Home PREMIUM NOVELSதளிர் – 02

தளிர் – 02

by Vathani S

தளிர் 2

பரந்து திரண்ட மேகக்கூட்டங்களுக்கு நடுவே தவித்து திணறிக் கொண்டிருந்தது வானில் தேய்கின்ற நிலவு. மறைவதும் பின் மீள்வதுமாக தன் சுயத்தை இந்த உலகிற்கு அறிவிக்க போராடிய அந்த நிலவை மீட்கத்தான் அங்கு ஆளில்லை.

தன் வாழ்வும் இப்படித்தானோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை நிசப்தியால். முட்டி மோதி இந்த உலகில் வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாலும், விடாது துரத்தும் இந்த விதியை என்ன செய்வது.

ஆட்டம் போட்டு அப்போதுதான் களைத்துப்போய் உறங்கிய மகளைப் பார்த்தாள். தன் வயிற்றில் வளர்வதற்கான ஒரு இடத்தைக் கொடுத்ததைத் தவிர, இந்தக் குழந்தைக்கும் தனக்கும் என்ன சம்மந்தம் என்று மகள் வயிற்றில் இருக்கும்போது பலமுறை நினைத்ததுண்டு.

அவள் துள்ளும் போதும் அசையும் போதும் உண்டான மகிழ்ச்சையைக்கூட கட்டுப்படுத்தியிருந்தாள். எல்லாம் தசிரா எட்டுமாதக் கருவாக இருக்கும் வரைதான். அதன்பிறகு நடந்த செயல்களில் அவளுக்கான உலகமே குழந்தை மட்டும்தான் என்றான பிறகு, அவளது ஒவ்வொரு வளர்ச்சியிலும் மனம் ஒன்றி ரசித்து, அதைக் கொண்டாடி மகிழ்ந்தாள்.

இப்போதும் தன் கட்டை விரலைப் பிடித்தபடி கண்ணயர்ந்த மகளை நினைத்து நெஞ்சில் பாரமேறியது. இந்தக் குழந்தை இல்லாமல் அவள் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவளுக்குத் தெரியும் நிச்சயம் விக்ரம் குழந்தையை வாங்காமல் விடமாட்டான் என்று.

சட்டத்திற்கு சாட்சிகளும் ஆதாரங்களும் இருந்தால் போதும். உண்மையும் உணர்வுகளும் வெறும் காட்சிப் பொருளாகிவிடும். இங்கு நிச்சயம் தான் காட்சிப் பொருளாவோம் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் இனி பின்வாங்க முடியாது, குழந்தையைக் கொடுக்கவும் முடியாது. பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகிறான் என்று என யோசித்தபடியே மகளின் அருகில் சாய்ந்தாள் நிசப்தி.

அந்த ஹோட்டலின் டெரசில் அடுத்த நாளின் வழக்குக்கான இரகசிய கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அன்று விக்ரம் கோவாவில் திரட்டிய செய்திகளையும் சாட்சிகளையும் மற்றவர்களிடம் காட்டிவிட்டு, தன் ஜூனியர் நரேனிடம் ஒரு பென்ட்ரைவை கொடுத்தான்.

அதை வாங்கிப் பத்திரப்படுத்திய நரேன், விக்ரமிற்கு இரண்டடி தள்ளி நின்றான் அவனுக்குப் பாதுகாப்பாக. நரேனின் சட்டைப் பட்டனில் பொருத்தப்பட்டிருந்தது இரகசிய கேமரா ஒன்று. அது அவர்களின் பாதுகாப்பிற்காக. விக்ரம் எங்கு சென்றாலும் இப்படியான முன்னெச்செரிக்கை நடவடிக்கையோடுதான் செல்வது.

விக்ரம் ராஜா வயது முப்பத்தி மூன்று. சென்னைதான் அவனுக்குப் பூர்வீகம். அவனும் அவன் நண்பன் சங்கரும் சிறு வயது முதலே நண்பர்கள். படிக்கும் போதே விக்ரமிற்கு சட்டப்படிப்பில் ஆர்வம் வந்துவிட, நண்பனுக்காக சங்கரும் அதேப் படிப்பை எடுத்தான். இருவரும் இளங்கலை பிஏ எடுக்க, வீட்டில் பெற்றோருக்கு இதில் ஏகப்பட்ட மன வருத்தம்.

ஆனாலும் மகன்களின் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை இரு பெற்றோரும். அந்த ஆசைக்கும் நம்பிக்கைக்கும் பேர் சேர்ப்பது போல இருவரும் இளங்கலையில் கோல்ட் மெடல் பெற்று, மும்பை நேஷனல் யுனிவர்சிடியில் சட்டப்படிப்பை படித்து, அதே யுனிவர்சிடியில் கார்ப்பரேட் லாவில் டாக்டரேட் முடித்து கோல்ட் மெடல் பெற்றவர்கள்.

முதலில் இருவரும் ஒன்றாகவே அலுவலகம் வைத்து நடத்திவர, சங்கரின் அப்பா எதிர்பாராமல் மாரடைப்பால் இறந்துவிட, அவன் கட்டாயமாகக் குடும்பத் தொழிலைப் பார்க்க வேண்டியச் சூழல் என்பதால், சட்டத் தொழிலுக்கு முழுக்கு போட்டிருந்தான்.

ஆனால் அதன்பிறகு விக்ரமோ சென்னையை மத்தியமாக வைத்து பல நகரங்களில், பல கம்பெனிகளின் மிகப் பெரிய சட்ட ஆலோசகர் ஆகியிருந்தான். அவர்களது குடும்பத் தொழிலை அவனது தங்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரமாண்டம் அவன் படிப்பில் மட்டும் அல்ல, தோற்றத்திலும் ஏன் அழகிலும்தான். தென்னிந்தியாவின் டாப் லிஸ்டில் இருக்கும் சில இளம் யுவதிகளின் கனவு நாயகன் நம் விக்ரம். ஆனால் அவனுக்கோ…?

ஒருவாறாக கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேற, வானத்தை வெறித்தபடி சிலையாக நின்றிருந்த விக்ரமின் உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தின் கண்கள் மட்டும் சிவந்து கிடந்தது. கருப்பு நிற சூட், வெள்ளைச் சட்டை, கருப்பு டை, என மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டியபடி நின்றிருந்தவனிடம் சிறு சலனம்.

கழுத்தை இறுக்கிய டையின் முடிச்சை மெல்ல தளர்த்தியவன், சற்று தள்ளி நின்று இவனது கோர்ட்டை கையில் வைத்தபடி, இவனையே பார்த்திருந்த நரேனை அருகே வருமாறு கண்களால் அழைத்தான்.

அவனும் அருகில் வர வானில் ஜொலித்த நிலவை அவனிடம் காட்டி, “என் ஸ்வாதி அங்க இருந்து என்னைப் பார்த்துட்டே இருக்கா நரேன். அவ ஏன் என்னை விட்டுட்டுப் போனா?” என்றவனின் குரலில் இருந்த வலி நரேனுக்கும் புரிந்தது.

மிகவும் சிரமத்திற்குப் பிறகு, “பாஸ் கிளம்பலாம், அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க. ரித்திகா மேடம் வேற திட்டி திட்டி மெசேஜ் போட்டுட்டு இருக்காங்க.” எனவும்தான் அங்கிருந்து நகர்ந்தான் விக்ரம்.

அவனது அந்த கருப்பு நிற ஐட்வென்டியின் ட்ரைவர் சீட்டில் அமரப் போனவனைத் தடுத்து, “சாரி பாஸ்” என்றுத் தலை குனிந்து நின்றான் நரேன்.

அவனைக் கடுமையாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு கார் சாவியை அவன் கையில் எறிந்துவிட்டு, பின்னிருக்கையில் சென்று அமர்ந்தான்.

சீட் பெல்டை அணிந்தவாறே, “அந்தப் பொண்ணு நிசப்தாவை எப்போ மீட் பண்ணப்போறோம்?” என்றுக் கேட்டான் சாதாரணமாக.

“மார்னிங்க் எய்ட் தர்டி பாஸ்.” என்றான் நரேனும்.

“ஓ… அந்த டைம் குட்டிப் பொண்ணு எழுந்துப்பாளா? மீட்டிங் எங்க?” என்றான் யோசனையாக.

“வீட்டுக்கு எல்லாம் யாரும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க பாஸ். நம்ம ஆஃபிசே ஓகேன்னுதான் சொன்னாங்க.” என்று நரேன் சொல்ல,

‘திமிர் பிடிச்சவ’ என மனதுக்குள் கடுப்பாக நினைத்தாலும் வெளியே, “ஓகே, அந்த பொண்ணு எந்த லாயர்கிட்ட கேஸை கொடுத்துருக்கா? எனி ஐடியா?” என்று யோசனையாகக் கேட்டவனிடம்,

“நோ பாஸ், இப்போ வரை யாரையும் அப்ரோச் பண்ணலன்னுதான் கேள்விப்பட்டேன்.” என்று நரேன் தனக்குத் தெரிந்த தகவலைக் கொடுக்கவும், “ஓ… பட்…” என்ற விக்ரமின் முகம் யோசனையானது.

தன் மொபைலில் இருந்த காலண்டரில் அடுத்த நாளுக்கான செட்யூலை பார்த்துவிட்டு, கண்மூடி இருக்கையில் சாய்ந்தவனின் கண்களுக்குள் ஸ்வாதி வந்து மையலாகச் சிரித்து சென்றாள். இவனது பைத்தியக்காரக் காதலி, மனைவி!

பேரழகி என்ற வார்த்தையால் கூட அவளது அழகை அளவிட முடியாது. தொழில் காரணமாக நண்பனின் வீட்டுக்குச் செல்லும் போதுதான் அவளை முதன்முதலில் பார்த்தான். அவனைப் பார்த்ததும் விழிகள் விரித்து மையலாகச் சிரித்தாள் பெண். அன்று விழுந்தவன்தான் இன்று வரை அந்த மையலில் இருந்து மீண்டு வர முடியவில்லை அவனால்.

அதுவரை எந்தப் பெண்ணின் பின்னாலும் செல்லாத மனம் முதல்முறையாக ஸ்வாதியின் பின்னால் நாய்க்குட்டியாக ஓடியது.

அவளைப் பிடித்திருக்கிறது என்றுத் தெரிந்தபிறகு நிமிடமும் தாமதிக்காமல், திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்று நினைக்க, தடையாக வந்து நின்றான் நண்பன்.

இருவருக்குமே ஒன்றாகத் திருமனம் நடக்க வேண்டும் என்று பெரியவர்கள் ஆசைப்படுவதாகக் கூற, பெண் எடுத்து பெண் கொடுப்பதாக முடிவு செய்ய, அப்படியேத்தான் இருவரின் திருமணமும் முடிந்தது.

ஃபைவ் ஸ்டார் போல இருந்த அந்த வீட்டின் முன்னே வந்து காரை நிறுத்தினான் நரேன். “ஆல்ரெடி ரொம்பவே லேட் ஆகிடுச்சு பாஸ். ஸ்லீப் வெல் ப்ளீஸ்.” என்றவன் அவனை வீடு வரைக்கும் வந்து விட்டுவிட்டுச் சென்றான்.

விக்ரம் வீடு வர நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அவன் வரும் வரை அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார் விக்ரமின் அம்மா ரேணுகா. அவரைப் பார்த்ததும் குற்ற உணர்வில், “சாரி ம்மா…” என்றவன், அவருக்கு அருகில் சென்று தொப்பென்று அமர்ந்துகொள்ள, அங்கிருந்து வந்த வாடையே சொன்னது, அவன் தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்கவில்லை என்று.

அவர் எதுவும் பேசாமல் மகனையேப் பார்க்க, அந்தப் பார்வையில் மீண்டும், “சாரி ம்மா…” என்றான். தப்பு செய்துவிட்டு மன்னிப்புக் கேட்டுவிட்டு, பாவமாக நிற்கும் மகனைப் பார்த்தால் எந்த தாயுள்ளம்தான் தவிக்காது. அது ஆறு வயது மகனாக இருந்தால் என்ன? அறுபது வயது மகனாக இருந்தால் என்ன?உள்ளம் துடித்தாலும் அவர் அமைதியைக் கைவிடவில்லை.

“ம்மா.. உங்களுக்குத் தெரியுமா? இன்னைக்கு தசிக்குட்டி வந்துட்டா. அப்படியே உங்களை மாதிரியே இருக்காம்மா. என்னால பக்கத்துல போய் கூட கொஞ்ச முடியல. இந்தக் கைல அவளைத் தூக்கி கொஞ்ச முடியல, அவ கண்ணு ரெண்டும் அப்படியே அப்பாதான். புதுசா யாரையும் பார்த்தா எப்படி ஆராய்ச்சியா பார்ப்பார், அப்படித்தான் பார்க்குறாம்மா. எப்போம்மா இங்க வருவா? எப்போ அவளை நான் தூக்கி கொஞ்சுவேன்?” என்றபடியே சோபாவில் சாய்ந்தவனைப் பார்த்து உள்ளம் கொதித்தது.

‘கம்பீரமான தன் மகனைப் பைத்தியக்காரனைப் போல் மாற்றிவிட்டு சென்றுவிட்டாளே பாவி’ என ஸ்வாதியை மனதுக்குள்ளேத் திட்டியவர், “ராஜா நான் சொல்றதை நீ கேட்ப தானே கண்ணா… தசிக் குட்டி நம்மக்கிட்ட வரதுக்கு, நாம இவ்வளவு கஷ்டப்படவே வேண்டாம். அந்தப் பொண்ணு நிசாவை நீ கல்யாணம் செய்தாலே போதும்.” என்று அவர் முடிக்கக்கூட இல்லை, முகத்தில் சுடு தண்ணீர் விழுந்தது போலத் துடித்து எழுந்துவிட்டான்.

“ம்மா போதும். போய் தூங்குங்க.” என்று அடக்கப்பட்டக் குரலில் சொல்லிவிட்டு நகரப் போனவனின் கையைப் பிடித்தவர் அவனை ஆழ்ந்து பார்க்க, அந்தப் பார்வையில் தலை குனிந்தவன், “ஸ்வாதி இடத்துல என்னால யாரையும் வச்சுப் பார்க்க முடியாதும்மா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.” என மன்றாடியவனை என்னச் சொல்லித் தேற்றுவது என்றேத் தெரியவில்லை அவருக்கு.

ஆனால் இப்போது இதே மனநிலையில் மகனை விட அந்த தாயால் முடியவில்லை. விட்டால் இரவெல்லாம் ஸ்வாதி ஸ்வாதி என்று பைத்தியம் போல் புலம்பிக் கொண்டிருப்பான். நல்ல மனைவிக்காக உருகினால் பரவாயில்லை. ஏமாற்றிச் சென்ற ஒருத்திக்காக உருகுவததைத்தான் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதனால் ஒரு முடிவுக்கு வந்தவராக, “ராஜா வா சாப்பிடலாம்.” என்றத் தாயைக் கோபமாகப் பார்த்தவன், “ஏன் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க? உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? என்னம்மா நீங்க?” என்றவன் தள்ளாடியபடியே அவரை அழைத்துக்கொண்டு வந்தவன் டைனிங் சேரில் அமர வைத்தான்.

“நீயும் உட்காரு.” என்றவரை முறைத்தவன், அமைதியாக இருவருக்கும் தட்டு எடுத்து வைத்தான். ரேணுகா அமைதியாக மகனின் நடவடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“எங்க போனா உங்க பொண்ணு? நீங்க சாப்டீங்களா இல்லையான்னு கூட பார்க்காம என்ன பண்றா?” என்றுத் தங்கையைக் கடித்து குதற,

“அவ எதுக்கு இங்க இருக்கணும்? அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு ராஜா, அதை மறந்திடாத. சங்கர் வந்ததும் அனுப்பி வச்சிட்டேன்.” என்றார் குரலில் அழுத்தத்தைக் கூட்டி.

“ம்ச்… எதுக்கு அனுப்புனீங்க? இந்த மாதிரி நேரத்துல ஏன் போறா? அவ புருஷன் வந்து கூப்பிட்டா உடனே போயிடணுமா? இடியட்…” என்று வாய்க்கு வந்ததைத் திட்ட,

“புருசன் வந்து கூப்பிட்டா போய்தான் ஆகனும் ராஜா. எல்லாரும் ஸ்வாதி மாதிரியே இருப்பாங்கன்னு நினைக்கக் கூடாது. என் பொண்ணை நான் அப்படி வளர்க்கல.” என்றார் பட்டென்று.

“ம்மா… நான் என்ன பேசுறேன், நீங்க என்ன பேசுறீங்க? எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க? ஆரம்பத்துல இருந்தே உங்களுக்கு ஸ்வாதியைப் பிடிக்கல, அதுக்காக அவ உயிரோட இல்லாத இந்த நேரத்துலயும் இந்த வெறுப்பைக் காட்டணுமா?” என வலி நிறைந்தக் குரலில் கேட்க,

“எனக்கு இவதான் வேணும்னு நீ சொன்னதும், உன்னோட விருப்பம் மட்டும்தான் முக்கியம்னு எதையும் விசாரிக்காம, உங்க கல்யாணத்தை நடத்தினது நான்தான். அதை மறந்துடாதே ராஜா, ஆனா அது எவ்வளவு தப்புன்னு பலநாள் யோசிச்சிருக்கேன்.” என்றவரை அதிர்ச்சியாகப் பார்த்தான் விக்ரம்.

“எல்லா பொண்ணுங்களுக்கும் இந்த மாதிரி நேரத்துல புருஷன் கூட இருந்தா நல்லா இருக்கும்னு நினைப்பாங்க விக்ரம். அதுலையும் மாமியாரும் புருசனும் தாங்கும்போது அவ ஏன் இங்க இருக்கப் போறா? அதோட இதென்ன முதல் பிரசவமா அவ இங்க இருக்க? மூனாவது பிரசவம் தானே…

பொதுவா எல்லா பொண்ணுங்களும் புருசன் எங்க இருந்தாலும் அங்கதான் இருக்கணும்னு நினைப்பாங்க. உன் ஸ்வாதி போல அம்மா வீட்டுலையே இருக்கணும்னு நினைக்க மாட்டாங்க.” என்றார் காட்டமாக.

அதில் அடிபட்ட பார்வைப் பார்த்தவன் அமைதியாக அமர்ந்துவிட, “ராஜா உன்னை நான் இப்படித்தான் வளர்த்தேனா? எப்போ இருந்து நீ இவ்வளவு முரட்டுத்தனமா மாறின?” என்றார் ரேணுகா,

“ம்மா ப்ளீஸ்… ஸ்வாதியை தப்பா பேசாதீங்க. அவ என்ன தப்பு செஞ்சிருந்தாலும், எனக்கு நல்ல மனைவி. என்னோட நல்லதுக்காகத்தான் செஞ்சிருக்கான்னு நான் நம்புறேன். என் நம்பிக்கையை பொய்யாக்கணும்னு நினைக்காதீங்க.” என்றான் கரகரத்தக் குரலில்.

“ராஜா தப்பு நம்ம பக்கம் இருக்குப்பா, அதை மறந்துடாதே. ஒரு பொண்ணோட மானத்துல விளையாண்டது உன்னோட மனைவி. அதையும் மறந்துடாத.” என்றவர் தன் அறைக்குச் சென்றுவிட, அப்படியே தலையை சாய்த்துக்கொண்டான் விக்ரம்.

“ஸ்வாதி உன்னை யார் நம்பலன்னாலும், நான் நம்புறேன்டி.” என்று உதடுகள் முணுமுணுக்க, கண்களை மூடினான். மூடியவனின் விழிகளுக்குள், ‘ராஜ் அந்தப் பொண்ணு என்னை விட அழகி ராஜ்’ என்ற வார்த்தைகளைச் சொல்லி அழுதாள் ஸ்வாதி.

பட்டென்று கண்ணைத் திறந்தவன் வியர்த்து வலிந்த முகத்தை அழுந்த துடைத்தவன், “நோ ஸ்வா… நீ மட்டும்தான் எனக்கு அழகி. நீ மட்டும் தான்டி…” என்று உதட்டுக்குள் சொன்னவன், எதிலிருந்தோ தப்பிப்பது போலத் தன் அறைக்குள் நுழைந்துகொண்டான்.

***

You may also like

2 comments

mriomrio28399 January 29, 2026 - 5:30 pm

அதாவது குழந்தை தசிரா வேணும், நிசப்தா வேணாம் விக்ரமுக்கு. அதே மாதிரி நிசப்தாவுக்கும் குழந்தை தசிரா வேணும், விக்ரம் வேணாம்..
அதுக்குத்தானே இந்த வாய்க்கால் தகறாறு.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply
Kanimozhi February 1, 2026 - 7:32 pm

Looks like surrogate mother

Reply

Leave a Reply to Kanimozhi Cancel Reply

About Me

Featured