அகானா – 80
“என்னடி பேச்சு இது? பைத்தியக்காரத்தனமா யோசிச்சிட்டு.” என ஆகன் மனைவியை அதட்ட,
“என்ன.. என்ன பிரச்சினை இப்போ உங்க எல்லாருக்கும்? நான் பேசுறதுல, கேட்குறதுல என்ன தப்பு..? அந்த மனுஷன் தன்னோட பொறுப்புகள்ள இருந்தும், கடமையில இருந்தும் ஓடி ஒழிவார். என் அம்மா அவருக்கும் சேர்ந்து சிலுவை சுமக்கனும். அவங்க கஷ்டகாலமெல்லாம் முடிஞ்சது, இனி அவங்களுக்கு ஒரு வாழ்க்கையை அவங்க வாழட்டும்னு, நான் யோசிச்சா உங்களுக்கு பைத்தியக்காரத்தனமா இருக்கா..? ஓ.. நீயும் ஒரு ஆம்பளதானே, அதான் ஆணாதிக்கத்தனமா பேசுற?”
“முட்டாள்தனமா பேசாத அகானா.. அத்தையோட மனநிலை என்ன? அவங்க என்ன நினைக்கிறாங்க? இதெல்லாம் சாத்தியமானு எல்லாத்தையும் யோசிச்சுத்தான் பேசனும். உன்னோட விருப்பத்துக்கு எல்லாம் நடக்கனும்னு எதிர்பார்க்காத..”
“என்னோட விருப்பமா? என்னோட விருப்பம் இதுவரைக்கும் என்ன நடந்திருக்கு? என் கல்யாணம் கூட என்னோட விருப்பத்துல நடக்கல. இதுவரை என்னோட விருப்பம் எனக்கு பெருசா தெரிஞ்சதில்ல.. ஆனா இப்போ என்னோட இந்த விருப்பம் நடந்தே ஆகனும். யார் என்ன நினைச்சாலும், எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல..”
“நீ வீம்புக்குனு பேசுற மாதிரி இருக்கு அகானா. உன்னோட விருப்பத்தை அத்தைக்கிட்ட திணிக்கிற ரைட்ஸை உனக்கு யார் கொடுத்தா?”
“எனக்கு மட்டும் தான் ரைட்ஸ் இருக்கு.. என்னோட லைஃப்ல நடந்த எல்லாமே அவங்க விருப்பப்படி தான் நடந்தது. என்னோட ஆசைகள் எல்லாத்தையும் அவங்களுக்காக நான் விட்டுக் கொடுத்திருக்கேன். இப்போ அவங்க எனக்காக விட்டுக் கொடுக்கட்டும். தப்பெல்லாம் இல்ல..”
“இத்தனை பிடிவாதம் தேவையில்ல அம்மு.. இது உடனே தீர்க்க வேண்டிய பிரச்சினையும் இல்ல. கொஞ்சம் பொறுமையா பேசலாம்.. நீ ஏன் அத்தையை இவ்ளோ ப்ரெசர் பண்ற.. அவங்க யோசிக்க நீயும் டைம் கொடு.. இது சின்ன பிள்ளைங்க விளையாட்டு இல்ல..”
“நீ ஏன் இப்படி பேசுறன்னு எனக்குத் தெரியும்.. உன் மாமாவை, அந்தாளை மறுபடியும் எங்க வாழ்க்கைக்குள்ள கொண்டு வரப்பாக்கிற.. அப்படி மட்டும் நடந்தா.. நடந்தா நான் இங்க இருக்க மாட்டேன், இங்க இல்ல, எங்கேயும் இருக்கமாட்டேன்..” ஆத்திரமும், அழுகையுமாக அகானா கத்த,
“போதும் நிறுத்து.” தன் வலியையும் பொருட்படுத்தாமல் கத்தியிருந்தார் மஞ்சரி.
“என்ன் பேச்சு இதெல்லாம்..? உனக்கு நீ.. எனக்கு நான்.. இதுதான் இப்போவரை நம்ம வாழ்க்கை. இந்த வாழ்க்கைக்குள்ள வீம்பா உள்ள வந்தது ஆகன். அவ்வளவுதான் நம்ம குடும்பம். இதுக்கு மேல யாரையும் நம்ம வாழ்க்கைக்குள்ள திணிக்காத..”
“ம்மா.. அந்தாளை விடு.. அவர் நமக்கு எப்பவும் வேண்டாம். ஆனா என்னோட ஆசையும் முடிவும் இதுதான். நீ உனக்குனு ஒரு துணையை தேடனும். உனக்கு மட்டும் பிடிச்சிருந்தா போதும். நீ நிம்மதியா இருக்கன்னு தெரிஞ்சா மட்டும் தான், என்னால என் வாழ்க்கையை வாழ முடியும். எனக்கும் அந்த குடும்பத்து மேல இருந்த கோபமும், பழிவெறியும், ஆத்திரமும் குறையும்.” என்று ஆங்காரமாகக் கத்தியவளை, இருவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
“அம்மு..” என்றார் மஞ்சரி பரிதவிப்பாக.
“ம்மா.. உன்கிட்ட நான் இதுவரைக்கும் இதை சொன்னதில்ல. எனக்கு ஆகனை ரொம்ப பிடிக்கும், ரொம்பன்னா எனக்கு உன்னை எவ்ளோ பிடிக்குமோ, அதே அளவுக்கு அவரையும் பிடிக்கும். ஆனா அதை நான் இதுவரைக்கும் யாருக்கிட்டயும் சொன்னதில்ல, ஏன் அவர்கிட்டயே சொன்னதில்ல. ஏன் தெரியுமா? தெரியுமா உனக்கு.. அந்த வீட்டு ஆளுங்களைப் பார்த்து பயந்து தான். நீன் உனக்குக்குனு ஒரு லைஃப்ல இருந்திருந்தா கண்டிப்பா நான் இவ்ளோ பயந்திருக்கமாட்டேன். நான் உயிரா நேசிச்ச ஆகனோட என்னால வாழ முடில ம்மா.. நம்மளை ஏமாத்தி, விரட்டி ஓடவிட்ட அந்த குடும்பத்தோட துரோகம் தான் என் கண் முன்னாடி வந்து நிக்குது, இதையெல்லாம் தாண்டி நான் எப்படி அவர்கூட வாழ முடியும்.. சொல்லு ம்மா.. இப்ப நான் என்ன செய்யட்டும்.. இந்த குற்றவுணர்ச்சியோடவும், பழியுணர்ச்சியோடவும் நான் ஆகன் கூட வாழ முடியுமா? அந்த வாழ்க்கை நரகத்தை விட மோசமாகிடாதா? என்னை யோசிமா?” என்றாள் அகானா யாசகமாக.
மகளின் பேச்சில் மஞ்சரிக்கு அவரது உலகமே செயலற்று நின்றுவிட்டது போன்ற பிம்பம்.
நிமிர்வான பெண், தைரியமான பெண், அனைத்தையும் மிக சாதாரணமாக கடந்து வரும் அசாத்தியமான திறமை கொண்ட பெண் என்று தன் மகளைப் பற்றிய பிம்பங்கள் நொறுங்குவது போல் இருந்தது மஞ்சரிக்கு.
மஞ்சரியின் இந்த செயலற்ற தன்மையை ஆகனால் பார்க்க முடியவில்லை.
அவனுக்கு இப்போது மனைவியுடனான தனிமை மிக மிக முக்கியமாக தேவைப்பட்டது.
எத்தனை வருடங்களுக்குப் பிறகு காதலை சொல்லியிருக்கிறாள்.
காதல் சொன்ன பெண்ணவளை கொண்டாட மனம் உவகை கொண்டது. (அடப்பாவி கேப்ல கிடா) ஆனால் சூழல் அப்படியிருக்கவில்லையே.
முதலில் மாமியாரை சீனில் இருந்து தள்ளி வைத்து யோசிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தான்.
அதனால் “அம்மு இதுக்கு மேல எதுவும் பேசக்கூடாது..” என்றான் அழுத்தம் திருத்தமாக. அதில் அகானாவின் பேச்சு சட்டென நின்றுவிட்டது.
“அத்தை.. அம்மு சொல்றவிதம் தப்புன்னாலும், அவ சொல்ற விசயம் தப்பு கிடையாது. முன்னாடியே, அதாவது காலேஜ் படிக்கும் போதே அம்மு இதெல்லாம் எங்கிட்ட சொல்லியிருக்கா, அவளொட ஆசையையும் விருப்பத்தையும் தப்புன்னு சொல்லி நீங்க தட்டிக் கழிக்க முடியாது. இதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையை காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டது போதும். இனி அப்படி வேண்டாம். என் பொண்டாட்டி அப்படி இருக்கிறதை நான் விரும்பல. அவ இதுவரைக்கும் எப்படி இருந்தாளோ? ஆனா இனி அவளோட இயல்புல அவ இருக்கனும்னு நினைக்கிறேன். அதுக்குப் பிறகுதான் எங்க வாழ்க்கை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரும். இது எல்லாம் நடக்கனும்னா நீங்க மனசு வைக்கனும். உங்களோட மனசுல இருக்குற குப்பையைத் தூக்கி எறிஞ்சிட்டு எங்க வாழ்க்கைக்காக யோசிச்சு ஒரு முடிவு எடுங்க..” என்றவன் மனைவியை இழுத்துக்கொண்டு வெளியில் சென்றான்.
மஞ்சரிக்கு மகள் பேசியதே அதிர்ச்சி என்றால், மருமகனும் மகள் பேசியது சரியென்பது போல் பேசியது பேரதிர்ச்சியாக இருந்தது .
வாழ்ந்து முடித்துவிட்ட ஒரு வாழ்க்கையை, மீண்டும் புதிதாக ஆரம்பி என்று சொன்னால், அதை எப்படி இந்த மனம் ஏற்கும்.
இத்தனை வருடங்களில், ஒரு துரோகத்திற்கு பின்னாலான வாழ்க்கையில், யார் மேலும், முக்கியமாக ஆண்களின் மேல் அவருக்கு நம்பிக்கையே இல்லாமல் போயிற்று.
அகானாவிற்கு பணிரெண்டு வயது இருக்கும் போது, விஜயாவின் சொந்தத்திதில் ஒருவர் மணந்து கொள்ள கேட்டபோது, முடியவே முடியாது என்று ஒரே முடிவாக இருந்தார்.
வாழ்க்கை போகும் போக்கில் போய், மகள் மட்டுமே உலகம் என்றிருந்தவரை மகள் எங்கு கொண்டு நிறுத்தியிருக்கிறாள்?
இன்னொரு திருமணமா? நினைக்கவே நெஞ்சமெல்லாம் குமட்டுவது போல் இருந்தது.
‘நடந்த சம்பவங்களில் தாக்கத்தில், பயந்து போய்தான் அகானா பேசுகிறாள், பொறுமையாக எடுத்து சொன்னால் புரிந்து கொள்வாள்’ என அவருக்கு அவரே ஒரு சமாதானத்தை உருவாக்கிக் கொண்டு மகளிடம் எப்படி பேச என யோசித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் மகள் அதற்கு வாய்ப்பே அளிக்கமாட்டாள் என்று தெரிந்தால் என்ன செய்வார்?
இங்கு மனைவியை இழுத்துக்கொண்டு வெளியில் வந்த மருத்துவனை அங்கிருந்த அத்தனை பேரும் வித்தியாசமாக பார்க்க, அவனோ அதையெல்லாம் கண்டு கொண்டதைப் போல் தெரியவில்லை.
தன்னுடைய கேபினுக்குள் வந்தவன், கதவை அடைத்த அடுத்த நொடி அவளை இறுக்கமாக அனைத்திருந்தான்..
“ஹேய் என்ன பண்ற?” என்ற மனைவியின் பேச்சு அந்த மருத்துவனின் காதில் விழுந்ததா என்று கூட தெரியவில்லை.
“ம்ம்ம்..” என்று இழுத்தவன் அவளின் இதழை வருடி “ஃபர்ஸ்ட் டைம் இந்த லிப்ஸ் லவ் சொல்லிருக்கு.. அதுக்கு கிஃப்ட் கொடுக்க வேண்டாமா?” என்றான் முணுமுணுப்பாக.
“ஹ்ம்ம்ம்… வேண்டாம்..” என்றாள் விழிகளில் நீர் துளிர்க்க, இதழ்களில் புன்னகை பூக்க..
“ஹ்ம்ம் அப்படியெல்லாம் விட முடியாதே.. எப்படி எப்படியெல்லாமோ நம்ம லவ்வை, லைஃபை வாழனும்னு கற்பனை பண்ணி வச்சிருந்தேன். ஆனா நமக்கு நடந்த எதுவும் என் கற்பனைல ஒரு துளி கூட மேச் ஆகல. ஆனா இப்போ நீ லவ் சொன்ன இந்த நிமிசம், நான் அவ்ளோ ஹேப்பியா இருக்கேன். என் கற்பனைகள் எல்லாம் சுக்கு நூறா நொறுங்கிப் போயிருந்தாலும், இப்போ இந்த நிமிசம் ஐம் சோ சோ ஹேப்பிடா அம்மு..” என்றான் அவளிதழில் இதழ் பதித்து.
கணவனின் விழிகளை நேருக்கு நேராக சந்தித்து, “என் மேல் உங்களுக்கு கோபமே வரலையா? நான் நான் உங்க குடும்பத்தை பழிவாங்க வந்திருக்கேன். இது இன்னமும் முடியல. எனக்கு கோபம் வரும்போதெல்லாம் என்ன செய்வேன்னு எனக்கு சொல்லத் தெரியல.. நான் அப்படி ஏதாவது உங்க வீட்டாளுங்களுக்கு பண்ணிட்டா, அப்போவும் நீ இதே லவ்வோட இருப்பியா? உன்னால முடியுமா? எனக்கு அந்த பயம் எப்பவுமே இருக்கும். அதனாலத்தான் உன்கிட்ட என் லவ்வை சொல்ல எனக்கு முடியல..” என்றவளுக்கு குரல் உடைந்தது.
“அம்மு.. ஆரம்பத்துல எனக்கும் கோபம் வந்ததுதான். ஆனா அதே நேரம் உன் பக்கம் இருந்து யோசிக்கவும் செஞ்சேன். உன் இடத்துல நான் இருந்திருந்தா, உன்னை விட மோசமா கூட பழிவாங்கியிருக்கலாம். ஏன் அடுத்த சந்ததியே இல்லாத அளவுக்கு யோசிச்சி பழிவாங்கிருப்பேன். ஆனா நீ அந்தளவுக்கு போகலையே.. இனி நீ அப்படி நடந்துக்கமாட்ட, அப்படியே நடந்துக்கிட்டாலும், நான் பார்த்துக்கிறேன். நீ அதையெல்லாம் யோசிக்காம, அடுத்து அத்தையை எப்படி சமாளிக்கிறதுனு மட்டும் பாரு..” என்றான், அவள் விழிகளை துடைத்து.
“ம்ம்ம்… அது.. அது உங்களுக்கு கோபமோ, வருத்தமோ இல்லையா? உங்க மாமா..” என நிறுத்த,
“அம்மு.. அவர் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட ரோல் மாடல் அவர். என்னோட வெல்விசரும் கூட. ஆனா அதுக்காக அவரோட தப்பையெல்லாம் நான் சரின்னு ஏத்துப்பேனா? கண்டிப்பா கிடையாது. அவரோட தப்புக்கான தண்டனை அவருக்கு கிடைச்சிருக்கு, அவ்ளோதான். இல்ல இது பத்தாது, இன்னும் அவரை வலிக்க வைக்கனும்னு நீ நினைச்சாலும் சரிதான், உன்னோட விருப்பம், நீ என்ன செஞ்சாலும் எனக்கு ஓக்கே தான்..” என்றான் அவளை மென்மையாக அனைத்து..
“தேங்க்ஸ் சீனியர்… நான் விஜிம்மாக்கிட்ட முன்னாடியே இதை பேசிட்டேன். அவங்க ஆரிகூடவே அம்மாவையும் சிங்கப்பூர் அனுப்பிடலாம் சொன்னாங்க. அம்மா அங்க, அந்த லைஃப்ல கண்டிப்பா சந்தோசமா இருப்பாங்க. அவங்க சந்தோசம் தான் எனக்கு ரொம்ப முக்கியம். சுபாஷ் அங்கிள் அம்மாவை நல்லா பார்த்துப்பார்..” என்று அவன் அனைப்பில் இருந்தபடியே கூற, அதே நேரம் ஆரியனோடு மஞ்சரியைப் பார்க்க, அவரின் அறைக்குள் நுழைந்திருந்தார் சுபாஷ்.
1 comment
அட ராமா ! இதெல்லாம் அப்பவே பண்ணியிருக்கணும் இப்ப போய் இன்னொரு கல்யாணம்ன்னா…. அவங்க எங்கயிருந்து பண்ணிக்கிறது..?
😀😀😀
CRVS (or) CRVS 2797