Home Love - Family - Romanceஉனக்கென பிறந்தவள் நானே – 10.

உனக்கென பிறந்தவள் நானே – 10.

by infaalocious

பகுதி – 10.

அந்த காபி ஷாப்பில் சுமித்ராவின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தான் கார்முகில். இப்படி தான் வந்து அமர்ந்து இருப்பதே அவனுக்கு முட்டாள்த்தனமாகப் பட்டது. அவளுக்கு தன்னைப் பிடித்திருக்கிறது என பெரியவர்கள் சொல்வது எல்லாம் பிரம்மையாகத் தோன்றியது.

தன் அலைபேசியில் இருந்த அவளது புகைப்படத்தைக் காணக் கூட அச்சமாக இருந்தது. ‘ஆண்டவா, இவளை எனக்கு பொண்ணு பார்த்து இருக்காங்களா?’ அவனால் நம்பவே முடியவில்லை.

இதையெல்லாம் விட, அவன் வீட்டில் குழலி முதல் முறையாக தாய்மை அடைந்து இருக்கிறாள். அதைக் கேட்டது முதல், ‘நம்ம வீட்டுக்கு சுமி வரப்போற ராசிதான் இப்படி நல்ல விஷயம் எல்லாம் நடக்குது’ என தாய் சொல்லி குதூகலிக்க, அவனுக்கு நம்பவா? வேண்டாமா? எனத் தெரியாத தடுமாற்றம்.

அவனது அப்பாவின் அம்மா, அவன் சின்னவனாக இருந்த பொழுது அண்டை வீட்டு மனிதர்களிடம் ஒருமுறை பேசியது அவன் காதில் விழுந்து இருந்தது.

‘ஒரு பொண்ணு ஒரு வீட்டுக்கு வாழ வந்தா, அந்த வீட்டை வானம் மட்டுக்கு உயர்த்தவும் செய்வா, உப்பு சிரட்டை கூட இல்லாமலும் செய்வா. அதனால பார்த்து தீர்மானிக்கணும்’ என அவர் சொல்லி இருந்தது அவன் நினைவுக்கு வந்து தொலைத்தது.

“அம்மா, கொஞ்சமாவது லாஜிக்கா பேசுங்க. அவ உண்டாகி இருக்கறதுக்கு காரணம் அவ புருஷன் குமார்தான். நீங்க என்னவோ இவ வரப்போற நேரம்னு பேசறீங்க. இதைக் கேட்டால் குமார் எவ்வளவு ஃபீல் பண்ணுவார்” வேடிக்கை போல் அவன் சொல்ல, சுதா அவனை முறைத்தார்.

“சுமியை உனக்கு பேச ஆரம்பிச்சு ஒரு மாசமாகுது, இந்த மாசம் என் பொண்ணு கர்ப்பம் உறுதி ஆகுது. இதை அவ ராசின்னு சொல்லாமல் என்னன்னு சொல்வ? மூணு வருஷமா எதிர்பார்க்கற விஷயம், இந்த மாசம் நடந்து இருக்குடா” தாய் சொல்ல, அவனுக்குமே ‘இருக்குமோ?’ எனத் தோன்றிவிட்டது.

அதைவிட இன்னொரு பக்கம், ‘தான் சுமியை வேண்டாம் எனத் தீர்மானமாகச் சொல்லிவிட்டால், தங்கையின் கர்ப்பம் இல்லாமல் போய்விடுமோ?’ என உள்ளுக்குள் ஒரு பயம் எழ, இப்பொழுது மறுக்க கூட பயந்தான்.

குழலியைக் காண அவள் வீட்டுக்குச் சென்ற பொழுது, அவளும், அவளது மாமியாரும் கூட சுமியின் வரவுதான் இந்த சந்தோஷ நிகழ்வுக்குக் காரணம் எனப் பேச சோர்ந்து போனான். அதே நேரம் மறு பக்கம் தித்தித்தது.

அவனும் எல்லா உணர்வுகளும் கொண்ட மனிதன் தானே. அழகை வெறுப்பவன் இல்லையே… அப்படி இருக்கையில் தன்னவள் வரும் முன்பே இப்படி சந்தோஷங்களை அவன் வாழ்க்கையில் வாரி இறைத்தால் சந்தோஷப்பட மாட்டானா என்ன?

இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைதான்… இருக்கையில் அமரக் கூட முடியாமல் நெளிந்து கொண்டிருந்தான். கார்முகில் சுமித்ரா சொல்லியிருந்த நேரத்துக்கு முன்பாகவே ஹோட்டலில் வந்து காத்திருந்தான்.

சுமித்ரா சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர, அடர் சிவப்பு நிற டிஷர்ட், அடர் நீல வர்ண ஜீன்ஸ் அணிந்து, தலையை ஒரு போனி டெயில் போட்டு அடக்கி இருந்தாள். முகத்துக்கு சிறிதாக கூட மேக்கப் போட்டிருக்கவில்லை.

‘நெற்றிக்கு மத்தியில் இருக்கிறதா? இல்லையா எனத் தெரியாத அளவுக்கு ஒரு சின்ன போட்டு, கண்ணில் காஜல் போட்டிருக்கிறாளா என்ன? உதட்டுக்கு ரோஸ் வர்ண லிஸ்ப்ஸ்டிக்கா?’ என தன் ஆராய்ச்சியை மட்டுமே நடத்திக் கொண்டிருந்தான்.

அவள் தன்னை நெருங்கி வந்ததோ, தனக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்ததோ எதுவும் அவனது மூளைக்குள் பதியவே இல்லை. அவனை நெருங்கி வந்தவள், அவன் தன்னை ஆராய்சியாகப் பார்ப்பதை உணர்ந்து கொண்டாள்.

சில பல நிமிடங்கள் அவனைத் தொல்லை செய்யாமல், அவனையே பார்த்தவாறு தானும் அமர்ந்து கொண்டாள்.

தானும் அவனை அளவிடத் துவங்கினாள். கருமை நிறம், கூர் நாசி, வெள்ளை நிறக் கண்கள் ஆண்மையின் கம்பீரத்தோடு, லட்சணமாகவே இருந்தான். பார்த்தவுடன் பிடித்துவிடும் தோற்றம் இல்லை என்றாலும், பார்க்கப் பார்க்கப் பிடிக்கும் தோற்றம்.

‘இவன் என்னவன்’ என்ற உரிமையோடு அவனைப் பார்த்தாள். அப்படி பார்த்ததாலோ என்னவோ அவனை அவளுக்குப் பிடித்தது. ஏற்கனவே அவனது குணத்தையும் அறிந்து இருந்தவளுக்கு அவனை இன்னும் பிடித்தது.

‘அவருக்குன்னு நான் இருக்கேன். அவருக்கு தேவையான இடத்தில், அவசியமான இடத்தில் நான் இருப்பேன்’ அவளுக்குள் அந்த எண்ணம் அழுத்தமாகப் பதிந்தது. அவள் வளர்ந்த விதம், ‘மற்றவர்களுக்கு என நாம இருக்கணும்’ என அவள் மனதுக்குள் விழுந்த விதை விருட்சமாகித்தான் இருந்தது.

ஆனால் அவனுக்கோ அவளைத் தன்னவளாக யோசிப்பதை விட, ‘இவளால் எப்படி முடியும்? இவளால் எப்படி என்னை நேசிக்க முடியும்?’ என்பது மட்டுமே அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ‘ஒரு வேளை பிராங்க் பண்றாளோ?’ அவனுக்குள் அந்த யோசனையும் எழ, தன் மனதை இறுக்கினான்.

அவன் தலையை கொஞ்சமாக அசைத்து நடப்புக்குத் திரும்ப, அப்பொழுதுதான் அவள் தன் எதிரில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.

ஆழமாக மூச்செடுத்தவன், “நான் முதல்ல சொல்ல வந்ததை சொல்லிடறேன். அதற்குப் பிறகு நீங்க உங்க முடிவைச் சொல்லுங்க” என்றவன் அவள் முகம் பார்க்க, ‘சொல்’ என்பது போல் அவன் முகம் பார்த்தாள்.

அந்த நேரம் அவன் முகத்தில் ஒரு சின்ன சலனம் கூட இருக்கவில்லை. அவன் முகத்தில் தெரிந்த உறுதியில் அவளே கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனாள்.

“நான் சொல்றதை கொஞ்சம் நிதானமா கேளுங்க. இந்த ப்ரொப்போசல் எப்படி எங்கே ஆரம்பிச்சதுன்னு தெரியலை. கல்யாணத்துக்கு பத்து பொருத்தம் பார்ப்பாங்களாம். இங்கே நமக்குள்ளே…” என்றவன் தன் கரத்தை அவளுக்கு முன்பாக நேராக நீட்டினான்.

“உங்க கையையும் நீட்டுங்க…” அவன் கேட்க, அவளும் மறுக்காமல் நீட்டினாள்.

“இங்கே பார்த்தீங்களா… நீங்க ஒரு துருவம்ன்னா, நான் இன்னொரு துருவமா இருக்கேன். இதுவே ஒத்து வராத பொழுது, உங்க அழகுக்கும் நான் கொஞ்சம் கூட பொருத்தமே கிடையாதுங்க. இப்படி பளிச்சென தெரியற இதுவே இப்படி இருக்கும்போது, நமக்குள்ளே எப்படிங்க ஒத்துவரும்?” அவன் நிறுத்தி நிதானமாக கேட்டான்.

“அப்போ வாழ்க்கைக்கு கலரும் அழகும்தான் முக்கியமா? அன்பு, நேசம்… பாசம்… காதல்… ஈர்ப்பு, அனுசரணை, புரிதல் இதெல்லாம் இல்லையா?” அவள் பட்டென கேட்க, சற்று திகைத்தவன் நிதானித்தான்.

அவனது அந்த நிதானம், அவளுக்கு அவன்மேல் இன்னும் நல் மதிப்பை உருவாக்க, அவனையே பார்த்தாள்.

“நீங்க சொல்றதை எல்லாம் இரண்டாம், மூன்றாம் பட்சமாக்கி பல காலமாகுதுங்க. நீங்களே கூட இப்போ ஏதோ ஒரு வேகத்தில் ஒத்துகிட்டு, இப்போ இங்கே வந்திருக்கலாம். இந்த நிமிஷம்… என்னை நேர்ல பார்த்த பிறகு உங்க அபிப்பிராயம் மாறி இருக்கலாம்” அவன் சொல்ல, அவனை மறுப்பாகப் பார்த்தாள்.

“நான் இல்லைன்னு சொன்னா? அப்படி நிமிஷத்துக்கு ஒரு முடிவை நான் எப்போதுமே எடுத்தது இல்லை” அவள் அவனை நேருக்கு நேராகப் பார்த்து சொல்ல, அவனுக்குத்தான் உள்ளுக்குள் என்னென்னவோ தடம் புரண்டது.

‘பைத்தியக்காரா, பைத்தியக்காரா… வாயை மூடுடா… இப்படி ஒரு அழகி உன்கிட்டே பேசவாவது செய்து இருக்காளா? இப்போ உன் கூடவே வாழ்க்கை முழுக்க வர்றேங்கறா, பெரிய புடுங்கி மாதிரி பேசிகிட்டு இருக்க?’ அவன் மனமே அவனை கழுவி ஊற்றியது.

“இல்லங்க, இப்போ இல்லன்னாலும் எப்போவாவது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நீங்க உங்களோட இந்த முடிவுக்காக வருத்தப்பட வேண்டி வரலாம். அப்போ நம்மளால் எதுவும் செய்ய முடியாது, சோ… இப்போவே யோசிப்பது புத்திசாலித்தனம்” அவன் சொல்லச் சொல்ல, அவளது புருவம் இரண்டும் இடுங்கியது.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கையிலேயே ஒன்று இரண்டு முறை வெயிட்டர் அங்கே வர முயல, அவனைப் பார்வையாலும், செய்கையாலும் தடுத்துக் கொண்டிருந்தான் கார்முகில். அதை சுமித்ராவும் கவனித்தாள்.

“உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா? இல்லையா? நீங்க அதைச் சொல்லுங்க” அவள் கேட்டு வைக்க,

“உங்களைப் பிடிக்கலைன்னு கண்ணில்லாத குருடன் கூட சொல்ல மாட்டான். ஆனா இது வேற… ஒத்துவராதுன்னு நான் சொல்லிட்டு இருக்கேன்…” அவன் அத்தனை வேகமாக பதில் சொல்ல, அவளுக்குள் சின்ன கீற்றாக புன்னகை.

‘குருடன் கூடவா?’ உள்ளுக்குள் கேட்டுக் கொண்டவள், “ஏன் ஒத்து வராது? எனக்கு ஒரு ரீசன் சொல்லுங்க…” அவனிடம் கேட்டாள்.

“எதார்த்தத்தை, உண்மையை நாம நேருக்கு நேரா சந்திக்கும்போது, அது ரொம்ப வலிக்கும்ங்க. இப்போ சாதாரணமாகவே படிக்கற ஒரு குழந்தையாவே எடுத்துக்கோங்க, உனக்கு மேத்ஸ் வராது, வராதுன்னு தொடர்ந்து சொல்லிட்டே வந்தா, நிஜமாகவே அந்த குழந்தைக்கு ‘நமக்கு அது வராது’ன்னு மூளையில் பதிஞ்சு போய்டும்.

“கடைசி வரைக்கும் அது தனக்கு வருமா? வராதான்னே பார்க்காமலே தோற்றுப் போய்டும். அப்படித்தான் இந்த விஷயமும்… ‘உனக்கு இவன் இணையே கிடையாது, உனக்கு இன்னும் பெட்டரா ஒருத்தன் கிடைச்சிருப்பான், உனக்கு அவன் பொருத்தமே இல்ல’ இப்படி தொடர்ந்து நீங்க கேட்க வேண்டி வரும்.

“அப்போ உங்களுக்கே ‘நாம தப்பான முடிவை எடுத்துட்டோமோ?’ன்னு யோசிப்பீங்க. அப்படி நீங்க யோசிச்சுட்டாலே நம்ம வாழ்க்கை நரகமாயிடும். இதை எல்லாம் இப்போவே அவாய்ட் பண்ணிடலாம் என்ற நல்ல எண்ணத்தில் தான் சொல்றேன். உங்க முடிவை நீங்க இன்னொரு முறை பரிசீலனை பண்ணுங்க” நிதானமாகவே அவளுக்குப் புரிய வைக்க முயன்றான்.

நீங்க சொல்ற இந்த விஷயத்துக்கு நான் வாய் வார்த்தையா எந்த சமாதானமும் சொல்ல முடியாது. நாம வாழப்போற வாழ்க்கைதான் உங்களுக்குத் தேவையான பதிலைக் கொடுக்கும்” அவள் சொல்ல, அவனுக்கு ஒரு மாதிரி வாயடைத்துப் போயிற்று.

இதுவரை எல்லா பெண்களிடம் இருந்தும் மறுப்பை மட்டுமே கேட்டுப் பழகி இருந்தவனுக்கு அவளது இந்த வார்த்தைகள் பலமாக தாக்கிற்று. ‘என்கூட வாழறேன்னு சொல்றாளா?’ அவன் மனது அவளை ஒருமையில் அழைத்து மனதுக்கு நெருக்கமாக்கிக் கொண்டது.

அவன் ஒருமாதிரி திக்குமுக்காடிப் போய் அவளைப் பார்த்தான். அத்தனை நேரமாக பேசியவன், அவளை நேருக்கு நேராகப் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டிருந்தான். அந்த நொடி அவனது பார்வை அவளை ஊடுருவ முயன்றது.

அவளது பார்வையோ அவன் முகத்திலேயே நிலைத்திருக்க, இதுவரை அவனைப் பார்க்கும் பெண்கள் எல்லாம் தன்னைப் பார்த்தவுடன் முகத்தை சுழிப்பார்கள். ஆனால் இவளோ அசையாமல் பார்த்திருக்க, கண்கள் வழியே காமன் கணை இறங்கும் உணர்வு.

‘அப்படி இவள் எதையாவது செய்கிறாளா?’ என அவன் பார்த்திருக்க, அவள் கொஞ்சமாக தலையை சரித்து, இதழ் பிரித்து புன்னகைக்க, இமைக்க மறந்தான். ‘இந்த லிப்ஸ் எனக்கா?’ எண்ணியவன், அந்த நினைப்பில் திடுக்கிட்டு அவள் கண்களை ஏறிட்டான்.

அந்த அவளது கண்கள் இரண்டும் அவனைக் காந்தமென சுருட்டி இழுக்க முயல இப்படிப்பட்ட ஒரு பார்வையையும் அவன் தன் வாழ்நாளிலேயே கண்டது இல்லை. அவனை வசீகரிக்கும் பார்வை, கட்டி வைக்கும் பார்வை… அதில் மொத்தமாக கட்டுண்டு போகவே அந்த காளை மனம் விரும்பியது.

‘என்னடா இப்படி ஆயிட்ட?’ எண்ணியவனுக்கு தன் பார்வைகள் அவள்மேல் பதிவதை தடுக்கத்தான் முடியவில்லை. நல்ல வேளையாக அந்த நேரம் வெயிட்டர் அவர்களிடம் ஆர்டர் எடுக்க வர, “ஜஸ்ட்டு மிஸ்ஸு…” அவன் சன்னமாக முனகிக் கொண்டான்.

அவன் முனகியது அவளுக்கு ஸ்பஷ்டமாக கேட்டு வைக்க, ‘அப்படி எல்லாம் மிஸ் ஆக விடுவேனா என்ன?’ தனக்குள் எண்ணிக் கொண்டாள். அத்தனை நேரமாக வெயிட்டரை தடுத்துக் கொண்டிருந்தவன், இப்படிச் செய்தால் அவளுக்கு சிரிப்பு வராதா என்ன?

“என்ன சாப்பிடறீங்க சார்?” வெயிட்டர் கேட்க,

அவனோ, “தேங்க்ஸ் ப்ரோ…” கார்முகில் சொல்ல, அந்த வெயிட்டரோ எதற்கு அந்த நன்றி எனப் புரியாமல் குழம்பிப் போனான்.

“சார்…?” அவன் புரியாமல் திகைக்க,

“அண்ணா, நீங்க ஆர்டர் எடுத்துக்கோங்க… முதல்ல கொஞ்சம் கேசரி, ஒரு காபி… ஒரு தோசை. உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க…” கார்முகிலிடம் சொன்னாள்.

அங்கே எதையுமே அவளோடு அமர்ந்து உண்ணக் கூடாது என அவன் எடுத்திருந்த முடிவு தவிடுபொடியாகிப் போனது.

“எனக்கும் ஒரு காபி, பொங்கல்…” அவன் சொல்ல, அந்த வெயிட்டர் அங்கிருந்து அகல, தன் அலைபேசியில் பார்வையைப் பதிக்க முயன்றான். அவனால் முயல மட்டுமே முடிந்தது… சிந்தையோ, ‘இப்படி ஒரு ரோஸ் கலர்ல இருக்கறாளே… முகம் மட்டும்தான் இந்த கலரா இல்லன்னா மொத்தமாவே இதே கலர்லதான் இருப்பாளா?’ சிந்தை தறிகெட்டு ஓடியது.

சுமித்ராவோ, வேறு நேரமாக இருந்திருந்தால், தனக்கென பார்த்திருக்கும் மாப்பிளை இப்படி அவளை அமர்த்திக் கொண்டு அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தால் ஆத்திரமாகி இருப்பாள்.

‘என்னைவிட, அவன் அலைபேசிதான் முக்கியம்ன்னா எதுக்கு இங்கே வந்தானாம்? நான் இவனுக்கு தேவையே கிடையாது’ என முடிவுக்கு வந்து அப்படியே எழுந்து சென்றிருப்பாள்.

ஆனால்… கார்முகில் தன்னை தவிர்க்க முயன்று அது முடியாமல், பிடிவாதமாக அதைச செய்தாக வேண்டும் என்ற முடிவோடு தன் அலைபேசியில் கவனம் வைக்க முயல்வது அவளுக்கு நன்றாகவே புரிந்தது. அவன் மனதுக்குள் நடக்கும் போராட்டமும், அவன் கண்கள் தன்மேல் பதிய துடிப்பதும் கூட அவளுக்குப் புரிந்தது.

“முகி…” அவள் அழைக்க, சட்டென நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அந்த பார்வையில் என்ன இருந்தது? திகைப்பா? பரவசமா? நம்ப முடியாத தன்மையா? அவள் சிந்திக்க, அவனது மூளையோ, ‘என் பேர் இம்புட்டு அழகா?’ என உள்ளுக்குள் ஜொள்ளிக் கொண்டிருந்தது.

அவன் ‘அப்படி’ப் பார்க்கவே, அது அவளுக்குப் புரியாமல் போக, “என்ன? கார்முகில் தானே உங்க பேர்?” ஒரு வேளை தான் ஏதும் மாற்றி அழைத்துவிட்டோமோ என எண்ணியே கேட்டாள்.

“ம்… ஆமா…” அவர்கள் சொல்லிக் கொண்டிருக்க, வெயிட்டர் கேசரியை அவர்களுக்கு முன்பாக வைத்தான்.

வைத்தவன் அங்கிருந்து செல்ல முயல, “ஒரு நிமிஷம்…” என்று அவனைத் தடுத்துவிட்டு கார்முகிலிடம் திரும்பினாள்.

“முகி… உங்களுக்கு கேசரி ஓகேயா? இல்லன்னா வேற ஸ்வீட் சொல்லவா? காமனா எல்லாருக்கும் கேசரி புடிக்கும்னு சொல்லிட்டேன், உங்களுக்கு பிடிக்குமா என்னன்னு தெரியலை அதான்…” அவள் தயங்க, அவளைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தான்.

“எனக்கு ஓகே தான்…” அவன் சொல்லவே, கேசரி கிண்ணத்தை அவன் பக்கம் நகர்த்தினாள்.

“லேடிஸ் ஃபர்ஸ்ட்…” அவன் சொல்ல, மறுக்காமல் ஸ்பூனால் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். நெய் மணக்க, ஆவி பறக்க… அந்த எல்லோ வர்ண கேசரியை அவள் சுவைத்து விழுங்க, அது அவள் தொண்டைக் குழிக்குள் இறங்குவது கூட அவன் கண்களுக்குத் தெரிந்தது.

“நீங்களும் எடுத்துக்கோங்க…” அவள் சொல்ல, அந்த கேசரி கிண்ணத்தில் இருந்த இன்னொரு ஸ்பூனைப் பார்த்தவன், மானசீகமாக அந்த வெயிட்டரை அர்ச்சித்தான். கார்முகிலின் பார்வை அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் அவள் கரத்தில் இருந்த ஸ்பூனில் அவன் பார்வை தொட்டு மீள, அதைச் சரியாக அவள் கண்டு கொண்டாள்.

‘அடப்பாவி டேய்… இவ்வளவு நேரமா என்னவோ இது ஒத்துவராது, சரி வராது, எதார்த்தம் வேற, இது அதுன்னு எனக்கு கிளாஸ் எடுத்துட்டு, இப்போ உனக்கு என் எச்சில் ஸ்பூன் வேணுமா?’ எண்ணியவள், கண்களை சின்னதாக சுருக்கி குறும்பாக அவனைப் பார்த்தாள்.

‘ஐயோ… நான் பார்த்ததை பார்த்திருப்பாளோ?’ ஒரு மாதிரி தடுமாறிப் போனான்.

“தே…தேங்க்ஸ்…” என்றவாறு கேசரியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். அந்த நேரத்தின் இனிமையும், அந்த கேசரியின் தித்திப்பும் அவனுக்குள் இறங்க, திக்குமுக்காடிப் போனான்.

தன் அலைபேசியை உயிர்ப்பித்து, கேமராவை ஆன் செய்து தன் முகத்தை தானே பார்த்துக் கொண்டான். ‘டேய் கருவாயா… நிஜமாவே நீதானாடா? உன் முகரைக்கு இப்படி ஒரு அழகியாடா?’ தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

அவன் செய்கைகளை எல்லாம் அவளும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். “முகி… ஒரு நிமிஷம்… உங்க ஃபோனைக் கொடுங்க” அவள் கேட்க, ஏன் எதற்கு எனக் கேட்காமல் அதை அவள் பக்கம் நீட்டினான்.

“இங்கே பாருங்க…” என்றவள், அவன் பக்கமாக கொஞ்சம் சாய்ந்து, “நீங்களும் கொஞ்சம் முன்னாடி வாங்க” அவள் அழைக்க, மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போன்று அவள் அழைப்புக்குச் சென்றான்.

சில அழகான செல்ஃபிக்களை அவள் க்ளிக் செய்ய, முதலில் தன் அலைபேசியில் பார்வையை பதித்தவன், பிறகு அதில் தெரிந்த அவள் முகத்தில் பார்வையை நிலைக்க விட்டான். அடுத்ததாக தன்னை நிஜத்தில் நெருங்கி இருந்த அவள் முகத்தைப் அவன் பார்க்க, அத்தனையையும் நிழல் படமாக பதிய வைத்துக் கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட பத்து புகைப்படங்கள்… அனைத்தையும் தன் அலைபேசிக்கு அனுப்ப வேண்டி, தன் எண்ணை அவள் டயல் செய்ய, ‘ஏலியன்’ என அவளது பெயர் பதியப் பட்டிருக்க, திகைத்துப் போனாள்.

அவளது முகத்தில் திகைப்பை பார்த்த பிறகுதான், அவன் தன் அலைபேசியில் பார்வையைப் பதித்தவன், அதில் ஒளிர்ந்த அவள் எண், பெயரைப் பார்த்துவிட்டு கண்ணை விரித்து விழித்தான். அவனது அந்த வெண்ணிற விழிகள் சாசர்போல் விரிய, “அது… அது…” என்ன சொல்லி சமாளிப்பது எனத் தெரியாமல் தடுமாறினான்.

‘இவரை கட்டிக்க இந்த கிரகத்தில் இருந்து எவளும் வர மாட்டாளாம். ஏலியன் தான் வருவாளாமாம்’ அவன் எந்த எண்ணத்தில் தன் பெயரை அப்படி பதிவு செய்திருப்பான் என்பது புரிய, முகத்தை கோபம்போல் மாற்றிக் கொண்டாள்.

அந்த புகைப்படங்களை தன் அலைபேசிக்கு அனுப்பிவிட்டு, அவனிடம் அலைபேசியை திருப்பிக் கொடுத்துவிட்டாள். அடுத்ததாக பேரர் வந்து தோசையையும், பொங்கலையும் வைத்துவிட்டுச் செல்ல, அமைதியாக அவள் உண்ணத் துவங்கவே தானும் பொங்கலை உண்ணத் துவங்கினான்.

‘ச்சே… இப்படி ஆகும்னு நான் யோசிக்க கூட இல்லையே’ தனக்குள் புலம்பிக் கொண்டான்.

‘கோபமா இருக்காளோ?’ என்று அவள் முகத்தை முகத்தைப் பார்த்தான்.

அவன் பார்ப்பது தெரிந்தாலும் அவள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. ‘என்னைப்பற்றிய நினைப்பு அவருக்குள் இல்லைன்னா கண்டுக்கவே மாட்டார். அப்படி ஏதாவது இருந்தால் கண்டிப்பா இறங்கி வருவார்…’ தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

உண்டு முடித்து, காபி வர அதையும் குடித்து முடிக்கவே, அவள் அவனை ஏறிட்டாள். பில் வர, அதை அவள் எடுத்துக் கொள்ளவே, “நான்தான் உன்னை வரச் சொன்னேன், சோ… நான் பே பண்றதுதான் முறை” அவன் சொல்ல, அவனிடம் கொடுத்து விட்டாள்.

பில் கொடுத்து முடிக்கவே, அவள் எழுந்துகொள்ள, “உன்னை நான் ஹேர்ட் பண்ணி இருந்தால் சாரி… உன் நம்பரை எப்படி சேவ் பண்றதுன்னு தெரியாமல்தான்…” என்றவாறு அவன் படபடக்க, ‘உன்னை நான் நம்பவில்லை’ என அவள் பார்த்து வைத்தாள்.

அது அவனுக்குப் புரிய தன் சமாளிப்பை நிறுத்திக் கொண்டான். அவளோ… “சரி… இப்போ நம்ம ரெண்டுபேரோட நிறத்தை ஒரு ஓரமா தள்ளி வச்சுட்டு, உங்க முடிவு என்னன்னு சொல்லுங்க” அவள் கேட்க, அவனுக்கு ஒரு பெருமூச்சு எழுந்தது.

“வாங்க… நடந்துட்டே பேசுவோம்…” அவன் சொல்ல, அவனது மரியாதை தன்மையான அழைப்பு திரும்பி வந்திருப்பதை கவனித்தாள்.

“அந்த ஒரு விஷயத்தை ஒதுக்கிட்டா, நான் மறுப்பதற்கு எதுவுமே இல்லை. ஆனா…” அவள் எதையோ சொல்லப் போக, ‘ஆனா…’ என இடையிட்டு நிறுத்தினான்.

“சரி… ஒரு ஒரு வாரம்… நான் உங்களோடவும், நீங்க என்னோடவும் இருக்கலாம். பழகிப் பார்க்கலாம், உங்க நட்பு, என் நட்பு எல்லாரையும் சந்திக்கலாம். பிறகும் உங்க முடிவில் மாற்றம் இல்லை என்றால்… ஐ’ம் இன்…” அவன் சொல்ல,

‘அப்போ இந்த ஒரு வாரமும் எனக்குத்தான்… அவருக்கு தேவையில்லை அப்படித்தானே? சரி அதையும் பார்த்துடலாம்” என எண்ணியவள் அதற்கு உடனே ஒத்துக் கொண்டாள்.

You may also like

1 comment

kothai suresh March 6, 2026 - 8:35 pm

சூப்பர்👌👌👌👌

Reply

Leave a Reply to kothai suresh Cancel Reply

About Me

Featured