Home Antiheroதளிர் – 24

தளிர் 24

நிசப்தி வழக்கத்திற்கு மாற சில நாட்கள் ஆனது. தன் சுயம் தொலைந்து போனதாகவே நினைத்தாள் பெண். தன்னுடைய அறியாமையும் விளையாட்டுதனமும்தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதை மிகவும் தாமதமாகவே உணர்ந்திருந்தாள். இதிலிருந்து மீள்வேனா? எனப் பெரும் குழப்பம் அவள் மூளையை மழுங்கச் செய்திருந்தது.

அன்று கல்லூரியில் இருந்து நேராக தோழியைக் காண வந்திருந்தாள் உஷா. அவள் முகம் மிகவும் சோர்வாகவும் இறுக்கமாகவும் இருப்பதைக் கண்டு யோசனையானாள் நிசப்தி. அவளே பேசுவாள் என்று பார்க்க அமைதியாகவே இருந்தாள் உஷா.

“என்னாச்சு உஷ்?” என லெமன் ஜூஸை கொடுத்தபடியே நிசப்தி கேட்க,

“ம்ச்…” என்றவள் கண்களில் இருந்து நீர் பொலபொலவெனக் கொட்டியது.

“என்னம்மா… என்ன உஷ்? சொன்னாதானே தெரியும், மறுபடியும் வீட்டுல பிரச்சனையா? என்னடா?” எனத் தோழியின் தோளை ஆதரவாகத் தடவ,

“எல்லாருமே சுயநலவாதிகள் நிசா, எனக்கு யாரையுமே பிடிக்கல. ஏன் இப்படி பச்சோந்தியா இருக்காங்க?” என விம்மல்களுக்கிடையே தெளிவில்லாமல் பேசினாள் உஷா.

“ஒன்னுமே புரியல உஷ். பட் நீ ஹர்ட்டாகுற மாதிரி என்ன நடந்துச்சு? நரேன் அண்ணாக்கிட்ட நீ மறுபடியும் பேசுனியா? உன்னைத் திட்டிட்டாங்களா?” என என்னவென்றுத் தெரியாமல், புரியாமல் பேச,

“அவன் வேண்டாம்னு சொன்ன பின்னாடியும், அவன் பின்னாடியே அலைவேன்னு நினைச்சியா? என்ன பார்த்தா எப்படி இருக்கு உனக்கு?” என எகிறியவள்,

“இது அது இல்ல…” என்றவள், “அந்த விக்ரமுக்கு மேரேஜ் ஃபிக்சாகிடுச்சு. இன்னைக்கு அந்த ஸ்வாதி வந்து இன்விடேஷன் கொடுத்துட்டு இருந்தா.” என முகத்தில் அத்தனைக் கோபத்தைக் காட்டிச் சொன்னாள் உஷா.

“ஓ…” என்ற நிசப்தியும் உடனே, “அதுக்கென்னப்பா? அதுதான் நமக்கு முன்னமே தெரியுமே. இதைக் கேட்டா நீ இவ்வளவு டென்சன் ஆன?” என தோழியின் முகத்தைத் துடைக்க,

துடைத்த அந்தக் கைகளிலேயே முகத்தைப் புதைத்தவள் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.

“ஹேய் என்னம்மா நீ? எனக்காக யோசிக்கிறியா? இல்லம்மா, எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தது. அது முளைக்கும் முன்னாடியே கருகிப் போயிடுச்சு. நான் அந்த எண்ணத்தை வச்சிக்கிட்டா கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிருப்பேன். இல்லடா அதெல்லாம் மொத்தமா தலமுழுகிட்டுதான் விக்னேஷ் சாருக்கு ஓகே சொன்னேன். நீ விடு, ஃபீல் பண்ணாத ப்ளீஸ்.” என்றாலும் அந்த குரலில் இருந்த ஏமாற்றத்தையும் நிராசையையும் தடுக்க முடியவில்லை.

தன் துப்பட்டாவினால் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு எழுந்த உஷா, அருகில் இருந்த நீரை மொத்தமாகக் குடித்து தன்னை சமன் செய்து, இப்போது நிசாவை நேராகப் பார்த்தாள்.

அந்தப் பார்வையே விஷயம் அதுவல்ல என்று சொல்ல, யோசனையாகப் பார்வையை மாற்ற, “அந்த ஸ்வாதியோட அண்ணன் ஒருத்தர் இருக்கார் தெரியுமா? அவர்தான் ரித்திகாவை கல்யாணம் செய்துக்கப் போறார். பெண் எடுத்து பெண் கொடுக்குறாங்க.” எனக் கசப்பான மருந்தைக் குடிப்பதை போல் முகத்தை வைத்துக்கொண்டு ஒரு வழியாகச் சொல்லி முடிக்க, “வாட்?” என அதிர்ந்து எழுந்து நின்றாள் நிசப்தி.

“என்ன சொல்ற நீ? அந்த ரித்தி… அவங்க தானே நம்ம நரேன்… நரேன் அண்ணா… நரேன் அண்ணாவுக்கு எல்லாம் தெரியுமா? அவர் எங்க? நீ பார்த்தியா?” என அதிர்ச்சி விலகி பதட்டத்தில் பேசியவளைக் கைப்பிடித்து அமர வைத்த உஷா, “நான் சொல்றத பொறுமையா கேளு நிஷ். நீ பதட்டப்பட மாட்டேன்னு சொன்னாதான் நான் எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சொல்வேன்.” என சமாதானம் செய்து,

நரேன் விஷயத்தில் ஸ்வாதியின் பங்கு, விக்ரமின் பங்கு, நரேன் சென்று விக்ரமிடம் பேசியது, அவன் ரித்தியை வேண்டாமென்றது இது எதுவுமே தெரியாமல், ஸ்வாதியின் கை பொம்மையாக ரித்தி மாறி, திருமணத்திற்கு ஓகே சொன்னது என அனைத்தையும் சொல்லிவிட்டு தோழியின் முகத்தைப் பார்த்தாள்.

“அப்போ இங்கேயும் என்னாலத்தான் பிரச்சனையா? ஆனா நான்… இந்த நரேன் அண்ணாவுக்கு என்ன பைத்தியமா? ஏன் இப்படி பண்ணாங்க?” என ஆவேசமாகக் கத்தியவள், உடனே அவனுக்கு அழைப்பு விடுக்க, அதுவோ எடுக்கப்படாமல் போய்க் கொண்டே இருக்க, பெண்கள் இருவருக்கும் பயம் பிடித்துக்கொண்டது.

உடனே இருவரும் கிளம்பி வேனுகோபாலிடம் சொல்லிவிட்டு நரேனின் வீட்டுக்கு ஓடினர். ஆனால் அதற்கு முன்பே வேறு ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது. எடுக்கவா வேண்டாமா என யோசிக்கும் முன்னே, கால் கட்டாகி மீண்டும் அழைப்பு வந்திருக்க, யோசிக்காமல் போனை எடுத்தாள் நிசப்தி.

“ஹலோ” என்றதும்,

“நான் விக்கி பேசுறேன், நான் சொல்ற இடத்துக்கு ஏன் எதுக்குன்னு கேட்காம உடனே கிளம்பி வா.” என இடத்தைச் சொல்லிவிட்டு வைத்துவிட, பதட்டத்தில் இருந்த நிசப்தியும் எந்த விக்கி என்பதை கேட்க மறந்து, மீண்டும் விக்னேஷின் கோபத்திற்கு ஆளானாள்.

வழக்கம்போல் விக்ரமைத்தான் விக்கி என்று நினைத்து, உஷாவிடம் சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமான நிசாவை நிறுத்திய உஷாவோ அவளை விடாமல், “எந்த விக்கின்னு சொன்னாங்களா? முதல்ல அது எந்த விக்கின்னு கேளு.” எனவும்தான் மண்டையைத் தட்டியவள் வேகமாக விக்னேஷிற்கு அழைத்தாள்.

திருமணப் பேச்சை நிறுத்தியபிறகு அவளாக அழைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த விக்னேஷிற்கு, நிசப்தியின் அழைப்பு ஒரு வகையில் நிம்மதியும், ஒரு வகையில் கோபத்தையும் கொடுத்தது. கோபத்தில் அவள் அழைப்பை எடுக்காமல் விட்டு, மீண்டும் அழைக்கட்டும் என ஒரு அல்பத்தனமான ஆசையைக் கொண்டான்.

அவன் ஆசையை மெய்பிப்பது போல அவளும் மீண்டும் அழைக்க இப்போது எடுத்தவன், “ஹலோ என்ன சொல்லணும்? சீக்கிரம் சொல்லு. இங்க க்ளைன்ட் மீட்டிங்க் போகுது.” என உள்ளுக்குள் சிரித்துக்கொன்டே வெளியில் அவசரமாகப் பேசினான். அவள் கெஞ்சுவாள் என்ற எண்ணம் அவனுக்கு.

அவளோ, “சாரி, நீங்க எங்க வர சொன்னீங்க? பதட்டத்துல நான் கவனிக்காம விட்டுட்டேன்.” எனவும்,

“வாட்? நான் கால் பண்ணேனா? வரச் சொன்னேனா? என்ன உளர்ற? நான் எப்போ உனக்கு கால் பண்ணேன், அப்போக்கூட நீயா எனக்கு கால் பண்ணல, நான் பண்ணிருக்கேன்னு நினைச்சுதான் ரிகால் பண்ணிருக்க? வெரிகுட்… வெரிகுட்…” என ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவனுக்கு அப்போதுதான் அவள் சொன்னது ஞாபகம் வர,

“யார் கால் பண்னது? என்ன சொன்னாங்க? தெளிவா சொல்லு.” என அதட்ட, “அது வந்து…” என ஆரம்பித்து சற்று முன் போன் கால் வந்ததை சொல்லிவிட்டு, “நீங்கன்னு நினைச்சுதான் கூப்பிட்டேன்.” என முடிக்க,

“சரி, நீ கிளம்பி அங்க வா. நானும் வரேன், தனியா போக வேண்டாம்.” என்றவன் விக்ரம் மீண்டும் எதுவும் பிரச்சனையை ஆரம்பித்து விட்டானோ என பயந்து, அவள் சொன்ன இடத்திற்கு, அவளுக்கு முன்னே சென்றிருந்தான்.

அது ஒரு பழைய காலத்து வீடு. வீட்டிற்கு முன்பே ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருக்க, உஷாவோடு வந்தவள் பயந்தபடியே சுற்றும் முற்றும் பார்த்தபடியே உள்ளேப் போக, அங்கோ அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தவனைப் பார்த்து அதிர்ந்து நின்றிருந்தாள்.

முதலில் சுயத்திற்கு வந்தவள் உஷாதான். வேகமாக ஓடி விக்ரமின் சட்டையைப் பிடித்து, “என்ன பண்ணீங்க என் நரேனை? உங்க தங்கச்சியை விரும்பினதுக்காக இப்படி கொல்ற அளவுக்கு தரம் தாழ்ந்து போய்டுவீங்களா? நீங்க எல்லாம் என்ன மனுஷன்? உங்களை நான் சும்மா விடமாட்டேன், இப்பவே போலீஸ்க்கு போறேன்.” என ஆங்காரமாகக் கத்தியவளை அடக்கி, ஓங்கி ஒரு அறை அறைய, அப்படியே இரண்டெட்டு தள்ளிப் போய் விழுந்தாள் உஷா.

“என்ன நடந்ததுன்னு சொல்றதுக்கு முன்னாடி என்ன ஆட்டிடியூட் இது? உன்னை மாதிரி தானே அவளும். இப்படியா வந்து கத்திட்டு இருக்கா?” என அதட்ட, அடி விழுந்தக் கன்னத்தைப் பிடித்தபடி அவனையே வெறித்துப் பார்த்தாள் உஷா.

நிசாவை விக்னேஷ் பிடித்திருந்தான். அவனும் சற்று முன்னர்தான் வந்திருந்தான். அதனால் முழுதாக ஒன்றும் தெரியவில்லை. அதனால் உள்ளே வந்த நிசா, விக்ரமை நோக்கி செல்லும் முன் தனக்கு அருகில் நிறுத்தி வைத்துக்கொண்டான்.

உஷாவின் வெறித்தப் பார்வையில் “சாரி…” என்றவன், “நேத்துல இருந்து ஃபுல்லா சரக்கடிச்சிட்டு இருந்திருக்கான். சரக்கு இல்லன்னு டாஸ்மார்க்ல வாங்கிட்டு வர வழியில, நாலு பேர் இவனை இங்க கொண்டுவந்து அடிச்சுப் போட்டுட்டு வெளியவே வீசிட்டு போயிருக்காங்க. செக்யூரிட்டி பார்த்துட்டு எனக்கு கூப்பிட்டான், ஆம்புலன்ஸ் வந்தும் ஒன்னும் செய்ய முடியல. ஃபுல் ஆல்கஹால் ட்ரீட்மென்ட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. வேற என்ன செய்யன்னு தெரியாமதான் உனக்கு கூப்பிட்டேன். ப்ளட் லாஸ் வேற அதிகம்.” என்றதும் விக்னேஷின் கையைத் தள்ளிவிட்டவள், நரேனிடம் சென்று,

“அண்ணா…” என அழைக்க, மெல்ல கண் திறந்து பார்த்தவன், “சாரி குட்டிம்மா, அண்னாவுக்கு தைரியம் இல்ல. எதையும் ஃபேஸ் பண்ற தைரியம் இல்ல.” எனக் குழறலாகச் சொல்ல,

“அதெல்லாம் இல்ல… என் அண்ணா ரொம்ப ஸ்ட்ராங்க். எனக்கு என் அண்ணாவைப் பத்தி தெரியும். அவருக்கு ஒரு தங்கச்சி இருக்கா, ஒரு அப்பா இருக்கார். அவங்களை எல்லாம் யோசிக்காம எந்த தப்பான முடிவும் எடுக்கமாட்டார். அவர் இல்லன்னா அந்த தங்கச்சியை இந்த சமூகம் ரொம்பவே மோசமான முத்திரைக் குத்தி காயப்படுத்தும். அதெல்லாம் நடக்க விடமாட்டார்.” என்று சாதாரணமாக ஆரம்பித்து அழுகையில் முடிக்க,

உஷா முகத்தைக் கையில் புதைத்து வெடித்து அழ, நரேனின் கண்களிலும் நீர் இறங்கியது.

ரத்தம் தோய்ந்த முகத்தில் வலிந்த கண்ணீரைத் துடைத்தவள், “ஹாஸ்பிடல் போகலாம், என்ன நடந்தாலும் நாங்க இருக்கோம். நான் இருப்பேன், உங்ககூட. எனக்காக நீங்க ஹாஸ்பிடல் வரணும் அண்னா ப்ளீஸ்.” எனக் கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன், சரியெனும் விதமாகத் தலையாட்ட அதன்பிறகு நொடியும் தாமதிக்கவில்லை.

அவனை ஆம்புலன்சில் ஏற்றி கூடவே இரு பெண்களும் ஏறிக்கொள்ள, ஆண்கள் இருவரும் பார்வையாளர்களாகிப் போனார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் சில நொடிகள் ஆழ்ந்து பார்த்துவிட்டு, அவரவர் வண்டியில் கிளம்பி மருத்துவமனைக்கு கிளம்பினர்.

விக்ரமிற்கு உண்டான குற்ற உணர்ச்சிக்கு அளவே இல்லை. நரேனை நல்லமுறையில் கையாண்டிருக்க வேண்டுமோ? அவன் சரியாகிவிடுவான் என்று நினைத்து தப்புக் கணக்கு போட்டுவிட்டோமோ? உயிரை விடும் அளவிற்கா ரித்தியின் மேல் காதல் வைத்திருந்தான். கடவுளே ஒரு காதலை மொத்தமாக உயிரைப் பிடிங்கி எறிந்து விட்டோமா? எனப் பலச் சிந்தனைகளில் இருந்தவன், எப்படி அடிபட்டான், யார் அடித்தார்கள் என்று யோசிக்க மறந்து போனான்.

நிசப்தியின் அருகில் வந்த விக்னேஷ், “மேனேஜ் பண்ணிப்பியா? பணம் இருக்கா?” என கேட்க,

“அப்பா கொண்டுவருவாங்க…” என நிசப்தி முடிக்கும் முன்னே, “தேவையில்ல நான் பண்ணிட்டேன், அதோட மத்த தேவைக்கும் எனக்குத்தான் பில் அனுப்புவாங்க. நீங்க பார்த்துக்கோங்க, நான் என்னோட ஆள் ஒருத்தரை இங்க விட்டுட்டு போறேன். நைட் ஹெல்புக்கு தேவைப்படும்.” என்றுவிட்டு போய்விட பல்லைக் கடித்தான் விக்னேஷ்.

“இவன் இனி இங்க வந்தா நான் வரமாட்டேன்.” என்றவன், “என்ன முடிவு எடுத்துருக்க? இன்னும் எத்தனை நாள் வெயிட் பண்ணணும்?” என எரிச்சலைக் காட்ட,

“என்ன? அதுதான் உங்க வீட்டுல வேண்டாம் சொல்லிட்டாங்கள்ள…” என முடிக்கும் முன், “திமிர்… திமிர்… உடம்பெல்லாம் திமிர். அழகா இருக்கோம்னு திமிர். உன் பின்னாடியே அலையுறானே, இன்னும் அலைய வைக்கலாம்னு திமிர் அப்படித்தானே? அது எங்கிட்ட நடக்காது. இப்போவரை எங்க வீட்டுலதான் வேண்டாம்னு சொன்னாங்க, ஆனா இந்த நிமிசம் நான் சொல்றேன். நீ எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம்…” என்று வார்த்தைகளால் கடித்துக் குதறிவிட்டு போய்விட்டான்.

அந்த வார்த்தைகளின் தாக்கத்தில் பிரம்மைப் பிடித்தது போல் நின்றிருந்தாள் நிசப்தி.

அந்த பாழடைந்த பங்களாவின் பின்பு இருந்த ஒரு ஓட்டு வீட்டில், “என்னடா பண்ணிட்டு வந்துருக்கீங்க? ஃபுல் போதையில இருப்பான், போட்டா ஒருத்தனுக்கும் சந்தேகம் வராதுன்னு சொல்லி அனுப்பி வச்சா, அடிச்சு உயிரோட விட்டதும் இல்லாம, அவன் வீட்டு முன்னாடியே போட்டுட்டு வந்துருக்கீங்க. ச்சே… உங்களை எல்லாம் நம்பினதுக்கு…” என ஆங்காரமாகக் கத்தியவள்,

தன் கையில் இருந்த பணக்கட்டைத் தூக்கி அவர்களுக்கு முன்னே எறிந்துவிட்டு, “இனி நான் சொல்றவரைக்கும் இந்த சென்னையிலயே இருக்கக்கூடாது. அப்படியே மாட்டினாலும் என் பேர் எங்கேயும் சொல்லக்கூடாது. அவர் தங்கச்சியை லவ் பண்ணி டார்ச்சர் பண்ணதால் விக்ரம் சார்தான் இப்படி செய்ய சொனாருன்னு சொல்லணும். ஒரு வார்த்தை நீங்க மாற்றி சொன்னாலும் உங்க ஃபேமிலியையேத் தூக்கிடுவேன். என்னைப் பத்தி தெரியும்ல?” என மிரட்டியவளைப் பார்த்து, பயந்து சரியென்றுவிட்டு ஓடிவிட்டனர் அந்த இருவரும்.

அவர்கள் சென்றதுமே போனை எடுத்து அதில் நரேன் அடிவாங்கிய காட்சியை ஓடவிட்டு ரசித்து சிரித்துக்கொண்டாள் ஸ்வாதி. என்னையே முட்டாளாக்கப் பார்க்குறியா? இந்தப் பக்கம் விக்ரம்கிட்ட உன் தங்கச்சி வேண்டாம்னு சொல்லிட்டு, உன் தங்கச்சிக்கு விக்ரமைக் கேட்பியா? ஹான்! அவளுக்கு என்னோட விக்கியும் இல்ல, இந்த விக்ரமும் இல்ல. அவ கண்ல நான் பார்த்த அந்த சந்தோசம், அது இனி எப்பவும் அவளுக்கு கிடைக்காது என சூளுரைத்தவள், மீண்டும் நரேனின் ரத்தம் வழிந்த முகத்தைப் பார்த்து திருப்தியாகச் சிரித்துக்கொண்டாள்.

விக்ரமின் வீட்டில் திருமணத்திற்கான வேலைகள் ஜரூராக நடக்க ஆரம்பித்தது. ரேணுகா மகளிடமும் மகனிடமும் பேசுவதை மொத்தமாகக் குறைத்துக்கொண்டார். ஆனால் திருமணத்திற்கு செய்ய வேண்டிய அத்தனையையும் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டார்.

திருமணம் வரைக்கும் ஸ்வாதியை இங்கே அனுப்ப வேண்டாம் என மதியழகியிடம் நேராகவேச் சொல்லிவிட, அது ஸ்வாதிக்கு பெரும் கோபத்தை உண்டாக்க, ஆனாலும் காரியம் நடக்க வேண்டும் என அமைதியாக இருந்தாள்.

தாயின் கோபத்தைக் கண்ட ரித்தியும் அவரிடம் என்ன பேசி எப்படி அணுகுவது எனத் தெரியாமல் தடுமாறினாள். அவளால் இன்னுமே தான் செய்தது தவறு என்று நினைக்க முடியவில்லை. நினைக்க ஸ்வாதி விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நரேனைப் பற்றித் தப்புத்தப்பாகச் சொல்லி, அவளது குழம்பிய மனதில் மீனைப் பிடிக்க ஆரம்பித்தாள். அது சரியாகவே வேலை செய்தது. அந்தஸ்து, கௌரவம் என வாய் கிழிய பேசி ரித்தியின் மனதை மொத்தமாகவே மாற்றியிருந்தாள்.

ரேணுகா பேசாமல் இருக்க, ரித்திக்கு தாய் மீதுதான் கோபம் வந்தது. ஒரு தவறு செய்து, அதைத் திருத்தி இப்போது குடும்ப மானம், கௌரவம் என திருந்திய மகளைப் பார்த்து சந்தோசப்படாமல், கோபப்படுகிறாரே என அவளும் கோபப்பட்டு ஒதுங்க, அது இன்னமும் ஸ்வாதிக்கு வசதியாகிப் போனது. அனைத்தும்… அனைத்தும் அவள் நினைத்தது போலவே நடந்தது ஆனால் விக்ரம் அதற்கு விதிவிலக்காயிற்றே… அவனிடம் நடக்குமா?

அடுத்து வந்த பத்தாவது நாளில் அந்த திருமண மண்டபமே உறவினர்களால் நிறைந்து வழிந்தது. இரு மணவறைகள். இரண்டிலும் பூரிப்பும் சிரிப்பும் மகிழ்வுமாய் திருமண ஜோடிகள். மற்றவர்களின் கண்ணீர் பூக்களில் இரு திருமணங்கள் நடந்து முடிந்திருந்தது.

***

You may also like

1 comment

M. Sarathi Rio March 6, 2026 - 2:30 pm

எல்லாமே இந்த கேடு கெட்டவ
ஸ்வாதி பண்ண வேலைன்னு
நல்லாவேத் தெரியுது.
ஆனால், அவளுக்கும் கடைசியில் விக்கியும் கிடைக்காமல், விக்னேஷூம் கிடைக்காமல்
நடுத்தெருவில நிக்கணும்.
துரோகத்தின் பரிசு துரோகமாத் தான் இருக்கணும்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured