Home PREMIUM NOVELSதளிர் – 1

தளிர் – 1

by Vathani S

தளிர் 1

வானில் வட்டமிட்ட அலுமினியப் பறவை தரையிறங்கும் நேரம் வந்தது. சென்னை ஏர்போர்ட் வந்துவிட்டதாக விமானப் பணிப்பெண்ணின் அறிவிப்பைத் தொடர்ந்து, தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது மகள் தசிராவைத் தூக்கிக்கொண்டு இறங்கினாள் நிசப்தா.

கடந்து செல்பவர்கள் யாராக இருந்தாலும் ஒரு நொடியேனும் நின்று திரும்பிப் பார்த்துச் செல்லக்கூடிய பேரழகிதான். ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பேரழகி. பெயருக்கு ஏற்றாற் போல அமைதியான குனம் கொண்டவள்தான்.

அனைத்தும் தன்னைப் பாதிக்காத வரைதான், ஆனால் தன்னைச் சீண்டுகிறார்கள் என்று தெரிந்தால் அடுத்த நொடி அவர்கள் முன் துர்க்கையாகக் காட்சியளிப்பாள் நிசப்தி. ஏர்போர்ட்டில் ஃபார்மாலிட்டிஸ் அனைத்தையும் முடித்து வெளியில் வந்தவள் சுற்றிலும் பார்வையை ஓட்ட, சிரித்த முகமாக ‘தசிரா’ என்ற பெயர் பலகையைத் தாங்கி நின்று கொண்டிருந்தான் ரவி.

அவனைப் பார்த்ததும் எரிச்சலானவள் அருகே செல்ல, குழந்தைக்காக கையை நீட்டியவனிடம், அவனை உணர்வில்லாத ஒரு பார்வை பார்த்துவிட்டு மகளை அவனிடம் நீட்ட, ரவியோ அதையெல்லாம் கண்டுகொண்டது போலத் தெரியவில்லை. தசிராவை வாங்கிவிட்டு கார் சாவியை அவளிடம் கொடுத்தான்.

அவளும் தன்னுடைய லக்கேஜுகளை அடுக்கிவிட்டு முன்னே வந்து காரை எடுத்தாள். அவனோ குழந்தையிடம் ஐக்கியமாகிவிட, இவளோ தன் ஐட்வென்டியில் ஐக்கியமாகி விட்டாள். இரண்டரை வருடங்களுக்குப் பிறகு தன் காரைத் தொடுகிறாள்.

தந்தை முதன்முதலாக அவளுக்குப் பரிசளித்த கார். தன் இருபத்தி ஒராம் வயதில் கொடுத்த பரிசு. அந்தநாள் இன்றும் கண்முன் நிழலாக கடந்து போனது. ஒற்றைப் பெண்ணாக பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிந்தவளின் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடந்த விபத்தில், எத்தனை எத்தனை இழப்புகள். ஒரு பெண் எதையெல்லாம் இழக்கக்கூடாதோ அதையெல்லாம் இழந்துவிட்டாளே.

அடுத்து எதையும் யோசிக்க முடியவில்லை அவளால். மறந்துவிட்டோம், மறந்தேவிட்டோம் என்று நினைத்த அனைத்தும், இப்போது ஒரு வக்கீல் நோட்டிஸ் வழியாக அவள் வாழ்க்கையில் மீண்டும் படமெடுத்து நின்றது. யோசிக்கக்கூடாது, யோசிக்கவேக் கூடாது எனத் தலையை உலுக்கிக்கொண்டவள் சாலையில் கவனமானாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு தசிராவை விட்டுவிட்டு, அவளிடம் கவனத்தை திருப்பிய ரவி “எப்படி இருக்க நிசா? ட்ராவல் ஓகே தான? மேனேஜ் பண்ணிக்கிட்டத்தான? குட்டி எப்படி சமத்தா இருந்தாளா?” பதில் வராது என்றுத் தெரிந்தும் பேசினான்.

அவனை நக்கலாகப் பார்த்தவள், “எங்கிட்ட என்ன எதிர்பார்க்குறீங்க ரவி? நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லணும்னா இல்ல, நான் என்ன முடிவோட வந்துருக்கேன்னு உங்களுக்கு தெரியணுமா?” என்றாள் புருவத்தை உயர்த்தி.

‘இவளைப் பத்தி தெரிஞ்சும் பேசின என்னை, நானே செருப்பால அடிச்சிக்கணும்’ என மனதுக்குள் நினைத்தவன், “விக்ரம் பத்தி உனக்குத் தெரியாதது எதுவும் இல்ல, அவன் இதுவரைக்கும் எந்த கேஸ்லயும் தோத்தது இல்ல. இது அவனோட கேஸ், அவனே போட்ட கேஸ். எப்படி விடுவான்? ஜெயிக்கணும்னா எந்த லெவலுக்கும் இறங்குவான் நிசா.” என்றான் ரவி கொஞ்சம் பயமாக.

“ஹான்… அப்படியா? அதுக்காக என் பொண்ணைத் தூக்கி நீட்டச் சொல்றீங்களா? ஹான்! சொல்லுங்க… அது மட்டும் முடியாது. என்ன நினைச்சிட்டு அவன் இந்த கேஸ் ஃபைல் பண்ணான். அவன்தான இந்தக் குழந்தைக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லைன்னு சொன்னான்.” என ஆத்திரத்தில் கத்த,

“நிசா ப்ளீஸ்… கூல் டவுன். அது ஏன்னு உனக்கேத் தெரியும். ஸ்வாதி மேல இருந்த நம்பிக்கையிலதான், அவ அப்படி செஞ்சிருப்பான்னு அவனுக்கு அப்போ நம்பிக்கையே இல்லை. அதனால் தான். அவனோட தரப்பையும் நாம யோசிக்கணும்.” என்று இழுத்த ரவியை புருவம் சுருக்கிப் பார்த்தவள், “என்ன சொன்னீங்க? அவர் தோல்வியே சந்திக்காதவரா? எந்த கேஸ்லயும் தோத்ததே இல்லை, அப்படித்தான? அப்போ அந்த வரலாறை நாம மாத்தி அமைப்போம் ரவி. எல்லாத்துக்கும் ஆரம்பம்னு ஒன்னு இருக்கே, அப்போ அந்த விக்ரம் இந்த கேஸ்ல… ஹாஹா…” என்று வாய் விட்டுச் சிரித்தவள்,

“தி கிரேட் கிரிமினல் லாயர் விக்ரம் எங்கிட்ட, ஐ மீன் ஒரு பொண்ணுக்கிட்ட தோத்துட்டு போகப் போறார்.” என்றவளின் பேச்சில் இருந்த நக்கல் முகத்தில் சற்றும் இல்லை.

அத்தனை இறுக்கம் அவள் முகத்தில். சில நொடிகளில் தன்னைச் சரி செய்துகொண்டவள், ஒரு நமுட்டுச் சிரிப்புடன் காரைச் செலுத்துவதில் கவனமாகிவிட, இங்கு ரவிக்குத்தான் பிபி ஏகத்துக்கும் எகிறியது.

இவள் ஏதோ ஒரு முடிவுடன்தான் சென்னைக்கு வந்திருக்கிறாள் என்று மட்டும் புரிய, அமைதியாகத் தன் மொபைலில் இருந்து ஒரு மெசேஜைத் தட்டிவிட்டான். வந்த வேலை ஊத்திக்கொண்டது என்று.

இங்கு அதே சென்னை விமான நிலையம். கோவாவில் இருந்து வந்து இறங்கிய விமானத்தில் இருந்து அசாதாரன உயரத்துடன் கருப்பு நிற டெனிம் ஜீன்சும், முழங்கை வரை மடிக்கப்பட்ட வெள்ளைச் சட்டையுமாக வந்தவனைப் பார்த்ததும், பத்திரிக்கையாளர்கள் கூட்டம் அவனை மொய்த்துக்கொண்டது.

அவர்களைப் பார்த்ததும் வந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு வேக நடையுடன், பத்திரிக்கையாளர்களைத் தாண்டி முன்னே நடக்க, அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடி வந்தாள் ஒரு பெண் பத்திரிக்கையாளர் உஷா. அவனுக்கு முன்னே, “சார்… சார்…” என மூச்சிறைக்க நின்றவள், அவனை கிண்டலாக ஒரு பார்வைப் பார்த்து வைத்தாள்.

அந்தப் பெண்னைப் பார்த்ததும் சலிப்பாக உதட்டை சுருக்கியவன், “வாட்?” என கண்ணைச் சுருக்க, “சார் நீங்க போன கேஸ் பத்தி சொல்லுங்க சார், அக்கியூஸ்ட்னு தெரிஞ்சும் எப்படி சார் அவங்களுக்கு சப்போர்ட்டா நீங்க கேஸ் எடுத்து நடத்துறீங்க? இப்போகூட அது சம்மந்தமாதான் நீங்க கோவா போயிட்டு வரீங்கன்னு கேள்விப்பட்டோம், சொல்லுங்க சார், உங்க ட்ரிப் எப்படி போச்சு?” என மூச்சுவிடாமல் கேட்டாலும், அதில் ஒரு கிண்டல் தொனி இருந்தது.

அந்தப் பெண்ணை மேலிருந்து கீழாக ஒரு பார்வைப் பார்த்தவனுக்கு, அந்தக் கிண்டல் தொனி புரியாமல் இல்லை. ஷர்டில் மாட்டியிருந்த கூலரை எடுத்து அணிந்துகொண்டே, “ஸோ, வாட் யுவர் எக்ஸ்பெக்டேசன்?” என்றான் அடக்கப்பட்ட நக்கலுடன்.

அந்த ஒரு வார்த்தையிலேயே அந்தப் பெண்ணின் முகம் கோபத்தில் சிவந்துவிட, அவனை கடுப்பாகப் பார்த்துவிட்டு திரும்பி நடந்துவிட, “எக்ஸ்கியூஸ்மீ மிஸ்…” என்று சத்தமாக அழைத்தவன், “இதுதான் உங்க மேனர்ஸா? கொஸ்டீன் கேட்டுட்டு ஆன்ஸர் வாங்காம போறீங்க.” என அந்தப் பெண்ணைப் பார்த்து புருவம் உயர்த்திக் கேட்க,

அதற்குள் மற்ற பத்திரிக்கையாளர்களும் வந்துவிட, இவன் பேசியது அவர்களுக்கும் கேட்டுவிட, “என்ன உஷா, சாரோட பேட்டி கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம். நீ இப்படி நடந்துப்பனு நான் நினைச்சுக் கூட பார்க்கல. நீ ரெஸ்பான்ஸ் இல்லாம நடந்துக்கிட்டது நம்ம எடிட்டருக்கு மட்டும் தெரிஞ்சது, ரெண்டு பேர் வேலையும் ஸ்வாகாதான்.” எனக் கடுகடுவென பொரிந்து தள்ளினான் வினோத். உஷாவின் கேமராமேன், இருவரும் ஒரேப் பத்திரிக்கையில்தான் வேலை செய்கிறார்கள்.

அவனை ஒரு அனல் பார்வைப் பார்த்தவள், அதே பார்வையோடு விக்ரமையும் பார்த்துவிட்டு, “பொறுக்கி” என வாய்க்குள் முணுமுணுத்தபடியே வேகமாக நகர்ந்துவிட்டாள். இப்போது திருப்தியான ஒரு புன்னகையோடு மற்றவர்களைப் பார்த்து, “சாரி கைஸ், இந்த கேஸ்க்கான ரிபோர்ட்ஸ் நாளைக்கு கோர்ட்ல ப்ரடியூஸ் செய்வேன். அதுக்குப்பிறகு உங்களுக்கு ப்ராப்பர் நியூஸ் வரும்.” என்றுவிட்டு நடையைத் தொடர்ந்தவன், “விக்கி” என்ற பெயர் பலகையுடன் நின்றிருந்தவரிடம் சென்றான்.

“ஏன்டி உன்னை இங்க வரக்கூடாதுன்னு அவ்ளோ தூரம் சொன்னேன்ல, கேட்கவே கூடாதுனு முடிவோட இருக்கியா? ஆமா உன் பின்னாடியே சுத்துவானே உன் புருஷன் அவன் எங்க?” எனக் கடுப்புடன், அவள் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு மெதுவாக நடக்க,

“ம்ச்… விக்கி அவரை இப்படிப் பேசக்கூடாதுன்னு உங்கிட்ட பலமுறை சொல்லிருக்கேன், நீ கேட்கவே மாட்டியா? ரெண்டு பேரும் ஒன்னாதான் வந்தோம், அவர் அவரோட ஃப்ரண்டை அழைச்சிட்டு போயிருக்கார். என்னையும் கூப்பிட்டார்தான், நான்தான் நீ வருவன்னு வெயிட் பண்ணேன். பாவமே கூடப் பிறந்தவன் தனியா வருவான்னு இந்த மாதிரி நேரத்துலயும் நின்னேன் பாரு, என்னைச் சொல்லணும்டா பக்கி.” என அவளும் கடுப்புடன் மெதுவாக அசைந்தாடியபடி நடக்க ஆரம்பித்தாள்.

“உனக்கு நல்லா பேசக் கத்துக் கொடுத்துருக்கான் அந்த எரும. சரி இங்கையே நில்லு, நான் காரைப் பார்க்கிங்கில் இருந்து எடுத்துட்டு வர்றேன். எனக்கு ஆஃபிஸ்ல வொர்க் இருக்கு, உன்னை வீட்டுல விட்டுட்டு கிளம்புறேன்.” என்றவன், அவளை ஓரமாக நிறுத்திவிட்டு காரை எடுக்க நகர்ந்துவிட, அப்போதுதான் அவளது போனில் ஒரு மெசேஜ் வந்ததற்கான அடையாளம் காட்ட, எடுத்துப் பார்ர்த்தவள் அது கொடுத்த செய்தியில் தளர்ந்துதான் போனாள்.

“ம்ச்…” என சலிப்புடன் நின்றிருந்தவளின் அருகில் வந்து நின்றது அந்த ஐட்வென்டி. அவளைப் பத்திரமாக ஏற்றியவன், சீட் பெல்டையும் மாட்டிவிட்டு பொறுமையாகக் காரை ஓட்ட ஆரம்பித்தான்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு, “விக்கி…” என அவள் ஆரம்பிக்க, “ரித்தி, தசிக்குட்டி பத்தி மட்டும் பேசாத, வேற என்ன பேசணுமோ சொல்லு பேசலாம்.” என விக்ரமின் கண்டிப்பான வார்த்தைகளில் எரிச்சலானவள்,

“எனக்கு உன் பொண்ணைப் பத்தி பேச என்ன இருக்கு? ஆனா அப்படி ஒரு பொண்ணு இருக்குன்னு உனக்கு சொன்னதே நான்தான் அதை மறந்துடாத.” என கோபமாகப் பேசியவள், “இப்பொ நான் அதைக் கேட்கல, எப்படியும் என்ன செஞ்சும் இந்த கேசை நீ ஜெயிச்சிடுவன்னு எனக்குத் தெரியும்.

ஆனா நிசா… நிசாவுக்கு என்ன வழி? அவளை என்ன செய்யப்போற? நீ ஏத்துக்கிட்டாலும் ஏத்துகலன்னாலும் உன் குழந்தைக்கு அவதான் அம்மா அதை மறந்திடாத…” என்று அவனுக்கு சளைக்காத குரலில் அவளும் பதில் கொடுத்தாள்.

“எஸ்… ஐ க்னோ. பட் ஷீ இஸ் நாட் மை வொய்ப்.” என்றான் அடக்கப்பட்டக் கோபத்துடன். அந்தக் குரலே அடுத்து எதுவும் பேசக்கூடாது என எச்சரிக்க, ரித்தியும் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, விக்ரமின் உடல் வழக்கம்போல இறுகிக்கொள்ள, முகமோ கல்லாகிப் போனது.

அடுத்த நிமிடங்கள் எல்லாம் கடந்து போனவைகளை அசைபோடத் தேவையான அவகாசமாக இருக்க, ஆனால் அதை முயன்று ஒதுக்கித் தள்ளினான் விக்ரம். தன் ஊனிலும் உயிரிலும் கலந்து, தன்னோடு வாழ்ந்தவளுக்காக அவளது ஒற்றை அணைப்புக்காக மனம் ஏங்கியது.

ஏங்கியது எதுவும் கிடைக்காது என்றுத் தெரிந்தும், ஏங்கும் மனதை என்ன செய்ய? ஏதேதோ யோசனைகள் ஓட, காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் முகத்தைப் பார்த்த ரித்திக்கும் மனம் பாரமாகப் போனது.

எப்படி இருந்தவன் தன் தமையன். அவன் வாழ்க்கையில் வசந்தமாக வந்தவள், வசந்தத்தை மொத்தமாக தன்னுடனே எடுத்துச் சென்றுவிட்டாளே… என்று மனம் அண்ணனுக்காக ஊமையாக அழுதது. தங்கையைப் பத்திரமாக வீட்டில் விட்டவன், அடுத்து அவளிடம் போய் வருகிறேன் என்று கூடச் செல்லாமல் தன் அலுவலகத்துக்கு சென்றுவிட்டான்.

காரை ஓட்டிக் கொண்டிருந்த நிசப்தி தன் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்தாள். இந்த மூன்று வருடத்தில் பல மாறுதல்கள் அந்த தெருவில். வீடுகள் அனைத்தும் பல மாடிக் கட்டிடங்களாக, ஃப்ளாட்டுகளாக மாறி இருந்தன. அவளும் அவள் தந்தை வேனுகோபாலும் இங்கு வந்து பத்து வருடங்கள் ஆகியிருந்தது.

நிசப்திக்கு சொந்த ஊர் திருச்சிக்குப் பக்கம். அவளது தாயின் எதிர்பாராத இறப்பிற்குப் பிறகு, இருவருக்கும் ஒரு மாறுதல் வேண்டியிருந்தது. அதனால் நிசப்தியின் படிப்பைக் காரணம் காட்டி சென்னை வந்தனர் இருவரும்.

சென்னையின் அவசர வாழ்க்கை, மெல்ல மெல்ல அவர்களுக்கு ஒரு கட்டாய மாற்றத்தைக் கொண்டு வந்ததுதான். அதன்பிறகு காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் நிசப்தி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைத் தேடும் வேலையில் இறங்க, வேனுகோபாலோ பெண்ணுக்கு மாப்பிள்ளைத் தேடும் வேலையில் இறங்கினார். வாழ்க்கை மிகவும் அழகாகத்தான் சென்றது. அந்தக் கொடூர நாள் வரும் வரை…

“நிசா வீடு வந்துடுச்சு.” என்ற ரவியின் சத்ததில் நிகழ்வுக்கு வந்தவள், காரை நிறுத்திவிட்டு மெல்ல இறங்கினாள்.

அவள் அப்பா இல்லாத அந்த வீட்டிற்குள் நுழையக்கூட பயமாக இருந்தது பெண்ணுக்கு. அந்த வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் அவளது அப்பாவின் வாசம்தான். இதை விட்டுத்தான் அவள் சென்று இரண்டரை ஆண்டுகள் ஆகியிருந்தது.

கண்ணை மூடி ஆழ மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்தியவள், வீட்டைத் திறந்து உள்ளே போனாள். இரண்டு நாட்களுக்கு முன்புதான் ரவி ஆட்களை வைத்து வீட்டைச் சுத்தம் செய்திருந்தான். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.

குழந்தையுடன் உள்ளே வந்தவள் பூஜையறையில் இருந்த தாய், தந்தை இருவரின் படத்திற்கு முன் நிற்க, ரவிதான் அவள் நிலையை உணர்ந்து லக்கேஜுகளை உள்ளே கொண்டு வந்து வைத்தான்.

‘அப்பா நான் நடத்துற இந்தப் போராட்டம் நியாயத்திற்கானது. இதுல எப்பவும் நீங்க ரெண்டு பேரும் என்கூட துணைக்கு இருக்கணும்.’ என வேண்டுதலை வைத்துவிட்டு வெளியில் வர, ரவி இவளுக்காக நின்றிருந்தான்.

“சாரி ரவி, உங்களுக்கு வேலை இருந்தா கிளம்புங்க. நான் மேனேஜ் பண்ணிப்பேன்.” என்றவளைப் பார்த்து புன்னகைத்தவன், “எனக்கு நீயும் ஸ்வாதியும் வேற வேற இல்ல நிசா. ஸ்வாதி செஞ்ச தப்பை சரி செய்யத்தான் நான் நினைக்கிறேன். ஆனா…” என்றவனின் குரலில் அத்தனை வலி.

“ஐ க்னோ ண்ணா, பட் என் வலி உங்களுக்குப் புரியுதா? என் தப்பு எங்க இருக்கு? நான் என்ன தப்பு செஞ்சேன் சொல்லுங்க, உதவி கேட்டு வந்தவளை உங்க வேலைக்காகப் பயன்படுத்திட்டு தூக்கி எறிஞ்சிட்டீங்க. இந்த உண்மை விக்ரமுக்கு தெரியலன்னாலும், உங்களுக்கும் ரித்திக்கும் தெரியுமே… அப்போகூட நீங்க வாயைத் திறக்கவே இல்லையே…

எனக்குத் தெரியும் அந்த நேரம் நீங்க என்ன பேசியிருந்தாலும், கேட்குற நிலைமையில விக்ரம் இல்லன்னு. பட் அதுக்காக என் பொண்ணைத் தூக்கிக் கொடுக்க முடியாது.” என அடக்கப்பட்டக் கோபத்துடன் சொன்னவளை இயலாமையுடன் பார்த்தான் ரவி.

***

You may also like

1 comment

C.R. Vakulavallika January 28, 2026 - 4:47 pm

கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு. ஆனாலும் நிசப்தி & விக்ரம் பிரிஞ்சிருக்காங்க, இப்ப குந்தையை கேட்டு கேஸ் ஃபைல் பண்ணியிருக்கான்னு தெரியுது. போக போகத்தான் என்ன விஷயம்ன்னு தெரியும் போல இருக்கு.
😀😀😀

CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to C.R. Vakulavallika Cancel Reply

About Me

Featured