Home Antiheroதளிர் – 54

தளிர் 54

“யார்டா ஃபோன்ல?” என்ற விக்ரமின் பேச்சில் நினைவுக்கு வந்த நரேன், “ம்ம் தெரிஞ்சவங்கதான் பாஸ், நத்திங் டூ இம்பார்டன்ட். நான் அப்புறம் பேசிக்குறேன் பாஸ்.” என்றவன் மொபைலை சைலண்டில் போட்டுவிட்டு அமர்ந்துவிட்டான்.

அவனுக்கு இப்போது மனைவியிடம் பேசும் எண்ணம் சுத்தமாக இல்லை. நிசாவின் பிரச்சனைகள் ஓரளவுக்கு சரியாகி அவளும், விக்ரமும் சேர்ந்த பிறகு உஷாவை அழைத்து வரலாம் என்று நினைத்திருந்தான்.

அவளை அப்படியே விட்டுவிடும் எண்ணமெல்லாம் இல்லை. நிசப்தி இப்படி யாரிடமும் சொல்லாமல் சென்று, மீண்டும் புதிதாக ஒரு பிரச்சனையை ஆரம்பிப்பாள் என்று அவன் நினைக்கவே இல்லையே?

இதில் எங்கே மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர? பெருமூச்சுதான் அவனிடம். கடைசி வரை நம் வாழ்க்கை அவள் ஒரு பக்கம், தானொரு பக்கம் என இப்படியே ஓடிவிடுமோ என்ற மெல்லிய பயம் கூட முளைத்தது.

விக்ரம் தன் நண்பன் மூலம் நைனிடாலில் இருக்கும் முக்கியஸ்தரை வைத்து சாருகேஷியைப்பற்றி விசாரித்தான். விசாரித்த வரைக்கும் பிரச்சனை இல்லைதான். ஆனால் குழந்தையுடன் தனியாக இருக்கிறாள் என்பதுதான் இடியே.

‘இந்தப் பெண்களுக்கு அப்படி என்னதான் முன் கோபமும் ஈகோவும் வருமோ தெரியாது. உடனே கணவனிடம் கோபித்துக்கொண்டு தனியாக போய் அவர்களைத் தவிக்க விடுவது.’ என சாருவைப்பற்றி முழுதாகத் தெரியாமல் எரிச்சலாக எண்ணினான்.

அடுத்து அந்தப் பெண் அவளிடம் எப்படி பேசி இந்நிலையை விவரிக்க என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அதற்குள் நரேனுக்கு அவனது லக்ஸ் சோப்பிடம் இருந்து நான்கு முறை அழைப்பு வந்துவிட்டது. ‘ஏன் இத்தனை முறை அழைக்கிறாள்? ஏதேனும் பிரச்சனையோ?’ என எண்ணியவன் மொபைலை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

***

இங்கு ஏர்போர்ட்டை விட்டு வெளியில் வந்த நிசாவை, “ஹாய் பேபி, வாட் எ ப்ளசன்ட் சர்பரைஸ்! எப்படி இருக்கீங்க மேடம்?” என்று ஆர்ப்பாட்டமாய் கட்டிக்கொண்டாள் சாரு. தன்னை கட்டிக்கொண்ட பெண்ணை கண்ணில் கனிவும் பரிவுமாய் பார்த்தாள் நிசப்தி.

“எப்படி இருக்க சாரு? உன் குட்டிப் பையன் எப்படி இருக்கான்?” என அவளும் அணைத்து விடுவிக்க,

“நான்… எனக்கென்ன பேபி? ஐம் நவ் ஓகே! ஷஸ்டி சார் வீட்டுல இருக்கார், பார்க்கத்தானே போறீங்க. பட் நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலயே, வை? கேட்ட கேள்விக்கு பதில் இல்லையா? இல்ல பதிலேத் தெரிலையா?” என்றவளிடம், சிறு புன்னகையோடே நிசப்தி நின்றாள்.

“ம்ம்ம்… சொல்ல மாட்டீங்க, அப்படித்தானே மேடம்? ஓகே நாட் ஆன் இஸ்ஸூ. நான் கண்டுபிடிக்கிறேன், நானே கண்டுபிடிக்கிறேன். கம் லெட்ஸ் கோ…” என்ற சாரு, நிசப்தியின் கையில் இருந்த தசிராவை வாங்கிக்கொண்டு முன்னே நடக்க, தன் லக்கேஜுகளுடன் பின்தொடர்ந்தாள் நிசப்தி.

சாருகேஷி, நிசப்தியின் பள்ளிக்காலத் தோழி. அவளது பள்ளி மேற்படிப்பின் போது திருநெல்வேலியில் இருந்து வந்து திருச்சியில் நிசப்தியின் பள்ளியில் சேர்ந்தாள் சாரு.

சாருவின் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்திருக்க, அவளின் தாத்தாதான் வளர்ப்பதாக சொல்லியிருக்கிறாள். சாருவின் தாய் மனோகரி கடைசியாக இந்த ஊரில் வேலைப் பார்த்ததால், அந்த ஊரில் தானும் சில நாள் இருக்க வேண்டும் என அடம் பிடித்து, இந்தப் பள்ளியில் சேர்ந்ததாக சொல்லியிருக்கிறாள்.

நிசப்திக்கும் தாய் இல்லையென்பதால் அந்த வலியும் வேதனையும் எப்படி இருக்கும் என்று உணர்ந்தவள், சட்டென்று சாருவோடு நண்பியாகிவிட்டாள்.

***

நான்கு முறை அழைத்துவிட்டு நரேன் எடுக்கவில்லை என்றதும் மிகவும் சோர்ந்து போனாள் உஷா. இப்போது அவன் மீது கோபம் வரவில்லை, தன்மீதே தான் கோபம், எரிச்சல் எல்லாம் வந்துவிட்டது.

அவனிடம் போ, முடியாது, மறந்துவிடு என திமிராகப் பதிலளித்துவிட்டு, இப்போது போய் சுயநலமாக அழைத்தால் அவனுக்கும் கொஞ்சமே கொஞ்சம் தன்மானம் இருக்குமே? அவனும் யோசிப்பான்தானே? அதனால் அவனை மீண்டும் தொந்தரவு செய்யாமல் அமைதியாகிவிட்டாள்.

மனம் வழக்கம்போலத் தன் கடந்த காலத்தைக் குறிப்பாகத் தன் கல்லூரிக் காலத்தை ஒருமுறை வட்டமடித்து வந்து நின்றது.

அதன் நினைவுகள் கொடுத்த தாக்கம், அவளது நரேன் அவளுக்கு வேண்டுமே என்று உள்ளம் ஒருபுறம் கூப்பாடு போட்டது. இத்தனை நாள் தன்மானம், சுயகௌரவம், சுயமரியாதை என அரிதாரங்கள் பூசிய கோபங்கள் அனைத்தும், இன்று எங்கோ சொல்ல முடியாத தூரத்திற்கு சென்று நின்று அவளைப் பார்த்து பல்லைக் காட்டியது.

மனம் ஒருநிலையில் இருந்து யோசிக்க முடியாமல் தடுமாறியது. ‘ஊப்ஸ்…’ என தன் தலையை ஆட்டி அந்த நினைவுகளை விலக்க போராடிய நேரம், அவளது நரேனிடம் இருந்து ‘மைன்’ என்ற அழைப்பில் காலிங் வர, அதை எடுக்கத்தான் தடுமாறிப் போனாள்.

இவ்வளவு நேரமும் இந்த அழைப்பிற்காகத்தான் அவள் மனம் எதிர்பார்த்தது, ஏங்கியது. ஆனால் இப்போது வேண்டாத நினைவுகள் எல்லாம் அவளைக் குழப்பி ஒருவழி செய்திருந்தது.

இப்போது அவனே அழைக்கும் நேரம் எடுக்க முடியாமல் தன் தவறுகள் எல்லாம், ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்ட் போல அவள் முன்னே நின்று பயம் காட்டியது.

நரேன் மீண்டும் அழைக்க, இனி அழைப்பைத் தவறவிட முடியாது என்ற முடிவுக்கு வந்தவள், ஒரு பெருமூச்சோடு, “ஹலோ…” என்க,

“என்ன திடீர்னு என் ஞாபகம்?” என்றான் எடுத்த எடுப்பிலே. இப்படி நேரடியாக கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வாள்?

சில நொடி அமைதிக்குப் பிறகும் பதில் இல்லை என்றதும் மீண்டும், “என்னனு கேட்டேனே…?” என்றான் வார்த்தையில் அழுத்தத்தைக் கூட்டி,

அதில் திணறியவள், “இல்ல… அதுவந்து… நான் சும்மாதான்… நான் எப்ப வரட்டும்?” எனத் திக்கி ஒருவழியாக கேட்டவளிடம்,

“எங்க?” என்றான் ஒற்றை வார்த்தையாக.

ஒற்றை வார்த்தைதான், அதில் ஓராயிரம் அர்த்தங்களைக் கண்டுகொண்டாள் பெண். அர்த்தங்கள் அனைத்தையும் அனர்த்தங்களாய் இருக்க, யோசித்தாள் மூடர் பெண்.

“நான் அங்க வர வேண்டாமா?” என்றாள் கெஞ்சலாக மீண்டும். இப்போது தன்னிலை மிகவும் கீழிறங்கிப் போனது போல் தோன்றியது அவளுக்கு.

“நீங்கதான் மேடம் வரமுடியாதுனு சொன்னீங்க, இப்போ என்ன வரேன்னு சொல்றீங்க? உங்களுக்கு எப்போ, எங்க என் நினைப்பு வந்தது?” என்றான் இடக்காய்.

கணவன் கேட்பது சரிதான், உண்மையும் கூட. ஆனால் அதற்கெல்லாம் பதில்தான் அவளிடம் இல்லை.

பேசிய வார்த்தைகளை திரும்ப பெற முடியாது என்பது எத்தனை உண்மை. அப்படி ஒரு சக்தி இருந்தால் அன்றைக்குப் பேசிய பேச்சுக்களை மொத்தமாக திரும்பி வாங்கியிருப்பாள். புரிந்தது… அனைத்தும் புரிந்தது, அவளது தவறும் புரிந்தது. பதிலேதும் சொல்லாமல் அமைதியாகவே இருக்க,

மனைவியின் அமைதி அவனையும் வருத்த, “அங்க எதாச்சும் பிரச்சனையா? உன்னால ஃபேஸ் பண்ண முடியலையா?” என தன் கோபமெல்லாம் மறந்து, மிகவும் பொறுமையாகக் கேட்டான் நரேன்.

“இல்ல… பிரச்சனை இல்ல, நான் அங்க வர வேண்டாமா? நான் கேட்டும் நீங்க இவ்வளவு யோசிக்கிறீங்க?” எனக் கொஞ்சம் சூடாகக் கேட்டாள்.

“நீங்க செஞ்சது, பேசினது எல்லாம் மறந்து போச்சா? நீங்க பேசினதை நானும் மறக்கணும். எனக்கும் கொஞ்சம் காலம் வேணும். அது உங்களுக்குப் புரியலையா?” என நரேன் இப்போது பதிலுக்கு நக்கலாகக் கேட்க,

“இப்போ நான் என்ன செய்யணும்?” என்றாள் பல்லைக் கடித்தபடி, அவளுக்கும் கோபம் வர ஆரம்பித்தது.

“இங்க கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சு, நிசா மறுபடியும்…” என ஆரம்பிக்கும் நேரம், “என்ன ஓடிப்போயிட்டாளா? நீங்க அவளத் தேடி, அவ பின்னாடி ஓடணுமா? இப்படி அவளுக்காகவே வாழணும்னா, எனக்காக எப்போ வாழுவீங்க? உங்களை நம்பினதுக்கு இன்னும் என்ன எல்லாம் எனக்கு செய்வீங்க?” எனத் தன்னை மீறிக் கத்தியவளிடம்,

“எல்லாம் வேஸ்ட்… உன்னை நம்பினது எல்லாம் வேஸ்ட். இத்தனை நாள்ல நீ கொஞ்சமாவது திருந்திருப்பன்னு நினைச்சேன். ஆனா இன்னும் அந்த சுயநலமாதான் இருக்க என்ன?” என்றவன், பல்லைக் கடித்து பொங்கிய கோபத்தை அடக்க முயற்சித்தான்.

“இல்ல இல்ல நரேன்… ப்ளீஸ்… நான் தப்பா சொல்ல வரல… நரேன் நான் சொல்ல வர்றதைக் கேளுங்க…” என அவசரப்பட்டத் தன் முட்டாள்தனத்தை நொந்தபடியே கணவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.

அவளது கெஞ்சல் குரல் கொஞ்சமும் அவன் மனதை இளக்கவில்லை. “இத்தனை நாள்ல என்னைப் பத்திதான் யோசிக்கல நீ, அவளைப்பத்தியுமா யோசிக்கல? அவ எப்படி இருக்கா? என்ன பண்றா? எதையும் தெரிஞ்சிக்க விரும்பல சரி, பட் எங்கிட்ட கூடவா கேட்கத் தோனல? என்ன ஒரு நன்றிக்கெட்டத்தனம் உனக்கு? உன்னை நினைச்சாலே அருவருப்பா இருக்கு எனக்கு. உனக்காக எங்கிட்ட சண்டைப் போட்டு, கெஞ்சின்னு எவ்வளவு பேசியிருப்பா?

அவளைப்பத்தி தப்பா பேச உனக்கு எப்படி மனசு வந்தது? ச்சே… உங்கிட்ட பேசுறதே வேஸ்ட். இனி எப்பவும் எனக்கு பேசாத. நீ என்ன செய்யணுமோ செஞ்சுக்கோ. ஐ டோன்ட் கேர்…” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன், அவளுக்குப் பேசவே இடம் கொடுக்காமல், போனை அணைத்து தூரமாக போட்டான்.

‘கடவுளே…! மறுபடியும் என் வாழ்க்கையை நானே கெடுத்துக்கிட்டேனா?’ எனத் தன் தலையில் அடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தாள்.

***

“என்ன மேடம் வந்ததுல இருந்து சைலன்டாவே இருக்கீங்க? ஏதோ விஷயம் இருக்கு, ஆனா என்ன நடந்ததுன்னு கேட்கமாட்டேன். அடுத்து நீ என்ன செய்யப்போறன்னாவது சொல்லு.” என்ற சாருவிடம்,

“இனி இங்கதான் சாரு, கொஞ்ச நாள் இங்க இருக்கேன். ஒரு ஜாப் செட்டானதும் தனி வீடு பார்த்து போயிடுறேன்.” என தன் மடியில் இருந்த குழந்தையை வருடியபடி சொல்ல,

“ஓ…” என யோசனையாக இழுத்தவள் பின், “சரி… சரி, வேலைதானே அது வாங்கிக்கலாம். நாளைக்கே கூட போகலாம். ஆனா அதுக்காக ஏன் தனியா போகணும்? இங்க நானும் சஷ்டியும் தானே இருக்கோம். எங்க கூடவே இருக்கலாமே?” என்ற சாருகேஷியிடம் மறுத்து தலையசைத்தாள் நிசப்தி.

“ம்ம்… நாளைக்கே டாக்டர் சார் வந்து உன்னை சமாதானம் செய்து அழைச்சிட்டுப் போயிட்டா? எப்படியும் தனி வீடு தேவைப்படும்ல அதான்…” என முணுமுணுத்த தோழியின் கன்னத்தைப் பற்றி தன்னைப் பார்க்க வைத்த சாரு,

“முட்டாள் மாதிரி பேசக்கூடாது, உன் மேல எனக்கு அன்பு இருக்கு. அதையும் தாண்டி ஒரு மரியாதை இருக்கு. நீ எங்கிட்ட சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல, உனக்கே எப்போத் தோனுதோ சொல்லு. ஆனா தனியா போறேன், மாடு மேய்க்கிறேன்னு எல்லாம் ஆரம்பிக்காத. இப்போதைக்கு உனக்கும் குட்டிக்கும் இந்த ஊர், இங்க இருக்க க்ளைமேட் எல்லாம் செட்டாகட்டும். அதுக்குப் பிறகு நீ வேலைக்குப் போகலாம். வேலையைப் பத்தி உனக்கு கவலையே வேண்டாம். என்னோட ஹாஸ்பிடல்லயே இப்போ வேலை இருக்கு. அதனால கவலையே இல்லாம இங்க இரு.” என புன்னகைக்க,

“மேடம் நான் லாயர். உங்க ஹாஸ்பிடல்ல வந்து நான் என்ன வேலை செய்ய முடியும்? பில் கிளிக்கிற வேலை எதுவும் கொடுத்துடாத தாயே, நான் பாவம்!” என்று சிரித்தபடியே கூறிய நிசப்தி, பின் தன் முகபாவத்தை மாற்றி, “உங்கிட்ட சொல்ல எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல சாரு. ஆனா மறக்க நினைக்கிறதை மறுபடியும் கிளற மனசு இல்லப்பா. இப்போ என் லைஃப் இந்த குட்டிப் பொண்ணைச் சுத்தி மட்டும்தான். ஏன் என் கதை சொன்னாதான் உங்க டாக்டர் சார் அலோவ் பண்ணுவாரா?” என சிரித்தாலும், அந்த புன்னைகை அவள் கண்ணை எட்டவில்லை.

அதை உணர்ந்த சாரு, “ஆஹான்… யாரும்மா அந்த டாக்டர், எனக்குத் தெரியாத டாக்டர்? வந்ததுல இருந்து டாக்டர் டாக்டர்னு புலம்பிட்டு இருக்க… லீவிட் நிசா, உனக்கு எப்படி உன்னோட பாஸ்ட் வேண்டாமோ, எனக்கும் அப்படித்தான். என் லைஃப்ல நானும் சஷ்டியும் மட்டும்தான்.” என்று வருத்தமாகச் சொன்ன சாருவை, ஒன்றும் சொல்லாமல் அணைத்துக் கொண்டாள் நிசா.

நிசப்தி நைனிடால் வந்து ஒரு வாரம் முடிந்திருக்க, அன்று சாரு மருத்துவமனைக்கு சென்ற பிறகு, இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த பூங்காவிற்கு சென்றிருந்தாள் நிசப்தி.

சஷ்டியும் ஓடிக்கொண்டே இருக்க, அவனைப் பிடிப்பதற்காக நிசப்தியும் ஓட வேண்டியாதாக இருக்க, இடுப்பில் தசிராவை வைத்துக்கொண்டு ஓடமுடியாமல் போக,

“கொடும்மா நான் வச்சிருக்கேன், நீ போய் சீக்கிரம் தூக்கிட்டு வா.” என அருகே இருந்த ஒரு பெண்மணி கூற, முதலில் தயங்கினாலும் சஷ்டியின் ஓட்டத்தைப் பார்த்து பயந்த நிசப்தி, அந்த பெண்மனியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு வேகமாக ஓடி, அடம் பிடித்த சஷ்டியை ஒருவழியாக சமாதானம் செய்து, தூக்கிக்கொண்டு வந்தவள், குழந்தையையும் அந்த பெண்மனியையும் காணாமல் திகைத்துப் போய் நின்றிருந்தாள் நிசப்தி.

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 14, 2026 - 2:27 pm

இந்த நிசப்தி ஒரு குழந்தை பிறந்த பிறகும், இன்னும் அந்த புத்திச்சாலித்தனம் வரலை பாருங்களேன்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured