Home PREMIUM NOVELSஅ.. ஆ.. – 67

அ.. ஆ.. – 67

by Vathani S

அகானா – 67 

மூவரில் யாரை பார்ப்பது என்ற புரியாத நிலை ஆரியனுக்கு. செய்தி கேட்ட நொடி வினோத்தும் நித்யாவும் மருத்துவமனைக்கு வந்து விட்டிருந்தார்கள். அவர்களால் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த அகானாவை பார்க்கவே முடியவில்லை.

இன்னும் எத்தனை கஷ்டத்தைதான் அவள் வாழ்க்கையில் பார்க்க வேண்டும்.

ஒரு நாள்.. அத்தி பூத்தார் போல ஒரு நாள், ஒரே ஒரு நாள் அவள் வாழ்க்கையில் ஒளி வீசியது. அது கூட பொறுக்கவில்லையே கடவுளுக்கு.. 

முடியவே இல்லை… நித்யாவால் கடவுளை நிந்திக்காமல் இருக்கவே முடியவில்லை.

காலையில் மஞ்சரி பேசும் போது “நான் கூட ரொம்ப பயந்து போயிட்டேன் நித்யா. எங்க வாழ்க்கையைப் பார்த்து, பழி வாங்குறேன்னு கண்ணா கூட வாழாம கஷ்டப்படுவாளோன்னு ரொம்பவே கலங்கி போயிருந்தேன் நித்யா.. ஆனா காலையில அவங்க ரெண்டு பேரோட முகத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கு நிம்மதியா இருக்கு. என் பொண்ணு முகத்துல இந்த சந்தோசத்தை பார்க்க எனக்கு எவ்ளோ நிம்மதியாவும், சந்தோசமாவும் இருக்கு தெரியுமா?” என்று அவ்வளவு மகிழ்வில் அவளிடம் பகிர்ந்திருந்தார்.

அந்த மகிழ்வும் நிம்மதியும் ஒரு நாள் கூட மஞ்சரிக்கு நிலைக்கவில்லையே..

தன் அழுகையை அடக்கி, ஒவ்வொரு முறையும் தொண்டைக்குழி ஏறி இறங்கும் போதும் பெருமூச்சை விட்டுத் தன் அழுகையை அடக்கும் அகானாவை பார்க்கும் போது, நித்யாவின் இதயமே வெடித்து சிதறியது.

தன் துக்கத்தையும், அழுகையையும் கூட பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் அவள் தவிக்கும் தவிப்பு, இரு பிள்ளைகளின் தாயான நித்யாவிற்கு தாங்கவே முடியவில்லை. 

அகானா இடத்தில் தன் மகள் ஹரினி இருந்தால், அடுத்த நொடி யோசிக்கவே இல்லை நித்யா.

வேகமாக அவளிடம் சென்று “அம்மு..” என அகானாவின் தோளில் கை வைக்க, “ம்ம் அம்மா இப்படி என்னை தனியா எல்லாம் விட்டுட்டு போகமாட்டாங்க.. அதுவும் இவங்ககிட்ட கண்டிப்பா விட்டுட்டு போகமாட்டாங்க். அவங்களுக்கு தெரியும், நான் தன்.. தனியா இருக்கமாட்டேன்னு அவங்களுக்குத் தெரியும்.. ஆ.. ஆக.. ஆகனும் அப்படித்தான். அவனும் என்னை விட்டுட்டு போகமாட்டான். எனக்கு அவனை எவ்ளோ பிடிக்கும்னு, என்னை விட அவனுக்குத்தான்  தெரியும். என்னை விட்.. விட்டு.. விட்டுட்டு போகமாட்டான்..” என தைரியமாக பேச ஆரம்பித்து கதறலில் முடித்தவள் நித்யாவின் இடையைக் கட்டிக்கொள்ள, வினோத்திற்கு அவள் அழுகையை பார்க்கவே முடியவில்லை.

“அம்மு.. என்னடா இது.. நீ நீதான் இப்ப தைரியமா இருக்கனும். ரெண்டு பேரும் உன்னை விட்டுட்டு எல்லாம் போக மாட்டாங்க. நீ சொன்னது எல்லாம் அவங்களுக்கும் தெரியுமே.. உனக்காக கண்டிப்பா வந்துடுவாங்க.. நீ அழாத அம்மு.. தைரியமா இருடா..” என்ற நித்யாவின் அழுகையும் அந்த இடத்தை நிறைத்தது தான். 

இருவரின் அழுகையையும் பார்த்து வினோத்திற்கும் விழிகள் நிறைந்துதான் போனது.

தன் கைகளின் தூக்கி வளர்க்காத, அவளின் எந்த ஒரு வளர்ச்சியையும் கூட இருந்து பார்த்திடாத, தன் அண்ணன் மகளை முதல் முதலாக பரிசித்தார் வினோத்.

நித்யாவின் பிடியில் இருந்த அகானாவின் தலையை வருடியபடியே, “கண்ணாவுக்கு, எங்க எல்லாரையும் விட நீதான் ரொம்ப முக்கியம். உனக்காக.. உனக்காக மட்டுமே திரும்பி வருவான் அம்மு.. அப்புறம் அண்.. அண்ணி” எனும் போதே வினோத்தின் வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் ஏறி இறங்கியது.

“அவங்களுக்கும் தெரியுமில்ல.. அவங்க இல்லைன்னா நீ எவ்ளோ கஷ்டப்படுவன்னு.. அதனால அவங்களும் கண்டிப்பா வருவாங்க. நீ இப்படி இருந்தா அவங்க ரெண்டு பேருக்கும் பிடிக்குமா சொல்லு.. நீ நிமிர்வா தைரியமா இருக்கிறதைத்தான ரெண்டு பேருமே விரும்புவாங்க… ஹ்ம்ம்..” என கரகரத்த குரலில் பேச, அகானவோ வினோத்தின் குரலில் மேலும் மேலும் உடைந்தாள்.

“ஏன் எங்களை அப்படி துரத்துனீங்க..? அப்படி என்ன பாவம் பண்ணிட்டாங்க என் அம்மா.. ஏன் இப்படி செஞ்சீங்க? எங்கம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா? அவங்க கஷ்டப்பட்டது போதும், இதுக்கு பிறகும் கஷ்டப்படக்கூடாது, சந்தோசமா நிம்மதியா அவங்களை வச்சிக்கனும்னு நினைச்சுத்தான் இங்க கூப்பிட்டு வந்தேன். ஆனா அதை நான் செஞ்சிருக்கக்கூடாது. அவங்களுக்கு இங்க பிடிக்கல, எனக்காகத்தான் வந்தாங்க. அவங்களை நான் சரியா பார்த்துக்கல. நான் என்ன பொண்ணு அவங்களுக்கு..? நான் சரியான பொண்ணு இல்ல.. என் அம்மாவை நான் தான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..” என நித்யாவின் வயிற்றைக் கட்டிக் கொண்டு வினோத்திடம் கேள்வி கேட்க, வினோத்தால் இதற்கு பதில் சொல்லவே முடியவில்லை. அதற்காக அவளை விட்டு ஒதுங்கவும் இல்லை. தன் வருடலை நிறுத்தவும் இல்லை.

அவர்கள் மருத்துவமனை வந்து அவசரமாக ஐசியு விற்குள் செல்லும் போது ஆரியனை பார்த்தது.. அதன் பிறகு இப்போது வரை பார்க்கவில்லை.

மூவருக்குள்ளும் பதட்டம் கூடிக் கொண்டே போனது. அப்போது ஒரு செவிலியர் வேகமாக வெளியில் வந்து அகானாவைப் பார்த்து “மேம்.. உங்களை டாக்டர் சீக்கிரம் உள்ள வரச் சொன்னார்..” என பரபரப்பாக அழைக்க, அகானாவும் தன் முகத்தைத் துடைத்து, தன் அழுகையை அடக்கி வேகமாக அந்த ஐசியு விற்குள் நுழைந்தாள். 

அகானாவைப் பார்த்ததுமே “அகி.. கம் எங்களோட ஜாயின் பண்ணு..” என தங்களின் சிகிச்சையில் சேர்த்துக் கொண்டான் ஆரியன்.

அகானாவும் சற்றும் யோசிக்கவில்லை. பிராக்டிஸ் செய்து சில மாதங்களே ஆகிவிட்டது தான். ஆனாலும் தெரிந்த அளவில் அவர்களோடு சேர்ந்துவிட்டாள்.

வெளியில் இருந்து, உள்ளே நடக்கும் எதையும் தெரிந்து கொள்ளாமல், கண்டதையும் நினைத்து பயந்து கொண்டிருப்பாள் என்று நினத்து பயந்த ஆரி, இங்கு அழைத்துக் கொண்டால் நடப்பதைக் கவனித்து தன்னை தேற்றிக் கொள்வதோடு, சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்வாள் என்று முடிவு செய்துதான் உள்ளே அழைத்தான்..

அது அகானாவின் விசயத்தில் நன்றாகவே வேலை செய்தது.

தலையில் அடிபட்டு மயக்கத்தில் இருந்த மகிழினிக்கு ஒருபக்கம் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சங்கர் தான் மகளோடு அங்கு இருந்தார்.

மஞ்சரியை ஆம்புலன்சில் ஏற்றும் வரை தன் வலியை பொறுத்துக் கொண்டிருந்த ஆகன், அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்த அடுத்த நொடி சுருண்டு விழுந்து, இப்போது வரைக்கும் கண் விழிக்கவில்லை. 

அவனுக்கான சிகிச்சைகள் தான் மிகத் தீவிரமாக போய் கொண்டிருந்தது.

மஞ்சரிக்கோ இடது காலில் எலும்பு முறிவு, வலது கையில் தீப்புண், தலையில் பலத்த காயம் என அவரின் நிலை அதற்கும் மேல்..

ஆகனும் மஞ்சரியும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தனர். மஞ்சரிக்கு எலும்பு முறிவுக்கு சர்ஜரி செய்ய வேண்டும் என அதற்கான வேலைகளும் ஓடிக் கொண்டிருந்தது. 

செய்தி கேள்விப்பட்டு மைதிலியொடு பதறியடித்துக் கொண்டு வந்தார்  ரஞ்சனி.

அங்கு அவர் பார்த்தது அப்போதுதான் ஐசியுவில் இருந்து வெளியில் வந்த அகானாவைத்தான்.

அவளின் மருத்துவ உடையைப் பார்த்ததுமே எங்கிருந்துதான் அத்தனை அகங்காரம் வந்ததோ, வந்த வேகத்தில் அகானாவை ஓங்கி அறைந்திருந்தார்.

நொடியில் நடந்த நிகழ்வை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

“ஏய்..” என வினோத் ரஞ்சனியை தள்ளிவிட்டு அதிர்ந்து நின்ற அகானாவை தனக்கு பின்னே இழுத்திருந்தார்.

“ஆத்தாளும் மகளும் சேர்ந்து என் குடும்பத்தை நாசம் பண்ணிட்டீங்கல்லடி.. நான் தான் அன்னைக்கே தலப்பாடா அடிச்சிக்கிட்டேனே, அவ கூட வாழ முடியாது, வாழ்ந்தா குடும்பமே நாசமா போயிடும்னு கேட்டானா? இதோ இப்படி நான் பெத்த ரெண்டு புள்ளங்களையும் ஆஸ்பத்திரில கொண்டு வந்து படுக்க வச்சிட்டாளே.. பெத்தவன ஜெயிலுக்கு அனுப்பிட்ட. பெத்தவளையும், கட்டினவனையும் ஆஸ்பத்திரில படுக்க வச்சிட்ட.. இன்னும் என்னடி வேணும் உனக்கு.. என்னைக்கு இந்த ஊருக்கு வந்தியோ, அன்னைக்கே என் குடும்பத்துக்கு சாபம் வந்துடுச்சுடி, நீ தொலைஞ்சாதான் எனக்கும் என் குடும்பத்துக்கும் நிம்மதி..” என அது மருத்துவமனை, அத்தனை பேரும் தங்களை பார்க்கிறார்கள் என்று கூட கவனிக்காமல், வார்த்தை எனும் திராவகத்தை அகானாவின் மேல் கொட்டித் தீர்க்கவும், சங்கர் அவரை ஓங்கி அறையவும் சரியாக இருந்தது.

அதே நேரம் “செகியூரிடி..” என்ற ஆரியனின் குரல் அந்த இடத்தையே அதிர வைத்தது.

அதில் அரண்டு போய் ஓடி வந்த மனிதரிடம் “ரெண்டு நிமிசம் தான் உனக்கு  டைம். இவங்க இந்த ஹாஸ்பிடல் வளாகத்தை விட்டு வெளிய போயிருக்கனும்..” என கட்டளையாக கூறிவிட்டு, அதிர்வில் இருந்த அகானாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

“ஏய்.. யாரு ஆஸ்பத்திரில வந்து யாரை வெளிய போக சொல்ற..  தெருவுல போறது தூக்கிட்டு வந்து வீட்டுக்குள்ள விட்டது எங்க தப்புதான். முதல்ல அந்த பொம்பளையை தூக்கிட்டு இந்த ஆசுபத்திரில இருந்து வெளியே போடா.. என் புள்ளைங்களை எப்படி காப்பாத்தனும்னு எனக்குத் தெரியும்..” என கணவனின் பிடியில் இருந்து மீண்டும் ஆங்காரமாக கத்த, சங்கர் அவரை அப்படியே வினோத்தின் பக்கம் தள்ளி விட்டார்.

“வினோ.. நான் அன்னைக்கு சொன்னேன்ல, உன் அக்கா எப்பவும் திருந்தமாட்டா.. அவ கூட எல்லாம் மனுசன் வாழ முடியாதுனு.. ரெண்டு பிள்ளைங்களும் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க. ஆனா இவ சொல்றவங்க பேச்சைக் கேட்டுட்டு எப்படி வந்து ஆடிட்டு இருக்கா பார்த்தியா.. மாப்பிள்ளை சொன்னது தான், நானும் சொல்றேன். இவ இனிமே இங்க இருக்கக்கூடாது. என் பிள்ளைங்களை எப்படி பார்க்கனுமோ நான் பார்த்துக்கிறேன். முதல்ல இவளை இங்க இருந்து அனுப்பு..” என கண்டிப்புடன் கூறிவிட்டு அவரும் செல்ல,

“என்ன நினைச்சிட்டு இருக்காங்க எல்லாரும்..” என மீண்டும் பேச வந்த ரஞ்சனியை, “நானும் உன்னை அடிக்கிற மாதிரி வச்சிக்காத..” என அதட்டலிட்ட வினோத் அவரை இழுத்துக்கொண்டு சென்றார். 

பக்கத்தில் இருந்த அறைக்குள்ளே விட்டு பூட்டியவர் “நானா திறக்கிற வரைக்கும் உள்ளேயே கிடந்து கத்திட்டு சாவு, இப்போக்கூட உனக்கு உன் புள்ளைங்க முக்கியமில்லல்ல, கிடைக்கிற சமயமெல்லாம் அம்முவையும், அவங்க அம்மாவையும் உனக்கு குற்றம் சொல்லனும் அப்படித்தான.. நீயெல்லாம் உன் புள்ளைங்களுக்கு மட்டும் இல்ல யாருக்குமே நல்லவ கிடையாது ச்சே..” என கத்திவிட்டு ஆகன் இருக்குமிடம் செல்ல, மைதிலியின் முகத்தில் திருப்தியான புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

‘என் பணத்தை வச்சு எல்லாம் பெரியாளாகிட்டு, இன்னைக்கு என்னையவே யாரோ மாதிரி நடத்துவீங்களா? உங்க குடும்பமே தேவைக்கு யூஸ் பண்ணிட்டு தூக்கி எறியிற ஆளுங்கதானே.. ஆனா அதை எங்கிட்டயே காட்ட நினைச்சா விட்டுடுவேனா? ஹான் நான் என்ன அந்த உம்மனாமூஞ்சி மஞ்சரியா? ‘ஓ’ன்னு ஒப்பாரி வச்சி அழறதுக்கு, இந்த மைதிலியை ஒதுக்கினா, என்ன நடக்கும்னு உங்க குடும்பத்துக்கு தெரிய வேண்டாம்..’ என மனதுக்குள்ளே பேசி சிரித்துக் கொண்டவரின் பார்வை அங்கு பதட்டமாக அமர்ந்திருந்த நித்யாவின் மேல் விழுந்தது.

‘ஹான் அடுத்த அடி உனக்குத்தான்..’ என மீண்டும் மனதுக்குள் சிரித்தபடி தன் மொபலை எடுத்து ஒரு எண்ணுக்கு அழைத்தார்.

இங்கு ஆகனைப் பார்க்கலாமா? என அந்த அறையின் கண்ணாடி வழியே வினோத் எட்டிப்பார்க்க, ஆகனின் கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் அகானா.   

உயிரெழுத்துக்களில் அ, ஆ எவ்வளவு முக்கியமோ, அப்படித்தான் மஞ்சரியின் வாழ்க்கையில் இந்த அகானாவும், ஆகனும் மிக முக்கியம். 

You may also like

2 comments

sailajaasundhar January 27, 2026 - 4:58 pm

Omg..

Reply
C.R. Vakulavallika January 27, 2026 - 8:38 pm

அதுவென்னவோ உண்மை தான், உயிரெழுத்துக்களில்
அ ஆ ரெண்டும் ரொம்ப முக்கியமான எழுத்துக்கள் தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to C.R. Vakulavallika Cancel Reply

About Me

Featured