Home Antiheroதளிர் – 50

தளிர் 50

முகுந்தனும் விக்ரமும் பேசிக் கொண்டிருந்த நேரம், கதவைத் திறந்து வந்த முகுந்தனின் மனைவி ரஞ்சனி, “ஓ காட்! விக்கி நீ இங்கதான் இருக்கியா? நல்லதா போச்சு, எப்போ வந்த?” எனக் கேட்டவள், அவனிடம் பதிலை எதிர்பார்க்காமல் கணவனிடம் “முகுந்த் நிசாவுக்கு பெயின் ஸ்டார்ட் ஆகிடுச்சுனு அத்தை இங்க கொண்டு வந்துட்டாங்க. அட்மிட்டும் செஞ்சாச்சு. நானும் அம்மாகூட லேபர் வார்ட் போறேன். கொஞ்சம் என்னோட கேசும் நீங்களே பார்த்துடுங்க ப்ளீஸ்.” என்றவள்,

“விக்கி கம், கம்… உன் சைன் வேணும்.” என அவன் அதிர்ந்து நிற்பதையும் பொருட்படுத்தாமல் இழுத்துக்கொண்டு போக,

ரஞ்சனி இழுக்கவும்தான் உணர்வு பெற்ற விக்ரம், “ஹேய் ஹேய்… ரஞ்சி விடு… விடுடி… நோ, நோ… நான் எதுக்கு அங்க? நீ போ.” எனப் பதட்டமாகக் கையை உருவ,

“என்ன விக்கி இதெல்லாம்? உங்கிட்ட நான் இதை சுத்தமா எதிர்பார்க்கல.” என ரஞ்சனி முறைத்துப் பார்க்க,

“நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ, பட் ஐ கான்ட். நான் அங்க வரமாட்டேன்.” எனத் தன் பயத்தைக் காட்டாமல், திமிராக விக்ரம் பதில் சொல்ல,

அதில் கடுப்பான முகுந்த், விக்ரமின் சட்டையைப் பிடித்து, “டேய் என்ன பேசுற? முதல்ல கிளம்பு, உன் திமிர், கோபம் எல்லாத்தையும் அப்புறம் காட்டு. அதைக் காட்ட வேண்டிய இடமும் சரி, ஆளும் சரி இவ இல்லை. நமக்கு இப்போ குழந்தைதான் முக்கியம். அதுலயும் உன்னோட வீராப்பைக் காட்டுவியா? இந்த சிச்சுவேஷன்லயும் உன்னோட ஈகோ தலை விரிச்சு ஆடுதா?” எனக் காட்டமாகக் கேட்டவன், விக்ரமை இழுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

அப்போது ரஞ்சனியை அழைக்க வந்த சுபா, விக்ரமின் சட்டையில் இருந்த முகுந்தனின் கையைப் பார்த்து, என்ன நடந்திருக்கும் என யூகித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், “அப்பாடா நீ இங்கதான் இருக்கியா? நல்லவேளை வந்துட்ட, அங்க அண்ணி தனியா பயந்துட்டு இருக்காங்க. சீக்கிரம் அங்க வந்து அவங்க கூட இரு, நாங்க உள்ள போயிடுவோம்.” என்றவர்,

முகுந்தனிடம் கண்ணைக் காட்டிவிட்டுச் செல்ல, விக்ரமின் சட்டையில் இருந்த கையை எடுத்த முகுந்தன், “விக்கி, நரேனுக்கு சொல்லிடு.” என,

“முகுந்த் என்னால முடியாது. ப்ளீஸ் அண்டர்ஸ்டேன்ட் மை செல்ஃப். நான்… நான்… அங்க அவளை அப்படி பார்க்க முடியாது. புரிஞ்சிக்கோ ப்ளீஸ்… நான் கிளம்புறேன்.” என வேகமாக பின்னே நடக்க,

“ஸ்டாப்பிட் விக்கி, ஃபூலிஷா பிஹேவ் பண்ணாத.” எனப் பல்லைக் கடித்த முகுந்தன் ஏதோ சொல்வதற்குள், சுபா சொல்லி ரேணுகாவும் மகனிடம் வந்திருந்தார். அவனைப் பார்த்ததும் அதுவரை இருந்த பதட்டமும் பயமும் விலகி ஒரு ஆசுவாசம் வர, சாதாரணமாக மூச்சு விட்டவர்,

“விக்கி நீ இங்கதான் வந்திருந்தியா? உன்னைப் பிடிக்க முடியாம, நான் ரித்திக்கு கூப்பிட்டு சொன்னேன்.” எனப் பெருமூச்சுடன் சொல்ல,

அதுவரை போய்விட வேண்டும் என்று பிடிவாதமாக நின்றிருந்தவன், ரேணுகாவின் முகத்தில் வந்து போன உணர்வுகளைப் பார்த்து முகுந்தனிடமிருந்து விலகி, “ம்ம் இப்போதான் வந்தேன்மா, முகுந்தைப் பார்த்துட்டு அங்கதான் வரலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே இங்க வந்துட்டீங்க. நரேனுக்கு முகுந்த் சொல்லிடுவான், நீங்க வாங்க.” என முகுந்தனைப் பார்த்துவிட்டு நகர, அந்தப் பார்வையில் நரேனுக்கு நீதான் சொல்ல வேண்டும் என்ற குறிப்பு இருக்க,

அவனும் விக்ரமை முறைத்துவிட்டு நரேனின் நம்பரை அழுத்தியபடி தன் அறைக்குள் நுழைந்துவிட்டான்.

இங்கு லேபர் வார்டிற்குள் கொண்டு சென்ற நிசப்திக்கு வலி விட்டு விட்டுதான் வந்தது. “ம்மா நார்மல் ரிஸ்க்மா, முகுந்த்கூட வேண்டாம்னு சொல்றார். நீங்க எதுக்கும் அத்தைக்கிட்ட மறுபடியும் பேசிப்பாருங்க.” என ரஞ்சனி, சுபாவின் காதில் முணுமுணுக்க,

“ம்ம்ம் ஓகே.” என்றவர் ரேணுகாவை அழைத்துப் பேச, அவருக்குமே நிசப்தியின் அழுகையும் பயமும், மனதைப் பிசையத்தான் செய்தது. அதனால் சரியென்று விடலாமா என்று கூடத் தோன்றியதுதான். ஆனால் அப்படி மட்டும் நடந்தால் மகனிடம் கொஞ்சமும் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என அவனைப் பற்றி தெரிந்தவர், “வேண்டாம் அண்ணி, நார்மலே ட்ரை செய்யலாம். பை சான்ஸ் அவளால முடியலனு உணரும் போது, சிசேரியன் செஞ்சிடலாம்.” என்றுவிட்டு, நிசப்தியின் கையைப் பிடித்தார்.

“நிசாம்மா…” என அழைத்தவரைப் பார்த்தவளின் விழிகளில் தெரிந்த பயமும் அலைப்புறுதலுமே, அவளின் நிலையை எடுத்துச் சொல்ல,

“உனக்கு ஒன்னும் ஆகாதுடா. நீயும் பாப்பாவும் நல்லபடியா திரும்பி வருவீங்க. அண்ணி சொல்றதை கேளு, இதெல்லாம் உன் நல்லதுக்குத்தானே?” என கரகரத்தக் குரலில் பேசியவரிடம் மறுத்து தலையசைத்தாள் பெண்.

“எனக்கு… எனக்கு பயமெல்லாம் இல்ல. இப்படி… இப்படியே செத்துட்டாலும் போதும். நானும் அம்மா, அப்பாக்கிட்ட போயிடுவேன். எனக்கு இங்க இங்க தனியா இருக்க முடியல, பயமா இருக்கு. குழந்தையை உங்க பையனுக்கே கொடுத்துடுங்க. என்னை… என்னை கொன்னுட சொல்லுங்க.” எனத் திக்கி திணறி மூச்சு வாங்க பேசியவளின், வார்த்தைகளைக் கேட்ட அங்கிருந்த அத்தனை பேருக்கும் மனதின் பாரம் கூடியது.

ரேணுகாவைப் பற்றி சொல்லவே வேண்டாம், பிடித்திருந்த கைகளில் அழுத்தத்தைக் கூட்டியவர், “என்ன நிசாம்மா நீ, இப்படியெல்லாம் பேசாத. உனக்கு நான் இருக்கேன், நரேன் இருக்கான், பாப்பா இருக்கு, இன்னும் யார் வேணும்? உன் அப்பா, அம்மா ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு. அவங்க உன்னை நல்லபடியா எனக்குத் திருப்பிக் கொடுத்துடுவாங்க, பயப்படாத நிசாம்மா.” எனத் தைரியம் சொன்னவர்,

தனக்குப் பின்னால் விழுந்த நிழலில் திரும்பிப் பார்க்க, அங்கே அதிர்ச்சியுடன் நின்றிருந்த விக்ரம் கண்ணில் பட, கண்ணில் வழிந்த நீரோடு அவனை முறைத்துப் பார்த்துவிட்டு வெளியேறிவிட்டார்.

அந்தப் பார்வையில் தெரிந்த குற்றச்சாட்டில், கோபத்தில் தன் மீதே வெறுப்பு உண்டானது விக்ரமிற்கு. ரேணுகா அங்கிருந்து நகரவும் நிசப்தியின் பார்வை இப்போது நேர்கொண்டு விக்ரமின் மீது விழ, அவனைப் பார்த்தவளின் விழிகளில் நொடியில் ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்தது.

அதை மற்றவர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ, அவளையே வெறித்துப் பார்த்திருந்த விக்ரம் உணர்ந்தான். அந்தக் கணம் நிசப்திக்கு ஒரு பெருவலியெடுக்க, தன்னால் கைகள் இரண்டும் அந்த மேஜையின் விளிம்பைப் பிடிக்க, வலியில் அவள் இடை தன்னால் மேலெழும்பியது.

கண் முன்னே கண்ட காட்சியில் விக்ரமின் உடல் வியர்த்து விறுவிறுத்துப் போக, தன்னால் அவன் கைகள் நீண்டு நிசப்தியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.

அந்தக் கைகளை இறுக்கமாகப் பிடித்தவளுக்கு, அடுத்து அடுத்து வலியெடுக்கத் தொடங்கியது. அதைக் கவனித்த சுபா, “புஷ் பண்ணு நிசாமா, இன்னும் கொஞ்சம்தான், புஷ் பண்ணு, கமான் நிசா.” என அவளிடம் சொல்லிக்கொண்டே இருக்க, நிசாவோ தன் பலம் கொண்ட மட்டும் முயற்சித்துப் பார்த்து, முடியவில்லை எனும் விதமாகத் தலையை ஆட்டி மயங்கும் நிலைக்குச் சென்றாள்.

“விக்ரம் என்ன பார்த்துக்கிட்டே இருக்க? ஃபர்ஸ்ட் அவக்கிட்ட பேசு, பேசிட்டே இரு. இப்போ மயங்கிட்டா, கிரிடிக்கல் ஸ்டேஜ் ஆகிடும். நீ பேசி முயற்சி பண்ணு.” என்ற சுபாவிடம்,

“ஆன்ட்டி நாம சி செஷன் போலாம். அவளுக்கு முடியல பாருங்க, ரிஸ்க் வேண்டாம் ஆன்ட்டி, ரஞ்சி நீயாச்சும் சொல்லுடி.” எனப் பதட்டமானவனின் கைகள், நிசாவின் கன்னத்தை வருட ஆரம்பித்திருந்தது.

“முட்டாள் மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்காத விக்கி. அம்மா சொன்னதை செய், அவ மயங்கிட்டா மொத்தமும் கஷ்டம், அப்புறம் எல்லாமே ரிஸ்க்.” என்ற ரஞ்சனியை முறைத்தவன், மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்த நிசாவின் முகத்தை தன் இரு கைகளிலும் தாங்கி,

“நிசா இங்க பாரு, இங்க பாரும்மா உனக்கு ஒன்னும் இல்ல. உன்னால முடியும், நீ சோர்ந்துட்டா பேபிக்கு கஷ்டம். ட்ரை பண்ணு ப்ளீஸ்… உன்னால முடியும் நிசாம்மா ப்ளீஸ்…” என்று சாதாரனமாக ஆரம்பித்தவனின் குரல், எப்போது கரகரப்பிற்கு மாறியதோ அவன் கண்களும் கலங்கித்தான் போனது.

அவன் குரலில் தெரிந்த மாற்றத்தில் ஆழ் மயக்கத்திற்கு செல்லாமல் விழித்தவள், “உங்களுக்கு ஏன் சீனியர் என்னைப் பிடிக்கல? நான் நல்ல பொண்ணுதானே?” என வலியில் திணறித் தவிப்புடன் கேட்டவளுக்கு, ‘ஆம்’ என்றுத் தலையசைப்பதைத் தவிர வேறென்ன பதில் சொல்லுவான் அவனும்.

“அப்புறம் ஏன்… ஏன் என்னை இப்படி பழிவாங்கிட்டீங்க? நான் என்ன பண்ணேண்? என் அப்பா, என் உலகம், எல்லாமே… எல்லாமே என்னை விட்டுட்டுப் போயிடுச்சு. நான் மட்டும்… நான் மட்டும் ஏன் இருக்கணும்? நானும் போகணும்… என் அப்பா போன இடத்துக்கே நானும் போகணும். பாப்பா தானே உங்களுக்கு முக்கியம் எடுத்துக்கோங்க, நீங்களே எடுத்துக்கோங்க. என்னை மொத்தமா அனுப்பிடுங்க ப்ளீஸ்…” என பரிதாபமாக ஆரம்பித்தவளின் குரல் ஆவேசமாக, கதறலாக, அழுகையாக மாற,

“விக்கி அவளைப் பிடி, அழுத்திப்பிடி. ப்ரசர் ஹை லெவல் ஆகுது பார். ரஞ்சி ஸ்ட்ரெச்சர் சொல்லுங்க, எமர்ஜென்சி தியேட்டர் சிஃப்ட் செய்யுங்க குயிக்.” என சுபா அவசர அவசரமாக உத்தரவிட,

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விக்ரமும், “இதுக்கு… இதுக்குத்தான் முன்னாடியே சொன்னேன், கேட்டீங்களா? இப்போ என்ன செய்ய…” என வாய்க்கு வந்ததை எல்லாம் திட்ட,

“என்னை அப்புறம் திட்டு, முதல்ல அவக்கிட்ட பேசி நார்மலுக்கு கொண்டு வா.” என்ற ரஞ்சனி, நிசாவிற்கு இன்ஜெக்சனை செலுத்த முயல, அதைத் தட்டிவிட்டவள், “நோ…” எனக் கத்த ஆரம்பித்தாள்.

“வேண்டாம்… எனக்கு எதுவும் வேண்டாம்… இந்த வாழ்க்கை வேண்டாம், குழந்தை வேண்டாம், எதுவும் வேண்டாம். என்னை கொன்னுடுங்க.” என தன் நிலையை மறந்து ஆவேசமாகக் கத்தியவளை, சட்டென்று தன் இறுகிய அணைப்புக்குள் கொண்டு வந்தவன், அவளது முகத்தை தன் மார்பில் அழுத்தி, “சபீ நான் சொல்றது உனக்கு கேட்குதா?

நீ ரொம்ப நல்ல பொண்ணு. ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. நான்தான் மோசம், கெட்டவன். நான்தான் எதுவுமே தெரியாம அவளை நம்பி இருந்திருக்கேன். அவளை உண்மையா நம்பினேன் சபீ. அவ எனக்காக உன்னை பழிவாங்குவானு நான் நினைக்கவே இல்லடா. உன் லைஃப் இப்படி ஆனதுக்கு நான்தான் முக்கியக் காரணம்.

எல்லோரும் சொல்ற மாதிரி என் தப்புதான். நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். சீக்கிரம் சரி செஞ்சிடுறேன். என்னை நம்பு சபீ… ப்ளீஸ், இப்போ நீ கொஞ்சம் அவங்களுக்கு கோ ஆப்ரேட் பண்ணு. பாப்பா வரட்டும், நம்ம பாப்பாடா. அவ வேண்டாமா உனக்கு?” என அவளை தன் இறுகிய அணைப்பில் வைத்தபடியே மெல்லியக் குரலில் பேச,

அவன் அணைப்பிற்கு அடங்கினாளா? இல்லை அவனது குரலுக்கு அடங்கினாளா தெரியாது. ஆனால் தன் எதிர்ப்பு அடங்கி அமைதியாக அந்த நேரம், “அம்மா…” என்று மீண்டும் மீண்டும் அலறத் தொடங்க, சுபாவிற்கு புரிந்து விட்டது, இன்னும் சற்று நேரத்தில் குழந்தை இப்பூவுலகிற்கு வந்துவிடும் என்று.

அதனால் விக்ரமிடம், “விக்கி நீ அவளை டைட்டா ஹக் பண்ணிக்கோ, என்ன பண்ணாலும் விடாத. ரஞ்சி நீ நிசாவோட வயித்துப் பக்கம் வந்து புஷ் பண்ணு.” என வரிசையாகச் சொல்ல, சுபா சொன்னது போல அடுத்தடுத்து நிசப்திக்கு பெருவலி வரிசையாக எடுக்க ஆரம்பித்தது.

விக்ரம் அவளது வலியில் துவண்டு, கரைந்து, அவளுக்கு மேலே பயந்து, விட்டால் அந்த இடத்தை விட்டே ஓடிவிடுவான் போல என்ற முகபாவத்தோடும், வலியில் நிசப்தி தன்னைக் கடித்தும், அடித்தும் செய்த செயல்களைப் பொருட்படுத்தாமல் அணைத்து இறுக்கிப் பிடித்திருக்க, ரஞ்சி அவளின் வயிற்றின் மேல் பக்கம் புஷ் செய்ய, அடுத்த ஐந்தாவது நிமிடம் விக்ரமின் பெண்ணரசி இந்த பூவுலகை அடைந்து சுபாவின் கையில் வந்து விழுந்தாள்.

குழந்தை பிறந்த நொடி நிசாவும் மயக்கத்திற்குச் செல்ல, தன் கைகளில் துவண்டு விழுந்தவளைத் தாங்கிப் பிடித்து சரியாகப் படுக்க வைக்க முயல, “லவ் யூ சீனியர்!” நிசப்தி மயக்கத்திற்கு ஆழ, அதே நேரம், “ம்மா பேபி அழல, மூவ்மென்ட் பாருங்க, க்விக் க்விக்…” என்ற ரஞ்சனியின் பதட்டம் எல்லோருக்கும் தொற்றிக்கொள்ள,

சுபாவும் குழந்தையைத் தலைகீழாகப் பிடித்து முதுகில் இரண்டு தட்டு தட்ட, அதில் குழந்தையும் வீலென்று அழ ஆரம்பிக்க, விக்ரமின் மனநிலையை வரையறுக்க வார்த்தைகளே இல்லை.

“விக்கி நீ நிசாக்கிட்ட சொன்ன மாதிரி உங்க வீட்டுக்கு இளவரசிதான் வந்து பிறந்திருக்கா பாரு, அப்படியே அண்ணி ஜாடை போல வருவா. நீ போய் எல்லாருக்கும் சொல்லு, நான் பேபியை க்ளீன் பண்ணிக் கொண்டு வரேன்.” என சுபா சொல்லிக் கொண்டே செல்ல,

நடந்து முடிந்த நிகழ்வுகளைப் பார்த்தவனுக்கு அப்போதுதான் அனைத்தும் மூளையில் உரைக்க, இப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற எண்ணத்திலும், குற்ற உணர்விலும் மூழ்கிப் போனான் விக்ரம்.

நிசாவின் அழுகையும் வார்த்தைகளும் குழந்தையின் அழுகுரலும் அவன் காதில் ரீங்காரமிட, கண்ணை மூடி அதை உள்வாங்க நினைத்த நேரம்,

“விக்கி எனக்கு குழந்தை ரொம்ப பிடிக்கும் விக்கி. உன் குழந்தை எனக்குப் பிடிக்காம போகுமா? ஆனா இந்தக் குழந்தை வேண்டாம் விக்கி. இது அவ குழந்தை, அவ வயித்துல வளருது. அப்போ அவளை மாதிரியே பிறக்கும். அப்படி பிறந்துட்டா என்னால தாங்கவே முடியாது விக்கி. செத்துடுவேன் விக்கி.” என்ற ஸ்வாதியின் அழுகைக் குரல் மனதில் ஒலித்து,

வழக்கம்போல அவன் நிம்மதியை சூறையாட ஆரம்பிக்க, அதுவரை இருந்த சூழலை ஏற்க முடியாமல், தன் நிலையை எண்ணி தன் மேலே எரிச்சலும் கோபமும் வர, அந்த மாயவலையை விட்டு வெளியேற வேண்டும் என்று மனம் உந்த, பதட்டமாக நின்றிருந்த ரேணுகாவைக்கூட பார்க்காமல் வேகமாக அங்கிருந்து வெளியேறியிருந்தான் விக்ரம்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 13, 2026 - 5:02 pm

அடப்பாவி..! திரும்பவும் பழைய குருடி கதவை திறடி என்கிற மோடுக்கே போயிட்டான் பாருங்களேன்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured