Home Love - Family - Romanceஉனக்கெனப் பிறந்தவள் நானே – 30. (End)

உனக்கெனப் பிறந்தவள் நானே – 30. (End)

by infaalocious

பகுதி – 30.

அவர்கள் தங்கள் உலகில் லயித்திருக்க, அதே நேரம் “முகில்… சுமி…” சுதாவின் குரல் கீழே இருந்து கேட்க, பரபரப்பானார்கள். அவன் அவளை விட்டு விலகி எழுந்தவன், அவசர அவசரமாக அவளை வேக முத்தமிட்டு, தன்னை சரி செய்துகொண்டான்.

“நான் கீழே போறேன், நீ… வா…” அவளை கைகொடுத்து எழுப்பி அமர வைத்துவிட்டு அங்கிருந்து விரைந்தான். அதற்குப் பிறகு அன்று இரவும் சரி, மறுநாள் காலையிலும் சரி… அவளை அவன் கொள்ளையிட, அவனுக்கு சந்தோஷமாகவே இசைந்தாள்.

மறுநாள் குழலியின் குழந்தைக்கு பெயர்சூட்டி மகிழ, மூன்றாம் மாத இறுதியில் அவள் தன் கணவன் வீட்டுக்குச் சென்றாள். அந்த நேரம் சுமித்ரா இரண்டரை மாத கருவை வயிற்றில் சுமந்து இருந்தாள்.

தன் மகளை விட ஒரு படி மேலாக சுதா அவளை கவனித்துக் கொள்ள, கார்முகிலை சொல்லவும் வேண்டுமா? வாரத்தில் இரண்டு நாள் அவளைப் பெற்றவர்களின் வீட்டிலும், வாரத்தில் ஐந்து நாள் தன் வீட்டிலும் அவளை வைத்து சீராட்டினான்.

அவன் தன் மகளுடனே இருப்பதைப் பார்த்த அனிதாவுக்கும், செல்வத்துக்கும் அத்தனை நிம்மதி. மகளை வேறு யாருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தாலும் அவளை அவன் இந்த அளவுக்குப் பார்த்திருப்பானா என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

சுமித்ரா இல்லாமல் அவனால் முடியாது. அவன் இல்லாமல் சுமித்ராவுக்கும் முடியாது என்னும் நிலையே. நாட்கள் மாதங்களைக் கடந்து, ஒன்பதாம் மாத இறுதியில் சுமித்ரா ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

அந்த இரவில் அவளுடன் தான் மட்டுமே இருப்பேன் என அவன் அடம் பிடிக்க, சுதா மகனைக் கடிந்து கொண்டார். “குழந்தையை தனியா நீ மட்டும் எப்படி சமாளிப்ப? அதுவும் அவளையும் பார்த்துக்கணும், அவளுக்கு ரெஸ்டும் கொடுக்கணும். நானும், அனிதாவும் இருக்கறோம்” என அவர் சொல்ல, அவனோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான்.

அவன் அப்படி இருப்பதைப் பார்க்க முடியாத சுமித்ரா, “அத்த… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தானே, அவங்க இருக்கட்டும்…” அவள் சொல்ல, அவன் முகம் ஒளிர்ந்தது. அந்த நேரம் சுபிதாவுக்கு குழந்தை பிறந்த பொழுது தான் செய்த ஆர்ப்பாட்டம் நினைவுக்கு வந்து அவளுக்கு சிரிப்பை வர வைத்தது.

சுகப்பிரசவம் என்பதால், மறுநாள் மாலையில் வீட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லி இருந்தார்கள். சுமித்ரா சொன்ன பிறகு யாரும் மறுப்பார்களா என்ன? அனிதாவுக்குமே வருத்தம்தான் என்றாலும், கார்முகிலைப் பற்றி முழுதாக தெரியும் என்பதால் சென்றுவிட்டார்.

செல்லும் முன்னர் மகளிடம் ரகசியமாக ஒரு விஷயத்தை சொல்லிவிட்டே சென்றார். “உன் புருஷன் இருக்கற வேகத்துக்கு அடுத்த பத்தாம் மாசமே நீ இன்னொரு பிள்ளையை பெத்துடப் போற, கொஞ்சம் கவனம்…” மகளிடம் சொல்லிச் செல்ல, சுமித்ராவுக்கு தாயை ஏறிட்டுப் பார்க்கவே முடியவில்லை.

ஏழாம் மாதமே வளைகாப்பு முடித்து அவளைப் பெற்றவளின் வீட்டுக்கு அனுப்பி விட்டாலும், கார்முகில் அவளுடனே இருந்தான். வாரத்தில் ஒரு நாள் பெற்றவர்கள் வீட்டில் தங்குவான்… மீதி நாட்கள் எல்லாம் அவளுடன் தான் இருந்தான். மகளது முகத்தில் இருக்கும் பூரிப்பு, வாட்டம்… சந்தோசம் எனக் காண்கையில் அவர்கள் வாழ்க்கை பெற்றவளுக்குத் தெரியாதா என்ன?

“ம்மா…” அவள் சிணுங்கினாள்.

“இதை நான் அவர்கிட்டே சொல்ல முடியாது. ஆம்பளைங்க கொஞ்சம் அப்படித்தான் இருப்பாங்க. நீ பக்குவமா சொல்லி புரிய வை” தாய் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அதைக் கவனித்த அவனும் என்னவென அவளிடம் கேட்க, அவள் என்ன சொல்வாளாம்?

அன்று இரவிலேயே அவன் சின்னதாக அவளிடம் அடாவடிகாட்டி சாதித்துக் கொள்ள, சுமித்ராவுக்கு உள்ளுக்குள் சிறு கலவரம் தான். மறு நாளே குழந்தையோடு சுமித்ரா தாயின் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

அங்கே அனிதா தன் மகளைத் தன் அறையில் வைத்துக் கொண்டார். அது எதனால் என சுமித்ராவுக்குப் புரிய, தன் கணவனின் அடாவடியை எண்ணி, தலையிலேயே அடித்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது.

“ஏலியன்… என்ன இது? எதுக்கு இங்கே?” அவன் முகத்தைச் சுருக்க, அவனைப் பார்த்து சிரித்தாள். நிஜத்தில் அவள் கொஞ்சம் அழுத்திச் சொல்லி அவனை விலகி இருக்கச் சொன்னால் அவனே செய்வான். ஆனால் அதைச் செய்ய சுமித்ராவுக்கே விருப்பம் இல்லை என்கையில் யார் என்ன செய்ய முடியும்?

குழந்தைக்கு ஏழாம் மாதம் துவங்கிய பிறகே அவளை கார்முகிலின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்பொழுதும் அனிதா நிறைய பத்திரம் சொல்லியே அனுப்பினார். அங்கே வந்த அன்றைக்கே கார்முகில் அவளை நாடி, கொண்டாடித் தீர்க்க, அவளுக்கும் அவன் தேவையாக இருந்தான்.

பல மாதப் பிரிவை அவர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். ஆனால் அனிதா பயந்தது போலத்தான் விஷயம் நடந்தேறியது. அவர்களது மகனுக்கு ஒன்பதாம் மாதம் நடக்கையில், சுமித்ரா மீண்டும் கருவுற்று இருந்தாள்.

இதை எப்படி பெரியவர்களிடம் சொல்வது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. விஷயம் கேள்விப்பட்ட சுதாவுக்கு தன் மகன்மேல் அப்படி ஒரு கோபம் வந்தது. மகனை சகட்டு மேனிக்கு அவர் சாடிவிட, சுமித்ரா விஷயத்தை தன் தாயிடம் சொல்லவே பயந்தாள்.

வேறு வழியின்றி சுதாதான் அனிதாவிடம் சொன்னார். உடனே அனிதா மகளைத் தேடி வர, தாயின் முகம் பார்க்கவே பயந்தாள். “என்னம்மா இது? அம்மா சொல்லியும்… சரி விடு… ஏதாவது கஷ்டமா இருக்கா?” தாய் கேட்க, அவள் தாயின் மடியில் படுத்துவிட்டாள்.

“சாரிம்மா…” அவள் மன்னிப்பை வேண்ட, மகளின் தலை கோதினார்.

“ச்சே… ச்சே… எதுக்கும்மா சாரி எல்லாம் சொல்ற? முதல் குழந்தைக்கு ஒரு வயசு கூட ஆகலை. உனக்கும் உடம்பில் இந்த குழந்தையைத் தாங்க தெம்பு வேணும்… குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கணும்… இப்படி நிறைய இருக்கே. அதனால்தான் அம்மா சொன்னேன்” ஒன்று நடக்கும் முன்னர் யோசிக்கலாம். நடந்து முடிந்த பிறகு என்ன செய்ய முடியும்?

“எனக்கு இந்தக் குழந்தை வேணும்மா… என்னால் என் குழந்தையை” என்றவள் அழுதுவிட்டாள்.

சுதா இந்த குழந்தை வேண்டுமா? அவளால் முடியுமா? அவளுக்கு கஷ்டம் ஆச்சே என்ற விதத்தில் மகனிடம் பேசி இருக்க பயந்து போனாள்.

“ஷ்… இப்போ நீ மனசைப் போட்டு குழப்பிக்காதே. டாக்டர் கிட்டே பேசுவோம்” மகளுக்கு ஆறுதல் சொன்னார். அனிதா பேசியதை கார்முகிலும் கேட்கவே செய்தான். அவர் சொன்னதில் இருந்த உண்மைகள் அவன் நெஞ்சை சுட்டது.

தாய் வேறு என்னென்னவோ சொல்லி பயம் காட்ட பயந்து போனான். அனிதா வெளியே வர, அவனால் அவர் முகம் காண முடியவில்லை. செல்வம் மனைவியிடம் கண் காட்டவே, “என்ன மாப்ள, எதுக்காக இப்படி இருக்கீங்க? ரெண்டாவது முறையா அப்பா ஆகப் போற சந்தோஷத்தையே உங்க முகத்தில் காணோமே” அனிதா பேச, அப்பொழுதுதான் கொஞ்சம் தெளிந்தான்.

அவர்கள் செல்லவே, விஷயத்தைக் கேள்விப்பட்டு அங்கே வந்த அதியன் நண்பனை ஓட்டித் தள்ளிவிட்டான். அதில்தான் அத்தனை நேரமாக சுணங்கிக் கிடந்த அவன் முகமே சற்று தெளிந்தது. கார்முகில் தன் பயத்தை எல்லாம் நண்பனிடம் சொல்ல அவன் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

“அட… முன்ன காலத்தில் எல்லாம் பத்து மாசத்துக்கு ஒன்று என்று பத்து பிள்ளைகளுக்கு மேலே பெத்துப்பாங்களாம். நீ என்னன்னா ரெண்டாவதுக்கு இப்படி பயந்துக்கற? ஆனாலும்… மாப்ள…” என்றவன் கட்டித் தழுவிக் கொண்டு கண்ணடிக்க, கார்முகிலுக்கு அத்தனை வெட்கம்.

சுமித்ராவுக்கு அறைக்கு வெளியே வந்து சுதாவை நேரடியாக சந்திக்கும் தைரியம் இருக்கவே இல்லை. ஆனால் சுதாவிடம் இருந்த அவளது மகனுக்கு தாயைக் காணாமல் இருக்க முடியுமா என்ன?

அவள் மகன் ‘நிலவன்’ பசிக்கு அழ, சுதாவே அவனைத் தூக்கிக் கொண்டு மருமகளைக் காண வந்தார். “அத்த…” என்றவாறே அவள் படுக்கையில் இருந்து எழுந்து நிற்க, அவள் கண்களில் சங்கடத்தைக் காணவே அவரால் தாள முடியவில்லை.

“அம்மாடி… எதுக்கு இப்போ இப்படி இருக்க? நம்ம வீட்டுக்கு அடுத்த வாரிசு வருதுன்னா எங்களுக்கு மட்டும் சந்தோசம் இருக்காதா என்ன? ஆனாலும் உன் உடல்நிலையின்மேலே அக்கறை வச்சுதான்ம்மா கொஞ்சம் தயக்கமா இருக்கு” என்றவர் அவளை கன்னம் கிள்ளி முத்தம் வைத்தார்.

“இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு வேணும், ஒரு பேரப் பிள்ளையையாவது நாங்க கொஞ்சணும்னு தவம் இருந்தவங்க நாங்க. அப்படி இருக்கும்போது அடுத்தடுத்த சந்தோஷம்ன்னா எங்களுக்கு கசக்குமா? நீ இரு, நான் அவனை அனுப்பறேன்” என்றவாறு அழுத நிலவனை அவள் கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

அவர் செல்லவே உள்ளே வந்தான் கார்முகில். குழந்தை அவள் மடியில் பசியாறிக் கொண்டிருக்க, மனைவியின் அருகே வந்தவன் அவளை இறுக்கமாக, மிகவும் இறுக்கமாக கட்டிக் கொண்டான்.

“சாரி ஏலியன்…” அவன் சொல்ல, “தேங்க்ஸ் டா ஏலியன் புருஷா?” அவன் சட்டைக் காலரைப் பற்றி அருகே இழுத்தவாறு அவன் இதழ்களில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

அதை ஏகமாக ரசித்தவாறே, “தாய்ப்பால் கொடுக்கும்போது கர்ப்பமாக மாட்டாங்கன்னு இந்த கூகிள் சொன்னதை நம்பி… ம்ச்…” அவன் ஒரு மாதிரி கலக்கமாக, சங்கடமாக இழுக்க, அவளோ மெல்லியதாக சிரித்து வைத்தாள்.

அவள் சிரிக்கவே, அவன் இன்னுமே ஒரு மாதிரி நெளிய, அவன் வெட்கம் கண்டு இன்னும் சிரித்தாள். “கூகிள் வேறன்னு சொல்லி இருந்தா மட்டும்?” அவள் மெல்லிய குரலில் சொல்லி சீண்ட, அவனோ ஒரு மாதிரி சிணுங்கல் முகபாவத்தைக் காட்டினான்.

“ஏலியன்… எனக்கு பயமா இருக்கு… அவங்க எல்லாமே…” அவன் சொல்லத் துவங்கவே, அவன் இதழில் கை வைத்து அவன் பேச்சை நிறுத்தினாள்.

“எனக்கு நம்ம குழந்தை வேணும்…” அவள் முடித்துவிட, அவன் மறுப்பானா என்ன?

“உனக்கு கஷ்டமா எதுவும் இல்லையே… நாம இன்னைக்கே ஹாஸ்பிடல் போய் டாக்டரைப் பார்க்கணும்” அவள் மீதான அக்கறை மட்டுமே அவனிடம் மிளிர்ந்தது.

“ஏன் என்னை நீங்க பார்த்துக்க மாட்டீங்களா?” அவனைச் சீண்டினாள்.

“நான் உன்னைப் பார்த்துப்பேன்… ஆனா குழந்தையை நீதான் சுமந்தாகணும், பெத்தாகணும்… மசக்கை, வாந்தி… கால் வீக்கம் எல்லாம்…” என்றவாறே அவள் பின்னால் சென்று அமர்ந்தவன், அவளைக் குழந்தையோடு சேர்த்து மொத்தமாக அணைத்துக் கொண்டான்.

வாகாக அவன்மேல் சாய்ந்து கொண்டவள், அவன் முகம் பார்த்தாள். அவளையே தானும் பார்த்தவன், “அத்தை முன்னமே எதுவும் சொன்னாங்களா? நீ ஏன் என்கிட்டே சொல்லவே இல்லை” அவளிடம் கேட்டான்.

“என் பின்னாடியே நாய்க்குட்டி மாதிரி சுத்தினால் என்ன ஆகும்னு அவங்களுக்குத் தெரியாதா? அம்மா ரூம்னு கூட பார்க்காமல், வந்த வேகத்தில் கண்ணா பின்னான்னு முத்தம் கொடுத்தால்… ஒட்டிகிட்டே இருந்தா…” அவள் அவனைச் சீண்டினாள்.

“போ… நான் உன் கிட்டேயே வர மாட்டேன்” அவன் முறுக்கிக் கொள்ள, ‘அப்படியா?’ என்னும் பார்வையை அவள் கொடுத்தாள். இதழ்களிலோ அடக்க முயன்ற ஒரு புன்னகை.

“நீயாவது என்னை கன்ட்ரோல் பண்ணி இருக்கலாம் தானே” என்றான்.

“ஃபுல் கன்ட்ரோலும் என்கிட்டே தானே இருக்கு” அவள் கண்ணடிக்க, அவள் இதழ்களை சிறை செய்திருந்தான். அத்தனை அழுத்தமாக அவள் இதழ்களுக்குள் அவன் மூழ்க, அவனோடு தானும் இசைந்தாள்.

அவன் அவளை விட்டு விலகவே, “தியரி மட்டும் இல்லை… ப்ராக்டிகல் க்ளாஸ் கூட பிரம்மாதமா எடுக்கறது நீங்களா? நானா?” அவள் புருவம் உயர்த்த, அவள் முதுகின் பின்னால் தன்னை மறைத்தான்.

பிறகு மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவரின் ஆலோசனையை வாங்கிவிட்டு திரும்ப வந்தார்கள். நிலவனை முழுதாக சுதாவும், அனிதாவும் பார்த்துக் கொண்டார்கள். அவளை கார்முகில் கவனித்துக் கொண்டான்.

பெரியவர்களின் வழிகாட்டுதல், கவனிப்பு எல்லாம் சேர மிளிர்ந்த மனைவியை அவன் தனிப்பட்ட விதத்தில் கொண்டாடாமல் போனால்தான் ஆச்சரியம். “மூணாவதை இப்போவே ரெடி பண்ண ட்ரை பண்றீங்களா?” தன்னை விட்டு விலகும் ஒவ்வொரு முறையும் அவள் அவனிடம் இதைத்தான் கேட்டாள்.

நாட்கள் மாதங்களைக் கடக்க, ஒன்பதாம் மாதம் அவளை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அவளை அனுப்பிவிட்டு பத்து நாட்களுக்கும் மேலாக அவன் திடுமென அவள் வீட்டுக்கு வராமலே போனான்.

அந்த நேரத்தில்தான் அதியன் – ஆராதனா இருவரின் கடை, வீடு கிரகப்பிரவேசம் இருக்கவே, அவளை அழைத்து வந்தான். அனிதா வேண்டாம் என மறுத்த பிறகும், அவர்கள் கார்முகிலுக்கு எவ்வளவு நெருக்கம் என அவளுக்குத் தெரியாதா? எனவே வந்தாள்.

அங்கே வைத்தும் அதியன் கார்முகிலைச் சீண்ட, நண்பனை போலியாக அடித்தான்.

மறுநாளே சுமித்ரா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்க, பிரசவத்தின்பொழுது அவளுடனே அவள் கரத்தைப் பிடித்தவாறே இருந்தான். பெண் குழந்தை என அவர்கள் சொன்ன அந்த நொடி, அவன் சந்தோஷத்துக்கு அளவே இல்லை எனலாம்.

குழந்தையை அனைவரும் கொண்டாட, ‘இந்த கருவாயனோட குழந்தைகள் ரெண்டும் எப்படி அவ அம்மா கலர்ல வந்து பொறந்ததுக?’ குமார் தீவிர சிந்தையில் இருந்தான். அவனை அங்கே யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது வேறு விஷயம்.

அறைக்கு மாற்றப்பட்ட சுமித்ரா, பெரியவர்கள் அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகவே, “எப்போ மூணாவது பெத்துக்கப் போறோம்?” அவனிடம் கேட்டாள்.

“இனிமேல் அதுக்கு வாய்ப்பே இல்லை… அந்த பத்து நாளில் நான் ஆப்பரேஷன் பண்ணிகிட்டேன். சோ… இனிமேல்…” என்றவன் அவள் காதுக்குள் அந்தரங்கம் பேச, அதிர்ந்து போனாள்.

“முகி…” அதே அதிர்வோடு அவள் அழைக்க, அவனோ அவள் நெற்றி முட்டி சிரித்தான்.

“எனக்காக நீ என்னென்னவோ செய்யும்போது… ரெண்டு உயிரையே முழுசா உருவாக்கி கொடுத்திருக்கும் போது, இதெல்லாம் எதுவுமே இல்லை” அவன் சொல்ல… அவன் செய்திருப்பது எத்தனை பெரிய காரியம் என அவளுக்குத் தெரியாதா என்ன?

கண்கள் மெல்லியதாக கலங்க, “முகி… எனக்காகவா?” அவளுக்கு குரலே எழும்ப மறுத்தது.

“ம்ஹும்… எனக்காக… எனக்காகவே பிறந்தவளுக்காக, நமக்காக” அவன் சொல்ல, தன் அருகே இருந்தவனை தனக்கு அருகே இன்னும் இழுத்தாள். அவன், அவள் நெற்றி முட்டிச் சிரிக்க, அங்கே அவர்களைச் சுற்றி அன்பு மட்டுமே இருந்தது.

நன்றி!

You may also like

Leave a Comment

About Me

Featured