Home Antiheroதளிர் – 34

தளிர் 34

மழையை சுமந்து வந்து கொண்டிருந்தன கருமேகங்கள். அந்திமாலை இருட்டுடன் மழை மேகமும் சேர்ந்து கொள்ள, வானம் மெல்ல இருளத் தொடங்கியிருந்தது. அன்று மாலை நீதிமன்றத்தில் இருந்து தனது ஐட்வென்டியில் வந்து கொண்டிருந்தாள் நிசப்தி. ஜூனியருக்கு காரா என அவள் சுணங்க, கார்ல போறதா இருந்தா போ, இல்லாட்டி வேனாம்’ என வேணுகோபல் சொல்ல, பிறகு அவளுக்குப் பிடித்த ஐட்வென்டியை வாங்கியிருந்தாள்.

ஏனோ அன்று காலையில் இருந்தே மனதில் ஒரு கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. இன்று அவளைப் பெண் பார்க்க சமயபுரத்தில் இருந்து அத்தை வருவதாக வேணுகோபால் காலையில் கூறி, சீக்கிரம் வரவேண்டும் என்றும் அவளை அனுப்பியிருந்தார். அவளும் சரியெனத் தலையசைத்துவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

சென்னையில் இருந்து வந்த பிறகு முயன்று தன் மனதை மாற்ற முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருந்தாள். அதனால் கடந்து போனவைகளை நினைத்துக் கலங்காமல் அடுத்தது என்ன என யோசித்து செயல்பட ஆரம்பித்திருந்தாள்.

நரேன் மாதத்திற்கு ஒரு முறையும், உஷா விடுமுறைக்கு என்றும் வந்து போய் கொண்டிருந்தனர். வாழ்க்கை இலகுவாகவேப் போய் கொண்டிருக்கிறது என நினைத்த வேணுகோபால், நிசப்திக்கு மீண்டும் மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பித்தார். நிசப்தி முதலில் மறுத்தாலும், பின் வேணுகோபாலின் பிடிவாதத்தில் ஒத்துக்கொண்டாள்.

மகள் ஒத்துக் கொண்டதும் நேரம் தாழ்த்தாமல், சமயபுரத்தில் இருக்கும் தனது உறவினரை பெண் பார்க்க வர வைத்திருந்தார். பெண் பார்க்கும் சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து நாளும் குறித்துவிட்டுச் செல்ல, அவர்களை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்த வேணுகோபாலை, வேகமாக வந்த ஒரு மினி லாரி இடித்துவிட்டுச் செல்ல நிலை குலைந்து போனாள் நிசப்தி.

அழுது வடிய இது நேரமில்லை என்றுணர்ந்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் மூலமாக, அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து அவருக்கான சிகிச்சையைத் தொடங்க, ஆரம்பகட்ட சிகிச்சையை முடித்துவிட்டு, சென்னைக்கு அழைத்துச் சென்று விடுங்கள் என்றுவிட்டனர் மருத்துவர்கள்.

தனக்குத் தெரிந்த உறவினர்கள் மூலம் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க, வயோதிகம், ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு வந்த உடம்பு என எல்லாம் சேர்ந்து அவருக்கு பின்னடைவைக் கொடுக்க, என்ன செய்வதென்றேத் தெரியாமல் தவித்துப் போனாள்.

நரேனும் உஷாவுமே அவளுக்குத் துணையாக வந்துவிட, பணம் தண்ணீராய்ச் செலவழிய ஆரம்பித்தது. ஆனால் அவரது சிகிச்சையில் முன்னேற்றம்தான் கொஞ்சமும் இல்லாமல் போனது. அன்றும் அப்படித்தான் பணத்தைக் கட்டிவிட்டு வந்தவள் எதிரில் வந்தவனை இடித்துவிட்டு, “சாரி கவனிக்கல.” என்று ஏதோ யோசனையில் நடந்தவளைக் குரோதத்துடன் பார்த்தது கமலின் விழிகள்.

அவளைப் பார்த்ததும் உள்ளே கோமாவில் இருக்கும் நண்பனும், அவனுக்காகத் துடிக்கும் ஸ்வாதியும் நினைவில் வர, உடனே ஸ்வாதிக்கு அழைத்துச் சொல்லிவிட்டான்.

தக்க நேரத்திற்காகக் காத்திருந்தவள், “எஸ்! கமல் என்ன நடக்குது? அவ ஏன் இங்க வந்தா? கூட யார் இருக்கா? எல்லாம் விசாரி. நான் ஒரு ஃபிஃப்டீன் மினிட்ஸ்ல வந்துடுறேன்.” என்றவளுக்கு அடுத்த திட்டம் கண்முன் படமாக ஓடியது.

கமலிடம் பேசியவள் அடுத்த நிமிடம் அந்த மருத்துவமனைக்கு கிளம்பியிருந்தாள். அதற்குள் கமல் அனைத்து விவரங்களையும் சேகரித்திருந்தான். முக்கியமாக நரேன் ஊரில் இல்லை என்பதும், விக்ரம் அவள் தொடர்பில் இல்லையென்பதும் அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.

கார் பார்க்கிங்கிலேயே அவளுக்காக காத்திருந்தான் கமல். அவளைப் பார்த்ததும் அருகில் வந்தவன் காருக்குள் அமர்ந்தவன் தன்னிடம் இருந்த விவரங்களைக் கொடுத்தான்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள், “கமல் கவனமா கேட்டுக்கோ, இனி இங்க நான் அதிகம் வர முடியாது. விக்ரம், இவ இங்க இருக்கானு தெரிஞ்சாலே வந்துடுவான். சோ எனக்கு இங்க வரமுடியாது. அதனால விக்கியை நீ கவனமா பார்த்துக்கோ, நான் சொல்றதையும் கவனமா செய்.” என்றவள் உடனேக் கிளம்பிவிட்டாள்.

தன்னுடைய மருத்துவரைச் சந்தித்தவள், “டாக்டர் நம்ம ப்ளானை எக்ஸ்கியூட் செய்றதுக்கு டைம் வந்தாச்சு. விக்ரமோட ஸ்பெசிமென் உங்ககிட்ட சேஃபாத்தானே இருக்கு. இன்னும் டூ டேஸ்ல எல்லாம் முடிஞ்சிடும். நீங்க மட்டும் கொஞ்சம் வெளியூர் போற வொர்க் இருந்தா போஸ்ட்பான் பண்ணிடுங்க.” என்றதும்,

“ஓகே ஸ்வாதி, உன்கிட்ட பணம் வாங்கிட்டேன்ல, வேறவழி? செஞ்சித்தானே ஆகணும். ஆனா அப்போ சொன்னதுதான் இப்பவும். எனக்குப் பிரச்சனை வந்தா உன்னைக் கையைக் காட்டிருவேன் மறந்துடாத.” என்றார் அவரும் பதிலுக்கு.

“எஸ், எஸ்… ஞாபகம் இருக்கு. டோன்ட் வொரி, மாட்ட மாட்டோம்னு மட்டும் நம்புவோம்.”

“நீ சொல்ற, ஆனா அன்னைக்கு உன் ஹஸ்பண்ட் எவ்வளவு கொஸ்டீன் கேட்டாரு தெரியுமா? இதெல்லாம் இல்லீகல்னு தெரிஞ்சா, பிறகு என் லைஃப், என் கேரியர் எல்லாம் மொத்தமும் காலி.”

“ம்ச் டாக்டர், பயப்படாதீங்க. நான் விக்ரமை ஹேண்டில் பண்ணிக்கிறேன். அண்ட் அவனை பேச்சுக்கு கூட என் ஹஸ்பண்டுனு சொல்லாதீங்க. ப்ளடி டேஷ்…”

“ஓகே, ஓகே கூல். இனி சொல்லல, பட் விக்ரமை ரொம்பவே கவனமா ஹேண்டில் பண்ணணும்.”

“ம்ம், ஐ க்னோ ஹீ இஸ் வெரி டேஞ்சரஸ்.”

“உன் அண்ணி மறுபடியும் கன்சிவா இருக்காங்க போல, செக்கப் வந்திருந்தாங்க.”

“என்ன சொல்ற? இங்க வந்தாளா? அது எப்படி? அவ சுபாக்கிட்டத்தானே போறா.”

“ம்ம், அங்க எனக்கு ஒரு கேஸ்னு போயிருந்தேன். அப்போ பார்த்தேன். அவங்களும் உன் அண்ணனும் வந்திருந்தாங்க. செவென் மன்த்ஸ் இருக்கும் போல.”

“ம்ம், அவளுக்கு என்ன? வரிசையா குட்டி போட்டுட்டு இருப்பா. அன்ட் இனி அவளை அண்ணினு சொல்லாத, சரியான லூசு. யார் என்ன சொன்னாலும் நம்பிட்டு இருக்கும்.”

“சரி, நமக்கெதுக்கு அது? நீ டேட் கன்ஃபாம் பண்ணிடு. நான் இங்க ரெடி பண்ணிடுறேன்.”

“ஓகே, நான் கால் பண்றேன் பை.”

அடுத்தநாள் காலையிலேயே விக்ரமின் வீட்டிற்கு வந்திருந்தாள் ஸ்வாதி. அந்த நேரம் அவளை அங்கே எதிர்பார்க்காதவன், மலர்ந்து புன்னகையுடன் வரவேற்றான்.

“ஹேய் ஸ்வாதி வா, வா… என்ன இந்த நேரம்?”

“இல்ல, உங்களைப் பார்க்கணும் போல இருந்துச்சு. அதான், மிஸ் யூ விக்ரம்.”

“மீ டூ டார்லிங்.” என்றவன் அவள் இடையை வளைக்க, அதற்கு வாகாக வளைந்தவள், “எங்கையாச்சும் வெளியே போலாமா விக்கி?” என்றாள் கொஞ்சும் குரலில்.

“இப்போவா? ஈவ்னிங் போலாமா? அம்மாவை ஒரு ஃபங்க்ஷனுக்கு அழைச்சிட்டு போறேன்னு சொல்லிட்டேன். கிளம்பிட்டு இருக்காங்க, ஈவ்னிங் நான் ஃப்ரீதான்.

“எனக்கு இப்போவே உங்ககூட போகணும் போல இருக்கு விக்கி. பட் அத்தையும் பாவம்தானே நீங்க போயிட்டு வாங்க. நான் வெயிட் பண்றேன்.”

“ஓ காட்! நீ கேட்டு நான் இல்லனு சொல்வேனா? வெயிட் பண்ணு, நான் அம்மாவை ட்ரைவர் கூட அனுப்பி வைக்கிறேன்.” என்றவன் சொன்னது போல ரேணுகாவிடம் பேசி தனியாக அனுப்பிவைத்தான்.

அவருக்குமே மகன் எப்படியோ நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணம்தான். இனி அவளோடு சுமூகமாக போக வேண்டும் அதனால், ஸ்வாதிக்கு தன்னை பழக்க யோசித்திருந்தார்.

மகளுக்கும் மகனுக்கும் ஒரே மேடையில்தான் திருமணம் நடந்தது. இதோ ரித்தி இரண்டாம் முறையாக கருத்தரித்து விட்டாள். ஆனால் மகனுக்கோ… பெருமூச்சுதான் வந்தது.

இங்கு வீட்டில் ரேணுகா கிளம்பியதுமே இவர்களும் கிளம்பியிருந்தார்கள். பாண்டிச்சேரிக்கு ஈசியாரில் ஒரு லாங் ட்ரைவ். அங்கு மதிய உணவு, பிறகு திரும்பியிருந்தனர்.

இந்த இடைவெளியில் ஸ்வாதி, விக்ரமிடம் நிறைய நிறைய பேசினாள். விக்ரம் அவளை நம்ப வேண்டும். யார் தப்பு சொன்னாலும் அவளை கண்ணை மூடிக் கொண்டு நம்ப வேண்டும். அதற்கான வேலைதான் இது.

அவள் எதிர்பார்த்ததைப் போலவே விக்ரமின் உடலும் மனமும் இளகியிருந்தது. அவன் மனம் மனைவியின் அருகாமையில் இறகைப் போல லேசாகிப் பறந்தது. குழந்தையைப் பற்றி அதிகம் பேசினாள். இடையில் இடையில் குழந்தை இல்லை என்று அழுகை நாடகம் வேறு.

அவளை இழுத்து தன் தோளில் சாய்த்தவன், “சீக்கிரம் நமக்கே நமக்குனு ஒரு குழந்தை வரும் பாரு, கண்டிப்பா நடக்கும்.” எனத் தேற்ற,

“எஸ், எஸ்… நமக்கே நமக்காக ஒரு குழந்தை.” என சந்தோசம் போல் சொல்லிவிட்டு, “விக்ரம் இப்போ எனக்கு உங்க பாட்டு கேட்கணும் போல இருக்கு. ப்ளீஸ் ஒரு பாட்டு பாடுங்களேன்.” எனத் தாடையைப் பிடித்துக் கொஞ்ச, மனைவியின் இந்த புது பரிணாமத்தில் சொக்கித்தான் போனான் அவன்.

காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளது ஸ்பரிசத்தைக் கண்கள் மூடி அனுபவித்தான். பின் அவளது கைகளை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், “தேங்க்ஸ் ஸ்வே, நம்ம வாழ்க்கை இப்படியே போயிடுமோனு ரொம்ப பயந்துட்டு இருந்தேன். ஆனா இன்னைக்கு அந்த பயம் கொஞ்சமும் இல்ல.” என்றவன் அவளது தலையில் தன் தலையை முட்டியபடி சாய்த்துக் கொண்டான். நிமிடங்கள் கழிந்து வண்டியை இயக்கியவன் ஒரு உல்லாச மனநிலையிலேயே இருந்தான்.

அந்த மனநிலை ஸ்வாதி என்ன கேட்டாலும் செய் என்றுதான் சொன்னது. அதைத்தான் அவள் உருவாக்கவும் செய்தாள். அடுத்தநாள் அவனுக்கு அழைத்து, “விக்ரம் நமக்கான க்ளைன்ட் கிடைச்சிட்டாங்களாம், வரீங்களா? போய் பார்த்துட்டு அமவுண்ட் செட்டில் செஞ்சிட்டு வரலாம்.” என்றாள்.

“என்ன சொல்ற ஸ்வாதி? நீ அதை இன்னும் விடலையா?” என அதிர்ச்சியாகக் கேட்க,

“நோ, என்னால முடியாது. அன்னைக்கு ஓகே சொன்னதானே, இப்போ ஏன் இப்படி பேசுற? நீ இப்படியே மாத்தி மாத்தி பேசு, நான் செத்துப் போறேன்.”

“ஸ்வாதி நான் சொல்றதைக் கேளு, நான் சென்னைல இல்லை. மும்பை வந்துருக்கேன். டூ டேஸ் ஆகும் ரிட்டர்ன் ஆக. புரிஞ்சிக்கோ, நான் வந்ததும் பார்த்துப்போம்.”

“முடியாது நானே பார்த்துக்குறேன். நீ அமவுண்ட் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிவிடு.” எனக் கோபமாகக் கத்திவிட்டு, போனை வைத்தவளின் முகத்தில் குரோதமான வெற்றிப் புன்னகை. அவளுக்குத்தான் விக்ரம் ஊரில் இல்லையென்று தெரியுமே. அதனால்தானே இந்த திடீர் ப்ளான்.

“இனிதான்டா இருக்கு உங்களுக்கு. என்னோட விக்கியை சுயநினைவு இல்லாம படுக்க வச்சிட்டு, நீங்க மட்டும் சந்தோசமா இருந்தா விட்டுடுவாளா இந்த ஸ்வாதி. இனி வாழ்நாள் முழுக்க அழற மாதிரியே உங்களை வைக்கிறேன்டா.” என ஆங்காரமாக கத்தினாள்.

இங்கு விசிட்டர் டைம் முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பினாள் நிசப்தி. சென்னை வீட்டை விற்காமல் இருந்தது இப்போது உபயோகமானது. வீட்டுக்குள் நுழையும் முன்னே அவளுக்கு வீடியோ கால் வர, அறிமுகமில்லாத புது எண் என்பதால் எடுக்காமல் விட, இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. மூன்றாவது முறையும் வரவுமே பயந்து கொண்டே எடுக்க, அதில் ஹாஸ்பிடல் அறையில் இருந்த வேணுகோபால் தெரிந்தார்.

அதைப் பார்த்ததும், “அப்பா!” என அலறியபடியே, “ஹேய் யார் நீ? அங்க என்ன பண்ற? முதல்ல வெளியேப்போ.” எனக் கத்த,

“அட இரும்மா, சும்மா கத்திட்டு… வந்த வேலையை முடிக்காம போனா, வாங்குன காசுக்கு என்ன மரியாதை? உழைக்காம காசு வாங்க நான் என்ன வேலவெட்டி இல்லாதவனா?” என நியாயம் பேசியபடியே, வேணுகோபாலின் மூக்கில் மாட்டியிருந்த ஆக்சிஜன் மாஸ்கை கழட்ட,

“நோ, நோ… அவரை விடு. அவரை ஒன்னும் செய்யாத, யார் நீ? உனக்கு என்ன வேணும்? பணம்தானே நான் கொடுக்குறேன்.” எனக் கதற,

“என்ன என் தொழிலுக்கு துரோகம் பண்ண சொல்றியா?” என எரிச்சலானவன், “உன் அப்பனை ஒன்னும் செய்யக்கூடாதுனா, உன்னோட நம்பருக்கு ஒரு அட்ரஸ் வந்துருக்கும். அதுக்கு உடனே கிளம்பு. அடுத்த பத்து நிமிஷத்துல நீ அங்க இருக்கணும். இல்ல உன் அப்பன் மேல போயிருப்பான். உனக்கு எது வசதி?” என்றவனை வெறித்துப் பார்த்தாள்.

“உன்னோட டைம் ஸ்டார்ட் ஆகிடுச்சு, போனைக் கட் பண்ணாம போகணும். அங்கே போனதும் குமார்னு ஒருத்தன் உன் போனை வாங்கி எங்கிட்ட பேசுவான். அதுவரைக்கும் போன் எங்கேயும் கட்டாகக் கூடாது. அப்படி ஆனா உன் அப்பன்…” என மீண்டும் ஆக்சிஜன் மாஸ்கை கழட்டியபடிச் சிரிக்க,

“நோ, நோ… ப்ளீஸ். நீ சொல்றதை நான் செய்றேன், அவரை விட்டுடு.” எனக் கதறியவள், தன் காரை அசுர வேகத்தில் இயக்கியபடி அவன் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்.

காரில் இருந்து இறங்கியதுமே போனை ஒருவன் பிடுங்க, அவன்தான் குமார் என்றுப் புரிந்துகொண்டாள். சுற்றி நின்ற உருண்டையான மனிதர்களைப் பார்த்து பயந்தபடியே உள்ளே செல்ல, ஒரு ராணியின் தோரணையில் அவளை எதிர்பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் ஸ்வாதி.

‘ஸ்வாதி… இவ ஏன் இங்க? இவ எதுக்கு அப்பாவை?’ ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் பார்க்க,

“என்ன? ஒரு கொலையை பண்ணிட்டு யாருக்கும் தெரியாதுனு நினைச்சிட்டு தைரியமா வெளிய சுத்திட்டு இருந்தா, உன்னை விட்டுடுவேனா?” என நக்கலாகக் கேட்க,

“கொலையா? அது… அது…” என நிசப்தி பயத்தில் திணற, அந்த இடமே அதிரும்படி பெருங்குரலெடுத்து சிரித்தாள் ஸ்வாதி.

***

You may also like

1 comment

M. Sarathi Rio March 18, 2026 - 2:14 pm

இந்த ஸ்வாதி மாதிரி இருக்கிற கேரக்டர்லெஸ் பொண்ணுங்க கூடவெல்லாம் விக்ரம் எப்படித்தான் குப்பை கொட்றானோ தெரியலை போங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured