தளிர் 21
அடுத்த நாள் கல்லூரிக்கு சோகமாக வந்த நிசப்தி, உஷாவிடம் அனைத்தையும் சொல்ல, “எனக்கு என்னமோ சீனியர் சின்சியராதான் மூவ் பன்றார்னு தோனுது.” என யோசனையாக இழுக்க,
“எனக்கும் அதே டவுட்தான், பட் வை… என்னை ஏன் சூஸ் பண்ணணும்? அதுதான் புரியல.” என கடுப்பாகக் கேட்க,
“ஹான், அந்த அறிவு நீ சின்சியர் சிகாமணி முன்னாடி உக்காந்து லிட்டர் கணக்குல ஜொள்ளு ஊத்தும்போது வந்துருக்கணும். இப்ப வந்து நோ யூஸ். உனக்கும் இன்ட்ரெஸ்ட் இருக்கப் போய்தான அப்படி லுக்கு விட்டன்னு நினைச்சிருப்பார். சரி நீ என்ன முடிவு பண்ணிருக்க? அத சொல்லு.” என நிசப்தியைப் பேச்சில் இழுக்க,
“நானா? நான் என்ன முடிவு பண்ண? எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு உஷ். ஆனா அப்பாவுக்கு ரொம்ப இஷ்டம், அவங்க வீட்டு ஆளுங்க எல்லாரும் ரொம்பவே நல்ல மாதிரி. அதுதான் யோசனையா இருக்கு.” என்றவளிடம்,
“அதெல்லாம் எனக்கு எதுக்கு? உனக்கு என்ன தோனுது? அத மட்டும் சொல்லு.” என கறாராகக் கேட்க,
“உண்மைய சொல்லணும்னா அவர் மேல எனக்கு கொஞ்சமும் இன்ட்ரெஸ்ட் இல்ல, ஆனா…” என இழுக்க,
“ஆனா என்னடி? அப்பாவுக்காக ஓகே சொல்ல போறியா? அது சரியா வருமா? உன்னோட லைஃபை யோசிச்சுப் பாரு, நீதான் அங்க போய் இருக்கப் போற, பிடிக்காம ஒரு வாழ்க்கை வாழ முடியுமா சொல்லு?” என உஷா கொஞ்சம் கோபமாகவேப் பேச,
“விருப்பம் இல்லதான், ஆனா வெறுப்பும் இல்லையே. விக்ரம் சார் மேல வந்தது காதாலா ஈர்ப்பான்னு தெரிஞ்சிக்க முன்னாடியே அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துடுச்சு. இனி ஒரு கமா போட்டு ஆரம்பிக்க என்னால முடியாது. அதோட ஸ்வாதி சொன்னதை நீயும் கேட்டதானே, அவங்க விக்ரம் சாரை லவ் பண்றாங்க, அப்படி இருக்கும்போது அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்னை போய் தலையிட சொல்றியா? ஐ கான்ட். எனக்கு இதுதான்னு விதிச்சிருந்தா அதுவே நடக்கட்டும். அதுக்காக நான் வருத்தமெல்லாம் படல, அண்ட் விக்னேஷ் சார் என்னை விரும்பிதான் மேரேஜுக்கு கேட்டுருக்கார். அப்படி இருக்கும்போது இதுல எனக்கு என்ன கஷ்டம் வந்துடப் போகுது?” என்ற நிசப்தியின் பேச்சிலும் நியாயம் இருப்பதாகவேப் பட உஷாவும் அதன்பிறகு ஒன்றும் பேசவில்லை.
அவள் பதிலுக்காக இரண்டு நாட்கள் விக்னேஷ் தவித்தானோ இல்லையோ நிசப்தியின் தந்தைதான் தவித்துப் போனார். அவருக்கு இந்த சம்மந்தத்தை விட்டுவிட மனதில்லை. இத்தனை நாளில் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், மகளின் எதிர்காலம் அவரை மிரட்டியிருந்தது என்னவோ உண்மை. அதனால்தான் இந்த நல்ல சம்மந்தத்தை விட்டுவிட அவருக்கு கொஞ்சமும் விருப்பமில்லை, அதே சமயம் மகளுக்கும் பிடித்திருக்க வேண்டுமே என்றும் நினைத்துக்கொண்டார்.
அவள் கேட்டுக்கொண்ட இரண்டு நாட்களும் விக்னேஷ் அவளையேதான் கண்கானித்துக் கொண்டிருந்தான். ஒருவேளை விக்ரமிடம் சென்று பேசுவாளோ என்றொரு பயம் முளைக்க, அதற்காகவே தன் வேலை, ஆஃபிஸ், கடை என அனைத்தையும் விட்டுவிட்டு அவள் பின்னே அலைந்தான். ஆனால் உஷாவிடம் நிசப்தி பேசியதைக் கேட்டபிறகு முன்னெப்பொழுதிலும் விட இப்போது ஆசையும் காதலும் அவள் மேல் பொங்கி வழிந்தது. முகமெல்லாம் ஒரு மலர்ந்த புன்னகை அவனிடம்.
அடுத்த நாளே அவள் தன் சம்மதத்தை சொல்ல, பெற்றவருக்கு பேரானந்தம். மகளை வாஞ்சையாகப் பார்த்துக்கொண்டார். முதலில் நிச்சயதார்த்தம், பிறகு அவள் படிப்பு முடியவும் திருமணம் என பெரியவர்கள் அனைவரும் மொத்தமாக முடிவெடுக்க, அவனாலும் வேறொன்றும் செய்ய முடியாமல் போனது.
“இந்த வருஷம் செமஸ்டர் லீவுல நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம் சம்மந்தி. அடுத்து நாள் பார்த்து, எப்படி விருப்பமோ அப்படி கல்யாணம் வச்சுக்கலாம். ரெண்டு பேருக்கும் பேசி முடிச்சப் பிறகு ரொம்ப நாள் தள்ளிப்போடவும் வேண்டாம்.” என விக்னேஷின் அப்பா சொல்ல, அதுவே அங்கிருந்த எல்லோருக்கும் சரியென்று பட்டது.
இதில் நிசப்தியின் அண்ணன் ஸ்தானத்தில் நரேன் இருந்துதான் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். நரேனும் உஷாவும் நிசப்தியோடே இருக்க, ரித்திக்கு மெல்ல மெல்ல நரேனின் மேல் சந்தேக விதை விழ ஆரம்பித்தது.
கல்லூரிக்கும் வராமல் போன் செய்தும் எடுக்காமல் போக, அவளது சந்தேக விதை மெல்ல வளரத் தொடங்கியது. அடுத்த நாள் கல்லூரிக்கு வந்தவனிடம், “என்னாச்சு நரேன்? ஏன் ஒன் வீக்கா காலேஜ் வரல. எங்க போனீங்க?” என கோபத்தை அவனுக்கு காட்டாமல் பொறுமையாகப் பேச,
“அது பேபி, நம்ம நிசாவுக்கு அலைன்ஸ் வந்துருக்கு. அவளுக்கு செய்ய யாரும் இல்லைதானே, அதுதான் அண்ணாவா எல்லாம் நான் செய்றேன். அடுத்து அண்ணியா நீயும் செய்யணும்.” என அவள் கோபமறியாமல் சிரித்துக்கொண்டே சொல்ல,
“அனாதைக்கு அனாதை சரியாத்தான் இருக்கும். ஆனா ரித்தி வந்து அவளுக்கு செய்யணும்னு எந்த தலையெழுத்தும் இல்ல, புரியுதா? முதல்ல அந்த மாதிரி ஆளுங்ககூட சேருறதை நீ நிறுத்து. அதெல்லாம் பார்த்தா விக்ரம் கண்டிப்பா உங்க லவ்வ அக்செப்ட் செய்துக்கவே மாட்டார்.” என பக்கத்தில் இருந்த ஸ்வாதி நக்கலாகப் பேச, அதில் நரேனுக்கு கோபத்தில் முகம் இறுகியது என்றால், ரித்திக்கோ ஐய்யோ என்றானது.
“ஸ்வே நீ கொஞ்சம் சும்மா இரு, நான் பேசிக்கிறேன்.” எனத் தோழியை அடக்கியவள், “அவளை விடுங்க நரேன், நீங்க சொல்லுங்க மாப்பிள்ளை யாரு? அவங்க ஊர்ப்பக்கமா, இல்ல தெரிஞ்சவங்களா?” என சமாதானப் படலத்தில் முதல் படியை எடுத்து வைக்க,
“ம்ச்… எல்லாம் இங்கதான். நம்ம சீனியர் விக்னேஷ் சார் இருக்காருல்ல அவர்தான். அவருக்கு நிசப்தியைப் பிடிச்சுப்போய் வந்து கேட்டார், அப்பாவுக்கு ஓகே, அதனால நிசாவுக்கும் ஓகே.” என எரிச்சலாக சொன்னவன் அங்கிருந்து நகர்ந்துவிட,
“ம்ச்… ஸ்வே உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன், நரேனை நீ இப்படி இன்சல்ட் செய்யாதன்னு. பாரு அவர் கோவிச்சிக்கிட்டார். ஏன் இப்படி பண்ற?” என சலிப்பாகக் கேட்டாள் ரித்தி.
“ஷட்டப் ரித்தி! என்ன நினைச்சிட்டு நீ இதெல்லாம் செஞ்சிட்டு இருக்க? உன் வீட்டுல சொன்னா என்ன ஆகும் தெரியுமா? ஃப்ரண்டாச்சேன்னு ஒன்னும் சொல்லாம இருக்கேன், இல்லன்னா இந்நேரம் அவனை தொலைச்சிருப்பேன். அவனெல்லாம் ஒரு ஆளா உனக்கு? உன் ஸ்டேட்டஸ் என்ன? அவன் ஸ்டேட்டஸ் என்ன? உன் அழகுக்கு அவன் கால் தூசிக்குகூட வரமாட்டான். அவனைப் போய் ச்சே… உன்னையெல்லாம்…” என ஸ்வாதி ஆங்காரத்தில் கத்தியவள் அங்கிருந்து போய்விட, அதிர்ந்து நின்றிருந்தாள் ரித்தி.
தனியே வந்த ஸ்வாதிக்கு நரேன் சொல்லிச் சென்ற செய்தியே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்படியென்றால் விக்னேஷ் அன்று உறுதியாகத்தான் இருந்திருக்கிறான், நான் சொன்னதை அவன் நம்பவில்லை. நான் காதல் சொன்னதையும் அவன் விளையாட்டாகத்தான் நினைத்திருக்கிறான். இவர்கள் இருவரையும் எப்படி சும்மா விடுவது? என மூளையை கசக்கிக் கொண்டிருந்தவள் தன் போன் எடுத்து விக்னேஷ்கு அழைத்தாள்.
“ஹாய் விக்கி, குட் நியூஸ்னு கேள்விப்பட்டேன். எனக்கு சொல்ல மாட்டீங்களா? எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு, ஆனா எனக்கு சொல்லவே இல்லையே…” என சாதாரணமாகப் பேச்சை ஆரம்பித்தாள் ஸ்வாதி.
“ஹாய் ஸ்வே என்னப்பா நீ? அதெல்லாம் இல்ல. ஜஸ்ட் பேசினோம், அப்படியே ஃபிக்ஸ் ஆகிடுச்சு. வெளிய யாருக்கும் சொல்லல, மேரேஜுக்கு சொல்லிக்கலாம்னு விட்டுட்டோம். உனக்கு நான் ஸ்பெஷலா இன்வைட் கொடுக்கணும்னு நினைச்சேன். அதுக்குள்ள எந்த முந்திரிக்கொட்ட உனக்கு சொன்னது?” எனச் சிரித்தபடியே கேட்க,
அந்த சிரிப்பில் தெரிந்த அவனது மகிழ்ச்சியில் ஸ்வாதிக்கு உடலெல்லாம் பற்றி எரிந்தது போல் தனலாக இருந்தது. தன் வாழ்க்கையே இங்கு கேள்விக்குறியாக இருக்க, இவன் சந்தோசமாக இருக்க வேண்டுமா? முடியாது. விடமாட்டேன், எனக்கு கிடைக்காதவன் யாருக்கும் கிடைக்க விடமாட்டேன் என மனதுக்குள் சபதமிட்டவள், வெளியே, “ஏன் விக்கி என்னோட ப்ரபசலை நீ கன்சிடர்கூட பண்ணலையா?” என வருத்தம்போல் கேட்க,
“ஹேய் ஸ்வே நீ இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கியா? அது முடிஞ்சி இப்ப டூ இயர்ஸ் ஆச்சு. இன்னுமா நீ அதையே யோசிச்சிட்டு இருக்க? சாரிமா, எனக்கு சத்தியமா உன்மேல அப்படி ஒரு இன்ட்ரெஸ்ட் இல்லமா. நீ தப்பா எடுத்துக்காதே ப்ளீஸ்… நான் உன்னை ஹர்ட் பண்ணிருந்தா சாரி.” என மிகவும் இறங்கி வந்து பேசினான் விக்னேஷ்.
அவனுக்குப் பயம், எங்கே ஸ்வாதி வந்து இடையில் எதுவும் குட்டையைக் குழப்பி விடுவாளோ என்று. அதோடு நிசப்தியிடமும் எதையும் சொல்லி மனதை மாற்றிவிடுவாளோ என்று புதிதாக ஒரு பயம் வேறு வந்தது. அதனால்தான் அவளிடம் சமாதானமாகப் பேசி பிரச்சனையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.
அவன் பேசி முடித்தும்கூட ஸ்வாதியிடம் அமைதியே நிலைத்திருக்க, “லிஷன் ஸ்வே, எனக்கும் உன் அண்ணனுக்கும் அந்த விக்ரமுக்கும் கொஞ்சமும் ஒத்துவராது. என்னைப் பார்த்தாலே அவன் பிபி தன்னால எகிறிடும். அப்படி இருக்கும்போது எப்படி என்னால உங்க வீட்டுக்கு வந்து போய் இருக்க முடியும்? அன்ட் நான் இதெல்லாம் யோசிச்சுதான் உனக்கு பதில் சொன்னேன். பின்னாடி எந்தப் பிரச்சனையும் வந்திடக்கூடாதுனு நினைச்சேன். அன்ட் எனக்கும் நிசப்தியைப் பிடிச்சிருக்கு. ப்ளீஸ் அன்டர்ஸ்டேண்ட் ஸ்வே.” எனக் கொஞ்சம் சமாதானம் பேச, அதற்குள் ஸ்வாதியும் நார்மலுக்கு வந்திருந்தாள்.
“ஹா… ஹா விக்கி… என்ன இவ்ளோ எமோஷன்ஸ் உங்களுக்கு? ஜஸ்ட் நான் உங்ககிட்ட விளையாண்டேன் அவ்ளோதான். அதுக்கு ஏன் இவ்வளவு டென்சன்? ம்ம், நீங்க சொன்ன ரீசனுக்காகத்தான் என்னோட ப்ரபசலை நீங்க கன்சிடர் பண்னலன்னு எனக்குப் புரிஞ்சது. சோ நோ டென்சன். நான் சும்மா உங்களை வம்புக்கு இழுத்தேன். தப்பா எடுத்துக்காதீங்க. சாரி விக்கி அன்ட் என் விஷஸ் எப்பவும் உங்களுக்கு உண்டு பை.” என்றவள் பட்டென்று போனை வைக்க,
இந்தப்பக்கம் விக்னேஷோ அதுவரை இழுத்து வைத்த மூச்சை, ‘ஷப்பா’ என மொத்தமாக வெளியிட்டான். ஒருவழியா பிரச்சனைத் தீர்ந்தது என விக்னேஷ் நினைக்க, ஸ்வாதியோ அப்போதுதான் தன் ஆட்டத்தை ஆரம்பித்திருந்தாள்.
நரேனுடன் தன் பிரச்சனையை ஓரளவுக்கு சரி செய்திருந்தாள் ரித்தி. எந்த நேரமும் சிந்தனையிலேயேத் திரிந்த ஸ்வாதியும், அவளுடன் அதிகம் ஒட்டுவதில்லை என்பதால்தான் இது சாத்தியமாகியிருந்தது. விக்ரம் தன் வேலையில் மிகவும் பிசியாக இருந்தான். அவனுக்கு பொலிடிகல் க்ளைண்ட்ஸும் வர ஆரம்பிக்க, அவனால் வீட்டில்கூட அதிக நேரம் செலவளிக்க முடியவில்லை.
நாட்கள் இப்படியே கடக்க, நிசப்தியின் அந்தாண்டு செமஸ்டரும் முடிந்து நிச்சயத்திற்கான வேலைகள் மிகவும் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. விக்னேஷும் அதுவரை அவளைத் தொல்லை செய்யாமல் இருக்க, நிசப்திக்கும் அவன்மீது நல்ல எண்ணம் உருவாக ஆரம்பித்தது.
அடுத்த நாள் மண்டபத்தில் நிச்சயம் என எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்க, வீட்டில் இருந்து மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்த நிசப்தி காரோடு கடத்தப்பட்டிருந்தாள்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு அன்றுதான் விக்ரம் வீட்டீற்கு வந்திருந்தான். வந்தவனின் முகத்தில் கோபக்கனல் அலை அலையாகப் பரவ, ரேணுகாவிற்கு குழப்பமாக இருந்தது. என்ன என்று கேட்டாலும் பதில் சொல்லாமல் இருந்தவன், ரித்தி வீட்டுக்குள் நுழையவும் பளாரென்று அறைந்திருந்தான்.
“என்னக் காரியம்டி பண்ணி வச்சிருக்க? உன்னைப் படிக்க அனுப்பினா நீ காதல் கன்றாவின்னு வந்து நிப்பியா?” என மீண்டும் மற்றொரு கன்னத்தில் அறைய, வேகமாக வந்து மகளைத் தனக்குப் பின்னே இழுத்துக்கொண்டார் ரேணுகா.
“பொம்பள பிள்ளயைக் கை நீட்டுறது என்னப் பழக்கம் விக்கி? நான் உன்னை அப்படித்தான் வளர்த்திருக்கேனா? என்னப் பிரச்சனை உனக்கு? நான் குத்துக்கல்லாட்டம் இங்கதானே இருக்கேன், எங்கிட்ட சொல்லிருந்தா பக்குவமா கேட்டுருப்பேன்ல? அதுக்குள்ள எதுக்கு நீ இப்படியெல்லம் முரடனாட்டம் நடந்துக்குற? உங்கிட்ட நான் இதை எதிர்பார்க்கல விக்கி.” என கோபத்தில் பேசியவர், மகளை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைய, “ஷிட்…” எனத் தலையில் தட்டிக்கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் விக்ரம்.
கோபம்தான், கண்மண் தெரியாத கோபம். தங்கை மேலல்ல. தன்னுடைய வளர்ப்பின் மேல். தந்தைக்குப் பிறகு அவர் இல்லை என்ற வருத்தம் கொஞ்சமும் இல்லாமல் தங்கையை வளர்க்க, அவள் என்ன காரியம் செய்து வந்திருக்கிறாள். நினைக்க நினைக்க ஆத்திரம், கண்மண் தெரியாத கோபம்தான் வந்தது.
இன்று அவன் வீட்டிற்கு கிளம்பலாம் என்று நினைத்திருந்த நேரம் ஜன்னல் வழியாகக் கீழேப் பார்க்க, அப்போது சரியாக விக்னேஸ் ஒரு கவரை செக்யூரிட்டியிடம் கொடுத்துவிட்டுச் செல்ல, அப்போதும்கூட அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை விக்ரம்.
ஒன்றும் தெரியாதவன் போல் அமர்ந்திருந்த விக்ரமிடம், அந்த நேரம் செக்கியூரிட்டி விக்னேஷ் கவரை கொடுத்துவிட்டுச் சென்றதாக சொல்ல, அந்த விக்னேஷிலேயே அவனுக்கு பாதி டென்ஷன் தலையில் அமர, உள்ளிருந்த போட்டோக்களைப் பார்த்ததும் மிச்சம், மீதியிருந்த டென்சனும் தன்னைப்போல் ஏறி அவன் தலையில் அமர்ந்துகொண்டது.
அதிலிருந்த போட்டோவில் ரித்தியும் நரேனும் அணைத்தவாறு, ஹோட்டலில் சாப்பிடுவது போல, பைக்கில் செல்வது போல என பலவாறு புகைப்படங்கள் இருக்க, தன் வீட்டுப் பெண்ணை ஒருவன் போட்டோ எடுப்பதா என நினைத்து, நிமிடத்தில் விக்னேஷைப் பற்றி விசாரிக்க, இன்றுதான் அவனுக்கும் நிச்சயதார்த்தம் என தெரியவர, அவனை சும்மா விடக்கூடாது என நினைத்தவன், கோபத்தில் வீட்டில் இருந்து நிச்சயத்திற்கென மண்டபத்திற்கு சென்ற காரோடு மணப்பெண்ணைத் தூக்கியிருந்தான் விக்ரம்.
அதிலிருந்தது நிசப்தியென்றோ, அவளால் தன் வாழ்வின் திசையே மாறும் என்றோ அப்போது அவன் அறிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் அப்படியொரு முட்டாள்தனத்தை நிச்சயம் செய்திருக்கமாட்டான் விக்ரம்.
***
1 comment
அட..கூறு கெட்ட குமட்டி பயலே!
அப்படின்னா, பிரச்சசினையின்
மூலகாரணமே இந்த விக்ரம் தானா?
😀😀😀
CRVS (or) CRVS 2797