என்ன உங்களை மாதிரியா? ஒருத்தனை மட்டுமே விரும்பி ஒரு வாழ்க்கையிலேயே வாழ.. காலமும் சூழ்நிலையும் அவளோட மனசைக் கண்டிப்பா மாத்திருக்கும். என்ன கொஞ்ச காலம் எடுத்திருக்கும் ஆனா நடந்திருக்கும். ஏன் இதை நான் இவ்ளோ தெளிவா, தைரியமா சொல்றேன் தெரியுமா? அகனாக்குள்ள உங்களோட ஜீன் மட்டும் இல்ல, மிஸ்டர் ரவீந்திரனோட ஜீனும் இருக்கு. கண்டிப்பா மூவ் ஆன் ஆகிருப்பா. இப்போ வெளியவே வரமுடியாத சிக்கலுக்குள்ள அவளைத் தள்ளிவிட்டுட்டு அழுது கரைஞ்சா சரியாகிடுமா?” என்றார் ஆத்திரமாக.

சுபாஷின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மஞ்சரியின் இதயத்தைக் கூறு போட்டது. உண்மைதானோ இங்கிருந்து தொலைவாக சென்றிருந்தாலே, சில வருடங்களில் மகள் அதிலிருந்து வெளியில் வந்திருப்பாளோ? ஆகனின் பேச்சைக் கேட்டது தவறோ?’ என மனதுக்குள்ளே புழுங்க ஆரம்பித்தார்.

இப்போது எப்படி மகளின் வேதனையை கலைவது என்று அவருக்கு தெரியவில்லை.

மகளின் மேல் பைத்தியமாகிருக்கும் ஆகனை விட்டுவிட முடியாமல் தானே, அத்தனை பிரச்சினைகள் இருந்தும், மகளுக்கேத் தெரியாமல் இந்த திருமணத்தை நடத்தினார்.

இப்போது மகளின் வாழ்க்கை கண் முன் பயத்தைக் கொடுத்தது.

“அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையைக் கொடுக்கனும்னு நினைச்சேன். அதைவிட அவளுக்கு பிடிச்சவனைக் கொடுக்கனும்னு நினைச்சேன். அது தப்பா?” என்றார் தவிப்பாக.

“தப்பே இல்ல. ஒரு அம்மா அப்படித்தான் யோசிப்பாங்க. அதுலயும் நீங்க யோசிச்சதுல தப்பே இல்ல, ஆனா அதுல வர சாதகங்களை மட்டுமே யோசிச்சிட்டீங்க.. பாதங்ககளை யோசிச்சிருந்தா இந்த கல்யாணம் நடந்திருக்காது. சரி இப்போ முடிஞ்சதை பேச வேண்டாம். அடுத்து என்ன செய்யலாம்னு மட்டும் யோசிக்கலாம்..’ என்றார் சுபாஷ்.

மஞ்சரிக்கும் அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்விதான். அதனால் சுபாஷ் என்ன சொல்ல வருகிறார் என்று அவர் முகத்தையே பார்த்தார்.

“அண்ணிக்கு இனி ஆரியை இங்க விடுறதுல விருப்பமே இல்ல மஞ்சரி. ஏன் அகானாவையே இங்க விட வேண்டாம்னு தான் சொன்னாங்க. ஆனா அவளோட வேலை இங்கேன்னு வரும்போது அதுல தலையிட முடியாது இல்லையா? அதனால முதல்ல ஆரியை இங்க இருந்து சிஃப்ட் பண்ணனும்னு நினைக்கிறாங்க. அதுவும் சரிதானே. அதோட எனக்கும் இப்போ ஒரு ப்ரேக் தேவைப்படுது. ப்ரண்ட்ஸ் எல்லாரும் ஈரோப் டூர் போலாம்னு ப்ளான். அதனால என்னோட கிளினிக்கை மொத்தமா அவன்ட்ட கொடுத்துடலாம்னு முடிவு பண்ணிருக்கேன். மகியும் ஓக்கேன்னு சொல்லிட்டாளாம். அவங்களை அழைச்சிட்டு போகத்தான் நான் வந்திருக்கேன்..” என்றதும் மஞ்சரியின் முகம் மலர்ந்து போனது.

“அம்முவோட வாழ்க்கை எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு எனக்கு ஆரியோட வாழ்க்கையும் முக்கியம். இங்க நடக்கிற பிரச்சினைல அவங்களும் சேர்ந்து கஷ்டப்படுறாங்களோனு பயந்துட்டேன். இப்போதான் நிம்மதியா இருக்கு. இது ரொம்ப நல்ல ஐடியா.. கண்டிப்பா கூப்பிட்டு போங்க சுபாஷ். இங்க நடந்த கூத்துல அவங்களும் எங்கேயும் போகல..” என ஒரு தாயின் ஆதுரத்துடன் கூற, அதுவே சொன்னது ஆரியின் மீதான அவரின் பாசத்தை.

“ஹ்ம்ம்.. ஆமாம் மஞ்சரி. அண்ணியும் அதேதான் சொன்னாங்க..” என்று நிறுத்தி, மஞ்சரியின் முகத்தை நேர்ப்பார்வை பார்த்தவாறே “நீங்களும் எங்க கூட வந்துடுங்க மஞ்சரி.. அதுதான் இங்க நடக்கிற எல்லா பிரச்சினைக்கும் ஒரே தீர்வு..” என நிதானமாக கூறி முடிக்க, மஞ்சரியின் விழிகள் அதிர்ச்சியில் மேலும் மேலும் விரிந்து போய், ஒரு கட்டத்தில் அவர் அதிர்ச்சியில் மயங்கியே விட்டார்.

You may also like

1 comment

M. Sarathi Rio May 6, 2026 - 6:56 pm

பொண்ணு நல்லா வாழணும்ன்னா அவளை விட்டு விலகியிருந்தாலே போதும் தானே..?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured