Home Antiheroதளிர் – 53

தளிர் 53

ஏகாந்தப் பொழுதுகள் கொட்டிக் கிடக்கும் ஏற்காடு மலைப் பகுதி. எங்கு நோக்கினும் வானம் தன் மேகமென்னும் வெண் வர்ண போர்வை உடுத்தி, பூமிப் பெண்ணின் நாணத்தை அப்போர்வை கொண்டு போர்த்தி மறைத்தது போல் காட்சியளித்தது மேகக் கூட்டங்கள்.

ஏற்காட்டின் பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்கும் செயின்ட் ஜோசப் தேவாலயம், இங்கு உள்ள தேவாலயங்களின் பட்டியலில் முதலிடத்தில் வருகிறது. ஏற்காட்டின் மையத்தில் உள்ள இந்த தேவாலயத்தை ஊரின் எந்த மூலையில் இருந்தும் பார்க்கலாம்.

உஷாவின் தந்தைக்கு உடல்நிலை சரியானதும், அந்த வீட்டில் மீண்டும் அவள் தேவையில்லாத பொருளாகிவிட, அவளின் பெரியம்மா பிரச்சனை செய்து வீட்டை விட்டு வெளியே அனுப்ப, நரேனிடம் போக அவளது தன்மானம் தடுக்க, நிர்கதியாகிப் போனாள்.

எப்படி அவனிடம் போவாள்? தன்னைப்பற்றி அனைத்தும் தெரிந்தும், கணவன் அந்த வார்த்தைகளைக் கொட்டியதை இப்போதும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உயிரோடிருக்கும் ஒருவனின் இதயத்தை வலிக்க வலிக்க வெளியேப் பிடுங்கி எறிவது போல் வலி. அவளால் அதைக் கடக்க முடியவில்லை.

பெற்றோர் சரியாக இல்லாத பிள்ளைகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கு உஷாவும் நரேனும் ஒரு சான்று. அவர்கள் இருந்திருந்தால் இப்படி ஒரு பிரச்சனை வராமலே போயிருக்கலாம். அப்படியே வந்திருந்தாலும் பெரியவர்கள் இடையிட்டு சமாதானம் செய்து சரி செய்திருக்கலாம். இத்தனை காலப் பிரிவு வந்திருக்காது.

இருவருக்குள்ளும் அன்றைக்கு தேவையற்ற வாக்கு வாதங்கள்தான். இருவரும் சரிக்கு சரியாய் காயப்பட்டுத்தான் போயினர். நாவடக்கம் வேண்டும் என்பதை அந்த நேரம் இருவரும் மறந்துதான் போயினர்.

இருவருக்கும் வலிதான், வேதனைதான். ஆனால் அதையெல்லாம் மறந்து தன் தவறையும் உணர்ந்து வந்தவனைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்று, திருப்பி அனுப்பியத் தன் செய்கையை அவளாலேயே மன்னிக்க முடியவில்லை எனும்போது, நரேன் எப்படி மன்னிப்பான்?

கணவனின் முகத்தைப் பார்த்து பேசும் தைரியம் அற்றவளாக, தான் பிறந்து வளர்ந்த ஆசிரமத்தைத் தேடி, அநாதையாக வந்து விட்டாள். வாழ்வே வெறுத்துப் போய் வந்தவளைப் பார்த்து, அவளை வளர்த்த ஆலிஸ் சிஸ்டருக்கு மனம் கனத்துப் போனது.

இனி சிறிது நாட்களுக்கு அவள் இங்கு இருக்க வேண்டாம் என்று சட்டென்று முடிவெடுத்தவர், தன் வேலை மாறுதலுக்காக ஏற்காடு வரும்போது அவளையும், தன்னுடனே இந்த தேவாலயத்திற்கு அழைத்து வந்துவிட்டார்.

இங்கு வந்த சிறிது நாட்களிலேயே அவரிடம் அனைத்தையும் சொன்னவள், அங்கேயே தனக்கு ஒரு வேலையையும் ஏற்படுத்திக் கொண்டாள். இப்படியிருக்க இதெல்லாம் அவளுக்கு நிம்மதியா, சந்தோசமா என்றால் இல்லைதான்.

நொடிக்கொரு முறை அவனைத் தேடி ஓடும் மனதை சமாதானம் செய்யத் தெரியாமல், தவித்து, அழுது எத்தனையோ நாட்கள் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறாள்.

அன்பில் ஒன்றி, இன்ப துன்பத்தில் பங்கிட்டு, ஊடலும் அதோடு கூடலுமாய் ஒரு வாழ்க்கை வாழ ஏங்கிப் போயிருந்தவளுக்கு, அது எட்டாக்கனியாகவே போயிருந்தது காலத்தின் கோலம் அன்றி வேறென்ன?

பார்வையை எதிரில் இருந்த மலை முகட்டில் பதித்து, எண்ணங்களை நாயகனுக்கு தாரை வார்த்தபடி அமர்ந்திருந்தவளின் அருகில் வந்து அமர்ந்தார் ஆலிஸ்.

அவர் அமர்ந்தும் உணராமல் இருந்தவளின் தோளில் தொட்டு தன் பக்கம் திருப்ப, விழிகள் கலங்கிச் சிவந்து, பளிங்காய் மின்னியது கண்ணீர்த்துளி. அவரைப் பார்த்ததும் தேங்கிய நீர் கோடாய் வழிய அதைத் துடைத்தவர், ‘என்ன அசட்டுத்தனம் இது’ என்ற பார்வையைக் கொடுத்தார்.

சில நொடிகளில் தன்னை மீட்டவள் அவரைப் பார்த்து வலிந்து புன்னகைக்க, அதில் தெரிந்த வலியில் இனியும் அமைதி வேண்டாம் என்று முடிவெடுத்து அவளுடன் பேச்சை ஆரம்பித்தார் ஆலிஸ்.

“உஷா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே நீ ஒரு மூலைக்கு, உன் வீட்டுக்காரர் ஒரு மூலைக்கு இருக்கலாம்னு நினைக்கிற?” என்ற அந்த வயதான ஆசிரமத் தலைவி ஆலிசின் கேள்விக்கு பதிலில்லை உஷாலட்சுமியிடம்.

“உன்னோட இந்த அமைதியை நான் என்னனு எடுத்துக்க சொல்லு. உன் அம்மா மாதிரி நீ ஏமாந்துடக்கூடாதுன்னு நான் ஆயிரம் பத்திரம் சொல்லி, உன்னை உன் அப்பாக்கூட அனுப்பி வச்சேன். ஆனா நீ என்ன செஞ்ச? என் நம்பிக்கையையும் உன் அம்மா நம்பிக்கையையும் மொத்தமா குழி தோண்டி புதைச்சிட்ட.

சரி அதையெல்லாம் விடு, உனக்காக ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த… அந்த வாழ்க்கையையாவது காப்பாத்திக்கிட்டியா அதுவும் இல்ல. நடந்த எல்லா பிரச்சனையும் உனக்குத் தெரியும். இதுல அன்னைக்குப் பேசினதைத் தாண்டி நரேனோட தப்பு எங்க இருக்கு சொல்லு?” என்றவரைப் பார்த்து,

“அப்போ அவர் பேசினது தப்பில்லையா? நான் ஏதோ பணத்துக்காகத்தான்…” என்றவள், அதற்குமேல் பேச முடியாமல் திணற, அதுவே சொன்னது அன்றைய நரேனின் பேச்சு இன்னமும் அவளை வலிக்க வைக்கிறது என்று.

“நான் சொன்னது உனக்குப் புரியல, அந்த நாள் இல்லாம அதுக்கு முன்னாடி எப்போவாச்சும் நரேன் இந்தமாதிரி பிஹேவ் பண்ணிருக்காரா? அதுக்காக அவர் பேசினதை நான் சரின்னு சொல்லல, தப்பு செய்தாலும் அதுக்காக உங்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டார். அவருக்கு குறைவா ஒன்னும் நீயும் பேசல. ஆனா நீ ஏன் போய் அவர்கிட்ட மன்னிப்பு கேட்கல. பேசக்கூட முயற்சிக்கல, ஏன் சொல்லு? எது தடுக்குது உன்னை? உன்னோட ஈகோவா?” என்றவரின் பேச்சில் பேசா மடந்தையாகிப் போனாள் உஷா.

அவர் சொல்வது உண்மைதானே? ஏன் என்னால் இறங்கிப் போய் நரேனிடம் மன்னிப்புக் கேட்க முடியவில்லை? எது தடுக்கிறது என்னை? ஈகோவா? முட்டாள்தனங்களும் அழுகைகளும் வலியும் நிறைந்ததுதான் இந்தக் காதல்.

உண்மையான காதலுக்கு நம்பிக்கை மட்டுமே மூலதனம். எதையும் எதிர்பார்க்காது, யாரிடமும் விட்டுக்கொடுக்காது. அப்படி என்றால் நான் அவரை உண்மையாகக் காதலிக்கவில்லையா? அதனால்தான் அவரிடம் என்னால் இறங்கிப் போக முடியவில்லையா? தப்பை மன்னிக்க முடியவில்லையா?’ என எண்ணங்களில் சுழன்றவளை மீண்டும் நிகழ்வுக்கு கொண்டு வந்தார் ஆலிஸ்.

“நரேன் அப்படி பேசினது தப்புத்தான், உன் குடும்பம் உன்னோட பாசத்தை பயன்படுத்தி காரியம் ஆகுறவரை கூட வச்சிக்கிட்டாங்க. அப்புறம்…” என நிறுத்த, உஷாவிடம் மெல்லிய விசும்பல்.

“ம்ச்… இன்னும் அழுகைதானா? நான் உன்னை இப்படி வளர்க்கல உஷாமா…” என்று அதட்டியபடியே அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து வருடியபடியே பேசினார் ஆலிஸ்.

“உனக்கு வாழுற வயசு, நரேன் தங்கமான பையன். உனக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல, உங்க மேரேஜ் முடிஞ்சதும் என்னை வந்து பார்த்து நடந்த எல்லாத்தையும் சொன்னார். எனக்கும் உன்னைப்பத்தி எதையும் மறைக்க வேண்டாம்னு தோனவும் நானும் சொல்லிட்டேன்.” எனவும்,

“நரேனுக்கு முன்னாடியே எல்லாம் தெரியும், நிசா சொல்லிட்டா.” எனப் பட்டென்று உஷா சொல்ல,

அதில் லேசாக சிரித்தவர், “ம்ம் அதைத்தான் சொல்ல வர்றேன். நான் சொல்லி முடிச்சதும், எனக்குத் தெரியும் மேம், எனக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. இனிமேலாவது அவளை நல்லா பார்த்துக்கணும்னு சொன்னார். ஆனா அதுக்குள்ள இவ்வளவு பிரச்சனை நடந்து முடிஞ்சிடுச்சு.” என்ற ஆலிஸ்,

“உஷா உனக்கு நான் அதிகம் சொல்லத் தேவையே இல்லை. உன் வாழ்க்கையை நீ வாழணும் அதுவும் உனக்குப் பிடிச்ச உன் நரேன்கூட…” என்றதும் திடுக்கிட்டு நிமிர்ந்தவளைப் பார்த்து புன்னகைத்தவர், “உங்க மேரேஜுக்கு முன்னாடி இருந்தே உனக்கு அவர் மேல விருப்பம் இருந்தது எனக்குத் தெரியும். அவர்கூட உன் வாழ்க்கை நல்லா இருக்கும் உஷா. நீ அவர்கூட சந்தோசமா ஒரு வாழ்க்கை வாழணும். அதுதான் என்னோட விருப்பம், ஏன் உன் அம்மாவோட விருப்பமும் அதுவாதான் இருக்கும்.

தப்பு செய்யாதவங்க இங்க யாருமே இல்லை, தன் வழியில் இருந்து தவறி தன் தவறை உணர்ந்து வர்றவங்களை ஒதுக்கக்கூடாது. இதுக்கு மேல உனக்கு சொல்ல ஒன்னுமே இல்ல.” என்று நிறுத்தியவர், “நரேன் கூடத்தான் உனக்குப் பிரச்சனை. அவர்கிட்ட பேசல சரி, ஆனா நிசப்தி என்ன செஞ்சா? அவளைப்பத்தி கூட நீ யோசிக்கல இல்ல…?” எனக் கசப்பாய் கேட்டார் ஆலிஸ்.

“நரேனுக்கு நிசா எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியும். பைத்தியமா இருந்தவனை மனுசனா மாத்தி, உனக்கு வாழ்க்கைத் துணையா கொடுத்தவ. உங்க ரெண்டு பேருக்கும் வாழணும்னு ஆசையை கொடுத்தவ. திடீரென்று ஒரு நாள் அவளைக் காணோம் என்றால், அந்த மனுஷன் என்ன செய்வார்? நரேனுக்கு ஒரு மனைவியா, நிசாவுக்கு தோழியா நீ இதுல என்ன செஞ்சிருக்கன்னு யோசிச்சுப் பாரு.

நரேன் சொன்ன மாதிரி இது அவ கொடுத்த வாழ்க்கைதானே? உன் விருப்பம் நரேன் மேல இருக்குறது தெரிஞ்ச பிறகுதான் நிஷா இப்படியொரு முடிவுக்கு வந்திருப்பா. அவ இல்லைன்னாலும் நீங்க நல்லா இருக்கணும்னு நினைச்சு செஞ்சு வச்ச கல்யாணம், குரங்கு கைல கிடைச்ச பூமாலை மாதிரி ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா பிச்சு எறிஞ்சிட்டீங்க.” என்றதும் பெருங்கேவலுடன் ஒரு அழுகை உஷாவிடம்.

“உன்னை வருத்தப்படுத்த இதெல்லாம் நான் சொல்லல, ஆனா நீ சரியா நடந்துக்கல என்பதை உன் அம்மா இடத்துல இருந்து உனக்கு நான் சொல்லணும், அதைத்தான் செய்றேன்.” என்று முடித்தவர், “நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவுக்கு வா. அது எந்த முடிவா இருந்தாலும் நான் ஏத்துக்குறேன்.” என்றுவிட்டு அவளுக்குத் தனிமை கொடுத்து கிளம்பிவிட்டார்.

ஆலிஸ் சொல்லிச் சென்றது அனைத்தும் உண்மையான வார்த்தைகள். அவள் யாருக்கும் உண்மையாக இருக்கவில்லை. அன்றைக்கு கூட நரேன் சாதாரணமாகத்தானே பேச ஆரம்பித்தார், நான் இங்கே இருக்கிறேன் என்ற பிறகுதான் வார்த்தைகள் சூடுபிடிக்க ஆரம்பித்தது. பொறுமையாக இருந்திருந்தால் நரேன் என்ன சொல்ல வருகிறார், அவர் மனதில் என்ன இருக்கிறது என்றுத் தெரிந்திருக்கும்.

காலம் கடந்த யோசனைதான். இனியும் அவனை விட்டு இருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அவன் மீதுதான் தவறு என்று நினைத்த காலத்தில் கூட கணவனை, அவன் நினைவுகளை ஒதுக்க முடியவில்லை. இப்போது தப்பே இல்லை எனும்போது எப்படி இருப்பாள்?

இந்தப் பிரிவு கூட நல்லது தானோ? பிரிவு ஒருவர் மற்றவர் மேல் வைத்திருக்கும் அன்பை, காதலை கண்டறிய உதவும் அரிய கருவிதான். அவனிடம் சென்றுவிட வேண்டும் என்று நொடியில் தோன்றிய எண்ணத்தில், அதுவரை அவள் மனதில் இருந்த கவலைகளும் வருத்தங்களும் பஞ்சாய் பறந்து, மனமும் லேசாக முகமும் மலர்ந்து விகசிக்க, மெல்லிய புன்னகையுடன் தன்னவனைக் காணப் போகும் மகிழ்வுடன் அமர்ந்திருந்தாள் உஷாலட்சுமி.

அடுத்தடுத்து தான் பந்தாடப்பட போவதை அறியாமல், துள்ளிய மனதுடன் அமர்ந்திருந்தவளின் மகிழ்வை எண்ணி வேடிக்கையாகச் சிரித்துக்கொண்டது விதி எனும் வேங்கை.

இங்கு விக்ரம், ரேணுகாவை இந்தியாவிற்கு அழைத்து வந்து இன்றோடு ஒரு மாதம் ஆகியிருந்தது. அவரது உடல்நிலை ஓரளவிற்குத் தேறி பயணத்திற்கு தயார் ஆனதும், அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். அதில் யாருடைய பேச்சையும் விக்ரம் கேட்கவில்லை.

முடியாது என்ற நிசப்தியை அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவளை அங்கேயே விட்டுவிட்டு, துணைக்கு முகுந்தன் மூலம் ஒரு நம்பிக்கையான தம்பதியரை வைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

 ரேணுகாகூட முதலில் மறுத்தார்தான், பின் விக்ரம் ஏதோ திட்டத்தோடுதான் செய்கிறான் என்று புரிய அமைதியாகிவிட்டார். ஆனால் அவர்களுக்கு அமைதியான நிசப்தியைத் தெரியவில்லை.

ரேணுகா இருக்கும் போதே இங்கிருந்து, விக்ரமிடமிருந்து தூரமாக போக வேண்டும் என்று நினைத்திருந்தவளுக்கு, அவரும் இல்லாமல் போனது வசதியாகிப் போனது.

வீட்டில் இருந்தபடியே அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்தாள். நரேன் மூலம் சில தகவல்களை மட்டும் கேட்டுக் கொண்டவள், வீட்டையும் காரையும் தவிர மற்ற அனைத்தையும் விற்று, தன் அக்கவுன்டில் போட சொல்லியிருந்தவள், இங்கேயேத் தனி அக்கவுன்ட் ஓபன் செய்து அதில் அனைத்தையும் மாற்றியிருந்தாள்.

விக்ரமிற்கு இது தெரிந்தாலும் அவனும் முன்னமே அதைத்தான் நினைத்திருந்தான். அதனால் அதற்கு பெரிதாக எந்த மறுப்பும் கொடுக்கவில்லை. அதோடு அது அவள் சொத்து எனும்போது அதில் அவன் எப்படி தலையிட முடியும்?

இதோ இன்று கிளம்பவேண்டும் என்றிருக்க, அந்த வயதான தம்பதியரை முதல் நாள்தான் டூர் பேக்கேஜ் புக் செய்து காசிக்கு அனுப்பியிருந்தாள்.

அனைத்தும் நிசப்தி நினத்தது போலவேத்தான் நடந்தது. ஒன்றைத் தவிர! இப்போது அவளுக்கு இருப்பது மிகப்பெரிய டாஸ்க். தன் பாதுகாப்பிற்கு இருப்பவனை ஒரு இரண்டு மணி நேரங்கள் அகற்றுவது.

அவனிடம் இரு முறைப் பேசிப்பார்க்க, அசைவேனா என்பது போல் இருந்தவன் சந்தேகமாகப் பார்க்கவும், ‘சரியான கல்லுளிமங்கன் போல’ என பல்லைக் கடித்தாள்.

பொறுத்துப் பார்த்தவள் அவன் அசந்த நேரம் மயக்க மருந்து ஸ்ப்ரேயை அடித்து, அவனைப் பத்திரமாக ஒரு அறைக்குள் படுக்க வைத்தவள், தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு குழந்தையோடு வெளியேறிவிட்டாள்.

மாலத்தீவில் இருந்து கொச்சின், அங்கிருந்து வைசாக், பின் அங்கிருந்து நைனிடாலிற்கு வந்துவிட்டாள்.

அந்த செக்யூரிட்டி எழுந்து தேட ஆரம்பித்த நேரம் அவள் கொச்சின் சென்று கொண்டிருந்தாள்.

‘அய்யோ இந்த பொண்ணு குழந்தையோட எங்க போச்சோ? எப்படியும் எனக்கு சமாதி கட்டாம விடாது போல? இனி பாஸ் வேற என்ன சொல்வாரோ தெரியலையே?’ என மனதுக்குள் புலம்பித் தவித்துப் போனான்.

முதலில் விக்ரமிற்கு அழைத்து, “பாஸ், மேம் எனக்கு ஸ்ப்ரே அடிச்சுட்டு பேபியோட எஸ்கேப் ஆகிட்டாங்க.” என்றவன், “ஸாரி பாஸ்…” எனவும், அவனைக் கெட்ட வார்த்தையில் திட்டிய விக்ரம்,

“அவ ஸ்ப்ரே அடிக்குற வரை நீ என்ன டேஷ் பண்ணிட்டு இருந்தியா இடியட்? இன்னும் ஒன் அவர்ல எல்லா டீடைல்சும் எனக்கு வரணும். இல்ல, நீ அந்தக் கடல்லதான் மிதப்ப.” எனக் கர்ஜித்துவிட்டு நரேனுக்கு அழைத்தான்.

“எஸ் பாஸ்…” என்றவனிடம்,

“எப்படிடா இவளை சமாளிச்சீங்க? முடில… காப்படி சைஸ் இருந்துட்டு என்ன டார்ச்சர் பண்றா?” என புலம்ப,

“என்னாச்சு பாஸ்? யார்…?” எனக் குழப்பமாகப் பார்க்க,

“ம்ச்… உன் தங்கச்சின்னு சொல்லி ஒரு பேய் இருக்கே அவதான். ஊரைவிட்டு ஓடிப் போயிட்டாளாம்…” என எரிச்சலாகச் சொல்ல,

“வாட்…?” என அதிர்ந்த நரேனிடம்,

“இப்படி கிளம்புவான்னு தெரியும், ஆனா இவ்வளவு சீக்கிரம் கிளம்புவான்னு நினைக்கல.” என்ற விக்ரம், “கொஞ்ச நாள் தனியா இருக்கட்டும், அப்போதான் இந்த சொசைட்டியை ஃபேஸ் பண்ற மென்டாலிடியும் தைரியமும் வரும்.” எனப் பேசிக் கொண்டிருக்க, அந்த செக்யூரிட்டியிடம் இருந்து போன் வந்தது.

“யெஸ்…” என்றதும்,

“பாஸ், மேம் கொச்சின் போய் அங்க இருந்து வைசாக் போறதுக்கு டிக்கெட்ஸ் போட்டுருக்காங்க.” எனவும்,

“ஓ… அப்போ அங்க இருந்தும் மூவ் ஆகுற ப்ளான் இருக்கும். ஓகே பார்த்துக்கலாம்.” என்று சொல்லி முடிய, அவன் ஃபோனில் இருந்த அலார்ம் ஆன் ஆக, விக்ரம் முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பு.

“மேடம் இப்பதான் கொச்சின் லேன்டாகிருக்காங்க.” என்றவன், நரேனைப் பார்த்துக் கண்களைச் சிமிட்ட, நரேனுக்கும் சிரிப்புத்தான்.

அன்று நரேன் மூலம் குழந்தைக்கு அணிந்த செயினில் GPRS பொருத்தியிருந்தான் விக்ரம். நிசா எப்படியும் இதுபோல கிறுக்குத்தனம் செய்வாள் என்று அறிந்திருந்தான் போல. அன்று முழுவதும் அவர்களுக்கு வேலையே ஓடவில்லை.

நிசப்தி கடைசியாக எங்கு செல்லப் போகிறாள் என்றுத் தெரியவேண்டுமே? அவர்களைச் சோதிக்காமல், வைசாக்கில் இருந்து நைனிடால் சென்று இறங்கிவிட்டாள்.

அவள் ஒரு இடத்தில் சென்று சேர்ந்துவிட்டாள் என்றுத் தெரிந்த பிறகே, ஆண்கள் இருவருக்கும் மூச்சே சீரானது.

“இங்க யாருடா இருக்கா?” எனச் சலிப்பாக கேட்ட விக்ரமிடம்,

“தெரில பாஸ்.” என்றவன் சட்டென்று நினைவு வந்தவனாக, “அவளோட ஸ்கூல்மெட் ஒரு பொண்ணு சாருகேஷி. டாக்டர் அவங்க, அங்கதான் இருக்குறதா ஒரு டைம் சொல்லிருக்கா. ஒருவேளை அங்க போயிருப்பாளோ?” என நரேனும் யோசிக்க, அந்நேரம் பார்த்து அவன் ஃபோன் ஒலிக்க யாரென்று பார்த்தான்.

‘லக்ஸ் சோப்’ என்றிருக்க, அவன் முகத்தில் பலவிதமான உணர்வுக் குவியல்கள். அடித்துக் கொண்டிருந்த ஃபோனையே எடுக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நரேன்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 14, 2026 - 2:12 pm

அப்பா டா..! இப்பவாவது உஷாவுக்கு நரேன் கிட்ட பேசணும்ன்னு தோணிச்சே, அந்த மட்டுக்கு சந்தோஷம் தான்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured