Home Love - Family - Romanceமலர் – 01

மலரே எனை மன்னித்துவிடு..!

மலர் – 01

அந்த அலுவலக அறையை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தாள் வைஷ்னவி. நிதானமாகவே இல்லை அவள்.

உடல் இறுகிப் போயிருந்தாலும், உள்ளமோ உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தது.

அவள் மூளையும், மனமும் இந்த இடத்திலேயே இல்லை என்று அவளின் அலைபாய்ந்த விழிகள் பறை சாற்றியது.

எங்கே இருப்பான்? எப்படி இருப்பான்.? அவனை பத்திரமாக வைத்திருப்பார்களா? மிரட்டி பயமுறுத்திக் கொண்டிருப்பார்களா? உணவு கொடுப்பார்களா? அழுவானா? தன்னைத் தேடி தவிப்பானா? மனம் ஓட்டப்பந்தய வீரனைப் போல் முந்தியடித்துக் கொண்டு ஓடியது.

இழுத்து இழுத்து பெரிய மூச்சுக்களாக விட்டு தன்னை சமன் செய்து கொண்டிருந்தாள் வைஷ்னவி.

இரண்டு நாட்களாக இந்த அலுவலக வாசலில் காத்திருக்கிறாள் வைஷ்னவி. இப்போது தான் அவளைப் பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

யார் என்ன என்று தெரியாமல் எப்படி ஒரு மத்திய அமைச்சரின் அலுவலகத்திற்குள் அனுமதிப்பார்கள்.

அவர்கள் இங்கு வந்த போது, அமைச்சர் டெல்லியில் இருப்பதாக கூறப்பட்டது.  நம்ப வேண்டிய கட்டாயம் அவளுக்கு. வேறுவழியும் இல்லையே.

அந்த அமைச்சரால் தானே தன் மகனை காப்பாற்ற முடியும்.

நாட்டு நடப்பு அவளுக்கு சிலது புரியத்தான் செய்கிறது. ஆனால் தாய் பாசம் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி விடுகிறதே.

ஐந்து வயது நிரம்பிய மகன் விஷ்னு பிரசாந்த். பள்ளிக்குச் சென்றவன் திரும்பி வரவில்லை.

தங்களுக்கு தெரிந்த வரை அனைத்து இடங்களிலும் தேடியாயிற்று. அந்த ஊரையும், சுற்றுப்புற ஊர்களையும் கூட சல்லடையாக சலித்து தேடியாயிற்று.  காவல்துறையிலும் கூட புகார் கொடுத்தாயிற்று.

பலன் என்னமோ பூஜ்ஜியம்தான்.

யார் அவனை கடத்தினார்கள் இப்போது எங்கே அவனை வைத்திருக்கிறார்கள் என எதுவும் தெரியவில்லை.

ஆனால் கடத்தி வைத்திருக்கிறார்கள் என்று மட்டும் அவளுக்கு உறுதியாக தெரிந்திருந்தது.

“மோளே” என்ற தந்தையின் சத்தத்தில் தன் நினைவுகளில் இருந்து வெளியில் வந்தவள், அலங்க மலங்க அவரை நிமிர்ந்து பார்க்க, அவரோ அவளுக்கு எதிரில் கண்ணைக் காட்டினார்.

அப்போது தான் அவளுமே தனக்கு எதிரில் நிமிர்ந்து அமர்ந்து, கூரிய பார்வையோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனை கண்டாள்.

சட்டென உடல் அதிர, அவளுக்கு மற்றொரு பக்கம் அமர்ந்திருந்த தன் தம்பி முகுந்தனின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

“சேச்சி..” என முகுந்தன் வைஷ்னவியை சமாதானம் செய்ய,

“மோளே.. ஞான் எந்தா பரஞ்சது..?” என அவளின் தந்தை அதட்டி, எதிரில் இருந்தவனை தயக்கமாக பார்க்க,

“நீங்க வந்த விசயத்தை சீக்கிரம் சொன்னா பரவாயில்லை. மூனு நாளா இங்க வந்துட்டு போறதா என்னோட பிஏ சொன்னார். இது வெளியே எதிர்கட்சிக்கு தெரிஞ்சா என்னோட அரசியல் வாழ்க்கையை விமர்சனம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. சோ நீங்க.?” என நிறுத்தி வைஷ்னவியை கூர்மையாக பார்க்க, முகுந்தனுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது.

தன் தந்தை அத்தனை சமாதானம் சொல்லி அழைத்து வந்தது எல்லாம் இப்போது அவன் மூளைக்குள் இல்லவே இல்ல.

தன் பேகில் இருந்த ஒரு போட்டோவை எடுத்து எதிரில் அமர்ந்திருந்தவனின் முன்னே வைத்தான்.

அது விஷ்னு பிரசாந்தின் புகைப்படம். அதை எந்த வித சலனமும் இல்லாமல் பார்த்தவன், ‘இதுக்கென்ன?’ எனும் பார்வையை எதிரில் இருந்தவர்களிடம் கொடுக்க, வைஷ்னவியின் தந்தையோ அந்த பார்வையில் செத்தே போய்விட்டார்.

வைஷ்னவியின் நிலையும் அதேதான்.  உடலும், உள்ளமும் கூசிப் போனது அவளுக்கு. தன்னுடைய இந்த நிலையை அறவே வெறுத்தாள் பெண்.

இப்படியே எழுந்து போய்விடலாம் தான். ஆனால் மகன்.. அவளின் குட்டன். அவன் வேண்டுமே. அவள் வாழ்வு மொத்தத்திற்கு அவன் வேண்டுமே.

எதிரில் இருப்பவனால் மட்டும் தானே அவள் மகனை காப்பாற்ற முடியும்.

உடலையும், மனதையும் அடக்கி நிமிர்ந்து அவனை யாசகமாக பார்த்தாள்.

அதற்குள் முகுந்தன் தந்தையைப் பார்த்து “அச்சா..” என்றான் கோபமாக.

மகனின் கோபம் அவருக்கு புரிந்தது. ‘இங்கிருந்து போகலாம்’ என்கிறான்.

ஆனால் பேரன் இல்லாமல் எப்படி?

அவரும் எதிரில் இருந்தவனை யாசகமாகவே பார்த்தார்.

இந்த நிலையை பார்க்க சகிக்காத முகுந்தன், “சேச்சி நமக்கு போகாம்..” என்று இருக்கையில் இருந்து எழுந்தே விட்டான்.

இவர்கள் மூவரின் சம்பாஷனைகளையும் ஒரு ஆராயும் பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தான் மத்திய அமைச்சர்.

“முகுந்தே மிண்டாதிரு..” என சட்டென தம்பியை அதட்டிய வைஷ்னவி, எழுந்து நேராக அமைச்சருக்கு முன்னே போய் நின்றாள்.

அழுது, முகமெல்லாம் வீங்கி, கசங்கிய உடையும், கலங்கிய முகமும் என தனக்கு எதிரே நின்றவளை அப்போதும் ஆராய்ச்சியாகப் பார்க்க,

அவளோ “ஞான்.. ஞான்..” என ஆரம்பித்தவளின் குரல், அடுத்த வார்த்தை வராமல் அடைக்க, இந்த நிலையை அறவே வெறுத்தாள் வைஷ்னவி.

விழிகளை அழுந்த துடைத்து, ஒரு பெரிய மூச்சைவிட்டு தன்னை சமன் செய்து “இப்போ இல்ல.. எப்பவுமே உங்க முன்னாடி வந்து நிக்கனும்னு நினைக்கல. நானோ, என் மகனோ வந்து உங்க வாழ்க்கையை கெடுக்கவும் நினைக்கல. இப்போ எனக்கு என் மகன் வேணும். அவனை காணோம். அஞ்சு வயசுதான் ஆகுது. எங்க எப்படி இருக்கானோ தெரியல. நான் இல்லாம இந்த மூனு நாளா எப்படி இருக்கானோ.? உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேட்கிறேன். என் மகனை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சி என்கிட்ட கொடுத்துடுங்க.. நாங்க எங்கேயாவது, யார் கண்ணுலயும் படாமா தூரமா ரொம்ப தூரமா போயிடுறோம்.. ப்ளீஸ் இந்த ஒரு உதவியை மட்டும் செஞ்சு கொடுங்க..” என்றவள் சட்டென அவன் முன் கைகளைக் கூப்பி காலில் விழுந்துவிட, பட்டென எழுந்து நின்றுவிட்டான் மத்திய அமைச்சரான ஜீவ ரீகன்.

“சேச்சி..” “மோளே..” என மற்ற இருவரும் அதிர்ந்து கத்த, முகுந்தன் விரைந்து வந்து வைஷ்னவியைத் தூக்கி நிறுத்தினான்.

“எண்ட மோன்.. அவன் பாவியானு முகுந்தே. எனிக்கு அவன் வேனம் முகுந்தே.. ப்ளீஸ்..” என சகோதரனின் தோளில் சாய்ந்து கதறியவள் ஒரு கட்டத்தில் அப்படியே மயங்கி சரிந்திருந்தாள்.

“சேச்சி.. சேச்சி..” என வைஷ்னவியின் பாரம் உணர்ந்து முகுந்தன் பதற,

அதுவரை வேற்று மனிதனைப் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜீவன், முகுந்தனின் கைகளில் இருந்து தன் கைக்கு மாற்றி, அங்கேயே தனக்கென இருக்கும் ஓய்வெடுக்கும் அறைக்குள் கொண்டு வந்து கட்டிலில் கிடத்தினான்.

தன் பிஏவிற்கு அழைத்து மருத்துவரை வரச் சொல்லிவிட்டு, நீரை எடுத்து அவள் முகத்தில் விசையாக தெளித்து, வைஷ்னவியின் மயக்கத்தை தெளிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த வைஷனவியின் தந்தை மாதவன் நாயரோ மொத்தமாக சோர்ந்து போயிருந்தார்.

எது நடக்கக்கூடாது என நினைத்து அவர் பயந்தாரோ இப்போது அதுவே நடந்து கொண்டிருந்தது.

“சேச்சி… சேச்சி..” என முகுந்தன் பதறியபடியே அவளுக்கு அருகில் நிற்க,

“உங்க சிஸ்டரை நான் பார்த்துக்கிறேன். முதல்ல உங்க அப்பாவை போய் பார்..” ஜீவன் அழுத்தமாக கூற, தந்தையின் நிலையை நினைத்து பதறினாலும், சகோதரியை எப்படி தனியே விட்டு செல்வது என தயங்க,

முகுந்தனின் தயக்கத்தில் ஜீவனுக்கு சுர்ரென்று கோபம் ஏற, “டேய்..” என ஆத்திரமாக கத்த, முகுந்தனுக்கும் சூழல் புரிய அமைதியாக என்றாலும், ஜீவனை முறைத்தபடியே தான் வெளியில் சென்றான்.

“ஊப்ஸ்..” என பெருமூச்சு விட்ட ஜீவகன், வைஷ்னவியின் அருகில் நின்று அவளையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

நிழலோவியமாய் சில நிகழ்வுகள் அவன் மூளையைத் தொட்டு, மனதை வருடிச் செல்ல, கண்களை மூடி அந்த நிகழ்வுகளில் லயிக்க ஆரம்பித்தான்.

சட்டென விஷ்னுவின் நினைவு வர, தன் பாக்கெட்டில் இருந்த அந்த போட்டோவை எடுத்து ஆழ்ந்து பார்த்தான்.

அந்த விழிகள் மெல்ல மெல்ல விரிய, இறுக்கமாய் இருந்த உதடுகள் கூட மெலிதாக புன்னகைக்க ஆரம்பித்தன.

ஜீவனின் கைகள் தன் பாட்டிற்கு இடது கண்ணிற்கு கீழே இருக்கும் மச்சத்தை வருட ஆரம்பிக்க, வலது கையோ அந்த புகைப்படத்தில் இருந்த விஷ்னுவின் இடது கண்ணிற்கு கீழே இருந்த மச்சத்தை வருட ஆரம்பித்தது.   

தன்னுடைய உறவினர்களோ, சிறு வயது நண்பர்களோ இந்த புகைப்படத்தைப் பார்த்தால் யோசிக்காமல் ‘என் மகன்தான்’ என உறுதியாக சொல்லிவிடுவார்கள்.

அந்த போட்டோவை பார்த்த நொடி, தன்னை சாதாரணமாக காட்டிக்கொள்ள எத்தனை சிரமப்பட்டான் என்று அவனுக்குத்தானே தெரியும்.

மீண்டும் ஒரு பெருமூச்சுவிட, அதற்குள் ஒரு மருத்துவர் வந்துவிட, ஜீவகனைப் பார்த்து புன்னகைத்தபடியே, கட்டிலில் கிடந்தவளை யோசனையாக பார்த்தார்.

“ரொம்ப யோசிக்காதீங்க டாக்டர்.. உங்க கெஸ்ஸிங்க் எல்லாம் நிறுத்தி வச்சிட்டு வேலையை மட்டும் பாருங்க..” என பல்லைக் கடிக்க,

“ம்ச் போடா..” என சலித்தபடியே தன் வேலையை ஆரம்பித்தார் ஜீவகனின் மருத்துவ தோழியான ரேகா.

“அதிர்ச்சி, பயம், பசியில வந்த மயக்கம் தான். இப்போதைக்கு ட்ரிப் போட்டுக்கலாம். கண்டிப்பா  டூ டேஸ் கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும் ஜீவா.” என்றார்.

“ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடலாமா?” என முகுந்தன் தயங்கி தயங்கி கேட்க, மீண்டும் அவனை முறைத்தான் ஜீவன்.

“இந்த மூனு நாளா சாப்பிடவே இல்ல. ஜூஸ், காஃபினு மட்டும் தான் குடிச்சாங்க. அதுவும் நானும் அப்பாவும் மிரட்டித்தான் குடிக்க வச்சோம்.. குட்டாவை பார்த்தா மட்டும் தான் சரியாவாங்க..” என தவிப்போடு முகுந்தன் கூற,

“இங்க பின்னாடி ஹெஸ்ட் அவுஸ் இருக்கு, அங்க வச்சு  பார்த்துக்கலாம் முகுந்த்.. நீ அவங்க கூட இரு. சீக்கிரம் எல்லாம் சரியாகும்..” என முகுந்தனுக்கு தைரியம் சொல்லி, அவர்களை பின் பக்கம் இருந்த ஹெஸ்ட் அவுசிற்கு மாற்றி, ரேகாவை அனுப்பி, தன் மற்ற வேலையை முடித்து என ஜீவன் தளர சில மணி நேரங்கள் பிடித்தது.

அப்படி ஜீவன் தனியாக வந்து அமர்ந்த நேரம் அவனுக்கு எதிரில் நின்றான் அவனின் பிஏ நவீன்.

“ஆல் செட் தானே..” என ஜீவன் கேட்க,

“எஸ் சார்.. லொகேஷன் கண்டுபிடிச்சாச்சு. இப்போ செங்கல்பட்டுலதான் இருக்காங்க. நீங்க ஓகே சொல்லிட்டா கொத்தா தூக்கிடலாம்.”

“ம்ம்.. ஜூனியர் ஜீவன் எப்படி இருக்கார்.?” என மெல்லிய சிரிப்புடன் கேட்க, நவீனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“அவர் பார்க்க ஜூனியர் ஜீவன் மாதிரி இருந்தாலும், பேச்சு பழக்க வழக்கம் எல்லாம் அசல் நாயர்தான். தமிழ் கொஞ்சம் புரியுது. ஆனா பேச வரல. மேடம் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுவாங்க போல. ஆனா ஜூனியருக்கு வரல. ஆனா விஜய் ஃபேன் போல. மீனிங்கே தெரியலன்னாலும், விஜய் டைலாக்ஸ மோடுலேசன் மாறாம பேசுறார்..” என சிரிக்க

 “ம்ம்.. கேரளால விஜய்க்கு ஃபேண்ஸ் அதிகம்ல..” என ஜீவனும் சிரித்தான்.

சில நொடிகளில் “ஸார்..” என நிறுத்திய நவீன் “நீங்க கிறிஸ்டீன், மேடம் பக்கா பிராமின் நாயர். உங்க வீட்டுல எப்படி ஒத்துப்பாங்க.?” என நிறுத்த, நவீனின் பேச்சில் ஜீவகனின் முகம் மெல்ல மெல்ல இறுகத் தொடங்கியது.

You may also like

4 comments

sailajaasundhar April 20, 2026 - 7:25 am

Vaishnavi life la appadi enna than nadanthathu.. Aen jeevan ivlo irukkamaa irukkaan

Reply
Sivakami April 20, 2026 - 7:32 am

ஆரம்பம் நல்லா இருக்கு… வைஷ்னவிகிட்ட எதை ம்ரைக்கிறா.. வைஷ்னவி மலையாளியோ.. முகுந்தே…

Reply
M. Sarathi Rio April 20, 2026 - 10:31 am

வைஷ்னவி ஜீவனுக்குள்ள என்ன பிரச்சினைன்னு தெரியலை, ஆனா இனி பிள்ளை சேர்த்து வைச்சிடுவான்னு தோணுது.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply
Subhashini A April 20, 2026 - 10:33 am

Ama Vijay fans ah? Ennaya nadakkuthu inka?
Kuttan, Mukunthey super nka

Reply

Leave a Reply to Sivakami Cancel Reply

About Me

Featured