தளிர் 60
மீண்டும் ஒரு மருத்துவமனை வாசம் நிசப்திக்கு. ஏற்கனவே காய்ச்சலில் இருந்த நேரம் கடத்தப்பட்டதும் சேர, மிகுந்த பயத்தில் கை, கால்கள் எல்லாம் தன்னால் இழுத்துக் கொள்ள, கடத்தியவர்கள் பயந்து மீண்டும் விக்ரமிற்கே அழைத்துக் கூற, இதை எதிர்பார்க்காதவன் உடனே சாருவின் மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லியிருந்தான்.
‘இவ என்ன இப்படியொரு சோப்ளாங்கியா இருக்கா? இவதான் என் புள்ளைய யார் துணையும் இல்லாம வளர்க்க போறாளா?’ என மனதுக்குள் நிசாவைக் கிண்டல் செய்தவன், உடனே சாருவிற்கும் அழைத்தான்.
“சொல்லுங்க விக்ரம், நிசா கிடைச்சிட்டாளா? என்னாச்சு?” என பதட்டமாக சாரு கேட்க,
“ம்ம்… கண்டுபிடிச்சாச்சு, என் ஆளுங்க சேஃப் பண்ணிட்டாங்க. பாப்பாவுக்கு பிரச்சனையில்லை, உன் ஃப்ரண்ட் தான் மயங்கிட்டாளாம். உங்க ஹாஸ்பிடல்லதான் சேர்க்க சொல்லிருக்கேன். நீ உடனே போய் பாரு, நான் கிளம்பிட்டேன் வந்துடுவேன்.” என அவள் நம்பும்படி பேசி, அடுத்துக் கிடைத்த ப்ளைட்டில் கிளம்பியிருந்தான்.
இதனால் சாருவிற்கு விக்ரம் மேல் கொஞ்சமும் சந்தேகம் வரவில்லை. அவன் ஏற்கனவே அவளிடம் பாதுகாப்பிற்கு செக்யூரிட்டி அரேன்ஞ் செய்திருப்பதாக சொல்லியிருக்க, அவர்கள்தான் காப்பாற்றியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.
எப்படியோ உடனே இருவரையும் எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாற்றிவிட்டானே என, முதல் முறையாக விக்ரம் மேல் நல்ல எண்ணம் வந்தது சாருவிற்கு.
கடத்தியதே அவன்தான் என்று தெரிந்தால் என்ன ஆகுமோ?
பகலவன் தன் ஆதிக்கத்தை முற்றிலுமாக தளர்த்திய ஒரு காலைப் பொழுது, மருத்துவமனையில் இரண்டாம் நாள். “நிசா ஆர் யூ ஆல் ரைட்?” என்றபடியே வந்த சாருவிடம், ‘எஸ்’ என்பது போல தலையசைத்தாள் நிசப்தி.
“பாப்பாவுக்கு ஒன்னும் இல்ல நிசா, அவளும் நல்லாத்தான் இருக்கா. ருக்கு நல்லா பார்த்துக்கிறா. பாப்பாவையும் நினைச்சு நீ டென்சன் ஆகாம டேக் ரெஸ்ட். ஐ வில் டேக் கேர் யு அண்ட் குட்டிம்மா ஓகே?” என நிசப்தியின் தலையை வருடியபடியே மென்மையாக கூற, “ம்ம்…” என்று மீண்டும் தலையசைத்தாள்.
அதன்பிறகு இரண்டு நாட்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டாள் நிசப்தி. இப்போதுதான் பழையதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து, தன் கூட்டில் இருந்து வெளியே வர ஆரம்பித்து இருந்தாள். இந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் தன் கூட்டுக்குள் வலுக்கட்டாயமாக ஒளிந்து கொண்டாள்.
அவளுக்கு இப்போது ரேணுகாவை அதிகம் தேடியது. தன்னுடைய அனைத்து கஷ்ட காலங்களிலும் தன்னுடன் உறுதுணையாக இருந்தவர், இப்போதும் அவர் தன்னருகில் வேண்டும் என்றே ஒரு மனம் அடம் செய்ய ஆரம்பிக்க, வேண்டாம் வேண்டாம் என்ற மற்றொரு மனதை சரி என்று சமாதானம் செய்த போதும், அது அடங்கவே மாட்டேன் என்று அடம்பிடிக்க, வேறு வழியில்லாமல் சாருவிடம் கூறிவிட்டாள்.
‘என்ன திடீரென்று…?’ என்ற கேள்வியை பார்வையால் பார்த்தாலும், வாயைத் திறந்து கேட்கவில்லை. நிசப்தியிடம் எண்ணை வாங்கி, ரேணுகாவிற்கு அழைத்து அனைத்தையும் கூற, அவரோ அடுத்து எதுவும் பேசவில்லை. “நான் உடனே கிளம்பிடுறேன்மா, நான் வர வரைக்கும் மட்டும் கொஞ்சம் பார்த்துக்கோ.” என்றவரின் குரல் தன்னாலே கரகரத்தது.
“இதெல்லாம் நீங்க சொல்ல வேண்டிய அவசியமே இல்லை ஆன்ட்டி. நிசாவை நான் நல்லாவே பார்த்துக்குவேன். அவளுக்கு இப்போ உங்ககூட இருக்கணும். அந்த ஏக்கம் அவ முகத்திலேயே தெரியுது. அதை போக்க உங்களாலதான் முடியும். நீங்க வாங்க ஆன்ட்டி, அப்புறம்…” என இழுக்க,
“என்னம்மா, எங்கிட்ட எதுவும் முக்கியமா சொல்லணுமா? இல்ல, வேற ஏதும் பிரச்சனையா?” என படபடப்புடன் கேட்க,
“அது… அதெல்லாம் இல்ல ஆன்ட்டி, விக்ரம்… விக்ரம் சார் இங்கதான் இருக்கார், பாப்பாவை அவர்தான் பார்த்துக்குறார்…” என கொஞ்சம் பதட்டமாகவே சொல்ல,
“ஓ…” என்றவர், “சரிம்மா, அப்போ அடுத்த ப்ளைட்ல எனக்கு டிக்கெட் போட சொல்லு, அவனுக்கு போன் பண்ற வேலை எனக்கு மிச்சம்.” என அசால்டாக சொல்லிவிட்டு வைத்து விட, சாருதான் குழம்பி போய் இருந்தாள்.
‘விக்ரம் பத்தி சொன்னா, இந்த ஆன்ட்டி திட்டுவாங்கனு பார்த்தா, அசால்டா அப்படியானு சொல்லிட்டு வைக்கிறாங்க. கடவுளே! இவங்க எல்லாம் என்ன மேக், எனக்கு ஒன்னும் புரியல.’ என தனக்குள் புலம்பியபடியே விக்ரமிற்கு அழைத்து அனைத்தையும் சொல்ல, “ஓகே, நான் பார்த்துக்குறேன்.” என்று முடித்துவிட்டான்.
அடுத்த நாள் காலையிலேயே நரேனுடன் வந்துவிட்டார் ரேணுகா. ‘ஏன் இப்பிடி செய்தாய்?’ என்று எந்த கேள்வியையும் நிசாவிடம் கேட்கவில்லை அவர்.
அவளின் மனநிலை புரிந்து அதற்கேற்றாற் போல நடந்து கொண்டார். ரேணுகா வந்ததுமே விக்ரம் கிளம்பியிருந்தான். விக்ரம் இங்கு இருந்தது நிசப்தியிடம் யாரும் கூறவில்லை. ரேணுகாவும் தேவையே இல்லை என்று விட்டார். அதை சொல்லி பெண் மீண்டும் மனம் குழப்பி கொள்வாள் என்று மறைத்துவிட்டார்.
அடுத்து இரண்டு நாட்களில் நரேனும் கிளம்பிவிட சாரு, நிசப்தி, ரேணுகா என மூவர் கூட்டணி படு அமர்க்களமாக ஆரம்பமானது. வார நாட்களில் குழந்தைகளை தாயிடம் விட்டுவிட்டு ரவியும், ரித்தியை அழைத்துக் கொண்டு இங்கு வந்துவிடுவான்.
நிசப்தி, ரவியிடம் கூட என்ன என்று பேசுவாள், ஆனால் ரித்தியிடம் பேசுவது என்ன, பார்வை கூட இல்லை. அதை ரித்தியும் எதிர்பார்க்கவில்லை. தான் செய்த தவறு என்னவென்று ரித்திக்கு தெரியும். நிசாவின் கோபமும் எதனால் என்றும் புரியும். அதனால் நிசாவிடமிருந்து ஒதுங்கியே இருந்தாள் ரித்தி.
நிசாவை கொஞ்ச நாட்களுக்கு வேலைக்கு வர வேண்டாம் என்று சாரு கூறியிருக்க, வீட்டில் ரேணுகாவும் நிசப்தியும் மட்டும்தான். குழந்தைகள் இருவரும் உறங்கிய பிறகு, இருவரும் அதிகம் பேசினர். ஆனால் அடுத்து என்ன செய்யப் போகிறாய், ஏன் இப்படி செய்தாய், என்ற பேச்சுக்கள் மட்டும் இருக்கவே இருக்காது ரேணுகாவிடம்.
அப்படி ஒரு நாள் பேசிக் கொண்டு இருக்கும் போது, “ரேணும்மா, உங்களுக்கு என்மேல கோபமே இல்லையா? நான் உங்ககிட்ட சொல்லாம வந்தது…” என மெல்ல ஆரம்பிக்க,
நிசாவின் பேச்சில் சில நொடி அமைதியாக இருந்தவர் பின், “கோபமெல்லாம் இல்ல நிசாம்மா, வருத்தம் தான் நிறைய. என்கிட்ட சொல்லாம போற அளவுக்கு உன் மனசுல கஷ்டம் இருந்திருக்கு. அதை கூட புரிஞ்சுக்காம, உன்னை விட்டுட்டு வந்துட்டேன். உங்கிட்ட நான் சரியா நடந்துக்கல, அதனால் தான் நீ உன் மனசை பத்தி எதையும் சேர் பண்ணாம விட்டியோனு தோனுச்சு.” என பெருமூச்சு விட்டு வருத்தமாக புன்னகைத்தார்.
“அது… அதெல்லாம் இல்ல ரேணும்மா, நான் உங்களை என் அம்மா போலத்தான் ஃபீல் பண்றேன். ஆனால் உங்க மகன் அவர்… அவரை என்னால என் வாழ்க்கைல எங்கேயும் வச்சுப் பார்க்க முடியல. நானும் தசிக் குட்டிக்காகக் கூட முயற்சி செய்து பார்த்தேன், முடியல. இதுபத்தி நீங்க எங்கிட்ட பேசலதான். ஒருவேளை பேசி, நீங்க கேட்டு என்னால முடியாதுனு சொல்ல முடியாம போயிட்டா, அந்த பயம்தான் என்னை கிளம்ப வச்சது, சாரி ரேணும்மா…!” என வருத்தமாக சொல்ல,
“எனக்கு உன்னை புரியும் நிசாம்மா, நீ விளக்கம் கொடுக்க தேவையே இல்லை. நீ வருத்தப்படுற போல நான் இப்போ மட்டும் இல்லை,எப்பவுமே பேச மாட்டேன். முக்கியமா விக்ரமை கல்யாணம் பண்ணு, அதுவும் தசிக்குட்டிக்காக யோசி இப்பிடி எதுவும் உன்கிட்ட கேட்க மாட்டேன். அவன் என்னோட மகன்தான், அதுக்காக உன்னோட வாழ்க்கையை பணயம் வைக்க முடியுமா? ம்ம்… உனக்கு அவன் மேல் இருக்கிற வெறுப்பு மறைஞ்சி, விருப்பம் வந்து ரெண்டு பேரும் சேர்ந்தா, நான் வேண்டாம்னு சொல்லவே மாட்டேன்.” என்றவர்,
“தெரிஞ்சோ தெரியாமலோ உங்க வாழ்க்கை பாழாக என் பையன் காரணம் ஆகிட்டான். அதை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கு. முன்னாடி அதை ஒரு கடமையா செஞ்சேன். இப்போ உரிமையா செய்றேன், அவ்வளவுதான்…” என சிரிக்க,
“தேங்க்ஸ் ரேணும்மா! நீங்க என்னை புரிஞ்சிப்பீங்கனு எனக்குத் தெரியும்.” என அவளும் சிரித்தாள்.
அடுத்தடுத்து வந்த நாட்கள் எந்தவித பதட்டமும் பயமும் இல்லாமல், சாதாரணமாகவே கடந்தது. நிசா மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். நரேனும் ரவியும் அடிக்கடி வந்து சென்றனர்.
நரேன் வரும் போதெல்லாம் உஷாவைப் பற்றிக் கேட்டால், எதையெதையோ சொல்லி சமாளித்து தப்பித்து விடுவான். கணவன், மனைவி பிரச்சனை, அவர்களே பேசி சரியாகட்டும் என நினைத்து, நிசாவும் அதன்பிறகு கேட்பதை நிறுத்தி விட்டாள்.
இப்படியான நாட்களின் நகர்தலில் விடுமுறை நாளான ஒரு நாள், அனைவரும் அருகில் உள்ள கோவிலுக்கு காரில் செல்ல, அப்போது எதிரே வந்த ஒரு கூட்ஸ் லாரி மோதுவது போல் வந்து விலகிச் செல்ல, அதன்பிறகு ரேணுகாவிற்கு அவர்களை அங்கு விடவே மனதில்லை.
யாருக்கும் எந்த சேதாரமும் இல்லைதான். ஒருவேளை ஆகியிருந்தால்…? இந்த கேள்வியே அவரை உறங்க விடாமல் செய்ய, அன்று இரவே நேரம் காலம் பார்க்காமல் மகனுக்கு அழைத்தார்.
முதல் ரிங்கிலேயே விக்ரம் எடுக்கவும், “நீ தூங்கலயா?” என ரேணுகா கேட்க,
“என்னம்மா இந்நேரத்துல? பாப்பாவுக்கு ஒன்னும் இல்லையே?” எனப் பதட்டமாக கேட்க,
“பாப்பா, பாப்பா… பாப்பா மட்டும் தான் உனக்கு ஞாபகம் இருக்குமா? அந்த பாப்பாவை பெத்த ஒருத்தி அனாதையா கிடக்குறாளே, அவளை ஞாபகம் இல்லையா?” என எரிச்சலாகக் கத்த,
“ம்ச்… இப்போ இதை கேட்கத்தான் கூப்பிட்டீங்களா? இருக்குற டென்ஷன்ல நீங்க வேற… என்னனு சொல்லுங்க.” என அவனும் பதிலுக்கு கத்த,
“இங்க பாரு, இதுவரை நீ எப்படியோ, என்ன செஞ்சியோ, அதெல்லாம் எனக்கு தேவையில்லை. நான் உங்கிட்ட ஒன்னு கேட்பேன், அதை ஏன் எதுக்குன்னு கேட்காம செய்யணும்.” என கட்டளையாக சொல்ல,
“ம்ச்… ம்மா, என்னனு முதல்ல சொல்லுங்க, உங்க இஷ்டத்துக்கு எதையாச்சும் கேட்டு என்னால முடியாம போயிட்டா? அதனால முதல்ல என்னனு சொல்லுங்க.” அவர் என்ன கேட்க வருகிறார் என்று, அவனுக்கு ஓரளவுக்கு அனுமானம் வந்துவிட்டது.
ரேணுகாவிடம் இப்படியொரு முடிவை விக்ரம் எதிர்பார்க்கவில்லை. மனதுக்குள் ஒருவகையான மகிழ்ச்சி தன்னால் முகிழ்த்தது.
“இங்க பார் விக்ரம்…” என்று இன்று நடந்த அந்த ஆக்சிடென்ட் பற்றிக் கூறிவிட்டு, “யார் இப்படி செய்றாங்கனு தெரில, கண்டிப்பா உன்னோட எதிரிகளாதான் இருக்கணும். அவங்கதான் பாப்பாவையும் நிசாவையும் டார்கெட் பண்றாங்க. இப்படியே விட்டா சரியில்ல, உனக்கு உன் பொண்ணு உங்கூட இருக்கணும்னு ஆசை இருந்தா, அவளையும் அவ அம்மாவையும் நம்ம வீட்டுக்கு சட்டப்படி கூப்பிடு. அவங்க ரெண்டு பேரும் இங்க இருக்குறது சேஃப் இல்ல. நீ எனக்காக எதாவது செய்யணும்னு நினைச்சா இதை மட்டும் செய்.” என்றுவிட்டு அவன் பதில் பேசும் முன்னே வைத்துவிட்டார்.
தாயின் குரலில் இருந்த கரகரப்பு, அவர் அழுகையை அடக்க முயல்வது புரிய, இனியும் காத்திருக்க வேண்டாம், செய்ய வேண்டியதை ஆரம்பித்துவிடலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டான் விக்ரம்.
அதனால் மீண்டும் தாய்க்கு அழைத்து, “ம்மா, நான் என்ன செஞ்சாலும் நீங்க எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. முக்கியமா அவக்கூட சேர்ந்து எந்த ஒரு வில்லத்தனமும் பண்ணக்கூடாது. சீக்கிரம் உங்க பேத்தியை உங்கக்கிட்ட கொண்டு வந்து சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. இந்த ஒரு தடவை என்னை நம்புங்கம்மா ப்ளீஸ்…” என அவசரம் அவசரமாக சொல்ல,
“உன்னை நம்பினதுக்குத்தான் மறக்கவே முடியாத அளவுக்கு எனக்கு பெரிய பரிசை கொடுத்துட்டியே… இன்னும் உன்னை எப்படி நம்ப சொல்ற?” எனக் கோபத்தில் பட்டென்று ரேணுகா கேட்க,
“ம்மா ப்ளீஸ்… சொன்னா புரிஞ்சிகோங்க, இந்த முறை கண்டிப்பா எந்த தப்பும் நடக்காது. ஒரு தடவைதான் என்னை முட்டாளாக்க முடியும். ஒவ்வொரு தடவையும் அதையே எதிர்பார்க்கலாமா? அது அவங்களோட முட்டாள்தனம், ப்ளீஸ்மா…” என விக்ரம் கெஞ்சவே ஆரம்பித்துவிட,
“சரி, நான் எதுவும் இதுல தலையிடல. வெறும் பார்வையாளராவே இருக்கேன். ஆனா அதுக்காக நீ ஓவரா நிசாவை டார்ச்சர் பண்ணக்கூடாது. அப்படி நீ ஆரம்பிச்சா அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன்.” என எச்சரிக்கை விடுக்க,
“ம்ம்மா…” என பல்லைக் கடித்தவன், “முதல்ல எதாச்சும் ஒரு காரணம் சொல்லி அங்க இருந்து கிளம்பப் பாருங்க. நீங்க இருக்குற வரைக்கும் அவ அந்த இடத்தை விட்டு அசைய மாட்டா. அப்புறம் சாருவோட ஹஸ்பென்ட் வந்து அவளையும் கூப்பிட்டு போயிடுவார். அவளை தனியா விட்டாதான் கொஞ்சம் யோசிக்க ஆரம்பிப்பா. அதுக்கு முதல்ல நீங்க அங்க இருந்து பெட்டி, படுக்கையை சுருட்டிட்டு கிளம்புங்க.” என காண்டாகி விட,
“உங்கிட்ட ஹெல்ப் கேட்டா ஓவரா பேசுற… ஏதோ என் பேத்திக்காக நீ பேசுறதையெல்லாம் பொறுத்துக்குறேன். இன்னும் ஒரே மாசம் தான் உனக்கு டைம். அதுக்குள்ள என் பேத்தி என் வீட்டுக்கு வரணும். அப்படி வரலன்னா நீ கிரிமினல் லாயர் இல்ல, கூமுட்ட லாயர்னு நானே போஸ்டர் அடிச்சு ஒட்டுவேன்.” என விக்ரம் பல்லைக் கடிப்பதைக் கண்டுகொள்ளாமல் போனை வைத்துவிட,
‘எவ்வளவு நக்கலு எல்லாருக்கும்… என் நேரம் அப்படி. கடவுளே!’ என நொந்து கொண்டே, அடுத்து செய்ய வேண்டியதை செய்ய ஆரம்பித்தான் விக்ரம்.
அடுத்து வந்த நாளில் திடீரென்று ஒரு நாள், ‘தசிரா என் குழந்தை, அவளை முறையாக என்னிடம் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.’ என விக்ரமிடமிருந்து முறையாக வக்கீல் நோட்டிஸ் நிசப்திக்கு வர, இது என்ன புதிய பிரச்சனை என எல்லோரும் யோசிக்க, ரேணுகாவிற்கோ ஆரம்பிச்சிட்டானா? அப்ப நாம கிளம்பிட வேண்டியதுதான் என முடிவு செய்து, ரித்தி கர்ப்பமாக இருப்பதைக் காரணம் காட்டி கிளம்பிவிட்டார்.
இந்த விக்ரமை போய் நல்லவன்னு நினைச்சோமே என நொந்து கொண்ட சாரு, இனி நிசா என்ன முடிவெடுப்பாளோ, இங்கிருந்தும் யாருக்கும் சொல்லாமல் போய்விடுவாளோ என்று பயந்து விக்ரமிற்கு அழைத்தாள்.
***
1 comment
ஓ… இப்படித்தான் ஒை ப்ளானைப் போட்டு அம்மாவையும், பொண்ணையும் சென்னைக்கு வர வைச்சானோ விக்ரம். சூப்பர்.
😀😀😀
CRVS (or) CRVS 2797