Home Anti Heroineஅகானா – 83

அகானா – 83

by Vathani S

அகானா –  83

தன்னைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தியதைக் கண்டு மனம் வேதனை அடைந்தது ரஞ்சனிக்கு.

ஆனாலும் இப்போது அவர் என்ன சொல்லிவிட முடியும். இல்லை ஏனென்றோ? என்னவென்றோ கேட்டு அறிந்து கொள்ள முடியுமா? 

உள்ளுக்குள் பொங்கிய வேதனையை முகத்தில் காட்டாமல் இருக்க பெரும் சிரத்தை எடுத்தார்தான். ஆனால் முடியவில்லை.

அதை கவனித்த விஜயா “அது ஒன்னுமில்ல..” என சமாளிக்க,

“என்னால உங்களை புரிஞ்சிக்க முடியுது..” என சிரித்தார் ரஞ்சனி.

“நாங்க பேசின இந்த விசயம் உங்களால எந்தளவுக்கு புரிஞ்சிக்க முடியும் தெரியலங்க ரஞ்சனி. அதுக்காக உங்களைத் தப்பும் சொல்லல. மஞ்சரி எனக்கு கூடப் பிறக்காத தங்கச்சி. நீங்க நம்பலனாலும் அதுதான் உண்மை. அவளோ, அகியோ இல்லாம எங்க வீட்டுல எந்த நல்ல நாளும், விசேஷமும் இருக்காது. அதையும் நீங்க புரிஞ்சிக்கனும்..” என்றார் விஜயா மெல்ல..

“பாப்பாவோட கல்யாணத்தப்பவே இதெல்லாம் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது. ஆனா அப்போ அதை ஏத்துக்க முடியல. ஆனா இனி முடியும்னு நினைக்கிறேன்..” என்றார் ரஞ்சனியும் தன்மையாகவே சிறு புன்னகையுடன்.

“பழசெல்லாம் பேசிப்பேசி இனி வரப்போற காலங்களை வீணாக்க வேண்டாம்னு நினைக்கிறேன் ரஞ்சனி. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு உங்ககிட்ட ஒரு சின்ன வேண்டுகோள் இருக்கு, இனி மஞ்சுவையோ, அகியையோ நீங்க தப்பா ஒரு வார்த்தை என்ன, பார்வை கூட பார்க்கக்கூடாது. அதை என்னால எப்பவுமே தாங்கமுடியாது.” என்றார் ரஞ்சனி மறுத்துப் பேச முடியாத அளவிற்கு தீர்க்கமாக.

“மஞ்சரி அகியைத் தூக்கிட்டு எங்ககிட்ட வந்த நாட்களை என்னால எப்பவுமே மறக்கமுடியாது. ஆரம்பத்துல அப்பா வேனும்னு அகி அடம் பண்ணாலும், ஆரியனோட சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மறக்கப் பழகினா. ஆனா மஞ்சரி? அவளை இப்ப வரைக்குமே அவரோட நினைவுகள்ள இருந்து எங்களால மீட்டெடுக்க முடியல.”

“என் ஹஸ்பண்டோட தம்பி சுபாஷுக்கு மஞ்சரியை ரொம்ப பிடிச்சிருந்தது. அவர் சிங்கப்பூர்ல டாக்டரா இருக்கார். அவளை விரும்பிதான் மேரேஜுக்கு கேட்டார். ஆனா மஞ்சரி முடியவே முடியாதுனு சொல்லிட்டா. அப்படி ஒரு வாழ்க்கை மட்டும் மஞ்சரிக்கு அமைஞ்சிருந்தா இன்னைக்கு இவ்ளோ கஷ்டம் அவளுக்கு வந்திருக்கவே வந்திருக்காது. அகியும் இந்த லைஃப் ஸ்டைல்க்கோ, இந்த ஊருக்கோ வந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. ஏன் ஆகனை அவ பார்த்திருக்கக்கூட மாட்டா.. ஒரு அழகான நிம்மதியான ஒரு வாழ்க்கையை மூனு பேரும் வாழ்ந்திருப்பாங்க.” என்று விஜயா ஆதங்கத்துடன் கூற, அதைக் கேட்ட ரஞ்சனியால் விஜயாவை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை.

“அப்பவே நாங்க எல்லாரும் உருட்டி, மிரட்டி, அகியை அடம் பண்ண வச்சுனு ஏதோ ஒரு வகையில மஞ்சரிக்கு கல்யாணத்தை செஞ்சி வச்சிருக்கலாமோன்னு இப்போ அடிக்கடி தோணுது. என் பொண்ணும், பையனும் இப்படி நிம்மதி இல்லாம ஒரு வாழ்க்கை வாழறதைப் பார்க்கும் போது, ‘ஏன் செய்யாம விட்டனு?’ என் மனசாட்சியே என்னை கேள்வி கேட்குதுங்க ரஞ்சனி..” என்றார் வேதனையாக.

“ஒரு பொண்ணை ஏமாத்தி, அவளுக்கு துரோகம் செஞ்ச, உங்க அண்ணனே ஒரு வாழ்க்கை வாழும் போது, ஏன் மஞ்சரியால முடியலன்னு எனக்கு அவ மேலத்தான் கோபம். அப்படியென்ன கருமம் பிடிச்ச காதல். அது இன்னைக்கு என் பொண்ணோட வாழ்க்கையில எந்தளவுக்கு விளையாடிருக்கு தெரியுமா? கொலை செய்ற அளவுக்கு பழிவெறியை உண்டாக்கியிருக்கு. இது எல்லாத்துக்கும் காரணம் மஞ்சரியோட காதல் தானே.” என்றார் ஆத்திரமாக.

“இப்போ என் பொண்ணோட வாழ்க்கையும், பையனோட வாழ்க்கையும் எங்களுக்கு ரொம்ப முக்கியம். அதுக்காக நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்துருக்கோம்.” என்றார் தீர்மானமாக.

அதுவரை குற்றவுணர்ச்சியில் அமைதியாக இருந்த ரஞ்சனி, விஜயாவின் இந்த பேச்சில் தலையைத் தூக்கி அவரைப் பார்த்தார். 

“அகியோட இந்த கோபமும், வெறியும் குறையனும். அவ ஆகனோட ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழனும். அதுக்கு மஞ்சரி அவளோட வாழ்க்கையை நல்லபடியா வாழனும்.” என்றார் ரஞ்சனியை நேராகப் பார்த்து.

இதைக் கேட்ட ரஞ்சனிக்கு தூக்கி வாரிப்போட்டது. மீண்டும் ரவியோடு சேர்த்து வைத்துவிடுவார்களோ என்று ஒரு நொடி பயந்துதான் போனார். அவர் இனி இதில் தலையிடப் போவதில்லை. ஆனால் அப்படி மட்டும் நடந்தால் மைதிலி சும்மா இருப்பாரா? என பல கேள்விகளும், அது கொடுத்த குழப்பங்களும் சேர விஜயாவைப் பார்க்க, அவர் முகத்தில் நக்கலான ஒரு புன்னகை வந்து போனது.

“நீங்க பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது. அப்புறம் எங்க மஞ்சரியோட வாழ்றதுக்கு ரவிக்கு எந்த தகுதியும் இல்ல. அவளை மாதிரி ஒரு பொண்டாட்டியை வச்சு வாழத் தெரியாத ஆம்பளை கூட சேர்த்து வாழ வைக்க, நாங்க ஒன்னும் முட்டாளுங்களும் இல்ல..” என்றார் ஆத்திரமாக.

‘அப்படியெல்லாம் யோசிக்கவில்லை’ என்று சும்மா கூட பதில் சொல்ல முடியவில்லை ரஞ்சனியால்.

“இப்போ இங்க நடந்த பிரச்சினை எல்லாத்தையும் கேட்ட சுபாஷ், எப்படியாவது மஞ்சரியை சமாதானம் செஞ்சி மேரேஜ் செய்துக்கனும்னு நினைக்கிறார். அகியும் ஆகனும் அதுக்கு முழு சம்மதம் சொல்லிருக்காங்க. இனி மஞ்சு சம்மதிச்சாலும், சம்மதிக்கலனாலும் இந்த கல்யாணம் நடக்கும். அது மட்டும் தான் எல்லாருக்குமே நல்லது. சுபாஷ் அவளைக் கூப்பிட்டு சிங்கப்பூர் போறார். இங்க இருந்தா எல்லாருக்குமே கஷ்டம். அகியும் அப்போதான் ஆகன் கூட ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வா. அதுக்காவாவது மஞ்சரி இந்த கல்யாணதுக்குக்கு சம்மதிப்பான்னு நம்புறேன்..” என விஜயா நீண்ட விளக்கம் கொடுக்க, 

இந்தப் பேச்சில் ரஞ்சனியின் மனம் லேசானது நிஜம்.

“நீங்க எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல. ஆனா இப்படி நடந்தா நான் ரொம்பவே சந்தோசப்படுவேன். எங்களோட தப்புகளை நான் எப்பவுமே நியாயப்படுத்தமாட்டேன். அது மன்னிக்க முடியாத தப்புத்தான். அதெல்லாம் எங்க அம்மா பேச்சைக் கேட்டும், அவங்க மேல இருந்த பொறாமையிலயும் நடந்துக்கிட்டது. இனி அதெல்லாம் யோசிக்ககூட நான் தயாரா இல்லை. நீங்க சொன்ன மாதிரி எனக்கு இனி என் பிள்ளைங்களோட வாழ்க்கைதான் முக்கியம். அவங்களுக்கு இதுதான் சந்தோசம்னா அப்படியே நடக்கட்டும். நான் எந்த வகையிலும் இதுல குறுக்க வரமாட்டேன்..” என்றார் வருத்தமாக.

காலம் கடந்து வந்த ஞானோதயம். அதற்கு பலன் இருக்குமா, இல்லையா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“அப்புறம் ஆரியும், மகியும் அவங்க கூடவே போறாங்க. இனி ஆரியை இங்க விட என்னால முடியாது. அகிக்கும் சீக்கிரம் ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சிடும். கொஞ்ச நாள் எல்லாத்தையும் விட்டு தள்ளியிருக்கட்டும். காலம் அவங்களோட மனக்காயத்தையும் ஆத்தட்டும். அதுக்குப் பிறகு எல்லாமே நல்லதா நடக்கும்னு நம்புவோம்..” என்றார் பொறுமையாக.

பெரியவர்கள் இருவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த மகிழினிக்கு தாயின் மாற்றம் சிறு நம்பிக்கை கொடுத்தது. சீக்கிரம் அவரும் அனைவரையும் ஏற்றுக்கொள்வார் என்ற புரிதலும், நம்பிக்கையும் வந்தது.

அதே நேரம் ரவியின் எதிரில் இருந்தனர் சங்கரும், வினோதும். அவருக்கு ரவியிடம் சில விசயங்களை பேச வேண்டியிருந்தது. அதோடு தன் பிள்ளைகளின் வாழ்க்கையும் இங்கு அந்தரத்தில் தொங்குகிறதே, அதற்கு ஆரம்பப்புள்ளியே அவர்தானே. 

“எங்கிட்ட என்ன சொல்லனும் மாமா?” என்றார் சங்கரைப் பார்த்து.

“மஞ்சரி விசயத்துல நீங்க என்ன முடிவு எடுத்திருக்கீங்க மச்சான்..?” என்றார் அவரும் நேரடியாக.

“இது என்ன பேச்சு மாமா? அவங்க விசயத்துல நான் என்ன முடிவு எடுக்க முடியும்? சொல்லப்போனா அம்மு விசயத்துல கூட எனக்கு எந்த உரிமையும் இல்ல. இதுல அவங்க அம்மா பத்தி நான் என்ன முடிவெடுக்க?” என்றார் கோபமாக.

ரவி இப்படி பேசுவார் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. இருவரும் அதிர்ந்து பார்க்க, ரவியின் முகத்தில் ஒரு விரக்தியான புன்னகை வந்து போனது.

“என்ன மாமா? மேலும் மேலும் என்னை துரோகியாக்கவே முடிவு பண்ணிட்டீங்களா? இவ இல்லைன்னா அவ, அவ இல்லைன்னா இவன்னு முடிவெடுக்குற ஒரு பச்சோந்தினே நினைச்சிட்டீங்களா?” என்றார் வெறுப்பு மண்டியக் குரலில்.

“ஹேய் என்னப்பா நீ.? நான் அப்படியெல்லாம் நிஜமாவே யோசிக்கல. ஆனா மஞ்சரியை இனியும் விடமாட்டன்னு நினைச்சேன்..” என்றார் வருத்தமாக.

“இதைவிட மோசமா அவங்களை யாரும் கேவலப்படுத்திட முடியாது மாமா. எனக்கு அவங்க மேல ரொம்பவே மரியாதை இருக்கு. என்னோட துரோகத்துக்கு அப்புறமும், எவ்வளவோ கஷ்டங்களுக்கு அப்புறமும், என் பொண்ணை ராணி மாதிரி வளர்த்துருக்காங்க.  இதுவே எனக்கு போதும் மாமா. தப்போ, சரியோ… கோபமோ, வெறுப்போ.. என் பொண்ணு என்கூடவே இருப்பாளே.. அதுவே எனக்கு சந்தோசம் மாமா. என் சாவுக்கும் இந்த நிம்மதி எனக்கு போதும். இதுக்கு மேல ஆசைப்பட்டு அவங்க வாழ்க்கையை நரகமாக்க நான் தயாரா இல்லை..” என முடிவாக கூறிவிட, மூவரிடமும் அமைதி.

“அண்ணி எங்க இருக்காங்கனே தெரியல. போலிஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா?” என வினோத் கேட்க,

“வேண்டாம்… அம்முவே சீக்கிரம் விட்டுடுவா.. அதை செஞ்சு மேலும் அம்முவுக்கு கோபம் வந்து, வேற எந்த பிரச்சினைலயும் மாட்டிக்கக்கூடாது. மைதிலியை ஒன்னும் செய்யமாட்டா..” என்றார் அமைதியாக.

“உங்களுக்கு இதுனால எந்த வருத்தமும் இல்லையா?” வினோத்தால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“வருத்தம் இல்லாம இல்ல. ஆனா அதை நான் தானே வேண்டாம்னு தூக்கி எரிஞ்சேன். அப்போ அதோட மதிப்பு எனக்குத் தெரியல. மதிப்பு தெரியும் போது, என்னால அதை எடுத்துக்க முடியல..” என்றார் வருத்தமாக.

“இப்பவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பிருக்கு மாப்பிள்ளை. மஞ்சரிக்கு விருப்பம் இருந்தா, அம்முவால எதுவும் பண்ண முடியாது. நீங்க சரின்னு சொன்னா, நான் ஆகன்கிட்ட பேசுறேன்..” என்றார் சங்கர்.

“இல்ல மாமா.. என்னோட இந்த முடிவுல எந்த மாற்றமும் இல்ல. மஞ்சரி என்னோட கடந்த காலம் மட்டும்தான். மைதிலிதான் நிஜம். நிதர்சனமும் கூட. என்னோட சுயநலத்துக்காக, மஞ்சரிக்கு ஒரு தர்மசங்கடத்தைக் கொடுக்க  எனக்கு விருப்பமில்ல. எனக்கு எந்த வருத்தமும், கோபமும் இல்ல. இந்த பேச்சை இப்பவே, இப்படியே விட்டுடுங்க..” என்றார் ரவி ஒரு வருத்தப் புன்னகையுடன்.

அதன் பிறகே வினோத்திற்கும், சங்கருக்கும் நிம்மதியான மூச்சு வந்தது. ஆகன் தான் அவர்களிடம் சுபாஷைப் பற்றிக் கூறி, ரவியின் மனதில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ள பேச சொல்லியிருந்தான்.

அவர் முடிவு தெரிந்ததில், இனி ரவியால் சுபாஷிற்கு எந்த பிரச்சினையும் வராது என்று நிம்மதி கொண்டனர் இருவரும்.

ஆனால் இப்போது மஞ்சரியை சம்மதிக்க வைக்க வேண்டுமே, அதற்கு ஒரே வழி ரவி மட்டும்தான். 

அதனால் சங்கர் “அப்படின்னா நீங்க ஒரு உதவி செய்யனும் மாப்பிள்ளை. இது எங்களுக்கு இல்ல. உங்க பொண்ணுக்காக. உங்க பொண்ணொட நிம்மதிக்காக சந்தோசத்துக்காக..” என நிறுத்த, அவர்களை கேள்வியாக பார்த்தார் ரவி.

அவரின் பார்வையை உணர்ந்து, ஒரு பெருமூச்சை விட்டவர், தன் மனதை திடப்படுத்திக்கொண்டு ஆகன் கூறியதைக் கூற, ரவிக்கு இதயம் சுக்கு நூறாக நொறுங்கிப் போனது.

இங்கு ஆகனின் அறையில், அவன் அனைப்பில் இருந்த அகானாவோ, “அம்மா கண்டிப்பா சம்மதிக்கமாட்டாங்க சீனியர்.. எனக்கு அவங்களை தெரியும்..” என்றாள் மெல்ல,

“சம்மதிக்காம எங்க போகப் போறாங்க.. கண்டிப்பா சம்மதிப்பாங்க.. சுபாஷ் அங்கிள் கூட ஈரோப் டூருக்கும் போவாங்க..” என சிரிக்க, அகானாவின் விழிகள் ‘நிஜமாவா?’ என்ற பார்வையைக் கொடுக்க, ‘நிஜமாதான்’ என்ற பார்வையோடு அந்த விழிகளில் மெல்ல முத்தமிட்டான் ஆகன்.

You may also like

Leave a Comment

About Me

Featured