தளிர் – 85
‘பாக்யா’ என்ற பெயரே அவர்களுக்கு அனைத்தையும் புரிய வைக்க, “அந்த வக்கீல் மேடம் உங்களுக்கு என்ன சார் வேணும்.?” என்றான் அதிலிருந்த ஒருவன்.
“பாயின்ட்ரா..” என விக்ரம் சிரிக்க, ரவியும் நரேனும் கூட சிரித்துவிட்டார்கள்.
“ஸார்…” என பயத்தில் ஒருவன் அழைக்க,
“அதெப்படி பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு சொந்தங்காரங்களா இருக்கக்கூடாதா? அந்த வக்கீலுக்கு தான் தெரிஞ்சவங்களா இருக்கனுமா?” என ரவி கேட்டபடியே கோக்கை குடிக்க,
“டேய் ஒழுங்க எழுந்து ஓடிரு.. சரக்கடிக்கிற மூடே போய்டுது இவனால.. ஒருநாள் அந்த கோக்ல சரக்கை மிக்ஸ் பண்றேனா இல்லையா பார்..” என விக்ரம் ரவியைத் திட்டிக்கொண்டு தன் கையிலிருக்கும் விஸ்கியை வாயில் சரிக்க, நரேனோ நாய்களுக்கு சிக்கன் துண்டுகளை போட்டுக் கொண்டிருந்தான்.
“சும்மாவே உன் தங்கச்சி என்னை வெளுக்கிறது பத்தலையா? இதுல சரக்கடிச்சிட்டு போய் வேற நான் வாங்கனுமா? ஏண்டா நல்லவனே உனக்கு இந்த நல்ல எண்ணம்..” என அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டிருக்க, ஐந்து நாய்களுக்கும் நடுவில் அரண்டுபோய் நின்றிருந்தார்கள் அந்த ஆட்கள்.
‘நம்மளை கடத்திட்டு வந்து வச்சிட்டு இவனுங்க குடிக்கிறதுக்கு சண்டை போட்டுட்டு இருக்கானுங்க. நிஜமாவே இவங்க யார்..? பைத்தியக்காரனுங்க மாதிரி நடந்த்துக்குறாங்க..’ என நால்வரும் அரண்டு போன தோற்றத்துடன், மனதுக்குள் புலம்பிக் கொண்டே தான் நின்றிருந்தனர்.
“நாங்க சொல்லலன்னா அவளுக்குத் தெரியாதா..?” என்றவன் எதிரே இருந்தவர்களைப் பார்த்தபடியே “டேய் டாக்டர் வரானா இல்லையான்னு கேளு..” என நரேனைப் பார்த்து கத்தினான் விக்ரம்.
“சார் டாக்டரா? டாக்டர் எதுக்கு சார்..?” என அரண்டு போய் அனைவரும் கத்த,
“எங்க ஃபேமிலி டாக்டர் அவர். இனி உங்களுக்கும் அவர்தான் ஃபேமிலி டாக்டர். உங்களுக்கு எல்லாம் ஃபேமிலி ப்ளான் பண்ணப் போற டாக்டர்..” என ரவி கூற,
‘எத…’ என விக்ரமும், நரேனும் ரவியைத் திரும்பி பார்க்க,
‘அடச்சீ.. பெர்ஃபார்ம் பண்ண விடுங்கடா… அது தான் ஒரு ஃப்லோல வருதுல்ல..’ என அவர்களைத் திட்டிவிட்டு ‘ஹான் எங்க விட்டேன்..’ என மண்டையில் தட்ட,
“ஃபேமிலி ப்ளான் பண்ண போற டாக்டர்..” என ஒருவன் எடுத்துக் கொடுக்க,
“ஹான் அதுதான்.. ஃபேமிலி ப்ளான் பண்ற டாக்டர்..” என்று அடுத்து என்ன பேசியிருப்பானோ அவன் மேல் கார் கீயைத் தூக்கி எறிந்துவிட்டு, முறைத்தபடியே அவர்களிடம் வந்து நின்றான் முகுந்தன். அவனுக்கு அருகில் இளங்கோ (பார்த்த பார்வையில் கதையின் ஹீரோ)
“டேய் நீ இன்னும் உசுரோடத்தா இருக்கியா.?” என இளங்கோவைப் பார்த்து ரவி கேட்க,
“இப்படித்தான் இந்த சப்ஜெக்ட்க்கு அடிக்கடி உயிர் வந்துட்டு போகும்..” என விக்ரமும் கூற,
“டேய் சும்மா இருங்கடா.. அவனே டென்சன்ல வந்துருக்கான். நீங்களும் ஏத்தி விடாதீங்க..” என்ற முகுந்தன், விக்ரம் அருகில் அமர, இளங்கோவோ மூவரையும் முறைத்தபடி ரவியின் அருகில் அமர்ந்தான்.
“என்னவாம் இவனுக்கு..?” என விக்ரம் ஆரம்பிக்க,
“அதை அப்புறம் பார்க்கலாம். முதல்ல அவனுங்களை முடிச்சி விடு..” என இளங்கோ சொல்ல,
“ஓ.. டாக்டர் எல்லாம் சொல்லிட்டானா?” என்றான் ரவி..
“அவன் சொல்லும் போதே எனக்கு இவனுங்களை கொல்ற அளவுக்கு கோபம் வந்துடுச்சு. அப்படியே போட்டுத்தள்ளாம, இவன் என்னடா நிக்க வச்சு நலம் விசாரிச்சிட்டு இருக்கான்.” என இளங்கோ கோபமாக கூற,
“மச்சான். இவனுங்க மேல கை வைக்கக்கூடாதுனு எங்க வீட்டம்மா சொல்லிருக்கு.. பொண்டாட்டி பேச்சை மீறுனதா என் ஹிஸ்ட்ரிலயே இல்ல. இப்போ மட்டும் எப்படி மீறுவேன்.” என உண்மை போல் விக்ரம் பேச, அந்த நால்வர் கூட்டனி முகத்தில் வெளிச்சம் பரவியது என்றால், நண்பர்கள் நால்வரும் கொலை வெறியோடு அவனைப் பார்த்தனர்.
“இந்த உலகம் இன்னுமாடா உன்னை நல்லவன்னு நம்புது..” என்ற முகுந்தனின் கையைத் தட்டிக் கொண்டனர் ரவியும், இளங்கோவும்.
“டவுட்டா இருந்தா நிசாக்கிட்டயே கேளுங்க..” என்ற நேரம் வந்த நரேன் “பாஸ்.. ஆல் செட்..” என்றதும் அதுவரை இருந்த விளையாட்டுத்தனம் போய் அவனிடம் ஒரு இறுக்கம் வந்தது.
எழுந்து அந்த நால்வரிடமும் வந்தவன், நாய்களைப் பார்த்தபடியே “நரேன் செல்லங்களை பிடிச்சிக்கோ..” என்றான்.
பின் அந்த நால்வர்களைப் பார்த்து “இவங்களைப் பார்க்கும் போது பாவமா இல்ல.. ஆனா இவங்க ஃபேமிலியை நினைக்கும் போது கஷ்டமா இருக்கு. இவனுங்களுக்காக அவங்க ஃபேமிலி கஷ்டப்படனுமா?” என சோகமாக கேட்க,
“டேய்.. இந்த நாய்ங்க செஞ்ச வேலைக்கு நீ பாவம் வேற பார்ப்பியா? போட்டுத் தள்ளிட்டு போய்ட்டே இருக்கனும். பாக்யா மாதிரி எத்தன பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ணிருக்கானுங்க..” என ரவி ஆத்திரமாக பேசிக்கொண்டே வர,
“விக்கி நீ பேசுறது கொஞ்சமும் சரியில்ல.. இவனுங்களை உயிரோட விட்டா இன்னும் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ணுவாங்களோ தெரியாது. இந்த பரதேசி நாய்களை கொன்னா கூட என் கோபம் குறையாது..” என இளங்கோவும் கோபம்காக கத்த,
“ம்ச் இருங்கடா விக்கி சொன்னா எதாவது காரணம் இருக்குடா..” என நண்பர்களை அடக்கிய முகுந்தன், “ஏன் விக்கி இவங்களை விடலாம்னு சொல்ற.. நிசாவுக்கு பயந்தா?” என்றான் பொறுமையாக.
“காரணம் பெருசா ஒன்னும் இல்லடா.. இவங்க ஃபேமிலியை நினைச்சுதான் யோசிச்சேன். ஒருத்தன்னா பரவால்ல. நாலு பேர் இருக்கானுங்க. நாலு பேரோட ஃபேமிலியையும் யோசிச்சு பாரு. இதெல்லாம் தெரிஞ்சா அவங்க என்ன செய்வாங்க. குடும்பத்தோட தற்கொலை கூட பண்ணிக்குவாங்க. அதெல்லாம் தேவையான்னு யோசிக்கிறேன்..” என்றான் வருத்தமாக.
“பாஸ். எனக்கு ஒரு ஐடியா.. இவங்ககிட்ட அமவுன்ட் வாங்கி பாக்யா ஃபேமிலிக்கு செட்டில் பண்ணிடலாம். அதுதான் அந்த முக்கியமான அக்கியூஸ்ட் செத்துட்டானே. அவன்தான் காரணம்னு சொல்லி, இவங்களிய தப்பிக்க வச்சிடலாம்..” என அதுவரை அமைதியாக இருந்த நரேன் பேச,
“டேய்.. உன் பாஸ் கூட சேர்ந்து நீயும் அக்கியூஸ்ட் ஆகிட்டு வர, ஒழுங்கா இவனுங்களை முடிச்சி விடுற வழியைப் பாருங்க. இவங்க எல்லாம் பூமிக்கு பாரம்தான்..” என ரவி கூற,
“அவங்க குடும்பத்தைப் பத்தி அவங்களே யோசிக்கல… நீ எதுக்கு யோசிக்கிற விக்கி. அந்த கவலை அவங்களுக்குத்தான் இருக்கனும். அப்படி யோசிச்சிருந்தா சின்ன பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிச்சிருப்பாங்களா?” என கோபமாக இளங்கோ கூற, அதைக் கேட்டு விக்ரமும் யோசிப்பது போல் முக பாவத்தை மாற்றினான்.
“சார்.. சார்.. எங்களை மன்னிச்சிடுங்க சார். ஏதோ ஒரு ஆசையில சபலத்துல பண்ணிட்டோம் சார்.”
“இனி எங்க வாழ்க்கை முடியுற வரைக்கும் இந்த தப்பை செய்ய மாட்டோம் சார்..”
“இந்த ஒரு தடவை மட்டும் எங்களை காப்பாத்தி விட்டுடுங்க சார்..”
“நீங்க சொன்ன மாதிரி தான் என் பொண்டாட்டிக்கு மட்டும் தெரிஞ்சா, புள்ளைங்களையும் கொன்னுட்டு அவளும் செத்துடுவா சார்..”
“இந்த ஒரு முறை மட்டும் எப்படியாவது எங்களை காப்பாத்தி விட்டுடுங்க சார். உங்களுக்கு என்ன வேணும்னாலும் செய்றோம்..”
“ஆமா சார்.. என்ன வேணும்னாலும் செய்றோம் சார். அந்த பொண்ணுக்கும் நீங்க என்ன கேட்குறீங்களோ அதை செய்றோம்.. எங்களை மட்டும் இந்த பிரச்சினையில இருந்து காப்பாத்தி விடுங்க சார்..” என நான்கு பேரும் விக்ரமிடம் கெஞ்ச ஆரம்பித்தனர்.
“டேய் உங்களை போட போறது உறுதிடா..?” என்ற ரவி சட்டென கன்னை எடுத்து ஒருவன் நெற்றியில் வைக்க,
“சார்… சார்.. சார்..” என நால்வரும் விக்ரமின் கால்களிலேயே விழுந்துவிட்டனர்.
“சார்.. இனி எங்க பொண்டாட்டிங்க முன்னாடி கூட போய் உட்கார மாட்டோம் சார். எங்களை விட்டுடுங்க சார்..” என ஒருவன் அழவே ஆரம்பித்து விட,
“சரி உங்களை காப்பாத்தினா எங்களுக்கு என்ன கிடைக்கும்..” என்று தன் தாடியைத் தேய்த்த படியே கேட்டான் விக்ரம்.
“ஸார் நீங்க என்ன கேட்டாலும் செய்றோம் சார்..” என்றான் ஒருவன் வேகமாக.
“ஹ்ம்ம் அப்போ ஓக்கே..” என விக்ரம் கூறியதும்,
“என்னால இவனுங்களை நம்ப முடியாது விக்கி.” என்றான் இளங்கோ..
“அப்போ என்ன பண்ணலாம்..” என்றான் இளங்கோ..
“ம்ம் இதுவரை இவனுங்க என்ன செஞ்சாங்களோ, அதை அவனுங்க வாயலையே சொல்ல சொல்லு. அப்போதான் என்னால நம்ப முடியும். இங்க இப்படி பேசிட்டு, கேஸ் முடுஞ்சி சேஃப் ஆனதும் நம்மளை மாட்டி விட்டுட்டா என்ன செய்ய? இவங்களுக்கு உதவி செய்ய போய், நாம ஜெயிலுக்கு போகனுமா? நெவர்.. நாம சொன்னதை செய்ய சொல்லு.. இல்லைன்னா குடும்பத்தோட தூக்குல தொங்க சொல்லு..” என்று தயவு தாட்சன்யமே பார்க்காமல் கூறினான் ரவி..
“ஸார்..” என அவர்கள் நால்வரும் அதிர,
“அப்போ ஜெயிலுக்கு போறீங்களா? உங்க குடும்பமே தற்கொலை செஞ்சிக்கும் பரவாயில்லையா?” என்றான் ரவி.
“இல்ல சார்.. அதெல்லாம் வேண்டாம் சார். நாங்க சொல்லிடுறோம்..” என ஒவ்வொருவராக அவர்கள் செய்ததை சொல்லி முடிக்க, விக்ரமிற்கும் அவன் நண்பர்களுக்கும் கோபத்தில் உடல் இறுகியது.
விட்டால் ஒவ்வொருவரும் அவர்களை கொண்டு குவித்து விடும் அளவிற்கு ஆத்திரத்துடன் இருந்தனர்.
ஆனால் விக்ரமின் ஒரு பார்வைக்கு அமைதியாக இருந்தனர்.
“சார் அவ்ளோதான் சார்..” என ஒருவன் முடிக்க,
“ஹ்ம்ம் ஓகே..” என்ற விக்ரம், “நரேன்..” என சத்தமிட,
வேகமாக வந்த நரேன் சில வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்க அவர்களிடம் நீட்ட, “என்ன சார்..?” என ஒருவன் இழுக்க,
“உங்க சொத்துல பாதி எங்க பேருக்கு மாறியிருக்கு. அதுல பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கு கொடுக்கப் போறோம். நம்பிக்கை இருந்தா கையெழுத்து போடுங்க.. இல்லைனா இப்படியே கிளம்புங்க..” என்றான் விக்ரம்.
“இல்ல சார்.. நாங்க கொடுக்குறோம்..” என்று வேகமாக கையெழுத்திட,
“ஹ்ம்ம் நரேன்.. இவங்களை மார்னிங்க் அனுப்பிடு. நாளைக்கு கோர்ட்ல பார்க்கலாம்..” என விக்ரம் அண்ட் கோ நடக்க, அந்த நால்வரும் இவனை நம்பலாமா வேண்டாமா என இப்போது யோசிக்க ஆரம்பிக்க, விக்ரமோ அனைத்தையும் முடித்தே கிளம்பிவிட்டான்.
அடுத்த நாள் காலையில் அனைத்து செய்தி சேனலிலும் இந்த நால்வரும் கொடுத்த வாக்குமூலத்தை பரபரப்பாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.
கூடவே ‘உண்மையை கூறிவிட்டு அந்த நால்வரும் தப்பித்து விட்டனர். அவர்களை தேடும் பணியில் காவல்துறை மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த செய்தியை நீதிபதிக்கும், காவல் ஆனையருக்கும் எடுத்துச் சென்ற வழகக்றிஞர் விக்ரமிற்கு பல தலைவர்களிடமிருந்து பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. நம் செய்தி சேனல் மூலமாக நாமளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.’ என்ற செய்தியும் ஃப்ளாஷ் நியூசில் வர், அதை வீட்டில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த ரித்தியும் ரேனுகாவும் விக்ரமை நினைத்து பெருமையாக புன்னகைக்க,
இங்கு அறைக்குள்ளோ நிசப்தி கத்திக் கொண்டிருக்க, அது காதில் விழுந்தாலும் கண்டு கொள்ளாமல் அவளை இறுக்கமாக அனைத்துக் கொண்டான் விக்ரம்.
“ம்ச்.. என்னை இப்படி டைவெர்ட் பண்ணக்கூடாதுனு பல தடவை சொல்லிருக்கேன்..” என்று அவனைத் தள்ளிவிட்டு கத்த,
“ம்ச் போடி. மூடே போயிடுச்சு.. இப்போ உனக்கு என்ன தெரியனும்..” என அவனும் கத்த,
“நான்தான் அவங்க மேல கைவைக்க கூடாதுன்னு சொன்னேன்ல. தண்டனை கொடுக்க கோர்ட் இருக்கு.. நீங்க ஏன் இந்த வேலை பண்றீங்க. சட்டம் படிச்ச நீங்களே சட்டத்தை கையில் எடுக்கலாமா?” என எரிச்சலாக கேட்க,
“என்னை டென்சன் பண்ணாம போயிடுடி. அந்த பரதேசிங்க பேசின வீடியோவை நீயும் கேட்ட இல்ல. அவ்வளவு பொண்ணுங்க பாதிக்கப்பட்டுருக்காங்க. அந்த பொண்ணுங்களுக்கு நியாயம் வேண்டாமா? இதையெல்லாம் கேட்டுட்டு நான் எப்படி சும்மா வருவேன்..” என்று கோபமாக கேட்டவன் “அவனுங்களை முடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டுத்தான் தூக்கினேன். இப்போ என்ன வேனும் உனக்கு..?” என எரிச்சலாக கத்த,
“ம்ச்.. அப்புறம் கோர்ட் எதுக்கு ஜட்ஜ் எதுக்கு? என்றாள் நிசப்தியும்.
“எனக்கு சரின்னு பட்டதை நான் செஞ்சேன் அவ்ளோதான். எவ்ளோ பெரிய வேலையை முடிச்சிட்டு வந்துருக்கேன். ஒரு பாராட்டு கூட இல்ல. சரி பாராட்டத்தான் வேண்டாம். கத்தாமலாவது இருக்கலாம். எங்க அம்மா கூட சேர்ந்து ரொம்பவே கெட்டுப் போயிட்ட..” என்று எரிச்சலானவன் சென்று கட்டிலில் குப்புற விழுந்துவிட்டான்.
நிசப்தியால் விக்ரம் செய்வதை சரி என்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தவறென்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைத்துவிட்டது.
அவர்களிடமிருந்து வாங்கிய சொத்து பணம் ஆகியவற்றை வைத்து ட்ரஸ்ட் ஆரம்பித்து, ரேனுகாவையும் உஷாவையும் பார்த்துக்கொள்ள செய்ய வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறான். எல்லாம் சரிதான் ஆனால்? சட்டத்தை மதிக்காமல்..? என யோசிக்கும் போதே..
“அங்க நின்னுட்டே யோசிக்கிறதுக்கு, இப்படி என் மேல படுத்து கூட யோசிக்கலாம். நைட்டெல்லாம் தூக்கம் இல்ல. பாடி பெயின் வேற..” என மனைவியைப் பார்க்காமல் விக்ரம் பேச,
அவன் கேட்டதில் சிரிப்பு வந்துவிட “உங்களை..” என வேகமாக வந்து அவன் மேல் பொத்தென்று விழுந்தாள் நிசப்தி.
அவர்கள் வாழ்க்கை அடிதடியுடன் கொஞ்சம் கோபம், கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் சண்டை, நிறைய சந்தோசம், நிறைய அன்னியோன்யம் என கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்கும்.
அவர்கள் அப்படியே வாழட்டும்.. நாமும் அவர்களை அப்படியே விட்டுவிட்டு நம் வேலைகளைப் பார்க்கலாம்.
சுபம்..
1 comment
எப்படியோ நினைச்சதை சாதிச்சிட்டான் விக்ரம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797