தளிர் 66
“ம்மா, இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ என்னை போட்டு திட்டிட்டு இருக்க? நான் என்ன வேணும்னா பண்ணேன்? லேசா தானே தள்ளிவிட்டேன், நீயும் பார்த்த இல்ல…” என ஸ்வாதி எரிச்சலாக மதியழகியிடம் கத்த,
“ஸ்வாதி நீ கொஞ்சம் சும்மா இரு. ஆன்ட்டி சொல்றது சரிதான், இப்போ ஒரு இழப்பு நடந்திருக்கு. அதுக்கு எல்லாரும் இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவாங்க. நீ இன்னும் போய் உங்க அண்ணனையும் பார்க்கல, அண்ணியையும் பார்க்கல. அதுவே பெரிய தப்பு. முதல்ல நீயும் ஆன்ட்டியும் போய் பார்த்துட்டு வாங்க.” என்ற விக்னேஷை எரிச்சலாக பார்த்தார் மதியழகி.
விக்ரம், ரித்தியை அனுப்ப மாட்டேன் என்று சொன்னதில், ரவியும் அங்கு செல்வதில்லை. தனியாக இருந்த மதி பயத்தில் மகளிடம் சென்றுவிட்டார்.
மருத்துவமனையில் நடந்த அனைத்தையும் மகளிடம் கூறி அவளை வீட்டிற்கு அழைக்க, ஸ்வாதியோ விக்னேஷும் வந்தால் தான் வருவேன் என்றுவிட, வேறு வழியில்லாமல் அவனையும் வீட்டிற்கு அழைத்துவிட்டார் மதி.
‘இவர்தான் என்னைக் காப்பாற்றியது’ என்று ஸ்வாதி அறிமுகம் செய்து வைத்த போது உண்டான மரியாதை, ‘இவரைத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு, விக்ரமை டிவோர்ஸ் பண்ணிட்டு, விக்கியைத்தான் மேரேஜ் செஞ்சிக்க போறேன்.’ என்ற மகளின் பேச்சில், கோபமாக மாறிப்போனது.
அப்போதிருந்து விக்ரமிற்கும் விக்னேஷிற்கும் இடையே பல ஒப்பீடுகளை, அவரே அறியாமல் அவர் மனம் போட்டுக் கொண்டிருக்கிறது. மகளிடம் இதுபற்றி பேசலாம் என்று நினைத்தாலும், அவன் ஆட்டுவிக்கும் பொம்மையாய் நிற்பவளிடம் என்ன பேசுவது என்றும் புரியவில்லை. ஆனால் மகளை விக்னேஷிடமிருந்து பிரித்து, விக்ரமிடம் சேர்த்து விட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார்.
அதனால் விக்னேஷ் கூறியதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த மதியழகி, “ஆமா ஸ்வாதிம்மா, தம்பி சொல்றதும் சரிதானே! நமக்கு ரவி முக்கியமில்லையா? நாளைக்கே நான் இல்லாம போய்ட்டா உனக்கு அவன் தானேடா இருக்கான். இப்படி பகைச்சிக்கிட்டா உன்னை யார் பார்த்துப்பா சொல்லு…” என வருத்தமானக் குரலை வரவைத்து பேச,
“அதெல்லாம் அவன் ஒன்னும் பார்த்துக்க வேண்டிய அவசியமில்லை. என் விக்கி இருக்கான், அவன் பார்த்துப்பான்.” என பட்டென்று பதில் கொடுத்த ஸ்வாதி, “ஆனாலும் விக்கி சொன்னா, எதுவும் காரணம் இருக்கும், அதனால அங்க வர்றேன்.” என்றாள்.
“ம்ம்… சரி கிளம்பு, போயிட்டு வந்துடலாம்.” என்ற மதியழகியை யோசனையாகவே பார்த்தான் விக்னேஷ்.
“விக்கி கம்…” என இழுத்தவளின் இழுவைக்கு சென்றாலும், யோசனைகள் மதியழகியின் மேலேதான் இருந்தது. ‘ஏதோ தப்பா இருக்கே… ஒருவேளை விக்ரம் இவரிடம் இங்கு நடப்பதை வேவு பார்க்க அனுப்பியிருப்பானோ?’ என்று யோசித்தபடியே சென்றான்.
அதுவரை அமைதியாக இருந்த மதியழகி, இருவரும் ஒரே அறைக்குள் செல்லவும் பல்லைக் கடித்தார். விக்னேஷின் மேல் பைத்தியமாக இருக்கிற இந்த பொண்ணை, எப்படி தன்வழிக்கு கொண்டு வருவது என்று பெரும் யோசனை மதியழகிக்கு.
இந்த இரண்டு வருடமாகத்தான் ஸ்வாதிக்கும் விக்னேஷிற்கும் பழக்கம் என்பது மதியழகியின் எண்ணம்.
இவையனைத்துக்கும் பிள்ளையார் சுழியிட்டதே தன் மகள்தான் என்று தெரிய வந்தால் என்ன செய்வார்?!
“விக்கி எனக்கு அங்க போகவே பிடிக்கல, எல்லோரும் என்னைய வில்லி மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. அதோட அந்த நிசா அங்கதான் இருக்கா. அவளைப் பார்த்தாலே கொன்னுடணும் போல இருக்கும். நான் கோபத்துல ரியாக்ட் பண்ணிட்டா என்ன செய்ய…?” என அவன் அணைப்பில் இருந்தபடியே கேட்க,
“ம்ச்… ஸ்வீட்டி, இப்போ நமக்கு வேற வழியே இல்லை. நீ அந்த ரித்தி கூட பிரச்சனை பண்ணாம இருந்திருந்தா, நமக்கு இவ்வளவு ரிஸ்க் தேவையே இருந்திருக்காது. இப்போ நாம கொஞ்சநாள் அமைதியா இருந்துதான் ஆகணும். இந்த கமல் வேற எங்க இருக்கான்னு கண்டுபிடிக்கணும்.” எனத் தலையைக் கோதியவன்,
“ப்ச்! ஸ்வீட்டி, ஐ திங்க் உங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கலனு நினைக்கிறேன். அவங்க என்னை ட்ரீட் பண்றதே சரியில்ல. எதுக்கும் அங்க கவனமா இரு. இப்போ எல்லாரும் ஒரே இடத்துல இருக்காங்க. நாம அங்க யாரையும் டச் பண்ணவே முடியாது. சோ, நீ அங்க அடிக்கடி போற மாதிரி பார்த்துக்கோ. முக்கியமா அந்த குழந்தையை கொஞ்சம் பாசமா, சோகமா பார்க்குற மாதிரி பில்ட் பண்ணிக்கோ, நமக்கு யூஸ் ஆகும். இப்போ போயிட்டு உடனே வந்துடு.” என்றவனுக்கு, இன்னுமே முகத்தில் யோசனையின் சாயல்தான்.
“என்ன விக்கி சொல்ற, அம்மாவுக்கு பிடிக்கலயா? உங்கிட்ட தப்பா, இல்ல கோபமா பேசுனாங்களா? என்னாச்சு விக்கி? எங்கிட்ட மறைக்கிறியா? இரு, நான் கேட்குறேன்.” என வேகமாக அவனிடமிருந்து விலகியவளை, மீண்டும் இழுத்து பிடித்தவன்,
“ம்ச் ஸ்வீட்டி… என்னோட கெஸ்ஸிங் தான் சொன்னேன். நீ கேட்டு ஒருவேளை அது உண்மையா இருந்தா, அவங்க அலார்ட் ஆக வாய்ப்பிருக்கு. சோ, நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத. முக்கியமா நான் சொன்னதை கவனமா செய்.” என்று அவளை அணைத்துக் கொள்ள, அவளுக்கோ அந்த அணைப்பு மட்டும் போதும் போல தோன்றவில்லை.
“விக்கி… இப்போ எல்லாம் நீ என்னைக் கண்டுக்கிறதே இல்லை, எப்பவும் ஏதோ யோசனையாவே இருக்க…” என அவன் மார்பில் முட்டியபடி கொஞ்ச,
“ம்ம்… நீ சொல்றது உண்மைதான் ஸ்வீட் ஹார்ட். ஒரு பொண்ணு அவளைப் பத்தியோ, அவளோட லைஃப் பத்தியோ, அவ குடும்பம் இல்ல, இந்த சொசைட்டி பத்தியோ கொஞ்சமும் யோசிக்காம, எனக்காக எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு வந்தா. அவளுக்கு நான் ஒன்னுமே செய்யலனு எனக்கு பயங்கர கில்டி ஸ்வீட்டி. அவ சந்தோசப்படுற மாதிரி ஒரு குட் நியூஸ் சொல்லிட்டு தான் மத்த எல்லாமே. அப்போ நீ இப்படி எல்லாம் எங்கிட்ட கேட்டுட்டு இருக்க வேண்டாம். நானே எல்லாம்…” என முடிக்கும் முன்னே, அவன் இதழ்களைத் தன்னிதழ்களால் மூடியவளின் விழிகளில், அவனுக்கான ஏக்கமும் ஆசையும் அப்பட்டமாக தெரிந்தது.
அதைப் பார்த்தவன், “ஸ்வீட்டி, நீ இப்படியெல்லாம் பார்த்தா, ஐ லூஸ் மை கன்ட்ரோல்.” என அவள் இதழில் இதழ் உரச முணுமுணுக்க,
“எனக்கு அதெல்லாம் வேண்டாம், என் விக்கிதான் வேணும்.” என்றவளின் அழைப்பில், அவனுக்குமே மோகம் எக்குத்தப்பாய் எகிற, அது அவர்களுக்கான நேரமாக மாறிப்போனது.
***
அன்று அறைக்குள், முகத்தை மூடி தேம்பி தேம்பி அழுத மனைவியை, கையாலாகாத தனத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ரவி.
அவன் தற்போது என்ன ஆறுதல் கொடுத்தாலும், அது வீண்தானே… அவனுக்கும் இது பெரிய இழப்புதான். அவனுக்கு யார் ஆறுதல் சொல்வது?
ஆனால் முழுதாக ஒன்பது மாதம் தன் உயிரில் கலந்து, ஒவ்வொரு நொடியும் அதன் அசைவை, அதன் உணர்வை உணர்ந்து வாழ்ந்தவளுக்கு, அந்த உயிரின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் தொலைப்பது என்பது எத்தனை பெரிய இழப்பு! அதுதானே இப்போது நடந்திருப்பது.
இந்த அழுகையை இனியும் அவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்று தோன்றவில்லை. மனைவியை வலுக்கட்டாயமாக தன் முகத்தைப் பார்க்க வைத்தவன், அழுத விழிகளைத் தன் பெருவிரல்களால் அழுத்தி துடைத்துவிட்டு, தன் வயிற்றோடு கட்டிக் கொண்டான்.
அவனிடமிருந்து திமிற ஆரம்பித்தவள், தன் முதுகில் விழுந்த நீர்த்துளிகளின் ஸ்பரிசத்தில் பட்டென்று அவனிடமிருந்து விலக பார்க்க, அவனோ விடாமல் இறுக்கியவன் இப்போது வெளிப்படையாகவே குலுங்கி குலுங்கி அழுதான்.
ஆண் அழக்கூடாது என்று யார் சொன்னது? அவனுடைய உணர்வுகளுக்கும் உயிர் இருக்கத்தானே செய்யும். இல்லாத ஒன்று, இனி பார்க்கவே முடியாது என்று தெரியும் போது, அந்த வலியை சொல்லில் வடிக்க முடியாது. இவர்களுக்கும் அப்படியான இழப்புத்தானே அது.
“முடியல ரவி, அய்யோ! என் குழந்தை ரவி… நம்ம குழந்தை… நான் பார்க்கவே இல்ல ரவி, நீ பார்த்தியா? நீ பார்த்தியா சொல்லு ரவி… எப்படி இருந்தா என் தங்கம்… நான் விட்டுட்டேன் ரவி… அதுதான் அவளும் என்னை விட்டுட்டு போயிட்டா…” என்ற ரித்தியின் கதறல்களும்,
“ரித்தி… ரித்திம்மா… அப்படியெல்லாம் இல்ல ரித்திமா. இந்த நேரம் இப்படி எமோஷன் ஆகக் கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காங்க ரித்திம்மா. ப்ளீஸ்… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்டா! நம்மளை விட கடவுள் அவளை நல்லா பார்த்துப்பார். அப்படி நினைச்சிக்கோ குட்டிம்மா ப்ளீஸ்… இப்படி நீ அழும் போது எனக்கு இந்த உயிரை வச்சிட்டு உன் முன்னாடி நிக்கவே வெட்கமா இருக்கு குட்டிம்மா. செத்துடணும் போல இருக்குடி, ப்ளீஸ்… என்னை மன்னிச்சிடு ரித்தி… ப்ளீஸ்…” என்ற அவனது சமாதான வார்த்தைகளும் தான் அந்த அறையை நிறைத்துக் கொண்டிருந்தது.
சட்டென்று அவனது அணைப்பில் இருந்து வெளியில் வந்தவள், “அப்படி சொல்லாத ரவி, நீ இல்லன்னா நானும் இல்ல. நீ இல்லாம என்னால இங்க இருக்கவே முடியாது. இனிமேல் எப்பவும் இப்படி பேசாத ரவி. உன்மேல கோபம் இருக்கு, அதைவிட வருத்தம் அதிகமா இருக்கு. ஆனா எப்பவும் உன்னை விட்டுட்டு போகணும்னு நான் நினைச்சதே இல்ல ரவி.
என்னை மன்னிச்சிடு ரவி, இது எல்லாத்துக்கும் நானும் ஒரு காரணம். வயித்துல பாப்பா இருக்கும் போது, நானும் அவக்கூட அப்படி கோபமா சண்டை போட்டிருக்கக்கூடாது. ஆனா அப்போ என்னால அமைதியா இருக்க முடியல ரவி…” எனத் தேம்பிய மனைவியை மீண்டும் அணைத்தவன்,
“இதெல்லாம் நம்ம வாழ்க்கையில நடக்கணும்னு இருக்கு குட்டிம்மா, அதுதான் நடந்துடுச்சு. ஆனா இதுக்கு காரணமானவங்களை நான் சும்மா விடுவேன்னு மட்டும் நினைக்காத. விக்ரமே விட்டாலும் நான் சும்மா விடமாட்டேன். நீ எதையும் யோசிக்காத, தம்பியும் பாப்பாவும் உன்னை பார்க்காம ஏங்கிப் போயிட்டாங்க. அவங்ககூட கொஞ்ச நேரம் இருக்க முடியுமா? கூப்பிட்டு வரவா?” என்ற கணவனிடம்,
“ம்ம்… அவங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். நிலாம்மா என்னை ரொம்ப தேடிட்டா போல, நிசா எப்படி சமாளிச்சாளோ மூணு பேரையும்…” என முகத்தை அழுந்த துடைத்துவிட்டு, கணவனின் முகம் பார்க்க,
அவள் கலைந்த கூந்தலை ஒதுக்கி நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தவன், “உஷாவும் இருந்தாதானே, அதனால மேனேஜ் பண்ணிட்டாங்க. உன் அண்ணன்தான் மகளை இறக்கிவிடாம சுத்துனானே. மத்த ரெண்டு பேரையும் சமாளிக்கிறது கஷ்டமா என்ன?” என்றவனும் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான்.
இருவர் முகமும் ஒரு தெளிவிற்கு வந்திருந்தது. வார்த்தைகளற்ற ஒரு சமாதானம், மௌனத்தில் உண்டான ஒரு இதம். இருவரும் பேச்சுகளற்று அமைதியாக அந்த வலியை, வேதனையை கடக்க முயற்சித்தனர்.
இனி வரும் காலம் அதற்கு மருந்தாக அமையும் என்ற நம்பிக்கையோடு, குழந்தைகளை அழைத்து வர வெளியில் சென்றான் ரவி.
இதோ இந்த வீட்டிற்கு வந்து ஒரு வாரமும் ஓடியிருந்தது. கடந்து போன நாட்களை அசை போட்டுக் கொண்டிருந்த நேரம், காலிங் பெல் சத்தம் கேட்க, உஷாதான் வந்து கதவைத் திறந்தாள்.
“நீ இன்னும் இங்க என்ன செய்ற?” என்ற வார்த்தையிலேயே வந்திருப்பது யாரென்று ரித்திக்கு புரிய, சட்டென்று உடலில் ஒரு இறுக்கமும் மனதில் கொன்றுவிடும் அளவிற்கு கோபமும் வந்துவிட, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேகமாக தன்னறைக்குச் சென்று ரவிக்கு அழைத்திருந்தாள்.
***